அமைதியின் ஓசை

ashram2திருவண்ணாமலையிலிருந்து பங்களூரு செல்லும் பரபரப்பான சாலையிலிருக்கும் அந்த இடத்தில் நுழைந்தவுடனேயே அமைதியும் பசுமைச் சூழலும் நிறைந்த ஓர் அழகான கிரமத்திற்குள் வந்து விட்டதைப்போல் உணர்கிறோம். வாயிலில் நிழல்பரப்பி நிற்கும் வயதான வேப்ப மரம்- பல ஆண்டுகளாக அந்த ஆஸ்ரமத்திற்கு வந்தவர்களை வரவேற்றது போலவே- நம்மையும் பார்த்து மெல்ல தன் இலைகளை அசைக்கிறது. ஒருபுறம் அலுவலகங்களும் புத்தகசாலையும்; மறுபுறம் உயர்ந்த தென்னைகளுடன் பசுஞ்சோலையாகப் பரந்து கிடக்கும் தோட்டம்; கீரிச்சீடும் பறவைகள், மற்ற இடங்களில் அபூர்வமாகவே காணப்படும் வெள்ளை மயில்கள். இடையிலிருக்கும் அந்த அகன்ற பாதையைக் கடந்து கோயிலாகவே நிறுவப்பட்டிருக்கும் ரமண மகரிஷிகள் வாழும் சமாதியை தரிசிக்கச் செல்கிறோம் இடதுபுறமுள்ள ரமணர் சன்னதியின் வாயிலுக்கு நுழையும் முன் அந்தக் காட்சி நம்மை மெய்மறந்து நிற்கச் செய்கிறது.

ashram1பவித்திரமாகப் போற்றிப் பாதுகாக்கபடும் ஆஸ்ரமத்தின் பழைய கட்டிடங்களுக்கும் தென்னங்கீற்றும் வைக்கோலும் மேற்கூரையாகப் பரப்பிய எளிமையான விருந்தினர் விடுதிக்கும் இடையே பளீரென்று தெரியும் திருவண்ணாலையின் தரிசனம். அந்தத் தெய்வ மலை நம்மைக் கூப்பிட்டு, நிற்க வைத்து ஆசிர்வாதம் செய்வதைப்போல் ஒரு சிலிர்ப்பு. ரமணர் சிலகாலம் வாழ்ந்த விருபாட்ச குகை உள்ள அந்தப் புனித மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த ஆஸ்ரமத்திற்கு வரும் பக்கதர்களுக்கு இந்தத் தரிசனம் ஒரு பாக்கியம்.

ramana_samadhi

கண்ணை உறுத்தாத வண்ணத்தில் சலவைக்கல் தரையிடப்பட்டிருக்கும் நீண்ட ஹாலின் மறுமுனையில் மரகதப்பச்சை வண்ணத்தில் வெள்ளைப்பூக்களுடன் கம்பீரமாக நிற்கும் மண்டபம். நடுவில் மீளாத்தூக்கத்திலாழ்ந்த ரமணரின் பூத உடல் அன்னை பூமிக்கு சமர்ப்பிக்கப்பட்ட இடத்தில் எழுப்பட்ட மேடை. தாமரை இதழ்களின் நடுவில் லிங்கம். பூஜிக்கபடும் அதைச் சுற்றி வந்து வழிபாடு செய்பவர்களுக்கு ஏற்ப வசதி. அந்தப் பாதையில் ஒளியூட்டப்பட்ட ரமணரின் வண்ணப் படஙகள். அமைதி ஆக்ரமித்திருக்கும் அந்தப் பெரிய மண்டபத்தில் ஆங்காங்கே கண்மூடி, பிரார்த்தனையில் பக்தர்கள்; அதில் பலர் வெளிநாட்டினர்.

அருகில் பகவான் ரமணர் தன் தாயாருக்கு எழுப்பிய ஆலயம். ஆகம விதிகளின்படி எழுந்திருக்கும் அந்த ஆலயத்தின் பளிச்சென்ற தூய்மை அதைப் பேணுகிறவர்களின் நேசத்தைப் பேசுகிறது. ஆலயத்தின் முகப்பில், பகவான் வாழ்ந்த காலத்தில், வந்தவர்களை சந்தித்த கூடம். நடுவே அவர் அங்கு அமர்ந்திருந்த நிலையில் எடுத்த படம். அருகில் தியானம் செய்யும் நிலையில் சிலையாக ரமணர், அந்தக் கண்களில் தெரியும் தீட்சண்யம் நம்மைத் தாக்குகிறது. தொடர்ந்து பலர் வந்து தரிசித்துக் கொண்டிருப்பதினால் அங்கே எழும் ஒசைகளினாலும் ashram3அசைவுகளினாலும் சற்றும் பாதிக்கப்படாமல் தியானத்திலிருக்கும் சிலர். மெல்ல கோயிலின் வெளிச்சுற்றுப் பாதையில் நடந்து வரும் நம் கண்ணில்படும் பெரிய மலர்த்தோட்டத்தின் நடுவே அந்தக் குளமும் அதன் அசையாத நீரில் பிரதிபலிக்கும் அண்ணாமலையின் தோற்றமும் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. பாதை இட்டுச் செல்லுமிடம், முகப்பில் ஓட்டுக் கூரையிட்ட தாழ்வாரத்தினுடனிருக்கும் தியான அறை. பகவான் வாழ்ந்த காலத்தில் பல நாள்கள், பல மணி நேரங்கள் தியானம் செய்த பழைய அறை. சிறிய சிறிய சதுரக் கருப்புக் கடப்பா கற்கள் பதிக்கபட்ட அந்தத் தரை அப்போதுதான் கழுவிவிட்டதுபோல சில்லென்றிருக்கிறது. அறையின் ஒரு மூலையில் கால்நீட்டி அவர் அமர்ந்திருந்த அதே சோபாவில் இன்று அந்த நிலையில் பகவானின் பெரிய படம்; நம்முடன் பேசுவதுபோலிருக்கிறது. வெளிச்சம் சற்று குறைவாகயிருக்கும் அந்த அறையில் தியானம் செய்யும் பலர். சிலையாகச் சமைந்திருக்கும் வெளிநாட்டுப் பெண்மணி. எவரையும் தியானம் செய்யத் தூண்டும் அந்தச் சூழ்நிலையில் நாமும் சிறிது நேரம் முயற்சிக்கிறோம். நம் சுவாசத்தின் மெல்லிய ஒலி கேட்குமளவிற்கு அமைதி. ஆழ்ந்த மெளனத்திற்கு அழைத்துபோகும் அந்தச் சீரான ஓசை அந்த நேரத்தில் அந்த இடத்தில் ஏற்படுத்திய நிச்சலனத்தையும் நிம்மதியையும் அனுபவித்து உணர்ந்தால்தான் புரிந்து கொள்ளமுடியும்.

தியான அறைக்கு வெளியே சிறிய தோட்டத்தில் ஆடாமல் மெல்ல நடைபழகிக்கொண்டிருக்கும் மயில்கள். தோகைவிரித்து அது ஆடாதா எனக் காத்திருக்கும் சிலர். மரங்களில் மெள்ள, பேசும் கிளிகளைத் துரத்தும் குரங்குகள். தோட்டத்தின் ஒரு பகுதியில், நம் புருவத்தை உயர்த்தசெய்யும் சில விலங்குகளின் சமாதிகள். பசு லஷ்மி, நாய் ஜாக்ஸன் என்று பகவான் ரமணர் வாழ்ந்த காலத்தில் அவருடனே சுற்றிகொண்டிருந்த இவர்கள் அண்ணாமலையில் வாழும் சித்தர்கள் என ரமணரால் அடையாளம் கண்டுகொள்ளபட்டதால் இந்த கெளரவம் பெற்றிருப்பதை அறிகிறோம்.

அருகில் “போஜனசாலை” எனப் பதிப்பிக்கப்பட்ட நீல எனாமல்போர்டு- அது தமிழ் வார்த்தையாகக் கருதப்பட்ட காலத்தில் எழுந்த கட்டிடம் அது என்பதைச் சொல்லுகிறது. பரந்து விரிந்திருக்கும் அந்தக் கல் கட்டிடக் கூடத்தில் சுவர் முழுவதும் படங்கள். அதில் ரமணர் வாழ்ந்த காலத்திலிருந்த அரசியல் பிரமுகர்களை, அரசர்களைக் காணமுடிகிறது. கூடத்தின் நடுவில் பகவான் சாப்பிடும் நிலையில் ஒரு படம். தரையில் அமர்ந்து தையல் இலையில் பரிமாறப்படும் எளிமையான, சுவையான சாப்பாட்டைப் பிரசாதமாக ஏற்கிறோம்.

ashram

காலை 5.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திட்டமிட்ட அட்டவணைப்படி நிகழ்சிகள் நடைபெறும் இந்த ஆஸ்ரமத்தின் விதிகள் எவருக்காகவும் தளர்த்தப்படுவதில்லை. அரசியலில் சிக்கலான நேரத்தில் இந்திரா காந்தி இங்கு வந்திருக்கிறார். வருகையைத் தெரிவித்துவிட்டு வரும் அன்பர்களுக்கு அருகிலுள்ள வசதியான கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கும் வசதியும் ஆஸ்ரமத்தில் உணவும் அளிக்கப்படுகிறது. கட்டணமாக எதுவும் வசூலிப்பதில்லை. கொடுக்கும் நன்கொடைகள் மற்றுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. “நாங்களாக யாரிடமும் ஆஸ்ரமத்திற்கு நன்கொடைகள் வேண்டுவதில்லை. சில நாள்கள் லட்சகணக்கில் பணம், எதுவுமே இல்லாத சில நாள்கள் என இருந்தாலும் பகவானின் அருளினால் இடைவிடாது ஆஸ்ரமத்தின் பணிகள் சீராக இயஙகுகிறது,” என்கிறார் இதன் தலைவர், திரு.வி.எஸ்.ரமணன். இவர் பொதுத்துறையில் உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்.

ஐரோப்பா, கனாடா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் அன்பர்களால் வழிபாட்டுமையங்கள் நிறுவப்பட்டிருக்கும் இந்த ஆஸ்ரமத்திற்கு அமெரிகாவில் மட்டும் இருபதுக்கும்மேல் மையங்கள். நவீன தொழில் நுட்பத்துடன் ஜெர்மனி நாட்டு ஆஸ்ரம அன்பர்கள் இங்கு நிறுவியிருக்கும் ஆவணக் காப்பகம், அவற்றை இணயத்தில் இ-லைப்ரரியில் பார்க்க வசதி, தமிழ், ஆங்கில, ஐரோப்பிய மொழிகளில் புத்தகங்கள் நிறைந்த நூலகம், புத்தகங்கள் சிடிக்கள் டிவிடிகள் தயாரிக்கும் வசதியுடன் பதிப்பகம், விற்பனை நிலையம் எல்லாம் எந்த விளம்பரச் சத்தமும் இல்லாமல், வெளியே ஒரு போர்டு கூட இல்லாமல் அமைதியாக இயங்குகின்றன.

பயணம் செய்யும்போது பல இடங்களில் நாம் தங்குவது உண்டு. அவற்றில் சில இடங்கள் நம் மனதில் தங்கிவிடும். திருவண்ணாமலை ரமணாஸ்ரம். அதில் ஒன்று.

2 Replies to “அமைதியின் ஓசை”

  1. ரமணாஸ்ரமத்திற்கு போய்வந்த உணர்வை தருகிறது இந்த் கட்டுரை. ஆன்மீக உபதேசங்களை , விளம்பரவெளிச்சத்தில் வியாபாரமாக்கி தங்களையும், தஙகளது படைப்புகளையும் விற்று பணம் பண்ணிக்கொண்டிருக்கும் பல “ஸ்வாமிகளை” அறிந்திருக்கும் இன்றைய் இளைஞர்களுக்கு இம் மாதிரி உண்மையான ஆஸ்ரமங்களை அடையாளும் காட்டும் பணியை செய்யும் தமிழ் ஹிந்துவிற்கு நன்றி.
    ஜெய்சங்கர் மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *