ரமணரின் கீதாசாரம் – 14

ரமண மகரிஷி ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் பகுதி 1 | பகுதி 2| பகுதி 3| பகுதி 4 | பகுதி 5| பகுதி 6| பகுதி 7| பகுதி 8| பகுதி 9| பகுதி 10| பகுதி 11| பகுதி 12 | பகுதி 13

நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதையே பேச வேண்டும், நல்லதையே செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் அல்லவா? அதுவே ஒருவனை “மனத்துக்கண் மாசிலன்” ஆக்கிவிடும். ஏனென்றால் அப்படிப்பட்ட ஒழுக்க நெறியால் அவனது கடந்த கால வினைப்பயன்கள் முற்றும் ஒழியும் வாய்ப்பு உள்ளது. அவைகள் அழியும்போது அவனது உள்ளத்தில் ஒரு தெளிவு பிறக்கிறது. அந்த “உள்ளத்தில் நல்ல உள்ளத்திற்கு” உள்ள ஒன்றைத் தவிர வேறெதுவும் நினைப்பதற்கோ, பேசுவதற்கோ, செய்வதற்கோ தோன்றாது. அப்போது அவன் அந்தப் பேரறிவிற்கு மிகவும் பிரியன் ஆகிறான்.

14-25

मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयो: |
सर्वारम्भपरित्यागी गुणातीत: स उच्यते ||

மான அவமான மறுவிற் சமனாகி
ஏனையர் உற்றார்களில் ஒப்பு ஏய்ந்தோனாய்த் – தானே
தணந்தான் தனை அகலாத் தன் முயற்சி எல்லாம்
குணங்கள் கடந்தானோக் கூறு

பொருள்: மானமோ அவமானமோ தனக்கு எது நேர்ந்தாலும் அதில் சமபாவம் கொண்டவனாய், பகைவரிடமும் தன்னை விரும்பும் நண்பர்களிடமும் ஒத்த கருத்துடன் ஒரே மாதிரியாய் இருப்பவனாய், தன்னை எப்போதும் விடாது இருப்பவனாய், தனது முயற்சிகள் என்று ஏதும் இல்லாது அவை எல்லாம் தானே நீங்கினவனாய் உள்ள ஒருவன் சகல குணங்களையும் கடந்தவனாய் சொல்லப்படுகிறான்.

சதா சர்வ காலமும் ஆன்மாவைப் பற்றியன்றி வேறெதுவும் நினைவில் இல்லாத ஸ்திதப் பிரஞ்ஞனின் நிலை இங்கு விளக்கப்பட்டிருக்கிறது. நாம் செய்வது எதனாலும் எவரது தன்மானமும் கூடுவதாக இருக்கவேண்டும்; அவமானமும் ஏதும் வராது இருக்கவேண்டும் என்பதுதான் சாதா மனிதர்களுக்குச் சொல்லப்பட்டுள்ள பொது தர்மம். அப்படிச் செய்து மானம் கூடினாலும், அல்லது ஏதாவது மானத்திற்குப் பங்கம் வந்தாலும் இரண்டிலும் சமநோக்குடையவனாக இருத்தல் அவசியம். அத்தகைய நோக்கு எப்போது வரும் என்றால், மற்றவரையும் தானாகவே பார்க்கும்போது தனக்குப் பெயர் வந்திடின் எல்லோருக்கும் வந்துள்ளது போலவும், மற்றோருக்குப் பழி வந்திடின் அதில் தனக்கும் பங்கு உண்டு என்று உணரும்போதும் வரும். அப்போது அவன் புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் ஒன்றாகவே கருதுவான்.

நம்மை விரும்பி நம்மிடம் வரும் உயிரினும் மேலான நண்பர்களிடமும், நம் நிலைமை கண்டோ வளர்ச்சி கண்டோ பொறாமை கொண்டுள்ள அல்லது நம் முறைகளையோ கொள்கைகளையோ பிடிக்காது நம்மிடம் பகைமை வளர்த்துள்ள நபர்களிடமும் ஒரே மாதிரி அணுகுமுறை கொள்ளுதலும் அவசியம். இதுவும் தான்-பிறர் என்ற பிரிவு இல்லாதவனுக்கு பகை-நட்பு என்ற பேதம் இல்லாததால் சாத்தியமே. அதனால் இந்த பேதங்கள் எல்லாவற்றிற்கும் மூலமே நான்-நீ என்ற பேதமே. பார்க்கும் எல்லாமே ஆன்ம சொரூபமாய் இருக்கும்போது, நான் செய்கிறேன் என்ற கர்த்ருத்துவ பாவமும் இருப்பதில்லை; நட்பு-பகை என்ற பேதமும் காண்பதில்லை.

அவ்வாறு இருப்பவனுக்குத் தான் செய்கிறோம் என்று தோன்றுவதில்லை. இயல்பாகவே அவனால் செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் அவனுடைய முயற்சி என்று ஏதும் அங்கு இல்லை. தான் கர்த்தா என்ற காரணம் போய் விட்டதால் செய்யவேண்டும் என்ற முயற்சியும் அங்கு தானாகவே போய்விடுகிறது.

இப்படி மான அவமானங்களில் சமபாவமுற்று, பகைவரிடமும் நண்பர்களிடமும் சம நோக்குகொண்டு, எல்லா விதமான முயற்சிகளும் தானே நீங்கியவன்தான் “குணாதீதன்” என்று சொல்லப்படுகிறான்.

3-17

यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानव: |
आत्मन्येव च संतुष्टस्तस्य कार्यं न विद्यते ||

எவன் ஆன்மாவின்கண் இரமிப்பான் மற்றும்
எவன் ஆன்மாவில் திருத்தி ஏய்ந்தான் – எவன் ஆன்மா
வின் கண்ணே இன்புற்றிருப்பான் அவன் தனக்கு
என்றுமே செய்வதற்கு ஒன்று இன்று

பொருள்: எவன் ஒருவன் தான் ஆன்மாவே என்றறிந்து சுகமாய் இருப்பானோ, மேலும் எவன் ஆன்ம சொரூபத்திலேயே திளைத்து திருப்தி அடைவானோ, எவன் ஆன்மாவிடமே மகிழ்ச்சியுற்று இருப்பானோ, அப்படி அனுபவிக்கும் அவனுக்கு இவ்வுலகில் செய்வதற்கு என்று ஒரு காரியமும் இல்லை.

இவ்வுலகில் பிறந்துள்ள எவருமே சுகமாய் இருக்கவே விரும்புகின்றனர். ஆனால் அந்த சுகம் எதில் கிடைக்கிறது என்றுதான் தெரியாமல் தவிக்கின்றனர். உலகை அவர்கள் தன்னிலும் வேறாகக் காண்பதால், தன்னிடம் இல்லாத ஒன்றை அவர்கள் நாடுகின்றனர். நாடிய பொருள் அவர்களது முயற்சிக்குப் பின் கிடைத்தாலும், சிறிது காலம் சென்ற பின் அவர்களுக்கு வேறொரு பொருளின் மேல் நாட்டம் வருகிறது. இப்படியாக அவர்களின் நாட்டம்-அடைதல் என்னும் சக்கரம் சுழன்று கொண்டே போகிறது. எதை அடைந்தால் வேறொரு பொருள் தேவை இல்லையோ அது என்னவென்று புரிவதில்லை, வேறொருவர் “தன்னில் ஆழ்ந்து தன் உண்மைச் சொரூபத்தைத் தெரிந்துகொள்” என்று சொல்லியும், அந்த ஆன்ம நாட்டம் இல்லாது போகும் முகமாக அவர்களது உலகியல் நாட்டம் தொடர்ந்துகொண்டே போகிறது. ஆனால் ஆன்மாவைப் பற்றி சிறிதேனும் நாடுவோர்க்கு அதை நாடும் வேட்கை வளர்வது தவிர, அதில் தொடர்ந்து செல்ல ஒரு வழித் துணையும் விரைவில் கிடைக்கிறது. அப்படி ஆன்மீகப் பயணம் செல்பவனுக்கு ஆன்மாவே தான் எனும் உள்ள ஒரே உண்மை விரைவில் அனுபவத்திற்கு வர அவனுக்கு நிரந்தர சுகம் என்ன என்பது புரிகிறது. அப்படிப்பட்டவன் “ஆத்மரதன்” எனப்படுகிறான்.

உலகு காரியங்களில் ஈடுபட்டு அவைகளில் மயங்கி, ஐம்புலன்களினால் உணரப்படும் போகங்களில் மனம் கலங்கி இருப்பவனுக்கு அவ்வப்போது ஒரு திருப்தி வரும். அதை அவன் அந்த போகச் செயல்களால் அடையப் பெற்ற திருப்தி எனத் தவறாகக் கருதுவான். உண்மையில் அந்த திருப்தி இரண்டு செயல்களுக்கு இடையே அவன் செயல் இல்லாது தானே தானே இருக்கும் தன் ஆன்ம நிலை என்று உணர்ந்து, எப்போது அவன் தன் ஆன்ம சொரூபம் ஒன்றிலேயே திளைத்து என்றும் மாறாத திருப்தி கொள்வானோ அவனை “ஆத்ம திருப்தன்” என்று சொல்வார்கள்.

ஐம்புலன்களின் மூலம் காணப்படும் தூலமான உலக விஷயங்களால் நேரடியாக ஈர்க்கப்படாமல், அவை ஈட்டுத் தரும் செல்வம், புகழ், பெயர் என்ற நுண்ணிய விஷயங்களில் சுகம் அனுபவிப்பது என்பது முன்னதை விட கொடியது. தூல விஷயங்களிலாவது ஒரு அளவிற்கு மேலே போய்விட்டால் அது திகட்டிப் போகலாம், ஆனால் நுண்ணிய இன்பங்களில் மனது போனவனுக்கு அளவும் தெரியாது; இருப்பதின் அருமையும் புரியாது. மேலும் மேலும் என்று சென்று தனக்குத் தானே குழி வெட்டிக் கொள்வான். ஆக இந்த நுண்ணிய இன்பங்களிலும் மனதை விடாது, ஆன்மானுபவம் ஒன்றிலேயே சுகித்திருப்போனுக்கு “ஆத்ம சந்துஷ்டன்” என்று பெயர். அவனுக்கு வேறெதிலும் நாட்டமே இருக்காது. ஆன்மாவைத் தவிர வேறெதிலும் சந்தோஷத்தைக் காணாத அவர்களே “ஸ்தித பிரஞ்ஞன்” எனப்படுகிறார்கள்.

ரமணமகரிஷி

இத்தன்மை கொண்ட ஞானிகளுக்கு அவர்கள் செய்வதற்கு என்றோ, பிறர் மூலம் செய்ய வைப்பதற்கு என்றோ காரியங்கள் எதுவும் கிடையாது. அதனால் இவன் எல்லாம் செய்து முடித்தவன் என்ற பொருளில் “கிருத கிருத்தியன்” என்று சொல்வார்கள். எதையும் தனது என்று அவர்கள் கொள்ளாததால் அவர்களை “சர்வ கர்ம பரித்தியாகி” என்றும் சொல்வார்கள். அவர்கள் செய்யும் எதையும் தான் செய்வதாகக் கொஞ்சம் கூட நினைக்க மாட்டார்கள். ரமணர் காலத்திய நிகழ்ச்சி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

ரமணரைத் தரிசிக்க வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், ரமணரது வாழ்க்கைச் சரிதையை எழுதியிருப்பதாகவும் அதை ரமணரே திருத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமணரும் ஒத்துக்கொண்டு, அதை முடித்து அந்தக் கைப்பிரதியை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். அவர் அதைக் கொண்டு ஆஸ்ரமம் வெளியீடுகள் சாதாரணமாக வரும் தனியார் அச்சகம் ஒன்றில் கொடுத்து விட்டார். சில நாட்கள் கழித்து அதே அச்சகத்துக்கு வேறு வேலையாகச் சென்ற ஆஸ்ரம அடியார்களுக்கு அந்தப் பிரதியில் எழுதியிருந்தது தெரிய வந்தது. அதில் ரமணருக்குப் பல மனைவிகள் உண்டு என்றும், அவருக்குக் குழந்தைகள் உண்டு என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான விவரங்கள் இருந்தன. உடனே ஆஸ்ரமத்திற்கு ஓடோடி வந்து அந்தத் தகவலை ரமணரிடம் சொல்லி, ரமணரே பிரதியை அடித்துத் திருத்தி இருந்ததையும் சுட்டிக்காட்டி அது எப்படி நடந்தது என்று கேட்டனர். அதற்கு அவர் “அதைக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு ரமணரைப் பற்றி எழுதியிருக்கலாம் அல்லவா? அவர் என்னை திருத்தச் சொன்னார், நானும் செய்து முடித்தேன்” என்று சொன்னாராம். ரமணர் என்றாலும் தன்னைப் பற்றி என்று எடுத்துக் கொள்ளாது வாழ்ந்த சர்வ கர்ம பரித்தியாகி அவர்.

3-18

नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन |
न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रय: ||

பண்ணும் வினையால் பயனேதும் எய்தலிலை
பண்ணாததனாலும் பாவமிலை – நண்ணி அவற்கு
எவ்வுயிர்களாலும் தான் எய்திடத் தக்கதாம்
எவ்விதமாம் பொருளும் இன்று

பொருள்: (அப்படித் தன்னில் மூழ்கியுள்ள ஞானி) அவன் செய்யும் கர்மங்கள் எதனாலும் எந்த விதப் பயனும் அடையப்போவதில்லை. அவன் கர்மாக்கள் ஏதும் செய்யாவிட்டாலும் அதனால் அவனுக்கு எவ்விதப் பாவமும் இல்லை. அவன் எந்த உயிர்களையும் நாடி, அவைகள் மூலம் அவன் அடைவதற்கான பொருளும் ஏதும் இல்லை.

நல்ல பல செயல்களைப் புரிந்து, அதனால் மன அமைதி பெற்று, தான்-பிறர் எனப் பார்க்காது, தன்னிலே நிலைபெற்று தான் ஆன்மா என உணர்ந்த பின் ஒருவனுக்கு வேறென்ன வேண்டும்? நல்லது செய்வதே ஆன்மாவை உணர்வதற்கு என்றால், ஆன்மாவை உணர்ந்தவனுக்கு வேறென்ன செய்ய வேண்டும்? அப்படியே அவன் செய்தாலும் அவன் ஆன்மானுபவத்திற்கும் மேலானது என்று அடையக் கூடியது என்ன இருக்கிறது? ஏதும் இல்லை ஆதலால் அவனுக்குக் கர்மாக்கள் என்று ஏதுமில்லை என்பார்கள். அதனால் அவன் ஒன்றும் செய்யக்கூடாது என்றில்லை. எது செய்தாலும் அவன் அடையக்கூடியது என்று வேறேதுமில்லை. அப்படியே அவன் ஏதேனும் செய்தாலும் தான் செய்கிறோம் என்ற கர்த்ருத்துவ பாவமும் அவனுக்குக் கிடையாது ஆதலால் அவனுக்குக் கர்மாக்கள் என்று ஒன்றும் இல்லை என்றும் ஆகிறது.

சாதாரண மக்கள் ஏதும் செய்யாது சும்மா இருந்துவிட்டால் அந்த நிலைமையே வேறு. நமது வாழ்க்கையில் நாம் பலரது செயல்களின் விளைவுகளை எதிர்பார்த்து அவர்களைச் சார்ந்து இருப்பதால், அதே போன்று பலரும் நமது செயல்களை நம்பி இருப்பார்கள் என்று ஆகிறது. அப்போது நமது செயலின்மையால் நாம் பலரை நமக்குத் தெரியாமலேயே இன்னல்களுக்கு உள்ளாக்குகிறோம். அறியாது நாம் அப்படிச் செய்து விட்டாலும் அந்தப் பாவம் நம்மைத் தாக்கும். ஆனால் ஞானிகளுக்கோ எந்தப் பாவமும் ஒட்டாது. ஒரு செயலை அவர்கள் செய்யும்போது அதற்கு உண்டான புண்ணியமும் அவர்களுக்கு வருவதில்லை; அதே போன்று பாவமும் கிடையாது. அவனுக்கு கர்த்ருத்துவம் போய்விட்டது என்னும்போது அத்துடன் கர்மத்தினால் வரும் பாவ-புண்ணியங்களும் போய்விடுகின்றன. ஆக கர்மம் செய்யப்படுகிறது அல்லது செய்யப்படவில்லை என்பது முக்கியமில்லை. “நான் கர்மம் செய்கிறேன்” என்ற எண்ணம் வராது இருப்பதுதான் முக்கியம். அதில் ஒருவன் தொடங்கினால், பின்பு “நான்” என்னும் எண்ணமே இல்லாதவனாய் வளர்ந்து “அது”வாகவே என்றும் இருப்பான்.

ஆன்மாவில் மூழ்கி அதுவாகவே இருப்பவனுக்கு, பிறர் என்று ஏதும் இல்லையாதலால் அவன் வேறு எவரையும் நாட வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. ஆன்மாவாகவே அமர்ந்தவனுக்கு வேறு என்று ஏதும் தேவை இல்லை ஆதலால் ஒரு காரியம் என்று செய்து ஒரு பொருளை அடைவது என்றும் கிடையாது. தன்னிலே தானாக இருக்கும் அவனுக்கு மற்றது என்று ஏதும் இல்லை. “எல்லாம் “தானாய் இருத்தலே”, அதுவே “தன்னை அறிதல்” என்பார் ரமணர். அவர் “தன்னை அறிந்த தன்மய ஆனந்தருக்கு என்னை உளது ஒன்று இயற்றுதற்கு” என்றும் சொல்வார்.

music-iconரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.

(தொடரும் …)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *