[பாகம் 12] ரோகம் பரப்பும் ரோமாபுரிச் சாதியம்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மாதம் மாறியது ஏன்?” தொடரின் 12ம் பாகம்

இதுவரை: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம்.  தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.  வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து இந்த பாகத்தில் பார்ப்போம்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11

அம்பேத்கரின் மதமாற்ற அறிவிப்பு ஒரு சில இந்துக்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தாலும் கிறித்துவ பரப்புநர்களிடம் உற்சாகத்தையே ஏற்படுத்தியது. ஆடுகளைப் பார்த்து ஓநாய்கள் ஏங்குவதுபோல தீண்டத்தகாதவர்களின் மதமாற்றத்தை எதிர்பார்த்து தங்கள் சமயத்துக்கு அவர்கள் மதமாற மாட்டார்களா என்று கிறித்துவர்கள் ஏங்கிக்கொண்டிருந்தனர்.

jesus_camp-christianity_conversionபிஷப்.ஜே.டபிள்யூ,பிகெட் என்பவரும் ஸ்டான்லி ஜோன்ஸ் என்பவரும் பலமுறை அம்பேத்கரை சந்தித்துக் கிறிஸ்துவ மதத்தை ஏற்பது குறித்துச் சாதகமாக யோசித்துப் பார்க்குமாறு வேண்டினர்.

காட்ஃப்ரே எட்வர்ட் பிலிப்ஸ் 1936 ஜூலையில் ‘தீண்டத்தகாதவர்களின் தாகம்’ என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் தீண்டத்தகாத சமூகத்தினரை மதமாற்றம் செய்வதற்குக் கிறிஸ்துவ சமயப்பரப்பாளர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது விளக்கமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. அம்பேத்கர் வெளிப்படையான முறையில் கிறிஸ்துவமதத்திற்கு ஊக்கம் தரவில்லை என்று நூலாசிரியர் தெளிவாக எழுதியுள்ளார்.

டாக்டர் ஸ்டான்லி ஜோன்சுடன் தான் பேசியதைக்குறிப்பிட்டு டாக்டர் பிலிப்ஸ் எழுதுகையில்

‘டாக்டர் அம்பேத்கர் ஜோன்சிடம் சொன்னார். கிறிஸ்தவர்கள் முதலில் தமக்குள் நிலவும் சாதி வேறுபாட்டைக் களைந்திருப்பார்களேயானால் நாங்கள் கிறிஸ்துவ மதத்தில் நாட்டம் கொண்டிருப்போம். ஆனால் இது முடியாத காரியமாகிவிட்டது. அம்பேத்கர் கூறியது விஷப் பூச்சிகொட்டியதுபோல் வேதனை தரக்கூடியது. ஆனால் விஷயம் என்னவோ உண்மைதான்’ என்று தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் பைபிளை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கற்றிருந்தார். விவிலிய இலக்கிய நூல்களைப் பெருமளவில் அவர் திரட்டி வைத்திருந்தார். ஒரு கட்டுரையில் அவர் தன்னை மோஸஸுடன் ஒப்பிட்டிருந்தார். ஆனாலும் அம்பேத்கருக்கு கிறித்துவத்தில் பெரிய ஈர்ப்பு எப்போதுமே இருந்ததில்லை. எப்போதுமே கிறித்துவத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை.

உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம்.

இந்து பிரச்சாரகர்களை ஆதரிக்கும் அம்பேத்கர்

வேறோர் மதத்திற்கு மதம் மாறிச் சென்ற இந்துக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாற்றிய இந்துச் சமயப் பிரச்சாரகர்களைக் கோவா அரசு கைது செய்தபோது அதனை எதிர்த்துத் தந்தி மூலம் அனுப்பப்பட்ட அறிக்கையில் அம்பேத்கரும் கையெழுத்திட்டிருந்தார்.

1938 ஜனவரி 1ஆம் தேதி ஷோலாப்பூரில் அம்பேத்கர் ரெவரண்ட் கங்காதர் ஜாதவ் தலைமையில் கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். அதில் ‘‘ …நான் கற்ற ஒப்பீட்டின்படி இருவருடைய ஆளுமைகள் என்னைக் கவர்கின்றன. ஒருவர் புத்தர். இன்னொருவர் கிறிஸ்து’’ என்றார்.

மேலும் அம்பேத்கர் கூறுகையில், ‘‘…எந்த மதம் மனிதனுக்கு மனிதன் நடந்துகொள்ளும் பண்பையும் அவனது கடமையையும் அதே சமயம் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய கருத்துக்களின் அடிப்படையில் கடவுளுக்கும் அவனுக்குமுள்ள உறவை அறிவுறுத்துகிறதோ அத்தகைய மதமே எனக்குத் தேவை.

…தென்னிந்தியாவில் உள்ள உங்கள் சர்ச்சுகளில் ஜாதி அமைப்பை பின்பற்றுகிறார்கள். அரசியலிலும் பின்தங்கி இருக்கிறார்கள். மகர் இளைஞர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் அவர்களது உதவிச் சம்பளம் பறிக்கப்படுகிறது. ஆகக் கிறிஸ்துவர்களாக மாறுவதில் பொருளாதார லாபம் இல்லை. இந்தியக் கிறித்தவர்கள் சமூக அநீதிகளை அகற்றுவதற்காக எப்போதும் போராடியது இல்லை’’ என்று அவர்களிடத்தில் வெளிப்படையாகக் கூறினார்.

ஆரம்பத்திலிருந்தே மதமாற்றத்திற்கு கிறித்துவத்தை தேர்ந்தெடுப்பதற்கான சிந்தனையை அவர்  மனதில் வைக்கவே இல்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

அம்பேத்கரின் மதமாற்றத்தின் நோக்கமே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதுதான். இந்த கொள்கையை அடிப்படையாக வைத்துதான் எல்லா சமயங்களையும் அவர் ஆராய்ந்தார்.

கிறித்துவ சமயத்தில் இந்த கொள்கைகள் இருந்தனவா? இவை கடைபிடிக்கப்பட்டனவா என்பது பற்றியெல்லாம் அம்பேத்கருக்கு பல புரிதல்கள் இருந்தன.

கிறித்துவ சமயத்தில் சுதந்தரம் உண்டா?

கிறித்துவ சமயத்தில் சமத்துவம் உண்டா?

கிறித்துவ சமயத்தில் சகோதரத்துவம் உண்டா?

என்ற கேள்விகளை எல்லாம் அப்போதே அம்பேத்கர் ஆராய்ந்து இருக்கிறார்.

கிறித்துவ அமைப்புகள் சேவை செய்வதை பாராட்டும் அம்பேத்கர் அவர்களின் சேவை எதை நோக்கியது என்பதையும் காட்டுகிறார் :

‘‘கிறித்தவ சமய அமைப்புகளின் கோணத்திலிருந்தும் தீண்டப் படாதோர் கோணத்திலிருந்தும் பார்த்தால், இந்தியாவில் கிறித்தவ சமயம் என்ன சாதித்தது என்பது பரிசீலிப்பதற்கு ஏற்ற விஷயமாக ஆகிறது.

மதமாற்றிகளின் சேவை

இந்திய மக்களுக்குச் சேவை செய்வதற்கும் தமது அரவணைப்புக்குள் வந்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும் கிறித்தவ சமய அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன என்பதை மறுக்க முடியாது. இந்த அமைப்புகள் இந்தியாவில் செய்துவரும் எல்லாப் பணிகள் பற்றியும் விவாதித்துக் கூறுவது இந்த இடத்தில் சாத்தியமல்ல. இந்த சமய அமைப்புகளின் பணிகள் ஐந்து தலைப்புகளில் அடங்குகின்றன.

mother-teresa-effigy-pope-lure-poor-people-christian-conversion-church-crimes-burn-rape-blind(1) குழந்தைகள் மத்தியில்,

(2) இளைஞர் மத்தியில்,

(3) வெகுஜனங்கள் மத்தியில்,

(4) பெண்கள் மத்தியில், கடைசியாக

(5) நோயாளிகள் மத்தியில்.

இந்த அமைப்புகள் ஆற்றியுள்ள பணிகள் மிகப் பரந்தவை. கல்வியளிப்பதிலும் நோயாளிகளுக்கு உதவுவதிலும் அவர்களின் பணிகள் எந்த அளவில் உள்ளன என்பதைப் பின்வரும் புள்ளி விவரங்கள் எடுத்துக்கூறும்:

ஐ. கிறித்தவ மருத்துவ சேவை

1. மருத்துவமனைகள்      256

2. மருந்தகங்கள்      250

3. காசநோய்ச்சிகிச்சை ஆரோக்கிய நிலையங்கள்   10

4. தொழுநோயாளிகளுக்கான இல்லங்கள்   38

5. மருத்துவப் பள்ளிகள்     3

6. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள்   12,000

7. ஆரோக்கிய நிலையத்திலுள்ள படுக்கைகள்   755

8. வெளிநாட்டு மருத்துவர்கள்     350

9. உள்நாட்டு மருத்துவர்கள்     390

10. செவிலியர் வெளிநாட்டவர்     300

11. உள்நாட்டவர்      900

12. பயிற்சி செவிலியர்      1800

13. அறுவை சிகிச்சைகள் – பெரியவை    44,000

14. பிரசவங்கள் – மொத்தம்     32,000

15. உள் – நோயாளிகள்      2,85,000

16. புற – நோயாளிகள்      26,00,000

ஐஐ.  கிறித்தவக் கல்விப் பணி

christian_conversion_education_jesusமொத்தப் பள்ளிகள் – அவற்றில் பயிலும் மாணவர்கள்

1. ஆரம்பப் பள்ளிகள்   13,330   6,11,730

2. மேல்நிலைப் பள்ளிகள்  302   67,229

3. கல்லூரிகள்    31   11,162

4. இறையியல் கல்லூரிகளும் பயிற்சிப் பள்ளிகளும் 25 586

5. பைபிள் பயிற்சிப் பள்ளிகள்  74   2,855

6. ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள்  63   3,153

இதே சமயம் இத்துறைகளில் இந்துக்கள் என்ன சாதித்திருக்கிறார்கள்? வரலாற்று ரீதியாகப் பார்த்தால், மனித சமுதாயத்திற்குச் சேவை செய்வது என்பது இந்து சமயத்திற்கும் இந்துக்களுக்கும் அன்னியமானது, இந்து சமயத்தில் பிரதானமாக உள்ளவை சடங்குகளும் ஆசாரங்களுமே, அது ஒரு கோவில்களின் மதம்.
மனிதனை நேசிப்பது என்பதற்கு அதில் இடமில்லை. மனிதநேயம் இல்லாமல் சேவைகளை எவ்வாறு ஊக்குவிக்க முடியும்?
எந்த நோக்கங்களுக்காக, குறிக்கோள்களுக்காக இந்த அறநிலையங்கள் உள்ளன என்பதிலிருந்து இதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இந்துக்கள் செய்யும் தர்மப் பணிகளின் வீச்சும் நோக்கங்களும் எந்த அளவுக்குச் சாதியால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை இந்தியாவில் வெகுசிலரே அறிவர். இந்த அறநிலையங்கள் சம்பந்தப்பட்ட முழுமையான, துல்லியமான விவரங்களை அறிந்து கொள்வது கடினமாகும். எனினும், பல ஆண்டுகளுக்கு முன்பு, பம்பாய் நகரத்தில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இந்த விஷயத்தைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. (நூல் கைப்பிரதியில் புள்ளி விவரங்கள் டைப் செய்யப்படவில்லை).

1918 ல் பம்பாயில் இன்புளுயன்சா குளிர் காய்ச்சல் கொள்ளை நோயாக வெடித்தபொழுது நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சில மருத்துவர்கள் சாதிக் கண்ணோட்டத்துடன் நடந்து கொண்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

ஒப்பு நோக்கிக் கூற வேண்டுமெனில், கிறித்தவ சமயக் குழுக்கள் சமுதாயச் சேவையில் ஆற்றியுள்ள சாதனைகள் மகத்தானவையாகும்; கிறித்தவர் பற்றிய எந்த விஷயமானாலும் அதை வன்மையாக எதிர்ப்பவரைத் தவிர வேறு எவருக்கும் இதில் சந்தேகம் இருக்க முடியாது. இந்த சிறந்த சேவைகளை ஒப்புக்கொள்ளும் அதேசமயம், ஒருவர் இரு கேள்விகளை எழுப்பலாம்.

இந்திய கிறித்தவ சமுதாயத்தின் தேவைகளுக்கு இந்த சேவைகள் அவசியமா?

இந்த குழுக்களால் கவனிக்கப்படாத இந்திய கிறித்தவ சமுதாயத்தின் தேவைகள் வேறு ஏதேனும் உள்ளனவா?

இந்தியக் கிறித்தவர்கள், பிரதானமாக தீண்டப்படாதவர்கள் மத்தியிலிருந்தும் ஓரளவுக்குச் சூத்திர சாதியினரிடமிருந்தும், ஈர்க்கப்பட்டுள்ளனர் என்பதை மனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, கிறித்தவ மத அமைப்புகளின் சமுதாய சேவைகள் இந்த வகுப்பினரது தேவைகளின் அடிப்படையிலேயே கணிக்கப்பட வேண்டும். அந்தத் தேவைகள் யாவை?

உயர்த்தப்பட்ட சாதி கிறுத்துவர்களுக்கே உரிமைகள் அதிகம்

இந்த சமய அமைப்புகள் கல்வி, மருத்துவத் துறைகளில் ஆற்றிவரும் சேவைப்பணிகள் இந்திய கிறித்தவர்களுக்குப் பயனளிப்பதில்லை. இவை மிகப்பெரும்பாலும் உயர்சாதி இந்துக்களுக்கே பயனளிக்கின்றன. இந்தியக் கிறித்தவர்கள் ஒன்று மேற்கல்வி பெற இயலாதவாறு மிகவும் ஏழ்மையில் உழல்கின்றனர் அல்லது கிறித்தவர்களின் முன்னேற்றம் என்ற கண்கொண்டு நோக்கினால், இந்தச் சமய அமைப்புகள் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள் போன்றவை அவர்களுக்குப் பயன்படாதவையாகவும், அவர்களுக்குச் சம்பந்தப்படாத செலவின மாகவும் அமைந்துள்ளன. அதுபோலவே, இந்த அமைப்புகள் அளித்துவரும் மருத்துவ உதவியும் பெருமளவு சாதி இந்துக்களையே சென்றடைகின்றது. மருத்துவமனைகள் சம்பந்தப்பட்டவரை இது முக்கியமாகப் பொருந்தும்.

கிறித்தவ சமய அமைப்புகள் பல இதை உணர்ந்துள்ளன என்பது எனக்குத் தெரியும். என்றாலும் இந்தச் செலவுகள் வருடாவருடம் செய்யப்பட்டுதான் வருகின்றன. இந்த சேவைகளின் நோக்கம், இச்சமய அமைப்புகளுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்பதே என்பதில் ஐயமில்லை. ஆனால் சமயமாற்றம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பயனளிக்காது என்பதைக் கிறித்தவ சமய அமைப்புகள் உணரவேண்டிய தருணம் வந்துவிட்டது; அவற்றின் நோக்கம் முழுத் தோல்வியில்தான் முடியும் என்பது நிச்சயம். கிறித்தவ சமயத்தின்பால் இந்திய அறிவுத்துறையினர் கொண்டுள்ள கண்ணோட்டம் பற்றி செய்த ஆய்வுக்குப் பின் திரு.வின்ஸ்லோவின் கீழ்க்கண்ட முடிவு சரியானது என்றே எண்ணுகிறேன்:

“டப் மற்றும் செராம்பூர் கிறித்தவ சமய அமைப்புகளது பணியின் பலனாக குறிப்பிடத்தக்க சில சமய மாற்றம் ஏற்பட்டது. சிறிது காலத்திற்கு ஆங்கிலக் கல்வி அதைப் பெறுபவர்கள் பலரை கிறித்தவ சமயத்திற்குக் கொண்டு வந்துவிடும் என்றே தோன்றியது; ஆனால் திடீரென்று ஒரு எதிர்விளைவு ஏற்பட்டு அந்த இயக்கம் மடிந்து போயிற்று. அந்த இடத்தை இந்து சமாஜங்கள் பிடித்துக் கொண்டன; குறிப்பாக வங்காளத்தில் பிரம்மசமாஜம் பிடித்துக் கொண்டது; மேற்கத்திய சிந்தனைகளின் செல்வாக்கினால் விக்கிரக வழிபாட்டின் மீதும் சாதி மீதும் அதிருப்தி கொண்ட இந்துக்கள் இந்துமத அமைப்பில் தங்களுக்குள்ள இடத்தை முற்றிலுமாக இழக்காமல் இருக்க இவற்றில் சரணடைந்தனர். அநேகர் கிறித்தவ சமயத்திற்கு வருவதற்குப் பிரம்மசமாஜம் ஓர் ஏணியாக அமையும் என்றும், நாளாவட்டத்தில் அதன் உறுப்பினர்களில் பலர் கிறித்தவ சமயத்தை ஏற்றுக் கொள்வர் என்றும் கிறித்தவ சமயக்குழுக்கள் பல ஆண்டுகளாகவே நம்பி வந்தன; ஆனால் பெரும்பாலும் இந்த நம்பிக்கை ஏமாற்றத்தில்தான் முடிந்தது; எனினும் பிரம்ம சமாஜத்தில் இருந்து குறிப்பிடத்தக்க சிலர் கிறித்தவ சமயத்திற்கு வந்துள்ளனர்.

கிறுத்துவை வரவேற்று கிறுத்துவத்தை வழியனுப்பு

christianity_jesus_conversion-hindu-students-have-to-convert-to-get-college-admission-in-christian-colleges2இன்றைய கல்விகற்ற இந்தியர், குறிப்பாக பிராமணர், ஏசு கிறிஸ்து பற்றி என்ன நினைக்கிறார்? பொதுமைப்படுத்திக் கூறுவது விவேகமற்றதாக இருக்கலாம். எனினும், இந்த விஷயத்தில் சில பரந்த அம்சங்கள் உள்ளன. இவற்றைச் சுலபமாக விளக்கமுடியும். ஏசு கிறிஸ்து போதனையின் முக்கிய கோட்பாடுகள் பற்றி, குறிப்பாக அவரது அறநெறிப் போதனைகள் பற்றி பரந்த அளவில் உடன்பாடு இருக்கிறது.

அதிலும் அவரது மலைப்பிரசங்கம் மற்ற போதனைகளோடு ஒப்பு நோக்கினால் அவற்றில் இல்லாதவையாக இல்லாவிட்டாலும், மனித ஒழுக்கவியலுக்கு ஒரு வழிகாட்டி என்ற முறையில் ஈடு இணை இல்லாதது ……

கிறிஸ்துவின் போதனைகள் இவ்வாறு பரந்த அளவில் ஏற்கப்படுவதோடு, அவரது வாழ்க்கையையும் சீலத்தையும் பற்றி பொதுவான மரியாதையும் உள்ளது.

மறுபுறத்தில், கிறிஸ்து நிகரில்லாத முறையில் தெய்வாம்சம் வாய்ந்தவராக இருந்தார், இருக்கிறார் என்பதை இந்துக்களில் பெரும்பான்மையினர் அவரது வாழ்க்கையில் ஆழமாக ஈர்க்கப்பட்டவர்களும் கூட, ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை…… அவரைத் தங்களது சிறந்த தீர்க்கதரிசியான புத்தரின் வரிசையில் வேண்டுமானால் வைப்பார்கள். ஆனால் ஏசுகிறிஸ்து மட்டுமே கடவுளின் அவதாரம், அவர்மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் மட்டுமே விமோசனம் பெற முடியும் என்று கிறித்தவர்கள் உரிமை கொண்டாடுவது சுயநலமானது, குறுகிய நோக்கமுடையது என்று இந்துக்கள் நிராகரிக்கின்றனர். விமோசனம் பெற தங்கள் வழியே மிகச்சிறந்தது என்ற கிறித்தவர்கள் உரிமை கொண்டாடுவது இந்தியாவில் இயல்பாகவே வெறுப்பை ஏற்படுத்துகிறது. இன்று கல்வி அறிவுபெற்ற இந்துவின் தனித்தன்மை வாய்ந்த மதக் கண்ணோட்டத்தை இவ்வாறு கூறலாம்: கிறிஸ்து மீது உயர்வான மரியாதை வைத்துள்ளபோதிலும், அவரது போதனைகளின் முக்கிய கோட்பாடுகளை ஒப்புக் கொண்டபோதிலும், தாம் இந்துவாக தொடர்ந்து இருப்பதில் திருப்தியடைகிறார்.’’

இதுதான் உண்மை நிலைமை என்பதில் எனக்குச் சந்தேகம் எதுவுமில்லை. ஆகவே கல்விக்கும் மருந்து உதவிக்கும் கிறித்தவ சமயப்பரப்பு அமைப்புகள் செலவு செய்யும் பணம் சரியான பலனை அளிக்காததோடு, இந்திய கிறித்தவர்களுக்கும் உதவுவதுமில்லை.

இந்தியக் கிறித்தவர்களுக்கு இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றன. முதலாவதாக அவர்கள் விரும்புவது தங்களது பிரஜா உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். அவர்கள் விரும்பும் இரண்டாவது விஷயம், தங்களது பொருளாதார உயர்வுக்கான வழிமுறைகள் பற்றியதாகும். இந்தத் தேவைகள் பற்றி நான் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது. நான் சுட்டிக்காட்டி விரும்புவது எல்லாம் கிறித்தவ அமைப்புகள் இந்தியாவில் செய்து வரும் சமுதாயப் பணிகளில் மிகவும் தேவைப்படுவது மேலே குறிப்பிட்டுள்ளவைதான்’’ என்கிறார் அம்பேத்கர்.

மனம்மாற்றாத மத மாற்றம்

கிறித்துவ மதம் சமத்துவத்தை அளிக்கிறதா என்பது பற்றி அம்பேத்கர் விளக்குகிறார் :

கல்வி, மருத்துவ உதவித் துறைகளில் கிறித்தவ மத அமைப்புகளின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவையாகவும் பாராட்டக் கூடியவையாகவும் இருந்தபோதிலும், பதில் சொல்ல வேண்டிய ஒரு கேள்வி இன்னமும் உள்ளது.

stupidreligion_abrahamic_christianமதம் மாற்றம் செய்யப்பட்டவர்களின் மனோபாவத்தில் மாற்றம் செய்வதில் கிறித்தவ சமயம் என்ன சாதித்துள்ளது?

மதம் மாற்றம் செய்யப்பட்ட தீண்டப்படாதவர்கள் தீண்டப்படுபவர்களது நிலைக்கு உயர்ந்துள்ளனரா?

தீண்டப்படுபவர்களும் தீண்டப்படாதவர்களும் தங்கள் சாதியை கைவிட்டு விட்டனரா?

தங்கள் பழைய சமயக் கடவுள்களைத் தொழுவதையும் தங்கள் பழைய சமய மூட நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பதையும் நிறுத்திவிட்டனரா?

இவை மிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளாகும். இவற்றிற்குப் பதில் வேண்டும்; இந்தியாவில் கிறித்தவ சமயம் நிலைத்து நிற்குமா அல்லது வீழ்ந்துவிடுமோ என்பது இந்தக் கேள்விகளுக்குக் கிடைக்கும் பதிலைப் பொறுத்துத்தான் உள்ளது.

சைமன் கமிஷனுக்குத் தென் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சமர்ப்பித்துள்ள மகஜரிலிருந்து சில பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன; சாதி பிரச்சினையைப் பொறுத்தவரை, இதுவரை கிறித்தவ சமயத்தில் சேர்ந்துள்ள தீண்டப்படாதவர்களின் நிலை பற்றிய பல விஷயங்களை இவை தெளிவாக்குகின்றன:

“மத அடிப்படையில் நாங்கள் கிறித்தவர்கள் – ரோமன் கத்தோலிக்கர்களும் புரோடெஸ்டெண்டுகளும் சென்னை மாகாணத்தில் உள்ள இந்திய கிறித்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே இருந்து மாறியவர்கள் சுமார் 60 சதவிகிதமாக உள்ளனர். கிறித்தவ சமயம் எங்கள் வட்டாரங்களில் போதனை செய்யப்பட்டபோது பள்ளர்கள், பறையர்கள், மாலாக்கள், மாதிகாக்கள் முதலிய நாங்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவினோம். நாங்கள் பிறந்த சாதிகளைச் சார்ந்த மதம்மாற்றம் செய்யப்படாதவர்கள், இந்துக்களாகவும் மதரீதியில் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தும், இந்துமத தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்றே அழைக்கப்படுகிறார்கள். ஆண்டவன் முன்னிலையில் அனைத்து மனிதர்களும் சமம் என்ற கோட்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும், அண்டை அயலார்களிடம் அன்போடும் ஆதரவோடும் அரவணைப்போடும் நடந்து கொள்ள வேண்டும், பரிவு, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் காட்ட வேண்டுட்ம என்று கிறித்தவ சமயம் எங்களுக்குப் போதித்தாலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே இருந்து மதம் மாறிய நாங்கள், இந்து மதத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருள்ள அதே நிலையில்தான் இருக்கிறோம். பல்வேறு அம்சங்கள் எங்களுக்கு எதிராக செயல்படுகின்றன; அவற்றில் மிக முக்கியமானது கிறித்தவ மதத்திற்கு மாறியவர்களிடையே சாதியை விட்டுவிடாமல் வைத்துக் கொள்ளும் பலமான இந்துமத மனோபாவம் இருப்பதாகும்.

மேலும் கிறித்தவ சமயப் பரப்பார்களின் அலட்சிய போக்கு, அதிகாரம், அக்கறை இன்மை ஆகியவையும் சேர்ந்து, கிறித்தவர்களாக ஆவதற்கு முன்பு நாங்கள் எந்நிலையில் இருந்தோமே அதே நிலையில் தான் இன்றும் எங்களை வைத்துள்ளன; அதாவது தீண்டப்படாதவர்களாக, நாட்டில் நிலவும் சமுதாய சட்டங்களால் கேவலமான முறையில் நடத்தப்படுபவர்களாக, சாதி கிறித்தவர்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக, சாதி இந்துக்களால் வெறுக்கப்படுபவர்களாக, எங்களது சொந்த இந்துமத தாழ்த்தப்பட்ட சகோதரர்களால் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்து வருகிறோம்.’’

scourging_christianity_jesus_church_inquisition“தென் இந்தியாவில் கிறித்தவர்கள் சிறு எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள்; அவர்களது பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் அதாவது சென்னை மாநில மேல்சபையில் – அங்கம் வகிக்கிறார்கள்; ஆனால் அவர்கள் சாதிக் கிறித்தவர்கள்; இந்தப் பதம் முரணாகத் தோன்றலாம். துரதிருஷ்டவசமாக, இந்து மதத்தின் உயர்சாதியிலிருந்து மதமாற்றம் செய்யப்பட்டவர்களை இவ்வாறு வருணிப்து சரியானதும் ஏற்கக்கூடியதுமே ஆகும். சாதியின் எல்லா கடுமையான முறைகளும், தன்னலம் காக்கும் தன்மையும் அவர்களிடம் நீடித்து நிற்கின்றன.

குறிப்பாக நகரங்களுக்கு அப்பாலுள்ள இடங்களிலும் கிராமங்களிலும், எங்களின் சக கிறித்தவர்களாக இருக்க வேண்டிய அவர்கள் எல்லா கடுமையான சனாதன பழக்கங்களையும் தங்களது சாதித் தன்மைப் போக்கையும் பின்பற்றுகிறார்கள். “பஞ்சமர்கள் அல்லது பறையர்கள்’’ என்று எங்களைக் கேவலமாக அழைக்கிறார்கள்; கிறித்தவன் என்ற எங்கள் உரிமையை அலட்சியப்படுத்துகிறார்கள்; தங்களது செல்வச் செழிப்பு, அதிகாரம், செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவற்றை முழுவதுமாகப் பயன்படுத்தி ஏழைக் கிறித்தவர்களாகிய எங்களை சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கிறார்கள்.

பஞ்சமர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அடிக்கடி வெடிப்பது தென்னிந்திய கிறித்தவ வாழ்வின் ஓர் அவலமாகிவிட்டது; எங்களுடைய நிலையை உயர்த்தவும், முன்னேற்றவும், எங்களுடைய சாதாரண அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்தவும் நாங்கள் செய்யும் எந்த ஒரு முயற்சியும் அதிகாரியாக இருந்தாலும் சரி, அதிகாரி அல்லாதவராக இருந்தாலும் சரி, பிறப்பினால் தனக்கு ஒரு முட்டாள்தனமான உயர்வை கோரும் கிறித்தவனாக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி அவர்கள் எல்லோரது கோபத்திற்கும் பொறுப்புக்கும் உள்ளாகிறது. கிறித்தவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே மறுத்து, நேசம், தர்ம சிந்தனை, சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு மாறாக எங்கள் `சக-கிறித்தவர்கள்’ மாதா கோவில்களில் கூட எங்களைத் தீண்டப்படாதவர்களாகவும் அணுகாதவர்களாகவும் நடத்துகின்றனர்; முன் இடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளி எங்களுக்குத் தனி இடம் ஒதுக்கி, அதை அவர்கள் பகுதியிலிருந்து இரும்புகளாலோ சுவர்களாலோ தடுப்பு எழுப்புகின்றனர். அத்தகைய மாதா கோவில்கள் பல உள்ளன.

“புனித சடங்கு நிகழ்ச்சியின்போது, தீட்டைத் தவிர்ப்பதற்காக மிகவும் கேலிக்கிடமான முறையில் நாங்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறோம். எங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி அளிப்பதற்கும் வாழ்க்கைக்கு அவர்களைத் தயார் செய்யவும் எங்களுக்குள்ள உரிமைகள் ஈவு இரக்கமின்றி மறுக்கப்படுகின்றன; அப்பட்டமான பராபட்சக் கண்ணோட்டத்தோடு பள்ளிகள், கான்வெண்டுகள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் இவற்றில் எங்கள் குழந்தைகள் சேரும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது அப்படி சேர்க்கப்பட்டாலும், இழிவான முறையில் தனி இடம் ஒதுக்கப்படுகிறது. உயர்சாதி மரபு வழியில் வந்தவர்கள் என்ற அடிப்படையில் சாதி கிறித்தவர்கள் உயர் சமுதாய அந்தஸ்தையும் நிலைபாட்டையும் அடையமுயலுகிறார்கள்; அதே சாதியைச் சார்ந்த இந்துக்களின் பார்வையிலும் அவர்கள் உயர்ந்த இடத்தைப் பெறுகிறார்கள்; இந்து உயர் ஜாதியினர் இந்து தாழ்த்தப்பட்ட பிரிவினரை எவ்வாறு நடத்துகின்றனரோ அவ்வாறே இந்த சாதி கிறித்தவர்களும் கிறித்தவ தாழ்த்தப்பட்ட பகுதியினரையும் நடத்துகின்றனர்.’’

இங்கு பொதுப்படையாகக் கூறப்பட்டுள்ளவற்றைக் கீழே கொடுத்துள்ள இரு நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துபவையாக உள்ளன. (அச்சம்பவங்கள் கைப்பிரதியில் கொடுக்கப்படவில்லை – ஆசிரியர்)

இது கடுமையான குற்றச்சாட்டாகும். இருப்பினும் இதேநிலை இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தாது என்பதும், அதேபோல் சகல கிறித்தவப் பிரிவினருக்கும் இது பொருந்தாது என்பதும் ஆறுதலளிக்கும் விஷயமாகும்.

கருணை இல்லாத கத்தோலிக்கக் கிறுத்துவம்

புராடெஸ்டண்டுகளை விட கத்தோலிக்கர்களிடம்தான் இந்த அவலக் காட்சியை அதிகம் காண்கிறோம்; வட இந்தியா அல்லது மத்திய இந்தியாவை விட, தென்னிந்தியாவில்தான் இந்த அலங்கோலத்தை அதிகம் காண்கிறோம். இது எப்படியிருப்பினும், கிறித்தவ மதத்திற்கு மாறியவர்களிடையே சாதி உணர்வைப் போக்குவதில் கிறித்தவ சமயம் வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை.

தீண்டப்படுபவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே உள்ள பாகுபாடு எங்கோ ஒரு மூலையில் நடப்பதாக இருக்கலாம். சர்ச் பள்ளிகள் எல்லோருக்கும் இடமளிக்கலாம். எனினும் இந்துக்களின் வாழ்க்கையில் போன்றே கிறித்தவர்கள் வாழ்விலும் சாதிதான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை மறுக்கமுடியாது. பிராமணக் கிறித்தவர்களும் பிராமணரல்லாத கிறித்தவர்களும் உள்ளனர். பிராமணரல்லாத கிறித்தவர்களில் மராட்டிய கிறித்தவர்கள், மஹார் கிறித்தவர்கள், பங்கு கிறித்தவர்கள் என்று பல பிரிவினர் உள்ளனர். அதேபோல் தெற்கில் பறைய கிறித்தவர்கள், மாதிகக் கிறித்தவர்கள், மால கிறித்தவர்கள் என்று உள்ளனர். இவர்கள் கலப்புமணம் செய்து கொள்ளமாட்டார்கள்; இந்தப் பிரிவினர் ஒன்றாக அமர்ந்து உண்ண மாட்டார்கள். இந்துக்கள் போலவே இவர்களும் சாதியின் கோரப்பிடியில் சிக்கி உழல்கிறார்கள்’’ என்கிறார் அம்பேத்கர்.

கிறித்துவமதம் மூடநம்பிக்கைகளையும் கைவிடவில்லை என்கிறார் அம்பேத்கர் :

“கிறித்தவ மதத்திற்கு மாறியவர்களிடையே பாசி படிந்த பழக்க வழக்கங்களும் மூட நம்பிக்கைகளும் அப்படியே சாகா வரம் பெற்று நிலவுகின்றன. அவற்றைக் கிறித்தவ மதத்தால் துடைத்தெறிய முடியவில்லை. மதம் மாறியவர்களில் அநேகமாக எல்லோரும் இந்துமுறை வழிபாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்து மூடநம்பிக்கைகளைக் கைவிடவில்லை. கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் தங்கள் குடும்பக் கடவுளையும் ராமர், கிருஷ்ணர், சங்கரர், விஷ்ணு ஆகிய இந்து கடவுள்களையும் வழிபடுவதைக் காணலாம். இந்துக்கள் புனித இடங்கள் என்று கருதும் ஸ்தலங்களுக்கு மதம் மாறிய கிறித்தவன் யாத்திரை செல்வான். அவன் பண்டார்பூருக்குச் சென்று விதோபாவிற்குக் காணிக்கை செலுத்துவான். ஜெஜுரிக்கு சென்று இரத்ததாகம் கொண்ட கடவுள் கந்தோபாவுக்கு வெள்ளாட்டைப் பலியிடுவான். கணேச சதுர்த்தியன்று சந்திரனைப் பார்க்க மறுப்பான். கிரகணத்தன்று, கடலுக்குச் சென்று நீராடுவான். இவை எல்லாம் இந்துக்கள் கடைப்பிடிக்கும் மூடநம்பிக்கைகள்.

பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இந்துக்களின் சமூக நடைமுறைகளை, சடங்குகளைக் கிறித்தவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பது அவமானகரமானதாகும். இந்துக்களின் சமூக நடைமுறைகள் கிறித்தவர்களிடையே பரவலாகக் காணப்படுவது குறித்து நான் எதுவும் கூறப்போவதில்லை. சமூக நடைமுறைகளுக்கு எந்தவித மத முக்கியத்துவமும் கிடையாது என்பதால் அவற்றை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் சமயச் சடங்குகள் பற்றி அவ்வாறு கூற முடியாது. கிறித்தவ நம்பிக்கைக்கும் கிறித்தவ வாழ்க்கை முறைக்கும் அவை ஒவ்வாதவை. கிறித்தவ சமயத்தால் அவற்றை ஏன் அகற்ற முடியவில்லை என்பதுதான் கேள்வி.

கிறித்தவ சமயப் பரப்பாளர்கள், ஏராளமானோரைக் கிறித்தவ சமயத்திற்கு மாற்ற வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார்களேயன்றி, மதம் மாறியவர்களின் பழைய மூடநம்பிக்கைகளை வேரறுக்க உறுதியான போராட்டத்தை அவர்கள் ஒருபொழுதும் நடத்தவில்லை என்பதுதான் இதற்குப் பதிலாக இருக்க முடியும்.

கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் பழைய பழக்கவழக்கங்களையும் மத சம்பிரதாயங்களையும் அப்படியே உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டதற்குத் தற்காலத்தில் ஆரம்பத்தில் களத்தில் குதித்த ஏசு சமயப்பரப்புக் குழுக்கள் விட்டுச் சென்ற மரபுகளே பெரும்பாலும் காரணம். பழைய சம்பிரதாயங்கள் சம்பந்ததமாக கத்தோலிக்க சமயப் பரப்புக் குழுக்கள் பற்றிய மனப்பான்மை `மதுரை மிஷன்’ எனப்படும் சமயப் பரப்புக் குழுவின் நோக்கிலிருந்தும் போக்கிலிருந்தும் வழிமுறைகளிலிருந்தும் பிறந்ததே ஆகும்.

பசுத்தோல் போர்த்திய மிஷநரி

இத்தாலி நாட்டின் ரோமன் கத்தோலிக்க பாதிரியார் ராபர்ட் நோபிலி என்பவரால் இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. அவர் இந்தியாவிற்கு 1608ல் வந்தார். பிரான்ஸிஸ் சேவியரின் தோல்வி பற்றி அறிந்து கொண்ட அவர், ஒரு புதுத்திட்டத்தை உருவாக்கினார். அவர் ஏசுநாதரின் சீடர் பாலின் வழியைப் பின்பற்றினார். எல்லாவற்றையும் எல்லோருக்கும் கொண்டு வர வேண்டுமென்றும் சிலரைக் காப்பாற்ற முடியும் என்றும் பால் குறிப்பிட்டிருந்தார். இந்த நம்பிக்கையை ஆதாரசமாகக் கொண்டு மதுரை அரசர் திருமலை நாயக்கரின் அரச சபைக்குச் சென்றார்.

christian_conversion_jesus_robert_de_nobili_madurai1புகழ்பெற்ற மதுரை மிஷன் என்னும் கிறித்தவ சமயப் பரப்பை நிறுவினார். எவ்வாறு அவர் தமது பணியைத் துவங்கினார் என்பதை `இந்தியாவில் ஏசுநாதரின் சீடர்’ என்ற தமது நூலில் டாக்டர்.ஜே.என்.ஓகில்வி சித்தரித்திருக்கிறார். அவர் கூறுகிறார்:

“ஒரு நாள் மதுரையில் ஒரு பரபரப்பான செய்தி பரவிற்று. தூரதேசத்திலிருந்து ஒரு துறவி இந்தப் புண்ணிய நகருக்கு வருகை தந்துள்ளார் என்றும், அவர் பிராமணர்கள் தங்கும் விடுதியில் தங்கியிருக்கிறார் என்றும் செய்தி கூறிற்று. அந்த புண்ணியப் புருஷரைக் காணுவதற்காக அவர் தங்கியிருந்த இல்லத்திற்கு மக்கள் பெருந்திரளாக குழுமினர்; ஆனால், அந்தப் பிராமணருடைய வேலையாட்கள் உள்ளே செல்ல அவர்களை அனுமதிக்கவில்லை.

“எஜமானர் கடவுளை நோக்கி தியானம் செய்து கொண்டிருக்கிறார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’’ என்று அந்த வேலையாட்கள் கூறினார்கள். இது அந்த மக்களின் ஆர்வத்தை மேலும் கிளர்த்திவிட்டது; அந்தத் துறவியின் புகழ் அதிகரித்தது; யாரையும் பார்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது; தினம் தனிச்சலுகை பெற்ற சிலருக்கு அவரது தரிசனம் கிடைத்தது.

“அவர் ஓர் இருக்கையில் சப்பணம் போட்டு அமர்ந்திருந்தார். அந்த சன்னியாசியின் தோற்றமும் நடவடிக்கைகளும், பிராமணர்களின் தோற்றத்தையும் செயற்பாடுகளையும் ஒத்ததாக இருந்தன. அவருடைய புஜத்தில் 3 நூல் சரடுகள் கொண்ட புனித பூணுல் தொங்கியது;

அவற்றில் மூன்று சரடுகள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன; அவை மும்மூர்த்தங்களைக் குறித்தன; இரண்டு சரடுகள் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன; அவை ஆண்டவரது உடலையும் ஆன்மாவையும் குறித்தன; அந்த பூணூலிலிருந்து ஒரு சிலுவை தொங்கிக் கொண்டிருந்தது.

அவருடன் உரையாடியபோது அவரது ஆழ்ந்த கல்விப் புலமை வெளிப்பட்டது; அவரைக் கூர்ந்து கவனித்தபோது அவரது எளிய ஆன்மீக வாழ்க்கை புலப்பட்டது. ஒரு நாளில் ஒரு உணவுதான்; கொஞ்சம் சாதம், பால், காய்கறிகள் ஆகியவை கொண்டது அந்த உணவு. விரைவில் சாதாரண பிராமணர்கள் மட்டுமன்றி பிரபுக்களும் அவரைக் காண வந்தனர்.

jesus_christianity_conversion_lies_forgeryபார்த்தாலே தீட்டு என்ற ரோமாபுரி சாதியம்

ஒருநாள் தமது அரண்மனைக்கு வரும்படி அரசரிடமிருந்தே அழைப்பு வந்தபோது அவரது பெருமை மேலும் உயர்ந்தது. ஆனால் அந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கு செல்லும்போது ஒரு பெண்ணின்மீது தமது கண்களின் பார்வைபட்டு அவரது ஆன்மாவின் பரிசுத்தத்தன்மை கெட்டுவிடும் என்பதால் அரண்மனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.

மதுரை இத்தகைய ஒரு தலை சிறந்த ஞானியை என்றுமே கண்டதில்லை! அவருடைய வாழ்வின் தெய்வீகத் தன்மைக்கு இத்தகைய நிரூபணம் இருக்கும்போது அவரது போதனை உண்மையாகவன்றி வேறு எவ்வாறு இருக்கும்!

தாம் உயர்ந்த சாதியைச் சேர்ந்த “ரோமாபுரி பிராமணர்’’ என்ற அவரது கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. சாத்தியமான சந்தேகம் எதையும் நீக்குவதற்காக ஏதோ எழுதப்பட்ட பாடம் செய்யப்பட்ட ஒரு புராதனமான நைந்து நிறமற்ற ஆட்டுத்தோல் காண்பிக்கப்பட்டது;

“இந்த ரோமாபுரி பிராமணர்’’ பிரம்மதேவனிடமிருந்து நேரடியாக தோன்றியவர் என்பதையும் அவரது படைப்புகளிலேயே இவர்தான் மிக புனிதமானவர் என்பதையும் அது எடுத்துக்காட்டியது. இந்த ஆவணம் உண்மையானது என்று அந்த சந்நியாசி ஆணையிட்டு உறுதியாகக் கூறினார்.

தமிழின் முதல் போலி ஆவணம் தயாரித்த ஹோலி ஆணவம்

இதன்பேரில் அங்கு கூடியிருந்த மக்கள் அவரது போதனையைத் திறந்த மனத்துடன் செவிமடுத்துக் கேட்கலாயினர். “திறமையான, துணிச்சலான அவரால் பல நூல்கள் தொடர்ந்து எழுதப்பட்டன; இந்து சமயத்தை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ சித்தாந்தத்தைச் சிற்சில மாற்றங்களுடன் உருவாக்கினார். இத்தகைய முயற்சிகளில் மிகவும் முக்கியமானது, சுவர்க்கத்திலிருந்து நேரடியாக பிராமணர்கள் பெற்ற நான்கு வேதங்களுக்குச் சிகரம் வைத்தது போல் ஒரு `ஐந்தாவது வேதத்தை’ அவர் தோற்றுவித்ததாகும். இது ஒரு ஆச்சரியமான, துணிச்சலான, சிக்கலான செயலாகும். அதாவது ஐந்தாவது வேதத்தைக் கிறித்தவர்கள் உபயோகத்திற்கு ஒரு இந்து தயாரிப்பது போன்ற ஒரு போலி ஆவணமாகும். எனினும் இந்தப் போலி ஆவணம் நூற்று ஐம்பது ஆண்டுகள் நிலைத்து நின்றுவிட்டது.

“பிராமண சிஷ்யர்கள் அவருக்கு விரைவிலேயே சிரமமில்லாமல் கிடைத்தனர்; ஞானஸ்தானம் கணிசமான எண்ணிக்கையில் நடைபெற்றது;

ஞானஸ்நானத்தோடு சம்பந்தப்பட்ட சடங்கைப் பொறுத்தவரையில் முந்திய ஐரோப்பிய சமயப்பரப்பு அமைப்புகள் செய்த அதே சடங்குகளே புதியவைபோல் தோற்றமளிக்கும் வகையில் ஏமாற்றும் முறையில் செய்யப்பட்டன. வெளிப்படையான அடையாளங்களின்படி, புதிய அமைப்புகளின் முறைகள், வழிவகைகள் வெற்றிகரமாக முடிந்தன. இந்து சமயத்திற்கு அளித்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த சலுகைகள்- குறிப்பாக சாதி சம்பந்தமான சலுகைகள் – முன்னேற்றத்தைப் பெரிதும் சாத்தியமாக்கின என்பதில் சந்தேகம் இல்லை. டி நோபிலிக்கு சாதி அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றவில்லை. அவருக்குப் பிரதானமாக அது ஒரு சமூக சடங்கே.

எனவேதான், மதம் மாற்றப்பட்டவர்கள் தங்கள் சாதி சகோதரர்களிடமிருந்தோ அல்லது சடங்குகளிடமிருந்தோ தங்களைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று மதம் நிர்ப்பந்திக்கக் காரணம் எதையும் அவர் காணவில்லை. அவரால் மதம் மாற்றம் செய்யப்பட்டவர்கள், சாதி இந்துக்களை அடையாளம் காட்டும் குடுமியை வைத்திருந்தனர்; தங்களின் இந்து சகோதரர்களிடமிருந்து பிரித்து காட்டாதபடி புனிதப் பூணூலை அணிந்தனர். முன்பு பசுவின் சாணத்தின் சாம்பலிலிருந்து செய்த விபூதிக்குப் பதிலாக இப்போது சந்தனக் கட்டையின் சாம்பலில் தயாரான பட்டையை நெற்றியில் அணிந்து கொண்டனர்.

“நாற்பது ஆண்டுகள் டி நோபிலி இவ்வாறு வாழ்ந்தார்; அந்த வாழ்க்கை தினசரி கஷ்டத்தையும், தியாகத்தையும், தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்வதையும் போன்றவற்றைக் கொண்டதாக இருந்தது; அதற்கு இணையானதைக் காண்பது அரிது. 1656 மே மாதம் 16 ம் தேதி அவர் தமது எண்பதாவது வயதில் இயற்கையெய்தினார். நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் மதமாற்றம் செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று சொல்லப்படுகிறது. அதில் மிகைப்படுத்துதல் இருக்கலாம் என்று கருதி அதைக் குறைத்துக் கொண்டாலும் மாற்றம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்க வேண்டும்.

இல்லாத எதிரிகளும் பொல்லாத கதைகளும்

“போர்ச்சுக்கல் நாட்டில் ஓர் உயர் பிரபுவின் குடும்பத்தைச் சார்ந்த ஜான் டி பிரிட்டோ 1673 ஆம் ஆண்டு இந்தியாவிற்குக் கடல் பயணத்தைத் துவக்கினார். ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் இப்போது அவர் ஒரு புனிதராகப் போற்றப்படுகிறார். லண்டன் மதபோதக சபையைச் சார்ந்தவரும் நமது காலத்தவருமான வில்லியம் ராபின்சன் அவர் பற்றிக் கூறுகிறார்:

abrahamic_attitude_inventing_enemies“புகழ்பெற்ற சிஷ்யராக, துணிச்சலும், சுயநலமற்ற தன்மையும் கொண்டவராக, கிறித்தவர் வாழ்க்கையின் எல்லா கஷ்டங்களையும் தாங்கும் சகல சிறந்த குணங்களையும் பெற்றவராக அவர் திகழ்ந்தார் என்பது நிச்சயம்.

“மதுரை மன்னராட்சி சீர்குலைந்து பல குட்டி அரசுகள் அமைந்ததற்குப் பின் அவரும் அவரால் மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களும் ஈவிரக்கமில்லாமல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர்.

“எதிரிகளால் செய்ய முடிந்த அனைத்தையும் பொருட்படுத்தாமல், தாம் ஏற்றக் கடமையை அந்த ஊழியர் தொடர்ந்து செய்துவந்தார்; அவர் எங்கெல்லாம் பயணம் மேற்கொண்டாரோ அங்கெல்லாம் அவர் வெற்றி பெற்ற கதை கூறப்பட்டது. போதனையின் சக்தியோடு அந்த தூதுவரின் வசீகர சக்தியும் சேர்ந்து கொண்டது. அவரால் மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரமாயிற்று.

தாடியத்தேவர் என்ற மறவர் குறுநில மன்னர் இவர் கையால் ஞானஸ்நானம் பெற்றதையடுத்து, அவரை (டி பிரிட்டோவை) கொலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1693 பிப்ரவரி 4 ஆம் தேதி அவர் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டார்.

“டி பிரிட்டோவுக்குப் பின் அவருடைய இடத்திற்கு நியமிக்கப்பட்ட பாதிரியார் ஜோசப் பெஸ்கி 1707ல் இந்தியா வந்தடைந்தார்.

“ரோமாபுரி பிராமணர்கள்’’ எனும் கொள்கையைப் பெஸ்கியும் பின்பற்றினார். ஆனால் முன்பு இருந்தவர்களிடமிருந்து அவர் பெரிதும் மாறுபட்டிருந்தார். டி நோபிலியைப் பொறுத்தவரை, சாத்தியமான அளவு பக்தியுடன் கூடிய ஒரு துறவியாக, ஒரு புனித குருவாக நடந்து கொண்டார். டி பிரிட்டோ சஞ்சாரம் செய்யும் சன்னியாசியாக, புனித யாத்திரை செய்பவராக இருந்தார்; அவர்கள் இருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் மிகச்சிறந்த துறவிகளாக எளிய வாழ்க்கை வாழ்ந்தனர்.

கவர்ச்சி நடிப்பும், கள்ளப் புலமையும்

jesus_charlatan_christianityஆனால் பாதிரியார் பெஸ்கி ஒரு புதுவழியைக் கடைப்பிடித்தார். இந்து சமயத்தில் ஒருபுறம் துறவிகள் இருந்தது போலவே இன்னொருபுறம் படாடோப வாழ்க்கை நடத்திய சமய குருமார்களும் இருந்தனர். பிந்தியவர்கள் வாழ்க்கை பகட்டு வாய்ந்த, சந்தர்ப்பவாதத் தன்மை கொண்டதாக இருந்தது. இந்த வழியையே பெஸ்கி பின்பற்றினார். அவரது ஆடம்பர ஆர்ப்பாட்டம் மக்களைப் பிரமிக்க வைத்தது. அவர் எங்கு செல்ல வேண்டியிருந்தாலும் விலை உயர்ந்த பல்லக்கில்தான் செல்வார். அவருக்கு முன்னால் ஓர் உதவியாளர் கருஞ்சிவப்பு நிறப் பட்டுக்குடையைப் பிடித்துக் கொண்டு செல்வார்; பல்லக்கின் இருபக்கமும் கவர்ச்சிகரமான மயில் தோகைகளாலான விசிறிகளுடன் பணியாளர்கள் ஓடிவருவார்கள்; பல்லக்கில் அவர் அழகான புலித்தோலில், விலை மதிப்புள்ள கவர்ச்சிமிக்க உடையில் அமர்ந்திருப்பார்.

ஆனால் பெஸ்கி வெறும் வெத்துவேட்டு பாதிரியரல்ல. மக்களைப் பற்றி முற்றிலுமாகப் புரிந்து கொண்டு அவர் தனது வழிமுறையைக் கையாண்டார். பலரிடம் அது நன்கு பலனளித்தது. அவரது புகழ் அவரது படோடோபமான நடைமுறைகளால் ஏற்பட்டதல்ல; அவருடைய வியக்கத்தக்க புலமையின் அடிப்படையில் கிடைத்தது. அவரை ஒரு பிறவி பன்மொழிப்புலவர் என்று தான் கூற வேண்டும். அவர் தமிழில் முழுமையாகப் புலமை பெற்றிருந்தார். அவர் காலத்தில் அவர் மிகவும் திறமை பெற்ற தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். உள்நாட்டுப் பண்டிதர் எவரும் அவருக்குச் சமமாக இருக்கவில்லை. `செந்தமிழ்’, `கொடுந்தமிழ்’, பண்டித பிராமணரின் தமிழ், மக்களின் வட்டார மொழி இவை எல்லாவற்றிலும் தேர்ந்தவராக இருந்தார். அகராதிகள், இலக்கண நூல்கள், கவிதைகள், உரைநடைக் கட்டுரைகள் – இவை எல்லாம் அவரது பேனாவிலிருந்து மலையருவிபோல் பொழிந்த வண்ணமிருந்தன. அவை இன்றும் படித்துப் போற்றி மதிக்கப்படுகின்றன.

இந்நூல்கள் முதலில் வெளிவந்தபோது தென்னிந்திய மக்கள் அவற்றைப் படித்துப் பரவசமடைந்தனர். அவரது புலமையால் மிகவும் ஆகர்ஷிக்கப்பட்ட வேலூர் நவாப் சந்தா சாகிப் அவரைத் தமது அரசவையில் ஓர் உயர் பதவியில் நியமித்தார்; அவருக்கு உதவும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நான்கு கிராமங்களை அவருக்கு மான்யமாக வழங்கினார்; அவை 12,000 ரூபாய் வருமானத்தைக் கொடுத்தன. இந்தப் புகழையும் செல்வாக்கையும் பெஸ்சி விசுவாசத்துடன் தமது சமயப்பணியை முன்கொண்டு செல்லப் பயன்படுத்தினார். அவர் வாழ்நாளில் இப்பணி மிக உயர்நிலையில் இருந்தது; ஆனால் பாதிரியார் பெஸ்கி 1742ல் மரணமடைந்ததையடுத்து அப்பணி வேகமாகச் சரிந்து இறுதியில் வீழ்ச்சியில் முடிந்தது.’’

மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு மனவருத்தம் ஏற்படுத்தக் கூடிய மேற்கத்திய பழக்கவழக்கங்களை அவர்களிடம் பரப்பாமல் கிறித்தவ சமயத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டுமென்ற ஆர்வம் காரணமாக மதுரை சமயப் பிரசாரகர்கள், பல இந்து சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கும் சலுகைகளை அனுமதித்தனர். புனித பூணூல் அணிவது, நெற்றியில் மத அடையாளங்களை இட்டுக் கொள்வது, வயதுக்கு வரும் முன்னரே குழந்தைக்குத் திருமணம் செய்துவிடுவது, சில சந்தர்ப்பங்களில் புனித சடங்குகளில் பெண்களை அனுமதிக்க மறுப்பது, தீட்டைப் போக்கக் குளிப்பது, தங்கள் சாதிக்கு வெளியே திருமணம் செய்யவோ மற்ற சாதியினருடன் உணவு அருந்தவோ மறுப்பது ஆகியவையும் இந்த சலுகைகளில் அடங்கும். இவை “மலபார் சடங்குகள்’’ என்று அழைக்கப்பட்டன.

இவையெல்லாம் போப் 14 – ஆவது பெனிடிக்டால் 1744 செப்டம்பர் 12ம் தேதி வெளியிட்ட கட்டளையால் ரத்து செய்யப்பட்டன. போப்பாண்டவரின் இந்த கட்டளைக்கு அன்றிலிருந்து ஒவ்வொரு மத போதகரும் கீழ்ப்படிய வேண்டியிருந்தது.

இது எப்படியிருப்பினும், பழைய பழக்க வழக்கங்களும் சம்பிரதாயங்களும் நெறிமுறைகளும் கிறித்தவ சமயத்துக்குப் புறம்பானவை அல்ல என்று மேலே கூறிய கிறித்தவ சமயபோதகர்கள் தோற்றுவித்த மரபு மறைந்து போகாமல் அப்படியே இன்றளவும் நீடித்துவரவே செய்கிறது. மோசமான ஐரோப்பியர்கள் காட்டிய தீய முன்மாதிரிகளும் அதேபோல், ஐரோப்பிய பழக்க வழக்கங்கள் மீது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இருந்த வெறுப்பும் 16ஆவது நூற்றாண்டில் கிறித்தவ மதபோதகர்களுக்கு அவர்களது பணியில் மிகுந்த இடைஞ்சலாக, இடையூறாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை.

(தொடரும்…)

One Reply to “[பாகம் 12] ரோகம் பரப்பும் ரோமாபுரிச் சாதியம்”

  1. Dear all pls note cristianity in crisis pls don’t make any comment on it let they spent thier time and money. We can make our people strög on mind to face any challenge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *