கம்பன் பாடிய குறள்

ம்பராமாயணம் எனும் மகா காவியத்தில், பாலகாண்டத்தில் உள்ள வேள்விப் படலம் எனும் படலத்தில், ஒரு குட்டிக் கதை போல சுருக்கமாக வாமனாவதாரம் வருகிறது. இந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் கம்பன் விவரிக்கிறான்.

விசுவாமித்திர முனிவனை நிழல் போலத் தொடர்ந்து ராம லட்சுமணர்கள் போய்க் கொண்டிருக்கின்றனர். தாடகை வதம் முடிந்த பின்னர், மூவரும் ஒரு அழகிய சோலையை அடைகின்றனர். அச்சோலையின் பெயர் சித்தாசிரமம். முன்னாளில் திருமால் தன்னை யோகத்தில் நிறுத்தித் தவம் புரிந்த இடம் அது. வாமனனாக அவதரித்து மகாபலியை அடக்கிய இடமும் அதுவே என்று தொடங்கி, அந்த சரிதத்தை முனிவன் இராம லட்சுமணர்களுக்குக் கூறுகிறான்.

ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்.

[ஆனவன் – அந்தத் திருமால்; ஞாலம் – உலகம்; எயிற்று – பற்களை உடைய; ஆண் ஏனம் – ஆண் பன்றி வடிவுடைய ஆதி வராக மூர்த்தி; திறல் – வல்லமை உடைய; வவ்வுதல் செய்தான் – பறித்துத் தன் வசப்படுத்தினான்]

ஆதி வராக மூர்த்தி தன் கோரைப் பற்களால் அனாயாசமாக பூமியைத் தாங்கினார். அது போல, வானம் பூமி இரண்டையுமே தன் வீரத்தால் அனாயாசமாக மாவலி வெற்றி கொண்டு தன் வசமாக்கினான். மாவலி அசுரனாக இருப்பினும் தெய்வ சம்பத்துடையவன் என்று குறிப்பிட்டு உணர்த்துவதற்காக, வராக மூர்த்தி போல என்று இங்கு கம்பன் உவமை கூறுகிறான்.

vamana_with_aditi_kasyapaகாலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால்-அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்து, ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான்.

[நுனித்து உணர் – சூட்சுமமாக ஆராய்ந்து அறிகின்ற; காசிபன் – காசியபன்; வால்-அறிவற்கு – தூய அறிவை உடைய முனிவருக்கு; மகவு – மகன்; நெடுந்தகை – பெருமைக் குணங்களை உடைய திருமால்; அருங் குறள் – அரிய வாமன வடிவம்]

அப்போது தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி, காசியபன் என்ற நல்லறிவு கொண்ட முனிவனுக்கும், தேவமாதா அதிதிக்கும் மகனாக, ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல, நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.

மிகப் பெரியோனாகிய விஷ்ணு அந்தச் சிறிய குள்ள வடிவத்தில் அடங்கியது பற்றியதும், இந்தக் குள்ள வாமனன் பின்னர் திரிவிக்ரமனாக ஓங்கி வளரப் போவது பற்றியும், இந்த இரண்டையும் உணர்த்தும் விதமாக ’ஆல் அமர் வித்தின் அருங் குறள்’ என்று அழகுறக் கவி கூறுகிறான்.

வாமனனைக் குறிக்க “குறள்” என்னும் சொல் கம்பன் உண்டாக்கியதன்று. திவ்வியப் பிரபந்தத்திலும், அதற்கு முன்பும் கூட அச்சொல் அவ்வாறே தமிழிலக்கியத்தில் பயின்று வந்திருக்கிறது.

தேவுடைய மீனமாய் ஆமையாய்
ஏனமாய் அரியாய்க் குறளாய்

என்றும்

மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ

என்றும் பெரியாழ்வார் பாடி இன்புறுவது காணலாம்.

முப்புரி நூலினன், முஞ்சியன், விஞ்சை
கற்பதோர் நாவன், அனல் படு கையன்,
அற்புதன் – அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஒர் மெய்க் கொடு – சென்றான்.


[முஞ்சியன் – முஞ்சிப் புல்லால் ஆன அரைஞாண் கயிற்றை அணிந்தவன்; விஞ்சை – வேத மந்திரம்; நாவன் – நாவை உடையவன்; சிற்பதம் – ஞான சொரூபம்; மெய்க் கொடு – உடல் கொண்டு;]

vamana_tanjore_paintingவாமன பிரம்மசாரி பூணூல் அணிந்து, முஞ்சைப் புல்லை அரைஞாணாகக் கட்டியிருக்கிறான். காலையும் மாலையும் சமித்துக்களைத் தன் கைகளால் தீயில் இட்டு அக்னியை வழிபடுவதால் ‘அனல் படு கையன்’ ஆக இருக்கிறான். வேதமாகவும், வேதத்தின் பயனாகவும், சகல ஞான சொரூபமாகவும் விளங்கும் சர்வேஸ்வரன் கற்பதற்கு என்ன உள்ளது? ஆயினும் பிரமசரிய விரதப் படி வேத மந்திரங்களை நாவால் உச்சரிக்கிறான். எனவே, “கற்பதோர் நாவன்” என்கிறார் கவி.

அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள் சுவரொட்டிகளாக நின்று, கிழிந்து, மாடு தின்று கழிந்தது போக எஞ்சியிருப்பவை ஒட்டுவாரொட்டி நோயைக் கிருமியாகப் பரப்புகின்றன. மோதிரம் தங்கம் வெள்ளி வகையறாக்கள் எங்கிருந்தோ வந்து சட்டென்று கைகளில் விழும் அற்புதத்தைக் கண்டு மந்தைகள் ஆன்மீக பரவசமடைகின்றனர். மருந்து சிகிச்சை எதுவும் இல்லாமல் நோய்கள் அற்புதமாக மாயமாய் மறைந்து விடுகின்றன. இத்தகைய அற்புதமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால் இங்கு கம்பன் கூறும் அற்புதம் அத்தகையதல்ல.

”அற்புதரே அறியும் தன் சிற்பதம்” என்ற தொடரால், இங்கு ஞானவான்களுடைய ஞானமே அற்புதமாகக் கூறப் பட்டது என்பது விளங்கும். வியப்புக்குரிய ஞானிகள் மட்டுமே அறியும் தன் ஞான சொரூபம் போல, எவர்க்கும் எளிதில் அறியமுடியாத சிறிய வடிவம் கொண்டு வாமனன் சென்றான் என்பது கருத்து. அதனால் தான், உயர் ஞான நிலை அடைந்த காரைக் காலம்மையார் பாடிய ஒரு பிரபந்தம் அற்புதத் திருவந்தாதி என்று சைவத் திருமுறைகளில் வழங்கப் பெறுகிறது.

கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி, அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புற நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி!

என்று சேக்கிழார் சிவ சொரூபத்தைப் போற்றுவதனையும் இதனுடன் ஒப்பிட்டு மகிழலாம்.

சிந்தை உவந்து எதிர், “என் செய” என்றான்;
அந்தணன், “மூவடி மண், அருள் உண்டேல்,
வெந்திறலாய்! இது வேண்டும்” எனாமுன்
“தந்தனென்” என்றனன்; வெள்ளி, தடுத்தான்.

king-mahabali-and-vamana[சிந்தை உவந்து – மனம் மகிழ்ந்து; வெந்திறலாய் – பகைவரை அழிக்கும் கொடிய வலிமை உடையவனே; எனாமுன் – என்று சொல்வதற்கு முன்னமே; தந்தனென் – தந்தேன்; வெள்ளி – அசுர குரு சுக்கிராச்சாரியார்]

வேள்விச் சாலையை அடைந்த வாமனனை, மனம் மகிழ்ந்து எதிர் கொண்டழைக்கிறான் மாவலி. ”அருள் உண்டானால், மூவடி மண் இது வேண்டும்” என்று வாமனன் யாசிக்கிறான். அவன் கேட்டு முடிப்பதற்கு முன்னமேயே தந்தேன் என்று மாவலி சொல்லி விட்டானாம்! அப்பேர்ப்பட்ட ஈகைக் குணம் மாவலியுடையது.

வந்தவன் சாதாரண பிரமசாரி அல்ல, திருமாலே என்று பக்கத்திலிருந்த வெள்ளிக்குத் தெரிந்து விட்டது. உடனே மாவலியைத் தடுக்கிறான்.

“கண்ட திறத்து இது கைதவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும், மேல் நாள்
உண்டவன் ஆம்; இது உணர்ந்து கொள்” என்றான்.

[கண்ட திறத்து இது – நாம் காணும் தன்மையை உடைய இவ்வடிவம்; கைதவம் – வஞ்சனை உடையது; கொண்டல் – மேகம்; அகண்டமும் – எல்லாமும்; மேல் நாள் – முன்னொரு காலத்தில்]

இந்தக் கார்மேக நிறக் குள்ளனைப் பார்த்து ஏமாந்து விடாதே. இது வஞ்சனையான வடிவம். பிரளய காலத்தில் அண்ட சராசரங்களையும், அவற்றில் உள்ள அத்தனை உயிர்களையும் தன் வயிற்றில் அடக்குபவன் இவன். தெரிந்து கொள்!

”நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட, வந்து
தனக்கு இயலாவகை தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னில்,
எனக்கு இதன்மேல் நலம் யாது கொல்?” என்றான்.


[நினைக்கிலை – இதை நீ நினைக்கவில்லையே; தாழ்வு இல் கனக் கரியானது – குறைவில்லாத, நீர்கொண்ட மேகம் போல கரிய திருமாலுடைய; இதன் மேல் – இதை விடப் பெரிய; யாது கொல்? – என்ன இருக்கிறது?]

அதைக் கேட்ட மாவலி கலக்கமடையவில்லை. மாறாக, அவனது மகிழ்வு பல மடங்காகி விட்டது.

”என் கை கொடுக்குமாறு நிமிர்ந்திருக்க, யாசிக்குமாறு தனக்கு இயலாத வகை தாழ்ந்திருப்பது தாழ்வில்லாத திருமாலின் கை என்றால், அதை விட பெரிய பெருமை வேறு என்ன உள்ளது? இதை நீ நினைத்துப் பார்க்கவில்லையே வெள்ளி!” என்கிறான்.

தனக்கு இயலா வகை தாழ்வது – என்பது அடியார்களுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கீழிறங்கி வந்து அருள் செய்யும் இறைவனது எளிவந்த தன்மை (சௌசீல்யம்) என்னும கல்யாண குணத்தைக் குறித்தது. அது அவனுடைய இயல்பாகவே ஆகிவிட்டது.

kambar_stampவெள்ளியை ஆதல் விளம்பினை, மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்,
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.

[விளம்பினை – கூறினாய்; வள்ளியர் ஆகில் – வள்ளல் தன்மை கொண்டவர்களாக இருந்தால்; எள்ளுவ என் சில? – விலக்கப் பட்டவை என்று சில பொருட்கள் உள்ளதா என்ன? கொள்ளுதல் – யாசித்துப் பெறுதல்; நன்றால் – நன்று + ஆல், ஆல் என்பது அசைச் சொல்].

ஈகையின் சிறப்பை மேலும் விரித்து வெள்ளியிடம் மாவலி பேசுகிறான் – உண்மையான வள்ளல் தன்மை என்பது பலனை எதிர்ப்பார்த்து செயல்படுவதில்லை; கணக்குப் பார்த்து, இவருக்குக் கொடுக்கலாம், இவருக்குக் கொடுக்கக் கூடாது, இதைக் கொடுக்கலாம், இதைக் கொடுக்கக் கூடாது என்றும் யோசிப்பதில்லை. உயிரே போவதானாலும், இரத்தல் தீயது. கொடுப்பதே நல்லது.

இப்பாடலில்,

நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

என்ற திருக்குறளின் கருத்து உள்ளுறை பொருளாக வருகிறது.

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
ஏந்திய கையொடு இரந்தவர்; எந்தாய்!
வீந்தவர் என்பவர் வீந்தவரேனும்
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே?

[வீந்தவர் – இறந்தவர்கள்; இரந்தவர் – யாசித்தவர்கள்; ஈந்தவர் – கொடுத்தவர்கள்]

இறந்தவர்கள் உண்மையில் இறந்தவர்கள் அல்லர். யாசித்து வாழவேண்டிய நிலை வந்தும் உயிர்விடாது, ஏந்திய கையோடு இரந்தவர்களே உண்மையில் இறந்தோர். அதே போல, வெறும் உடம்போடு உயிர் வாழ்வோர் வாழ்பவர்கள் அல்லர். யாசிப்பவர்க்கு ஈந்து, தம் மரணத்திற்குப் பின்னும் புகழுடம்போடு வாழ்பவர்களே உண்மையில் வாழ்ந்தோர்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்; பரந்து
கெடுக உலகியற்றியான்.

என்று வள்ளுவர் இட்ட சாபமும்,

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

என்று வள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறியும் இப்பாடலைப் படிக்கையில் நினைவில் எழுகின்றன.

mahabali_and_vamana_sculpture

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.

[அழகிதோ – அழகாகுமா; தகவு இல் – நற்குணம் இல்லாத; கொடுப்பது விலக்கு கொடியோய் – தானத்தைத் தடுக்கின்ற கொடியவனே; விடுகின்றாய் – ஆகி விடுகின்றாய்]

ஈகையின் பெருமைகளைக் கூறிய பிறகு, தனது தானத்தைத் தடுப்பது சுக்கிராசாரியாரிக்குப் பாவத்தையே விளைவிக்கும் என்றும் அவருக்கு அறிவுறுத்துகிறான் மாவலி. தானம் தருவதைத் தடுப்பவனது சுற்றம் உண்ணவும், உடுக்கவும் கூட முடியாத தரித்திரத்தை அனுபவிக்கும் என்ற தர்ம சாஸ்திரத்தை மகாபலி வாய்மொழியாகக் கம்பன் கூறுகிறான். அசுர ராஜன் அசுர குருவுக்கு அளிக்கும் உபதேசம் இது!

இப்பாடலில் திருக்குறளின் சொல்லாட்சியை அப்படியே நேரடியாகக் கம்பன் எடுத்தாள்கிறான்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

’பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும்’ என்பார் உரையாசிரியர் பரிமேலழகர். சுற்றமும் கெடும் என்று கூறியதால் அவன் கேடு சொல்லாமையே பெறப் பட்டது.

முடிய, இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி,
”கொடியன்” என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்;
”அடி ஒரு மூன்றும் நீ, அளந்து கொள்க” என,
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான்.


[கொண்டிலன் – கொள்ளவில்லை; நெடியவன் – நீண்ட திருமால்; குறிய கை – சிறிய கை]

இவ்வாறு, மந்திரியாகிய சுக்கிரன் சொன்னது எதையும் மனதில் கொள்ளாமல், நீ கேட்ட மூன்று அடியை அளந்து எடுத்துக் கொள் என்று தண்ணீரை எடுத்து தாரை வார்த்தான் மகாபலி. தனது சின்னஞ்சிறிய கைகளை நீட்டி மாயவன் அதை வாங்கிக் கொண்டான்.

கயம் தரு நறும்புனல் கையில் தீண்டலும்
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் –
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.

[கயம் தரு நறும்புனல் – குளத்திலுள்ள நல்ல நீர்; பயந்தவர்களும் – பெற்றவர்களும்; குறளன் – குள்ளனான வாமனன்; வெருக்கொள – ஆச்சரியப் பட; விசும்பின் – ஆகாயத்தில்]

trivikrama_avatara_sculpture

அடுத்த கணம், வாமனனாக வந்தவன் ஓங்கி உயர்ந்து திரிவிக்கிரமாக வளர்ந்தான்.

பயந்தவர்களும் இகழ் குறளன் – காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அல்லவா? பெற்றவர்கள் யாராவது தங்கள் குழந்தையை இழிவாக நினைப்பார்களா? என்னில், இங்கு இகழ்தல் என்ற சொல் அவமதித்தல் என்ற பொருளில் அல்ல, வடிவச் சிறுமை பற்றிக் கேலி பேசுதல் என்ற பொருளில் வந்தது. குள்ளா, குள்ளி என்று இன்று கூட நாம் குழந்தைகளைக் கொஞ்சுகிறோமே அது போல. “சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்” என்ற பெரியாழ்வார் பாசுரத்தையும் ஒப்பு நோக்கி இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல என்று. நல்லோர்களுக்குச் செய்யும் சிறிய உதவியைக் கூட அவர்கள் மிகப் பெரிதாக எண்ணுவது போல, சிறியவன் பெரிதாக வளர்ந்தான் என்பது நேரடிப் பொருள்.

ஆனால், இங்கும் திருக்குறளை மனதில் வைத்துக் கம்பன் எழுதியிருக்கிறான் என்பது கண்கூடு.

உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

மகாபலி மகாவிஷ்ணுவுக்குச் செய்த உதவி மூன்று அடி மண் அளித்தது. அது சிறியது. ஆனால் அவ்வுதவிப் பயன் மகாவிஷ்ணுவின் சால்பு போல, மூவுலகத்தையும், சிரஞ்சீவித் துவத்தையும், பாகவத உத்தமர்களில் ஒருவன் என்னும் பெரும் பதவியையும், என்றென்றும் உலகத்தாரால் போற்றிக் கொண்டாடி வணங்கப் படக் கூடிய பெருமையையும் எல்லாம் மகாபலிக்கு அளித்தது. அது தான் உயர்ந்தவர்க்கு உதவிய உதவியின் பயன்!

இப்போது அந்த உவமையின் முழுப் பொருள் நமக்குப் புரிய வருகிறது.

நின்ற தாள் மண் எலாம் நிரப்பி, அப்புறம்
சென்று பாவிற்றிலை, சிறிது பார் எனா;
ஒன்ற, வானகம் எலாம் ஒடுக்கி, உம்பரை
வென்ற கால் மீண்டது, வெளி பெறாமையே.

[நின்ற தாள் – ஊன்றிய கால்; பாவிற்றிலை – பரவியதில்லை; சிறிது பார் எனா – பூமி சிறியது என்பதால்; ஒன்ற – ஒருசேர; உம்பரை – மேலுலகை; வெளி பெறாமையே – வேறு இடம் இல்லாததால்]

நிலத்திலே ஊன்றிய ஒரு கால் மண்ணுலகம் முழுதையும் நிரப்பி, பூமி சிறியது என்ற காரணத்தினால் அதற்கு அப்புறம் சென்று பாவவில்லை. ஆகாயம் அனைத்தையும் ஒருசேர தன்னுள் ஒடுக்கி, வானுலகத்தை வென்ற மற்றொரு கால், அதற்கு மேலும் வேறு இடம் இல்லாமல் திரும்பி விட்டது.

எம்பெருமானது பாதங்கள் எல்லையேதும் இன்றி இன்னும் பெரிதாக வளரக் கூடியன. ஆனால் மேலே செல்வதற்கு இடமில்லையாகையால், மண்ணையும் வானையும் அளக்கையில் ஓரளவோடு நின்று விட்டன.

சர்வேஸ்வரன் மூவுகலங்களையும் அளந்தது என்பது மிகவும் சாதாரண விஷயம் என்பது கருத்து. ”தாள் பரப்பி மண் தாவிய ஈசனை” என்ற நம்மாழ்வார் வாக்கை (திருவாய்மொழி, 3.3:11) இங்கு அழகாக எடுத்தாண்டிருக்கிறான் கம்பன்.

vamanaஉலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ்வடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன் –
சிலை குலாம் தோளினாய்! – சிறியன் சாலவே!


[அலகு உலாது – அளப்பதற்கு இடம் இல்லாது; அன்பன் மெய்யதாம் – அன்பனான மாவலியின் சிரம் இடமாயிற்று; இலை குலாம் துழாய் முடி – இலைகள் விளங்குகின்ற துளசி மாலையை அணிந்த திருமுடியை உடைய; சிலை குலாம் தோளினாய் – வில் குலாவுகின்ற தோளை உடைய இராமனே; சிறியன் சாலவே – மிகவும் சிறியவன் தான்]

உலகமெல்லாம் இரண்டடிக்குள் அடங்கி விட்டதால் மூன்றாம் அடிக்கு இடம் இல்லாது போகவே, அன்பனான மகாபலியின் சிரம் அதற்கு இடமாயிற்று. அதன் சிறப்புப் பற்றி சிரத்தை “அன்பன் மெய்யதாம்” என்று கவி உரைத்தார்.

கீழுலகமாகிய பாதாளமும் பூமிக்குள் அடங்கும் என்பதால் அதைத் தனியாகக் குறிப்பிடவில்லை. உலகெங்களை எல்லாம் தன் பாதம் கொண்டு அளந்தபோதும் அங்குள்ள ஜீவராசிகள் எதற்கும் சிறிதும் துன்பம் ஏற்படாத வகையிலேயே தன் திருவடிகளை வைத்தான் என்பது “உள்ளடி அடக்கி” என்ற சொல்லாட்சியால் விளங்கும்.

சிறியன் சாலவே – ”இப்பேர்ப்பட்ட வாமன மூர்த்தி உண்மையில் ஒரு சின்னப் பையன் தானே?” என்று இவ்வளவு நேரம் சமர்த்தாகக் கதை கேட்டுக் கொண்டு வந்த ராமனைப் பார்த்து விசுவாமித்திர முனிவர் சொல்லி முடிக்கிறார். வேள்வி காக்க சின்னப் பையனான உன்னைக் கூட்டி வந்திருக்கிறேன் என்பதைக் குறிப்பால் உணர்த்திப் பேசும் பேச்சு. வாமன பிரமசாரி கையில் ஒன்றுமில்லாமல் போய் யாசகம் கேட்டு மாவலியை அடக்கி விட்டான். ஆனால் உன் தோளில் அப்பேர்ப் பட்ட வில்லும் இருக்கிறது, பார்த்துக் கொள் – சிலை குலாம் தோளினாய்!

உரியது இந்திரர்க்கு இது என்று உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான்;
கரியவன், உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் தொடச் சிவந்து காட்டிற்றே!

[ஈந்து போய் – கொடுத்து விட்டுச் சென்று; விரி திரை – அலைகள் பரவும்; பள்ளி மேவினான் – படுக்கையைச் சென்றடைந்தான்; கரியவன் – கரிய நிறம் கொண்ட திருமால்; தாள் இணை – இரு திருப்பாதங்களும்]

இப்படி மாவலியின் ஈகைத் திறத்தால் கிடைத்த உலகைத் தான் வைத்துக் கொண்டானா? இல்லை. இந்திரனுக்குரிய உலகம் என்று அவனுக்கு தானம் செய்து விட்டு, தான் மறுபடி பாற்கடலில் பாம்பணையில் படுக்கப் போய் விட்டானாம்.

பக்கத்தில் திருமகள். இப்படி உலகமெலாம் அளந்த திருவடியை அவளது மென்மலர்க் கரம் வருட, அது சிவந்து போய்விட்டது என்று கூறி மங்களகரமாக வாமனாவதாரக் கதையைக் கம்பன் முடிக்கிறான்.

மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி சேப்ப

என்று கம்பனுக்கு முன்னமேயே சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவும் திருமாலின் திருவடித் தாமரைகள் குறித்து இவ்விதம் பாடியிக்கிறார்.

*******

எனவே, வாமனர் பற்றிய தொன்மம் தமிழ் மரபில் மிகப் பண்டைக் காலம் முதற்கொண்டே பிரபலமாக இருந்திருக்கிறது என்று புலனாகிறது. திருக்குறளிலும் மடியின்மை என்ற அதிகாரத்தில் வருகிறது.

மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயதெல்லாம் ஒருங்கு.

தன் அடி அளவாலே எல்லா உலகங்களையும் அளந்து இறைவன் கடந்த பரப்பு முழுவதையும், சோம்பல் இல்லாத மன்னவன் ஒருசேர அடைவான்.

thiruvalluvarதிருவள்ளுவரைப் புகழ்ந்து பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவள்ளுவ மாலை என்று அழைக்கப் படுகிறது. இந்நூலில் இரண்டு பாடல்கள் வாமன அவதாரத்தை உவமையாக்கி திருக்குறளின் பெருமையை அழகுறப் பேசுகின்றன.

பரணர் பாடியது:

மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால்
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் – வால் அறிவின்
வள்ளுவரும் தம் குறள் வெண்பா அடியால் வையத்தார்
உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து.

[மாண் அடியால் – பெரிய அடிகளால்; நயந்து – விரும்பி; வால் அறிவின் – தூய அறிவுடைய; உள்ளுவது எல்லாம் – நினைக்கப் பட்டவை எல்லாம்; ஓர்ந்து – ஆராய்ந்து]

திருமால் குறளாக வளர்ந்து தனது பெரிய இரண்டடிகளால் உலகம் முழுவதையும் விரும்பி அளந்தான். அறிவாற்றல் பெற்ற வள்ளுவரும் தனது சிறிய குறள் வெண்பாவின் இரண்டடிகளால் உலகத்தார் நினைப்பவை எல்லாவற்றையும் ஆராய்ந்து அளந்து விட்டார்!

பொன்முடியார் பாடியது:

கான் நின்ற தொங்கலாய்! காசிபனார் தந்தது முன்
கூ நின்று அளந்த குறள் என்ப – நூன்முறையான்
வான் நின்று மண் நின்று அளந்ததே வள்ளுவனார்
தாம் நின்று அளந்த குறள்.

[கான் நின்ற தொங்கலாய் – மணம் வீசும் மாலை சூடிய பாண்டியனே; காசிபனார் – காசியப முனிவர்; கூ நின்று – மண்ணில் நின்று; நூன்முறையான் – தரும நூல்களின் முறையோடு கூடி]

மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள். வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள் என்று இந்தப் புலவர் சமத்காரமாகப் பாடுகிறார்.

திருத்தணிகை சரவணப் பெருமாளையர் இப்பாடலுக்கு அருமையாகக் கீழ்க்கண்டவாறு உரை தருகிறார்:

”அக்குறள் வஞ்சித்துப் பெற்று அளத்தலால், நூன்முறையோடு கூடாததாயிற்று. இக்குறளுக்கு, ஒலிவடிவும் வரிவடிவம் என இரண்டு வடிவு உள்ளமையால், ஒலி வடிவுக்கு இடம் வான் ஆகலின் வான் நின்று என்றும், வரி வடிவுக்கு இடம் மண் ஆகலின் மண் நின்று என்றும் கூறினார். இக்குறளுக்கு நூன்முறையோடு கூடலும் வான் நிற்றலும் மிகுத்துச் சொல்லி வேற்றுமை செய்யப் பட்டது.”

கம்பன் பாலகாண்டத்தில் வாமனாவதாரக் கதையைப் பாடியதை மேலே பார்த்தோம். ஆனால் அத்தோடு மட்டும் அவன் நிற்கவில்லை. காவியத்தில் பல இடங்களில் உலகளந்த பான்மையைப் பாடிக் கொண்டே இருக்கிறான்.

ராமனைத் தேடி படை பரிவாரங்களோடு பரதன் கானகத்திற்கு வருகிறான். வழியில் முதலில் குகனைச் சந்திக்கிறான். இருதரப்பிலும் ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள். கனத்த முகத்துடன் நின்று கொண்டிருக்கிறாள் கைகேயி. அவளை அறிமுகப் படுத்தி வைக்க வேண்டிய கட்டத்தில், கவிக் கூற்றாக இப் பாடல் –

சுடு மயானத்திடை தன் துணை ஏக,
தோன்றல் துயர் கடலின் ஏக,
கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி
ஏக, கழற்கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம்
தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை, “ஆர் இவர்?”
என்று உரை, என்ன; குரிசில் கூறும்:

அயோத்தியா காண்டம், கங்கை காண் படலம்

துணைவனான தசரதன் மயானத்து நெருப்பில் வெந்து கொண்டிருக்கிறான். மகன் பரதன் சோகக் கடலில் மூழ்கி விட்டான். கருணைக் கடலான ராமனோ கானகத்தைப் பார்த்துப் போய்விட்டான். இவ்வளவுக்கும் காரணமானவள் இந்தக் கைகேயி. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம், தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்! அவளைப் பார்த்து யார் இவள் என்று குகன் கேட்க, பரதன் அறிமுகம் செய்கிறானாம்.

இன்னொரு காட்சி. தன் ஆற்றல் உணர்ந்த அனுமன் கடலைத் தாண்டுவதற்காக, வானத்தைத் தொடும் பேருருவம் எடுக்கிறான்.

vamana-north-sculptureபொரு அரு வேலை தாவும் புந்தியான், புவனம் தாய
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்ந்த தாள் போல்
உருவு அறி வடிவின் உம்பர் ஓங்கினன்; உவமையாலும்
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான்.

கிட்கிந்தா காண்டம், மயேந்திரப் படலம்

[பொருவு அரு வேலை – ஒப்பற்ற கடல்; புந்தியான் – எண்ணம் கொண்ட அனுமன்; தாய – அளந்த; மேக்கு உறப் பெயர்ந்த – மேற்சென்று பொருந்துமாறு உயர்ந்த; உருவு அறி வடிவின் – தனது உருவத்தை யாவரும் அறிவதற்கு உரிய வடிவத்தோடு; உம்பர் ஓங்கினன் – வானளாவ வளர்ந்தான்]

உலகளந்த நாளில் வான முகட்டைச் சென்று தீண்டிய மாயோனின் திருவடி போல, அனுமன் வளர்ந்தான். அதனால், பின்னாளில் யுத்தத்தின் போது ராமனைத் தோளில் சுமந்து தான் பெறப் போகும் சிறிய திருவடி என்ற திருநாமத்தின் பெயருக்குப் பொருள் சேர்க்குமாறு இப்போதே விளங்கினான் என்கிறது கம்பன் கவி.

தேவரும் திசைகளும் கலங்க, வானில் ஒளிமயமாகப் பறந்து, கடலைத் தாண்டிச் செல்கிறான் அனுமன்.

நாலினோடு உலகம் மூன்றும் நடுக்குற, அடுக்கி நாகர்
மேலின் மேல் நின்றகாறும் சென்ற கூலத்தின், ‘விண்டு
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்கக் கால
வாலினால் அளந்தான்’ என்று வானவர் மருள, சென்றான்.

சுந்தர காண்டம், கடல் தாவு படலம்

[நாகர் மேலின் மேல் அடுக்கி நின்ற காறும் சென்ற கூலத்தின் – தேவர்களுடையனவாய் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப் பட்டு இருக்கின்ற உலகங்களின் மேல் கரையிலும் (கூலம் – கரை); கால வாலினால் – கால பாசம் போன்ற வாலினால்]

அண்ட கடாகங்களின் மேற்கரையைத் தொட்டு விட்டானோ? அன்று திருமால் காலினால் அளந்ததை இவன் தன் வாலினால் அளந்தானோ? என்று தேவர்கள் மருளும் படி பறந்து செல்கிறான். பரமனை விட அவன் பக்தனின் ஆற்றல் அதிகம் என்பது தோன்ற இந்தப் பாட்டு அமைந்துள்ளது.

யுத்தத்தின் போது, ராவணன் தேரேறி வந்து போர்தொடுக்க, இராமன் அனுமனின் தோள்களில் ஏறும் காட்சி. அங்கேயும் உலகளந்த திருவடிவைச் சேர்த்துப் பாடுகிறான் கம்பன்.

மாணியாய் உலகு அளந்த நாள், அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்;
காணி ஆகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும், தலை நடுக்குற்றான்.


யுத்த காண்டம், முதற் போர் புரி படலம்

[மாணி – மாணவன், வாமன பிரமசாரி; ஆணியாய் – ஆதாரமாய்; காணி – தனக்கே உரிய பொருள்; பண்டு – பழைய காலத்தில்; கலுழன் – கருடன்; அனந்தன் – ஆதி சேடன்)

vamana-gopura-scultpureஉலகளந்த பேருருவுடையவனை, மாணவனான சின்னப் பிள்ளையைத் தூக்குவது போல தூக்கி விட்ட அனுமனுக்கு ஒரே ஆச்சரியம். பண்டைக் காலம் முதல் திருமாலின் திருவடியைத் தனக்கே உரியதாகத் தாங்கும் பேறு பெற்ற கருடனே இதைப் பார்த்து வெட்கமடைந்தான். ஆயிரம் தலைகளால் உலகைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேடனுக்கும் தலை நடுங்கியது!

இவ்வாறு, கம்பன் காவியத்தில் பல இடங்களில் வாமனாவதாரம் பேசப் படுகிறது.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி” என்பதான ஆண்டாள் பாசுரங்களிலும், காஞ்சியிலும், திருக்கோவிலூரிலும் வேறு பல தலங்களிலும் சிற்பங்களாவும் உலகளந்த பெருமாள் வாழ்ந்து வரம் அருளி வருகிறார். ஓணத்திலும், கார்த்திகையிலும், இன்னும் இந்தியாவின் பல பகுதிகளில் வழங்கும் பல பண்டிகைகளிலும் வாமனனுக்கு யாசகம் ஈந்து அழியாப் புகழ் கொண்ட மகாபலியின் வருகையை நாம் கொண்டாடி மகிழ்கிறோம். வெகுஜன பத்திரிகையில் ஜப்பான் நாட்டின் அசுர வளர்ச்சி பற்றி எழுதும் போது ‘வாமனர்களின் விஸ்வரூபம்’ என்று அந்த எழுத்தாளர் தலைப்பு வைக்கிறார்.

எல்லையற்றுப் பரந்து விரிந்த மகா பிரபஞ்சத்தில் ஒரு சிறு உயிராக மனிதன் தன்னை உணரும் கணங்கள் உண்டு. அக்கணங்களில், இந்த சிற்றுயிரும் தனது உணர்வால், அறிவின் விசாலத்தால், மாண்புகளால், பேருருக் கொள்ளக் கூடும்; உலகத்தையே அளந்துவிடக் கூடும் என்ற எண்ணம் பெரும் நம்பிக்கையையும், ஆற்றலையும், ஊக்கத்தையும் தருகிறது. சிறு குள்ளன் பேருருவம் கொண்டு ஓங்கி உலகளந்து நிற்பது என்பது மிகுந்த மன எழுச்சியூட்டும் ஒரு படிமம். இந்திய பிரக்ஞையில் வாமனாவதாரம் அப்படித் தான் ஒரு படிமமாக நிலை கொண்டுள்ளது. கம்பன் காவியத்திலும் அவ்வாறே பிரதிபலிக்கிறது எனலாம்.

துணைபுரிந்த  நூல்கள்:

  • கம்பராமாயணம் (மூலம்) – கம்பன் கழகம், சென்னை
  • கம்பராமாயணம் விரிவுரை – வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்,  உமா பதிப்பகம், சென்னை
  • திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு  (கி.வா.ஜகன்னாதன் தொகுத்தது) – ராமகிருஷ்ண மடம், கோவை

12 Replies to “கம்பன் பாடிய குறள்”

  1. அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்
    அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்

    அப்படியே கம்பனைப் பற்றி நீங்கள் கதாகாலட்சேபம் செய்வது போலவே இருந்தது. அற்புதமான மொழி நடை. அருமை. நன்றி

  2. மதிப்பிற்குரிய ஜடாயு அவர்களுக்கு,

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடும் கம்பனின் வேள்வி படலத்தின் வாமாவதாரச் செய்தியைத் தமிழ்ச்சுவையுடன் தந்திருக்கிறீர்கள்.. தமிழ்ச்சுவையை ஊட்டவல்லதும்.. பக்திமையை வளர்க்க வல்லதும் ஆகிய இவ்வாறான கட்டுரைகள் தங்கள் கை வண்ணத்தில் அழகு மிகப் பெறுகின்றன.

    //எல்லையற்றுப் பரந்து விரிந்த மகா பிரபஞ்சத்தில் ஒரு சிறு உயிராக மனிதன் தன்னை உணரும் கணங்கள் உண்டு. அக்கணங்களில், இந்த சிற்றுயிரும் தனது உணர்வால், அறிவின் விசாலத்தால், மாண்புகளால், பேருருக் கொள்ளக் கூடும்; உலகத்தையே அளந்துவிடக் கூடும் என்ற எண்ணம் பெரும் நம்பிக்கையையும், ஆற்றலையும், ஊக்கத்தையும் தருகிறது. சிறு குள்ளன் பேருருவம் கொண்டு ஓங்கி உலகளந்து நிற்பது என்பது மிகுந்த மன எழுச்சியூட்டும் ஒரு படிமம். இந்திய பிரக்ஞையில் வாமனாவதாரம் அப்படித் தான் ஒரு படிமமாக நிலை கொண்டுள்ளது. கம்பன் காவியத்திலும் அவ்வாறே பிரதிபலிக்கிறது எனலாம்.//

    ஆகா.. நல்ல சிந்தனை… ஓங்கி உலகளந்த உத்தமனைச் சிந்திக்கிற ஒவ்வொரு கணமும் நம்முள் பேரெழுச்சியைத் தருவதாக இருப்பதை உணர்கிறேன்..

  3. துய்த்துக் கழியான் துறவர்கொன்றீகலான்
    வைத்துக் கழியும் மடவோனை – வைத்த
    பொருளும் அவனை நகுமே உலகத்து
    அருளும் அவனை நகும்

    சரியான முறையில் செல்வத்தை பயன்படுத்தாமலும் துறவிகளுக்கு அதை கொடுக்காமலும் இருப்பவன் செல்வமே அவனை பார்த்து சிரிக்குமாம். தர்மத்தின் இன்றியமையாமையை உரைக்கும் நாலடியார் இவ்வாறு.

    தான் கொடுத்த பொருளின் மூலம் பரம்பொருள் கிட்டியது மாபலிக்கு. குழந்தையின் கையால் அமுதூட்டப்பட்ட தாயைப்போல மகிழ்ச்சி பரமனுக்கு . அர்ச்சா ரூபத்தில் இருக்கும் பெருமானை அழகு தமிழில் தரிசித்த திருப்த்தி நமக்கு.

    திருக்குறளோடு ஒப்பிட்டு ஆசிரியர் வரைந்திருக்கும் இக்கட்டுரை வாமன அவதாரம் போலவே விஸ்வரூபம் எடுக்கிறது. ஜடாயு அவர்களுக்கு நன்றி.

  4. மதிப்பிற்குரிய திரு ஜடாயு அவர்களே,

    அருமையான மேற்கோள்கள். ஆழமான விளக்கங்கள். உலகளந்த உத்தமன் கோயில் கொண்ட திருக்கோவலூரில் தான் முதலாழ்வார்கள் சந்தித்தனர் என்ற செய்தியும் இங்கு குறிப்பிடத்தக்கது.

    உலகளந்த வரலாற்றை இளங்கோ அடிகளுக்கும் முன்பாக பரிபாடல், கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய இலக்கியங்களும் கூறுகின்றன.

    // எல்லையற்றுப் பரந்து விரிந்த மகா பிரபஞ்சத்தில் ஒரு சிறு உயிராக மனிதன் தன்னை உணரும் கணங்கள் உண்டு. அக்கணங்களில், இந்த சிற்றுயிரும் தனது உணர்வால், அறிவின் விசாலத்தால், மாண்புகளால், பேருருக் கொள்ளக் கூடும்; உலகத்தையே அளந்துவிடக் கூடும் என்ற எண்ணம் பெரும் நம்பிக்கையையும், ஆற்றலையும், ஊக்கத்தையும் தருகிறது. //

    இது பற்றி விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். தம் சொந்த முயற்சியாலன்றி இறையின் நிர்ஹெதுக அருளாலேயே ஆன்ம ஞானம் பெறுவதையே பக்தி இயக்கங்கள் வலியுறுத்துகின்றனவே?

    “நானும் பெரியவனாகி உலகத்தை அளந்துவிடலாம்” என்ற எண்ணத்தால் தானே ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, மாவலி தேவர்களுக்குப் பெருந் துன்பம் விளைவித்தார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன? இன்று “உலகையே ஆளலாம்” என்ற செருக்கால் தானே மனிதன் சுற்றுச்சூழலை நாசம் செய்கிறான்?

    “உலகை அளத்தல்” என்பதை “அறத்தால், யோகத்தால், ஞானத்தால், புலனடக்கத்தால் அனுஷ்டானத்தால் உலகத்தை அளத்தல்” என்று கொண்டால் பரவாயில்லை. விளக்கவும்.

  5. கருத்துக் கூறும் அனைவர்க்கும் நன்றி.

    // “உலகை அளத்தல்” என்பதை “அறத்தால், யோகத்தால், ஞானத்தால், புலனடக்கத்தால் அனுஷ்டானத்தால் உலகத்தை அளத்தல்” என்று கொண்டால் பரவாயில்லை. விளக்கவும். //

    கந்தர்வன், நானும் இந்தப் பொருளில் தான் கூற விழைந்தேன்.. மனிதனின் தனி மனம் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபட்டு, அதனை உணர்வுபூர்வமாக அனுபவித்தல், அதைத் தான் சுட்ட விரும்பினேன்.

    உலகை அடக்கி ஆள வேண்டும் என்ற வல்லரசாதிக்கவாத பொருளில் அல்ல.

  6. திரு ஜடாயு அவர்களுக்கு,

    ”இத³ம் விஷ்ணுர்விசக்ரமே த்ரேதா⁴ நித³தே⁴ பத³ம்” என்று மறை போற்றும் அற்புத நிகழ்ச்சி. சிறிய பிரபந்தமான திருப்பாவையில் அச்சுதன் அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த செய்தி மூன்று முறை சொல்லப்படுகிறது.

    தமிழ் இலக்கியமும் இதற்கு எந்த அளவு முதன்மை தருகிறது என்பதைச் சுவைபட விளக்கியுள்ளீர்கள்; நன்றி

    தேவ்

  7. அன்புள்ள ஜடாயு,
    ‘கம்பன் பாடிய குறள்’ அற்புதமான கட்டுரை; இலக்கியச்சுவையும் சிற்பக் காட்சி இன்பமும் இணைந்த ஊக்கமூட்டும் படைப்பு. ஒப்பியல் நோக்கும், பொருத்தமான இடங்களில் இலக்கிய மேற்கோள்களை கச்சிதமாகப் பொருத்திக் காட்டும் லாவகமும், நினைவாற்றலும், அழகியல் உணர்ச்சியும் ஒருங்கிணைந்த படைப்பு இது. உலகளந்தான் திருவருள் உங்களுக்கு என்றும் உண்டு.

    வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் நமது பண்பாடு ஏதாவது ஒருவகையில் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. நமது இதிகாசங்கள், புராணங்கள், காவியங்கள், இலக்கியங்கள் அனைத்திலும் இழையூடு பாவாய் நமது கலாசாரம் பின்னிப் பிணைந்துள்ளது. வாமன அவதாரம் அத்தகைய ஒரு மறக்கவியலா படைப்பு. எத்தகைய அருள் பெற்றவனும் மாமன்னனும் ஆணவத்தால் அழிவான் என்பதை மாவலி சக்கரவர்த்தியின் கதை காட்டுகிறது. அவனை அடக்க வாமனனின் மூன்று அடிகள் போதும். இதிலுள்ள படிமம் அற்புதமானது. உலக நன்மைக்காக செய்யும் சிறு முயற்சிகள் கூட பெரும்பயன் விளைக்கும் என்பதையும் வாமனன் காட்டுகிறார்.

    இத்தகைய கதைகளைக் கேட்டு வளர்ந்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர் ஜடாயு; நானும் தான். ஆனால், இப்போது, இத்தகைய பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் கதைகளைக் கூறவோ, கதைகளைக் கேட்கவோ புதிய தலைமுறைக்கு நேரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. சிறு குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும்போது இத்தகைய கதைகளையும் சேர்த்து ஊட்டும் தாத்தா, பாட்டிகளைக் கொண்ட குழந்தைகள் பெரும் பேறு பெற்றவர்கள். கூட்டுக்குடும்ப முறை நசித்து, தனித்தீவுகளாக ஹிந்து குடும்பங்கள் மாறிவரும் நிலையில், சிறு குழந்தைகள் இழப்பது அழிவற்ற நமது பண்பாட்டு அமுதமும் கூட என்பது கவலை அளிக்கிறது.

    நமது சிறுவர் இதழ்களோ, பண்பாட்டை நேசிக்கும் தன்மை இல்லாதனவாக, குழந்தைகளை ‘மேதாவி’களாக்கும் கனவுடன், இத்தகைய அற்புதமான படிமக் கதைகளை வெளியிடாமல், வெளிநாட்டுக் கதைகளையே வாசிக்குமாறு நிர்பந்திக்கின்றன. ‘மதச்சார்பின்மை’ வியாதி அங்கும் பரவி விட்டது. நமது கான்வென்ட் குழந்தைகளுக்கு கோலியாத் கதை தெரியும்; வாமனன் கதை தெரியாது. அட்லாஸ் கதை தெரியும்; வராக அவதாரம் தெரியாது. இதுதான் கவலை அளிக்கும் யதார்த்தம். மேரி க்யூரியையும் தெரசாவையும் தெரிந்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக சுஸ்ருதரும் காரைக்கால் அம்மையாரும் தெரியாது.

    நாம் எதைக் கற்பிக்க வேண்டுமோ, அதைப் புறக்கணித்துவிட்டு, தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு பிராபல்யங்களை முன்னிலைப் படுத்துகிறோம். ”கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்” பாடலில் மகாகவி பாரதி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏசிய அதே பேடிக்கல்வியைத் தான் நாம் தொடர்கிறோம். குழந்தைகளுக்கு பண்பாட்டுக் கல்வி புகட்டப்பட வேண்டும் என்று சொல்பவன் மதவாதி ஆகி விடுகிறான். நாயன்மாரும் ஆழ்வாரும் பக்தப் பேரொளிகளும் மாவீரர்களும் காவியகர்த்தர்களும் மகான்களும் வாழ்ந்த நாட்டில் ஏன் இந்த இழிநிலை?

    தன்னை மறந்து, தன்னிலை இகழும் சுய கழிவிரக்கக் கூட்டமாக நமது மக்கள் மாறக் காரணம், இத்தகைய இலக்கியங்கள் காட்டும் பேரொளியை உணராததே. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் கி.வா.ஜ, ம.பொ.சி, டி.கே.சி, ரா.பி.சேதுப்பிள்ளை போன்ற இலக்கிய ஆளுமைகள் செய்த பணியைத் தொடராததே நமது துர்பாக்கியம். நமது பட்டிமன்றங்கள் வெட்டி மன்றங்களாக மாறிவிட்ட நிலையில், உபன்யாசகர்களும் விகடகவிகளாக மாறிவிட்ட நிலையில், ஆய்வாளர்கள் சித்தாந்தப் புதைகுழிகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஒரு மென்பொருள் விற்பன்னர் (ஜடாயு) தான் இத்தகைய அற்புதமான கட்டுரையை எழுத வேண்டி இருக்கிறது. காலம் தனது தேவையை எவ்வாறேனும் நிறைவு செய்துகொள்ளும் என்பது உண்மையே.

    இக்கட்டுரை போல பெருகிவரும் ஊற்றாக ஜடாயுவின் கட்டுரைகள் தொடர வேண்டும். இன்றைய மௌடீகத் தன்மை விரைவில் மாறும் என்ற எதிர்பார்ப்புடன், அதற்கான முன்முயற்சிகளுடன் ஒத்த சிந்தனையாளர்கள் பயணிக்க வேண்டும். இந்த ‘களப்பிரர் காலம்’ முற்றுப்பெற, அந்தக் குறளோன் அருளட்டும்.

    -சேக்கிழான்

  8. திரு. சேக்கிழான் அவர்களே….
    // இந்த களப்பிரர் காலம் முற்றுப்பெற // ….அருமையான வரிகள்…. பக்தி இலக்கியங்கள் இல்லாமல் தமிழ் இல்லை…. சனாதன தர்மமும் ,நமது கோயில்களும் இல்லாமல் தமிழன் பண்பாடே இல்லை.ஆனால் தமிழன் ஆரம்பத்தில் இருந்தே நாத்திகன் என்றும், கடவுளை வணங்குபவன் [ ஹிந்து தெய்வங்களை மட்டும் ] தமிழனே இல்லை என்றும் பிரச்சாரம் வலுவாக நடக்கிறது.[ இந்த ஈனப்பிரச்சாரம் செய்பவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே இல்லை என்பது வேறு விஷயம் ] இந்த இருண்ட காலம் என்று முடிவுக்கு வருமோ தெரியவில்லை.தாங்களும், திரு.ஜடாயு, திரு.அரவிந்தன் நீலகண்டன்,திரு,மலர்மன்னன்,திரு . கோமதி செட்டி உள்ளிட்ட இதர பல நல்ல உள்ளங்களும் செய்து வரும் சேவை பாராட்டுக்கும்,நன்றிக்கும் உரியது.தொடர்க உங்கள் நற்பணி…..

  9. தங்களது அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சேக்கிழான் ஐயா.

  10. Pingback: Indli.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *