அமுதம் [சிறுகதை]

 “யோவ் பிரானே வெளியே வாருமைய்யா!”

கர்ணகடூரமான அந்தக் குரல், கவண்கல் போல் அந்தக் காணியின் வெளியெங்கும் மோதியது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் ஒலிகள் அடுத்த சில நொடிகளுக்கு நிசப்தமாகி மீண்டபோது அவை தாறுமாறான கீச்கீச்சுகளுடன் சிறகடிக்கும் படபடப்பொலிகளாக மாறியிருந்தன. பச்சை போர்த்த மர உச்சிகளின் மேல் இளநீல வெளியில் பறவைகள் விரிந்து சிதறின.

காலை அப்போதுதான் மெதுவாகப் பரந்து கொண்டிருந்தது.

ஆதியமலப் பிரானய்யங்கார் என்கிற திருவடிப்பிள்ளை ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தக் காணியில் அமைந்திருந்த மண் குடிலின் உள்ளிருந்து வாசலுக்கு வந்தார்.. நெற்றியில் திருமண், காதுகளில் துளசி இலைகள். மிகவும் மெலிந்த தேகத்தில் கண்கள் மட்டும் தீர்க்கமான தெளிவுடன் இருந்தன. கருமையான உடலில் எளிய பருத்தி வெள்ளை அங்கவஸ்திரம்.

அவரை அழைத்த காளிங்கன் கட்டுமஸ்தான உடலுடன் கையில் வேலுடன் நின்றிருந்தான். அச்சுத ராமராயரின் அந்தரங்கச் சேவகன். விஜயநகர வீழ்ச்சிக்குப் பிறகு தென்பாண்டி மண்டலத்தில் சிற்றரசர்களாகக் கோலோச்சும் பல நாயக்க தளபதிகளில் அச்சுத ராமராயர் முக்கியமானவர். அவர் ஆள் அனுப்பியிருக்கிறார் என்றால் விஷயம் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

”வரவேணும். அடியேன் குடிலுக்கு எழுந்தருளியது அடியேன் பாக்கியம். இப்போதான் நித்யானுஸந்தானத்தை முடிச்சேன். ஒரு நிமிஷம் இருங்கோ. தீர்த்தமும் துளசி பத்ரமும் வாங்கிக்கோங்கோ…”

இடைமறித்தான் காளிங்கன்.

“விளையாடுகிறீரா? தொழுவக்குடிகளை தர்மானுசாராங்களுக்கு எதிராக கலகம் விளைவிக்கத் தூண்டியிருக்கிறீரென்று உம்மை உடனடியாக அழைத்து வர ஆணையாகியிருக்கிறது ஓய். பிராமணர் என்று கூடப் பார்க்காமல், உடனே வராவிட்டால் பிணைத்து அழைத்து வரவும் உத்தரவாகியிருக்கிறது.”

பிரானய்யங்காருக்குப் புரிந்தது. திருமலையாப்பிள்ளை விவகாரம் வெளியிலே வந்து விட்டது. எம்பெருமான் விளையாடுகிறான்.

”இதோ வருகிறேன். சொந்த சக்தியிலேயே வந்துவிடுகிறேன். உங்களுக்கு ஏன் சிரமம்? விண்ணகர அமுதத் தடாகம்தானே”

“ஓம்” என்று உறுமியபடி குதிரையில் தாவி ஏறினான் அவன்.

தென்னந்தோப்புகள் ஊடே பாம்பாக நெளிந்த பாதைகள் வழியாகவும் பின்னர் மாட்டுவண்டித் தடத்தின் செம்புழுதித் தடவீதி வழியாகவும் குதிரையைப் பின்தொடர்ந்து நடந்தார், பிரானய்யங்கார்.

nectar3

விண்ணகர அமுதத் தடாகம்.

அமுதத் தடாக மண்டபம் வந்துசேரும் போது முன்மதியம் வந்து வெயிலேற ஆரம்பித்துவிட்டது.

அமுதத் தடாகம் வழக்கம் போலவே வறண்டு இருந்தது.

nectar1கருடன் அமுதத்தைக் கொண்டு இந்த வழியாக ஆகாய மார்க்கமாக வருகின்ற போது இந்திரன் கருடன் மீது வஜ்ஜிரத்தை வீசினான். வஜ்ரம் வருகிறதைக் கண்ட கருடன் உடனே விஷ்ணுவை தியானம் செய்ய, விஷ்ணு அவனுக்காக எழுந்தருளி வஜ்ராயுதம் அவனுடைய சிறகில் ஒரு தூவலை மட்டுமே விழும்படியாகச் செய்தருளினார். அது சமயம் அமிர்த கலசம் சிறிதே அசைய அதிலிருந்து ஒரு துளி இங்கு விழுந்து ஒரு தடாகமாகி விட்டது. ஆகா இனி உலகில் சாவே இல்லாமல் ஆகிவிடுமே என்று கருடன் மீண்டும் விஷ்ணுவை வேண்ட அந்தத் துளி மீண்டும் அப்படியே அமிர்த கலசத்துக்குள் போய் விட்டது. அன்றிலிருந்து எத்தனையோ மழை வந்தாலும் இந்தத் தடாகம் வறண்டேதான் இருக்கும். பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறான். அவன் திருநாமம் புள்ளுக்கருளிய ஸ்ரீ தேவி பூதேவி சமேத புள்ளியூர் விண்ணகர நம்பி..

தடாகத்தின் கிழக்குப் பகுதியில் அந்தக் கல்மண்டபம் இருந்தது. அதற்கு வெளியே ஐவர் குடை பிடிக்க, அந்த நிழலில் அந்தணாளர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு சிறிது தூரத்தில் மரியாதையுடன் அகத்துடையார்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இரு சேவகர்கள் குடை பிடித்துக் கொண்டிருக்க, பெரும்பாலானோருக்கு அந்த நிழல் போதுமானதாக இல்லாமல் வெயிலுக்கும் நிழலுக்குமாக முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.

பதினாறு கல்தூண்களிலும் கருடன் கலசத்துடன் வரும் காட்சிகளும் இந்திர கர்வ பங்கமும் காட்டப்பட்ட அமுதத் தடாக மண்டபத்தில் மையமாக பட்டு ஜரிகை போர்த்திய மர ஆசனம் போடப்பட்டு அதில் அச்சுத ராமராயர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் மண்டபத்துக்கு வெளியே இருபது வீரர்கள் பூரண ஆயுததாரிகளாக நின்றுகொண்டிருந்தார்கள். சற்று தொலைவில் ஒரு வெள்ளைக் குதிரையை இரு சேவகர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அச்சுத ராமராயருடன் புள்ளியூர் நம்பி விண்ணகர தலைமை பட்டரும் வந்திருப்பது தெரிந்தது. சிவப்பான உடலில் உயர்தரப் பட்டு அங்கவஸ்திரம் பூணூலுக்கு மேலாகப் படர்ந்து, வெயிலில் இங்கு வரை பிரகாசித்தது.

அச்சுத ராமராயருக்கு ஐம்பது வயதிருக்கலாம். கட்டுமஸ்தான உடலில் ஆங்காங்கே விழுப்புண் தழும்புகள். உடலின் மீது பட்டு அங்கவஸ்திரம் அநாவசியமாகக் குறுக்காகக் கிடந்தது. தங்க ஆபரணங்கள் மின்னின. நெற்றியில் திருமண் தீர்க்கமாக இருந்தது. கண்கள் குறுகி ஏறக்குறைய கோடுகளாக மாற அவர் பிரான்னய்யங்கார் வருவதையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மண்டபத்துக்கு வெளியே ஒரு மரத்தூண் ஏற்படுத்தி அதில் இருபத்தைந்து வயதான ஓர் இளைஞன் கட்டப்பட்டிருந்தான். அவன் தலையில் புழுதி படித்திருந்தது. உடலெங்கும் ஆங்காங்கே தோல் உரிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அழுக்கான ஒரு கோவணத்தைத் தவிர வேறெந்த ஆடையும் அவன் அணிந்திருக்கவில்லை. அருகே புளியம் விளாறுகளுடன் வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவ்விளாறுகளில் ஆங்காங்கே சதைத் துணுக்குகள் ஒட்டியிருந்தன.

பிரானய்யங்காரைக் கண்டவுடன் அந்த இளைஞனின் தலை ஒரு நொடி நிமிர, இருவர் கண்களும் சந்தித்தன. மீண்டும் அவன் தலை தொய்ந்து கவிழ்ந்தது. அந்த இளைஞன் முகத்தில் ஒரு குறும்புத்தனமான புன்னகை தவழ்வதாகத் தோன்றியது அவருக்கு.

பிரானய்யங்கார் கண்களில் நீர் நிரம்பியது

காளிங்கன் கல்மண்டபத்துக்கு வெளியே நின்று அரைவரை குனிந்து, “திருமேனி திருவுளப்படி ஆதியமலப் பிரான்னய்யங்காரை அழைத்து வந்திருக்கிறேன். அடியேன்.” என்று தண்டம் சமர்ப்பித்தான்.

அதைப் புறக்கணித்து பிரானய்யங்காரின் வணக்கங்களை எதிர்பார்த்து அச்சுத ராமராயரின் முகம் உயர்ந்த போது-

பிரானய்யங்கார் அந்த இளைஞன் முன்னாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்.

பிராமணர்கள் நின்ற பகுதிகளிலிருந்து ‘ஹா ஹா’காரங்கள் வெளியாயின. ‘குலத்துரோகி’ என ஒரு பருமனான வயோதிக பிராமணர் சப்தமாகவே சொன்னார். அவர் காதுகள் சிவந்து வெடவெடத்தன. தொடர்ந்து ‘நீசன்’, ’பாஷாண்டக்காரன்’ என வசைகள், வாய்க்களுக்குள் ஒலிக்க ஆரம்பித்தன. ஆனால் அவை அச்சுத ராமராயர் காதுகளில் விழும்படியான உத்தேசத்துடன் கூறப்பட்டன.

அச்சுத ராமராயரின் முகத்திலும் சினம் படர்ந்து. ஆனால் ஒரே நொடிக்குள்ளாக அது வெளிக்குத் தெரியாமல் அடங்கியது. என்ன இருந்தாலும் பிராமணர். ஆத்திரம் கொண்டால் கதை வேறுமாதிரி ஆகிவிடும். இன்றில்லாவிட்டாலும் இன்னொரு நாள். அவர் கண்கள் இப்போது அகத்துடையார்கள் பக்கமாகச் சென்றது.

அகத்துடையார்கள் கண்களில் வெறி உக்கிர உச்சமாகத் தாண்டவமாட அவர்கள் தங்களை கஷ்டப்பட்டு அடக்குவது தெரிந்தது. அச்சுத ராமராயரின் முகம் உடனடியாக திருப்தி அடைந்து, முகத்தில் புன்முறுவலின் முதல் வரி தொடங்கி, அதுவும் அடங்கியது. கற்சிலைக்கொப்ப அவர் அமர்ந்திருந்தார்.

பிரானய்யங்கார் மண்டபத்துக்குள் காலடி வைக்க முற்பட்ட போது காவலன் வேல் அவரைத் தடுத்தது.

”அங்கேயே நிற்க வேணும். நீர் மண்டபத்துக்குள் பிரவேசிக்குமளவு ஆசாரசீலரல்ல ஆசாரஹீனராகிவிட்டீர் என்பது இவ்விண்ணகர பூசுரர்களான வேத விற்பன்னர்கள் அபிப்பிராயம்!” என ஓர் அதிகாரி சொன்னார். பிராமணர்கள் கூட்டத்திலிருந்து ஆமோதிக்கும்விதமாக ஒலிகள் கிளம்பின. பிரானய்யங்கார் எவ்வித மாற்றமும் காட்டாத முகத்துடன் அக்கல்மண்டபத்தின் வெளியிலேயே நின்றார்.

வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது.

அச்சுத ராமராயரின் குரல் கேட்டதும் அங்கிருந்த அத்தனை ஒலிகளும் அடங்கின.

”பிரானய்யங்கார் நீர் உயரிய பிராமணோத்தமர்களின் குலத்தில் வந்தவர். உம்முடைய பாட்டனார் வைணவ திவ்யக் கிரந்தங்களுக்கு அருளிய பாஷ்யங்கள் இன்றும் பிரசித்தம். நீரும் சிலகாலம் முன்னால்வரை மிகுந்த ஆசாரசீலராகவே இருந்திருக்கிறீர். அப்படி இருக்க நீர் சாதியனுஷ்டானங்களை மீறி இப்படி மிலேச்சரினும் கீழாக, தொழுவக்குடிகளுடன் சல்லாபித்தமைக்கும் அவர்களை இவ்விண்ணகரத்துக்குள் பிரவேசிக்கச் செய்தமைக்கும் என்ன நியாயம் சொல்லப் போகிறீர்?”

nectar4பிரானய்யங்கார் அமைதியாகச் சொன்னார்- “பாகவத நியாயம்”

“அதென்ன நியாயம்?” கேலியாக எழுந்தது ராயரின் குரல், “திலகாஷ்ட மகிஷ பந்தனமா?”

எழுந்து அடங்கிய சிரிப்புக்கனைப்புகள்.

அவருக்கு பின்னால் பட்டரும் அவருடன் நின்றிருந்த சில பிராமணர்களும் ஏதோ குசுகுசுவென பேசிக்கொண்டு மீண்டும் நிமிர்ந்து பிரானய்யங்காரைப் பார்த்தனர்.

”யதிகட்கெல்லாம் தலைவனாம் உடையவரும் ஆழ்வார்களும் காட்டிய நியாயம்”

பட்டர், அச்சுத ராமராயரிடம் தலைகுனிந்து வாய்பொத்தி ஏதோ முணுமுணுத்தார்.

”பிரானய்யங்காரே! எதுவானாலும் நீர் பிராமணர். எனவே இனி விண்ணகர பூசுரர்களான வேத வித்துகள் உம்மை விசாரிப்பார்கள். யாம் இறுதித் தீர்ப்பை மட்டுமே வழங்குவோம்!” என்று கூறிய அச்சுத ராமராயர், நாடகம் பார்க்கும் ஓய்வுத்தளர்ச்சியுடன் ஆசனத்தில் சாய்ந்தார். பட்டர் முன்னகர்ந்தார்.

“இதோ இக்கம்பத்தில் கட்டப்பட்டிருப்பவனை உமக்குத் தெரியுமா?”

“ஆம்”

“யார் இவன்? இவன் குலமென்ன?”

“என் ஆச்சாரியர். எம்பிரான் மார்பில் திகழும் தாயாரின் புதல்வர் இவர். திருக்குலத்தார்..”

மீண்டும் முணுமுணுப்புக்கள் எழுந்தன. புருவங்கள் நெரிந்தன. ”இந்தக் கோடாலி காம்பைக் கல்லாலடித்து…” என்கிற வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அச்சுத ராமராயர் மட்டுமே அமைதியாக இருந்தார்.

பட்டர் கேட்டார், “இதற்கு என்ன சாஸ்திர சம்மதம்?”

“ஆழ்வார்கள் மூலம் எம்பிரான் சொன்னது.”

“என்ன ஓய் கதை விடுகிறீர்,,,”

“இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்களாகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மினென்று நின்னொடுமொக்க
வழிபடவருளினாய்போல் மதிள்திருவரங்கத்தானே…”

“ஓஹோ அப்படிப் போகிறதா கதை… அதனால்தான் இழிகுலத்தானிடம் போனிரோ!”

“ஸ்வாமி தவறாகப் புரிந்து கொண்டீர்… அதனால்தான் இழிகுலத்தானான என்னை எம்மனார் ஏற்றுக்கொண்டு பழமையான வைணவக் கிரந்த இரகசியங்களை அருளிச்செய்தார்.”

கொப்பளிக்கும் அக்னித் தடாகத்தில் பெரும் பாறாங்கல் விழுந்தது போல வெறுப்பலைகள் அனலாகப் பரவின. “டேய்…!.” பட்டர் மரியாதை, போலி பவ்யம், நிதானமெல்லாம் விட்டு கோபத்தால் தீப்பிழம்பெனப் படபடத்தார்.

“நீ பிறந்ததால் தானடா இந்த வேதோத்தமர்களின் குலம் இழிகுலமாகிவிட்டது. வேத அந்தணர்களையா இழிகுலம் என்றாய்?”

“பகவத்பாகவத சேஷத்வத்துக்கு அநுகூலமான ஜன்மமே உத்க்ருஷ்ட ஜன்மம் என்பது அங்ஙனமல்லாதது நிக்ருஷ்டம் என்பதும் நிச்சயிக்கப்பட்டதல்லவா ஸ்வாமி…”

பட்டருக்கு சட்டென ஒன்று புரிந்தது.

நடப்பது விசாரணையல்ல. இவனது துன்மித்தக் கருத்துகளை பரப்ப இதனை அவன் பயன்படுத்துகிறான் துஷ்டன். மகா துஷ்டன். மிகவும் சாமர்த்தியமாக அமைதி குலையாமல் எதிர்கொள்ள வேண்டும். தன் வைராக்கியத்தின் கடைசித் துளியையும்விட்டு, ஆத்திரத்தை உள்ளிழுத்து வெளிக்கு அணைத்தார்.

தன்மேல் வரவழைத்துக் கொண்ட சாந்த பாவனையால் உடல் சிறிது நடுங்க அமைதி ததும்பும் குரலில் சொன்னார், “பிரானே நீர் கிரந்தங்களையும் திருமாலைகளையும் இஷ்டப்படி வியாக்யானம் செய்யக் கூடாது. கொடுமின் கொண்மின் என்றால் பகவத் ஞானத்தை அபேஷித்துக் கேட்டால் கொடுங்கோள் என்னும் ப்ரஸாதிக்கில் ப்ரஸாதராங்கோள் என்றுதான் சொல்லியிருக்கிறதே அன்றி அவாளகத்துக்குச் சென்று ஜலத்தை கொள்ளச் சொல்லவில்லை காணும். அத்துடன் தொழுவக்குடி சென்று அவன் உண்ட சேடத்தை உண்டீரென்றும் கேட்டோம். நாளைக்குக் ’கொடுமின் கொள்மின்’ என்னதால் பொண் கொடுக்கவும் சொன்னான் நம் நம்பி என்பீரோ?”

இம்முறை வெறுப்பு கலந்த இகழ்ச்சியான சிரிப்பலைகள் வெளிப்படையாகவே எழுந்தன.

“ஸ்வாமி பெண்ணும் ஜலமும் போஜனமும் பகவத் ஞானத்தைக் காட்டிலும் உயர்ந்ததோ?.. அதனை அவரிடமிருந்து பெறலாமென்னால் விவாஹ சம்பந்தம் கொடுத்தலும் கொள்ளலும் என்ன தவறு? ஆம் ஸ்வாமி, அடியேன் அவருடைய திருமாளிகையில் உண்டேன்.

போனகம் செய்த சேடம்
தருவரேல் புனிதமன்றே

என அவர் சேடத்தையே நான் உண்…”

”இனியும் என்ன வேண்டியிருக்கிறது?” சட்டென ஆசனம் விட்டு எழுந்தார் அச்சுத ராமராயர். அது டக டகவெனும் சத்தத்துடன் பின்னகர்ந்தது. “ஆனால் பிராமணனாகப் பிறந்துவிட்ட இந்த பாஷாண்டியைக் கொல்ல ஆணையிட்டு நான் ப்ரம்மஹத்தி கொள்ளத் தேவையில்லை. பட்டரே.. ஏற்கனவே என் புத்திரன்.வேறு…” என்று சொல்லவந்ததை நிறுத்திவிட்டு…

வேகமாக நடந்து தன் புரவியில் ஏறித்தட்டினார். புரவி நடன மாதுவின் அரங்க வருகை போல் மெல்ல சிங்காரமாக நடந்தது. குடைகளை ஏந்தியவாறு சேவகர் நடந்தனர். மெதுவாக அவர் சென்று மறையும்வரை அங்கு எதிர்பார்ப்புகள் கலந்த கனமான ஓர் அமைதி நிலவியது.

ஏதோ ஆணைக்குக் காத்திருந்தது போல விண்ணகர ஆலய மணி முழங்கியது.

பட்டர் கண்ணசைத்தார்.

அகத்துடையார்கள் அந்த இளைஞனை வெறியுடன் முரட்டுத்தனமாக இழுத்தார்கள். சதையில் கயிறுகள் இன்னும் நெறிந்து இரத்தம் சன்னமாகத் தெறித்தது. எவனோ வாளால் பிணைத்திருந்த கயிறுகளை அசிரத்தையாக வெட்டினான். அதில் அந்த இளைஞனின் கருந்திரளான சதைத்துண்டு ஒன்றும் சேர்ந்து வெட்டுப்பட்டு வீழ்ந்தது. ஏற்கனவே புழுதி அடர்ந்து படிந்த உடலிலிருந்து தாரளமாகவே வெளிவந்த இரத்தம், உடற்புழுதியிலும் தரைப்புழுதியிலுமாகப் படர்ந்து நிதானமாகப் பெருக, அவனை தரதரவென வீதியுடன் சேர்த்து இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர். வீதியெங்கும் ரத்தம் சிதறிச் சிதறித் தெறித்தது.

இப்போது பிராமணர்களின் கும்பல் பிரான்னய்யங்காரைச் சூழ்ந்தது. இளைஞனான ஓர் அந்தணன் அவரை அடிவயிற்றில் கால் முட்டியால் ஓங்கி உதைத்தான். அவர் அப்படியே முன்பக்கமாகச் சரிந்தார். ஒரு வயதான பிராமணர் அவர் முதுகில் காறித்துப்பிவிட்டு அகன்றார். சிறிது தொலைவிலிருந்து ஒரு சிறுவன் ஒரு கல்லைத் தூக்கி அவர் மீது எறிந்தான். அது அவர் கண்ணில் பட்டு அவர் கண் உடனே கலங்கி இரத்த நிறமானது, அவர் கண்ணைப் பற்றியபடி கீழே மல்லாக்க விழுந்தார். கற்கள் இப்போது சரமாரியாக அவர் மீது விழ ஆரம்பித்தன.

-0-

நேற்றைய மழைநீர் எங்கும் போகாதபடி ஊரின் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் தெருவெல்லாம் சாக்கடையாக்கியிருந்தன. பழமையான ஊர் என்பதற்கு அந்தக் கோயில் கோபுரம் மட்டுமே சாட்சியாக இருந்தது. ஆனால் கோயில் சுவர்களில் ஷகீலாவின் அனுபவங்களும், வியாதிஸ்தர்களை சொஸ்தப்படுத்தும் கன்வென்ஷன்களும், புரட்சி அண்ணன், புரட்சி அக்கா, புரட்சி அய்யா இன்னபிறப் புரட்சியினர் அனைவரும் அவரவர் சின்னங்களும் ஒட்டியும் தொங்கியும் நிரப்பியிருக்க, அவர்களை சமதர்ம சமபாவ அத்வைதானுபவ பாவனையுடன் ஒரு கோமாதா இலாவகமாகக் கிழித்து உண்டு கொண்டிருந்தாள். ஆங்காங்கே அவள் போட்ட சாணியும் மழைநீருடன் கலந்து சின்னச் சின்ன குட்டைகளாகத் தேங்கியிருந்தன.

கோயில் கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் ஒரு தன்னார்வக் குழுவில் உறுப்பினனாக இந்த ஊருக்கு வர வேண்டியதாயிற்று. இக்குழுவுக்கு நிதியுதவி அளிக்கும் ஓர் அமெரிக்கத் தமிழர், இந்த ஊர்க்காரராம். புள்ளூர் விண்ணகரம். நாயக்கர்கள் காலத்தில் இந்த ஊர் பிரசித்தி பெற்றிருக்கிறது. காலை முழுவதும் கோயிலில் சுவர் சுவராக கல்வெட்டுக்களைத் தேடிப் பார்த்து அவற்றைப் பிரதி எடுத்து, படித்து முடித்தோம்.

nectar2உட்பிரகாரச் சுவரில் பதிந்திருந்த ஒரு கல்வெட்டு என்னை ஏனோ மிகவும் கவர்ந்தது. அதன்மீது அடித்து வைத்திருந்த ட்யூப் லைட்டையும் சுவிட்ச் போர்டையும் எடுத்து வைக்க ஆலய அதிகாரிகளிடம் சண்டை போட வந்தது காரணமாக இருக்கலாம். பிறகு சாய பேப்பரை மேலே வைத்து, ஹேர் பிரஷ் கட்டையால் டக டக வென அடித்தபோது. கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகள் தெளிவாக ஆரம்பித்தன.

வெள்ளை மீசை ஊடாக “தமிழ்தான்” என்றார் கல்வெட்டாராய்ச்சியாளர், ராகவ நிலவன். அவர் கண்களும் மூக்கும் யாருடனாவது சண்டை போட ஏதாவது காரணத்தைத் தேடுவது போல் இருந்தன. ஏற்கனவே ஆலய அதிகாரிகளுடன் அவர் போட்ட சண்டையில்தான் ட்யூப் லைட்டையும் சுவிட்ச் போர்டையும் கழற்றி வைத்திருந்தார்கள். ஐம்பது வயதைக் கடந்திருந்தாலும் பதின்மச் சிறுவனின் ஆர்வத்துடன் அக்கல்வெட்டை அவர் படிக்க ஆரம்பித்தார். நான் எழுதிக் கொண்டேன்.

வறண்டிருந்த அமிர்த புஷ்கரணியிலெ மீண்டும் அமிர்த வர்ஷம் பெய்விக்கச் செய்து தம்மெய் மீதுண்ட சாத்துக்கள் பெருமாள் தாமுண்ட திருச்செயல் கண்டு புவனமுழுதாண்டான் தர்ம ராஜ்ஜிய பரிபாலன சக்கரவர்த்தி அச்சுத ராமராயர் மாப்பும் கோரி பெருமாளுக்கும் பிரானாழ்வானுக்கும் திருக்குடியாழ்வானுக்குமாக வரியிலியாக விட்டுக் கொடுத்த நில [இங்கே கல்வெட்டு சிதைந்திருக்கிறது]

சூரிய சந்திராதியோர் உள்ள பரியந்தம் இந்த அமிர்த புஷ்கரணியிலெ பாகவத தர்மத்தை அனுசரிக்கிறவரெல்லாருமா நிக்ருஷ்ட ஜந்மத்தால் வரும் தோஷம் மறுவலிடாதபடி ஸ்நானம் செய்து நம்பியை தரிசிக்க ஆக்ஞையிட்டு [மீண்டும் சிதைவு]

அந்த விசித்திரமான வார்த்தைகள் ஒருவிதக் கவர்ச்சியுடன் எனக்குள் சென்றுவிட்டன. அதென்ன நிக்ருஷ்ட ஜந்மம்? தாழ்த்தப்பட்டவர்களைத்தான் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இங்கு ஓர் அதிசயமே, இந்தக் கோயிலில் பல நூற்றாண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் என சொல்லப்படுவோருக்குத்தான் புஷ்கரணியில் முதல் நீராடும் உரிமையே உள்ளது என்கிறார்கள். ஆனால் ஏன் எதற்கு என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை.

அன்று மதியம் ‘ஆரியபவன் உயர்தர சைவ சாப்பாடு’ ஹோட்டலில் சாப்பிடும் போது ராகவ நிலவன் சில ஊகங்களை வைத்தார்.

ஆர்காடு-பாளையக்காரர்கள் போரின் போது இங்கு படையெடுத்து வந்த ஒருவன்- சந்தா சாகிபோ கான் சாகிபோ, கோயில் பொன் சிலைகளை படை தேடியிருக்கிறான். ஆனால் பெருமாள் சிலையை இங்குள்ள தொழுவக்குடிகள் எனும் சாதியினரும் பிராமணர்களும் சேர்ந்து ஆரல்வாய்மொழிக் கணவாய்க்குள் சென்று மறைத்து வைத்தார்களாம். அதனையடுத்து இங்குள்ள அத்தனை பிராமணர்களையும் அவன் கொன்றுவிட்டான் என்பது தொழுவக்குடி சமுதாய மக்களிடம் வழங்கிவரும் கதையாம்.

”ஆதி.நல்லசிவம், இது தொழுவக்குடி மக்கள் தங்கள் சமுதாய நிலையை உயர்த்திகிட உருவாக்கின கதைங்கிறார். ஆனா ஒண்ணை யோசிச்சு பாக்கணும்….” என்று நிறுத்தினார் நிலவன்.
புளிக்குழம்புக்காக உள்ளங்கையைக் குவித்தார். அதில் ஊற்றிய புளிக்குழம்பை அப்படியே உர்ரென உறிஞ்சிக் குடித்ததை ஆச்சரியமாகப் பார்த்தார் பரிமாறுபவர். மறுபடி வேண்டா வெறுப்பாக சாதத்தில் குழம்பை ஊற்றினார்.

“ஏன் அகத்துடையார்களை விட்டுகிட்டு தொழுவக்குடிகளும் பிராமணர்களுமா சேர்ந்து பெருமாள் சிலையைக் கடத்தணும்? இந்த இரண்டு சாதிகளுக்கும் இங்க என்ன உறவு இருந்திருக்கும்? ஒருவேளை இந்தப் பெருமாளை காப்பாத்துனத்துக்காகத்தான் இவுங்களுக்கு குளத்துல முதல் மரியாதை கிடைக்குதோ? என்னெல்லாம் கேள்வி வருது பாருங்க…”

1990-களில் தென் மாவட்டங்களிலெல்லாம் தலித்துகள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியபோது இந்த ஊர் மட்டும் சாதி மோதல்கள் இல்லாத அமைதிப் பூங்காவாக இருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது.

மாலை, மற்றவர்கள் கோயிலில் சாமி கும்பிடப் போய்விட்டார்கள். எனக்கோ பெரிதாக சாமி நம்பிக்கை இல்லாததுடன், இளையராஜா மெட்டு போல அந்தக் கல்வெட்டு வார்த்தைகளே எனக்குள் சுழன்று கொண்டிருந்தன.

கோயிலின் வெளிகோபுரத்தைத் தாண்டி, அசிரத்தையாக கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன். நேற்றைய மழை இன்று விட்டிருந்தாலும் சிறு தூறல் இருக்கத்தான் செய்தது.

அந்தக் குளத்தில் நீர் நிரம்பி இருந்தது.

அதனையொட்டி இருந்த கல்மண்டபத்தில் நியான் விளக்கில் சங்கும் சக்கரமும் நாமமும் போட்டு ஓம் நமோ நாராயணா என்று வைத்திருந்தார்கள். அங்கிருந்து கோயிலுக்கான பாதையில் போடப்பட்ட ஆற்று மணல் ஈரமாக இருந்தது.

இரவு மெதுவாக மேலெழ ஆரம்பித்திருந்தது. நான் எத்தனை நேரம் இருந்தேனோ தெரியவில்லை. மண்டபத்தில் வந்து கொண்டிருந்த ‘சில்’ காற்றில் தூங்கி விட்டிருந்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

“என்னாதிது ஏந்துங்கோ ஏந்திருங்கோ” என்ற குரல் கேட்டு எழுந்தேன். எதிரே ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். முகத்தில் முதுமையின் வரிகள்- சுருக்கமா தழும்பா என்று சொல்ல முடியாத சில வரிகள். ஆனால் அவை அந்த முகத்தை விகாரப்படுத்தாமல் அழகாக்குவதை உணர்ந்தேன். அந்தக் கண்களில் ஒரு தளர்ச்சி இருந்தது. உடலிலும் ஒரு சோர்வு… கைகளில் மடித்த வாழை இலையில் பிரசாதம் இருப்பது தெரிந்தது. “என்ன பிரானாழ்வார் மண்டபத்திலேயே தூங்கிண்டிருக்கேள்… உள்ளே போய் பெருமாள சேவிக்கலை?”

“இல்லை சாமி நம்பிக்கை பெரிசா இல்லை” என்றவன் அந்தப் பெயர் என் பிரக்ஞையைத் தாக்க “ஆமா மண்டபத்துக்கு என்ன பெயர் சொன்னீங்க சாமி” என்றேன்

பிரானாழ்வார் மண்டபம்” என்றார் அவர், “ரொம்ப பேருக்குத் தெரியாது… ‘திருக்குடியடிப்பொடி பிரானாழ்வான் மண்டபம்’ அப்படீன்னு சொல்லுவா.. .ம்ஹூம் இன்னும் எத்தனை நாளோ எம்பெருமானே..”

“என்ன எத்தனை நாளோ…”

”இல்லை… லோகத்துல சமஸ்த மனுஷாளும் குரோதங்கிற விஷம் போய் உண்மையான அமுதம் அவா அவா மனசுல பொங்கிறது வரைக்கும் சுத்திண்டு இருன்னுட்டானே அவன். அவன் மனசுல எப்ப இரக்கம் வருமோ..” இப்போது அவர் கண்கள் விண்ணகர விமானத்தை நோக்கிச் சென்றது.

கொஞ்சம் லூஸோ என்று தோன்றியது, இந்த நேரத்தில் இங்கே இதனிடம் தனியாக மாட்டிவிட்டோமோ என்கிற அச்சமும் வந்தது. கூடவே ஒரு மரியாதையையும் மன அமைதியையும் என்னால் உணர முடிந்தது.

“சரி சாமி இப்ப ஒரு பேரு சொன்னீங்களே”

“திருக்குடியடிப்பொடி பிரானாழ்வான் மண்டபம்”

”எப்படி இந்த பேரு வந்தது சாமி? ஏதோ தொண்டரடிப்பொடியாழ்வார் பேரு போல இருக்கு?”

”தொண்டரடிப்பொடி ஆழ்வார் இல்லை. அவருக்கு ரொம்ப காலம் பின்னாடி நடந்த கதை… கேட்குறேளா…”

அவர் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த பெயர் வந்த கதை. நேரம் போவதே தெரியாமல் நான் கேட்க ஆரம்பித்தேன்.

“…அவா கல்லை எறிய எறிய அவர் நாராயணன் பெயரையே சொல்லிண்டிருந்தாராம். அவரோட குருவான திருமலையாப்பிள்ளையை வெளியே கொண்டுபோய் கொல்லப் போயிருக்கா… அப்ப ஐதீகம் என்னன்னா… பெரிய திருவடி அங்கே பிரசன்னமானாராம்… அவாளெல்லாம் திருமலையாப்பிள்ளையை அப்படியே விட்டுட்டு பயந்து ஓடிட்டாளாம். ஆனா பிரானய்யங்காரை கல்லாலயே அடிச்சுக்கொன்னுட்டா… அன்னைக்கு பட்டர், பூஜைக்காக நம்பியைப் போய் பார்த்தப்ப அங்கே அவருக்கு இவா எங்கெல்லாம் அவரைக் கல்லால அடிச்சாளோ அங்கெல்லாம் காயமாம். அது போக திருமலையாப்பிள்ளையைக் கட்டினது போலவே அவரோட மேனியெல்லாம் கயிறு தடம் காயமா இருந்துதாம்.

எல்லாரும் அதிர்ந்துட்டா. அச்சுத ராமராயருக்கு சொல்லி அனுப்பியிருக்கா. அங்கே அவரோட ஏக சீமந்த புத்திரன் கையை காலை இழுத்துண்டு கிடக்கிறானாம். எல்லோரும் திருமலையாப்பிள்ளை கால்லயே போய் சரணாகதின்னு விழுந்துட்டா.

அவர் ஒண்ணும் பேசலையாம் நேரே வந்தார். பிரானய்யங்கார் தேகத்தைத் தூக்கிண்டு நேரே ஒண்ணும் ஆரண்டையும் பேசாம பெருமாள் கிட்டயே போனாராம். போய் எட்டுப் பாட்டு பாடினாராம். “அஷ்ட காதை”ன்னு பேரு. இப்ப அந்தக் கிரந்தமே எங்கேருக்குன்னு தெரியலை… பொக்கிஷங்களை இழக்கிறதும் மறக்கிறதும் நமக்கொண்ணும் புதுசில்லையே… ஹெ ஹெ… ஆங்… அப்ப என்னாச்சு.. .உடனே ஒரு பெரிய மழை பெஞ்சதாம்.

கூடவே அசரீரி கேட்டதாம் “புஷ்கரணியில இருக்கிறது அமிர்தமேதான். இப்ப பிரானய்யங்காரோட தேகத்தோட திருமலையாப்பிள்ளை அந்தக் குளத்துக்குப் போகட்டும் அப்படீன்னு கேட்டுதாம். அப்படியே திருமலையாப்பிள்ளை, பிரானய்யங்கார் தேகத்தை எடுத்துண்டு போனார். குளத்துல இறங்கவும், இதுவரை நிரம்பவே செய்யாத குளம் ரொம்பிடுத்தாம். அதுவும் அமிர்தம். அது மேலே பட்டதுமே பிரானய்யங்கார் எழுந்துட்டாராம். திரும்பவும் ஒரு அசரீரி கேட்டுச்சாம். “இதில ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாசம் முதல் நாள் திருமலையாப்பிள்ளையும் அவரோட குலத்தினரும் இறங்கின பிறகுதான் வேதியர்கள் இறங்கணும்.”

வழக்கான ஸ்தல புராணம். இங்கே எப்படியோ வழக்கொழிந்து இந்தக் கிழத்துக்கு மட்டும் தெரிந்திருக்கிறது போலும். ஏதோ ஒரு வரலாற்றுக் கரு… முதலில் இருந்த சுவாரசியம் குறைந்து கொண்டே வந்து வழக்கம்போல கருடன் பெருமாள் அசரீரி வருகிற விஷயம் போலெல்லாம் வந்ததும், பெருமாள் வந்தாரோ இல்லையோ, போன தூக்கம் எனக்கு ஓடி வந்து விட்டது. கொட்டாவியை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். அவர் என்னுடைய அசிரத்தையின்மையை வகை வைக்காமல் தொடர்ந்தார்,

“அச்சுத ராமராயர் தன்னோட பிள்ளையையும் இங்க எடுத்துண்டு வந்தாராம். திருமலையாப்பிள்ளை கைல கொடுக்க அவர் அவனைத் தன் கையாலயே தூக்கி குளத்து நீரில் ஸ்நானம் செய்விச்சாராம். உடனே சரியாயிடுத்தாம். அச்சுத ராமராயர் இனி என்னென்னைக்கும் நிக்ருஷ்ட ஜந்மத்தால் வரும் தோஷம் மறுவலிடாதபடி எல்லாரும் இங்கே ஸ்நானம் செய்ய ஏதுவா நிலமெல்லாம் விட்டு வெச்சார்”

அந்த வார்த்தைகள் என்னை மீண்டும் தாக்கி என் தூக்கக் கலக்கத்தை அடியோடு நீக்கின.. அதென்ன நிக்ருஷ்ட ஜந்மம்? தாழ்ந்த சாதியா? கேட்டுவிட்டேன்.

nectar5அவர் சிரித்தார். “இல்லை. இது சாதாரண வைணவ பரிபாஷைதான்… சாதி கர்வம்தான் அது. தான் உயர்ந்த சாதியில் பிறந்தவன் அப்படீன்னு நெனைக்கிறது… சரி இதோ இந்தத் தூண் சிற்பத்தைப் பாருங்க… இது எம்மனார் திருமலையாப்பிள்ளை என்கிற திருக்குடியாழ்வார்.. இங்க கொஞ்சம் தள்ளி வந்து பாத்தேள்னா… இந்தத் தூண்லே… இதுதான் பிரானாழ்வான் என்றார்…”

நியான் வெளிச்சம் சிவப்பு நீலமெல்லாம் கலந்து அடிக்க நான் தூண்களின் கீழே செதுக்கப்பட்ட சிற்பங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்… திருக்குடியாழ்வான் கைக் கூப்பி நின்றார். இளம் உருவம். மேலே கருடாழ்வார் அமிர்த கலசத்துடன் நின்றார். அடுத்து பிரானாழ்வார்.

அந்தச் சிற்பத்தைப் பார்த்த என்னுள் கண் வழியே இறங்கிய அதிர்ச்சி என் உடல் முழுவதும்  கடுங்குளிராகப் பரவியது. என் இதயம் நின்று துடித்ததை நான் முழுமையாக உணர முடிந்தது.

அதில்…

அதிலிருந்த முகம்

நெற்றியிலும் முகங்களிலும் கல்லடித்த தழும்புகள் வரிவரியாக அப்படியே வடித்திருந்தான் எவனோ பெயரறியாத சிற்பி.

ஆம் தழும்பேதான். எனக்குச் சுருக்கென்றது.

தழும்புகள்தான் அவை.

முதுமையின் சுருக்கு வரிகளல்ல.

தழும்புகள்..

அப்போது அவர்

அது…

அந்தப் பிராமணர்…. அவர்தான்….

நான் நடுக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.

நியான் ஒளி தவிர்த்து இருள் முழுமையாக இருந்த அந்த மண்டபத்தில் என்னைத் தவிர யாருமின்றி ஓர் அமானுஷ்ய தனிமை என்னைச் சூழ்ந்தது.

எதிரே மண்டபத்துக்கு வருவதற்கு இருந்த அந்த ஒரே பாதையின் ஈர மணற் பரப்பில் என்னுடைய காலடித்தடங்கள் மட்டுமே இருந்தன.

46 Replies to “அமுதம் [சிறுகதை]”

  1. பிரமாதம்யா , வேரொன்னும் சொல்ல தோனலை

  2. டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘The Green Mile’ படம் போல கதையை முடித்திருக்கிறீர்கள். மிக அருமை. >> நிக்ருஷ்ட ஜந்மம் << பற்றி நல்ல விளக்கமும் கூட. வாழ்த்துகள்.

  3. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  4. Pingback: Indli.com
  5. தமிழ்-இந்து மரபில் பிராமணர்களோ, பிற சாதியினரோ எதிரிகளைக்கூட கல்லால் அடித்துக் கொன்றதாகக் கருதுவதற்கு எந்த இலக்கியச் சான்றும் கிட்டுவதில்லை. மணிமேகலையில் மட்டும், ஆபுத்திரன் விரட்டப்படும்போது அவன்மீது கற்கள் எறியப்பட்டதாகக் குறிப்பு இருந்தாலும், அதன் காரணமாக அவனுக்குக் காயம் ஏதும் ஏற்பட்டதாகச் சொல்லப்படவில்லை. உண்மை அப்படி இருக்க, செமித்திய மரபான கல்லால் அடித்துக் கொல்லும் முறையைப் பயன்படுத்தி, பிரானய்யங்காரைப் பிற பிராமணர்கள் கொல்வது போல இக்கதையில் சித்திரிக்கப்படுவது ஏற்கக்கூடியது அல்ல; இது முற்றிலுமே கற்பனைப் புதினமாக இருக்கும் பட்சத்தில்கூட.

  6. // செமித்திய மரபான கல்லால் அடித்துக் கொல்லும் முறையைப் பயன்படுத்தி, பிரானய்யங்காரைப் பிற பிராமணர்கள் கொல்வது போல இக்கதையில் சித்திரிக்கப்படுவது ஏற்கக்கூடியது அல்ல; இது முற்றிலுமே கற்பனைப் புதினமாக இருக்கும் பட்சத்தில்கூட. //

    கட்டுரையின் நோக்கத்தைப் புரிந்துகொண்டேன். ஆனால் எனக்கும் ரங்கதுரை அவர்கள் கூறியுள்ள ஆட்சேபம் தான். ஒரு அந்தணரை மற்ற அந்தணர்கள் கூட்டமாகக் கூடிக் கல்லால் அடிக்கப்பட்டதாக எழுதியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய hyperbole என்றே வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். கற்பனையாக எழுதினாலும் வரலாற்று முன்னோடி இல்லாமல் இப்படி எழுதியிருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. இதைச் சொன்னதற்கு மனம் புண்பட்டால் வருந்துகிறேன்.

  7. அருமையான கதை. மேன்மையான கருத்து.

  8. //மனம் புண்பட்டால் வருந்துகிறேன்.//

    அதுவே இங்கும். இக்கதையில் அந்த கல்லால் அடித்தல் என்பது ஒரு கற்பனை புனைவு மட்டுமே. கதையின் புனைவுத்தன்மையை அதிகரிக்க செய்யப்பட்ட உத்தி. கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி சுற்றி வர வைத்த போது சன் ஸ்ட்ரோக்கில் இறந்துவிட்டார் என்று கூட ஆக்கியிருக்கலாம்தான்.

  9. //ஒரு அந்தணரை மற்ற அந்தணர்கள் கூட்டமாகக் கூடிக் கல்லால் அடிக்கப்பட்டதாக எழுதியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய hyperbole என்றே வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.//

    இங்கே வருத்தப்படும் வைணவர் பெருமக்கள், பொய்யன் கமால்ஹாசன் தன் தஸாவதாரப் புனைவிலே ’சைவ வெறியர்’ சிலர் ராமானுஜதாஸன் என்ற கற்பனைப்பாத்திரத்தைக் கல்லால் அடித்துக் கொன்றதாய்க் காட்டியபோதில் ஏதாவது எதிர்த்து எழுதியிருக்கிறார்களா என்றும் அறிய அவா.

  10. //இக்கதையில் அந்த கல்லால் அடித்தல் என்பது ஒரு கற்பனை புனைவு மட்டுமே. கதையின் புனைவுத்தன்மையை அதிகரிக்க செய்யப்பட்ட உத்தி – ஆலந்தூர் மள்ளன்//

    இதைத்தான் நான் நீண்ட காலமாகக் குறிப்பிட்டு வருகிறேன்.
    படைப்பாளி மரபை அறிந்து மரபை மீறலாம். ஆனால் மரபைச் சிதைத்தல் தகாது. மரபை மீறுகையில் அதில் ஒரு ஒத்திசைவு இருக்கும். மரபைச் சிதைத்தால் அது ஒவ்வாமல் போகும்.

    மரபை அறிதலுக்கு அவரவர் மரபில் ஆழ்ந்த தேர்ச்சி இருக்க வேண்டும். அப்போதுதான் மரபை மீறுதல் வசப்படும்.

    எது மரபை மீறுதல் எது மரபைச் சிதைத்தல் என்று முடிவு செய்யும் உரிமையும் தமக்கு உண்டு எனச் சில படைப்பாளிகள் வாதாடுகிறார்கள். இது வேடிக்கையாக உள்ளது.

    கடந்த காலத்தில் நமது ராஜநீதியிலும் சமூகக் கட்டுப்பாட்டிலும் பல கொடுமையான தண்டனை முறைகள் இருந்துள்ளன. ஆனால் கல்லால் அடித்துக் கொல்லுதல் இல்லை. மேலும் கதையில் வரும் சம்பவத்திற்கு அவ்வாறான கொடிய தண்டனைகள் விதிக்கப்பட்டதில்லை. சமூக அமைப்புகளுக்கு அதற்கான அதிகாரமும் இருந்ததில்லை. கதாசிரியர் மரபைச் சிதைக்காமல் வேறு ஏதேனும் உத்தியைக் கையாண்டிருக்கலாம். ஆனால் கதாசிரியரின் படைப்பாற்றல் அபாரமாயிருப்பதை மறுக்கவியலாது. இவர் தேர்ந்துகொள்ளும் கருப் பொருளும் அதைச் சொல்லும் விதமும் மிகச் சிறப்பாக உள்ளன.
    இப்போதெல்லாம் எனக்கு எல்லாவற்றையும் படிக்க, முக்கியமாகக் கதைகளைப் படிக்க அவகாசம் இல்லை. ஆனால் தற்செயலாக மறுமொழி அட்டவணையைப் பார்த்தபின் ஆர்வம் பெற்றுப் படித்தேன். உடனே இவர் எழுதியுள்ள மற்ற கதைகளயும் படிக்க முடிவு செய்தேன். திருப்பலியைப் படித்தேன். மிகவும் சிறப்பான படைப்பு. இவர் யார் என அறிய ஆவலாக இருக்கிறேன். இவர் மேலும் சில சிறுகதைகள் எழுதி அதன் பின் ஒரு தொகுப்பாக வெளியிடலாம். இவர் தமது சிறுகதைகளை அச்சில் வெளிவரும் பத்திரிகைகளுக்கும் அனுப்பலாம். ரொம்பவும் மெலோடிரமாடிக்காக இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது (திருப்பலியின் முடிவைப்போல இல்லாமல்).
    எழுத்து நன்கு கைவரப் பெற்றுள்ள ஆலந்தூர் மள்ளன் நமது கவனத்திற்குரியவர்.
    -மலர்மன்னன்
    .

  11. தீவண்ணன்,

    // இங்கே வருத்தப்படும் வைணவர் பெருமக்கள், பொய்யன் கமால்ஹாசன் தன் தஸாவதாரப் புனைவிலே ’சைவ வெறியர்’ சிலர் ராமானுஜதாஸன் என்ற கற்பனைப்பாத்திரத்தைக் கல்லால் அடித்துக் கொன்றதாய்க் காட்டியபோதில் ஏதாவது எதிர்த்து எழுதியிருக்கிறார்களா என்றும் அறிய அவா. //

    நான் அத்திரைப்படத்தைப் பார்த்ததில்லை.

    ஆட்சேபம் வைணவம் பற்றியதல்ல. சிதம்பரத்தில் தீட்சிதர்கள் இப்படிச் செய்தனர் என்று கற்பனையாக எழுதியிருந்தாலும் ஆட்செபித்திருப்பேன்.

  12. மதிப்பிற்குரிய திரு.மலர்மன்னன்.

    தங்கள் பார்வைக்கு நன்றி. தாங்கள் சொன்னவற்றை கவனத்தில் கொள்கிறேன். திருப்பலியை பொறுத்தவரையில் அதில் இறுதியில் சொல்லப்பட்டுள்ள விசயம் புனைவல்ல. நடந்த உண்மை. அது நடந்ததாக சொல்லப்பட்ட இடம் மட்டுமே புனைவு, அது நடந்தது மற்றொரு சிவன் கோவில் முன்பு.

    வணக்கத்துடன்

    ஆலந்தூர் மள்ளன்

  13. தீவண்ணன்,

    கமல்ஹாசன் ஒரு முக்கால் துலுக்கன். அவனைப் போன்ற இந்து துவேஷிகள் அப்படித்தான் படம் எடுப்பார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை. அவன் இந்துக்களை உயர்வாகச் சொல்லி ஏதாவது படம் எடுத்தால்தான் நாம் சந்தேகப்பட வேண்டும். கமலையும், ஆலந்தூர் மள்ளரையும் எக்காரணம் கொண்டும் ஒப்பிடாதீர்கள்.

  14. அற்புதமான படைப்பு.
    //பழமையான ஊர் என்பதற்கு அந்தக் கோயில் கோபுரம் மட்டுமே சாட்சியாக இருந்தது. ஆனால் கோயில் சுவர்களில் ஷகீலாவின் அனுபவங்களும், வியாதிஸ்தர்களை சொஸ்தப்படுத்தும் கன்வென்ஷன்களும், புரட்சி அண்ணன், புரட்சி அக்கா, புரட்சி அய்யா இன்னபிறப் புரட்சியினர் அனைவரும் அவரவர் சின்னங்களும் ஒட்டியும் தொங்கியும் நிரப்பியிருக்க, அவர்களை சமதர்ம சமபாவ அத்வைதானுபவ பாவனையுடன் ஒரு கோமாதா இலாவகமாகக் கிழித்து உண்டு கொண்டிருந்தாள்.//
    //ஏற்கனவே ஆலய அதிகாரிகளுடன் அவர் போட்ட சண்டையில்தான் ட்யூப் லைட்டையும் சுவிட்ச் போர்டையும் கழற்றி வைத்திருந்தார்கள்.//
    உண்மையான வரிகள். பல கோவில்களில் இந்த நிலைதான்.

  15. ஆலந்தூர் மள்ளன் அவர்களே

    தொடர்ந்து சிக்சர் அடிக்கிறீர்கள். நான் முதலிலேயே குறிப்பிட்டபடி வாசர்களிடம் உணர்ச்சியைத் தூண்டாமல் , அவர்கள் அறிவோடும் , மனதோடும் தொடர்பு கொண்டு இயல்பான உரையாடல் பாணியைக் கையாண்டு அசத்துகிறீர்கள். உண்மையைச் சொல்லப் போனால் கதைக் கருவை விட உங்கள் பாணி அதிக ரன் எடுத்து விட்டது (ஐ பி எல் வாசனை ஹி ஹி! ):-) அடிக்கடி எழுதவும்.

  16. கதையாகவே தோன்றவில்லை. இந்த ஊர் எந்த ஊர்? போய் இதற்காகவே அந்த பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் போல உள்ளது. நன்றி!
    பொதுவாகவே கோவில் தரிசனங்கள், மற்றும் கூட்டமான திருவிழாக்களில் கலந்து கொள்ள தயக்கமாக இருக்கும். மிகவும் கூட்டம் இல்லாத நாள்களில் சென்று தரிசனம் செய்ய ஆசை! நன்றி.

  17. //திருப்பலியை பொறுத்தவரையில் அதில் இறுதியில் சொல்லப்பட்டுள்ள விசயம் புனைவல்ல.- ஆலந்தூர் மள்ளன்//

    ஒப்புக்கொள்கிறேன். வாழ்க்கையில் சில சம்பவங்கள் பிறரால் நம்ப முடியாத அளவுக்குக் கற்பனைபோலவே அமைந்து விடுகின்றன. எனது ஆன்மிக வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் சில அனுபவங்கள் வெளியில் சொன்னால் நம்பக் கூடியதாகவே இருப்பதில்லை. ஆனால் உடனிருப்பவர்
    கள் பார்த்து வியப்பதுண்டு. வாழ்க்கையே ஓர் ஆச்சரியந்தான்.
    தொடர்ந்து எழுதுங்கள் என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொன்றையும் சாவகாசமாக நேரம் எடுத்துக்கொண்டு நன்கு புடம் போட்டு வெளிப் படுத்துங்கள். அதற்கான பக்குவம் உங்களுக்கு உள்ளது..கோக்கப் ப்டவிருக்கும் உங்களுடைய மணி மாலையில் ஒரு மணியும் சோடை போய்விடலாகாது.
    உங்களை உங்கள் எழுத்தால் அறிய முடிந்தாலும் ஸ்தூலமாயும் அறிய ஆவலாய் உள்ளேன்.
    -மலர்மன்னன்

  18. மிகவும் நன்றாக எழுதப்பட்ட புனைவு. கதை என்பதை மீறிய தெய்வீக உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கிறது. குழு மனப்பான்மை பிராமணர்களுக்கு இருந்திராது என்ற வாதம் ஏற்புடையது அன்று.

    தனி ஒரு மனிதனுக்கு இருக்கும் நல்லுணர்ச்சி, குழுவில் இருக்கும்போது இருப்பதில்லை.

    இலக்கியத்தரம் வாய்ந்த படைப்பு. வாழ்த்துக்கள். நன்றியும் கூட.

  19. பலமுறை படித்துவிட்டேன், படிக்க படிக்க சிரிப்பும் சிந்தனையும் வருகின்றது. உங்களிடமிருந்து பல கதைகள் வரவேண்டும்.

    சோமசுந்தரம்

  20. இங்கே வருத்தப்படும் வைணவர் பெருமக்கள், பொய்யன் கமால்ஹாசன் தன் தஸாவதாரப் புனைவிலே ’சைவ வெறியர்’ சிலர் ராமானுஜதாஸன் என்ற கற்பனைப்பாத்திரத்தைக் கல்லால் அடித்துக் கொன்றதாய்க் காட்டியபோதில் ஏதாவது எதிர்த்து எழுதியிருக்கிறார்களா என்றும் அறிய அவா.

    ஐயா , சொன்னால் கேட்டுக் கொள்பவர்களுக்கும் மட்டுமே சொல்லமுடியும். தான் உலகிலேயே பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பேர் ( மட்டுமே) அறிஞர்களிடம் சொல்வது எருமை முன்பு மகுடி வசிப்பது போலாகும்.

  21. திரு . ஆலந்‌தூர் மள்ளன் அவர்களுக்கு,

    மிக்க நன்றி உங்கள் உழைப்பால் ஒரு ஸதல புராணம் போல ஒரு புராண கதை கிடைத்தது.

    இறந்‌த காலத்திலிருந்து இன்று வரை ஒரு இந்‌துவின் பயணம் சில நிமிழங்களில்

    தமிழ் இந்‌துவிற்கும் நன்றி ,

    ரவிசந்‌திரன்

  22. அருமையான கதை; நடையும் தெளிவு; புனைவுலகில் ஆக்கப்பூர்வமாகவும் எழுத முடியும் என்பதை காட்டியுள்ள ஆலந்தூர் மல்லனுக்கு வாழ்த்துக்கள்

    -சேக்கிழான்

  23. ஸ்ரீ மள்ளன், தங்களது மற்றைய கதைகளை நான் வாசித்துள்ளேன். ஆனால் இக்கதையை திரும்பத்திரும்ப பல முறை வாசித்தேன். கிட்டத்தட்ட அந்த கால கட்டத்துக்கு அழைத்துச்செல்லும் தங்கள் பாணி சுவை ததும்ப இருந்தது.

    இந்த சரித்ரமல்லாது திருப்பாணாழ்வார், கனகதாஸர் மற்றும் பலரது சரித்ரங்களில் மனுஷ்யன் ஸஹ மனுஷ்யனை சாரீர மற்றும் மானசீக ஹிம்ஸைக்கு உட்படுத்தியதை படிக்க நேருகிறது. அதே சமயம் நூலிழை போல் மற்றொரு பொதுவான மற்றும் முக்யமான அம்சமாக இந்த க்ரூர ஸ்வபாவம் தெய்வ சம்மதமில்லாதது மற்றும் ஆசுர ஸ்வபாவமானது என்றும் இப்படி ஹிம்சைக்குள்ளான குணசீலர்களான மனுஷ்யர்களை தெய்வமே தடுத்தாட்கொண்டு குணத்தைப் போற்றி குற்றங்களைக் களைந்து மனுஷ்ய குலத்தையே விழிப்புறச்செய்கிறது என்பதும் தெரிகிறது. ஆனால் விழிப்பிற்கு பிறகு தூக்கம் தொடர்கிறது. தங்களைப் போன்றோரின் எழுத்து அத்தூக்கத்தைக் கலைத்து விழிப்பை மீட்கும்.

    திருமலையாழ்வாரையும் பிரானாழ்வாரையும் ஆட்கொண்ட பெருமாள் தங்களுக்கு நீண்ட ஆயுராரோக்யமளிக்க இறைஞ்சுகிறேன். லோகத்தை உத்தாரணம் செய்யத்தகுந்த குணசீலர்களான மனுஷ்யர்களின் வாழ்க்கையில் மிளிரும் ஆத்ம குணங்களான தயை, பரோபகாரம், சௌலப்யம், ஸஹிஷ்ணுதை போன்ற பரிணாமங்களை விவரிக்கும் வண்ணமாகவும் தங்கள் எழுத்து விஸ்தரிக்க வேண்டும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  24. திருப்பாணாழ்வார் மீது லோகசாரங்கர் கல்லெறிந்தார் என்றும் அந்த கல்லடி பெருமாள் மீது இருந்ததை பின்னர் பார்த்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆலந்தூர் மல்லன் அதை வைத்துதான் எழுதினாரோ?

  25. /// பிரானாழ்வார் ……..
    அதில்…
    அதிலிருந்த முகம் ……
    அது…
    அந்தப் பிராமணர்…. அவர்தான்…. ////

    கல்கி ….
    அவரிடம் இருந்த நடை … கதை சொல்லும் பாங்கு …
    வரலாற்றின் பழைய பக்கங்களைப் புரட்டும் சொல்லாடல், விவரணை …

    அதே நடை, பாங்கு, சொல்லாடல், விவரணை …

    ஆலந்தூர் மள்ளன் …

    அவர்தானோ இவர் ?

    வாழ்த்துக்கள், மள்ளன்

    அமுதம் சிறுகதை
    சிறுகதை அமுதம் ……

  26. பாரட்டிய விமர்சித்த அனைவருக்கும் நன்றி. நான் எழுத்தாளனல்லன். நிச்சயமாக சிறுகதை எழுத்தாளனல்லவே அல்லன். சுற்றி நடக்கும் விஷயங்களை கண்டு மனம் பதைபதைத்து எப்படியாவது பிறருக்கு அவற்றை சொல்ல நினைத்து எழுதுபவன். ஏதோ இந்த கதை தேறிவிட்டது போலும். குருவி அமர பனம் பழம் விழுந்த கதைதான். இக்கதையை எழுத என்னை ஊக்குவித்த விஷயம் எது என சிந்திக்கிறேன். என் உடன்பிறவா சகோதரர் ஒருவர் தென் தமிழ்நாட்டு சாதிக்கலவரங்களை குறித்து ஒரு வைணவப் பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘திருப்பாணாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் ஒரே கோவிலில் இருப்பதை தெரிந்தால்’ கள்ளர் சமுதாயத்தினரும் தலித்துகளும் சண்டை போடுவார்களா? என கேட்டார். பிறகு வைணவ குரு பரம்பரை கதைகளில் ஆச்சாரியரான திருவாய்மொழிப் பிள்ளை புலையர் சமுதாயத்தைச் சேர்ந்த விளாஞ்சோலைப் பிள்ளையிடம் ரகஸ்ய கிரந்தங்களைக் கற்று ஞானம் பெற்றார் என்றும் அவரது இறுதிச் சடங்குகளையும் செய்தார் என்றும் படித்ததுண்டு. ஸ்ரீ ரங்க மன்னார் விக்கிரகத்தை முகமதிய படையெடுப்பிலிருந்து காப்பாற்றியவர் இந்த விளாஞ்சோலைப் பிள்ளைதான். இவையெல்லாம் மனதில் அலை மோதியதால் எழுந்ததே இக்கதை. இக்கதை சொல்லும் கோவில், கல்வெட்டு ஆகியவை கற்பனையானவை. ஆனால் எல்லா கோவில்களிலும் இத்தகைய உண்மைகள் எப்போதும் ஸனாதனமாக வாழத்தான் செய்கின்றன.

  27. ஆலந்தூர் மள்ளன் அற்புதமாக வடித்து தந்துள்ளார். நமது சைவ நாயன்மார்களும், வைணவ பெரியார்களும் எல்லா சாதிகளிலிருந்தும் வந்தவர்களே ஆகும்.

    சைவமோ, வைணவமோ ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் சொந்தமல்ல.

    சைவ வைணவ கோயில்களில் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமையை கொடுத்தால் தான் , சாதிகள் ஒழியும். இதற்கு முன் மாதிரியாக திருப்பதி போன்ற கோயில்களில் இந்த சீர்திருத்தம் ஆரம்பித்தால் தான் மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படும். இந்த நிலை ஏற்பட்டால் , சாதிவாரியான இடஒதுக்கீடும் மரணம் அடையும்.

    அரசில் கலப்பு திருமணம் செய்துகொண்டோருக்கே எல்லா வேலைகளும் என்று அறிவித்தால் இந்த நாட்டில் சாதியே காணாமல் போய்விடும்.

    இது போன்ற நல்ல விஷயங்கள் நடக்க, அரசியல் வாதிகள் அனுமதிக்க மாட்டார்கள்.

  28. அற்புதம், அற்புதம் ஆலந்தூர் மள்ளன் அவர்களே. நீர் வாழ்க உம் குலம் வாழ்க. உங்கள் கதைகளைப் பிரச்சாரக் கதைகள் என்று வகைப் படுத்துவது துரதிருஷ்டவசமானதே. நிச்சயம் பிரச்சாரச் சாயலக்ளையெல்லாம் தாண்டிய அழகான கதைகளும் கூட. தமிழ் ஹிந்துவுக்குக் கிடைத்த நல்லதொரு எழுதுத்துக்காரர். தொடர்ந்து எழுதுங்கள்.

    விஸ்வாமித்ரா

  29. இராமானுஜருக்கும் சோழ அரசனுக்குமிடையே நிலவிய பகைமை குறித்து ஆராய வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதற்கு, அண்மையில் நிகழ்ந்த இரு நிகழ்வுகளே காரணமாக அமைந்தன. அவற்றுள்
    முதல் நிகழ்வு, பரவலாகப் பேசப்பட்ட, ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற, சிதம்பரம் கோவிந்தராசப் பெருமாள் சிற்பம் கடலில் எறியப்பட்டது தொடர்பான கலையுலகச் சித்திரிப்பு ஆகும்.

    Yes. This episode was shown in the Movie “Dasawatharam”… that the Chidambaram Govindaraja-perumal MOOLAWAR was thrown into the Sea.. is PURELY A FICTION.

    Only the Uthsavar was thrown into the sea at night… by the surreptitious stealing… on the secret arrangements by the Chozha King.

    When the Archakas found at the next morning.. that the Vigraha was missing.. they rushed to Thirupathi.. where Ramanuja was camping then.

    Ramanuja got this shocking news in his dreams as a message from Garudalwar.. even before the arrival of Chidambaram archakas. So Ramanuja sent the Royal warriors in the disguise of
    merchants to Chozha Kingdom and secretly picked up the Uthsava vigraha lying under the sea,…

    ..and installed it ar Thirupathi.. after constructing a new Govindaraja Temple there. Then the Moolavar was newly made and installed by Ramanuja… while the Uthsavar vigraham.. even now
    existing at Thirupathi.. was from Chidambaram Govindaraja Temple.

    Subsequently after the death of the cruel Kirumi-kanta chozha who died of Cancer-decease…

    ..his successor son repeanted for his father’s misdeeds, apologised to Ramanuja and invited him to render the due pariharas..

    Then Ramanuja returned to Chozha Kingdom.. and got a new Govindaraja utsawar vigraham made… and installed at Chidambaram Temple.

    Thus the present status is…

    At CHIDAMBARAM Govindaraja Temple :— Moolawar is the Original as existed since Alwars periods… UTHSAVAR newly made and installed by Ramanuja.

    At THIRUPATHI Govindaraja Perumal Temple:— Uthsavar is the Original but transferred from Chidambaram…. MOOLAVAR was newly made and installed by Ramanuuja.

    – From a post from Mr.Sudhaama in forum hub

  30. திரு ஆலந்தூர் மள்ளன் அவர்களுக்கு,
    //நான் எழுத்தாளனல்லன். நிச்சயமாக சிறுகதை எழுத்தாளனல்லவே அல்லன்.//

    இது உங்களின் தன் அடக்கத்தை காட்டுகின்றது. இது போல் பல கதைகள் எழுதுங்கள்.

  31. அவர் கொல்லப்பட்டது உண்மையானால், எப்படிக் கொல்லப்பட்டார் என்பது பெரிய வித்தியாசங்களைக் காட்டிவிடாது.

    இந்து சமூகத்தின் அதிக பட்ச தண்டனை ஊர் விலக்கம் மட்டுமே என எண்ணி இருந்த நமக்கு இத்தகைய மரண தண்டனைகள் சாதிய காரணங்களுக்காக வழங்கப்பட்டன என்பது அதிர்ச்சி தரும்.

  32. Mr.Sanjay, hope you know tamil a little bit. if so, kindly read “Raamanujaarya Divya Charithai” book. Available popularly in Lifco or book stalls in Srirangam and SriPerumbudur. Half of yours is correct and half are certainly a blunder.

  33. or just visit Sriperumbudur temple or Srirangam Raamaanusar Sannidhi where it is clearly picturized the whole history of that great saint.

  34. SriLokaSaarangaMuni throwed a single stone on SriTirupaanaazhwar that too not in the mentality to kill. It was due to the former’s mistake and wrong mentality to disguise the latter.

  35. ss

    I have read books on Ramanuja & definitely no part of my post is a blunder.

    I have also seen the history of Ramanuja in Sri Perumbudur temple & not all incidents have been recorded.

  36. அருமையான கதை வேறு என்ன சொல்ல

    மணிவண்ணன்
    புதுவை

  37. வரலாற்று ரீதியில் அற்புதமான கதை. தாமதமாகப் படித்தேன்.

    //அதுவே இங்கும். இக்கதையில் அந்த கல்லால் அடித்தல் என்பது ஒரு கற்பனை புனைவு மட்டுமே. கதையின் புனைவுத்தன்மையை அதிகரிக்க செய்யப்பட்ட உத்தி.// இந்தக் கதைக்கு அப்பால் சில விஷயங்கள் கூற விரும்புகிறேன்.

    சினிமாக்களிலும் சரி, இது போன்ற கதையாசிரியர்களானாலும் சரி – புனைவை அதுவும் கொடுமையை அதிகப்படுத்தி காண்பிக்க வேண்டுமென்றால் பிராமணரை அளவிற்கு மிஞ்சிய கொடுமைக்காரர்களாக காண்பிப்பதே கற்பனையில் சிறப்பு என்று நினைத்திருக்கும் ஒரு வித மனப்பதிவு நீக்கப்படவேண்டியது. தவிர்க்கப்பட வேண்டியது.

    என்ன தான் புனைவிற்காக எழுதப்பட்டது எனிலும் பிராமணர்கள் மீது விழும் பிம்பத்தை படித்தவர்கள் மனதில் இருந்து நீண்ட காலத்திற்கு மாற்ற முடியாது. ஏற்கனவே தமிழகத்து ஜாதிக்கொடுமைக்கும், யாருக்கேனும் கக்கூஸ் வரவில்லை என்றாலும் அதற்கு பார்ப்பாரக் கொடுமை தான் காரணம் என்று மூளை சூடு ஏற்றப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தில் அதற்கு தூபம் போட்டு சாம்பிரானி காட்டப்படுவது போல புனைவுகள் பிராமணர்களுக்கு எதிராகவே அமைக்கப்படுமானால் அது கண்டனத்திற்குரியது என்றே நான் கருதுகிறேன்.

    நீண்ட காலமாகவே தமிழ் சினிமாவில் பிராமணர்களை ஜாதிக்கொடுமைக் காரர்களாக சித்தரிக்கும் டெம்ப்ளேட் கதைகளை பார்த்திருப்போம். எத்தனையோ ஜாதிக்கொடுமைச் சம்பவங்கள் ஜாதி வெறியர்கள், இஸ்லாம் மத வெறியர்கள் என்று சமூக வெறிகள் ஆயிரம் இருப்பினும் எளிதில் அனைவரும் பிராமணரை ஒரு டெம்ப்ளேட் கதாபாத்திரப் புனைவாக காட்டி விடுகிறார்கள். இதனால் அடுத்தடுத்த தலைமுறை மக்கள் மனதிலும் ஒருவித மனப்பதிவு பிராமணர்களுக்கெதிராக இயல்பிற்கு மீறியே விதைக்கப்படுகிறது என்பதை யாரும் உணர்வாரில்லை. புனைவாக இருந்தாலும் அதையே செய்யும். இது ஒரு சமூகத்திற்கு இழைக்கப்படும் துரோகம். கொடுமை. இது வருத்ததிற்குரியது.

  38. //1990-களில் தென் மாவட்டங்களிலெல்லாம் தலித்துகள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியபோது// ஜாதியைக் குறிப்பிடும் இடமெல்லாம் பிராமணரை ‘பிராமணர்’ என்று குறிப்பிட முடிகிறது. ஆனால் மற்றவர்களை அவரவர் ஜாதியைச் சொல்லி குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக ‘ஆதிக்க சாதியினர்’ என்று கூறிவிடுவது ஏனோ? அவர்கள் ஜாதிகளுக்கு மட்டும் பெயர் கிடையாதா? அல்லது வழக்கம் போல பிராமணன் தான் இளிச்சவாயன் , ஜாதியக் குறிப்பிட்டு எழுதினாலும் ஒன்றும் சொல்லமாட்டான் என்கிற பொது புத்தியா என்று தெரியவில்லை.

    இந்தக் கதையில் மட்டுமல்ல தமிழ் ஹிந்துவின்

    https://tamilhindu.com/2011/05/from-cycle-to-sanskrit-hindutva-space-for-dalit-rights/
    இந்தக் கட்டுரையிலும் இதே பானியில் தான் பிறருடைய ஜாதி குறிப்பிடப்பட்டது. அதற்கு நான் எழுதிய பின்னூட்டமும் அங்கேயே இருக்கிறது.

    //மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார். இதைக் கண்டு வெகுண்ட அங்கு வாழும் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் அவரைத் தடுத்து நிறுத்தி // அந்த ஆதிக்க ஜாதியினர் யார் என்று வெளிப்படையாக எழுதலாமே!……… ….. …

    என்று எழுதியிருந்தேன். ‘ஆதிக்க ஜாதியினர்’ என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர்கள் யாரென்று யாரேனும் விளக்குங்களேன்!

  39. மனுஸ்மிர்தி விடுத்து மனிதத்தை பின்பற்றினால் தான் இந்து மதம் வாழும் இல்லை கிருத்துவம் இஸ்லாம் என மாறும்

    மிக வருத்தங்களுடன்
    சின்னவன்

  40. அன்புள்ள சின்னவன் ,

    மனு ஸ்ம்ருதியை யாரும் படித்ததில்லை. அது இந்து மத நூல் இல்லை. வேதங்களும் உபநிஷதங்களும், திருவாசகம், தேவாரம், திருப்புகழ், அபிராமி அந்தாதி, திருக்குறள் மற்றும் நாலாயிரம் திவ்வியப்பிரபந்தம் ஆகியவைமட்டுமே நமது மத நூல்கள் ஆகும். இனி எதிர்காலத்திலும் , புதிய மகான்கள் தோன்றி பல புதிய நூல்கள் எழுதுவார்கள். எனவே, மனு ஸ்ம்ருதியை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டாம்.

    சிலர் இஸ்லாத்துக்கும் , சிலர் கிறித்துவத்துக்கும் போகிறார்கள் என்பது உங்கள் கவலையாக இருந்தால், அதற்கு மனுஸ்ம்ருதி காரணமல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். நமது திருக்கோயில்களில் பார்ப்பனர்களே , ( திருநீறு அணியும் பார்ப்பான், அல்லது திருமண் அணியும் பார்ப்பான்) பூசை செய்து வந்தது அந்தக்காலம். பார்ப்பனர்களில் பலரும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நிமித்தம் வெளிநாட்டிற்கு சென்று விட்டனர். எங்களூர் பூசாரி அய்யர் பாரிஸ் ( பிரான்சு )கோயிலுக்கு சென்று விட்டார்.

    திரு முனா கானா அவர்கள் முதல் அமைச்சர் பதவியில் இருந்தபோது , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பணி ஆற்றவேண்டும் என்று சொல்லி , அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்தும் , பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று வரை பணியில் நியமனம் கொடுக்கப்படவில்லை. ஏன் ? போலிப்பகுத்தறிவு பேசும் அவர், பேச்சில் ஒன்றும், செயலில் ஒன்றுமாக இருக்கிறார். எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமனம் பெறாததற்கு, மனு ஸ்ம்ருதி காரணம் அல்ல. நம்மூரில் இருக்கும் போலிகளான கருணா, மற்றும் வீரமணி ஆழ்வார் போன்றோரே காரணம்.

    இந்து மதம் ஒன்றுதான் உலகிலேயே, புதியதை வரவேற்கும், புதியதை ஆராயும் பக்குவம் உள்ளது. நமது மதத்தில், நமக்கு எவனும் மதத்தலைவன் இல்லை. நமக்கு எந்த எல்லைகளும் இல்லை. நாராயண குரு கோயில் கட்டியது போல, நீங்களும் கோயில் கட்டுங்கள். கோயில்களில் பார்ப்பன பூசாரி கிடைக்கவில்லையே என்று ஏங்காதீர்கள். நீங்களே பூசை செய்யுங்கள்.

    பூசை செய்ய ஒரே முறைதான் என்ற , கட்டாயம் நம் மதத்தில் இல்லை. உங்களுக்கு தெரிந்த முறையில் பூசை செய்யுங்கள். களிமண்ணில் செய்தாலும் பிள்ளையார் தாம், அரிசிமாவில் செய்தாலும் பிள்ளையார் தான், சந்தனமரம், வெள்ளெருக்கு, தாமிரம், ஸ்படிகம், வெள்ளி, தங்கம், பிளாட்டினம் என்று எதில் செய்யப்பட்டதானாலும் பிள்ளையார் பிள்ளையார் தான்.

    ஒரு சொட்டு தண்ணீரையோ, ஒரு துகள் மணலையோ, ஒரு பச்சிலையையோ, நாம் அன்புடன் படைக்கும் எதுவாயினும் இறைவன் ஏற்கிறார் என்பதே உண்மை. இஸ்லாத்துக்கும், கிறித்துவத்துக்கும் இன்னபிற ஆபிரகாமிய மதங்களை நோக்கி சென்றவர்கள் , தங்கள் தாய் மதத்துக்கு திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    இந்து மதம் முழுவதுமே பகுத்தறிவின்பாற்பட்டது ஆகும். மத மாற்றத்துக்கு, போலிபகுத்தறிவு வாதிகளான சிலர் உடந்தையாக உள்ளனர். காலம் மாறும்.உங்களுக்கு எவ்வளவோ ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

  41. அன்புடன் கதிரவன் அவர்களுக்கு

    எத்தனை நாள் தான் பார்பனன் என்று சொல்லி திரியபோகிரோமோ தெரியவில்லை. முதலில் நம்மில் உள்ள பாகுபாடுகளை சரி செய்யலாம்.
    // மனுஸ்ம்ருதி காரணமல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். நமது திருக்கோயில்களில் பார்ப்பனர்களே//
    அவர்கள் எப்போதோ விதையை தூவி விட்டு இப்போது அவர்களுடைய வேலையையே பார்த்து கொண்டிருகிறார்கள். அவர்களை குறை கூறுவதை விடுங்கள். பெரும்பாலனோர் தாய் மதம் திரும்புகின்றனர், மகிழ்ச்சி …
    // காலம் மாறும்.உங்களுக்கு எவ்வளவோ ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.//
    பார்க்கலாம்….!!!!!!!!!!!!!!!!

    அன்புடன்
    சின்னவன்

  42. //அவர்கள் எப்போதோ விதையை தூவி விட்டு இப்போது அவர்களுடைய வேலையையே பார்த்து கொண்டிருகிறார்கள். //
    அவர்கள் என்பது ஆங்கிலேயர்களுக்குப் பொருந்தும். எங்காவது கிடைத்தால் தரம்பால் அவர்கள் எழுதியவற்றைப் படியுங்கள். ஆச்சரியப்படுவீர்கள். புத்தகம் கிடைக்கவில்லை என்றால் esamskriti.com சென்று தேடுங்கள். கண்டிப்பாக கண் திறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *