பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5

முந்தைய பகுதிகள்:

தெய்வ வடிவத்தை ஆலயங்களில் வழிபடுவது நம் பாரத நாடெங்கிலும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரப்படும் வழக்கமாகும். அங்கு பிரதிட்டையான விக்கிரகத்தை ‘வெறும் கல்’ என்றோ, ‘எண்ணங்களைச் சீர்ப்படுத்திக் குவிக்கத் தேவையானால் உபயோகிக்கத்தகதொரு வெறும் கருவி’ என்றோ, ‘பக்குவமடையாத ஆன்மாக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட படிநிலை’ என்றோ பார்க்காமல், ‘தெய்வம் தன் அடியவர்களுக்காக எடுத்துக்கொண்டிருக்கும் எளிய வடிவம்’ என்ற கண்ணோட்டத்துடன் அணுகுவதே சான்றோர்களால் பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும். ஆதி சங்கரரும் பிரம்ம சூத்திர உரையில் பாஞ்சராத்திர அதிகரணத்தில் (2.2.42-2.2.45 சூத்திரங்கள்) “இறைவனை அபிகமனம் (கோயிலுக்குச் செல்லுதல்) முதலான வழிமுறைகளால் ஆராதனம் செய்வது அனைவர்க்கும் ஏற்கத்தக்கதே; இது சுருதி-ஸ்மிருதி சித்தமாகும்” என்று கூறியுள்ளார்.

இசுலாமியக் கொடுங்கோல் மன்னர்கள் நம் கோயில்களைச் சூறையாடுவதையும், நம் சனாதன தருமத்தை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு படையெடுப்புகள் நிகழ்த்தியது அனைவரும் அறிந்த வரலாறு. அத்தருணங்களில் சான்றோர்கள் பலர் மூல மூர்த்திகளையும் உற்சவ மூர்த்திகளையும் காப்பாற்ற உயிரையே பணயம் வைத்தனர்; பெரும் அல்லல்களையும் சந்தித்தனர். “வெறும் கற் சிலை. இது போனால் வேறு செய்து கொள்ளலாம்” என்ற கொள்கையை உடையவர்களாக இருந்திருந்தால், அப்பெரியோர்கள் அத் தியாகங்களைச் செய்திருப்பார்களா என்பது அனைவரும் சிந்திக்கத்தக்கது.

தத்துவ ஆழம் மிக்கதும் மிகுந்த இன்பம் தரக்கூடியதுமாகிய உருவ வழிபாட்டின் அருமை பெருமைகள் அன்னிய மதத்தவர்கள் மனதிற்கு எட்டாக்கனி; கருத்துச்செறிவும், பிரமிக்கத்தக்க அழகும், பண்பட்ட கலையுணர்வும் சேர்ந்த இந்நம்பிக்கையின் மேன்மையை உணர வாய்ப்பும் இல்லாமல், அதனை ‘அறிவற்ற பழங்குடிக் கலாச்சாரம்’ என்றெல்லாம் தூற்றுகின்றனர் அந்தோ! இத்தகைய சாரமற்ற, கலாரசனையற்ற, தூற்றுதல்களுக்கெல்லாம் மாறாக, வேத, வேதாந்த, இதிகாச-புராணங்களில் வல்லவர்களாக விளங்கிய நம் பழந்தமிழ்ச் சான்றோர்கள் ஆலயங்கள் மீது எத்தகைய உயர்ந்த அபிமானத்தை வைத்திருந்தனர் என்பதைக் காட்டுவது இக்கட்டுரையின் ஒரு நோக்கம். இத்தொடரின் மற்ற பகுதிகளைப் போல, சங்க காலம் தொட்டு திருமால் சமயம் சார்ந்த செய்திகளை இங்கு பார்க்கலாம்.

gopuram

வைணவத்தில் திருமால் கோயில்கொண்டுள்ள திருமேனிகளை ‘அர்ச்சாவதாரங்கள்’ என்றே அழைக்கின்றனர். திருமாலின் ஐந்து நிலைகளாகிய ‘பரம்’, ‘வியூகம்’, ‘விபவம்’, ‘அந்தர்யாமி’, ‘அர்ச்சை’ என்பனவற்றில் ஐந்தாவதாகச் சொல்லப்படுவது. இவ்வைந்து நிலைகளையும் சுவாமி நம்மாழ்வார்,

“விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்!
மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!”

[திருவாய்மொழி, 6.9.5]

எனும் பாசுர வரிகளில் காட்டியுள்ளார். இதில் ‘விண்மீதிருப்பாய்’ என்பது பரவாசுதேவனாக ஸ்ரீவைகுண்டத்தில் கோயில்கொண்டுள்ள பர நிலையைக் குறிக்கிறது; ‘மலைமேல் நிற்பாய்’ என்பது திருவேங்கடம் முதலான திருத்தலங்களில் அர்ச்சை நிலையைக் குறிக்கிறது; ‘கடல் சேர்ப்பாய்’ என்பது திருப்பாற்கடலில் அனந்த சயனக் கோலத்தில் உள்ள வியூக நிலையைக் குறிக்கிறது; ‘மண்மீதுழல்வாய்’ என்பது இராமன் கண்ணன் முதலான வடிவங்களைக் குறிக்கிறது; இதுவே விபவ அவதார நிலையாகும். ‘இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்’ என்பது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து, உயிருக்குயிராய் அனைத்தையும் ஆள்பவனாக விளங்கும் அந்தர்யாமி நிலையைக் குறிக்கிறது.

மேற்கண்ட பாசுரமும் வடமொழி வேதவாக்கியம் ஒன்றை ஒட்டியே வருகிறது. அது தைத்திரீய உபநிடதத்தின் நாராயணீய அனுவாகத்தில் (சிலர் இதை ‘மகா நாராயண உபநிஷத்’ என்றும், சிலர் ‘யாக்ஞிக உபநிஷத்’ என்றும் அழைக்கின்றனர்) உள்ள,

“அம்ப₄ஸ்ய பாரே பு₄வனஸ்ய மத்₄யே நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் |
சு’க்ரேண ஜ்யோதீஹும்ஷி ஸமனுப்ரவிஷ்ட: ப்ரஜாபதிச்’ சரதி க₃ர்பே₄ அந்த: ||”

என்னும் முதல் மந்திரம். இம்மந்திரமானது பதத்திற்குப் பதம் மேற்கண்ட திருவாய்மொழிப் பாசுரவரிகளுடன் உடன்படுகிறது. நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த மாறன்” என்று அழைப்பது வெறும் மிகைப்படுத்திப் புகழ்வதற்காக ஏற்பட்ட அடைமொழியன்று; இவ்வாறு நூற்றுக்கணக்கான பாசுரங்களில் வடமொழி வேதாந்தத்தின் உட்பொருளை உண்மையிலேயே தமிழில் செய்திருக்கிறார் என்பதற்காக.

பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சையாகிய இவ்வைந்து இறைவடிவங்களில் ஒவ்வொன்றும் சிறப்பானவை, முழுமையானவை. எனினும், அர்ச்சை நிலையானது அனைவராலும் எளிதில் அடையத்தக்கதாக – எளிமையின் சிகரமாக இருப்பதனால் மற்ற நான்கிற்கும் இல்லாத தனிப்பெரும் பெருமை உள்ளதாகப் பெரியோர்கள் பகர்வர். அனுபவத்திற்காகச் சில பெரியோர்கள் இப்படி விளக்கம் கூறுவர்:

(1) பிறவிப் பிணி நீங்கப்பெற்று முக்தி நிலையை ஏந்தியவர்கள் வாழும் பரமபதத்தில், பிறவி நோய்க்கு மருந்தாகிய திருமால் பர வாசுதேவனாகக் கோயில் கொண்டிருப்பது, வற்றாத கடலுக்கு நீர்ப்பாசனம் செய்வதைப் போன்றதாம்.

(2) பாற்கடலில் வியூக மூர்த்தியாகப் பள்ளிகொண்டிருக்கும் வடிவமானது நல்வினைப் பயன்களால் உயர்பதவி ஏந்தியுள்ள தேவர்கள், முனிவர்கள் முதலானோர்க்கு மட்டும் அடையக்கூடியது.

(3) அந்தர்யாமி நிலையானது எங்கும் வியாபித்திருக்கும் தன்மையாகும். இந்நிலையானது நமக்கு மிக அருகில் – ஏன், நமது இதயத்திலேயே – இருந்தாலும், அதுவும் யோகிகளுக்கும் சித்தர்களுக்கும் முனிவர்களுக்குமே எட்டக்கூடியது. “முழுமதி முகத்தவனின் வடிவழகையும் கம்பீரத்தையும் தம் இதயத்தாமரை தன்னில் கண்டு பிரம்மானந்தத்தை அடையும் மகானுபாவர்களுக்கு எனது வணக்கங்கள்” என்று தியாகப் பிரம்மம் பாடுவதிலிருந்து அந்த அந்தர்யாமி நிலையும் சாமானியர்களுக்கு எட்டாக்கனி என்றே விளங்குகிறது.

(4) விபவ அவதாரம் என்பது இராம கிருஷ்ணாதி அவதாரங்களைக் குறிக்கும். என்றைக்கோ பெருக்கெடுத்து ஓடியிருந்தாலும் இன்றைக்கு நாம் நேரிடையாகப் பயனடையாதபடி வற்றியுள்ள காட்டாறு போன்று, வேறு யுகத்தில் வாழ்ந்த மக்களுக்கு மாத்திரமன்றோ விபவாவதாரத்தை நேரில் கண்டு கூடிக்குலாவும் அனுபவமும் கிட்டியது!

(5)
அர்ச்சை நிலை என்பது இன்றுவரையிலும் என்றென்றும் அனைவருக்கும் காட்சி தரும் மிக எளிய நிலையாகும். இராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் என்றைக்கோ ஓடிய காட்டாறு என்றால், பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை அக்காட்டாற்றின் மடுக்களில் இன்றைக்குத் தேங்கியிருந்து பல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கோடைக்காலமாகிய கலியுகத்தில் குளிர்ச்சி தரும் ஊற்றுநீர் போன்றதாகும். ஆகையால், பரப்பிரம்மத்தின் பரிபூரணமான வடிவம் இந்த அர்ச்சை மூர்த்தி வடிவமே என்பது பெரியோர்கள் துணிவு.

“எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளைக் கோயில் கருவறையில் ஒரு சிறிய உருவமாகக் காண நினைப்பது சரியா?” என்ற ஐயம் பலருக்கு எழக்கூடும். பரம்பொருள் தன் சொரூபத்திற்கு – இலக்கணத்திற்கு ஏற்றவாறு எங்கும் நீக்கமற முழுமையுடன் நிறைந்திருப்பதற்கு “பொதுப் படர்தல்” என்று பெயர். எங்கும் நிறைந்துள்ள பொழுதும் மெய்யடியவர்கள் கல்லிலும் மரத்திலும் உலோகத்திலும் தாம் விரும்பும் மூர்த்தியை அமைத்து வழிபட விரும்பும்பொழுது அவ்வுருவில் இறைவன் மறுபடியும் தன் கலியாண குணங்களுடன் இறங்கி வந்து, அதை சுத்த சத்துவமாக மாற்றித் திருமேனியாகவும் ஏற்றுக்கொள்கிறான். இதற்கு “சிறப்புப் படர்தல்” என்ற பெயருண்டு. “பொதுப் படர்தல்” வகையைச் சேர்ந்தவைகளுக்கு முக்குணங்களின் தாக்கமும் அதனால் விளையும் குறைபாடுகளும் உண்டு; ஆயினும் “அங்கும் பரம்பொருள் உள்ளது” என்ற மனோபாவத்துடன் அவ்வப் பொருள்களுக்கு ஏற்றவாறு தக்க மரியாதையைத் தருவது அவசியமே. ஆயினும், வழிபடத்தக்க – பூஜிக்கத்தக்க உருவங்கள் என்பது “சிறப்புப் படர்தல்” வகையைச் சேர்ந்தவையே; அவற்றிற்கு முக்குணங்களின் சம்பந்தமில்லை. (வடமொழியில் இவ்விரண்டு வகையான படர்தலுக்கும் “சாமானிய வியாப்தி“, “விசிஷ்ட வியாப்தி” என்று பெயர். இவ்விளக்கம் இக்குறும்படத்திலுள்ள சொற்பொழிவைத் தழுவி எழுதப்பட்டது.)

கோயில்களில் உள்ள அர்ச்சை வடிவங்கள் சுத்த சத்துவ மயமானவையே என்ற நம்பிக்க ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மட்டும் அல்ல. நாராயண பட்டரும் நாராயணீயத்தின் முதலிரண்டு சுலோகங்களில் இதை வலியுறுத்தியுள்ளார்:

“ஸாந்த்₃ரானந்தா₃வபோ₃தா₄த்மகம் அனுபமிதம் காலதே₃சா’வதி₄ப்₄யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிக₃ம-ச’த-ஸஹஸ்ரேண நிர்பா₄ஸ்யமானம் |
அஸ்பஷ்டம் த்₃ருஷ்டமாத்ரே புனருருபுருஷார்த்தா₂த்மகம் ப்₃ரஹ்ம தத்வம்
தத்-தாவத்₃-பா₄தி ஸாக்ஷாத்₃ கு₃ருபவனபுரே ஹந்த பா₄க்யம் ஜனானாம் ||”

guruvayoorappan[நிறைந்த ஆனந்தமயமானதும், ஞானமயமானதும், ஒப்பில்லாததும், இடம், காலம் முதலிய வரையறைகளுக்குள் உட்படாததும், இருவினைகளால் விளையும் களங்கங்களிலிருந்து என்றைக்கும் விடுபட்டதும், நூறாயிரம் வேத வாக்கியங்களாலும் தெளிந்து அறியவொண்ணாததும், வீட்டின்பத்தை அளிக்கவல்லதுமாகிய பிரம்ம தத்துவமானது எளியோர்க்கும் கிட்டும்படியாக, கண்கூடாக, குருவாயூரில் நின்று மிளிர்கிறது. என்ன பாக்கியம் செய்தோம் ஜனங்களாகிய நாம்! — நாராயணீயம், 1.1]

நாராயணீயத்திற்கு உரை எழுதிய ‘தேசமங்கள வாரியார்’ என்பவர் முதல் சுலோகத்திற்கு விளக்கம் எழுதும்பொழுது குருவாயூரில் உள்ள அர்ச்சை விக்கிரகத்தைப் “பரப்பிரம்மம் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்ய, குருவாயூரில் மிகத் தெளிந்த சுத்த சத்துவ மயமான திருமேனியுடன், சகல ஜனங்களின் கண்களுக்கும் எட்டும்படியாக இறங்கி வந்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இத்தகைய அபிமானத்துடன் திருமாலைக் கோயில்களில் பிரதிட்டை செய்து பழந்தமிழர்கள் ஆராதித்து வந்துள்ளமை சங்க இலக்கியங்கள் கூறும் செய்தி.

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே

[– பரிபாடல், 4:66-71]

என்பன சங்க இலக்கியத்தில் உள்ள வரிகள். திருமால் வெவ்வேறு பெயர்களுடன் அடியவர்கள் விரும்பும்வண்ணம் கோயில் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

srirangam-moolavar

இதில் “நல் யாற்று நடுவும்” என்னும் பகுதி ஸ்ரீரங்கத்தையும், “கால் வழக்கு அறு நிலைக் குன்றம்” என்பது திருவேங்கடத்தையும் (திருப்பதி) குறிப்பதாகச் சில அறிஞர்கள் கொள்வர். பரிமேலழகர் உரையில் “ஆற்றிடைக் குறையும்” என்று காணப்படுகிறது (குறை = சிறிய தீவு). “கால் வழக்கு அறு நிலைக் குன்றம்” என்பதற்கு “காலத்தால் சேர்க்கப்பட்ட முன்வினைகளை அறுத்து முக்தி நிலையை அளிக்கும் குன்றம்” என்று பொருள் கொண்டால் திருவேங்கடத்தையும் குறிக்கிறது எனலாம். கம்பரும்,

‘கோடு உறு மால் வரையதனைக் குறுகுதிரேல்,
உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதிர்; ஆதலினால் விலங்குதிர்;’

[– கிட்கிந்தா காண்டம், நாட விட்ட படலம், 29]

என்ற பாடலில் சுக்கிரீவன் வானரர்களைச் சீதையைத் தேடுமாறு அனுப்பும்பொழுது, “நீங்கள் திருவேங்கட மலைக்கு மாத்திரம் போகாதீர்கள். அங்கு சென்றால் முக்தி நிலை கிடைத்து விடும். நீங்கள் அந்நிலையைப் பெற்று விட்டால் சீதையை யார் தேடுவது?” என்று நகைச்சுவையாகப் பாடுகிறாரன்றோ. மேலும், ‘பனம்பாரனார்’ என்னும் பழந்தமிழ்ப் புலவர் பாடியுள்ள தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்தில் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்” என்று வருமிடத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியரும்,

நிலங்கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடுபெற்ற மலை

என்று விளக்கியுள்ளமையும் நோக்கத்தக்கது. இங்கு திருமால் வாமன அவதாரத்தில் மகாபலியிடம் சென்று உலகனைத்தையும் ஈரடியால் அளந்த புராணத்தை “நிலங்கடந்த நெடுமுடி அண்ணல்” எனும் சொற்களால் நினைவூட்டுகிறார்.

tirupati-hills

இத்தொடரின் இரண்டாம் பகுதியில் உறையூரில் பங்குனி உத்திர விழா நடந்து வந்ததைப் பற்றியும் சங்க நூல் குறிப்புகள் இரண்டைக் கண்டோம். இத்தகைய சான்றுகளில் சற்றே ஊகித்துத் தான் திருமால் கோயில் கொண்டுள்ள தலங்களைக் குறிப்பதாக அறிகிறோம். ஆகையால் இது பற்றி நியாயமான கருத்து வேற்றுமையும் ஐயங்களும் எழலாம். எனினும் சிலப்பதிகாரத்தில் மிகத் தெளிவாக இவ்விரு தலங்களில் வழிபாடு சிறப்புற்று இருந்தமைக்குச் சான்று கிடைக்கிறது.

மதுரைக் காண்டத்தின் காடு காண் காதையில் கோவலன் மாங்காடு சென்றிருந்த பொழுது அங்கு வடநாட்டைச் சேர்ந்த முதிய வைதிகர் ஒருவரைக் கோவலன் சந்திக்கிறான். அவரை “எதற்குத் தென்னகம் வந்தீர்?” என்று கோவலன் வினவ, அதற்கவர்:

“‘நீல மேகம் நெடும் பொன் குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்ததுபோல,
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல்
பாயல்-பள்ளி, பலர் தொழுது ஏத்த,
விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தி,
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்

[ — சிலப்பதிகாரம், 11.35-41]

(துருத்தி = ஆற்றின் நடுவில் உள்ள தீவு; திரு அமர் மார்பன் = இலக்குமி தேவியார் அமர்ந்திருக்கும் திருமார்பை உடையவன்; கிடந்த = சயனித்த)

என்ற வரிகளில் தான் திருவரங்கத்தில் திருமால் பள்ளி கொண்ட கோலத்தையும்,

tirupati-balajiவீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல-
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்-
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற

வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன்”

[ — சிலப்பதிகாரம், 11.42-55]

(பகை அணங்கு ஆழி = பகைவர்களுக்கு அச்சத்தைத் தரும் சக்கரப்படை; மின்னுக் கோடி = மின்னல்)

என்ற வரிகளில் திருவேங்கடத்தில் அவன் நின்ற கோலத்தையும் கண்குளிரக் காண்பதற்காகவே தமிழகம் வந்திருப்பதாகக் கூறுகிறார்.

“மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு நல் நிற மேகம் நின்றது போல” என்னும் வரிகளில்,

“நீல தோயத₃ மத்₄யஸ்த₂ வித்₃யுல்லேகை2வ பா₄ஸ்வர:” [ — நாராயண சூக்தம்]

என்று வேதம் திருமாலுக்குக் கூறும் உவமையைத் தமிழாக்கம் செய்கிறார் இளங்கோ.

மேற்கண்ட சிலப்பதிகாரப் பாடல் வரிகளிலிருந்து ஆலய வழிபாடு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே பெரிதாகச் சிதறல் சிதைவுகள் ஏதுமில்லாமல் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளமைக்குத் தெளிவான சான்று கிடைக்கிறது. இத்தகைய சங்க கால / சங்கம் மருவிய கால இலக்கியச் சான்றுகள் மேலும் சிலவற்றை விரிவாக அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

பின்குறிப்பு:

நம்மாழ்வார் பாசுரம் பற்றிய விளக்கங்கள் ஸ்ரீ உ. வே. வேளுக்குடி வரதாச்சாரியார் சுவாமி அவர்களின் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பற்றிய சொற்பொழிவிலிருந்து எடுக்கப்பட்டவை.

8 Replies to “பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5”

  1. Sir,
    I do not have the facility to type in thamizh.

    I proceed in English.

    Antaryaami, you said, is not attainable even for common man, could be attained only by Saints and seers. My opinion, is, before attaining that state even seer and saints were common men. How you approach God, for what purpose you are worship him, what do you want from Him differentiates a common man from a saint. In the present circumstances, antaryaami to me, to be the best option, but that does not mean other ways are inferior. Tastes differ you know, and different tastes are the crux of our religion. Absolutely there should be no discouragement over antaryaami and its attainment, if to be attained. Pranams and pardon me for any wrong usage of language.

  2. அன்புள்ள கந்தர்வன் ,

    தங்களுடைய இந்த தொடர் ஐந்து கட்டுரைகளும் , முழுவதும் , மிக அருமையாக வந்துள்ளது. பாராட்டுக்கள்.

    நம் முன்னோர் ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களை தங்கள் உயிர் போல அல்லது தங்கள் உயிரை விட மேலாக பாது காத்தனர் என்பது உண்மையே ஆகும். ஆனால் நம் ஆலயங்களும் சரி,ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூலவர் அல்லது உத்சவர் விக்ரகங்கள் எதுவாயினும் சரி. இவை எதுவுமே நிரந்தரம் அல்ல. இஸ்லாமிய கொடுங்கோலர்களால் ஏற்பட்ட பேரழிவு மட்டுமல்ல, இயற்கை சீற்றங்களாலும் பல நூற்றாண்டுகளாக பலவேறு திருக்கோயில்களும் , பலவேறு விக்கிரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

    நமக்கு எல்லைகள் எதுவும் கிடையாது. எவ்வளவு பாதிப்புக்கள் வந்தாலும், மீண்டும் புதிய திருக்கோயில்களும், புதிய விக்கிரகங்களும் உருவாக்கப்படும். இது காலத்தின் கட்டாயம். சமீன்பத்தில் காளகஸ்தி என்ற ஆந்திர திருத்தலத்தில் திருக்கோபுரமே சிதைந்து இடிந்து விழுந்தது. அது இன்றுவரை புதுப்பிக்கப்படவில்லை. ஏனெனில் ஆந்திர அரசியல்வாதிகள் தெலுங்கானா சண்டைபோட்டுக்கொண்டு , இதில் எவ்வித கவனமும் செலுத்தாமல் உள்ளனர்.

    பழைய காலகோயில்கள் பலவும் போதிய பராமரிப்பின்றி உள்ளன. எதிர்காலத்திலும் பல திருக்கோயில்களும், விக்கிரகங்களும் பெரிய அளவிலான பாதிப்புகளை அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அதை நாம் தடுக்க முடியாது. புதியன சமைப்போம். புதுப்பிப்போம் அல்லது புதியன கட்டுவோம்.

    கோயில்களும் அங்குள்ள விக்கிரகங்களும் மிக புனிதமானவை. ஆனால் நம் மதம் அவற்றை மட்டுமே நம்பி உள்ள மதம் அல்ல. ஒரு கோயில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டால் வேறொரு கோயில் கட்டப்படும். விக்ரகம் தேய்ந்து போய், பின்னமேற்பட்டால் புதிய விக்ரகங்கள் செய்வோம்.

  3. Shri Raghavan,

    Namaskaram and thank you for your comment. I myself am a student and no expert in these matters. Whatever I write is my grasp of scholarly expositions and writings of great people that I have been exposed to.

    Coming to the question you raised: I tend to keep aside opinions and personal tastes, and consider the facts:

    1) To the best of my knowledge, even highly realized souls such as Azhvars, showed much involvement in Archa (even though they did emphasize the antaryAmi manifestation many times). Eg., Nammazhwar performing sharaNAgati for the Lord at Tirupati.

    2) Sri Pillai Lokacharya, an eminent Acharya has taught that the defining characteristic of a person emancipation through prapatti is to enjoy the defining characteristics of the Supreme Being in the deity form (அர்ச்சையில் பரத்துவம் காண்பது பிரபன்னனுக்கு லக்ஷணம்).

    3) I clearly remember reading in vishishta-dharma-smritis that those who are engaged in Antaryami worship ie. Upanishadic vidyas like Dahara Vidya etc. are disqualified automatically from Archa worship.

    To sum up, my impression is that Santana Dharma/Vaishnavism emphasizes the position that what is easily accessible is the best and the highest. Sri Parasara Bhatta also testifies so in the introduction to Bhagavad Guna Darpana (commentary on Vishnu Sahasranama).

  4. அருமையான கட்டுரை

    தேவப்ரியாவின் இந்த விபரமும் அனைவர் பார்வைக்காக-
    சங்க இலக்கியத்தில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்
    https://devapriyaji.activeboard.com/forum.spark#lastPostAnchor
    https://devapriyaji.wordpress.com/2011/07/11/padmawaapa/

  5. This has reference to the various comments raised to Mr.Senthil on the topic “Hindu endru sollada” – I would request Mr.Senthil to take a dictionary available in various libraries printed in the year 1850 to 1900 and find out the word Rocket, Satellite, Aerospace, atom bomb, cell phone. As these are not available in this dictionary i believe there are no such things. What we are discussing is about the ancient documents and subsequent “PARIMANAM” – You cannot wake up a pretending sleeping man

  6. This has reference to the various comments raised by Ms.Vidhya on the topic “Hindu endru sollada” – I would like to mention that KARUNANIDHI is Sanskrit based. Anbu chelvan is the correct word. “UDHAYA SURIAN’ – is a Sanskrit based word. The proper tamil word is EZHU GNAYERU.
    Then how shall we call the honourable STALIN in Tamil. Is it a Tamil Name from the tamil savior family. My be we can call சாடாலின்.

  7. விக்கிரக ஆராதனை நமது பண்பாடு என்று அறுதியிட்டுக் கூறுவது முழுமையானது அல்ல. இன்னிசை வீணையா் யாழினா் ஒருபால் இருக்கோடு தோத்திரம் இயம்பினா் ஒரு பால் துன்னிய பினை மலா்கையினா் ஒருபால் தொழுகையா் அழுகையா் துவழ்கையா் ஒரு பால் சென்னியில் அஞ்சலி கூப்பினா் ஒரு பால் திருப்பெருந்துறை சிவபெருமானே என்று விக்கிரகம் அல்லாத வழிபாடுகள் சிறப்பிக்கப்படுவதைக்காணலாம். வள்ளல் பெருமாள் இராமலிங்க அடிகளாரும் அருட்பெருஞ்சோதி வழிபாடு என்ற முறையை எற்படுத்தி சிறப்பித்தது நினைவு கூறத்தக்கது.சிலை வணக்கத்தை பின்னுக்கு தள்ள வேண்டும் என்ற கருத்து கொண்டவா் வள்ளல் பெருமானும் சுவாமி விவேகானந்தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *