தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]

தலித்துகளும் தமிழ் இலக்கியமும்பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6

(தொடர்ச்சி…)

writer-imyamஇமையம் முற்றிலும் வேறான மனிதர், எழுத்தாளர். தலித் சித்தாந்தத்தை, தனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது போல அதை முற்றிலும் மறுப்பவர். அவர் ஒரு சாதாரண ஏழை பள்ளி வாத்தியாராக இருந்தது, சித்தாந்திகளுக்கு மிகவும் சௌகரியமாகப் போயிற்று. தம் சித்தாந்தத் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களுக்கு சரியான குறியாக இமையம் வாய்த்தார் என்றுதான் சொல்லவேண்டும். இமையத்தை தம் சித்தாந்தத் தாக்குதல்களுக்கு இரையாக்கினால் அது ஒரு சிறந்த முன்னுதாரணமாகி, எட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற தலித் எழுத்தாளர்களையும் சித்தாந்தத்தைச் சொல்லி மிரட்ட சௌகரியமாக இருக்குமே, அவர்களும் பயந்து, தானே அடங்கிப் போவார்களே.. சொல்வதைக் கேட்காது தம் இஷ்டத்துக்கு எழுதிக் கொண்டிருக்கும் தலித் எழுத்தாளர்களிலேயே இமையம்தான் அதிகம் முரண்டு பிடிப்பவர். தன் சுதந்திரத்தை உரக்கக் கூவி அறிவிப்பவர். பூமணி போல, சோ.தருமன் போல இவருமல்லவா, ‘தலித் பட்டைகளெல்லாம் எனக்குத் தேவை இல்லை. நான் தலித் எழுத்தாளர் இல்லை’ என்று போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார் என்று அவர்களுக்குக் கோபம். இது சுத்த அடங்காபிடாரித்தனம் இல்லையா? ‘கோவேறு கழுதைகள்’ அவரது முதல் நாவல். நாவல் என்னவோ தலித்துகளின் அவல வாழ்க்கையைப் பற்றியதுதான். இங்கு அவலப்படுவது ஒரு பிரிவு தலித் கிறித்துவர்கள். அவர்கள் அடிமை சேவகம் செய்வது அவர்களை விட சற்று பொருளாதார முன்னேற்றம் அடைந்துவிட்ட இன்னொரு பிரிவு தலித் குடும்பங்களுக்கு. அவர்கள் வாழ்வது அரசுக் குடியிருப்புகளில். கொஞ்சம் படித்து அரசு உத்யோகத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். குடிசைகளில் வாழும் கிறித்துவ தலித்துகள் அரசு குடியிருப்புகளில் வாழும் தலித்துகளின் வீட்டு துணிகளை சலவை செய்து கொடுப்பவர்கள்

koveru-kazhuthaigal-by-imayamதினம் காலனி வீடுகளுக்குச் சென்று வாயில் முன் நின்று மிச்சம் மீதி உணவு இருந்தால் கொடுப்பதை வாங்கி வரவேண்டும். இந்த தலித் கிறித்துவ குடும்பங்கள் முன்னேறிய தலித் குடும்பங்களுக்கும் தலித்துகள். தன் வீட்டுத் துணிகளைச் சலவை செய்பவன், தினம் வீட்டில் மிஞ்சிய சோத்தைக் கேட்டு வாங்கிப் போகவேண்டியவன், எப்படி தனக்குச் சமமாவான்? படித்து அரசு வேலையில் அமர்ந்து காரை வீட்டில் வாழும் தலித் இப்போது உயர் சாதிக்காரனாகி விட்டானே. உயர் சாதி மிதப்பில் அவன் சந்தோஷிக்கவேண்டாமா? அவனுக்கும் ஒரு தலித் இருந்தால்தானே தன் உயர் சாதி வாழ்வை அவன் அனுபவிக்க முடியும்?

தான் உயர்வதில் மட்டுமல்ல; நேற்றுவரை தன் சகாவாக இருந்த மற்றவனைத் தாழ்த்துவதிலும் ஒரு சுகம் உண்டே.

இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ மிகவும் சச்சரவைக் கிளப்பிய, பல உண்மைகளைப் பட்டவர்த்தனமாகச் சொன்ன நாவல். அதைச் சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டுமே.

rathina-karikalanஇரத்தின. கரிகாலன் தலித் இல்லைதான். ஆனாலும் அவரும் தலித் மேடையில் மிகுந்த ஆர்வத்துடன் அமர்ந்து கொள்கிறார். அவருக்கு வரவேற்பும் மிகுந்த உற்சாகத்துடன் தரப்படுகிறது. அது எப்படியோ போகட்டும். அவரது கவிதைகள் ஏதோ சர்ச்சில் மன்னிப்புக்கோரும் சடங்காக மண்டியிட்டு, இதுகாறும் தானும் தன் முன்னோர்களும் தலித்து மக்களுக்கு இழைத்து விட்ட பாவங்களையெல்லாம் மன்னித்து பாப விமோசனம் கேட்கும் பாவனை கொண்டவையாக இருக்கின்றன. அவர் தலித்துகளுக்கு ஒரு படியோ இரண்டு படியோ மேல்தட்டு சாதி என்று எண்ணுகிறேன் அந்த மன்னிப்புக் கோரல் தன் சாதியினரது மட்டுமல்லாமல் எல்லா உயர் சாதியினரையும் குறித்தது என்பதால், இத்தகைய சுய விமரிசனம், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அவ்வப்போது வலியுறுத்துவது போல, தாம் எத்தகைய தவறுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று தீவிரமாக நம்பும் தலித் சித்தாந்திகளுக்கும் தேவையான ஒன்றுதான்.

இப்போது எல்லோருடைய கவனமும் பூமணியின் மீது குவிந்துள்ளது. பூமணியை இன்றைய தலித் எழுத்துகளுக்கெல்லாம் முன்னோடி என்று சொல்ல வேண்டும். தலித் இலக்கியத்தின் தந்தை என்று சொல்லலாமா, தலித் வாழ்க்கை பற்றி சிந்தித்தவர்கள் என்று இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல? தமிழ் இலக்கிய வரலாற்றிலிருந்து நிறையப் பேரைச் சொல்லலாமென்றாலும், தலித் வாழ்க்கையப் பற்றி எழுத தலித் சமூகத்திலிருந்தே வந்த முதல் எழுத்தாளர் பூமணி.

அப்படி ஓர் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர் அவர். 1976-ல் வெளிவந்த அவரது ‘பிறகு’ என்ற நாவல் உடனே தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல்லெனும் முக்கியத்துவம் பெற்றது.

பிறகு‘ நாவல் அழகிரி என்னும் செருப்பு தைப்பவனின் வாழ்க்கையைச் சொல்கிறது. அழகிரிக்கு இன்னொரு கிராமத்திலிருந்து அழைப்பு வரவே அங்கு செல்கிறான். அழகிரி மிகவும் அடக்கமானவன். அமைதியான குணம் கொண்டவன். அவனுக்கு என்ன இன்னல் வந்தாலும், யாரென்ன கெடுதல் செய்தாலும், இதுதான் தனக்கு விதிக்கப்பட்டது என்று ஏற்று அமைதி அடைபவன். தணிந்து போவதையும் ஒரு புன்சிரிப்போடு, கௌரவத்தோடு ஏற்பவன். கருப்பன் என்று ஓர் அநாதைச் சிறுவன் அவனை வந்தடைகிறான். அந்தச் சிறுவனையும் அழகிரி தன் அணைப்பில் பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறான். கருப்பன் ஒரு சிறுவன்தான்; அநாதைதான்; பலமற்றவன்தான். ஆனாலும், அவனை வந்து சேரும் துன்பங்களையெல்லாம் கிண்டலோடு, கவலையற்று சந்திப்பவன். எதுவும் அவனை நிலைகுலையச் செய்வதில்லை. மாறாக, அவனது கேலியும், பயமின்மையும் மற்றவர்களைத்தான் நிலைகுலையச் செய்யும். ஒரு தலித் இப்படித்தான் தனக்கு விதிக்கப்பட்டுவிட்ட அவல வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கருப்பனின் குணச்சித்திரம் ஒரு ஆர்க்கிடைப்; ஒரு விதிவிலக்காக, வரவேற்கத்தக்க ஓர் ஆச்சரியமாக, கருப்பன் தலித் சித்தாந்திகளுக்கும் பிடித்துப் போய்விட்டான். அவனுடைய கிண்டல்தான் அவனிடமிருக்கும் பலமான ஆயுதமும்; அரசியல் போராட்டத்துக்கான ஆயுதம்; தன் எதிரிகளை முறியடிக்கும் ரகசிய ஆயுதம் என்று தலித் சித்தாந்திகள் மறுபடியும் ஒரு விதிவிலக்காக சரியாகச் சொல்கிறார்கள். நிறைய தலித் எழுத்துகளில் கருப்பன் என்னும் ஆர்க்கிடைப்பை வேறு வேறு பெயர்களில், சற்று மாறிய சாயல்களில், சற்று மாறிய குணச் சித்திரத்தில் காணலாம்,. ஆனால் எல்லாரும் கருப்பன்கள்தாம்.

பூமணியும் கூட மிக அமைதியான, சாதுவான, எதற்கும் கவலைப் படாத, மனிதர். தலித் முகாம்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதற்கெல்லாம் அவர் கவலைப் படுவதில்லை. பதிலும் சொல்வதில்லை. ஆனால் பூமணியை யாரும் அலட்சியம் செய்துவிட முடியாது. கொஞ்சம் வேண்டா வெறுப்புடன்தான், தவிர்க்கமுடியாது, அவரை அங்கீகரிக்கிறார்கள் சித்தாந்திகளும். ஆனால் பூமணிக்குரிய அளவில் அல்ல, முழுமையாகவும் அல்ல.

writer-dharmanசோ.தருமனும் அப்படித்தான். அவருடைய ஆரம்ப நாள்கள் தீப்பெட்டி, பட்டாசு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சொற்ப சம்பளத்துக்கு நாள் முழுதும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் சிறுவர்களிடையே கழிந்தன. அச்சிறுவர்களீண் ஏழ்மை சுமத்திய வாழ்க்கை அது. சோ.தருமனின் ‘நசுக்கம்’ என்ற சிறுகதை- இச்சிறுவர்கள் ஓர் இரவில் பட்டாசு வெடித்துச் சாவதைச் சொல்லும் சிறுகதை கதா பரிசு பெற்று மிகப் பரவலான கவனம் பெற்றது. அடுத்ததாக அவரது நாவல் ‘தூர்வை’ நம் நினைவுகள் மறந்த ஒரு பழங்காலத்திய தலித் விவசாயிகளின் வாழ்க்கையைச் சொல்வது. வாய்மொழி மரபில் கதை சொல்வது போல, துண்டு துண்டான காட்சிகளையும் சம்பவங்களையும் பாத்திரங்களையும் நூல் கோத்தாற்போல் தருமன் அக்கால வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறார். நம் பெரியோர்களிடம் கேட்கும் வாய்மொழி மரபு கதை போலவே இதுவும் ஒளிவு மறைவு, பூடகமாகச் சொல்வதை பச்சையாகவும் வெளிப்படையாகவும் எவ்வித தயக்கமுமின்றி சொல்லிச் செல்கிறார் தருமன். அதுவே அந்த வாழ்க்கையின் வண்ணத்தையும் சுவாரஸ்யத்தையும் கூட்டிச் சொல்கிறது. பூமணியைப் போலவே சோ.தருமனும் தலித் லேபிளை எவ்விதத் தயக்கமுமின்றி மறுப்பவர். மறுபடியும் பூமணிக்குச் சொன்னது போலவே சோ.தருமனும் எவ்விதத்திலும் ஒதுக்கி விடக் கூடியவரும் இல்லை.

வழக்கமான இடமின்மையையே காரணமாகச் சொல்ல வேண்டும், நான் இந்த மலரில் சேர்க்க விரும்பி ஆனால் சேர்க்க முடியாது போன சில விஷயங்களுக்கு. இக்கட்டுரையின் ஆரம்பத்திலிருந்து நான் சர்ச்சித்திருக்கும் ஆழ்வார்கள், நாயன்மார்கள், குரு பரம்பரைப் பிரபாவம், நந்தன் கதை, பெரிய புராணம் இத்யாதியிலிருந்து சர்ச்சிக்கப்பட்ட பகுதிகளை மேற்கோளாகத் தர விரும்பினேன். புதுமைப் பித்தனும், பாரதியாரும் தலித் பிரசினையை மையமாகக் கொண்டு எழுதிய கதைகளும் என் மனத்தில் இருந்தன. இது மட்டுமல்லாமல், நாடகத் துறையில் தலித் பிரசினையை முன் வைத்து இயங்கும் புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் ஜீவா, முனைவர் குணசேகரனின் நாடகம் பற்றிப் பேசியிருக்கலாம். குணசேகரனின் நாடகத்திலிருந்து சில பகுதிகளைத் தந்திருக்கலாம். அத்தோடு தலித் சிற்பிகளின், ஒவியர்களின் படைப்புகளும் கூட இம்மலரை அலங்கரிக்கச் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன். இவையெல்லாம் சேர்ந்தால் இம்மலர் மிகவும் அளவு மீறிப் பெரிதாகியிருக்கும். எனவே அவையெல்லாம் சாத்தியமாகவில்லை. எது வரை சாத்தியம் என்று ஒரு சமரசத்திற்கு வரவேண்டியதாயிற்று. எது சாத்தியமாயிற்றோ அவை கீழே…
 

Introduction

The Dalit in Tamil Literature – Past and Present – Venkat Swaminathan

 

Poems

  • Krishangini – Dalit
  • Karikalan – A Poem for us, Five Commandments Ruin
  • Ila Murugu – Poisoned shadows
  • Imayam – You and I, The Rattle and the Cow that changed hands.
  • Palamalai – Seeking Advice, Self Respect, Smiling stupidly, Paraveeran


 

Short stories

  • Bama – Annaachi
  • Perumal Murugan – The Mound
  • Abhimani – The Offering
  • Vizhi Pa Idaya Vendan – Livelihood
  • Sundara Pandian – Aarokiasami
  • Unjai Rajan – Anger
  • Pavannan – The Well
     

The Writers Speak

  • Imayam – The Dalit issues here
  • Cho Dharuman – What is said and What ought to have been said
  • Perumal Murugan – Expression of Distress
  • Bama – Dalit Literature
  • Karikalan – For a Time when Distances get less…
  • T.Palamalai – About Myself and my poetic concerns)

(Indian Literature No. 193 – Sept. Oct. 1999)

 

Novels ( excerpts )

  • Imayam – The Mules
  • Sivakami – Anandaayi
  • Cho Dharuman- Thoorvai
  • Poomani – And Then

(Indian Literature No. 201 Jan-Feb, 2001)

 
பின்குறிப்பு:

தலித் எழுத்தாளர்கள் தம் அனுபவத்தை எழுதுவதுதான் தலித் இலக்கியமாகும்; மற்றவர்களது மனிதாபிமானமும் எட்டி நின்ற பார்வையுமே ஆகும் என்று எழுதியிருந்தேன். இந்தப் பாகுபாடு ஓர் இடைப்பட்ட காலகட்டத்துக்கே பொருந்துவதாகும். பின்னர் தலித் என்ற அடைமொழி அழிந்து பொது இலக்கியப் பிரவாஹத்தில் அவ்வெழுத்துகள் சேர்ந்து கொள்ளும், அதில் பெருமாள் முருகனும் சோ.தருமனும், இலக்கியாசிரியர்களாகவே அடையாளம் காணப்படுவார்கள். இந்த விளக்கத்தை தலித்துகள் எழுதுவதுதான் தலித் இலக்கியமா? என்று கட்டுரையின் ஆரம்பத்தில் கேட்டவர்களுக்கு, கடைசியில் தரலாம் என்று நினைத்தேன். இலக்கியாசிரியர்கள் தம்மை தலித் என்று எண்ணி எழுதுவதில்லை. அவர்கள் வாழ்க்கை தலித் வாழ்க்கையானதால் அது எழுதப்படுகிறது. அப்படித்தான் சோ.தருமன், பூமணி, இமையம் எல்லாம் தம்மை தலித் என்று அடையாளப்படுத்தப் படுவதை விரும்புவதில்லை.

[முற்றும்]

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

4 Replies to “தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]”

  1. Pingback: Indli.com
  2. மதிப்பிற்குரிய வெங்கட் சாமிநாதன்,

    இந்தத் தொடரில் எனக்கு சில பாகங்களில் இசைவில்லைதான். ஆனால் மிகவும் விரும்பிப் படித்த தொடர். குறிப்பாக தற்கால தமிழ் “தலித்” இலக்கியம் பற்றி நீங்கள் எழுதி இருப்பது அருமையாக இருக்கிறது. யாராவது புண்யாத்மா தற்கால “தலித்” படைப்புகள் என்று லிஸ்ட் போட்டால் படிக்க விரும்புபவர்களுக்கு சவுகர்யம். 🙂

    // தலித் எழுத்தாளர்கள் தம் அனுபவத்தை எழுதுவதுதான் தலித் இலக்கியமாகும்; மற்றவர்களது மனிதாபிமானமும் எட்டி நின்ற பார்வையுமே ஆகும் என்று எழுதியிருந்தேன். இந்தப் பாகுபாடு ஓர் இடைப்பட்ட காலகட்டத்துக்கே பொருந்துவதாகும். // என் குழப்பம் உங்கள் கண்ணில் பட்டிருக்கிறது, அது முக்கியம் என்று கருதி விளக்கியும் இருக்கிறீர்கள். நன்றி!

  3. எல்லா மொழிகளிலும் இலக்கியங்கள் உண்டு என்பது தெரிந்ததே. ஆனால் எல்லா மொழிகளிலும், தலித் படைப்புக்கள் இருக்கும் என்பதும், தமிழ் மொழியில் இருக்கின்றது என்றும் தெரியாததாக இனி இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *