நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்

கோவில் என்பது இறைவன் உறையும் இடம். கோ என்றால் அரசன். இல் என்பது இருப்பிடம். ஆக, அரசர்கரசனான இறைவன் எழுந்தருளியுள்ள இடம் திருக்கோயில் என்று அழைக்கப்பெறுகிறது. இதனை ஆலயம், தேவாலயம், தேவஸ்தானம், தேவமந்திரம் என்கிற பெயர்களாலும் பரவலாக அழைக்கிறோம். ஆலயம் என்றால் ஆன்மா ஒடுங்கி நிற்கும் இடம் என்று பொருள் கொள்வர்.

பசுவின் உடலெங்கும் பரந்தோடும் குருதியானது முலை வழியே பாலாகச் சொரிதல் போல உலகெங்கும் பரவியிருக்கிற இறையருளானது திருக்கோயிலாகிய வழியினூடே சிறப்பாக வெளிவரும் என்பது ஆன்றோர் கருத்து. இதனால் ‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்கள். பல ஊர்களை நோக்கின் அவ்வூருக்கே கோயில் தான் பெருமையையும் சிறப்பையும் கொடுக்கிறது. காஞ்சி, மதுரை, கும்பகோணம் என்றெல்லாம் சொல்லுகிற போது எப்போதுமே கோபுரங்களும் மணியோசையும் உத்ஸவங்களும் தான் ஞாபகத்திற்கு வரும்.

வேறு எத்தனை எத்தனை சிறப்பிருந்தாலும் அத்தனையையும் மிஞ்சிய சிறப்பாக கோயில்களே விளங்கக் காண்கிறோம். நமது தமிழகமாகட்டும் ஏன்? வட இலங்கையாகட்டும் அடையாளமே கோயில் கோபுரம் தான். தமிழகத்தின் அடையாளச் சின்னமாக ‘கோதை பிறந்த ஊர்.. கோவிந்தன் வாழும் ஊர்..’ என்று போற்றப்படும் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோபுரம் தானே நிமிர்ந்து நிற்கிறது.

sri_villiputhur_1860

எனவே, இத்தகு கோயில்கள் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் இன்றைக்கெல்லாம் பார்க்குமிடம் எங்கும் ஓரே கோயில்களாக இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கோயில்களில் எல்லாம் ஒவ்வொரு பிரச்சினைகள் பற்றி பேசுகிறார்கள்.

சிவாலயங்கள் பலவும் நவக்கிரக ப்ரீதிக்கான ஸ்தலங்களாக மாறிப் போயிருக்கின்றன. சில இடங்களில் எல்லாம் மூலவராக இருக்கிற ஸ்வாமி, அம்பாளுக்கு கொடுக்கப்படுகிற முதன்மையைக் காட்டிலும் நவக்கிரஹ தேவர்களுக்கும் இத்தகு மூர்த்திகளுக்குமே அதிக முதன்மை வழங்கப்பட்டு வருகிறது.

இப்படியாக நமது கோயில் வழிபாடு மிகவும் சிக்கலான நிலையை அடைந்து வருகிறது. மகர விளக்கு தரிசனத்தின் போது சபரிமலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பான ஜடாயு அவர்களின் கட்டுரையை பார்த்த போது இதனுடைய பாரியளவு தாக்கத்தை காண முடிந்தது.

கோயில்களின் வகைகள்

கோயில்களை முக்கியமாக மூன்று வகையாகப் பிரித்து நோக்குவர். கேவலாலயம், சங்கீர்ணாலயம், மிச்ராலயம் என்பன அவையாகும். கேவலாலயம் என்பது இறைவனுக்காக மட்டும் தனித்து அமைந்துள்ள கோயில்கள். இவ்வாறான கோயில்களை உத்தர பாரதத்தில் அதிகளவில் காணலாம். உதாரணமாக காசியை எடுத்துக் கொண்டால் அங்கேயுள்ள விஸ்வநாதராலயம் தனித்து சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயமாக அமைந்திருக்கின்றமையைக் காண்கிறோம்.

இறைவனும் இறைவியும் மட்டும் எழுந்தருளியிருக்கிற ஆலயம் மிஸ்ராலயம் ஆகும். இறைவன், இறைவி பரிவார மூர்த்திகளுடன் எழுந்தருளியிருக்கிற ஆலயம் சங்கீர்ணாலயம். தென்னிந்தியாவில் பொதுவாக இத்தகு ஆலயங்களை நாம் காண முடிகிறது. உதாரணமாக மதுரை மீனாட்சியம்பாள் ஆலயம் என்றால் மூல மூர்த்திகளாகிய மீனாட்சி சுந்தரேஸ்வராளைத் தவிர பரிவார மூர்த்திகளாகிய பல்வேறு விநாயகர், முருகன், இறைவனின் பல்வேறு வடிவ மூர்த்திகள், நாயன்மார்கள் என்று பல மூர்த்திகள் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

கோயில் கட்டட அமைப்பில் நாகரம், வேசரம், திராவிடம் என்கிற மூன்று வகைகளை இனங்காணலாம். நாகரம் என்பது கீழிருந்து சற்சதுர அமைப்பிலேயே உயர்ந்து காணப்படுவது. இதனை வட இந்தியாவில் அதிகம் காணலாம். வேசரம் என்பது வட்ட வடிவானது. இன்றைக்கும் இலங்கை போன்றவற்றில் உள்ள பௌத்த விகாரைகளை இவ்வமைப்புடன் ஒப்பு நோக்கலாம்.

திராவிடம் என்பது நமது தென்னகத்தில் அமைந்துள்ள பொதுவான அனைத்துக் கோயில்களினதும் கட்டட வடிவமைப்பாகும். கருவறைக்கு (மூலாலயத்திற்கு) மேல் அமைந்திருப்பதை இலங்கையில் ஸ்தூபி என்றே வழங்குவர். இதனை பொதுவாக விமானம் என்று கூறுவர். விசேஷமாக அளந்து அமைக்கப்படுவது என்பது இதன் பொருள். தேர் முதலிய ஊர்திகளைப் போல அழகாக அமைக்கப்படுவதால் இதற்கு விமானம் என்று பெயர் வந்திருக்கலாம்.

எவ்வளவு பெரிய கோயிலாக இருப்பினும் சிறிய கோயிலாக இருப்பினும் எல்லா இடத்தும் கருவறை அமைப்பு பொதுவாக ஒரே நிலையிலேயே அமைந்திருக்கக் காண்கிறோம். கோயில்களை அவற்றின் கட்டட அமைப்பின் அடிப்படையில் அதிலும் முக்கியமாக விமானத்தின் அடிப்படையில் பலவாறாகப் பகுப்பர். திருநாவுக்கரசர் தேவாரப்பதிகம் ஒன்றில்,

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடெட்டு மற்றும்
கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழல் கோயில்
கருப்பறில் பொருப்பனைய கொகுடிக்கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழந்து
தாழ்ந்திறைஞ்ச தீவினைகள் தீருமன்றே

என்று கோயில்களின் வகைகளை வகுத்து தெளிவாகக் குறிப்பிடுவார். இப்பதிகத்தில் கரக்கோயில், ஞாழல் கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில். ஆலக்கோயில் என்பனவாய ஆறு வகைகள் குறிப்பிடப்பெற்றுள்ளன.

எனவே 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேயே பல்வேறு வகையான வடிவமைப்புடன் அமைக்கப்பட்டிருந்த கோயில்கள் தமிழகத்தில் பரவியிருந்தன என்று கருதலாம். இன்றைக்கும் கஜப்ருஷ்ட (ஆனைவடிவில் அமைந்த) விமானத்தை கொண்ட கோயில்களை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காணலாம்.

கருவறையில்  உறையும் கற்பகம்

இறைவனின் மூலவிக்கிரகம் எழுந்தருளியிருக்கிற இடம். மூலஸ்தானம் அல்லது கரு- அறை என்று சொல்லுவார்கள். கர்ப்பகிரஹம் என்கிற பெயராலும் அழைப்பர். இக் கருவறைக்கு முன்னே அடியவர்கள் நின்று வழிபடக் கூடிய மண்டபம் அமைந்திருக்கிறது. இதனை மகாமண்டபம் என்பர். இந்த மகாமண்டபமும் கருவறையும் முற்காலத்தில் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டிருந்திருக்கிறது. இன்றைக்கும் காஞ்சி கைலாஸநாதர் ஆலயத்தில் அவ்வாறிருக்கக் காணலாம். பிற்காலத்தில் இவ்விரண்டையும் இணைத்தனர். அதன் நடுப்பகுதியில் அமைந்த சிறிய மண்டபம் அர்த்தமண்டபம் என்று கூறப்படும்.

kanchikailasanatha

இம்மூன்று மண்டபங்களுமே கோயிலின் எழுச்சியின் முதற் கட்டம். பின்னர் படிப்படியாக விரிந்து பல்வேறு மண்டபங்கள் எழுந்திருக்கின்றன என்று கொள்வதற்கு இடமுண்டு. இம்மண்டபங்கள் தொடர்ச்சியான வளர்ச்சிப் பரிணாமத்தில் கருவறையைச் சுற்றியும் எழுச்சியுறும் போது பிரகாரங்கள் உருவெடுத்தன.

பொதுவாக கருவறை என்ற கர்ப்பகிருஹத்தின் மூன்று பக்கமும் அடைக்கப்பட்டிருக்கும். வெளிச்சுவரில் பஞ்சகோஷ்டங்களையும் (மாடங்களையும்) பல இடங்களில் அமைத்திருப்பார்கள். இவற்றிலும் மூன்று மாடங்களே பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது என்று நான் கருதுகிறேன். தெற்கு கோஷ்ட(மாடத்தில்) சிவபெருமானின் குரு வடிவமான தட்சணாமூர்த்தி, மேற்குக் கோஷ்டத்தில் மஹாவிஷ்ணு மூர்த்தி, வடக்குக் கோஷ்டத்தில் பிரம்மா என்பதாகவே இவ்வமைப்பிருக்க வேண்டும்.

இவ்வாறான கோஷ்ட அமைப்பு பழங்காலத்தில் விஷ்ணுகோயில்களிலும் இருந்து வந்திருப்பதாகவும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சோழர்காலத்தில் சிவாலயங்களில் மேற்கு மாடத்தில் அமையப் பெற்றிருந்த விஷ்ணுமூர்த்தி எடுக்கப்பட்டு லிங்கோத்பவர் என்கிற சிவவடிவம் ஸ்தாபிக்கப்பட விஷ்ணுவாலயங்கள் பலவற்றிலும் சிவப்பிரதிஷ்டையே இல்லாமற் போய்விட்டது என்று சிறியேன் கருதுகிறேன். இது இந்து ஒற்றுமைக்கு பெரும் பாதகமான அம்சமாகும். இயலுமாகில் இது பற்றி அறிஞர்கள் சிந்தித்து பழைய நிலையில் மும்மூர்த்திகளும் கருவறையை சுற்றி அமைகிற வழக்கத்தை மீள உருவாக்கில் சிறப்பாகும்.

சிவாலயங்களைப் பொறுத்த வரையில் பொதுவாக சிவபெருமானின் கருவறைக்கு இடப்பக்கமாக அம்பாளுக்குரிய கருவறை தெற்கு நோக்கி அமைந்திருக்கும். இரண்டு கருவறைகளுக்கும் மகாமண்டபம் பொதுவாகவே இருக்கும். சில இடங்களில் மட்டும் மாறுபாடுகள் உண்டு. மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக் கோலம் பூண்டிருப்பதால் சுவாமி கருவறைக்கு வலப்புறமாக அங்கயற்கண்ணியின் கருவறை அமைந்திருக்கிறது. காஞ்சியில் காமாட்சியம்பாள் ஆலயம் ஏகாம்பரேஸ்வரஸ்வாமி ஆலயத்திலிருந்து சற்று விலகி தனித்துவ அம்சங்களோடு சிறப்பாக அமைந்திருக்கிறது.

வைஷ்ணவ ஆலயங்களில் தாயார் சந்நதி பெருமாள் சந்நதிக்கு வடக்காக அமைந்திருப்பதே வழக்கம் எனிலும் சில இடங்களில் சில சிறப்புக்களை முன்னிட்டு சில மாற்றங்களையும் காணலாம். திருப்பதியில் வேங்கடவனுடைய பட்டத்தரசியாகிய அலமேல்மங்கை திருச்சானூரிலேயே தனிக்கோயில் கொண்டிருப்பதையும் காண்கிறோம்.

கருவறையை நம்முன்னோர்கள் பல்வேறு நுணுக்கங்களுடன் அமைத்தனர். அதிஷ்டானம் என்பது கருவறையின் அடிப்பகுதி. பாதம் என்பது கருவறை. மஞ்சம் என்பது தளவரிசை. இதை பிரஸ்தரம் என்றும் சொல்வர். அதன் மேல் இருப்பது கண்டம். ஐந்தாவது பண்டிகை. இதன் மேல் இருப்பது ஸ்தூபி. ஸ்தூபியில் கலசம் என்ற கருவறையின் திருமுடி- மகுடம் அமைந்திருக்கும். கோயில்களை மரம், செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் என்பவற்றைக் கொண்டு பழங்காலத்தில் ஆக்கினர்.

மண்டபங்கள் நிறை அழகுக் கோயில்

அப்பர் பெருமான் ‘திருக்கோயில் இல்லாதது திரு இல் (செல்வம்- சிறப்பு இல்லாத) ஊர்’ என்பார். இதனை அறிந்து தான் நம்மவர்கள் உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கே தம்மால் இயன்ற அளவில் கோயில்களை எழுப்பி வழிபாடாற்றி வருகிறார்கள். இன்றைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா. ஜேர்மன், கனடா, நியூசிலாந்து, மலேசியா. தாய்லாந்து, தென்னாபிரிக்கா, என்று எங்கு சென்றாலும் இந்தத்திருக்கோயில்களைக் காண்கிறோம்.

அந்த அந்த நாட்டு அரசின் அனுமதியுடன் கோயிலை எவ்வளவு தூரம் சிறப்பாக பெரிதாக அமைக்க இயலமோ? அத்தகு வண்ணம் அமைத்து வருகிறார்கள்.

lemont_rama_temple

பல்வேறு ஐரோப்பிய தேசங்களில் வெறிச்சோடிப்போய் கிடந்த கிறித்துவ தேவாலயங்கள் பல கூட நம் இந்து அன்பர்களின் வருகையால் சிவ- விஷ்ணு நாமம் ஒலிக்கும் திருக்கோயில்களாக மாறியிருக்கின்றன.

கோயில் அமைக்கப்படுவதற்கு முன்னர் அத்திவார கிரியை இடம்பெறும். இதனை இஷ்டக ந்யாசம் என்றும் கூறுவர். இதன் போது கிரியாபாவனையுடன் கோயிற் கட்டுமானம் ஆரம்பமாகும். இக் கோயில் கட்டுமானத்தை எப்படி எவ்வாறான செங்கல்லை முதலில் வைத்து ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு ஆகமக் குறிப்புகள் உள்ளன.

செங்கல்லும் மரமும் இணைத்தே முற்காலத்தில் கோயில்களை உருவாக்கினர். இன்றைக்கம் கேரளாவில் இவ்வாறான கோயில்களை காணலாம். தென்னிலங்கையில் உள்ள கதிர்காமமும், இமயமலைப்பகுதிக் கோயில்களும் கூட இவ்வாறானவையேயாகும். திருக்கோயில்களில் பல்வேறு மண்டபங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

இவற்றில் அர்த்தமண்டபம், மகாமண்டபம், துவஜாரோஹண (கொடியேற்ற) மண்டபம், சஹஸ்ரதம்ப (ஆயிரங்கால்) மண்டபம், சோடச ஸ்தம்ப (பதினாறு கால்) ஸ்தம்பமண்டபம், ஸ்நபன (திருமஞ்சன) மண்டபம், இரதாரோஹண (தேர்விழா) மண்டபம், வசந்தமண்டபம், புராணபடனமண்டபம், யாகமண்டபம், ஆகமமண்டபம், வாத்யமண்டபம், நிருத்ய மண்டபம் போன்றவை முக்கியமானவை. ஆலயத்திற்கு தக்க வகையில் வேறு வேறு சிறப்பிற்குரிய மண்டபங்களும் அமையப்பெறலாம்.

சிவாலயங்களில் முற்காலத்திலிருந்து விநாயகர் முதல் சண்டேஸ்வரர் ஈறாக உள்ள மூர்த்திகளுக்கு உரிய உரிய இடங்களில் சிற்றலாயங்கள் (சந்நதிகள்) அமைக்கப்படும். பிற்காலத்தில் நவக்கிரஹ சந்நதியும் இணைக்கப்பட்டிருக்கிறது. எவ்வாறாகிலும் ப்ரதான இறைவனின் சிறப்பிற்கு நவக்கிரஹம் முதலிய பரிவாரமூர்த்தி சந்நதிகளால் பங்கம் உண்டாகாமல் கவனித்துக் கொள்வதும் அவசியம்.

கோயில்களுக்கு அழகு சேர்ப்பதில் தூண்களின் பங்கு பெரியது. சிற்பிகளின் கலைநயம் பொலியும் இத்தூண்களில் அழகு மிக்க சிற்ப செதுக்கல் வேலைப்பாடுகள் அமைந்திருக்கும். தென் நாட்டில் – தமிழகத்தில் பாதபந்தம், குமுதபந்தம், பத்மபந்தம், ரத்னபந்தம், பட்டபந்தம், கம்பபந்தம் போன்ற அமைப்புகள் இவற்றில் இடம்பெற்றிருக்கும். தூணின் அடித்தளமும் மேற்தளமும் ஒரே வகையிலிருக்கும். அதாவது பொதுவில் சதுர- வட்ட வடிவில் இருக்கும். பெரிய தூணுடன் சிறிய தூண்கள் சிலவற்றையும் சேர்த்தும் அமைத்திருப்பர். தூண்களில் யாளிகளும்- குதிரைகளும்- சிங்கங்களும் திறம்பட அமைக்கப்பட்டிருக்கும்.

சிவாகமங்களின் விதிப்படி அமைக்கப்பெறும் கோயில்களில் ஈசானத்தில் திருமஞ்சன கிணறும், தென் கிழக்கில் பாகசாலை, பொக்கிஷசாலை என்பனவும், தெற்கில் திருக்குளமும், வடக்கில் பள்ளியறையும் ஈசானத்தில் யாகசாலையும் அமையப்பெறும். இவற்றில் கோயில்களுக்கு ஏற்ப மாற்றங்களும் ஏற்படுவதுண்டு.

அறப்பணி நிலையங்கள்

கோயில்கள் வெறுமனே தெய்வீக வழிபாட்டிற்கான இடங்களாக அமையாமல் கலை பண்பாட்டு காவலரண்களாகத் திகழ்ந்திருக்கின்றன. மருத்துவ நிலையங்களாகவும் கல்விக்கூடங்களாகவும்- அமைந்திருந்தன.

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் குருக்கள் மற்றும் வைத்தியர், ஜோதிஷர், பரிசாரகர், போன்றவர்களுக்கு இருப்பிடம் கொடுத்து வாழச் செய்திருக்கிறார்கள். கோயிலின் மேற்பாகத்தில் வைத்தியநிலையமும் தென் மேற்கில் கோசாலையும் வடக்கில் கல்விச்சாலையும் வடகிழக்கில் நெற்களஞ்சியமும்- வேதாத்யாயன பாடசாலையும் அமைக்க வேண்டும் என்றும் சில ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

mahalakshmi

சிற்ப – சித்திரக் களஞ்சியமாக கோயில்கள் திகழ்ந்திருக்கின்றன. தஞ்சை பிரகதீஸ்வரர் (பெருவுடையார்) கோயில் இதற்குத் தக்க சான்று. இது போலவே கோயில்களில் ஓதுவார்கள் நியமிக்கப்பெற்று இசை வளர்க்கப்பட்டிருக்கிறது. இன்றும் இது தொடர்கிறது. உரிய உரிய உத்ஸவங்களுக்கு உரிய உரிய வாத்யங்கள் வாத்தியங்கள் இசைக்க வல்லாரால் இசைக்கப்பெற்றிருக்கின்றன.

உருத்திரகணிகையர் அல்லது தேவதாசியர்கள் நடனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் பற்றி தற்காலத்தில் தவறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் விஜய நகர அரசுக்கு (முகலாயர் காலத்திற்கு) முன் இவர்கள் மிகச்சிறப்பான ஒழுக்கக் கட்டமைப்புடன் கூடிய இறை பணிக்கான வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள்.

இது போலவே திருமாலை தொடுக்கும் பணிகள் போன்றனவும் கோயிற் சுற்றாடலில் இயல்பாக நடைபெற்றுள்ளன. இன்னும் தொடர்கின்றன. கோயிலில் நந்தவனம் அமைத்து அவற்றை பராமரிப்பதம் வழக்கம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தல விருட்சம் நிச்சயமாக அமைந்திருக்கும்.

இன்றைக்கு தலவிருட்சங்களில் நேர்த்திகள் என்று பட்டாடைகளை அளவுக்கு அதிகமாக சுற்றி- அவற்றைச் சுற்றிலும் கொட்டகைகள் அமைத்து- அவற்றின் இயற்கைத் தன்மை பாதிக்கப்பட்டு வருவதும் இவ்விடத்தில் சிந்திக்க வெண்டியது. இயற்கை தான் கோயிலுக்கு அழகைத் தருகிறது.

ஏழு மலை திருப்பதிக்கு அழகு. அலையெறி கடல் தான் திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூருக்கு அழகு. காடும் மலையும் தான் பழநிக்கும் சபரிமலைக்கும் திருவண்ணாமலைக்கும் அழகு. ஆக, இவற்றின் இயற்கையை அந்த இயற்கையில் நிறைந்திருக்கும் இறைவனை காண- சிந்திக்க போற்ற இயலாமல் அவற்றுக்கு பெரும் இடையூறுகளாக செய்படுவது கோயில்களின் புனிதத்துவத்தையும் இயற்கைத் தன்மையையும் சீரழித்து விடும்.

வாவென்று அழைத்து வரமருளும் வள்ளல்

எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள
நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக் கோயிலை வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

என்பது திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி. கோயிலை வணங்கி என்று இங்கே ஆழ்வார் குறிப்பிடுகிறார். இறையுருவமான கோயிலை வணங்குவது கோமகளை வணங்குவதற்கு ஒப்பாகும் என்பத இதில் காட்டப்படும் கருத்தாகக் கொள்ள இயலுமல்லவா?

இத்தகு கோயிலை நோக்கி தூரத்தே வரும் போதே வா வா என்று கூவி அழைப்பது மணியோசை. ஆதற்கு அடுத்ததாக உயரத் தரிசனம் தந்து நம்மிடம் வம்மின் என்று சொல்லி நிற்பது ‘ஸ்தூல லிங்கம்’ என்ற கோபுரம். இதன் சிறப்புக் கருதியே கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொன்னார்கள். சில கோயில்களில் பல்வேறு கோபுரங்கள் அமையப்பெற்றிருக்கும் . திருவண்ணாமலை. மதுரை, ஸ்ரீரங்கம் போன்றவற்றில் இவ்வாறு காணலாம்.

பொதுவாக நடுவே அமைவதை மத்யகோபுரம் என்றும் பிறவற்றை தென்கோபுரம், மேற்குக் கோபுரம், கிழக்குக் கோபுரம், வடகோபுரம் என்று அழைப்பர். தனித்துவமான சிறப்புப் பெயர்களால் அழைப்பதும் உண்டு. பிரகாரத்திற்கு ஒன்றாக கோபுரங்களை அமைக்கும் வழக்கமும் இருக்கிறது.

வானாளாவ தென்னகத்தே சிற்ப-சித்திரக் களஞ்சியமாக எழுந்து, வளர்ந்து கோபுரங்கள் நிற்கின்றன. இந்துக்கள் மூலாலயத்திலும் சந்நதிகளிலும் எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ள மூர்த்திகளில் மட்டுமன்றி கோயிலையே இறையுருவமாகக் காண்கிறார்கள். அதிலும் விமானம், கோபுரம் இரண்டும் முழுக்க முழுக்க கடவுளுருவாகவே போற்றப்படுவது. இதனாலேயே கும்பாபிஷேக சமயத்தில் முக்கியமாக பூஜிக்கப்பெற்று இறை சாந்நித்யம் உருவாக்கப்பெற்ற கும்பங்கள் விமான மற்றும் கோபுர கலசங்களுக்கு அபிஷேகிக்கப்படுகின்றது.

Popular Temples

எனவே தான் சைவர்கள் ஸ்தூல லிங்கம் என்று கோபுரங்களைப் போற்றுகிறார்கள். அதாவது மூலாலயத்தில் உள்ள சூட்சூமலிங்கத்தின் மறுவடிவம் கோபுரம். பிரதிஷ்டை செய்யப்பெற்று- கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பெற்ற கோபுரத்தினை பாலஸ்தாபனம் செய்கிற போது படவிம்பத்தில் ஸ்தாபித்த பின்பே கோபுரத்தில் திருப்பணிகள் செய்ய வேண்டும் என்கிற வழக்கம் இருக்கிறது.

ஆனால் தற்போது சில தமிழ்ச்சினிமாக்களில் பாடுவதற்கும் ஆடுவதற்கும் சாய்ந்து நிற்பதற்கும் உரிய இடமாக- கோபுரத்தைக் காட்டி விடுகிற வேதனையைப் பார்க்கிறோம். தேவையற்று- கோபுரங்களில் ஏறக்கூடாது. பிரதிஷ்டிக்கப்பெற்ற கோபுரத்தில் தவிர்க்க இயலாத வகையில் ஏறுபவர்கள் ஆஸ்தீகர்களாக –தீட்சை பெற்றவர்களாக அமைய வேண்டும் என்றும் அவர்கள் ப்ரார்த்தனை செய்து கொண்டு தெய்வ காரியத்தின் பொருட்டு மாத்திரம் கோபுரங்களில் ஏறலாம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

இதனை நாம் இன்றைய சூழலில் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த விதியை கூட மூலாலய விமானங்களுக்குப் பொருத்தமாகக் கருதக் கூடாது.

சிவாலயங்களை விட வைஷ்ணவாலயங்களில் விமானங்களுக்கு மேன்மையும் சிறப்பும் இன்னும் இன்னும் அதிகம். ஸ்ரீரங்கம்- ப்ரணவாக்ருதி விமானம், கும்பகோணம் வைதீகவிமானம், ஒப்பிலியப்பன் கோயில்- சுத்தானந்த விமானம், திருக்கண்ணபுரம்- உத்பல விமானம், திருக்கூடலூர்- அஷ்டாங்க விமானம், அழகர்கோயில்- சோமசுந்தரவிமானம், திருமோகூர்-கேதகி விமானம் (சதுர்முக அமைப்பினது), காஞ்சி வரதர் கோயில்- புண்ணியகோடி விமானம், திருமலை- ஆனந்த நிலையம் என்றெல்லாம் கோயில்களில் உள்ள மூல விமானங்கள் பெருமையுடனும் சிறப்புடனும் போற்றப்பெறுகின்றன. எனவே விமானங்கள் (ஸ்தூபிகளின்) சிறப்புகளை அறிந்து பேண வேண்டும்.

கோபுரங்களும்- விமானங்களும் சிறப்புப் பெறுவது போல உயர்ந்து நின்று பெருமையோடு திகழ்வது துவஜஸ்தம்பங்கள் என்ற கொடிமரங்கள். மூங்கில், கருங்காலி, வில்வம், தேவதாரு, பலாசு, தென்னை. தாலம், ஹிந்தாலம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மரத்தால் ஆக்கப்பட்டு செப்பு,வெள்ளி, தங்கம் என்ற ஏதாவது ஒரு உலோக தகட்டினால் மூடப்பெற்று சிற்ப எழிலுடையதாக கொடிமரங்கள் விளங்கும். இதன் அடியிலேயே எண்சாண் உடம்பும் நிலத்தில் தொடுகையுறும் வகையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிற வழக்கம் இருக்கிறது.

உற்சவங்களின் போது கொடிமரத்தில் கொடியேற்றப்பெறும். அக்காலத்தில் சகல தேவ-தேவியரும் கொடிமரத்தில் எழுந்தருளச் செய்யப்பெற்று விசேடமாகஆராதிக்கப்பெறும்.

கோயில்களில் ஏற்படுகிற நவீன மாற்றங்கள்

புதுமைகள் அவசியமானவை. பழமையை கவனத்தில் கொண்டு புதுமைகளையும் உள்வாங்குவது சிறப்பு. பழைய கோயில்களில் மண்டபங்கள் தோறும் சட்டவிளக்குகள் என்று வாசலினைச் சுற்றி விளக்குகள் வைக்கப்பெற்றிருக்கும். தற்போது சில இடங்களில் வசதிகருதி அவற்றை நீக்கி விடுகிறார்கள். மின்சார ஒளியூட்டுகிறார்கள். மின்சாரம் இல்லாத காலத்தில் போல விளக்குகள் எல்லாவிடத்தும் நிறைந்திருப்பதால் எங்கும் தூய்மையின்மை உண்டாகலாம் ஆயினும் விளக்கு ஒளியின் அழகு.. அருள் எழுச்சியை மின்சாரம் தராது என்பதும் கவனிக்க வேண்டியது.

கோயில் சந்நதி வாசல்களில் பாரிய மரத்தாலான கதவுகளை அமைக்கிற போது அருகே வசதியுள்ள போது இரும்புக் கதவுகளையும் அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில் அர்ச்சகர் சிறிது விலகிச் செல்கிற போது கூட வரும் பக்தர்கள் இறை தரிசனம் செய்ய அது வசதியாக அமையும்.

கருவறையின் கோமுகம் வழியாக வருகிற அபிஷேகஜலத்தை பிரசாதமாக ஏற்கிற வழக்கம் தமிழகம் மற்றும் இலங்கையில் சில இடங்களில் உண்டு. இவை கூட ஏற்கத்தக்கதன்று. எனினும் கும்பாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் மட்டும் இதனை ஒழுங்கமைத்துச் செய்யலாம். அபிஷேகதீர்த்தத்தை குருக்கள் உரிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அவர் தரும் போது பெற்றுக் கொள்வதே சிறப்பு.

தற்போது மாபிள் மற்றும் தராஷோ முதலியவற்றை கோயில் தளங்களில் பதிக்கிறார்கள். ஆனால் இதனால் கருங்கல்லில் நமது பாதம் பதியாது தடுக்கப்படுகிறது. கருங்கல்லில் பாதம் பட்டால் அது மருத்துவ ரீதியான நலங்களைத் தரும் என்று சொல்வார்கள். எனவே, இதனைப் பற்றியும் புதிய எண்ணங் கொண்டவர்கள் சிந்திப்பது சிறப்பு.

கோயில்களுக்குப் போகும் போது அடியவர்கள் அதற்குரிய உடையோடுதான் போக வேண்டும். திருச்செந்தூருக்கு- குருவாயூருக்கு- ஏன் எந்த ஒரு இலங்கையிலுள்ள கோயிலுக்கு செல்ல நேரிட்டாலும் ஆண்கள் மேலங்கி இன்றியே உட்பிரவேசிக்க முடியும். சென்ற ஆண்டு யாழ்ப்பாணத்து நல்லூர் கந்தஸ்வாமி தேவஸ்தானம் இது குறித்து ஒரு பகிரங்க அறிவித்தல் செய்தது. அதில் ஆண்கள் வேட்டியணிந்து மேலங்கியின்றி வரவேண்டும் என்றும் பெண்கள் யாவரும் சேலையணிந்து தான் வர வெண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. எனினும் சிலரின் கோரிக்கையை ஏற்று சுடிதார் என்கிற பஞ்சாபி உடையும் அனுமதிக்கப்பெற்றது. திருமலை- திருப்பதி தேவஸ்தானமும் இது குறித்து அண்மையில் ஒரு கோரிக்கை வெளியிட்டிருந்தது. ஆக, இந்துக்கள் கோயில் ஒழுங்கில் கட்டாயம் பேண வேண்டும். பாரம்பரிய உடையன்றி வேற்றுடை தரித்து கோயிலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

வியாபார நிலையங்களை கோயிலுக்குள் வைத்திருப்பது எவ்வகையிலும் பொருத்தமற்றது. அது பூஜைப் பொருட்களாகிலும் சரி வேறு பொருட்களாகிலும் சரி ஸ்வாமி சந்நதி வாயிலில் வதை;து கூவி விற்றால் அது மிக வேதனையாக அமையும். எனவே புற வீதியில் ஒழுங்கு செய்யப்பெற்ற இடத்தில் மட்டுமே வியாபார நிலையங்கள் அமைய இடமளிக்க வேண்டும். தேவஸ்தானத்தின் பிரசாதம் கூட ஒரு ஒழுங்கமைக்கப்பெற்ற பிரத்யேக இடத்தில் அமைக்கப்பெற்ற விநியொக நிலையத்தில் விநியோகிக்கப் பெற வேண்டும்.

வசதியுள்ள கோயில்களில் அன்னதான மண்டபம் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றை தனியாக அமைத்துக் கொள்ள வேண்டும். திருமணங்கள் கோயிலுள் நடைபெறுகிற போது பண்பாடு பாதுகாக்கப்பெறுதல் அவசியம். இதே போலவே, ஷஷ்டியப்தபூர்த்தி முதலிய வைபவங்களை கோயில்களில் நடத்துகிற போதும் வழிபாட்டிற்கு இடையூறின்றிஅ து அமைய வேண்டும்.

கோயில்கள் பண்பாட்டின் நிலைக்களன்களாக- கலைகளின் வளர்ச்சிக்கு உதவுவனவாக- வைத்திய நிலையங்களாக- ஆன்மீக பயிற்சி நிலையங்களாக- கல்விச் சாலைகளாக பல் பரிணாம நிலையை தன்னகத்தே கொண்டு செயற்பட வேண்டும். கோயிலைச் சுற்றி இவ்வாறான அறப்பணி நிலையங்கள் அமைவதற்கு வழி செய்ய வெண்டும். கோயில்களில் தற்போது சுவாமி- அம்பாள் விக்கிரகங்கள் பல வகைகளில் அலங்கரிக்கப்பெறுகின்றன. ஹஸ்தம் (கை) பாதம் (கால்) வைத்து சாத்துப்படி செய்யும் போது அது இறையுருவத்தை சிதைக்காமல் அமைய வேண்டும். இறைவனின் திருவுருவில் சாத்தக் கூடாத பொருட்களினை வைத்து கட்டி அழகு செய்கிறோம் என்று செய்வது மகாபாவம். இலங்கையிலுள்ள கோயில்களில் 1950களில் அக்கால பெரியவர்கள் எடுத்த முயற்சியால் ஹஸ்த பாதச் சாத்துப்படி பெருமளவில் நிறுத்தப்பட்டு விட்டது. சிவஸ்ரீ.ச.குமாரசுவாமிக்குருக்கள் எழுதிய ‘மூர்த்தியலங்காரவிதி’ என்கிற நூல் விபரீத அலங்காரங்களால் ஏற்படக் கூடிய கேடுகள் பற்றி சிவாகம சான்றுகளோடு குறிப்பிடுகிறது. இது குறித்து பெருமளவில் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

சிவாகமங்களில் நின்ற வடிவம் நின்ற வடிவமாகவே அலங்கரிக்கப்பெற வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. போலிக் கரங்களும் பாதங்களும் இறைவனுக்குச் சாத்துவது குற்றமாகும். காமிகாகமத்தில் நடராஜமூர்த்தியை கல்யாணசுந்தராகவும் கல்யாண சுந்தரரை நடராஜராயும்.. சக்தியை சிவமாயும்.. சிவத்தை சக்தியாயும் அலங்கரிப்பது குற்றம் என்று இருக்கிறது. இது குறித்த வைஷ்ணவாகமங்களின் விளக்கம் அறியேன். ஆங்கே இதற்கு நிச்சயமாக தெளிவான செய்திகள் இருக்கும் என நம்புகிறேன். எது எவ்வாறாகிலும் மூர்த்தியலங்காரம் பற்றி மீளவும் பரிசீலித்து அவற்றை இத்துறை சார் வல்லுனர்கள்- சாஸ்திரம் அறிந்தவர்கள்- ஆகமம் கற்றவர்கள் தெளிவு உண்டாகும் வகையைச் செய்தல் வேண்டும்.

லட்சக்கணக்கில் பக்தர் கூட்டம், யார் பொறுப்பு?
sabrimala

  • கோவில்களில் கூட்டம் மிகுவது, அதைத் தொடர்ந்த அசம்பாவிதங்கள் குறித்த விழிப்புணர்ச்சி அந்தந்த தேவஸ்தான கமிட்டி மற்றும் மாநில அரசுகளிடம் உருவாக்கப் படுவது அவசியம்.
  • கோடிக்கணக்கில் கோவில் வருமானத்தை பராமரிக்கும் தேவஸ்தானங்களும், வருமானத்தில் பங்கு போட்டுக் கொள்ளும் அரசும் மட்டுமே அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • கிடைக்கும் வருமானத்தில் பக்தர்களின் வசதிக்காக ஒரு பகுதியை ஒதுக்குவது இவர்களின் கடமை.
  • கோவில்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் தான் மிக திறமையான முறையில் பெரும் கூட்டத்தை சமாளிக்கும் முறை இருக்கிறது.
  • ஏனைய மற்ற கோவில்களில் இனியாவது திருப்பதியைப் பார்த்தாவது ஏற்பாடுகள் செய்து தருவதில் முனைப்புடன் இயங்க வேண்டும்.
  • பிரதமர் தலைமையில் இயங்குகிற National Disaster Management Agency அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முதலமைச்சர் தலைமையில் இயங்கும் இது போன்ற அமைப்புகளும் செயலில் இறங்குவது அவசியம்.
  • இறுதியாக சபரிமலையில் நடந்தது போன்ற அசம்பாவிதம் நடந்தால், அது குறித்து ஆய்வு செய்து அதிலிருந்து தெரிந்து கொண்டவற்றை பதிவு செய்ய வேண்டும், மீண்டும் இது போன்று அபாயம் நிகழாமல் தடுக்க இது அவசியம்.

கோயில் சிறப்பாக இயங்குவதற்கு கோயில் அர்ச்சகர்- அறங்காவலர்- தினமும் சேவிக்க வரும் அடியவர்கள் ஆகிய மூவகையினரும் முக்கியமாக ஒன்று கூடி சிந்திக்க வேண்டும். ஆடம்பரம்- அலங்காரம் இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தர முயலும் போது நமது வேதாகம அறிவுறுத்தல்களுக்கு அவை மாறாக அமையாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஆக, ஆலயம் என்பது இந்துக்களைப் பொறுத்த வரையில் அருளொளி வீசும் தெய்வீக நிலையங்கள். தெய்வத்தின் மறுவடிவங்கள். இறைவன் எழுந்தருளியிருக்கிற ஆலயங்களினை அதற்குரிய புனிதத்துவத்துடன்.. நவீன வகையான வசதிகளை உள்வாங்கி- அதே வேளை பழைமை- பண்பாடு- பகவத் சித்தம் இவற்றை மனங்கொண்டு புனரமைத்துப் பேணி செவ்வனே வழிநடத்துவது அவசியம்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தௌ;ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலனைந்தும் காணா மணிவிளக்கே (திருமந்திரம்)

16 Replies to “நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்”

  1. Excellent very good points given, I appreciate Tamilhindu website to give good things for peoples. Please continue this type of articles, then only the public can understand what things going on today.

  2. மிக சிறந்த கட்டுரை. பல அறிய தகவல்கள்.
    திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு நன்றி.

  3. மூர்த்தி அலங்காரம் பற்றிய செய்திகள் சிந்திப்பதற்குரியன. அற்புதமான பல தகவல்கள் கட்டுரையில் உள்ளமை சிறப்பாக உள்ளது.

    சினிமாவாலும் அரசியலாலும் திருக்கோயில்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும் சிறப்பாயுள்ளது.

  4. கோவில் அமைப்புகள் பற்றிய விளக்கங்களை முதன் முதலில் கேட்கிறேன்.
    அருமை.

    மிகுதியாக கூட்டம் வரும் பிரபல ஆலயங்களில் ஆலய நிர்வாகம் பணத்தை வாரி இறைக்கத் தயாராக இருப்போருக்கென்று தனி சலுகைகள் கொடுத்து மற்றவர்களை காத்து நிற்க வைப்பதோடு அல்லாமல் கேள்வி கேட்டால் படு அலட்சியமாக உங்களால் முடிந்ததைப் பாருங்கள் என்று சொல்லுவதைக் காணலாம். அதுவும் முறையாக டிக்கெட் எடுத்துக் கொண்டு நின்றாலும் இதே கதி தான். அதுவும் அதிகாரிகள் அர்ச்சகர்களை விட கேட் கீப்பர் என்று நிற்பவர்கள் நடந்து கொள்ளும் விதம் ரொம்பவும் முரட்டுத் தனமாக இருக்கிறது.

    சினிமாவிலோ ஏதாவது ஊடகங்களிலோ யாரவது இந்து மத விமர்சனம் செய்தால் இந்துக்கள் மனம் புண்பட்டுவிட்டதாக குரல் எழுப்பும் இந்து மத அமைப்புகள் கோவில் தேடி பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு உண்டாகும் சிரமங்களை கொஞ்சமேனும் குறைக்க முயலலாம். இது மாதிரி நிர்வாகத்தில் நேரடியாக தலை இட முடியாவிட்டாலும் எதிர்க் குரல் எழுப்ப வெளிப்படையாக விமர்சனம் வைக்க மட்டும் நல்ல ஆலோசனைகள் தர முன் வரலாம்.
    பக்தர்கள் மித மிஞ்சிய சுயநலப் போக்கோடு கோவில்களுக்கு சென்று அங்கே எல்லா இடத்திலும் அந்த சுயநலத்தை பிரதிபலிக்காமல் கொஞ்சம் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும்.
    https://www.virutcham.com/2010/12/ஆன்மிகம்-நுகர்வோர்/

  5. Pingback: Indli.com
  6. கட்டுரை கொஞ்சம் வேகமாக போவது போல தோன்றுகிறது !!!! சொல்ல வந்ததை ஏனோ இம்முறை கொஞ்சம் அவசர அவசரமாகவும், வேகமாகவும் சொல்லியது போல இருக்கிறது. எனக்கு தான் அப்படி ஒரு பிரமையோ ??? மற்றபடி all are valid and excellent points …..

  7. இந்த கட்டுரையை படித்தவுடன் எனக்கு வலை தளத்தில் சென்று கொண்டிருக்கும் இன்னொரு discussion கவனத்திற்க்கு வந்தது.
    Dear Sarang, Jatayu, Kandharvan and others please follow the following link –
    https://indiafirsthand.com/2010/06/05/thirumala-venkateswara-temple-from-buddhism-to-hinduism/
    because I feel you will have enough material to counter there.

  8. ஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயா அவர்களுக்கு நமஸ்காரம். மனதிற்கு மிக நிறைவைக்கொடுத்த வ்யாசம்.

    \\\\\\\\\\உதாரணமாக காசியை எடுத்துக் கொண்டால் அங்கேயுள்ள விஸ்வநாதராலயம் தனித்து சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயமாக அமைந்திருக்கின்றமையைக் காண்கிறோம்.\\\\\\\\\\

    அருகே அன்னபூரணி அம்பாளுக்கு தனியாக கோவிலும் சற்று தூரத்தில் விசாலாக்ஷி அம்பாளுக்கு தனிக்கோவிலும் உள்ளது. ஆனால் கர்ப்பக்ருஹத்தைச்சுற்றி பல சன்னிதிகள் உள்ளனவே. அம்பாளுக்கு தனி ஆலயம் என்பதை வைத்து சொல்கிறீர்களா ஐயா?

    \\\\\\\\கோயிலின் வெளிப்பிரகாரத்தில் குருக்கள் மற்றும் வைத்தியர், ஜோதிஷர், பரிசாரகர், போன்றவர்களுக்கு இருப்பிடம் கொடுத்து வாழச் செய்திருக்கிறார்கள்.\\\\\\\\

    கர்ப்பக்ருஹம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் மற்றும் பற்பல மண்டபங்கள் பற்றி மிக அருமையாக விவரங்கள் அறியப்பெற்றோம்.

    பணிவர ம்ருது தல்பே யோகநித்ரா விலாஸம்
    ஸரஸமனுபவந்தம் ஸ்ரீ தரா சேவ்யமானம்

    என்ற ரீதியில் பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் சேவை சாதிக்கும் ரங்கராஜாவின் விண்ணகரத்தைப் பற்றி சொல்கையில்
    “ஸ்ரீரங்கே ஸப்தப்ராகார மத்யே” என்று படித்திருக்கிறேன்.

    கர்ப்பக்ருஹத்தைச் சுற்றி அமைந்த ஏழு ப்ராகாரங்கள் யாவை அதனூடே அமைக்கப்பெற்றுள்ள இருப்பிடங்கள் எந்தெந்த கைங்கர்யபரர்களுக்கு என அமைக்கப்பெற்றன? இதுபோல் ஸப்தப்ராகாரங்களுடன் அமையப்பெற்ற சிவாலயங்கள் யாவை என என்னுள் வினாக்கள் உண்டு. உத்தரம் அறிகிலேன்.

    \\\\\\\\உருத்திரகணிகையர் அல்லது தேவதாசியர்கள் நடனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் பற்றி தற்காலத்தில் தவறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் விஜய நகர அரசுக்கு (முகலாயர் காலத்திற்கு) முன் இவர்கள் மிகச்சிறப்பான ஒழுக்கக் கட்டமைப்புடன் கூடிய இறை பணிக்கான வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள்.\\\\\\\\

    இன்றும் கூட ஸப்தமோக்ஷபுரிகளில் ஒன்றான பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மிகுந்த பாவத்துடன் (bhAvam) கூடி தங்கள் வாழ்க்கையை ஜகன்னாத கைங்கர்யத்துக்கே அர்ப்பணித்துள்ள தேவ தாஸிகள் மிக்க ஒழுக்கத்துடன் ஸன்யாஸ துல்யர்களாய் பகவானுக்கு ந்ருத்ய கைங்கர்யம் செய்து வருகிறார்கள்.

    க்ருஷ்ணனின் ப்ருந்தாவன பிரிவாற்றாமையை அறிந்து ஸ்ரீ வனம் சென்ற ப்ருஹஸ்பதியின் சிஷ்யனான உத்தவன் எந்த கோபியரின் ப்ரமர கீதம் கேட்டு பாவனமாகி,

    வந்தே நந்த வ்ரஜஸ்த்ரீணாம் பாத ரேணும் அபீக்ஷ்ணச:

    என்று துதித்தானோ, தத் துல்யமான பூஜ்ய புத்தி ஜகன்னாதருக்கே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள கணிகையரைக்காணப்பெறின் கிட்டும்.

    \\\\\\காடும் மலையும் தான் பழநிக்கும் சபரிமலைக்கும் திருவண்ணாமலைக்கும் அழகு.\\\\\\\\

    பனி மலர் ஓடைச் சேலுகளித்துக்
    ககனம் அளாவிப் போய் வரு வெற்றிப்
    பழநியில் வாழ் பொன் கோமள சத்திப் பெருமாளே

    சேல் மீன்கள் களிக்கும் குளிர்ந்த மலரோடைகள் கொண்டு ஆகாசம் வரை எட்டிப்பார்த்து திரும்பி வரும் வெற்றிப் பழநி மலையில் வாழும் ஒளியும் அழகும் பூண்ட சக்திப் பெருமாளே

    என்று வள்ளல் அருணகிரி இயம்புகின்றார் அன்றோ!

    க்ஷேத்ரங்கள் பலவற்றில் கட்டிடங்களாகக் கட்டி இயற்கைப்பொலிவை சிதைப்பதை நிறுத்தவேண்டும்.

    ப்ருந்தாவனத்திலே பரிக்ரமா மார்க்கத்தில் ஒரு இடத்திற்கு ரமண்ரேதி என்று பெயர். ராதை மற்றும் கண்ணனின் கோமளமான பாதத்தை வருடும் “மெத்தென்ற மணற்பாங்கு” ரமண ரேதி எனப்படும். பதினைந்து இருபது வருஷங்கள் முன்னால் போலல்லாது ரோடு போடப்பட்டு கட்டிடங்களாக எழுப்பப்பட்டு மண்ணைக்காண்பதே அரிது என்ற படிக்கு ரமணரேதியை எங்கே தேடுவது?

    \\\\\\\\ஆனால் தற்போது சில தமிழ்ச்சினிமாக்களில் பாடுவதற்கும் ஆடுவதற்கும் சாய்ந்து நிற்பதற்கும் உரிய இடமாக- கோபுரத்தைக் காட்டி விடுகிற வேதனையைப் பார்க்கிறோம்\\\\\\\

    மிகவும் வருத்தம் தரும் விஷயம்.சோலையும் மலையும் புழைகளும் கழனிகளும் படம்பிடிக்க இருக்கையில் சினிமாகாரர்கள் தேவாலயங்களை படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்துதல் மிகவும் தவறு. மிகவும் புனிதமானதும் அண்டியவர்க்கபயம் தரும் இறைவனிருப்பிடமான ஆலயத்தை கேளிக்கைக்காக பயன் படுத்துதல் கலியின் கொடுமை. அதுவும் பல சமயம் சினிமாகாரர்கள் பாதரக்ஷையுடன் கோவிலினுள்ளே படப்பிடிப்பு நடத்துவதை என்னவென்று சொல்வது.

    தஞ்சை ப்ரஹதீச்வரர் கோவில் ASI கட்டுப்பாட்டில் இருப்பதால் முஸல்மான்கள் மற்றும் க்றைஸ்தவர்கள் பலர் பாதரக்ஷைகளுடன் கோவில் ப்ராகாரத்தில் சுற்றுவது தின்பண்டங்கள் தின்பது என்ற படிக்கு கோவிலை கிட்டத்தட்ட ஒரு பொழுது போக்கு ஸ்தலமாக வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய வழிபாட்டு ஸ்தலங்களை மற்றையோர் இப்படி அவமரியாதை செய்தால் பொறுப்பார்களா? அல்லது சர்கார் தான் அதை விட்டு விடுமா? ஹிந்துக்களின் வழிபாட்டு ஸ்தலங்களை மட்டும் ஏன் இப்படி அவஹேளனம் செய்கிறார்கள்?

    \\\\\\\கோபுரங்களும்- விமானங்களும் சிறப்புப் பெறுவது போல உயர்ந்து நின்று பெருமையோடு திகழ்வது துவஜஸ்தம்பங்கள் என்ற கொடிமரங்கள்.\\\\\\

    த்வஜஸ்தம்பமுள்ள கோவில்களை ஸர்கார் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு விடும் என்பதால் இப்போதெல்லாம் கட்டப்படும் பல ஹிந்து வழிபாட்டுஸ்தலங்களில் (தமிழகத்தில்) ஸர்காரின் ராக்ஷஸப் பிடியில் இருந்து தப்ப த்வஜஸ்தம்பம் இல்லாமலேயே கோவில்கள் கட்டப்பெறுகின்றன.

    \\\\\\தற்போது சில இடங்களில் வசதிகருதி அவற்றை நீக்கி விடுகிறார்கள். மின்சார ஒளியூட்டுகிறார்கள். மின்சாரம் இல்லாத காலத்தில் போல விளக்குகள் எல்லாவிடத்தும் நிறைந்திருப்பதால் எங்கும் தூய்மையின்மை உண்டாகலாம் ஆயினும் விளக்கு ஒளியின் அழகு..\\\\\\\

    இன்றும் கேரளத்து மற்றும் கேரளத்தை ஒட்டிய தமிழகத்து அம்பலங்களில் குறைந்த பக்ஷம் கர்ப்ப க்ருஹத்தில் மின்விளக்குகள் அறவே கிடையாது.

    \\\\\\\\கோயில்களுக்குப் போகும் போது அடியவர்கள் அதற்குரிய உடையோடுதான் போக வேண்டும். திருச்செந்தூருக்கு- குருவாயூருக்கு- ஏன் எந்த ஒரு இலங்கையிலுள்ள கோயிலுக்கு செல்ல நேரிட்டாலும் ஆண்கள் மேலங்கி இன்றியே உட்பிரவேசிக்க முடியும்.\\\\\\\\\

    மிக முக்யமான பதிவு. ஐயா, சிவாலய மற்றும் விஷ்ணுக்ருஹ தர்சன பத்ததி பற்றி தாங்கள் விரிவாக மற்றொரு வ்யாசம் எழுத வேண்டும்

    \\\\\\இறைவனின் திருவுருவில் சாத்தக் கூடாத பொருட்களினை வைத்து கட்டி அழகு செய்கிறோம் என்று செய்வது மகாபாவம். இலங்கையிலுள்ள கோயில்களில் 1950களில் அக்கால பெரியவர்கள் எடுத்த முயற்சியால் ஹஸ்த பாதச் சாத்துப்படி பெருமளவில் நிறுத்தப்பட்டு விட்டது.\\\\\\\\\\\\

    இசைமேதை தான்ஸேனின் குருவான ஸ்ரீ ஹரிதாஸ் அவர்களுக்கு ஸ்ரீ வனத்தில் ராஸம் நடந்த இடமாகிய நிதுவனம் என்ற இடத்தில் கொள்ளையழகுடன் பாங்கேவிஹாரி என்ற மூர்த்தி ப்ரத்யக்ஷமானான். அந்த பாங்கே விஹாரியின் கோவில் ஸ்ரீவனத்தில் மிக முக்யமான கோவில். சமீபத்தில் பாங்கே விஹாரிக்கு Jeans, cooling glass இத்யாதி பூஷணங்களை அங்குள்ள பண்டாக்கள் போட்டு அலங்காரம் செய்ததில் பெரிய அமளி உண்டாகியது. ப்ரத்யக்ஷமாய் பக்தர்களுடன் பேசுவது போலவே இருக்கும் விளையாட்டுப்பிள்ளை போன்ற கொள்ளையழகுடைய (ரஸ்கான் போன்ற மதாந்தர பக்தர்களின் உள்ளத்தைக்கூட கொள்ளை கொண்டவன்) கண்ணனின் மூர்த்திக்கு இப்படியெல்லாம் கூட விபரீதமாக அல்ங்காரம் செய்ய எப்படி மனம் வந்தது என்று நினைக்கும் போதே மனம் வெதும்புகிறது.

    \\\\\\\எது எவ்வாறாகிலும் மூர்த்தியலங்காரம் பற்றி மீளவும் பரிசீலித்து அவற்றை இத்துறை சார் வல்லுனர்கள்- சாஸ்திரம் அறிந்தவர்கள்- ஆகமம் கற்றவர்கள் தெளிவு உண்டாகும் வகையைச் செய்தல் வேண்டும்.\\\\\\\\\\ஏனைய மற்ற கோவில்களில் இனியாவது திருப்பதியைப் பார்த்தாவது ஏற்பாடுகள் செய்து தருவதில் முனைப்புடன் இயங்க வேண்டும். \\\\\\\\\

    ததாஸ்து

    க்ஷேத்ரக்கோவையெனப்படும் திருப்புகழ் :-

    கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
    உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
    கொன்றை வேணியர் மாயூர மம்பெறு …… சிவகாசி

    கொந்து லாவிய ராமே சுரந்தனி
    வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
    கும்பு கூடிய வேளூர் பரங்கிரி …… தனில்வாழ்வே

    செம்பு கேசுர மாடானை யின்புறு
    செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
    தென்றன் மாகிரி நாடாள வந்தவ …… செகநாதஞ்

    செஞ்சொ லேரக மாவா வினன்குடி
    குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
    செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் …… வருதேவே

    கம்பை மாவடி மீதேய சுந்தர
    கம்பு லாவிய காவேரி சங்கமு
    கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர …… வயலூரா

    கந்த மேவிய போரூர் நடம்புரி
    தென்சி வாயமு மேயா யகம்படு
    கண்டி யூர்வரு சாமீக டம்பணி …… மணிமார்பா

    எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
    உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
    எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு …… துதியோதும்

    இந்தி ராணிதன் மாதோடு நன்குற
    மங்கை மானையு மாலாய்ம ணந்துல
    கெங்கு மேவிய தேவால யந்தொறு …… பெருமாளே.

    கும்பகோணம், திருவாரூர், சிதம்பரம், சீர்காழி,மாயவரம், சிவகாசி,ராமேஸ்வரம், புள்ளிருக்கும் வேளூராகிய வைதீஸ்வரன் கோவில், திருப்பரங்குன்றம், ஜெம்புகேஸ்வரம் எனப்படும் திருவானைக்காவல், திருவாடானை, திருச்செந்தூர், திருவேடகம், பழமுதிர்ச்சோலை, பொதிகைமலை, ஜெகந்நாத க்ஷேத்ரமெனும் பூரி, திருவேரகம், திருவாவினன்குடி எனும் பழநி, குன்றுதோராடல், திருப்புனவாயில், ஸ்ரீவிரிஞ்சிபுரம் எனும் திருவிரிஞ்சை, வஞ்சி எனும் கருவூர், கம்பா நதி தீரத்தமைந்த காஞ்சி, ஸத்ய புனாது காவேரி பாபமாமரணாந்திகம் என்ற மிகுந்த பாவனமான காவேரி ஸங்கமமாகும் காவேரிப்பூம்பட்டினம், திருச்சிராப்பள்ளி, வயலூர், திருப்போரூர், சிவாயமெனும் திருவாட்போக்கி மற்றும் திருக்கண்டியூர் என்ற ஸ்தலங்களில் விளங்குபவனே குறமகள் வள்ளி மற்றும் தேவயானை ஸமேதனாய் உலகெங்குமுள்ள தேவாலயந்தோறும் விளங்கும் பெருமாளே
    இந்த தேவாலயங்களைக் நல்விதமாய் போற்றும் நன்மதியை ஹிந்துக்களுக்கு அளித்து ஸகல உலகிலும் நன்மக்களையும் தேவாலயங்களையும் காத்து ரக்ஷிப்பாய் பழநி வாழ் கந்தவேளே!

    பெண்டு பிள்ளைகளை விட்டு தொலை தூரத்தில் ப்ரதேசாந்தரத்தில் தனியே அல்லலுறும் எமக்கு இந்த வ்யாசத்தின் மூலம் பாரத வர்ஷம் முழுதிலும் உள்ள பற்பல தேவாலயங்களை மனக்கண்ணால் தர்சனம் செய்யும் பாக்யமளித்த தங்கள் சீர்பாத தூளியென் சென்னியதே.

  9. நல்லதொரு கட்டுரை. சமீபத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சென்றிருந்தேன் . ஆலயத்தின் அழகு சேர்த்த பொற்றாமரைக் குளம் வறண்டு இருப்பது காண வருத்தமாக இருந்தது . ஹிந்து அறநிலையத் துறையை சேர்ந்தவர்கள் ஏன் இதைகண்டுகொள்ளவில்லை . குளத்தில் நீர் கொண்டுவந்து நிறைப்பது அப்படியோன்றும் கடினமான காரியம் இல்லையே. அவர்களால் முடியாவிட்டால் தனியார்களது உதவியுடன் இவ்விறைப் பணியை செய்யுமாறு விண்ணப்பித்துக்கொள்கிறேன்.

    பிரஹ்மண்யன்
    பெங்களுர்

  10. பாரத தேசத்தின் கலை மற்றும் நடைமுறை பழக்க வழக்கங்களைப் பற்றி பாடப்புத்தகங்களில் இல்லாமல், பாரததேசத்தில் விளையும் பயிர்,காய்,கனி மற்றும் மூலிகைகளைப்பற்றி பாடப்புத்தகங்களில் இல்லாமல்,நாம் மக்களை இவையெல்லாம் தெரிந்தவர்களாக ஆக்குவது கடினம். இந்திய அரசாங்கங்கள் இவற்றை செய்யும் எண்ணத்தில் இல்லாமல் இருப்பதால், எப்போது பார்த்தாலும், எங்கே பார்த்தாலும், அந்த கோச்சிங் இந்த கோச்சிங் சென்டர் என்பனவற்றுக்கிடையில், பாரதத்தைபற்றிய கோச்சிங் சென்டர்கள் அமைத்து, அனைவருக்கும், எல்லா விதமான அறிவையும் கொடுக்க வேண்டும். வியாபார உத்திகளாக மட்டுமே நடத்தப்படும் இயக்கங்களிலிருந்து மாறுபட்டு நடத்தப்படவேண்டும்.

  11. Dear All

    ASI is maintaining the temples very well. Nobody is allowed insdie the temple with slippers

    For your info : The Pradosham with max crowd – ie more than 5000 people – we can call that the grandest is in Big temple.

    The grandest aippasi annabisegam is in Gangai konda cholapuram with 10,000 kg rice.

    Both are under ASI. Please get your facts right before writing anything.

    More temples should come under ASI for better protection. ASI never interferes in poojas

  12. நீங்கள் தமிழ் ஹிந்துவில் எழுதிய அனைத்து ஆக்கங்களையும் படித்திருக்கின்றேன். அணைத்து ஆக்கங்களும் மிக மிக பயனுள்ளதாக இருந்தது.மற்ற ஆக்கங்கள் வ்ரிவாக இருந்த்தது. ஆனால் இக் கட்டுரை வேகமாக அதிலும் படு வேகமாக இருந்ததாகவே உணர்கின்றேன். இந்த விடயப் பொருளைப்பற்றி எனக்கு முன்னமே அறிதல் இருந்தமையால் புரியக்ககூடியதாக இருந்த்தது. எனவே இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
    உங்கள் சேவை எங்கழுக்குத் தேவை.அநேகம் பாராட்டுக்கள்.
    நன்றியுடன் லோகன்

  13. அன்புள்ள ரமேஷ்,

    இரு வருஷங்களுக்கு முன் ப்ரஹதீஸ்வரர் ஆலயத்தில் நான் கண்ணால் கண்டதையே எழுதியுள்ளேன். ஆலயத்தில் பாதரக்ஷையுடன் செல்வது தகாது என்பது விஷயம். இன்று அவ்வாறில்லை என்றால் நன்றே.

  14. அருமையான, அர்த்தம் பொதிந்த கட்டுரை. .. திரு. ராமதாஸ்

  15. நமஸ்காரம்,
    நல்ல பல கருத்துக்களை கட்டுரையாளர் விளக்கியுள்ளார்.மேலும் இதுபோன்ற ஆலயம்,ஆகமம் சார்ந்த கட்டுரைகளை பதியவும்.நன்றி.
    எமது அர்ச்சகர் குரல் தளத்தையும் பார்வையிடவும்.
    https://archakarkural.forumta.net

  16. இங்கே எனது கட்டுரைக்கு பின்னூட்டம் வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் சிரம் தாழ்த்திய வணக்கங்களுடன் கூடிய நன்றிகள்..

    தங்களின் பின்னூட்டத்திற்கு உடனடியாகப் மறுமொழியிட முடியாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

    சட்டவாளர் உமாசங்கர் அவர்களின் இல்லத்திருமண நிகழ்வில் உரையாற்றும் முகமாகவும்- தலயாத்திரையாகவும் தமிழகத்தில் இருவாரங்கள் தங்கியிருந்தமையால் இணையத் தொடர்பைப் பேண இயலவில்லை. (நான் இலங்கையில் வசிக்கும் சிறியவன் என்று தாங்கள் அறிந்திருக்கலாம்.)

    எனினும் இக்காலப்பகுதியில் தமிழகத்தின் திருக்கோயில்கள் பலவற்றினையும ;தரிசித்ததுடன்.. சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் சைவாதீன மஹாசந்நிதானங்கள் என்று பலரையும் சந்தித்தமை எனது தொடர்ச்சியான எழுத்துலக வாழ்விற்குப் பயனுறுதியாக அமையும் என நம்புகிறேன்.

    இங்கே பதிவிட்ட அன்பர்கள் கட்டுரை படுவேகமாக நகர்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவ்விஷயத்தை வருங்காலத்தில் கவனத்தில் கொள்கிறேன்.

    வண.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    தாங்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகத்திற்கும் அடுத்த கட்டுரையில் பதிலளிக்க முயல்கிறேன். ஆனாலும் தங்களின் எழுத்துக்கள் என்னை கலக்கமுறச் செய்கின்றன. மிக மிகச் சிறியவனாகிய.. வெறும் 22 வயதேயான நான் எனக்குத் தெரிந்த விஷயங்களையே எழுதுகிறேன். நான் ஒன்றும் பெரியவன் அல்லன் என்பதையும் அன்புடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

    தங்களைப் போன்ற பெரியீர்களின் ஆசீர்வாதத்தினை என்றும் நாடி நிற்கும் சிறியவனான என்னை ஊக்கப்படுத்தும் தங்களின் நீண்ட வியாசத்திற்கு என் மனப்பூர்வ நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *