ரமணரின் கீதாசாரம் – 12

ரமண மகரிஷி ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் பகுதி 1 | பகுதி 2| பகுதி 3| பகுதி 4 | பகுதி 5| பகுதி 6| பகுதி 7| பகுதி 8| பகுதி 9| பகுதி 10| பகுதி 11

மனதின் குணங்களைப் பற்றியும், அதை அடக்கி ஒடுக்கும் ஞானயோக முறையைப் பற்றியும் சொன்ன பரமாத்மா, தன்னை அடைய விரும்பும் யோகியின் லக்ஷணங்களைப் பற்றியும் கூறினார். அப்படி தன்னை அடைந்தவர்க்கும், அடையும் வழிகளை நாடும் சாதகனுக்கும் தான் என்ன செய்து அவர்களை கைதூக்கி விடுவேன் என்றும், அவர்களை எப்படி மதிக்கிறேன் என்றும் இப்போது கூறுவார்.

9-22

अनन्याश्चिन्तयन्तो मां ये जना: पर्युपासते |
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ||

அந்நிய சிந்தை அணுவுமிலாது என்னையே
உன்னி எவர் என்றும் உபாசிப்பார் – என்னிலே
என்றும் ஒன்றும் அன்னவர்தம் யோக க்ஷேமங்களை
என்றும் தரித்திடுவேன் யான்

பொருள்: ஆன்மபாவத்தைத் தவிர அதற்கு அன்னியமான சிந்தை அணுவளவும் இல்லாது எப்போதும் என்னையே தியானித்து, உபாசனை செய்து, ஆன்மாவாகிய என்னிடத்திலேயே ஒன்றுபட்டிருப்பாரோ, அத்தகைய அனன்னிய பக்தர்களின் யோக க்ஷேமங்களை எனது பொறுப்பாக நான் எப்பொழுதும் ஏற்று நடத்துவேன்.

ஆன்ம யோகம் என்பதே தான் வேறு ஆன்மா வேறு என்றில்லாமல், ஜீவனாகிய தானே பரமாகிய ஆன்மாவுடன் ஒன்றுபடுதல் ஆகும். அதுதான் இரண்டையும் பிரித்து அறியாத அனன்னிய பக்தி நிலையும் ஆகும். அதை உணராத நிலையில் நாம் இருப்பதால், தற்போது இல்லாத அந்த நிலையை அடைவதை யோகம் என்றும், அதை அடைந்த பின் அந்த நிலையிலேயே நிற்பதை க்ஷேமம் என்றும் கூறுவர். அனன்னிய பக்தியுடன் என்னை அணுகுவோருக்குத் தேவையான யோகத்தையும், க்ஷேமத்தையும் நான் வழங்குகிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா இங்கு கூறுகிறார். அதற்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான். “என்னைச் சரணடைந்து விடு. உனக்குத் தேவையான அனைத்தையும் நான் கொடுக்கிறேன்” என்பதால் அது பரிபூரண சரணாகதிதான்.

ஒரு பக்தன் தனது உயிர், உடைமைகள் அனைத்தையும் பகவானுக்கே என்று அர்ப்பணித்து இருப்பதே சரணாகதி நிலை. அப்போது அவன் தனக்கு வருவதை பகவான் அளிப்பது என்று ஏற்றுக்கொள்கிறான். எதையும் அவன் எதிர்பார்ப்பதும் இல்லை. அதனால் எந்த ஏமாற்றமும் அவனுக்கு இல்லை. ஏதும் அடையாவிட்டால் தனது நிலை தவறானதா, பகவான் கொடுக்கவில்லையா என்ற சஞ்சலமும் கிடையாது. இப்படியும் ஒருவன் இருக்க முடியுமா என்று நம் எவருக்குமே ஒரு பெரும் ஐயம் எழலாம் அல்லவா? அதற்கு நாம் ரமணரின் வாழ்க்கை அனுபவங்களையே பார்த்துத் தெளியலாம்.

bhagavanandchildren

சிறு வயதில் அவர் திருவண்ணாமலையை அடைந்ததுமே தன் கையில் இருந்த சில்லறைக் காசுகளை குளத்தில் தூக்கி எறிந்துவிட்டார். அதன் பின் அருணாச்சலக் கோவிலைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தார். தொடக்க காலத்தில் ஊரில் உள்ள வீடுகளின் வாயில் முன் நின்று ஏதும் கேட்காது, அவர்களாகவே அளிக்கும் உணவை தன் இரண்டு கைகள் கொள்ளும் அளவு மட்டும் வாங்கி சாப்பிட்டுப் போய் விடுவார். பின் அதுவும் இல்லாது பாதாள லிங்கத்தின் அருகே பல நாட்கள் கண்களை மூடி அமர்ந்திருந்த நேரத்தில், பகல் இரவு என்று ஏதும் தெரியாது கண் திறக்கும் நேரம் அவர் அருகில் எவரோ வைத்து விட்டுப் போன உணவை சில சமயம் எடுத்துக் கொள்வார். அச்சமயம் அவர் மேல் கற்களை எறிந்து வேடிக்கை பார்த்த சிறுவர்களையும் அவர் விரட்டாது மோன நிலையில் அமர்ந்திருந்ததைப் பார்த்த சேஷாத்ரி சுவாமிகள்தான் அவரைக் காக்க நினைத்து அவரை அண்டினார். அவரை அகற்ற முடியாது அவரைச் சுற்றி எறும்புகளும், பூச்சிகளும் கடித்துக் குதறி, அதனால் கால்-தொடை பாகம் சீழ்-இரத்தத்தினால் தரையோடு ஒட்டியிருந்த நிலை கண்டு பிறர் துணைகொண்டு அவரைப் பெயர்க்க வேண்டியதாயிற்று. அப்போதும் அவர் மோன நிலையில் இருந்ததாகச் சொல்வார்கள். அந்த நிலையில் அவரைப் பார்த்துக்கொள்ள சுவாமிகள் ஏற்பாடும் செய்ய வேண்டியதாயிற்று. பிற்காலத்தில் ரமணரே வெவ்வேறு இடங்களில் தங்கி அவைகளை ஆசிரமம் ஆக்கி, நம் போன்றோரிடம் சகஜ நிலையில் அளவளாவவும் செய்தார்.

தற்போது மலை அடிவாரத்தில் உள்ள ரமணாஸ்ரமத்தில் வருடா வருடம் அவர் பிறந்த நாளை ரமண ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள். அப்போது பலரும் அதில் பங்குகொள்ள வருவதால், அனைவருக்கும் உணவு அளிப்பதும் உண்டு. ஒரு ஜெயந்தியின் போது உணவளிக்கப் போதுமான அரிசி இல்லை என்று முதல் நாள் இரவு கண்டனர். அதைக் கடையில் வாங்கப் பணமும் இருக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாது ரமணரிடமே அங்கிருந்தோர் முறையிட்டனர். அவரும் ஏதும் சொல்லாது அமைதியாகவே இருந்தார். முன்னிரவுப் பொழுதும் ஆகிவிட்டது. அனைவரும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு மாட்டு வண்டியில் பல அரிசி மூட்டைகளைக் கொண்டு வந்த ஒருவன் தனது முதலாளி என்றோ ஆசிரமத்திற்கு அரிசி அனுப்பவதாக வேண்டிக்கொண்டாராம், அதைக் கொடுத்து அனுப்பியுள்ளார் என்று சொல்லி இரவோடு இரவாக மூட்டைகளை இறக்கினானாம்.

இதுவரை நாம் பார்த்ததெல்லாம் உலக வாழ்க்கை சம்பந்தப்பட்டதுதான். இப்படிப்பட்ட விஷயங்களைத்தான் நம்மால் உடனே புரிந்துகொள்ள முடியும். இவை தவிர இப்படியெல்லாம் ஆன்ம விசாரத்தின் போதும் தானாக நடப்பதைத்தான், பரமாத்மா அனன்னிய பக்தனுக்குத் தேவையான யோக, க்ஷேமங்களை நான் பொறுப்பேற்று நடத்துகிறேன் என்று சொல்கிறார் போலும்.

7-17

तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते |
प्रियो हि ज्ञानिनोsत्यर्थमहं स च मम प्रिय: ||

அவர்களில் ஞானி அனனிய பக்தன்
அவன் விடா யோகியுமாவன் – அவனே
பெரியன் அவற்குப் பிரியன் யான் எற்குப்
பிரியன் அவனும் பெரிது

பொருள்: (நான்கு வித) பக்தர்களில் ஆன்மஞானியானவன், உண்மையை உள்ளபடி உணர்ந்தவனாதலால் அவன் அனன்னிய பக்தன் ஆகிறான். ஞானி இடைவிடாமல் ஆன்மாவிடத்திலேயே ஒன்றுபட்ட யோகியும் ஆவான். அவன்தான் எல்லோரையும் விட மேலானவன் ஆகிறான். நான் அவனுக்குப் பிரியமானவன். அந்த ஞானியும் எனக்கு மிகவும் பிரியமானவன்.

இறைவனிடம் பக்தி என்பது நான்கு வகைப்படும். தனக்கு வரும் துன்பங்களிலிருந்து தன்னைக் காக்க இறைவனை வேண்டிக் கொள்பவனை “ஆர்த்தன்” என்கிறார்கள். தனது சுக போகங்களுக்கும், தான் விரும்புவதை அடைவதற்கும் இறைவனை வேண்டுபவனை “அர்த்தார்த்தி” என்கின்றனர். நாம் வாழும் வாழ்க்கையின் உண்மை ரகசியம்தான் என்ன என்று அறிந்துகொள்வதற்கு இறைவனை தியானித்து வேண்டுபவன் “ஜிஞ்ஞாசு” எனப்படுகிறான். மெய்ப்பொருளை உணர்ந்து எல்லாவற்றையும் ஆன்ம வடிவாகக் காண்பவனே “ஞானி” ஆகிறான்.

இவர்களில் ஞானியே மற்ற மூன்று வித பக்தனாகவும் இருக்கிறான் என்பதும் கண்கூடு. அது எப்படியென்றால் ஈசனை தனக்கு அன்னியமாக அவன் பார்க்காததால் அனன்னிய பக்தனாகி ஜிஞ்ஞாசு ஆகிறான். அதனாலே அவன் இறைவனிடம் ஒன்றுபட்ட யோகியாகவும் ஆகிறான்.

இறைவனை அடைந்த ஞானி அதற்கும் மேல் எந்த வித செல்வங்களும் இல்லாததால், பெறற்கரிய அந்த செல்வத்தை வேண்டுபவனாக அவன் அர்த்தார்த்தி ஆகிறான். அதனால் அவன் எல்லாவற்றிற்கும் மேலான தவ சிரேஷ்டன் ஆகிறான்.

ஆன்ம ஞானம் பெற்றவன் அந்த நிலையிலேயே நிற்கும் வாய்ப்பு தவறிப் போகாது இருக்க எப்போதும் இறைவனை அண்டியே இருப்பதால் அவன் ஆர்த்தனாகவும் இருக்கிறான். அதனால் இறைவன் அவனுக்கு மிகவும் பிரியமானவன் ஆகிறான்.

இப்படி யோகியாகவும் தவசியாகவும் பிரியமானவனாகவும் எல்லாமாக அவன் இருப்பதால் எனக்கும் அந்த ஞானியை மிகவும் பிடிக்கும் என்று கிருஷ்ண பரமாத்மா இங்கு கூறுகிறார்.

7-19

बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपध्यते |
वासुदेव: सर्वमिति स महात्मा सुदुर्लभ ||

எண்ணில் சென்மங்கள் இறுதியதில் ஞானி
எண்ணி அகத்தில் எனை எப்போதும் – எண்ணி
எலாம் வாசுதேவன் என என்னுறுவான் ஆன்மா
எலார்க்கும் அரியன் இவன்

பொருள்: எண்ணில் அடங்காப் பிறவிகளை ஒருவன் எடுத்து, பலவாறாக உபாசனை செய்து, தனது இறுதிப் பிறவியில் அவன் ஞானி ஆகிறான். அந்த ஞானி சதா சர்வ காலமும் உள்ளத்தில் என்னையே தியானித்து, எல்லாம் வாசுதேவனே என்று என்னை உணர்ந்து, வெற்றியுடன் அடைகிறான். அந்த ஞானி கீர்த்தி மிகுந்த எல்லோரையும் விட மேலானவன். அருமை மிக்கவன். இவனே மகாத்மா.
பரமாகிய ஆன்மா பரமாகவே இல்லாது ஜீவன் எடுத்து பல சீவராசிகளாக வருவதன் காரணத்தைப் பலரும் பலவிதமாகச் சொல்லலாம். தற்சமயம் ஜீவாத்மாவாக உள்ள நாம், நம் நேரடி அனுபவத்தின் மூலம் அதை சற்றே விசாரிக்கலாமே! நம்மைப் போன்ற மனிதர்களைத் தவிர ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகிய புழு, பூச்சிகள், மிருகங்களையும், அசலமாகிய புல், பூண்டு, செடி,கொடி, மரங்கள் என்னும் தாவர வர்க்கங்களையும், மேலும் பல தாதுக்களையும் பிரபஞ்சத்தில் நாம் காண்கிறோம். இவை தவிர கண்ணுக்குத் தெரியா எண்ணிலடங்கா நுண்கிருமிகள் நம்முள்ளும், வெளியேயும் உண்டு என்பதையும் நாம் ஆராய்ச்சி மூலம் அறிகிறோம். இவை அனைத்தின் மூலமாக அணுக்களும், ஏனைய அணுத்துகள்களும் உள்ளன என்பதையும் விஞ்ஞானம் நமக்கு அறிவிக்கிறது.

இருந்தும் இவ்வளவு விவரங்களை மனிதர்களாகிய நாம்தான் கற்று அறிந்திருக்கிறோம்; மேலும் கற்று அறிகிறோம். மற்றைய சீவராசிகளோ தாம் இருக்கும் இந்த உலகில் உள்ள மற்றவைகளைப் பற்றி அறிந்தோ அறியாமலோ, ஆனாலும் அந்த இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இயற்கையாகவே அவைகளுக்கு எதைச் சாப்பிடலாம், எதைப் பார்த்தால் தான் உயிர் பிழைக்க எப்படி ஓட வேண்டும் என்றெல்லாம் கூடத் தெரிந்திருக்கின்றன.

சிலவற்றிற்கு தன் இனப்பெருக்கத்திற்குத் தேவையான கூடுகள், புற்றுக்கள் கட்டிக் கொள்வது, மற்ற இனங்களிடமிருந்து தனது முட்டை, குஞ்சு, குட்டிகளைக் காப்பாற்றுவது, தேவையானால் தன் உயிரையே பணயம் வைத்து அவைகளைக் காப்பாற்றுவது என்பன போன்ற தற்காப்பு முறைகளும் தெரிந்திருக்கின்றன. இவையெல்லாம் அந்தந்த இனங்களுக்கு இயற்கையாகவே வருகின்றன. சில வகைகள், சில முறைகளை தன் தாயிடமிருந்து கற்றுக்கொள்கின்றன. அவை எல்லாமே தானும் தன் இனமும் வாழ வேண்டும் என்று அவைகளுக்கு இருக்கும் ஒரே உந்துதலினாலே என்று நாம் அறிகிறோம். அதற்கும் மேல் அந்த இனங்களுக்கு வேறு ஏதேனும் குறிக்கோள் இருப்பதாகத் தெரியவில்லை என்றுதான் இதுவரை மனிதன் செய்துள்ள ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறான்.

அப்படிப் பார்க்கும்போது மனிதன் உணவு, உடை, உறைவிடம், அவைகளுக்குத் தேவையான பொருட்களின் உற்பத்தி-சேகரிப்பு, மற்றோரிடம் பேசும் திறன், மொழிகள் பலவற்றையும் கற்கும் திறன், அதன் தொடர்பான எண்-எழுத்துத் திறன், நீர்-வான்-வெளி என்றபடி வகைவகையான வெகுதூரப் பயணம் என்ற விதவிதமான கலைகளையும் ஆதிகாலத்திருந்து அபிவிருத்தி செய்திருக்கிறான்; இன்னமும் செய்து கொண்டிருக்கிறான். இவை போன்ற உலகியல் ஈடுபாடுகள் தவிர, தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து சீவராசிகளுக்கும் உள்ள அடிப்படைத் தொடர்புகளையும் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறான். இவைகள் எல்லாம் அவனது இயற்கை எல்லைகளையும் தாண்டி செயற்கை முறையில் அறியப்பட்டவைகள்தான். அதனாலேயே மனிதன் மற்ற இனங்களைவிட பரிணாம வளர்ச்சியில் முதன்மையில் நிற்கிறான்.

மனிதனின் செயல்கள் பலருக்கும் பயன் தருமாறு அமைந்தால் அவைகளை நற்செயல்கள் என்றும் அதை ஊக்குவிப்பதும், பயன்படாமல் போனால் அவைகளைத் தீய செயல்கள் என்றும் அதைத் தவிர்ப்பதும் ஆக இருந்தால் அனைவருக்கும் நன்மையே. அப்படிப்பட்ட மனிதர்கள் தன்னைத் தவிர, பிற சல-அசல ராசிகளையும் ஒன்றாகவே பார்ப்பதால் அவர்களுக்கு அனைத்திலும் உள்ள ஒற்றுமையும், உண்மையும் புலப்படும். அவர்களின் வினைப்பயன் அவர்களுக்கும் மற்றோருக்கும் நன்மைகள் பல தந்து, அவர்களின் வாழ்க்கையின் உண்மைப் பயனையும் ஒரு கட்டத்தில் புரிய வைக்கும். மாறாக, தன்னை மற்றோரிடமிருந்து வேறாகக் கண்டு தனக்கும் மற்றோருக்குமாக வெவ்வேறாகச் செயல்படும் மனிதன் தீயசெயல்களையும் புரிகிறான். அதனால் அதற்குண்டான பலன்களையும் அனுபவித்து, ஒரு கட்டத்தில் வாழ்க்கையையும் வெறுத்து, அவனும் இறுதியில் வாழ்வின் உண்மைப் பயனைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறான். எல்லாம் அவரவர் வினைகளைப் பொறுத்தே அவரவர் பாதைகள் அமைகின்றன.

ஆக நல்லவனோ, கெட்டவனோ அவனது வினைகளுக்குப் பயன் உண்டு, அது அவனை இப்பிறவியில் இல்லாவிட்டாலும், வினையின் பயன் முடியாததினால் வரும் பிறவிகளிலும் அவனைத் தொடர்ந்து இறுதியில் அவனை நல்வழி கொண்டு சேர்க்கும் என்று அனுபவத்தில் உணர்ந்தோர் கூறுகின்றனர். இப்படியான எண்ணிலாப் பிறவிகளின் இறுதியில் ஒருவன் ஞானியாகிறான் என்று கிருஷ்ண பரமாத்மா இங்கு கூறுகிறார். அந்த நிலையில், தன் உள்ளத்தில் சதா சர்வ காலமும் என்னையே தியானித்து, அனைத்தும் ஆன்மாவாகிய வாசுதேவனே என்று என்னை உணர்ந்து, என்னை வெற்றியுடன் அடைகிறான். இப்படிப் பல வகைகளிலும் அனுபவப்பட்டு, இறுதியில் உள்ளதை உணர்ந்து என்னை அடையும் அந்த ஞானியே இருப்பவர்க்குள் அரிதிலும் அரிதானவன். அவனே கீர்த்தி மிக்க அனைவரிலும் மிக மேன்மையானவன். அனைத்தும் ஆன்மா என்றுணர்ந்து, தானும் என்றும் அதுவாகவே இருந்தும் அறியாதிருந்தோம், தன்னிலும் வேறாகத் தெரியும் அனைத்தும் அந்த ஆன்மாவே என்ற நிலையில் உள்ளதால் அவனே மகாத்மா என்றும் கூறுகிறார்.

music-iconரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.

(தொடரும் …)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *