கணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி

[உலகெங்கும் கணக்கற்ற தெய்வத் திருவுருவங்களையும், திருக்கோயில்களையும், கலாசார நினைவுச்சின்னங்களையும் உருவாக்கிய சிற்பக் கலை வித்தகர் வி.கணபதி ஸ்தபதி அவர்கள் செப்டம்பர்-6ம் நாள் சென்னையில் மரணமடைந்தார்.]

ந்தக் காலத்தில் வைத்தியநாத ஸ்தபதியின் சிற்ப வேலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. விஸ்வகர்ம பாரம்பரியத்தில் வந்த ஸ்தபதியின் குலம் இம்மண்ணை ஆண்ட சுதேச மன்னர்களால் மரியாதையுடன் நடத்தப்பட்டு வந்த குலம். ராஜ ராஜ சோழன் முதல் மருது சகோதரர் வரை இந்த மண்ணில் ஸ்தபதிகள் ஆன்மிக கலை கோவில்களின் அறிவியல் ஆச்சாரியர்களாக மதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். காலனிய காலத்தில் இந்த அரச மரியாதைகள் தளர்வுற்று தாழ்ந்த நிலையிலும் சிற்ப அறிவியலை காப்பாற்றிய வாழையடி வாழையான குலத்தில் வந்தவர்தாம் வைத்தியநாத ஸ்தபதி.

விடுதலைக்கு பிறகு அந்த ஸ்தபதியின் கலைத்திறனை அவரிடமிருந்த பாரம்பரிய அறிவியல் திறனை கண்டறிந்தார் ஒரு அரசியல் தலைவர். சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் மனதில் அன்று இந்த பாரம்பரிய அறிவியல் ஆன்மிக கலையில் தலைமுறைகள் அறுந்துவிடாமல் குரு சீட பரம்பரை ஒன்றை வளமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. 1957 இல் ஸ்தபதியின் ஞானம் ராஜாஜிக்குள் ஏற்றிய பொறி அரசாங்க சிற்பக் கலை பயிற்சி மையமாக உருவானது. அதன் தலைமை பொறுப்பு வைத்தியநாத ஸ்தபதிக்கு வந்தது.

அந்த வைத்தியநாத ஸ்தபதியின் மைந்தன்தான் புகழ் பெற்ற வி.கணபதி ஸ்தபதி. 1961 இல் இருந்து 27 ஆண்டுகள் இந்த கலை கோவிலின் ஆன்மிக அறிவியல் வளாகத்தின் பொறுப்பில் இருந்த கணபதி ஸ்தபதி அப்பொறுப்பினை ஒரு தவமாக நடத்தினார். உலகமெங்கிலும் தமிழ் இந்துப் பண்பாட்டின் சின்னங்களாகவும் ஆன்மிக அறிவியல் மையங்களுமாகவும் திகழும் கோவில்களை உருவாக்கினார். வாஸ்து சாஸ்திரத்தை வானவியலுடன் இணைத்தார். முதல் முன்னோடிகளுக்கே உரிய சில அதீதங்கள் அவரிடம் இருந்தன. ஆர்வ மிகுதியால் அவர் செய்த ஒருசில ஊகங்கள் அறிவியல்பூர்வமாக தவறாக இருக்கலாம்; ஆனால் அவரது பங்களிப்பு மகத்தானது. ஒரு பரந்து பட்ட உலகம் தழுவிய பார்வை அவருக்கு இருந்தது. அதே சமயம் அவரது கால்கள் தமிழ் பாரம்பரியத்திலும், அவரது தொழில் தருமத்திலும் வேரூன்றி இருந்தன.

ஸ்தபதி ஒரு தனிமனிதர் அல்ல. அவர் ஒரு இயக்கம். மகாபலிபுரத்தில் வாஸ்து வேத அறிவியல் மையத்தை (Vastu Vedic Research Foundation) அவர் உருவாக்கினார். மயனை உலக ஸ்தபதிகளின் ஆதி குருவாக அவர் கருதினார். வாஸ்து அறிவியல் பிரபஞ்ச சூட்சுமங்களை கல்லில் வடிக்கும் ஒரு இசைவியக்கம் என அவர் கருதினார். அவரது வார்த்தைகளில்,

”வஸ்து மற்றும் வாஸ்து குறித்த இந்திய அறிவியல் இப்பிரபஞ்சத்தின் கணிதத்துவ அடிப்படையை கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அதுவே ஒரு கணிதச் சமன்பாட்டின் வெளிப்பாடு. கணித்த்தின் ஆகச்சிறந்த சாத்தியம் சிற்பமே என்கிறார் மயன். … வாஸ்து சாஸ்திரங்கள் கோவில் கலையை இறைவடிவமாகவே உருவாக்குகின்றன.

’ப்ரஸாதம் புருஷம் மத்வா பூஜயேத் மந்த்ர வித்தம:’ (‘Praasadam Purusham Matva Poojayet Mantra Vittamaha’)

என்று சொல்லும் சில்ப ரத்தினம். எனவே கோவிலே வணங்கப்பட வேண்டியதாகும். இந்த அலகின் அளவுகோலே பிரக்ஞைக்கு வடிவம் அளிக்கிறது. அதுவே ஸ்தூல சூட்சும வடிவங்களை கால-வெளியின் கணிதத்தால் சமைக்கிறது. இதுவே அனைத்து வாஸ்து சாஸ்திரங்களின் அடிப்படையாகும்.”

தென் அமெரிக்க பண்பாட்டின் கட்டிடங்களுக்கும் இந்திய பாரம்பரிய கட்டிடக் கலைகளுக்குமான தொடர்பை அவர் சுட்டியிருக்கிறார். இன்றைய ஆராய்ச்சியாளர்கள் அதை எளிதாக மறுத்துவிடுவார்கள். ஆனால் ஒருவித அடிப்படை மன ஒத்திசைவு இந்த இரு பண்பாடுகளுக்கும் இருந்திருக்க கூடுமா?

காலனிய ஆதிக்கத்தின் கொடுமைகளை உலகிலுள்ள பூர்விக பண்பாடுகள் அனைத்துமே அனுபவித்தன. ஆனால் அதில் பிழைத்து நிற்கும் ஒரே பண்பாடு இந்து பண்பாடுதான். அந்த இந்து பண்பாட்டிலும், அன்னிய படையெடுப்பால் ஆலயங்கள் அழியாமல் தப்பி பாரம்பரிய ஆலயங்கள் கட்டும் கலை-அறிவியல் பிழைத்திருப்பது தமிழ் மண்ணில்தான். எனவே தமிழ் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு உலகமெங்கும் உள்ள பூர்விக பண்பாடுகளுடன் ஒரு ஈர்ப்பும் ஆதரவுத் தன்மையும் இருப்பது இயல்பே. இப்பார்வையில் பார்க்கும் போது ஸ்தபதியின் மாயன் பண்பாட்டுக் கோட்பாட்டை நாம் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தமிழ் இந்து பண்பாட்டுக் கட்டிடக் கலையைப் போல அந்த தென்னமெரிக்க ஆன்மிக கட்டிடக் கலைகளையும் பாதுகாத்து பேண வேண்டியது ஒருவிதத்தில் நம் கடமையும் கூட. இதிலிருந்துதான் அது வந்தது என சொல்லும் போக்கு அறிவியல் தன்மை அற்றதும் தேவையற்றதும் ஆகும்.

அவருக்கு தமிழ் ஹிந்துக்களாக அஞ்சலி செலுத்த வேண்டியது நம் கடமை. உண்மையான அஞ்சலி உலகமெங்கும் இருக்கும் பூர்விக பண்பாடுகளின் ஆன்மிக கலை அறிவியல்களை மீண்டும் வளர்த்தெடுப்பதில் உள்ளது.

14 Replies to “கணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி”

  1. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்.

    இதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

  2. கோயில்களைச் சூறையாடுவதே கொள்கையாகவும் பெருமையாகவும் கொண்டவர்கள் அதிகாரம் வகிக்கும் காலத்தில் கணபதி ஸ்தபதி போன்றோர் வாழ்ந்ததும், தம் பங்களிப்பைத் தந்ததும் பெரிய விஷயங்கள். பெரிதாகப் பேசப்படவேண்டிய விஷ்யங்கள். எனக்குத் தெரிந்தவரை, தவறாக இருந்தால் திருத்துங்கள், எல்லாவற்றையும் ஒருத்தர் தெரிந்திருக்க முடியாது, எனக்குத் தெரிந்தவரை, பத்திரிகைகளோ, தொலைக்காட்சியோ இது பற்றி பேசவில்லை.

    தமிழ்ஹிந்து இவ்வளவாவது செய்திருக்கிறதே என்று சமாதானம் கொள்ளலாம். கணபதி ஸ்தபதி மறைந்தது தமிழ் ஹிந்துவிலிருந்து [..]தான் தெரியும்,.

    ஆனால் அவர் பங்களிப்பு பெரிதாக, விஷ்யம் தெரிந்தவர்களால் பேசப்படவேண்டிய விஷ்யம். ஒரு நீண்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பார்ம்பரியத்தின் இன்றைய கொழுந்து அவர்.

    தமிழ் நாட்டின் மௌனம் வருத்தம் தருவதாக இருக்கிறது.

  3. எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்

  4. வணக்கம்.
    பெரியவர் கணபதி ஸ்தபதி அவர்களுக்கு அஞ்சலி.
    வாழ்வாங்கு வாழ்ந்து சாந்தமான அவரது ஆத்மா தெய்வத்தோடு வைக்கப்பட்டிருக்கும்.
    நம் தமிழ் நாட்டைப் பற்றி கவலைப் பட தேவையில்லை.
    அவரது கைங்கர்யத்தில பலப்பல கலாச்சார விதைகள் கோவில்களாக நம் இந்த உலகம் முழுவதும் இப்போது மிகவும் ஆழமாக வேருன்றி உள்ளது.
    பெரியவர் கணபதி ஸ்தபதி அவர்களுக்கு அஞ்சலி.
    நமஸ்கரிக்கிறேன்.
    நன்றி.
    ஸ்ரீனிவாசன்.

  5. கணபதி ஸ்தபதி அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன். விஸ்வகர்மா சமூகம், ஒரு கைஏடுவிலிருந்து சில செய்திகள். விஸ்வம் என்றால்-உலகம் கர்மா என்றால்-ஆக்கியவன் என்று பொருள். ஐந்து தலையும் ,பத்து கரங்களையும் கையில் பத்துவித ஆயுதங்களையும் கொண்டு இப்பூவுலகை படைத்தவன் ஸ்ரீ விஸ்வ ப்ரம்மா. அவர் தம் துணைவி ஸ்ரீ காயத்திரி தேவி. அகிலமெல்லாம் விளங்கும் ப்ரம்ம குலத்தவர் தாம் விஸ்வகர்மாக்கள் ஆவார்கள்.
    மனு, மயா, துவஷ்டா, சிற்பி, விஸ்வக்ஞ என உலகம் உருவாக வித்தான ஐம்பெரும் தொழில்களை செய்து பாரினை படைத்தவர்கள் விஸ்வகர்மாக்கள். இது ஒரு சாதி அமைப்பு மட்டுமல்லாது தொழில் சார்நத சமுதாயம் ஆகும்.
    மனு – இவர்கள் கருமார் என்றும் கொல்லர் என்றும் அழைப்பார்கள். அரசர்கள் காலத்தில் பாதுகாப்பிற்கு தேவையான ஆயுதங்கள் முதல் வீட்டிற்கு தேவையான பூட்டு, கேட்டு, விவசாய கருவிகளை, அனைத்து இரும்பு சாமான்களை செய்பவர்கள்.
    மயா – விபசாயத்திற்கு தேவையான ஏர் முனை ,வீட்டிற்கு தேவையான நிலை, சன்னல், மேஜை, நாற்காலி முதலான மரசாமான்களை கலைநயத்துடன் செய்பவர்கள்.
    துவஷ்டா – இவர்கள் கன்னார் எனவும் அழைப்பர். இவர்கள் வீட்டிற்கு தேவையான குடம், பானை, அன்டா குண்டா என அனைத்து சீர்வரிசை பாத்திரங்களை செய்து தருபவர்கள்.
    சிற்பி – நாம் வணங்கும் அனைத்து இறை உருவங்களையும், நம் நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் பறைசாற்றும் உலகம் போற்றும் ஆலயங்களையும் வடிவமைத்து ,கருங்கல், ஐம்பொன் உலோகம் ,மரதேர் என மூன்றிலும் தம் சிற்பகலை நயத்தை பதிப்பவர்கள் சிற்பிகள் ஆவர்.
    விஸ்வக்ஞ – பொற் பணியாளர் தங்கத்தில் ஆபரண அணிகலன்களை செய்துதருவதில் கைதேர்ந்தவர்கள்
    இவை மட்டும்மின்றி ஓவியக்கலையில் தஞ்சை ஓவியங்களாக, நெட்டியில் கலை வேலைபாப்பாடுகள், தஞ்சை கலை தட்டுகள், இசை கருவிகளான தஞ்சை வீணை, நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, ஆலயமணி மற்றும் வீட்டிற்கும் கோயிலுக்கும் தேவையான பூஜை சாமான்கள் போன்ற கலைநயம் மிக்க பல பொருட்களை தயாரித்து மேல் நாட்டினரும் வியக்கும் வண்ணம் நம் பாரதத்தின் பெருமையும் கலை மற்றும் பண்பாட்டையும் வளர்த்து வருபவர்கள் விஸ்வகர்மாக்களே
    இவர்கள் விஸ்வ பிராமனர் ,விஸ்வகர்மா, கம்மாளர், கண்ணாளர், ஸ்பதியார், ஓவர், வித்தகர் என்றெல்லாம் அழைப்பார்கள். தமிழகத்தில் இவர்கள் 70 லஷ்சம் பேர்களும் இந்தியாவில் சுமார் 12 சதவிதிதமும் வாழ்ந்து வருகிறார்கள். விஸ்வகர்மாக்களின் குல தெய்வமாக விளங்குபவள் ஸ்ரீகாமாட்சி ஆவாள். ஆதனால்தான் தமிழகத்திலுள்ள ஊர்களில் கண்டிப்பாக ஒரு காமாட்சி கோவில் இருக்கும்.
    இப்படி நமது பாரதிய பண்பாட்டு கலை வளத்தை தொடர்ந்து பாதுகாத்துவரும் இந்த விஸ்வகர்மா பரம்பரையை பாதுகாப்பது நமது சமூதாய கடமையாகும். மேலும் இந்த கலைகள் அழியாமல் தொடர்ந்து வர ஒவ்வொரு விஸ்மகர்மா குடும்பதிலும் ஒரு ஆண்மகனையாவது இந்த குல தொழிலில் ஈடுபடுத்துவது சமுதாயத்திற்கு நல்லது. இது பிராமிணர்களுக்கும் மற்ற குல தொழில் செய்போருக்கும் பொருந்தும்.

  6. திரு கணபதி ஸ்தபதி அவர்களது மறைவு கலை உலகிற்கு பேரிழப்பு ஆகும். தமிழக கட்டிடப் பாணியில் அழகு மிளிர அமைக்கப்பட்ட ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம் அவரது கலைப் பணியை கடல் சூழ் இத் தீவுகளில் காலத்திற்கும் பறை சாற்றிக் கொண்டு இருக்கும்.

    அன்னாரது ஆத்மா அக்கல்ஆலமரத்தின் கீழ் அமர்ந்து இருக்கும் பரம் பொருளின் பாதம் பற்றி எந்நாளும் இருந்திட வேண்டுகிறேன்.

    அன்புடன்
    புகழேந்தி முருகையன்
    சிசெல்ஸ் தீவுகள்
    இந்து மகா சமுத்திரம்

  7. காஞ்சிப் பெரியவர் பற்றி கணபதி ஸ்தபதி…
    (தென்றல் மாத இதழ் – மார்ச் 2009)

    சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்யாகுமரியில் 133 அடி உயர வள்ளுவர் சிலை, டெல்லியில் மலைமந்திர் சுவாமிநாத சுவாமி கோவில், ஹவாயில் உள்ள இறைவன் கோவில் – இவற்றில் எதைப் பார்த்திருந்தாலும் நீங்கள் கணபதி ஸ்தபதி அவர்களின் பிரம்மாண்டக் கலைத் திறனைப் பார்த்திருக்கிறீர்கள். தவிர, லண்டன், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஃபிஜி, ஸ்ரீலங்கா என்று எங்கெல்லாம் உலகில் இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஸ்தபதியார், அவர்களுக்குக் கோவில்களை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அமெரிக்காவில் வாஷிங்டனில் சிவ-விஷ்ணு, ஐயப்பன், வெங்கடேஸ்வரா ஆலயங்கள், இல்லினாய்ஸ் ஸ்ரீ ராமர் கோவில், சிகாகோ கணேச சிவ துர்கை ஆலயம் என்று இவர் நிர்மாணித்த கோவில்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 82 வயது ஆன போதிலும் இன்னும் படைப்பும் ஆய்வும் தொய்வில்லாமல் செய்துவருகிறார்.

    மகரிஷி மகேஷ் யோகியின் மஹரிஷி வேதப் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ‘Building Architecture of Sthapatya Veda‘, ‘Quintessence Of Sthapatya Veda‘, ‘Who Created God‘ போன்ற 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சில்ப குரு, துளசி சம்மான், கலைமாமணி, சில்ப கலாநிதி, தென்னக மயன், வாஸ்து வியாசன், பத்மபூஷண் உட்பட பல்வேறு விருதுகள் பெற்ற இவரைத் தென்றலுக்காக நேர்காணல் செய்தபோது…

    கே: காஞ்சிப் பெரியவருடன் நெருங்கிப் பழகிய அனுபவங்களைச் சொல்ல முடியுமா?

    ப: பல ஆண்டுகளுக்கு முன்னரே வேத, ஆகம, வாஸ்து, வித்வ சதஸ்ஸை அவர் காஞ்சிபுரத்தில் நடத்தியிருக்கிறார். நான் சிற்பக் கலைக் கல்லூரி முதல்வராக இருந்த போது அதில் கலந்து கொண்டிருக்கிறேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தயங்காமல் விளக்கமான பதில் சொன்னதால் என்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கும் மேல் அவருடன் தொடர்பு இருந்தது. காஞ்சிப் பெரியவர் வெறும் சன்யாசி மட்டுமல்ல. அவர் திரிகால ஞானி. பல்வேறு சாஸ்திரங்கள் தெரிந்தவர். மிகப் பெரிய ஆத்ம ஞானி. அவர் ஒரு மகா வித்வான். ஆர்க்கியாலஜிஸ்ட். அவரைப் போன்றவர்களின் அருளாசி கிடைத்தது எனது பாக்யம்தான். சுவாமிகளின் அருளாசியோடு அமைக்கப்பட்டது புதுதில்லியில் உள்ள சுவாமிநாத சுவாமி ஆலயம்.

    “அமோகமாக இருப்பாய்” என்று ஆசிர்வதித்தார் காஞ்சி மகாபெரியவர்.

    சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.

    1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து வரச் சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றெல்லாம் சுவாமிகளிடம் கேட்டேன்.

    சுவாமிகளோ அதற்கு பதில் ஏதும் கூறாமல், என்னைப் பற்றி, என் கல்வி பற்றி, நான் பார்க்கும் வேலை பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. தந்தையைப் பற்றி இவர் எதுவுமே கூறவில்லையே அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ, உயிர் பிழைக்க மாட்டாரோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சுவாமிகளோ திடீரென்று ‘வா என்னுடன்’ என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார்.

    வெகு தூரம் நடந்து மூத்த சுவாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர், ‘இங்கேயே இரு’ என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். நான் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தேன். மணி 12ஐக் கடந்து விட்டது. கூட்டம் கலைந்து சென்று விட்டது. நான் மட்டும் தனியே, வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் சென்றிருக்கும், ‘எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டுக் கொண்டே அதிஷ்டானத்தில் இருந்து வெளியில் வந்தார் சுவாமிகள். ‘இங்கே இருக்கிறேன் சுவாமி’ என்றேன் நான். சுவாமிகள் உள்ளே செல்லும் போது பாரம்பரிய தண்டத்தோடு மட்டுமே சென்றார். வரும்போது அவர் கையில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரகாரத்தின் ஒரு மூலையில் நின்று, தண்டத்தைப் பிடித்துக் கொண்ட சுவாமிகள், என் தந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

    நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டவர், ‘உன் அப்பாவுக்கு வந்திருப்பது பிராரப்த கர்மாவால். நீ மிகவும் அமோகமாக இருப்பாய்’ என்று சொல்லி ஆசிர்வதித்தார். இரு தேங்காய் மூடிகளையும் என்னிடம் கொடுத்து, ‘இந்த வழியாகப் போ. போகும் போது ஆஃபிஸில் போய் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ’ என்றார்.

    அதுவோ பயங்கரமான இருள் பிரதேசம். சுவாமிகள் சொன்ன வழியில் எப்படிச் செல்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த போது, ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை. ‘ஸ்தபதி, இந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்!’ என்று சொல்லி நடக்கத் தொடங்கினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். யார் இவன், எங்கிருந்து வந்தான் என்று. ஏதாவது பேய், பிசாசாக இருக்குமோ என்று சற்று பயமாகக் கூட இருந்தது. மயானக் கரை வேறு அருகில் இருந்தது. ஆனாலும் அவன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். அவன் உருவத்தைப் பார்க்கும்போது கோபுலு வரைந்த ஆதி சங்கரர் ஓவியம் நினைவுக்கு வந்தது. அந்த உருவமே நேரில் வந்திருப்பது போலத் தோன்றியது. சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும், அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ கூறிவிட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான்.

    பின்னர் மேனேஜர் என்னிடம் ஒரு ரசீதில் கையொப்பமிட்டு ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார். நான் மறுத்தேன். ‘இது சுவாமிகளின் உத்தரவு. அவசியம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்றார். நானும் மறுக்க மனமின்றி அதை வாங்கிக் கொண்டேன். அதன்பின் என்னை உள்ளே சென்று உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கூறினார். அப்போதோ நேரம் இரவு 1 மணிக்கு மேல் இருக்கும். நானும் நல்ல பசியில் இருந்தேன். உள்ளே சென்றால் சாதம், சாம்பார், ரசம் என எல்லாம் சுடச்சுட இருந்தது. சாப்பிட்டுவிட்டு, அகால வேளை என்பதால் அங்கேயே இரவு தங்கி விட்டுப் புறப்பட்டேன்.

    பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் சுவாமிகளிடம் இதைத் தெரிவித்த போது, ‘எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது’ என்று கூறி சிலாகித்தார். ‘காமகோடி‘ என்ற இதழில் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். இது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

    – கணபதி ஸ்தபதி

  8. நமது ஹிந்து சமயத்தின் ஆழ்ந்த தத்துவங்களின் வெளிப்பாடாக இலங்கும் கோயில் கலையின் சாதனை நாயகனாய் வாழ்ந்த அமரர் ஸ்ரீ கணபதி ஸ்தபதி அவர்களின் தூய ஆத்மா இறை திருவடி நிழலில் அமைதிப்பெற ஆலவாய் அண்ணலின் திருவடி பணிவோம்.
    ஓம் த்ரயம்பகம் யஜாமகே
    சுகந்திம் புஷ்டிவர்தனம்
    உர்வாருகமிவ பந்தனான்
    ம்ருத்யோர் முக்ஷீய
    மாம்ருதாத்
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  9. நேற்றுதான் அவரது நிகழ்ச்சியை புதிய தலைமுறை தொலைகாட்சியில் கண்டேன். இன்று இச்செய்தி….
    துயரம் தரும் இழப்பு…….
    அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  10. அவர் வடிவமைத்த கோவில்கள் அவர் புகழ் பாடும் .. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை ப்ராதிகின்றேன் .

  11. My respects and pranams to late Sri Ganapathy Sthapathiyar.
    Can I get the office address of The Govt.Sirpakkalai payirchi maiyam?
    Regards.
    Jambunathan

  12. My sincere pranam to the Great soul!! it is sad that the people of Tamilnadu did not give the required honour to him during his demise.

  13. மாபெரும் கலைஞனுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *