புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 1

ambedkarjpg1935 அக்டோபர் 13.

இயோலாவில் அந்த மாபெரும் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.  கட்டுக்கடங்காத கூட்டம்.

அம்பேத்கர் தங்களுக்கு என்ன சொல்லப் போகிறார் என்று அந்த கூட்டமே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது.

மேடையில் உட்கார்ந்திருந்த அம்பேத்கரின் மனதில் பலவித எண்ணங்கள் அலைமோதின.

தான் எவ்வளவுதான் இந்துமதத்தில் இருந்துகொண்டு போராடினாலும் இந்த உயர்சாதி மக்கள் திருந்தப்போவதில்லை. தீண்டாமை கொடுமை ஒழியப்போவதில்லை.

இந்து மதத்தில் இருக்கும்வரை என் மக்கள் தீண்டப்படாதவர்களாகவேதான் வாழப் போகிறார்கள்; சாகப்போகிறார்கள்.

தீண்டாமை அடிமை விலங்கிலிருந்து தன்னை நம்பியிருக்கும் இந்த மக்களை கண்டிப்பாக விடுவித்தே தீரவேண்டும். அதற்குச் செய்ய வேண்டியது என்ன?

தாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி பலநாள் ஆழ்ந்து யோசித்து வைத்திருந்த முடிவை தம் மக்களின் மனங்களில் விதைத்திட தீர்மானித்துவிட்டார்.

பலர் பேசியபின் அம்பேத்கர் எழுந்தார்.

கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்தார்.

தான் பேசப்போகும் பேச்சு அகில இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கும் என்று அவருக்குத் தெரிந்தே இருந்தது. பேச ஆரம்பித்தார்.

“நான் ஏதோ தீயவாய்ப்பால் ஒரு இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதை தடுத்தல் என் கையில் இல்லை. அதனால் பல இன்னல்களையும் இழிவுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால், நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் என்பது மிக உறுதி’’.

அம்பேத்கரின் இந்த அறிவிப்பு தாழ்த்தப்பட்டவர்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தும் அறிவிப்பு. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் விண்ணதிர கரவொலி எழுப்பி தங்களின் சம்மதத்தை தெரிவித்தார்கள்.

இந்த அறிவிப்பு நிச்சயமாக பார்ப்பனர் மற்றும் உயர்த்தப்பட்ட சாதி இந்துக்களின் மனங்களை உலுக்கும் என்று அம்பேத்கர் எதிர்பார்த்தார். ஆனால்,  அம்பேத்கரின் இந்த அறிவிப்பால் உயர்த்தப்பட்ட சாதி இந்துக்கள் மனம் மாறவில்லை. மாறாக பார்ப்பனர் பலர் மகிழ்ச்சியடையவே செய்தனர். சீர்த்திருத்த எண்ணம் கொண்ட சில இந்துக்கள் மட்டுமே கவலைப்பட்டனர்.

அம்பேத்கரின் இந்த அறிவிப்பைக் குறித்து அக்டோபர் 15ம் தேதி காந்தி தனது கருத்தை வெளியிட்டார். அதை மறுத்து அம்பேத்கர் ‘‘நாங்கள் எந்த சமயத்தில் [வேறு மதத்தில்] இணையப்போகிறோம் என்பது குறித்து முடிவு ஏதும் எடுக்கவில்லை. எந்தெந்த வழிமுறைகளைக் கடைபிடிக்கப்போகிறோம் என்பதையும் முடிவு செய்யவில்லை. ஆனால், நாங்கள் தீர்க்கமாய் கலந்து ஆலோசித்து உறுதியாக முடிவு செய்திருப்பது ஒன்றுதான். அதாவது இந்து சமயத்தினால் எங்களுக்கு நலன் ஏதும் கிடையாது என்பதே’’ என்று பதில் அளித்தார்.

இப்படி அம்பேத்கர் தீர்க்கமாய் முடிவெடுத்ததுக்கு என்ன காரணம்? அம்பேத்கரின் சிறுவயது முதல் நடந்த சில நிகழ்ச்சிகளே காரணம்.

இது அம்பேத்கரின் சிறுவயதில் நடந்த நிகழ்ச்சி.

ஒருமுறை ஆசிரியர் அம்பேத்கரை வடிவியல் கணிதத்தில் (ஜியோமிதி) ஒரு விதியைக் கரும்பலகையில் நிரூபித்து எழுதிக் காட்டுமாறு அழைத்தார். உடனே மற்ற எல்லா மாணவர்களும் கூச்சல்போட்டுக் கரும்பலகை அருகே வைக்கப்பட்டிருந்த தங்கள் உணவுப் பாத்திரங்களை அகற்றிவிட்டனர்.  அப்பொழுதுதான் அவை தீட்டாகாமலிருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். அதன் பிறகே அம்பேத்கர் கரும்பலகை அருகே சென்று, அந்த விதிமுறையை நிரூபித்துக்காட்ட முடிந்தது.

ஒருநாள் பொதுக் குடிநீர் நிலையில் எவருக்கும் தெரியாமல் நீர் அருந்தினார். இவர் தண்ணீர் குடித்ததைக் கண்டுபிடித்து விட்டனர். நாங்கள் குடிநீர் எடுக்கும் இடத்தில் தீண்டாதவனாகிய நீ எப்படி நீர் அருந்தலாம் என்று கேட்டு அவரை நையப்புடைத்தனர்.

அதேபோல் அவர் படித்த பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தீண்டாதவனாகிய ‘நீ படிப்பது வீண்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். இது அம்பேத்கரை எரிச்சலூட்டியது. ஒருநாள் வழக்கம்போல் அந்த ஆசிரியர் ‘நீ படிப்பது பயனற்றது’ என்று சொன்னபோது அம்பேத்கர் சினத்துடன் “உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக்கொண்டு போங்கள்” என்று கூறினார்.

சைடன்ஹாம் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தபோது பேராசிரியர்களுக்கென வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையிலிருந்து அம்பேத்கர் தண்ணீர் குடிப்பதற்குக் குசராத்திப் பேராசிரியர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அம்பேத்கர் வழக்கறிஞராக செயல்பட்டபோது மூத்த வழக்கறிஞர்கள் தம் நிலையிலிருந்து கீழிறங்கிவந்து தொழில் முறையில் இவரோடு தொடர்புகொண்டு உதவிட முன்வரவில்லை.

இத்தகைய அவமானம் தரும் சம்பவங்களால் அம்பேத்கரின் உள்ளம் என்ன வேதனைபட்டிருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

இந்த சம்பவங்கள் அல்லாமல் அவரை மிகவும் வேதனைப்படுத்திய நிகழ்ச்சிகளை நான் விவரிப்பதைவிட வேதனைகளை அனுபவித்த அம்பேத்கரே சொன்னால் இன்னும் வலிமையாக இருக்கும்.

 1936 மே 17, ஞாயிற்றுக் கிழமையன்று தாணா மாவட்டத்தின் கிழக்கு தெற்குப்பகுதிகளைச் சேர்ந்த தீண்டப்படாதவர்களின் பெரும் மாநாடு கல்யாண் எனும் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமயமாற்றம் குறித்த அறிவிப்பை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அம்மாநாட்டில்தான் அம்பேத்கர் தான் இந்துமதத்தில் இருக்கப்போவதில்லை என்று முடிவெடுத்ததுக்கான காரணத்தை விரிவாக பேசினார்.

இனி அம்பேத்கர் பேசுவார்….

சமய மாற்றம் குறித்த எனது கருத்துக்களைக் கேட்பதற்காக நீங்களெல்லாம் இங்கே கூடியிருக்கின்றீர்கள். எனவே அப்பொருளைக் குறித்து விரிவான விளக்கம் அளித்தல் அவசியம் என்று நான் கருதுகிறேன்.

‘‘நாம் ஏன் சமயம் மாற வேண்டும்?’’ எனும் வினாவைச் சிலர் அடிக்கடி எழுப்பி வருகின்றனர். ‘‘நாம் ஏன் சமயம் மாறக்கூடாது?’’ என்று எதிர் வினா எழுப்பத்தான் எனக்கு உந்துதல் தோன்றுகிறது.

சமய மாற்றம் ஏன் தேவை என்பதைச்சுட்டும் வகையில் எனது வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன். சமயமாற்றம் எனும் பாதையை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதை உங்களுக்கு எளிதில் உணர்த்த அது உதவும். மேலும் உங்களில் பலரின்  வாழ்க்கையிலும் அத்தகைய நிகழ்ச்சிகள் நடந்திருக்கும் என்பது உறுதி.

நான்கைந்து நிகழ்ச்சிகள் எனது உள்ளத்தில் ஆழமான வடுக்களை விளைவித்துள்ளன; இந்து சமயத்தைத் துறந்து வேறு ஏதாவது சமயத்திற்கு மாற வேண்டும் என்ற ஆழமான உணர்வை அவை தோற்றுவித்தன. அவற்றுள் இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை இன்று உங்களிடையே எடுத்துரைக்க விரும்புகிறேன்.

இந்தூர் மாவட்டம் மோப் எனும் ஊரில் எனது தந்தை போர்ப்படையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நான் பிறந்தேன். அப்போது எனது தந்தை சுபேதாராக இருந்தார். படை வீரர்கள் குடியிருப்பில் நாங்கள் அப்போது வசித்து வந்தோமாதலால் எங்களுக்கு வெளியுலகத்  தொடர்பு அவ்வளவாகக் கிடையாது. தீண்டாமையை அச்சமயத்தில் நான்  அறிந்திலேன்.

எனது தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியத்தில் வாழத் தொடங்கிய போது நாங்கள் சாதாராவுக்குக் குடிபெயர்ந்தோம். எனக்கு ஐந்து வயதான போது எனது தாய் காலமாகிவிட்டார். சாதாரா மாவட்டம் கோராகானில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது அதை சமாளிக்க அரசு தொடங்கிய பஞ்ச நிவாரணப் பணித் திட்டத்தில் எனது தந்தைக்கு வேலை கிடைத்தது. அங்கு குளம் வெட்டும் பணி தொடங்கப்பட்டு, குளம் வெட்டும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற பணியில் எனது தந்தை சேர்ந்திருந்தார்.

கோரேகான் தொழிலாளர் குடியிருப்பில் எனது தந்தை தங்க நேர்ந்ததால் நாங்கள், குழந்தைகள் நால்வரும், சாதாராவில் தனித்துவிடப்பட்டோம். அங்கு நாங்கள் நாலைந்து ஆண்டுகள் சோறு மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருந்தோம். சாதாராவிற்கு வந்த பின்னர் தான் தீண்டாமை என்பதை நாங்கள் அனுபவிக்கத் தொடங்கினோம்.

எனக்கு முதல் தாக்கமாய் அமைந்தது நாவிதர் எவரும் எங்களுக்கு முடி வெட்ட வராமையே. இது எங்களை மிகவும் பாதித்தது. இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது அக்காதான் வீட்டுக்கு எதிரேயிருந்த திட்டு ஒன்றில் என்னை அமர்த்தி எனக்கு முடிவெட்டிவிடுவார்.  ஊரில் ஏராளமான நாவிதர்கள் இருந்தும் ஏன் ஒருவரும் எனக்கு முடிவெட்ட முன்வரவில்லை என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது.இரண்டாவது நிகழ்ச்சியும் இதே காலகட்டத்தில் நிகழ்ந்தது தான்.

எனது தந்தை கோரேகானில் இருந்த போது எங்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். ஒரு கடிதத்தில் எங்களைக் கோரேகானுக்கு வருமாறு அழைத்திருத்தார். நான் அதுவரை புகைவண்டியையே பார்த்ததில்லையாகையால், கோரேகானுக்குப்  புகை வண்டியில் செல்லப்போகிறோம் எனும் எண்ணம் எங்களுக்குக் குதூகலமூட்டியது. எங்களுக்குத் தந்தை அனுப்பிய பணத்தில் புதிய ஆடைகள் தைத்து, அவற்றை அணிந்து கொண்டு எனது அண்ணன், அக்கா மகள், நான் ஆகிய மூவரும் கோரேகானுக்கு கிளம்பினோம்.

எங்கள் வருகை குறித்துத் தந்தைக்கு ஓர் கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், எங்கள் பணியாளின் கவனக்குறைவாலோ, பிழையாலோ அக்கடிதம் போய்ச் சேரவில்லை. இதையறியாமல், எனது தந்தை புகைவண்டி நிலையத்திற்கு உறுதியாய் வண்டியனுப்பியிருப்பார் என்று நம்பிக்கொண்டு போனோம். வண்டியிலிருந்து இறங்கியதும் பணியாளர் எவருமே தென்படாமையால் நாங்கள் மிக அல்லலுற்றோம்.

விரைவில் பிற பயணிகள் புறப்பட்டுச்செல்ல பயணியர் மேடையில் நாங்கள் மட்டும் தனித்து நின்றோம். இவ்வாறு முக்கால் மணிநேரம் பயனின்றிக் காத்துக் கொண்டிருந்தோம். நிலைய அதிகாரி நாங்கள் யாரைக் காணப்போகிறோம், எங்கள் சாதி என்ன, நாங்கள் எங்கு செல்ல விரும்புகிறோம் என்றெல்லாம் விசாரித்தார். நாங்கள் மகர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று அவரிடம் கூறினோம். இதைக்கேட்டதுமே அவர் அதிர்ச்சியடைந்து ஐந்து எட்டுகள் பின்வாங்கினார்.

முதலில் எங்கள் நல்லாடைகளைப் பார்த்து நாங்கள் வசதியானதோர் குடும்பத்துப் பிள்ளைகள் என எண்ணிக்கொண்டார் போலும். எனினும் எங்களுக்காகக் கட்டை வண்டி ஒன்று ஏற்பாடு செய்வதாய் உறுதியளித்தார். 

ஆனால், நாங்கள் மகர்சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் வண்டிக்காரன் எவனும் எங்களுக்காக வண்டியோட்ட முன்வரவில்லை. மாலை நேரம் 6 அல்லது 7 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. இறுதியில் வண்டிக்காரன் ஒருவன் தனது வண்டியில் நாங்கள் பயணம் செய்வதற்கு இணங்கினான். ஆனால், எங்களுக்காக அவன் வண்டி ஓட்டமாட்டானென்று தொடக்கத்திலேயே தெளிவாகக் கூறி விட்டான்.

நாங்கள் ஏற்கெனவே படைவீரர் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள். ஆதலால் வண்டியோட்டுதல் எனக்கொன்றும் சிரமமாய்த் தோன்றவில்லை. எனவே, நாங்கள் வண்டியோட்ட ஒப்புக் கொண்டதும் அவன் தனது வண்டியைக் கொண்டு வர நாங்கள் அதில் ஏறிக்கொண்டு கோரேகானுக்குப் புறப்பட்டோம்.

ஊருக்கு வெளிப்புறத்தை அடைந்ததும் ஓர் ஓடை தென்பட்டது. அதை விட்டால் வேறெங்கும் தண்ணீர் கிடைக்காது என்று கூறி வண்டிக்காரன் அங்கேயே எங்கள் உணவை முடித்துக்கொள்ளுமாறு கூறினான். அவ்வாறே நாங்கள் வண்டியை விட்டிறங்கி எங்கள் உணவை சாப்பிட்டு முடித்தோம். ஓடை நீர் கலங்கலாயும் சகதி கலந்தும் இருந்தது. இதற்கிடையில் வண்டிக்காரன் வேறோரிடத்துக்குச் சென்று தனது உணவை முடித்துக்கொண்டு வந்து சேர்ந்தான்.

மாலை இருட்டு மேலும் கறுக்கத் தொடங்கியதால் வண்டிக்காரனும் வண்டியில் ஏறி எங்களுக்கருகே அமர்ந்து கொண்டான். விரைவில் நன்கு இருட்டிவிட்டது. பல மைல் தூரத்திற்கு மினுக்கும் விளக்குகளோ மனித நடமாட்டமோ ஏதுமில்லை. அச்சம், இருள், தனிமை காரணமாக நாங்கள் மிக அச்சமடைந்தோம். எங்கள் அச்சத்தின் உச்சமாக நாங்கள் கோரேகானுக்குப் போய்ச் சேரவேமாட்டோமேன்று கருதலானோம்.

நக்கா எனப்படும் சுங்கச்சாவடியை நெருங்கியவுடன் நாங்கள் வண்டியிலிருந்து குதித்துவிட்டோம். சுங்க வசூல்காரரிடம் எங்களுக்கு அக்கம் பக்கத்தில் உணவு ஏதாவது கிடைக்குமா என்று விசாரித்தோம். எனக்குப் பாரசீக மொழி நன்கு தெரியுமாதலால், எவ்வித சிரமமும் இன்றி அவருடன் பாரசீக மொழியில் பேசினேன். அவர் மிகவும் கறாராய்ப் பேசி அங்கிருந்த குன்றுகளைச் சுட்டிக்காட்டினர். எப்படியோ ஓடைக்கரையில் அந்த இரவைக் கழித்துவிட்டு மீண்டும் அதிகாலையில் எங்கள் கோரேகான் பயணத்தைத் தொடங்கினோம். இறுதியில் ஒருவாறாக அன்று பிற்பகல் முற்றிலும் கழித்து அரை உயிராய்க் கோரேகான் சென்றடைந்தோம்.

மூன்றாம் பிகழ்ச்சி நான் பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றிய காலத்தைச்சேர்ந்தது. நான் பரோடா சமஸ்தானம் அளித்திருந்த உதவித் தொகை கொண்டு வெளிநாடு சென்று கல்வி பெற்று வந்திருந்தேன். எனவே, இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின்னர், ஒப்பந்தத்தின்படி பரோடா தர்பாரில் பணியாற்றுவதற்காக வந்து சேர்ந்தேன். ஆனால் நான் வசிப்பதற்கு பரோடாவில் வீடு ஏதும் கிடைக்கவில்லை. பரோடா நகரத்திலிருந்து இந்துக்களோ முஸ்லீம்களோ எவருமே எனக்கு வீடு தராததால் நான் பார்சிகளின் தர்ம சாலையொன்றில் இடம்  பெறத் தீர்மானித்தேன்.

நான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தங்கியிருந்த காலத்தில் வெளிர் நிறம் பெற்றுத் திரும்பியிருந்தேன். எனவே அடல்யு, சரப்யு என்ற பார்சி பெயரைச் சொல்லிக்கொண்டு தர்மசாலையில் வசிக்கத்தொடங்கினேன்.

பார்சி மேலாளர் இரண்டு ரூபாய் மாத வாடகைக்கு எனக்கு அறை தரச் சம்மதித்தார். விரைவிலேயே, மேதகு பரோடா மன்னர் கெய்க்வாடு அவர்கள் மகர் பையன் ஒருவனைக் தமது தர்பாரில் பணிக்கு அமர்த்தியுள்ளார் எனும் செய்தி பரவவே, தொடர்ந்து நான் பொய்யான பெயரில் பார்சி தர்ம சாலையில் வசித்து வரும் ரகசியமும் வெளியாகி விட்டது.

நான் அங்கு சேர்ந்த மறுநாளே காலை உணவருந்தி விட்டுப் பணிக்குச் செல்லப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, பதினைந்திருபது பேர் கொண்ட குண்டாந்தடியேந்திய பார்சிகளின் கூட்டம் ஒன்று என்னைச்சூழ்ந்து கொண்டு நான் யாரென்பதைக் கூறாவிடில் என்னைக் கொன்றுவிடுவதாய் மிரட்டினர்.

நான் ஒரு இந்து என்று கூறிய பதில் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. சினமடைந்த அக்கும்பல் என்னைப் பலவாறு வசைபொழிந்து உடனடியாய் அறையைக் காலி செய்யக் கோரினர். எட்டு மணி நேரம் அனுமதி தருமாறு நான்பணிவுடன் கேட்டுக்கொண்டேன். அன்று முழுதும் எங்கு தேடியும் எனக்கு ஏதேதோ சாக்குபோக்குச் சொல்லி எனக்கு ஒண்ட ஒர் இடமும் அளிக்க இயலா நிலையைத் தெரிவித்தனர். ஏமாற்றமும் சோர்வும் என்னைச் சூழ, ‘இனியென்ன செய்வது?’’ என்ற வினா எழுந்தது.

என்னால் முடிவு ஏதும் எடுக்க இயலவில்லை. சோர்வும் விரக்தியும் மேலிட ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதேன். வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அறவே இழந்து, வேலையை விட்டு நீங்குதலன்றி வேறு வழியேதும் இல்லாமையால், பணி துறப்புக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு அன்றிரவே பம்பாய்க்குப் புகைவண்டி ஏறினேன்.

எனது வாழ்க்கையில் நான் சந்தித்த இத்தகைய கொடுமையான நிகழ்ச்சிகளையும்  இன்னல்களையும் உங்களில் பலரது வாழ்க்கையிலும் சந்தித்திருப்பீர்கள். இவ்வாறு மனித நேயமற்ற, மதிக்காத, மனிதராகவே உங்களை நடத்ததும் ஒரு சமூகத்தில் வாழ்வதில் என்ன பொருள் இருக்கிறது என்று நான் உங்களை வினவ விரும்புகிறேன். மாறாக அவர்களோ உங்களை இழித்தும் பழித்தும் நடத்துவதுடன் உங்களுக்குத் தீங்கிழைக்கும் வாய்ப்புகள்  எதையும் தவறவிடுவதில்லை. சிறிதேனும் தன்மதிப்பும் கண்ணியமும் உள்ள மனிதரெவரும் இத்தகைய பேய் மதம் ஒன்றில்  தொடர்ந்து வாழ மனம் ஒப்பமாட்டர்கள். அடிமைப் பிழைப்பை நடத்தி வாழ விரும்பும் இழிஞர்கள் மட்டுமே இம்மதத்தில் தொடர்ந்து வாழமுடியும்.

எனது தந்தையும் முன்னோர்களும் பக்தியில் சிறந்த இந்துக்களாயிருந்தும், இந்து சமயம் சுமத்திய கட்டுப்பாடுகளால், அவர்களால் கல்வியேதும் பெற இயலாமற் போயிற்று, ஆயுதம்  ஏந்துவும் ஏந்த அம்மதம் அவர்களை அனுமதிக்கவில்லை. இந்து சமயத்தின் கீழ் சொத்து ஏதும் சேர்ப்பதும் அவர்களால் இயலாததாகும். இந்து சமயத்தில் பற்றோடு வாழ்ந்த எனது தந்தையால் இவை எதையும் பெற இயலவில்லை.

நான் சமஸ்கிருதம் கற்க விரும்பினேன். ஆனால், பாழும் இந்து சமயம் சுமத்திய கட்டுப்பாடுகளால் அதுவும் இயலாது போயிற்று. ஆனால்,  இப்போதோ கல்வி, சொத்து இவை பெறவும், ஆயுதம் ஏந்தவும் வாய்ப்பு பெற்றுள்ளேன்.

உங்கள் முன்னோர்களை எல்லாம் இழிவுறுத்திக் கேவலமான வாழ்க்கையில் அவர்களையிருத்தி, அவர்கள் மீது பல சிறுமைகளைச் சுமத்தி வறுமையிலும் அறியாமையிலும்  அவர்களை ஆழ்த்திய பொல்லாப் புன்மைச் சமயத்தின் பிடியில் இனியும் நீங்கள் தொடர்ந்து இருக்கத் தான் வேண்டுமா?

உங்கள் முன்னோர்களைப் போன்றே நீங்களும்  தாழ்ச்சியும், இழிவும் வறுமையும், சிறுமையும் நிறைந்த வாழ்க்கையையேற்க இசைந்தாலும் தொடர்ந்து வெறுக்கப்பட்டே வருவீர்கள். உங்களை மதிக்கவோ, உங்களுக்கு உதவவோ எவரும் முன்வரமாட்டார்கள்.

இத்தகைய காரணங்களால் சமயமாற்றம் என்பது இப்போது, நமக்கு முக்கியமான தேவையாகிறது. நீங்கள் இந்து சமயத்திலேயே தொடர்ந்து இருக்க விரும்பினால், அடிமை நிலைக்கு மேல் சற்றும் உயரமுடியாது.

தனிப்பட்ட முறையில் எனக்கேதும்  தடைகளில்லை. தீண்டாப்படாதவனாகவே தொடர்ந்து இருக்க நான் இணங்கினால், இந்து ஒருவர் அடையக் கூடிய எந்த நிலையையும் நானும்  அடைதல் கூடும். நான் இந்துவாகவே இருப்பினும்,  இல்லையெனினும் பெரிதாக ஒன்றும் மாற்றமிராது. உயர்நீதிமன்ற நடுவராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ, ஏன் ஒர் அமைச்சராகவோ கூட நான் ஆகமுடியும். ஆனால், உங்கள் அனைவரின் மேம்பாட்டிற்காகவும் முன்னேற்றத்திற்காவும் தான் சமய மாற்றம் மிகவும் தேவையென்று எனக்குத் தோன்றுகிறது.

இழிவும் தாழ்ச்சியும் மிக்க இந்த வாழ்க்கையிலிருந்து நீங்கள் விடுபட்டுப் பொன்னொளிர் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டின், சமய மாற்றம் என்பது தவிர்க்கவியலாத் தேவையாகும்.  இதனால் உங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள உறுதுணையும் ஒத்துழைப்பும் நல்கும் நண்பர்களும் ஆதரவாளர்களும் உங்களுக்குக் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்த நான் சமய மாற்றத்தைத் தொடங்கியாக வேண்டும். இதில் எனது தனி நலன் குறித்தோ முன்னேற்றம் குறித்தோ ஒரு சிறிதும் கவலை கொள்ளவில்லை. இன்றைய காலகட்டத்தில் எனது செயல்பாடுகளின் நோக்கமும் முற்றிலும் உங்கள் மேம்பாடும் நலன்களும் மட்டுமே.

dalit12அம்பேத்கரின் இந்த உள்ளக்குமுறலுக்கான – சமயமாற்றத்திற்கான – காரணத்தை மனிதநேயமுள்ள மனிதர்கள் யார்தான் ஆட்சேபிக்க முடியும்?

அம்பேத்கர் சமயம் மாற முடிவெடுத்ததற்கு இச்சம்பவங்கள் மட்டும் முதன்மையான காரணம் அல்ல. முக்கியமான காரணங்கள் பல இருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் இல்லை என்பதை இந்து ஆச்சாரவாதிகள் நிரூபித்த சம்பவங்கள் அவை.

அவற்றைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

20 Replies to “புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 1”

  1. இந்த கட்டுரை இங்கே வருவதுதான் மிக பொருத்தமானது

  2. இதை போன்ற அநியாயம் இப்போது எங்கேயாவது நடந்து வருகின்றதென்றால் அதை உடனே எதிர்த்து போராட நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இது நமக்கு பேரிழுக்கு. அண்ணலின் காலகட்டத்தில் இத்தகைய மூர்க்கர்களாக இருந்த உயர் சாதியினரே மனிதரில் மிக தாழ்ந்தவர். இதை பரம்பொருள் ஒரு காலமும் ஏற்க மாட்டார். இந்த பாவங்களுக்கு அந்த பாதகர்களின் சந்ததிகளும் இன்று துன்பங்கள் அனுபவித்து கொண்டு தான் இருக்கும். நம்மில் யாரவது இத்தகைய மனோபாவம் இருந்தால் தயவு செய்து தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டு நல்ல மனிதர் ஆக வேண்டும். வர்ணங்கள் எப்படி ஜாதிகள் ஆயின என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

  3. (ஆதாரம் ஆர்.பி.வி.எஸ்.மணியன் – மதமாமற்றம் என்பது விபச்சாரமே ! – ஜாதிக் கொடுமை ?)

    சரி ! ஜாதிக் கொடுமையிலிருந்து தப்பிக்க மதம் மாறலாமே என்றால் அதுவும் தவறு. தீண்டாமை ஒர சமயத் தீமையல்ல –அது ஒரு சமுதாய தீமை. ஆகவே மதத்தை மாற்றிக் கொள்வதால் இந்தத்தீமையிலிருந்து யாரும் தப்பிக்கவேயில்லை. ஆகவே மாற்றப்படவேண்டியது மதம் அல்ல – சமுதாயத்தின் மனோபாவம் மாறவேண்டும். இன்று அரசியல் சாஸனம் சட்டரீதியாக சில பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. இதனையும் மீறி நம்மைக்கொடுமை செய்வோர் இருந்தால் – சுயமதியாதையோடு இந்துவாகவே இருந்துகொண்டு இதனை எதிர்த்துப் போராடவேண்டும். மூஸ்லீமாகவோ கிருஸ்துவனாகவோ மாறுவது கோழைத்தனம்-அது பிரச்சனைக்கு தீர்வும் ஆகாது.

    1956-ல் அம்பேத்கர் ஏறத்தாழ ஒரு லஷ்சம் ஹரிஜனங்களை பௌத்தமதத்தில் இணைத்தாரே – இன்றளவும் அவர்கள் நிலை உயரவே இல்லை. மாறாக நவ பௌத்தர்கள் என்ற பெயரில் – அதே சமுதாயக் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    இதனால்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தனது சகாக்களுடன் கூட இந்து மதத்திற்கு முழுக்குப்போடுவது என்ற தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியபோது காந்திஜி அவரது இந்த முடிவை எதிர்த்துக் கருத்து வெளியிட்டார்.

    மதம் என்பது ஒரு வீடோ அல்லது ஒரு சட்டையோ அல்ல கண்டபடி மாற்றிக்கொள்வதற்கு. அது அவரது ஆன்மா சம்பந்தப்பட்டவிஷயம். அம்பேத்கர் அவர்கள் ஹிந்து மதத்தின் மேன்மையை அதன் உள்ளார்ந்த தத்துவங்களை வைத்து எடை போட வேண்டுமே தவிர அந்த மதத்தைச் சரியாக பின்பற்றாத மக்களின் பலவீனங்களை வைத்து அல்ல. அனைத்து ஹரிஜனங்களையும் தன்னுடன் வேறோரு மதத்திற்கு அழைத்து சென்று விடுவார் என்று கூறுவது இமாலயத் தவறு.

    ஒரு கட்டிடத்திலிருந்து பெயர்த்து வேறொரு கட்டிடத்திற்கு எடுத்துச் செல்ல அவர்கள் என்ன செங்கற்களா? மதத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் எதையும் சாதித்து விட முடியாது. தங்களுக்கு நேரிடும் துன்பங்களை சுட்டிக் காட்டி அல்லது வேறொரு மதத்தில் தங்களுக்குக் கிடைக்கும் லௌகீக நன்மைகளை மனதில் கொண்டு மதத்தை மாற்றிக் கொள்வது அபத்தத்திலும் அபத்தம்.

    தீண்டத்தகாதவர்கள் என்போர் இஸ்லாமிய மதத்திற்கோ அல்லது வேறு ஏதாவது மதத்திற்கோ போவது தீண்டாமைக் கொடுமைகளுக்குத் தீர்வு ஆகாது (ஹரிஜன் 20.4.1940)

  4. இது மிக முக்கியமான கட்டுரைத் தொடர். இந்த கட்டுரையும் இதன் மூலம் எழப்போகும் விவாதங்களும் ஹிந்து சமுதாயத்தை ஆரோக்கியமான திசையில் வழி நடத்தும் என நம்புகிறேன். அண்ணல் அம்பேத்கர் ஹிந்து மதத்தை அழிக்க நினைக்கவில்லை சீர் திருத்தவே விரும்பினார். விவேகானந்தரும் நாராயணகுருவும் இதே கருத்துகளை கூறியுள்ளார்கள். நாம் சிந்தித்து செயல்பட ஒரு நல்ல தொடர்.

  5. இந்த மறுமொழியை நான் ”மலருங்கள் மடாதிபதிகளே” என்ற கட்டுரையில் வெளியிட்டேன். ஆனால் நான் எதிர்பார்த பதில் மறுமொழிகள் யாரும் இடவில்லை. இதை மறுபடியம் ஆக்கபூர்வமான மறுமொழிகளை எதிர்பார்த்து பதித்துள்ளேன்.

    ஜேம்ஸ் விட் ஜேம்ஸ் ஸ்டிபன் என்ற பிரிட்டிஷ் கிருஸ்துவ அதிகாரி 1871 ஆம் ஆண்டு ஒரு கீழ்தரமான சட்டத்தை அமூல்படுத்தினார் (Criminal Tribe Act – குற்றபரம்பரை) இது ஒரு நாகரிகமில்லாத ஏழைமக்களை அனாதைகளாக ஆக்கும் சட்டம். அன்று இந்தியாவின் ஜனதொகை 26 கோடி அதில் 6 கோடி மக்களை இந்த குற்றபரம்பரை சட்டத்தின் கீழ் கொண்டுவந்தார்கள் (அதாவது சுமாராக 30 சதவிகித மக்களை) போர் வீரர்களாக இருந்த பல விவசாய குடிமக்கள் வனவாசிகள் மலைவாழ்மக்கள் என்று 160 ஜாதிகளை இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் இன்று நாம் காணும் தலித் சமுகமாகும். இவர்களை பரம்பரை குற்றவாளிகள் என்றும் அந்தபரம்பரை தொடர்ந்து திருடுதல், கொள்ளை அடித்தல், வீட்டை உடைத்து திருடுதல், கடத்தல், போலி நாணயங்களை அச்சிடல் போன்ற குற்றங்களை செய்பவர்கள் என்று பழி சுமத்தினார்கள். போர்வீர்ர்களின் ஆயுதங்களை பரிமுதல் செய்தார்கள். அவர்களை ஒரு தனி இடத்தில் குடி அமர்தி அவர்களது நடவடிக்கைகளை கண்காணிப்பது தினம் தினம் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்று பல தடைகளை விதித்து அவர்களையும் அவர்களது சந்ததியினரையும் ஒரு நூற்றாண்டுகளுக்கு மேல் கல்வியும் கற்க விடாமல் கொடுமை படுத்தினார்கள்.

    இதே மனபோக்கு இஸ்லாமிய ஆட்சியிலும் இருந்தது. கீழ் நிலையில் இருந்த பலரை கத்திமுனையில் மதம் மாற்றினார்கள். இவ்வாறு மாறதவர்களுக்கு ஜிசா போன்று வரிவசூலித்து கொடுமை படுத்தினார்கள். மணித மலத்தை மணிதனே அள்ளும் கொடிய வழக்கமும் இவர்கள் காலத்தில் தான் ஏற்ப்பட்டது. அடிமை வியாபாரத்தில் பேர்போன இவர்கள் மக்களை ஒதுக்கிவைத்து தீண்டகூடாதவர் என்ற முத்திரையை குத்தினார்கள். சரித்திரத்தை படித்தால் அடிமைகள் எப்படி நடத்தப்பட்டனர் என்பது எல்லோருக்கு தெரியும். அவர்கள் கற்றுதந்த பாடத்தைதான் ஜாதி இந்துகள் இன்றும் பின்பற்றுகிறார்கள்.

    இந்த சட்டத்தை 1955இல்தான் விலக்கினார்கள். இந்து மதத்திற்கும் தீண்டாமை கொடுமைக்கும் எந்த சம்பந்துமும் கிடையாது.

  6. Pingback: Indli.com
  7. உள்ள சுத்தம், உடல் சுத்தம், உடை சுத்தம், உரை சுத்தம், உணவு சுத்தம்,
    உழைப்பு சுத்தம். இப்படி இந்த 6 சுத்தங்களை ஒருவன் கடைபிடித்து வாழ்ந்தால் அவனே உத்தமன். இப்படி வாழ்கை நடத்துவது நாகரிக வளர்சி பெற்ற இந்த காலத்தில் மிகவும் அரிது. சூழ்நிலை சகவாசம் நிச்சயம் ஒருவரது மனதை மாற்றும் சக்தி படைத்தது. இதிலிருந்து ஒருவர் தம்மை காத்துக்கொள்ள சமுகத்திலிருந்து பல நிலைகளில் ஒதுங்கி இருந்தே ஆகவேண்டும். இப்படி ஒதுங்கி வாழ்பவர்களை சமூகம் நிச்சயம் எப்பொழுதுமே சந்தேக கண்கொண்டு பார்பது இயற்கை. எனவேதான் ஒழுக்கமாக ஒதிங்கி வாழ்பவர்களை சுமூகம் அவன் ஒரு சுயநலவாதி சமூகத்தை ஒதிக்கி வைத்துவிட்டான் என்றுதான் தூற்றும்.

    இந்தியாவில் இப்படி ஒதுங்கி பலவற்றை ஒதிக்கி வாழ்ந்தவனையே சமூகம் ஒதிக்கிவைத்தது. இப்படி சமூகம் ஒதிங்கி இருந்தவனையே ஒதிக்கிவைத்ததால் ஒழுக்கமானவன் வாழ்வு ஆதாரத்தை தேடி சூழ்நிலைகேற்ப சமூக ஜோதியில் கலந்துவிட்டான். சுயநலம்தான் பொதுநலம் என்று நாகரிக வாழ்கை நமக்கு பாடம் கற்றுதந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சமூக சீர்கேட்டை இன்று நாம் கண்கூட காண்கிறோம். கிடைத்தவரையில் ஆதாயம் என்றுதான் இன்று ஒவ்வொரு இந்தியனும் சிந்திகிறான். நாட்டின் முன்னேற்றம் பற்றியோ இந்திய பண்பாடு சீர்புலைவைகபற்றியோ வருங்கால சந்ததிகள் பற்றியோ எள்ளவும் சிந்திப்பதில்லை

    மேலே சொன்ன சுத்தங்களை ஒருவன் வாழ்கையில் கடைபிடித்தால் அவன் வேதம் கற்பதற்கும் கோவில் பூஜை செய்வதற்கும் எந்த தடையும் இல்லை. உடனே இப்பொழுது இதை செய்பவர்கள் ஒழுக்கசீலர்களா என்ற கேள்வி எழுவதும் இயற்கையே. அது களை எடுக்கபடவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஜாதிபெயர்களை தங்கள் பெயருடன் இணைக்கும் வியாதியை ஏற்படுத்தியவன் கிருஸ்துவ வெள்ளையர்களே என்பது எல்லோருக்கும் தெரியும். மற்றவரை அடிமைபடுத்தி கீழ்தரமாக நடத்தும் கிருஸ்துவ பரம்பரைபுத்தி (ஆப்பிரிக்க பழங்குடி மணிதர்களை மிருக காட்சி சாலையில் கூண்டில் அடைத்து வேடிகை பார்த புத்தி கருப்பர்களை மரத்தில் தூக்கிலிட்டு வேடிகை பார்த புத்தி நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் வெள்ளயர்கள் கூடும் இடங்களில் அனுமதி இல்லை என்று போர்ட்டு போடும் புத்தி டிராம் ரயில் போன்றவற்றில் அவர்கள் மட்டும் பயனம் செய்ய தனி இடம் – கோடிகணக்கா இந்தியர்களை வெளிநாடுகளில் அடிமைகளாக விற்று அவர்களை நாடில்லா அனாதைகளாக மாற்றிய புத்தி அப்படி அடிகைகளாக விற்கப்பட்டவர்களை ஆடு மாடுகளை போல திறந்தவெளி நிலத்தில் வேலிகள் அமைத்து அடித்துவைத்த புத்தி பல அன்னிய தேசங்களில் வேலை சுமையாலும் போதிய உணவு கொடுக்காத்தால் இறந்தவர்களை அனாதை பிணங்களாக தெருவில் வீசிஎரிந்த புத்தி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) இந்த புத்திதான் பரவலாக பல ஜாதி இந்துகளிடம் தொற்றிக்கொண்டுவிட்டது.

    அடிமை புத்தியை புகட்டிய வெள்ளையர்களால் படித்தவனுக்கு மரியாதை செய்து வந்த கீழ்நிலை மக்களை மிரட்டி ஜமிந்தார்களும் மிட்டா மீராசுதார்ர்களும் செயற்கை மரியாதையை பெற்றார்கள் என்பதுதானே உண்மை (கட்டாயம் வணகம் சொல்ல வேண்டும் துண்டை இடுப்பில் கட்டவேண்டும் செருப்புடன் எதிரே நடக்ககூடாது). இன்று இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் பிராமிணனை தீண்டதகாதவனாகதான் பாவிக்கிறார்கள். ஆனால் அன்றிலிருந்து அவனுக்கு அளித்த இயற்கையான மரியாதை இன்னும் பாமரமக்களிடம் ஒட்டிகொண்டிருக்கிறது என்பதை கடைவீதிக்கு சென்றால் அவனைமட்டும் அடையாளம் கண்டு வாங் சாமி எடுத்துகங்கசாமி என்றுதான் கூறுகிறார்கள். இதைபோல் வடமாநிலங்களிலும் பண்டிஜி, ஆகயே, நமஸகார் என்கிறார்கள்.

  8. இந்தியாவில் பிரிடிஷ் ஆட்சி ஏற்பட்டதற்குமுன்பாக தீண்டதகாதவர் என்ற சொல்லே இருந்தது இல்லை. டாக்டர் ஆ.பத்மநாபன் 40 ஆண்டுகள் அரசு உயர் பதவியில் இருந்துவர் – தமிழக தலைமை செயலாளர் – ஆளுனரின் ஆலோசகர் – மத்தியஅரசின் பணிவாளர் தேர்வு ஆணைய உருப்பினர் – மிஜோராம் ஆளுனர் – அவர் ஒர தலித் சமுதாயத்தை சார்ந்தவர். 1911 ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1. இந்துக்கள்-2. ஆவி வழிபாட்டாளர் மற்றும் பழங்குடியினர்- 3. ஒடுக்கப்பட்டவர் அல்லது தீண்டாதார் என வகை படுத்தப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியாளர் தீண்டாதார் என்னும் சொல்லைப் படைத்தனர். என்று டாக்டர் ஆ.பத்மநாபன் எழுதியுள்ளார். ( The word “UNTOUCHABLE” was coined by British Administration.)

    டாக்டர் ஆ.பத்மநாப்ன இரு செய்திகளை பதிவு செய்தள்ளார். ஒன்று பிட்ட்டிஷ் ஆட்சியின்போதுதான் தீண்டதகாதவர் என்ற சொல் உருவாக்கப்பட்டது. இரண்டு இந்துகளிலிருந்து பழங்குடியினரையம் ஒடுக்கப்பட்வர்களையும் தனியாக பிரித்தது பிரிட்டிஷ் ஆட்சியே. இந்த பிரிவினையை தூண்டியவர்கள் முஸ்லீம்கள் என்பதையும் அவர் கூறுகிறார்.

    இந்தியாவில் தீண்டாமை கொடுமையை ஒடுக்க பிரிட்டிஷார் முயலவில்லை. அதற்கு மாறாக இந்து சமுதாயத்தாப் பிளவுபடுத்தவே அவர்கள் முயன்றார்கள். தீயை அணைப்பதற்கு பதிலாக தீயை கொழுந்துவிட்டு எரியுமாறு செய்தார்கள்

  9. Worshipping False Gods by Arun Shourie
    தடை செய்ப்பட்டதாக கூறப்படும் இந்த புத்தகத்தை நான் படிக்கவில்லை வலைதளத்தில் எழுதிய சுருக்க பதிவுகள் மட்டும் பார்தேன். மாதிரிக்கு ஒன்றை கீழே கொடுத்துள்ளேன். அருண்சோரி அம்பேத்கரை ஒரு நாகரிகமான பெரியாராகவே இந்த புத்தகத்தில் சித்தரித்துள்ளார் என்று தோன்றுகிறது. பல குணாதயங்களில் இருவரது கருத்தும் ஒன்று போல் சித்தரித்துள்ளார் என்று தோன்றுகிறது. ஒருவர் படித்தபட்டாதாரி என்பதுதான் வித்தியாசம். தமிழ் இந்து தள ஆசிரியர் குழு இந்த புத்தகத்தை படித்திருந்தால் அவர்களின் கருத்தை சுருக்கமாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    1. ‘Ambedkar collaborated with the British to undermine Gandhiji’
    2. ‘Ambedkar was one of the few politicians who supported the Muslim League demand for Pakistan’
    3. ‘There is not one instance, not one single, solitary instance in which Ambedkar participated in any activity connected with that struggle to free the country’
    Throughout the twenty-five years of his public life before the British left India, Ambedkar took positions which were ever so convenient for the British, throughout these twenty-five years he hurled pejoratives at the Congress, in particular Gandhiji. At every turn he put forward formulae and demands which enabled the British to counter the national movement for freedom. The British were fully aware of the use he was to them, and they were anxious to give him a hand so that he could become even more the exclusive leader of the scheduled castes.

  10. இந்து சமயத்தையும் சமுதாய மக்கட் பிரிவுகளையும் சேர்த்து குழப்பிக்கொண்ட /குழப்பிக்கொள்ளும் திறமை அண்ணல் அம்பேத்கரிடமும் இருந்தது. அண்ணல் அம்பேத்கர் காலத்திலேயே, பசி பட்டினிக் கொடுமை, வ்யாதிக்கொடுமை, ஏழ்மை, படிக்க வசதி இல்லாத கொடுமை, மெகாலே முறை கல்வி பயில கல்விக் கூடங்கள் இல்லாத கொடுமை,அந்நிய ஆதிக்கக் கொடுமை போன்றவற்றால் அன்றைய மொத்த சமூகமே பாதிக்கப்பட்டிருந்த போதிலும், அண்ணல் அம்பேத்காருக்கு வெளிநாடு சென்று அடிமைக்கல்வி பெற்று அரசியலில் புகுந்து இந்திய மக்களின் சட்டத் தலை எழுத்தை நிர்ணயிக்கும் வாய்ப்புக்கள் அமைந்தன. அண்ணல் அம்பேத்கர் அதற்காக இந்து சமுதாயத்தை நன்றயுனர்வுடன் அனுகியிருந்தாரேனால், அண்ணல் அம்பேத்கர் வாழ்வில் வெற்றி அடைந்தவராகி இருப்பார். மாறாக அண்ணல் அம்பேத்கர், அரசியலில் மட்டுமே வெற்றியடைந்து, தான் பிறந்த இந்து சமுதாய வாழ்வில் தோற்று விட்டார்.

  11. @ reality

    ரியாலிட்டி ஐயா,

    அம்பேத்கர் எழுதிய ஒரு கட்டுரையையாவது முழுமையாகப் படித்துவிட்டுப் பின் அம்பேத்கர் அவர்களை விமர்சனம் செய்யுங்கள்.

    கறுப்பு வெள்ளை என்று கட்சி பிரிக்கும் அளவு அம்பேத்கர் சராசரி மந்தை மனிதர் இல்லை. அவரைப் போன்றவர்கள் பாரதத்திற்குப் பெருமை அளிக்கிறார்கள்.

  12. பௌத்தம் இந்து மதங்களுள் ஒன்று.

    ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டை வற்புறுத்தி, இந்து மதம் என்பது கிறுத்துவம், இசுலாம், பௌத்தம், ஜைனம் தவிர மற்றவை என்று தீர்ப்புச் சொல்ல வைத்தார்கள்.

    இதன் அடிப்படையில் சிறுபான்மையினர் வரையறுக்கப்பட்டு இந்து என்று சொல்லாதவர்களுக்கு, இந்துக்களின் வரிப்பணத்தில் இருந்து உதவிகள் வழங்கப்படும் என்ற நிலையை உருவாக்கினார்கள்.

    [இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பின்னால் வேறு நோக்கங்களும் உள்ளன. இந்து மதம் என்பதே பிரிட்டிஷ் காரர்கள் உருவாக்கியது என்பது போன்ற தியரிகள் இப்போது திரிக்கப்படவும் இந்தத் தீர்ப்பு உதவுகிறது. இந்தியா என்பதே வெள்ளைக்காரர்கள் உண்டாக்கியதுதான், அதற்கு முன்பு இந்தியா என்ற ஒரு தேசியம் இருந்ததே இல்லை என்று உளறும் ராமச்சந்திர குஹா போன்ற பைசாவுக்குப் பத்தி எழுதும், nationக்கும் stateக்கும் வித்தியாசம் தெரியாத நேருவிய கூலிகளுக்கு இது போன்ற மாரீச வாதங்கள் சாரயத்திற்குக் காசு தருகின்றன. இது தவிர இந்து அமைப்புகள் இந்துக்களுக்குக் கல்வி மற்றும் பொருளாதார சேவைகள் செய்வதையும் இந்தத் தீர்ப்பு தடை செய்கிறது. இது முழுக்க முழுக்க அம்பேத்கர் வடிவமைத்த இறையாண்மைக்கு எதிரானது. பௌத்தர்களும் இந்துக்களே என்றுதான் அவர் தனது சட்ட வடிவமைப்பில் சொல்லுகிறார்.]

    தென்னகத்தில் உள்ள ஜைன மற்றும் பௌத்தர்கள் மட்டுமே சிறுபான்மை நலன் என்ற பெயரில் வரும் எச்சில் காசுக்காக தங்களை இந்துக்களிடம் இருந்து பிரித்துப் பார்க்கிறார்கள்.

    வட மாநிலங்களில் இந்த நிலை இல்லை.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவீனமான அகங்காரத் தீர்ப்பை மறுத்து, பௌத்தர்களும் ஜைனர்களும் இந்துக்களே என்று ஒரு மாநில உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து, அதுவே அரசு செயல்பாடாகவும் இருக்கிறது. அந்த மாநிலம் குஜராத். காந்தி பிறந்த ஊர் அது. அம்பேத்கர் வாழ்ந்த ஊர் அது.

    சடங்காச்சாரப் புரோகிதக் கழிசடைகளின் ஆதிக்கத்தால் சித்திரவதைக்கு உள்ளான இந்து மதத்தின் நல்வாழ்வுக்காகவே அம்பேத்கர் போராடினார். புரோகிதர்களின் எதேச்சதிகாரத்திற்கு இந்து மதம் உள்ளான போது கண்ணனின் அவதாரமான புத்தர் செய்த புரட்சியே இந்தியாவில் பலனளிக்கும் என்று வரலாற்று அறிஞரான அவருக்குத் தோன்றி இருக்கிறது.

    அவர் “இந்து” மதத்தில் இருந்து “வெளியேற”வில்லை. அவர் செய்தது வெளியேற்றம் என்றால், அவர் ஹிந்து இல்லை என்றால், சடங்காச்சாரத்திற்கு எதிராகக் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த கோகுலக் கண்ணனும் ஹிந்து இல்லை. “நஹி நஹி ரக்‌ஷதி டுக்ருஞ்கரணே” சொன்ன ஆதி சங்கரரும் ஹிந்து இல்லை, ஹரியின் ஜனங்களுக்கும் ஒரு உரிமை வெளியை உருவாக்கிய ராமானுஜரும் ஹிந்து இல்லை. நானும் ஹிந்து இல்லை.

    மனிதரைப் பழிக்கும் சடங்காச்சார மடத்தனத்தினை ஆங்கில அரசு ஊக்குவித்தது. சாதியத்தை அவர்கள் மூலம் ஆங்கில அரசு வளர்த்தது. கொலைகாரன் மதானிக்குக் கோழிக்கறியும், ஆயுர்வேத மசாஜும், அனுபவிக்க பதின்ம வயது சிறுவர்களையும் இப்போது அரசை ஆளுபவர்கள் செய்து தந்தது போல, அப்போதைய ஆங்கில அரசு சாதியாச்சார மடங்களையும், ஆதீனங்களையும் போஷித்தது. ஆங்கிலேயர் ஆளும்போதுதான் கோர்ட் தீர்ப்புகள் சாதியர்களுக்கு ஆதரவாகத் தரப்பட்டன. அவர்கள் சொத்துக்கள் அளவற்று வளர்ந்தன. ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், நாராயண குரு, விவேகானந்தர் போன்றோரை எதிரிகளாகவே ஆங்கில அரசு நடத்தியது.

    இந்தச் சூழலில் வலிவில்லாத, ஆதரவு இல்லாத தலித்துகள் ஆங்கிலேயரையும் பகைத்துக் கொண்டு அழிவது முட்டாள்தனம் என்று அம்பேத்கர் போன்றவர்கள் முடிவு செய்து, எந்த அளவு தலித்துகளின் நல்வாழ்வுக்கு சாத்தியங்களை உருவாக்க முடியுமோ அந்த அளவுக்கு முயன்றார்கள்.

    அம்பேத்கர் நடைமுறைவாதி. அதைப் புரிந்துகொள்ளாமல் அம்பேத்கரைக் குறை சொல்லுவது மகா பாவம்.

    இருப்பினும், அம்பேத்கரின் அந்தப் போராட்ட முறையினால் எந்த அளவு பலன் கிடைத்தது என்று அறிய ஆவல்.

    நாராயண குரு போன்று பிறந்த மதத்துக்குள்ளே இருந்து கொண்டு தலித் விடுதலைக்குப் போராடியவர்களால் உயரே வளர்ந்த தலித் சாதிகள் பல உண்டு.

    அம்பேத்கர் சொன்னார் என்று பௌத்த மதம் மாறியவர்களுக்கு இந்த வளர்ச்சி நடந்திருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

    அம்பேத்கர் ஒரு புதிய பௌத்த பிரிவையே உருவாக்கினார். அந்தப் பிரிவை இப்போது கிறுத்துவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடிக்கொண்டிருக்கிறது என்பது வருத்தமான உண்மை.

    எனது இந்த அறிய விரும்பும் கேள்விகளுக்குக் கட்டுரை ஆசிரியரின் கட்டுரைகளில் பதில் கிடைக்கக்கூடும் என்று நம்புகிறேன். ஆர்வத்துடன் படிக்கும் தொடராக இது இருக்கிறது.

    மட்டுமல்ல. ம. வெங்கடேசன் அவர்களின் எழுத்து முறை மிகுந்த செம்மை பெற்று அருமையாக இருப்பதையும் இந்தக் கட்டுரையில் காண்கிறேன். தூள் !

  13. அம்பேத்கரின் இந்த மன குமுறலை இப்போ தான் விபரமாக படிக்க கிடைத்தது. மிகவும் வருத்தமாக இருந்தது. இந்து மதத்தில் சாதிக் கொடுமை முற்று முழுதாக அகற்றபட வேண்டும். ஆனால் மதம் மாறுவது அதற்க்கு தீர்வாக இருக்க முடியாது. அம்பேத்கருக்கு ஒரு தமிழ்நாட்டு பகுத்தறிவுவாதி (எப்படிபட்ட பகுத்தறிவு!)இஸ்லாம் மதத்துக்கு மாறும் படி ஆலோவனை கூறியதாகவும் ஆனால் அவர் பௌத்த மதத்துக்கு மாறியதாகவும் அறிந்தேன்.அம்பேத்கர் இந்துவிற்கும்,தனது நாட்டிற்க்கும், உலகத்திற்க்கும் தீங்கு வராமல் நடந்து கொண்டார். பௌத்தன் இந்துவாக மாறவும் முடியும். அவன் பௌத்தனாக இருந்தால் கூட இந்துவுக்கோ மனிதனுக்கோ எதிரி அல்ல.

  14. அன்பு நண்பர் வேதம் கோபால் அவர்களுக்கு …..

    //இந்தியாவில் பிரிடிஷ் ஆட்சி ஏற்பட்டதற்குமுன்பாக தீண்டதகாதவர் என்ற சொல்லே இருந்தது இல்லை. டாக்டர் ஆ.பத்மநாபன் 40 ஆண்டுகள் அரசு உயர் பதவியில் இருந்துவர் – தமிழக தலைமை செயலாளர் – ஆளுனரின் ஆலோசகர் – மத்தியஅரசின் பணிவாளர் தேர்வு ஆணைய உருப்பினர் – மிஜோராம் ஆளுனர் – அவர் ஒர தலித் சமுதாயத்தை சார்ந்தவர். 1911 ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1. இந்துக்கள்-2. ஆவி வழிபாட்டாளர் மற்றும் பழங்குடியினர்- 3. ஒடுக்கப்பட்டவர் அல்லது தீண்டாதார் என வகை படுத்தப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியாளர் தீண்டாதார் என்னும் சொல்லைப் படைத்தனர். என்று டாக்டர் ஆ.பத்மநாபன் எழுதியுள்ளார். ( The word “UNTOUCHABLE” was coined by British Administration.)//

    நண்பரே எதை வைத்து தீண்டத்தகாதவர் என்ற சொல் பிரிட்டிஷ் அரசாங்கம் வருவதற்கு முன் இல்லை என்று சொல்கிறீர்கள். தீண்டத்தகாத மக்கள் எனும் ஒரு பிரிவினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணில் இருக்கிறார்கள் அவர்களை நம் தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்து உள்ளன .. 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெரிய புராணம் என்னும் சைவ இலக்கியத்தில் நந்தனின் சரித்திரத்தை ஒருமுறை மீண்டும் புரட்டி பாருங்கள். நந்தன் தாழ்த்த பட்ட ஜாதியை சேர்ந்தவன் என்பதாலேயே கோயிலுக்குள் அவனால் பிரவேசிக்க முடியவில்லை அனுமதியும் இல்லை … ஒவ்வொரு முறையும் அவன் தில்லை பெருமானை வெளியில் நின்று தான் மனதார சேவித்து சென்றான்… தான் பிறந்த சாதி இழுக்கை மனதில் கருதி கோயிலுக்குள் செல்ல முடியவில்லை என்று அவன் மனம் வருத்தியதை சேக்கிழார் பெருமான் தன் திருத்தொண்டர் புராணத்தில் மிக அழகாக பதிவு செய்து உள்ளார். மேலும் நடராச பெருமானே அவனின் ஏக்கத்தை புரிந்து கொண்டு காட்சி அளிக்கிறார் எப்படி……. நந்தனை கோயிலுக்குள் வரசொல்லவில்லை மேலும் நடராச பெருமானும் எழுந்து வெளிய சென்று தரிசனம் தரவில்லை மாறாக நந்தியை விலக சொல்லி தரிசனம் கொடுத்து அனுப்புகிறார். பக்தனின் அன்பை கொண்டு அவன் உண்மை இயல்பிலேயே ( அவன் எந்த சாதியை சேர்ந்தவனாக இருந்தாலும் ) அவனை ஏற்று கொள்வது தான் இறை தன்மைக்கு அழகு மாறாக அவன் கனவில் சென்று நாளை தில்லை வாழ் அந்தணர்கள் வளர்க்கும் யாக தீயில் இறங்கி இந்த இழிபிறவியை விடுத்து தூய அந்தணனாக மாறி நீ வீடுபேறு அடைவாய் என்று தான் முடிகிறது….. நண்பரே இதில் ஜாதியின் கொடுமை இல்லையா … இது என்ன வெள்ளையனின் ஆட்சியில் பாடபட்ட இலக்கியமா. மேலும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் ஜாதியை கண்டித்து வரும் பாடலை பாருங்கள்

    ” வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே”. என்று சங்ககால புலவரால் ஆரிய படை கடந்த நெடுஞ்செழியனுக்கு பிறப்பின் மூலம் ஏற்படும் இழிவை கண்டித்து அறிவுறுத்த படுகிறது.. மேலும், நம் திருவாளுவர் சொல்லும் அறிவுரையும் அதானே..
    பிறபோக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமையான்.
    பிறப்பில் அணைத்து உயிர்களும் சமம் தான் என்றும் செய்யும் தொழிலை வைத்து யாரையும் கேவலமாக நினைக்க கூடாது என்று சொல்லவதன் நோக்கம் என்ன திருவள்ளுவர் காலத்திலேயே இந்த சாதி பாகு பாடு இருந்ததால்தானே. மேலும் திருபானாழ்வாரின் திவ்ய சரித்திரமும் ஒருவகையில் பாணர்கள் எனப்படும் தீண்டத்தகாத சாதியின் கொடுமையை தானே சித்தரிக்கிறது.. ஆகவே சாதி இழிவு பிறப்பில் உயர்வு தாழ்வு கொண்டாடும் வழக்கம் நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாகவே இருந்ததான் வருகிறது… இதை மறுக்க இயலாது.. நன்றி.

  15. இந்து சமுதாயம், சுக துக்கங்களை அனுபவிப்பதையும், இந்து சமயம் சுக துக்கங்களை துறப்பதையும் குறிக்கின்றன. கவுதம புத்தர் முதற்கொண்டு, களிமிகு கணபதி ஐயா வரை, இவ்வேறுபாட்டை கணக்கில் கொள்ளாததால், புத்த சமயம் என்ற ஒன்றை புத்த சமுதாயம் என்ற ஒன்று இல்லாமல் நிர்மாணம் செய்யப்போய், ஆசைப் பிடியிலிருந்து மீள முடியாத மனித சமுதாயத்தைப் பார்த்து, இந்து சமயம் புத்த சமயத்தை உள்ளடக்கியதென்று, நம்பிக்கையில்லாத தீர்மானத்துக்குத் தள்ளப்படுகின்றார்கள். புத்த சமயத்திற்கு, இந்து சமுதாயத்தைப் பிணைத்து, புத்த சமயத்தையும் பின்பற்ற முடியாமல், இந்து சமுதாயத்தில் உள்ள குறைகளை, இந்து சமயத்தில் உள்ள குறைகள் போல சித்தரித்து, சொந்த சமுதாயம் இல்லாத, புத்த சமயத்திற்கு மாறுவதாகக்கூறுகிரார்கள். சுக டுக்கங்களைத் துறக்க மறுக்கின்றார்கள். எனவே, இந்து சமுதாயத்தில் இருங்கள், என்றாவது ஒருநாள், இந்து சமயத்திற்கு வரமுடியும். ஆனால் நிறைவேறவேண்டிய ஆசைகளை மீதம் வைத்துக்கொண்டு, புத்த சமயத்திகு செல்லாதீர்கள். “அம்பேத்கர் சொன்னார் என்று பௌத்த மதம் மாறியவர்களுக்கு இந்த வளர்ச்சி” எனவே, இல்லை என்பது புலனாகும். சொந்த சமுதாயம் இல்லாத, கிறித்துவ,இஸ்லாமிய சமயங்களும், எனவேதான், இந்தியாவில், பல நூற்றாண்டுகளானாலும், இந்து சமுதாயத்தை பற்ற முடியவில்லை. இந்து சமுதாயத்திம்ன் மீது, எனவே, மற்ற சமயங்களை ஏவி விடாதீர்கள். என்றாவது ஒருநாள், இந்து சமுதாய மனிதப்பிறவி ஒவ்வொன்றும் , இந்து சமயத்தை பின்பற்றும் நாள் வரும். இதுதான் நடைமுறை. இதைப் புரிந்து கொள்பவர்தான், நடைமுறைவாதி.

  16. இயலோ நகரில் அம்பேத்கர் முதன் முதலில் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அந்த நகருக்கு இன்னொரு பெருமையும் உண்டு.

    ஆங்கிலேயருக்கு எதிரான முதல் சுதந்திரப் போரை நடத்திய தாந்தியா தோப்பே பிறந்த ஊரும் அதுதான்.

  17. (I could not type in Tamil despite pressing Ctrl+g. Therefore I am writing in English. My apologies.)
    The instances quoted by the writer shows that the untouchability was practiced by barbers, cart drivers etc who are currently classified as most backward castes and not by higher castes. In the school incident also, it is difficult to say whether all the students present then were from higher castes. On the other hand, it is indicated that Ambedkar could pursue higher education abroad because of help from Maharaja of Baroda who was a kshatriya, a high caste. The instances in Baroda show that untouchablity was practiced by non-Hindus like Parsis and Muslims. Thus, it is revelation that
    a) untouchability was practiced by every caste towards other lower castes irrespective of their own status in the caste hierarchy. This is quite contradictory to the current discourse that only upper castes were guilty of this misconduct and
    b) even the non-Hindus practiced untouchability towards lower caste Hindus.

  18. Thayumanavan ஐயா அவர்களுக்கு உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பது புராணகாலம் தொட்டு நிலவிவரும் சமூகதீமை. அது முற்றிலும் களையபடவேண்டும் என்று தான் ஆண்மீக தலைவர்களும் சமூக பாதுகாவலர்களும் அரும் பாடுபட்டார்கள். இதில் அரசர்கும் அரசாங்கத்திற்கும் பெரும் பொருப்பு உள்ளது. ஆனால் ஒரு அரசாங்கமே ஒரு பெரும் பட்டியல் இட்டு மக்கதொகையில் 30 சதவிகிதத்தினரை குற்றபரம்பரை என்றும் தீண்டதகாதவர் என்றும் சட்டம் ஏற்றுவதுதான் முற்றிலுமான தவறான முன்உதாரணம் ஆகும். இதை தான் பிரிடிஷ் அரசு செய்தது. நாம் சுதந்திரம் பெற்றபின் 1950 இல் தான் மீண்டும் நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் தீண்டாமை எந்த வகையிலும் அனுஷ்டிக்கப் படக்கூடாது என்ற ஷரத்து கொண்டுவந்தனர்.
    இதைவிட கொடுமை இன்று தலித் என்று பட்டியல் ஜாதிகள் தங்களுக்குள் ஒற்றுமையாக இல்லை. தேவேந்திர குல வேளாளர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் ஊர்களில் பறையர்களை அவர்கள் கொடுமைகளுக்கு ஆளாக்குகிறார்கள். அது போல் பறையர்கள் அதிகமாக வாழும் ஊர்களில் அருந்ததியினர் கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். இவர்கள் தங்களுக்குள் பெண் எடுப்பதும் கொடுப்பதும் கிடையாது. எனவே தலித் என்பது ஒரு ஒன்றுபட்ட இனமோ அல்லது ஜாதி அமைப்போ அல்ல.

  19. இன்றும் சில ஏற்ற தாழ்வுகளை பார்க்கும் போது மிகவும் வேதனை அளிக்கிறது . வர்ணம் எப்படி ஜாதியாக மாறியது என்று தெரியவில்லை ……….. இந்த காரணங்களால் தான் மதமாற்றம் தீ போல் பரவுகிறது …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *