அஸ்ஸாம், கேரளா அரசியல் மாற்றங்கள்: ஒரு பார்வை

கேரளா:

தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளான மே 13 அன்று எனது நண்பர் ஒருவரிடம் காலையில் கேரளாவில் எவ்வாறு ரிசல்ட் இருக்கும் என்று கேட்டேன். அவர் காங்கிரஸ் சார்புடையவர் என்பதால் நல்ல நம்பிக்கையுடன் 100 சீட்டுக்கு மேல் ஜெயிப்போம் என்றார் .ஆனால் காங்கிரஸ் ஆட்சி பிடிபதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. தற்போதைய கேள்வி – இது ஏன் என்பது.கடந்த 20 வருடமாக மாறி மாறி வாக்கு அளித்த மக்கள் இன்று ஏன் இவ்வாறு சமமாக வாக்கு அளித்தார்கள்? இன்றைய நிலவரப்படி சி.பி.எம் தான் சட்டசபையில் பெரிய கட்சி. இதன் காரணத்தை அறிவதற்கு முன் நாம் கேரளாவின் கடந்த கால அரசியல் நிலவரத்தை அலசுவோம்.

kerala-election

1968 முதல் கேரளா காங்கிரஸில் கோலோச்சியவர் கருணாகரன்.தற்போது உயிருடன் இல்லை.அவர் ஒரு அரசியல் மந்திரம் உருவாகி வைத்திருந்தார். அது எப்போதும் காங்கிரசுக்கு நல்ல பலமாக இருந்தது. அது என்னவென்றால் சிரியன் கிறிஸ்தவ – முஸ்லிம் – நாயர் வாக்கு வங்கி. இது எப்போதுமே காங்கிரஸ் வாக்கு வங்கி. இந்த மூன்று சமுதாய மக்களை சேர்த்தாலே கிட்டத்தட்ட நாற்பது சதவித வாக்கு வங்கி உருவாகிவிடும். ஆனால் சி.பி.எம். வாக்கு வங்கியோ ஈழவர்கள் மற்றும் ஏழை மக்கள் தான். ஏழை மக்களில் முஸ்லிம் கிறித்துவர்களும் அடங்குவர். இதனால் ஒவ்வொரு முறை காங்கிரஸ் ஆட்சி பிடிக்கும் போது ஏழைகள் பாதிக்கப் படுவார்கள்.அடுத்த முறை குழுவாக வாக்கு போட்டு சி.பி.எம்மை ஜெயிக்கவைப்பார்கள்.இது மாறி மாறி நடக்கும். ஆனாலும் இரு கட்சிகளின் வாக்கு வங்கி தக்க வைக்கபடும். இதில் பிராமணர்கள் மற்றும் பிற நாயர் போன்ற சமூகங்கள் கருணாகரனின் ஆதரவாளர்கள்.ஆகவே அவர்களின் வாக்கு வங்கி எப்போதுமே காங்கிரஸ் பக்கம் தான். இது போலவே தான் 2001இலும் நடந்தது.

ஆனால் சோனியாவின் வருகையால் கொஞ்சம் கொஞ்சமாக கருணாகரனின் கை இறங்கியது. ஏ.கே.அந்தோணியின் கை உயர்ந்தது. ஆனாலும் ஆட்சியில் இருந்ததால் இதனால் ஏற்படும் மாற்றத்தை காங்கிரஸ் கவனிக்க தவறியது. இதன் நடுவே கருணாகரன் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார்.இதனால் காங்கிரஸின் ஹிந்து வாக்கு வங்கி கடுமையாக பாதிக்க பட்டது.அது போலவே காங்கிரஸில் ஹிந்து தலைவர்களை வளர்க்க தவறினார்கள்.இதனால் முன்பு சொன்ன வாக்கு வங்கியில் நாயர் வாக்கு வங்கி சற்று காங்கிரசிடமிருந்து மாறியது.

இந்நிலையில் 2006 தேர்தலில் சி.பி.எம் ஜெயித்தது. ஆனால் அதன் தலைவர்கள் மதானியுடன் சேர வேண்டும் என பகிரங்கமாக அறிவித்து அவர்களுடன் சேர்த்தனர். இதன் மூலம் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை பெறலாம் என நினைத்தனர்.ஆனால் மதானி மீதான குற்றம் அதிகரிக்க அதிகரிக்க சி.பி.எம் தலைவர்கள் சற்று பின்வாங்கியதாக நாடகம் ஆடினர். இந்நிலையில் வினாத்தாளில் முஸ்லிம் மதத்தை தவறாக சொன்னதாக பழி போட்டு ஒரு கல்லூரி பேராசிரியன் கையை வெட்டினர். இதனால் கேரளா மக்களின் மனதில் பெரும் மாற்றம் நடந்தது.

இதை நன்றாக ஊகித்தவர் வி.எஸ்.அச்சுதானந்தன். இவர் உடனே கொஞ்சம் கொஞ்சமாக மதானியிடமிருந்து விலகினார். தான் உண்மையான செக்யுலர்வாதி என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் கருணாகரனின் மரணம் நடந்தது. இந்த மரணம் வெறும் நிகழ்வாக காங்கிரஸ் நம்பியது.ஆனால் இது காங்கிரஸ் ஹிந்து வாக்கு வங்கிக்கு நிகழ்ந்த மரண அடி. இது போலவே காங்கிரஸ் ஹிந்து தலைவர்களை வளர்க்க தவறியது. மேலும் ஒரு படி போய் IUML மற்றும் கேரளா காங்கிரஸ் மணி கட்சியுடன் உறவை வளர்த்தது. இந்த இரண்டு கட்சிகளும் முறையே முஸ்லிம் மற்றும் கிறித்துவர்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் அப்பட்டமான மதவாத கட்சிகள். இதை உணர்ந்த அச்சுதநந்தன் ஹிந்து வாக்கு வங்கியை பெரிதும் நம்பினார்.

இடையே பாஜகவும் தனது சூறாவளி பிரச்சாரத்தை ஆரம்பித்தது. இதில் கணிசமான காங்கிரஸ் ஹிந்து வாக்கு வங்கி பாஜக பக்கம் வந்தது. இதை உணராத காங்கிரஸ் மேலும் மேலும் சிறுபான்மையினர் பக்கம் சென்றது.

தேர்தலும் அறிவிக்கப்பட்டது.மாற்றம் என்பதே நிலையானது என்று சொன்ன கேரளா மக்கள் இந்த முறையும் தங்களுக்கு முழு அதரவு தருவார்கள் என கண்முடித்தனமாக நம்பியது காங்கிரஸ். ஆனால் கட்சி தொடர்ந்து சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கு கண்டு மக்கள் கொதிப்படைந்திருப்பதை காங்கிரஸ் அறியவில்லை. மே 13 வந்த ரிசல்ட் பார்த்து சற்று அதிர்ச்சியானது காங்கிரஸ். ஏன் என்றால் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டங்களில் காங்கிரஸ் ஒரு சீட் கூட வெல்லவில்லை! ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் கண்ணூர், கோழிக்கோடு, கொல்லம், பாலக்காடு, ஆலப்புழா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் காங்கிரஸ் ஒரு சீட் கூட பெறவில்லை.ஆனால் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்கள் பெரும்பான்மையாக வுள்ள எர்ணாகுளம், கோட்டயம் போன்ற மாவட்டங்களில் அனைத்து சீட்டுகளையும் வென்றது.

இதனால் 2001 தேர்தலில் பெற்ற 68 சீட்கள் கூட காங்கிரஸ் பெறவில்லை. இம்முறை 36 சீட்கள் தான் பெற்றுள்ளது. ஆனால் தனது கூட்டணி பலத்தால் 72 சீட் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் சி.பி.எம் 44 சீட்கள் பெற்று பலமான எதிர் கட்சியாகி உள்ளது. பாஜகவிற்குக் கிடைத்த வாக்குகளும் அதிகரித்துள்ளன.

இப்போது ஒவ்வொரு வாக்கு வங்கி மற்றும் அது சென்ற கட்சியை பார்ப்போம்.

kerala-mapமுதலில் நாயர் வாக்கு வங்கி. இவர்கள் கிட்டத்தட்ட 25 சதவிதம் உள்ளனர் (இதில் பிராமணர்களும் அடங்குவர்). இவர்களுக்கு நாயர் சேவை சங்கம் (NSS) எனும் ஜாதி சங்கம் உள்ளது. இதன் தலைவருக்கும் அச்சுதாநந்தன் அவர்களுக்கும் சற்று பிரச்சனை. ஆகவே NSS காங்கிரஸ் பக்கம் சென்றது. ஆனாலும் காங்கிரஸ் கிட்டத்தட்ட வெறும் 10-12 சதவிதம் தான் இவர்கள் வாக்குகளை பெற முடிந்தது. மீதி உள்ளதை பாஜக பெற்றது. சற்று 2% அளவு சி.பி.எம் கட்சிக்கும் சென்றிருக்கலாம் என்று நம்பபடுகிறது.

அடுத்தது ஈழவர் வாக்கு வங்கி. இவர்கள் கிட்டத்தட்ட 25 சதவிதம் உள்ளனர். இவர்களின் தலைவராக அச்சுதானந்தன் பார்க்கப் படுகிறார். எனவே இவர்களின் கிட்டத்தட்ட 16 சதவிதம் வாக்கு சி.பி.எம் பக்கம் சென்றது. மீதி உள்ள 9 சதவிதம் பாஜக பெற்றது. இவர்களின் ஜாதி சங்கமாக ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம் (SNDP) உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக SNDP பேச்சு வார்த்தை நடந்து கிட்டத்தட்ட பாதி நிர்வாகிகள் பாஜக பக்கம் சாயந்து விட்டனர். இருந்தாலும் அச்சுதானந்தன் தனது முயற்சியால் வாக்கு வங்கி மாறாமல் செய்து விட்டார்.

சிறுபான்மையினரின் வாக்கு காங்கிரஸ் பெற்றது. இதிலிருந்து கிட்டத்தட்ட பாதி ஹிந்து வாக்கு வங்கி பாஜக பக்கம் சென்று உள்ளதை அறியலாம்.ஆனால் பாஜக ஏன் ஒரு சீட் கூட பெறவில்லை என நினைக்கலாம். இதன் முழு காரணமும் பாஜக வர கூடாது என்பதில் காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் தீவிரமாக உள்ளது.எனவே அவர்கள் நிற்கும் இடங்களில் மாற்றி வாக்கு அளித்து ஜெயிக்க விடமாட்டார்கள். அனாலும் பாஜக முழுமையாக பார்த்தால் தனது வாக்கு வங்கியை 1.25 சதவிதம் அதிகரித்து 6 சதவிதம் பெற்றுள்ளது.

இப்போது உள்ள நிலவரப்படி பார்த்தால் கேரளா ஹிந்துக்கள் நன்றாக அரசியலை பார்க்க ஆரம்பித்துள்ளனர். எனவே காங்கிரஸ் மேலும் மேலும் சிறுபான்மையினரை தாஜா செய்தால் அதற்கு மேலும் பலமாக அடி விழும். இதே போல் அச்சுதானந்தன் அவர்களை விட்டால் சிபிஎம் கட்சியின் ஈழவர் வாக்கு வங்கி பலமாக அடி வாங்கும். எப்படி பார்த்தாலும் இந்த மாற்றங்கள் பாஜகவுக்கு சாதகமாக அமையும். எனவே, இன்றைய கணக்குப்படி பாஜக அடுத்த ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி பெரும். ஏனென்றால் பெரும்பான்மையான ஹிந்துக்களின் நம்பிக்கையை பாஜக பெற்றுவிட்டது. எனவே இது மிகபெரும் மாற்றதுக்கு வழி கோலும் என் நம்பலாம்.

கடைசியாக ஆர்.எஸ்.எஸ் பற்றி சொல்ல வேண்டும்.ஹிந்து வாக்கு வங்கி என இல்லாத காலத்திலேயே தனது பணியை தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் இன்று மக்களின் மனதில் பெரும் மாற்றத்தையும், சிறுபான்மையினரை எப்போதும் தாஜா செய்தால் ஹிந்து வாக்கு வங்கி மாறும் என்ற நிலைமைக்கு வர வைக்க பெரும் பணியை செய்துள்ளது. எனவே இந்த நேரத்தில் அவர்களின் பணிக்கு தலை வணங்குவோம் .

***************

அஸ்ஸாம்:

டந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜகவின் ஒரே நம்பிக்கை அஸ்ஸாம் தேர்தல் தான். எப்படியாவது இந்த முறை தனது செல்வாக்கை உயர்த்த நன்றாக போராடியது. ஆனால் மக்கள் தீர்ப்போ வேறு மாதிரி இருந்தது. இதன் காரணத்தை நாம் இப்போது பார்போம்.

அஸ்ஸாமை பொறுத்தவரை நாடு விடுதலை அடைந்ததிலிருந்து காங்கிரஸ் தான் பிரதான கட்சி. பின்னர் 1980 வாக்கில் பங்களாதேஷிலிருந்து ஆயிரம் ஆயிரமாய் வந்த முஸ்லிம் அகதிகளால் பெரும் மாற்றம் நடந்தது. எங்கு பார்த்தாலும் திடீர் திடீர் என்றது முளைத்த மசுதிகளால் மக்கள் மிரண்டனர்.அவர்களுக்கு எதிராக ஆரம்பித்த அசாம் கன பரிஷத் (AGP) இயக்கம் கட்சியாக மாறி காங்கிரசுக்கு பெரும் தலைவலியானது. அவர்களை முறியடிக்க பங்களாதேசத்திலிருந்து ஊடுருவிய முஸ்லிம்களுக்கு வாக்கு உரிமை கொடுத்து தனது பக்கம் இழுத்தது காங்கிரஸ். முதல் தலைமுறை பங்களாதேச முஸ்லிம்கள் என்பதால் தங்கள் வாழ்க்கைக்கு வழி கொடுப்பார்கள் என்று நம்பி அவர்கள் காங்கிரஸ் பக்கம் சாய்ந்தனர். இதனால் என்னதான் அஸ்ஸாமின் உண்மையான குடிமக்களின் ஆதரவைப் பெற்றாலும் AGP யால் அரியணை ஏற முடியவில்லை.

assam_voting

இந்நிலையில் 1998 ஏற்பட்ட பாஜக அதரவு அலையால் AGP பயன் பெற்று அரியணை ஏறியது. ஆனால் ஆளுவதற்கான நுணுக்கங்கள் தெரியாமையால் அடுத்த முறை காங்கிரஸ் கையில் ஆட்சியைப் பறி கொடுத்தது. இதனால் 2001 இல் ஆட்சிபீடத்தில் ஏறிய காங்கிரஸ் தனது வாக்கு வங்கியாக அஸ்ஸாமின் உண்மையான குடிமக்களும் வந்ததில் சற்று தெம்புடன் இருந்தது.

2006 தேர்தலில் AGP யிடம் சரியான தலைவர் இல்லாமையால் மறுபடியும் தோற்றது. இந்நிலையில் 2008 ஆண்டு அடுத்த தலைமுறை பங்களாதேசி முஸ்லிம்கள் உருவாயினர். அடுத்த தலைமுறையினரின் தேவை இப்போது மாறியது. அவர்களுக்கு உணவு,உடை மற்றும் தங்கும் இடம் முதல் தலைமுறையினர் கொடுத்துவிட்டனர். ஆதலால் இப்போது அவர்களுக்கு தேவை என்பது ஒன்றுமில்லை. இதை அறிந்த பங்களாதேஷ் முல்லாக்கள் அவர்கள் கையில் ஜிஹாதை கொடுத்துவிட்டனர். எனவே இப்போது அவர்களுடைய முக்கிய நோக்கம் ஜிஹாத். எனவே தங்களது பழைய தலைமுறையினர் காங்கிரஸ் கட்சிக்கு காட்டிய நன்றி அவர்களுக்கு பிடிக்கவில்லை.

ஊடுருவிய பங்களாதேசி முஸ்லிம்களின் அடுத்த தலைமுறையில் வந்த அஜ்மல் தங்களுக்கு என்று கட்சி ஆரம்பித்தான். அதன் பெயர் அஸ்ஸாம் யுனைடட் டெமாக்ரடிக் ஃபிரண்ட். (AIUDF). கட்சி ஆரம்பித்த முதல் வருடத்தில் 2009 தேர்தலை சந்தித்தனர். முதலில் இவர்களைக் கண்டு பயபடாத காங்கிரஸ் தேர்தலில் இவர்கள் எடுத்த வாக்கு எண்ணிக்கை கண்டு சற்று மிரண்டனர்.

இந்நலையில் AGP-BJP கூட்டணி 2009 தேர்தலில் எதிர் பார்த்த அளவு வெற்றி பெறாமையால், கூட்டணியை விட்டு விலகுவதாக AGP அறிவித்தது.எப்போதும் போல் சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்காக தனது கூட்டணியை முறித்தது. ஆனால் முஸ்லிம் வாக்குகள் AIUDF பக்கம் செல்வதை கவனிக்கவில்லை. அதே போல் அஸ்ஸாமின் உண்மையான குடிமக்களும் AIUDF கட்சியின் எழுச்சியை பார்த்து சற்றே மிரண்டனர்.இந்நலையில் 2011 தேர்தல் வந்தது. மூன்று எதிர் கட்சியினர் (AGP, BJP, AIUDF) தனித்தனியாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களம் கண்டனர்.

assam-political-mapகாங்கிரஸ் முதல்வர் தருண் கோகோய் மக்கள் AIUDF கட்சியின் எழுச்சியை கண்டு பயந்துள்ளனர் என்பதை அறிந்து, டெல்லியிலிருந்து AIUDF கட்சியுடன் கூட்டணி என்ற வாதத்தை வளரவிடாமல் தான் தனியாக தேர்தலை சந்திப்பதாக அறிவித்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் மௌனம் காத்தனர். பாஜக தனது அனைத்து விதமான பிரச்சாரங்களையும் முடுக்கி விட்டது. காங்கிரசுக்கு மாற்று தாங்கள் தான் என்பதை மக்களிடம் ஆணித்தரமாக எடுத்து உரைத்தனர். அதே போல் AGP கட்சியுடன் கூட்டணிக்கும் முயற்சித்தனர். ஆனால் கூட்டணி உருவாகவில்லை. பாஜக காங்கிரஸ் அரசின் உழலை மக்களுக்கு நல்ல வெளிச்சம் போட்டு காட்டியது.

பாஜக இரு வாக்கு வங்கிகளை பெரிதும் நம்பியது. ஒன்று வங்காள ஹிந்துக்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்கள். ஆனால் இந்த இரு மக்களிடம் AGP யும் நல்ல பெயர் எடுத்த கட்சிதான். ஆகவே காங்கிரஸின் கணக்கு வாக்கு பிரியும் என்பது தான். ஆகவே சற்று நம்பிக்கையுடன் இருந்தனர். பாஜகவின் உழைப்பை குறை கூற முடியாது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைக்கலாம் என்று AGP மெத்தனமாக இருந்தது. இது தான் தேர்தல் நடக்கும் முன்பு வரை இருத்த நிலவரம்.

மே 13 தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் அறுதி பெருபான்மை பெற்றது. இது ஏன்? நன்றாக தேர்தல் வாக்குகளை உற்றுப் பார்த்தால் கிட்டத்தட்ட 22 தொகுதிகளில் AGP-BJP யின் வாக்கு பிரிதலால் காங்கிரஸ் சுலபமாக வெற்றி பெற்றது. மேலும் 5-8 தொகுதி வரை சுயேட்சைகள் AGP-BJP யின் வெற்றியை மாற்றிவிட்டனர். இதனால் தற்போது இரு கட்சிகளும் செருந்து 15 தொகுதிகள் தான் வெல்ல முடிந்தது. கூட்டணி உருவாகி இருந்தால் கண்டிப்பாக 40 -43 தொகுதிகளில் சுலபமாக வென்றிருக்கலாம். அதே போல் மக்களும் AIUDF கட்சிக்கு மாற்றாக பலமான கட்சியாக காங்கிரசை தான் பார்த்தனர். ஏனென்றால் எதிர் கட்சிகளிடம் இல்லாத ஒற்றுமை. எதிர் கட்சிகள் ஒன்று சேர்த்திருந்தால் கண்டிப்பாக இந்த முறை காங்கிரஸ் அரியணைக்கு வந்திருக்காது. எனவே தவறு முழுவதும் AGP கட்சியிடம்தான். இதை அவர்கள் உணர்ந்து 2014 தேர்தலில் முழு மனதுடன் பாஜக வுடன் கூட்டணி அமைத்தால் கண்டிப்பாக மாற்றம் எதிர்பார்க்கலாம்.

இன்னொன்று நாம் கவனிக்க வேண்டும். தருண் கோகோய் பிற காங்கிரஸ் தலைவர்களை போல் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி குறி வைத்து அவர்களை மட்டுமே உயர்த்தும் எண்ணம் கொண்ட AIUDF கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை. எனவே மக்கள் அவரை நல்ல தலைவராக பார்த்தனர். எனவே கேரளாவை போல் அசாமிலும் ஹிந்துக்களின் எழுச்சியால் ஆட்சிகள் மாறும் என்பதை மக்கள் உணர்த்திவிட்டனர்.

3 Replies to “அஸ்ஸாம், கேரளா அரசியல் மாற்றங்கள்: ஒரு பார்வை”

  1. (edited and published)

    அஸ்ஸாமிலும் கேரளாவிலும் படித்த முட்டாள்கள் நிறைய பேர் உள்ளனர் என்று தெள்ளத் தெளிவாகியது இந்தத் தேர்தலில். காங்கிரசின்மத மாற்ற உத்திகளே இரண்டு மாநிலங்களிலும் வென்றிருக்கின்றன. காங்கிரஸ் எவ்வாறு கே ஜி பாலக்ரிஷ்ணனை உபயோகப்படுதியிருக்கின்றது என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தும் கூட, ஊழலின் ஊற்று காங்கிரஸ் என்று தெரிந்தும் கூட காங்கிரசுக்கு ஓட்டளிக்கும் மனநிலை அங்கெல்லாம் இருந்ததென்றால்…

    .. சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

  2. அருமையான் அரசில் கட்டுரை.வாழ்த்துகள் கேரளா மக்களுக்கும் கட்டுரையாளருக்கும்.

  3. கேரள மக்கள் படிப்பறிவு பெற்றவர்களாக இருந்தும், கம்யுனிஸ்ட் கட்சியை ஆதரித்துக்கொண்டு ஹிந்து உணர்வின்றி இருக்கின்றனர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது தெளிவடைய ஆரம்பித்து விட்டார்கள் என நினைக்கிறேன். காங்கிரசையும், கம்யுனிசத்தையும் கைகழுவினால்தான் கேரளத்துக்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *