பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]

பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – பகுதி 1

(தொடர்ச்சி…)

இளமையும் காதலும்

இளமைக்கும் காதலுக்கும் பெரியபுராணம் சிறப்பான இடந்தருகிறது. முக்கியமாக புராணத்தின் ஆரம்பத்தில் பேசப்படும் காப்பியத்தலைவரான சுந்தரரின் வரலாற்றில் சுந்தரர் திருவாரூர்க் கோயிலில் பரவையாரைச் சந்திக்கிறார். இவ்வாறு கண்டவர்கள் காதல் கொள்கிறார்கள். நமது இன்றைய திரைப்படங்களில் போல அன்றி சிவமணம் கமழும் முதற் சந்திப்பு அங்கு அமைகிறது. சுந்தரர் பரவையைப் பார்க்கிறார்.

sundarar_paravai

மானிளம் பிடியோ? தெய்வ வளரிள முகையோ வாசத்
தேனிளம் பதமோ? வேலைத்திரள் இளம் பவள வல்லிக்
கானிளங்கொடியோ? திங்கட் கதிரிளங் கொழுந்தோ? காமன்
தானிளம் பருவங் கற்கும் தனியிளந் தனுவோ என்ன

இங்கே ஒரே பாடலில் சுமார் எட்டு இடங்களில் ‘இளம்’ என்று இளமையைப் பற்றி சேக்கிழார் பேசுகிறார். ஆகவே, இக்காவியம் வாழ்வியலை அனுபவிக்க விழைகிற .இளைஞர்களை முதன்மைப் படுத்தி எழுதியது என்ற நோக்கையும் இங்கே கொள்ளமுடியும். எனவே இக்காவியத்தை இளைஞர்கள் மிகவும் ஆராய்ந்து படிக்க முனைய வேண்டும்.

அங்கே சுந்தரர் பரவையாரைப் பார்த்து இவ்வாறு சிந்திக்க, பரவையார் சுந்தரரைப் பார்த்தார். ஒரு பெண்ணான அவரது உணர்வுகளை சேக்கிழார் இப்படிக் கவிதையாக வடித்திருக்கிறார்.

முன்னே வந்தெதிர் தோன்றும் முருகனோ? பெருகொளியால்
தன்னேரில் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ?
மின்னேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ?
என்னே என் மனந்திரிந்த இவன் யாரோ என நினைத்தார்

இங்கே கூட, இறையருளே சுந்தரரின் அழகிற்குக் காரணம் என பரவையார் நினைப்பதாகக் காட்டப்பெறுகிறது. ஆக, இளமைமிக்க இளைஞர்களின் காதலும் காதலுடனாய இறைகாதலும் இங்கே பேசப்பெறுகிறது.

வெறும் பதினாறாண்டுகளே வாழ்ந்தவரான இளைஞர் ஞானசம்பந்தருக்கு சேக்கிழார் அதிக முதன்மை தந்திருக்கிறார். சுமார் 1,256 பாடல்களில் அவரது வரலாற்றைப் பாடியிருக்கிறார். ஞானசம்பந்தப் பிள்ளைக்குக் கிடைத்த இந்த முதன்மையாலேயே ‘பிள்ளை பாதி புராணம் பாதி’ என்ற வழக்காறு உருவாயிற்று.

இது தவிர இப்புராணத்தில் பேசப்பெறும் அநேகமான அடியவர்கள், இல்லறத்தினரே என்பதால் பரவலாக எல்லா நிலைகளிலும் பெரியபுராணத்தில் காதல், திருமணம், திருமணவாழ்வு முதலியன பேசப்பட்டிருக்கிறது.

thirugnana-sambandar1

திருஞானசம்பந்தருக்கு நடைபெற்ற திருமணத்தை சிறப்பாக சேக்கிழார் பதிவு செய்திருக்கிறார். அக்காலத்தில் மணமகன் மணமகளுக்கு விலையாகப் பணம் கொடுத்த புதுமை இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தாரை வார்த்துக் கொடுத்தல் என்ற கன்னிகாதான மரபு போன்றவையும் பதிவாகிறது. அம்பொனி மணநூல் என்று தாலி அணியும் வழக்கமும் இங்கு காண்பிக்கப் பெற்றிருக்கிறது.

அதே போலவே பெண்களுக்கும் உரிய முதன்மை தந்து புராணத்தில் இடந்தருகிறார் புதுமைச் சேக்கிழார். சுமார் 28 பெண்களின் பெருமை பெரியபுராணத்தில் பேசப்படுகின்றது. மங்கையற்கரசியார், திலகவதியார், காரைக்கால் அம்மையார் என்ற மூவரும் இவர்களில் முதன்மை பெற்றிருக்கிறார்கள். சுந்தரரைப் பெற்ற சிறப்பால் இசைஞானியாரும் நாயன்மார்கள் வரிசையில் எழுந்து நிற்கிறார். அவர் பெண்மைக்கு அளித்த சிறப்பை மங்கையற்கரசியார் பற்றிய அவரது பாடலும் காட்டி நிற்கிறது.

மங்கையற்குத் தனியரசி எங்கள் தெய்வம் வளவர் திருக்குலக் கொழுந்து வளக்கைமானி
சேங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள் தென்னர்குலப் பழி தீர்த்த தெய்வப்பாவை..

என்று காட்டும் போது அவர் பெண்மைக்குத் தந்த பெருமையை உணரலாம்.

 

இலக்கியச்சுவை நிறைந்த இன்பத்தேன்

பெரியபுராணத்தின் இலக்கியச்சுவையைப் பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் காணலாம். உதாரணமாக சண்டேஸ்வரநாயனார் புராணத்தில் ஒரு பாடல்

செம்மை வெண்ணீற்று ஒருமையார்
இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மைத் தழலோம்பிய நெறியார்
நான்கு வேதம் முறை பயின்றார்
தம்மை ஐந்து புலன் பின்செல்லும்
தகையார் அறு தொழிலின்
மெய்மை ஒழுக்கம் ஏழு உலகம்
போற்றும் மறையோர் விளங்குவது

என்று எண்களை வரிசைப்படுத்தியிருக்கக் காணலாம். வேடர், பாணர், மறவர், புலையர் என்ற குடிப்பிறப்பாளர்களையும் அந்தணர், அரசராகியவர்களையும் ஒப்ப வைத்துக் காவியம் செய்தவர் சேக்கிழார்.

ஓர் இளைஞரான சுந்தரரையே காவியத்தலைவனாகக் கொண்டு உருவாக்கப்பெற்றது பெரிய புராணம். புராணத்தின் ஆரம்பத்தில் சுந்தரர் வரலாறு ஆரம்பமாகி நடுவே கலிகாமநாயனார் புராணத்திலும் தொடர்புற்று நிறைவில் வெள்ளானைச் சருக்கத்தில் சுந்தரர் திருக்கயிலையை அடைவது வரை பல்வேறு நிலைகளில் புராணம் முழுவதும் அவரது வரலாறு பேசப்படுகின்றது.

உலகமே அதிசயிக்கும் வண்ணம் அரசியலைத் துறந்து விட்டு இலக்கியப்படைப்பாளியாக, சிவநெறிச்செல்வராக தில்லை மூதூர் சென்ற வீர இளைஞர் சேக்கிழார். அவரது உணர்வுகள் உலகளாவிய நோக்குடையன. புரந்த சிந்தனையுடையன. ஆனால், நிரந்தரமாக இறைமணம் -சிவமணம் கமழ்வன.

நகைச்சுவைக்கும் பெரியபுராணத்தில் இடமிருக்கிறது. முதலிலேயே பரவையாரை மணந்து குடும்பஸ்தராக இருக்கிற சுந்தரர் சிவனாரிடம் தனக்கு சங்கிலியைத் தரும் வண்ணம் வேண்டுகிறார். என்ன சொல்லிக் கேட்கிறார் என்றால்

மங்கையொருபால் மகிழ்ந்துலவும் அன்றி மணிநீள் முடியின் கண்
கங்கையொருபால் கரந்தருளும் காதலுடையீர், அடியேனுக்கு
இங்கு உமக்கு மாலைதொடுத்தென் உளத்தொடை அவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தம் தீரும்

நீர் கங்கையை சடையில் மறைத்து வைத்திருக்கிறீர், நானோ ஊரறிய உலகறிய சங்கிலியைத் திருமணஞ் செய்ய விழைகிறேன். நீர் ஏன் அவளை எனக்குத் தரக்கூடாது?… அவளை நான் ஏன் காதலிக்க வேண்டி வந்தது என்றால் அவள் உமக்கு மாலை தொடுத்ததால் என் உள்ளத்தொடை அவிழ்த்து விட்டாள்.

 

சேக்கிழார் காட்டும் நீதி முறைமை

சேக்கிழார் காட்டும் பெரிய புராணத்தில் நீதி, நியாயம், போன்றவற்றிற்கு முக்கிய இடந்தரப்பட்டுள்ளது. முக்கியமாக ஐந்து வழக்குகளை நாம் பெரியபுராணத்தில் காண்கிறோம்.

 1. மனுநீதிச் சோழனின் புதல்வன் மீது பசு தொடுத்த வழக்கு
 2. சுந்தரர் மீதான கிழவேதியரின் அடிமை வழக்கு
 3. திருநீலக்கண்டநாயனாரின் திருவோட்டு வழக்கு
 4. தண்டியடிகளின் மாற்றுச் சமயத்தவர் மீதான நிலஆக்கிரமிப்பு வழக்கு
 5. அமர்நீதியாரின் கோவணம்சார் பிரச்சினையால் உருவான வழக்கு

இவ்வாறாக உரிமை மீறல் வழக்கு, உரிமை வழக்கு, குற்றவழக்கு என்பன இங்கு பேசப்பெற்று இருக்கிறது.

வழக்குப் பேசும் வகையும் முறையும் பற்றியும் சேக்கிழார் காட்டி நிற்கிறார்.

 1. வழக்கை, வழக்குத் தொடர்பவர் நியாயசபையில் முன்வைப்பார்.
 2. நீதியாளர்களை முன்னிட்டு வழக்கை வழக்குத் தொடர்ந்தவர் விரித்துரைப்பார்.
 3. வழக்காளி தன்னை ஊர், பெயர், உறவு, தொழில் என்பவற்றுடன் அறிமுகஞ் செய்வார்.
 4. குற்றம் கூறல்- வழக்காளி எதிராளி மீதான குற்றத்தை கூறுவார்.
 5. ஏதிராளி தன்பக்க நியாயத்தை எடுத்துரைப்பார்.
 6. சான்று காட்டல்- மூவகைச் சான்றுகளில் ஒன்று காட்ட வேண்டும்.
 7. தீர்ப்பு வழங்குதல்.
 8. தீர்ப்பிற்குக் கட்டுப்படுதல்.

இங்கே ஆறாவதாகக் காட்டிய ‘சான்று காட்டல்’ என்பதை பெரியபுராணத்தின் ‘தடுத்தாட் கொண்ட புராணம்’ மூன்றாகக் காட்டும்.

‘ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்றயலார் தங்கள் சாட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்’ என்று கிழவேதியராக வந்த திருவெண்ணை நல்லூர் இறைவனிடம் சபையார் கேட்கின்றனர். அதாவது ஒன்று ஆட்சிச் சான்று, இரண்டாவது ஆவணச்சான்று, மூன்றாவது சாட்சிச்சான்று. இங்கே இறையவர் தம்மிடம் இருந்த ஓலைச்சுவடியாகிய ஆவணச்சான்றை சபையாருக்குக் காட்டி வழக்கில் வெற்றி பெற்று சுந்தரரை அடிமை கொள்கிறார்.

மனுநீதிகண்ட சோழனின் வரலாற்றைப் பேசும் போது நீதிமுறைமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொருந்தும் என்று சேக்கிழார் புதுமை காட்டுகிறார். மன்னன் மகன் தெருவில் தேரில் செல்லும் போது ஒரு பசுக்கன்று தவறுதலாக அந்தத் தேர்ச்சில்லில் பட்டு இறந்து விட்டது. தாய்ப்பசு கதறிக் கொண்டு வந்து மன்னனின் அரண்மனை வாயிலிலுள்ள நீதிமணியாகிய ஆராய்ச்சி மணியை அசைத்தது. மன்னன் வெகுண்டு இதன் காரணமறிய மந்திரிகளை வினவினான். மிகுந்த நீதிமானான அவனுக்கு இதற்குப் பிராயச்சித்தம் செய்தால் போதும் என அறிஞர்கள் கூறினர். அவனோ, தன்மகனை வீதியில் படுக்கச் செய்து அவன் மீது தேரினைச் செலுத்தினான். தாய்ப்பசு பட்ட பாட்டை, தான் பட்டான். இந்த நிலையில் இறைவன் தோன்றி அருள் செய்தார் என்று புராணம் சொல்கிறது.

புதுமையில் புதுமை செய்த புராணம்

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலில் விளங்கினார்

என்பதுதான் சேக்கிழார் காட்டும் நாயன்மார்களுக்கான தகுதிகள். இவர்கள் மண்ணோட்டையும் செம்பொன்னையும் ஒன்றாகவே பாவிப்பார்கள். அவர்களிடம் நன்மை, தீமை என்பது பற்றியெல்லாம் கவலையில்லை. அவர்கள் இறைவனைக் கும்பிடுவது, கூடும் அன்பினாலேயே அன்றி அவர்களுக்கு எதுவும் வேண்டாம். ‘இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்பது போன்ற உணர்வுடையவர்கள்.

இத்தகு அருளாளர்களின் காவியத்தில் புதுமைகள் இயல்பாகவே அமையும் .அதிலும் புதுமைக்கு முதன்மை தரவல்ல புத்திலக்கியவாதியான சேக்கிழார் செய்த காவியமாதலில் புதுமைகள் மலிந்திருக்கின்றன.

சுந்தரர் ஆதிசைவஅந்தணர். அவரது மனைவியருள் ஒருவரான பரவை உருத்திரகணிகையர் குலத்தவள். சங்கிலி வேளாளர் குலத்தவள். ஆனால் இத்திருமணங்களில் சாதிப்பிரச்சினை என்று ஏதும் ஏற்பட்டதாக மட்டும் எந்தத் தரவும் இல்லை. நாவுக்கரசர் வேளாளமரபினர்; அவரது தொண்டிற்காகவே தம் உயிரை மட்டுமன்றி அவர் தம் குடும்ப அங்கத்தவர் யாவரும் தம் உயிர்களையே கொடுக்கத் துணிந்த பெருமைமிக்க அப்பூதியடிகள், அந்தணர்.

பாணர்மரபில் பிறந்த யாழ்ப்பாண நாயனாரைப் பற்றிப் பேச முனைந்த சேக்கிழார் அந்தணமரபில் கௌண்டின்ய ஹோத்திரத்தில் பிறந்ததால் கௌணியர் என்று அழைக்கப்பெறும் திருஞானசம்பந்தர் அவரை ‘ஐயரே’ என்று விளித்ததாகக் காட்டுகிறார்.

அளவிலா மகிழ்ச்சியினார் தம்மை நோக்கி ஐயர் நீர்
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதியுடையோம் என்றே
இளநிலா நகை முகிழ்ப்ப இயைந்தவரை உடன்கொண்டு
களம்நிலவு நஞ்சணைந்தார் பால் அணையும் கௌணியார்

இது மட்டுமல்ல, கண்ணப்பரை சிவகோசரிச் சிவாச்சார்யார், ‘ஐயரே’ என்று தான் அழைக்கிறார். தில்லை மூவாயிரம் தீட்சிதர்களும் திருநாளைப் போவாரை ‘ஐயரே’ என்று தான் அழைக்கிறார்கள். இப்படி நாமெல்லாம் தற்போது உயர் வகுப்பையே குறிக்கும் சொல்லாக்கம் என்று கருதி வருகிற ஐயர் (தலைவர்) என்ற சொல்லால் பெரியபுராணத்தில் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டு சிவனருளால் உயர்ந்த பெருமக்களை அந்தணரும் அரசரும் ‘ஐயர்’ என்று அழைப்பதாகக் காட்டுகிறார். இவற்றால் தமது காவியத்தை புரட்சிக் காவியமாகவும் சமுதாயக் காவியமாகவும் தெய்வச் சேக்கிழார் மாற்றியிருக்கிறார்.

 

பக்தியில் உயர்ந்த நாயன்மார்களின் பாங்கு

சேக்கிழார் காண்பிக்கும் நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அதிசயப்பிறவிகள்.

ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள அளப்பெருங்கரணங்கள் நான்கும்
சிந்தையேயாகக் குணமொரு மூன்றும் திரிந்து சாத்வீகமேயாக
இந்து வாழ் சடையான் ஆடுமானந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்த பேரின்பவெள்ளத்துள் திழைத்து மாறிலா மகிழ்ச்சியுள் மலர்ந்தார்

என்று தில்லைச் சிற்றம்பலத்துள் ஆடும் பெருமானைக் கண்ட சுந்தரரின் நிலைபோன்றதே அவர்கள் அனைவரதும் நிலை. ஓவ்வொருவரும் பெரியபுராண மாக்கதையின் கதாநாயகர்கள்.

nayanmars_periyapuranam

தன் கண்ணைக் கொடுத்தவர் கண்ணப்பன் என்ற திண்ணனாராகிய வேடன். தன் தலையைக் கொடுத்தார் ஏனாதி நாயனார். தான் பெற்ற ஒரே மகவை அரிந்து கொடுத்தார் சிறுத்தொண்டர். தன் சிவபூஜைக்கு ஊறு செய்த தந்தையின் கால்களை வெட்டினார் சண்டேஸ்வரர். தன் ஆசை மனைவியையே தாரை வார்த்துச் சிவனடியாருக்குக் கொடுத்தார் இயற்பகையார். எல்லாம் கொடுத்துத் தன்னையும் கொடுத்தார் அமர்நீதியார். அருமையாகக் கிடைத்த பொன் மீனை இறைவனுக்கே விட்டு, பசிகிடந்தார் அதிபத்தர் என்ற மீனவர். இறந்தமகனையே மறைத்து அப்பருக்கு அமுது அளித்தார் அப்பூதிகள். சிவனடியார் தந்த ஆடை மழையால் காயாததால் வருந்தி தன் தலையையே உடைத்துக் கொண்டார் திருக்குறிப்புத்தொண்டர். சிதம்பரம் காண என்று ஏங்கி ஏங்கி தில்லையப்பனுடன் ஒன்றானவர் திருநாளைப் போவார். இப்படியாக, தெய்வச் சேக்கிழார் காண்பிக்கும் நாயன்மார்கள் ஒவ்வொருவரும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள்.

இது மட்டுமல்ல தெய்வச்சீர். சேக்கிழார் பெருமான் தன்னூலில் பழந்தமிழ் இசை, வரலாறு, மருத்துவம், கணிதம், கோயிலமைப்பு, மனோவியல், போன்ற பல விடயங்கள் பேசப்படுகின்றது. சேக்கிழார் காட்டும் சைவசித்தாந்தம் என்ற பொருளில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பெற்றுள்ளன. சமத்துவம், தொண்டு, சைவம், சிவம், இவைகளுக்கு அளித்த முதன்மை பெரியபுராணத்தை உலகப்புகழ் பெறச் செய்துள்ளது.

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஓன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

(முற்றும்.)

13 Replies to “பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]”

 1. பாணர்மரபில் பிறந்த யாழ்ப்பாண நாயனாரைப் பற்றிப் பேச முனைந்த சேக்கிழார் அந்தணமரபில் கௌண்டின்ய ஹோத்திரத்தில் பிறந்ததால் கௌணியர் என்று அழைக்கப்பெறும் திருஞானசம்பந்தர் அவரை ‘ஐயரே’ என்று விளித்ததாகக் காட்டுகிறார்.

  இது மட்டுமல்ல, கண்ணப்பரை சிவகோசரிச் சிவாச்சார்யார், ‘ஐயரே’ என்று தான் அழைக்கிறார். தில்லை மூவாயிரம் தீட்சிதர்களும் திருநாளைப் போவாரை ‘ஐயரே’ என்று தான் அழைக்கிறார்கள். இப்படி நாமெல்லாம் தற்போது உயர் வகுப்பையே குறிக்கும் சொல்லாக்கம் என்று கருதி வருகிற ஐயர் (தலைவர்) என்ற சொல்லால் பெரியபுராணத்தில் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டு சிவனருளால் உயர்ந்த பெருமக்களை அந்தணரும் அரசரும் ‘ஐயர்’ என்று அழைப்பதாகக் காட்டுகிறார். இவற்றால் தமது காவியத்தை புரட்சிக் காவியமாகவும் சமுதாயக் காவியமாகவும் தெய்வச் சேக்கிழார் மாற்றியிருக்கிறார்.

 2. ஓரிலக்கியம் குறித்துப் பல்வகையான பார்வைகள் உருவாகலாம். இந்த வகையில் கட்டுரையாசிரியரின் பார்வை வித்தியாசமானது. விநோதமானது. சிறப்பானது. வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு இளைஞனுக்கும் ஊக்கம் தர வல்ல கட்டுரை இது…

 3. மிக சிறந்த தொகுப்பு. மேலும் பல கட்டுரைகள் உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன்.

  சோமசுந்தரம்

 4. மிக அருமையான கட்டுரைகள். இவை போன்ற படைப்புகளை தரும் உங்கள் தளத்திற்கும் என் உளமார்ந்த நன்றி. கட்டுரை ஆசிரியருக்கு என் பணிவான வணக்கம். மெய் சிலிர்க்கிறது!

 5. பார்பனர்கள் இந்த மாதிரி தியாகம் எல்லாம் செய்யாமலேயே இறைவனை
  அடைந்து விடுகிறார்கள். ஆனால், மற்றவர்கள் தன் கையை உடைக்க வேண்டும் . கண்ணை பிடுங்க வேண்டும் . பிள்ளையை கொள்ள வேண்டும் . என்ன மாதிரியான விளக்கம் இது புரியவில்லை அய்யா ….

 6. பிரசாத்,

  வேறேதோ ஒன்றைச் சொல்ல வரும்போது நீங்களாகவே சாதியக் கண்ணோட்டத்துடன் அதற்கு வியாக்கியானம் செய்வது விந்தையாக இருக்கிறது. என்ன செய்வது தி.க.வும் மு.க.வும் போலி மபாச்சார்பு அரசியலும் நம்மவர்களைப் படுத்தும் பாடு இது.

 7. //சுந்தரர் ஆதிசைவஅந்தணர். அவரது மனைவியருள் ஒருவரான பரவை உருத்திரகணிகையர் குலத்தவள். சங்கிலி வேளாளர் குலத்தவள். ஆனால் இத்திருமணங்களில் சாதிப்பிரச்சினை என்று ஏதும் ஏற்பட்டதாக மட்டும் எந்தத் தரவும் இல்லை. நாவுக்கரசர் வேளாளமரபினர்; அவரது தொண்டிற்காகவே தம் உயிரை மட்டுமன்றி அவர் தம் குடும்ப அங்கத்தவர் யாவரும் தம் உயிர்களையே கொடுக்கத் துணிந்த பெருமைமிக்க அப்பூதியடிகள், அந்தணர்//

  //பாணர்மரபில் பிறந்த யாழ்ப்பாண நாயனாரைப் பற்றிப் பேச முனைந்த சேக்கிழார் அந்தணமரபில் கௌண்டின்ய ஹோத்திரத்தில் பிறந்ததால் கௌணியர் என்று அழைக்கப்பெறும் திருஞானசம்பந்தர் அவரை ‘ஐயரே’ என்று விளித்ததாகக் காட்டுகிறார்.

  அளவிலா மகிழ்ச்சியினார் தம்மை நோக்கி ஐயர் நீர்
  உளம் மகிழ இங்கு அணைந்த உறுதியுடையோம் என்றே
  இளநிலா நகை முகிழ்ப்ப இயைந்தவரை உடன்கொண்டு
  களம்நிலவு நஞ்சணைந்தார் பால் அணையும் கௌணியார்

  இது மட்டுமல்ல, கண்ணப்பரை சிவகோசரிச் சிவாச்சார்யார், ‘ஐயரே’ என்று தான் அழைக்கிறார். தில்லை மூவாயிரம் தீட்சிதர்களும் திருநாளைப் போவாரை ‘ஐயரே’ என்று தான் அழைக்கிறார்கள். இப்படி நாமெல்லாம் தற்போது உயர் வகுப்பையே குறிக்கும் சொல்லாக்கம் என்று கருதி வருகிற ஐயர் (தலைவர்) என்ற சொல்லால் பெரியபுராணத்தில் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டு சிவனருளால் உயர்ந்த பெருமக்களை அந்தணரும் அரசரும் ‘ஐயர்’ என்று அழைப்பதாகக் காட்டுகிறார். இவற்றால் தமது காவியத்தை புரட்சிக் காவியமாகவும் சமுதாயக் காவியமாகவும் தெய்வச் சேக்கிழார் மாற்றியிருக்கிறார்.//

  இவ்வசனங்களை மீளவும் வாசித்துப் பாருங்கள்.. எங்கு நோக்கினும் சாதி.. சாதி என்று அழக்கூடாது. சாதி என்ற விஷயத்தையே மறந்து பக்தி என்பதில் ஒன்றுபடுங்கள்.. ஒருமையுற்ற மனம் கொண்டவர்களாகுங்கள். இது தான் நமக்கு பெரிய புராணம் தரும் பெரிய செய்தி…

  இதை விட்டு விட்டு எங்கு எது நடந்தாலும் அதை சாதி என்று நம்மை நாமே சாதிப் போர்வையிட்டுக் கொண்டு நோக்குவதனை ஏற்க முடியவில்லை..

 8. பிரதாப் ப அவர்களே,
  திருப்பனாழ்வரை தோளில் சுமந்து வருமாறு கடவுளே ஒரு பார்ப்பனர்க்கு கட்டளை இட்டதும் அவர் சுமந்து வந்ததும் நிகழ்வு உங்களுக்கு தெரியாதா?

  தில்லை நடராஜருக்காக உயிரை கொடுத்த அந்தணர்கள் வரலாறு தெரியாதா?

  ஐயா நீங்கள் சனாதான தருமத்திற்கு எதிராக குரல் கொடுக்க நினைத்தால் வேறு ஏதாவது வழியில் முயலுங்கள்

  பிரித்தாளும் சூழ்ச்சியை இனி கையிலெடுக்க வேண்டாம்
  அந்தணர் அந்தணர் அல்லாதவர் எல்லாம் சேர்ந்ததுதான் இந்து சமுகம்

 9. மெய்கொவில்பட்டியில் தீண்டாமையை யார் செய்கிறார்கள்?
  திகவில் எத்தனை பிற்படுத்தப்பட்டோருக்கு பதவிகள் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது?
  எத்தனைபேர் தலைவர் ஆக்க பட்டுள்ளனர்?

 10. பெருமதிப்பிற்குரிய மயூரகிரி ஷர்மா அவர்களுக்கு

  உங்கள் பணி தொடரட்டும். மகா பாரத காலத்திலேயே மன்னவன் சந்தனு மீனவ குலப்பெண்ணை மணந்து அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கு அரசுரிமை உண்டு என்ற உத்திரவாதத்துடன் வாழ்ந்ததாக வரலாறு உள்ளது.

  மேலும், ராமனும், கிருஷ்ணனும் , நமது தெய்வங்கள் ஆவார்கள். இவ்விருவருமே பிராமணர்கள் அல்ல. எல்லா பிராமணர்களும், வைஷ்ணவர்கள் உட்பட இவ்விருவரையும் பெருமதிப்புடன் வணங்கி வழிபடுகின்றனர். நமது சமய இலக்கியங்களில் ஜாதிகள் பல உள்ளன. ஆனால் ஜாதிகளில் உயர்வு, தாழ்வு எதுவும் சொல்லப்படவில்லை.

  மேலும் வேதமாதா என்று போற்றப்படும் காயத்திரி மந்திரத்திற்கே ரிஷி விச்வாமித்திர முனிவர் ஆவார். விஸ்வாமித்திரர் பிராமணர் அல்ல. அவர் ஒரு க்ஷத்திரியரே ஆவார். எல்லா பிராமணர்களும் மூன்று வேளைகளும் அந்த காயத்திரி மந்திரத்தை சொல்லித்தான் சந்தியாவந்தனம் செய்கிறார்கள்.

  பிறப்பால் பார்ப்பான் என்ற போதிலும், பிறன்மனையை அவள் சம்மதமின்றி நாடி தூக்கிச்சென்ற இராவணனை எந்த ஜாதியினரும் மதிப்பதில்லை.

  திராவிடர் கழகம் போன்ற, பெரியார் திடலில் சுவிசேஷ பிரச்சாரம் செய்ய, பரிசுத்த ஆவிகளுக்கு வாடகைக்கு விட்டு பகுத்தறிவு வியாபாரம் செய்துவரும் , மோசடி இயக்கங்கள் தவறான பொய் பிரச்சாரங்கள் மூலம் , மனு தர்மம் பற்றி பொய்யான பல தகவல்களை சொல்லியும், ஏதோ மனு தர்மம் என்பதே இந்து மதத்திற்கு ஒரு வேதநூல் என்பது போலவும் பொய்களை சொல்லி , பிழைப்பு நடத்தி மோசடி வியாபாரம் செய்து வருகிறார்கள்.

  இந்து மதம் எல்லைகள் அற்றது. புதியன சேருவதற்கு எந்த தடையும் இல்லை. பழையனவற்றுக்கு தேவையான மாடுதல்களை செய்துகொள்வதற்கும் பல வழிகள் உண்டு. இது புரியாமல் அவர்களின் பிரச்சாரத்தை நம்பி ஏமாந்து போனவர்கள் எதற்கெடுத்தாலும் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று ஒரு பிரமையில் வாழ்கிறார்கள்.

 11. அன்புள்ள திராவிடன் (தென்னாடுடையான்),

  உங்கள் கடிதத்தில் யாரோ ஒருவருடைய பெயருக்கு பதிலாக ( பிரசாத் என்பதற்கு பதிலாக பிரதாப் என்று ) என் பெயரை தவறுதலாக டைப் செய்துள்ளீர்கள். திருத்திக்கொள்ளவேண்டுகிறேன்.

 12. மன்னிக்கவும் பிரதாப் ப என்று தவறாக டைப் செய்து விட்டேன். பிரசாத் ப என்று இருக்கவேண்டும்

 13. http://www.devarathirumurai.wordpress.com
  தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன ,
  மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது. இன்னும் நிறைய உள்ளன , சென்று உலாவுங்களேன். நன்றி

Leave a Reply

Your email address will not be published.