சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1

பயணம் ஒரு மனிதனுக்கு கற்றுத்தருகிற பாடங்களும் அனுபவங்களும் ஏராளம். பயணம் மனிதனை ஆற்றுப்படுத்துகிற, அறிவை மேம்படுத்துகிற, அழகான அனுபவங்களை நெஞ்சில் சுமக்கச்செய்கிற ஒன்றாக இருக்கும்வரை அதை அவன் ரசித்துச் செய்கிறான். மேலும் தான் சென்று வந்த பாதையில் சந்தித்ததை, தான் சென்ற இடத்தில் கண்டு களித்ததை நண்பர்களுக்கும் மற்றவர்க்கும் வாழ்மொழியாகவோ வேறு வகையிலோ பிரகடனப்படுத்தி அவர்களும் சென்று வரவேண்டும் என்று ஆவல் கொள்கிறான்.

இப்படித்தான் காலம் காலமாக பல அற்புதமான சுற்றுலாத்தலங்களும் ஆன்மீகத் தலங்களும் யாரோ ஒருவரின் முதற்பார்வையில் பட்டு, மற்றவர் வருகையால் வெளிச்சம் பாய்ச்சப்பட்டு, இன்று ஜன சமுத்திரத்தில் நிரம்பி வழிகிறது. ஆனால் சதுரகிரிக்கு நான் மேற்கொண்ட முதற்பயணம் யாருக்கும் பரிந்துரைக்க முடியாத வண்ணம் சற்றே (மிக அதிக) சிரமத்துடன் நடந்து முடிந்தது. பொதுவாக ஆலயப் பிரயாணங்களிலும் ஆண்டவன் தரிசனத்திற்காகவும் பயணம் போய் வந்ததில் சந்தித்த சிரமங்களை சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால் உண்மையிலேயே ஒருவர் உடலளவில் மிகுந்த சிரமத்திற்கு ஆட்பட்டால் மட்டுமே இந்த ஆலயத்திற்கு போய் வருவது என்பது சாத்தியமாகும்.

இந்தியாவில் மலை வாசஸ்தலங்களில் இருக்கும் கோயில்கள் அனேகமாக எல்லாமே அற்புதமான அல்லது அடிப்படை சாலை வசதிகளோடு இருக்கும் இன்றைய நவீன யுகத்தில் சதுரகிரி மட்டும் கவனம் சிதறினால் உயிருக்கோ அல்லது உடல் உறுப்புகளுக்கோ ஆபத்தை விளைவிக்கக்கூடிய மிகக்கடினமான மலைப்பாதையில் பயணப்பட்டால் மட்டுமே ஆண்டவன் தரிசனம் சாத்தியம் என்கிற வகையில் வைக்கப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் இந்த பூமியில் இன்றும் சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே.

நாம் புராணங்களில் படித்த பதினெட்டு சித்தர்களில் அனேகர் பகவத்பாதம் அடைந்துவிட்டனர் என்றாலும் இன்றும் சிலர் இந்த சதுரகிரி மலைகளில் அரூபமாக வாசம் செய்து தங்கள் தவ வலிமையை மேம்படுத்துவதிலும் மூலிகை மருத்துவத்தில் பலப்பல ஆராய்ச்சிகள் செய்வதிலும் மூழ்கியுள்ளனர் என்கின்றனர் இங்கு மாதந்தோறும் வருகின்ற சிவ பக்தர்கள். அவரவர் இறை சிந்தனைக்கேற்ப, மனப்பக்குவத்திற்கேற்ப சித்தர்களின் தரிசனம் இங்கு பலருக்கும் வாய்த்திருக்கிறது என்பது இந்த தலத்தின் மிக முக்கிய அம்சம்.

ஆனால் இங்கே வருகிற பக்தர்கள் இந்த மலையின் தெய்வீகத்தன்மை பற்றியோ, கால தேச வர்த்தமானங்களை கடந்த மூன்று காலங்களிலும் சஞ்சரிக்கிற திறன் படைத்த சித்தர்கள் அரூபமாக வசிக்கிற மலையில் இருக்கிறோம் என்பதைப்பற்றியோ உணர்ந்து செயல்படுகிறார்களா என்றால் நிச்சயம் கிடையாது என்றே சொல்லத் தோன்றுகிறது. நுகர்ந்து தூக்கியெறிந்துவிடுகிற கலாசாரம் மிகுந்துவிட்ட இன்றைய அவசர யுகத்தில் எல்லா இடங்களிலும் எல்லா விஷயங்களும் பதனப்படுத்தப்பட்டு கிடைப்பது ஒருபுறம் நன்மையெனத் தெரிந்தாலும், இன்னொருபுறம் இதுபோன்ற இடங்களில் மனிதர்கள் தூக்கி எரியும் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளின் மிகுதி அந்த வட்டாரத்தை எவ்வளவு தூரம் பாழ்படுத்துகிறது என்பதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. மேலேறிச் செல்லும்போது வழியெங்கும் குவிந்து கிடந்த காலி தண்ணீர் பாட்டில்களை ஆன்மிக அமைப்பைச் சேர்ந்த அன்பர்கள் சிலர் கோணியில் சேகரித்துபடி கீழிறங்குவதை காண முடிந்தது. அவர்களால் ஆன, தன்னார்வத்தில் விளைகிற இந்த சமுதாயக்கடமையும் அங்கே நடைபெறமால் போனால் கொஞ்சகாலத்தில் கழிவுகளால் இந்த மலை நிரம்பி வழியும் அபாயம் கண் முன்னே காட்சியாக விரிந்தது.

நாம் ஒரு திரைப்படம் பார்க்க விரும்பினால் பொதுவாக அதுபற்றி விசாரிக்கும்போது அது அருகாமையில் எந்த திரையரங்கில் ஓடுகிறது, நீங்கள் படம் பார்த்துவிட்டீர்களா என்கிற அளவோடு நமது விசாரணை முடிந்துவிடும். அந்த திரையரங்கிற்கு சென்று வந்தபின்புதான் ஒலியமைப்பும் காற்று வசதியும் சரியில்லையென்பதும், அங்கே கழிவறை எவ்வளவு மோசமாக இருந்தது, குறைந்தபட்சம் குடிதண்ணீர் வசதிகூட செய்துதர தரமற்ற அளவிற்கு அந்த திரையரங்கம் நடத்தப்படுவது எல்லாம் நமக்கு தெரியவரும். இதையெல்லாம் முதற்கட்ட விசாரணையிலேயே அந்த திரையரங்கம் பற்றி நன்கு விசாரித்திருந்தால் தவிர்த்திருக்கலாம் என்றாலும் போகிற இடம் பற்றி அதிகம் கேள்வி கேட்காத இன்றைய சாமான்யனுக்கு இருக்கும் பொதுவான ஒரு எண்ணம் என்னவென்றால் நூறுபேர் வந்து போகிற இடம் என்பதால் ஓரளவிற்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கும் என்பதே.

அப்படி ஏமாந்து சதுரகிரிக்கு சென்ற ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். இந்த மலைக்கு செல்ல மதுரைக்கு அருகேயிருக்கும் வத்திராயிருப்பில் இருந்து ஏறக்குறைய நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள மலையின் அடிவாரப்பகுதியான தாணிப்பாறையிலிருந்து போவதுதான் கடினம் குறைந்த பாதை என்கிறார்கள்.

பாதை கடினம் என்பது நடப்பவர் யார் என்பதை பொறுத்தது. முறுக்கி பிழிகிற அளவிற்கு உடல் உழைப்பை அதிகம் கேட்கிற வேலை பார்ப்பவர்களுக்கு இந்த மலை ஏறுவது ஒரு விஷயமேயல்ல. குளிர் சாதன வசதிசெய்யப்பட்ட அடுக்குமாடி அலுவலகங்களில் உட்கார்ந்து வேலை பார்ப்பதற்கு இடையே கொறியுணவு உண்டு கொழுத்து, கழிவறைக்கு தனி செருப்பு அணிந்து செல்கிற, ஒரு மணிநேரம் மட்டும் உடற்பயிற்சி மையத்தில் வலுக்கட்டாயமாக வியர்வையை வெளியேற்றுகிற வழக்கத்தில் உள்ளவர்கள் இங்கு வந்தால் அந்து அவுலாகி….. நொந்து நூலாகி….. மொத்தத்தில் நாக்கு தள்ளிவிடும்.

நானும் எனது நண்பர்களும் மகிழுந்தில் பயணித்து மதுரைக்கு முன்பே வழிமுறித்து தே.கல்லுப்பட்டி வழியாக அழகாபுரி எனும் ஊரில் நுழைந்து வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறை வந்து அடைந்தோம். பேருந்தில் பயணிப்பவர்கள் முதலில் மதுரையை அடைந்து பின்பு ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலை வழியாக பயணித்து கிருஷ்ணன் கோவில் வழியாக தாணிப்பாறை வந்தடையலாம். சொந்த வாகனத்தில் வருபவர்கள் வத்திராயிருப்பில் குறைந்தபட்ச தேவையான உண்பன குடிப்பன போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். தவறினால் என்னைப்போல நல்ல பசியில் பொறி உருண்டையும் பக்கோடாவும் சாப்பிட்டு இன்றைக்கு விதித்தது இதுதான் என்று ஓம் நமசிவாய சொல்லிவிட்டு மலையேறவேண்டியதுதான். வத்திராயிருப்பில் எங்களுக்கு தெரிந்து தங்கும் விடுதிகள் எதுவும் இல்லை. சென்னையிலிருந்தோ மற்ற ஊர்களிலிருந்தோ கிளம்பினால் நீண்ட தூரப்பயணம் என்பதால் குளிக்க மற்ற இதர விஷயங்களுக்கு வத்திராயிருப்பில் பேருந்து நிலையத்திலுள்ள கட்டண கழிப்பறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைந்தபட்ச சுத்த சுகாதாரத்திற்கு கியாரண்டி உண்டு. வேறு வசதிகள் எதுவும் இல்லாததால் இதைப் பரிந்துரைக்க வேண்டியுள்ளது. இந்த மலைக்கு முதன்முறை பயணம் செய்பவர்கள் குழந்தைகளையும் பெண்களையும் உடன் அழைத்து செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒரு முறை சென்று வந்து விட்டால் அடுத்த பயணத்தின்போது அவர்களையும் உடன் அழைத்து போவதை பற்றி நீங்களே முடிவெடுத்துவிடுவீர்கள் என்பதால் அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. மேலும் மிக மென்மையான வாழ்க்கை முறையில் வாழ்ந்த இளைஞர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூச்சிரைப்பு ஆகியன உள்ள நபர்கள் எல்லாம் இந்த மலைக்கு ஓரிரு முறை போய் வந்தவர்களிடம் பயண அனுபவங்களை கேட்டு போக முடியாத மனவருத்தத்தை போக்கிக் கொள்ளலாம்.

சதுரகிரியில் இருந்து அருள்பாலிக்கும் சுந்தரலிங்கம் மற்றும் சந்தனலிங்கம் ஆகிய லிங்கத்திருமேனியனை தரிசிக்க அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களில் குறைந்தது 10000 முதல் 70000 பக்தர்கள் வரை இந்த மலைக்கு வருகிறார்கள். மோட்டார் வாகனங்கள் வருவதற்கு முன்னால் மாட்டுவண்டி கட்டிக்கொண்டு வரும் பக்தர்கள் மொத்தமாக மலையடிவாரத்தில் வண்டிகளை மாடுகளோடு சேர்த்து நிறுத்திவைக்க, எக்கச்சக்க மாட்டுவண்டிகளின் வருகையால் வண்டிப்பண்ணை என்ற பெயரோடு முதலில் அறியப்பட்ட இடம் பின்னால் தாணிப்பாறை என்று மாறியுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு (12.08.2011) கிளம்பிய நாங்கள் சனிக்கிழமை வழியில் சில சொந்த அலுவல்களை முடித்துக்கொண்டு தாணிப்பாறையை அடையும்போது மணி நண்பகல் ஒன்றை நெருங்கிவிட்டது. சொந்த வாகனத்தில் வருபவர்கள் ஓட்டுனராகவும் மலையேறுபவராகவும் இருந்தால் வாகனம் பாதுகாப்பாக இருப்பதும் அல்லது வாகனத்தில் இருப்பவை பாதுகாப்பாக இருப்பதும் அவரவர் முற்பிறவி தர்ம பலன்கள் பொறுத்தது. முப்பது ரூபாய் வாகன நிறுத்தத்திற்காக பெறப்பட்டாலும் முறையான பாதுகாப்பு வசதி ஏதும் இல்லாத அவசரடி ஏற்பாடாகவே வாகன நிறுத்தம் இருப்பது தெளிவாக தெரிகிறது. நாங்கள் எங்கள் மகிழுந்தை நிறுத்த இடம் தேடி அலைந்து, பின்பு ஒரு வாகான இடம் பார்த்து நிறுத்திவிட்டு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அடிவாரத்திலிருந்து கிளம்பும்போது மணி பிற்பகல் இரண்டு ஆகியிருந்தது.

கொஞ்ச தூரம் நடந்ததும் முதலில் வருகிற கோயில் ஸ்ரீராஜயோக தங்க காளியம்மன் கோயில் என்கிற சிறிய அம்மன் ஆலயம். என்ன தங்கத்தில் அம்மனா…?! என்று ஆச்சர்யமாக எட்டிப் பார்த்தால் பெயர்தான் அப்படி…, மற்றபடி சாதாரணமாக கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு, மக்கள் மலை ஏறுவதற்கு முன் வணங்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த சிறிய ஆலயம்.

இந்த மலை மீது ஏற முடிவு செய்வதற்கு முன்பே எனது நண்பர் மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியிருந்த வலைப்பூ தொகுப்புகளை படித்திருந்தேன். அதில் எழுதியிருந்த அனைவருமே பாதையைப் பற்றியும் தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றியும் ஓரளவு எழுதியிருந்தனர். ஆனால் நேரில் சென்று பார்த்தபோது அதன் பரிமாணமே வேறு மாதிரி இருந்தது. அடிவார மலையிலிருந்து மேலே கோயிலுக்கு சென்று சேரும் வரை வழியில் எங்கும் இளைப்பாற நிழல் தரும் கல் மண்டபங்களோ மற்றபடி ஓலையில் வேயப்பட்ட தற்காலிகக் கொட்டகைகளோ எதுவும் கிடையாது. பருவநிலை, மலையேறுபவர்களுக்கு சாதகமாக இருந்தால் அடிக்கிற காற்றில் ஒரளவு சமாளித்து ஏறிவிடலாம். பகலில் வெயிலில் நடந்தால் மரங்களின் நிழலில் சற்றே இளைப்பாறலாம். ஆனால் உச்சி வெயிலில் அதுவும் சாத்தியமில்லை. ஏனெனில் நாங்கள் போகும்போது மலையில் நல்ல வெக்கையை உணரமுடிந்தது. மொத்த தூரம் சிலர் பதினோரு கிலோமீட்டர் என்றும், வேறு சிலர் பதினான்கு என்றும் கூறினர். இன்னும் சிலரோ மைல் கணக்கு சொல்லி குழப்பியடித்தார்கள்.

மொத்த தூரம் சரியாக தெரியவில்லை என்றாலும் இந்த தூரத்தை சமதளத்தில் நடந்து கடந்தால் பெரிதாக ஒன்றும் வலி தெரியாது. ஆனால் பல இடங்களில் செங்குத்தாக கிட்டத்தட்ட 70 டிகிரி சாய்தளத்தில் ஏற வேண்டியதாயிருக்கிறது. இது போன்ற நெட்டுக்குத்தான பகுதிகள் போகின்ற பாதையில் மூன்று இடங்களில் வருகிறது. மொத்த தூரமுமே கொஞ்சம் கூட சமதளமோ அல்லது ஓரளவு படிக்கட்டுகள் போன்ற அமைப்போ இல்லாத, காலம் காலமாக மனிதர்கள் பயணப்பட்டு புல் முளைக்காத மண் மற்றும் கற்களாலான பாதையாகத்தான் உள்ளது. பொதுவாக மலைக்கோயில்களில் படிக்கட்டுகளும் பாதையும் சரியில்லாதபோதிலும் கீழே விழாமல் பக்தர்கள் ஏறிச்செல்ல பிடிமானமாக மூங்கில் சவுக்கு என்று ஏதேனும் ஒன்றை பக்கவாட்டில் கட்டிவைத்திருப்பார்கள். அதுவும் இங்கு இல்லை. ஏறிச்செல்லவும் இறங்கிவரவும் ஒரே பாதைதான். இப்படிப்பட்ட பாதையில் செருப்பு கூட அணியாமல் நடந்து சென்ற சிலரையும் பார்த்தேன். ஒருவாரம் கழித்து அவர்களின் கால் நிலவரம் குறித்து கேட்க, அவர்களின் தொலைபேசி எண் கேட்க ஆசைப்பட்டு, அடித்துவிடுவார்களோ என அச்சப்பட்டு அடங்கிவிட்டேன்.

திடீரென்று மழை வந்துவிட்டால் பாதி தூரத்தில் இருப்பவர்கள் கதி யோசிக்க பயமாயிருக்கிறது. சொட்டச்சொட்ட நனைந்தபடி மிச்ச தூரத்தை கடக்கவேண்டும், அல்லது கைவசம் குடை ரெயின் கோட் இருந்தால் எங்காவது ஒதுங்கலாம். ஆனால் அதுவும் இந்த மலையில் ஆபத்துதான். ஏனெனில் பாதை முழுவதுமே செப்பனிடப்படாத பாறைகளும் சரளைக்கற்களும், இறுகிய களிமண் போன்ற மண்ணாலான பாதையாகத்தான் உள்ளது. ஆகவே பலத்த மழையில் மண் சரிவு ஏற்பட நிறைய வாய்ப்புண்டு. மேலும் மலையில் சிங்கம், யானை தவிர மற்ற ஆபத்தான மிருகங்கள் உலவுவதாகவும் நிறையப் பேர் பார்த்ததாகவும் சொல்கின்றனர். ஆனால் அவை மனிதர்களை தாக்கியதாக இதுவரை பெரிய அளவில் பத்திரிக்கைகளில் செய்தி எதுவும் வரவில்லை. மழையில் அவைகளும் ஒளிய குகைப்பாங்கான இடம் தேடி அலையும்போது மனிதர்களை பார்த்துவிட்டால் தாக்கும் வாய்ப்புண்டு. கீழே கிளம்பும்போதே மழை அதிகமாக இருந்தால் வனச்சரகர்கள் அடிவாரத்தில் நடக்க ஆரம்பிப்பவர்களை தடுத்து நிறுத்திவிடுவதாக பக்தர்கள் சொல்கின்றனர். ஆனால் இது போன்ற இடங்களில் போகிற வழியில் மழை வருமா என்பதை தூர்தர்ஷனில் வானிலை அறிக்கை சொல்லும் ரமணனே கணிக்கமுடியாது.

மொத்த தூரத்தையும் கடந்து முடிக்க எங்களுக்கு சுமார் நாலரை மணி நேரம் ஆனது. இது ஆங்காங்கே இளைப்பாற மூன்று நான்கு முறை அமர்ந்த நேரத்தையும் சேர்த்தது. போகிற வழியில் ஆங்காங்கே சுக்கு மல்லி காபியில் ஆரம்பித்து, வெள்ளரி, ஐஸ்க்ரீம், மோர், முறுக்கு, வெங்காய பஜ்ஜி, கடலைபட்டாணி, சுண்டல், பாக்கெட் குடிதண்ணீர் என சகலமும் கிடைக்கிறது. பீடி சிகரெட்டும் சகஜமாக கிடைப்பதால், மலையிலாவது சுத்தமான மூலிகைக்காற்றை சுவாசிப்போமே என்று வந்திருப்பவர்களைப் பற்றி கவலையே படாமல் தன் சுகமே பெரிதென பிறர் சொல்லியும் கேட்காமல் புகைக்கிற ஜந்துக்கள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பார்கள் என்பதால் கவனமாக தவிர்க்கவும். மலைப்பாதையில் இருந்த தற்காலிகக் கடைகளின் மேலே வெயிலை மறைக்க போடப்பட்டிருந்த தார்ப்பாயின் கீழே நாங்கள் ஆங்காங்கே இளைப்பாறிக்கொண்டோம்.

“இந்த இருட்டுல எப்படி போவீங்க” என்றேன். “எங்க எல்லார்கிட்டயும்தான் டார்ச் இருக்கே…..இன்னும் சிலவுங்க இறங்குற வழியில தீப்பந்தம் ஏத்திப்பாங்க” என்றாள். “அப்பகூட உனக்கு பயமா இருக்காதா” என்று அவளிடம் நான் கேட்டதற்கு “இதுல என்ன பயம்… அதான் இத்தன பேர் கூட இருக்காங்கள்ல…..” என்று அவள் அசட்டுத் துணிச்சலோடு தோள் குலுக்கி சொல்ல, நான் வாயடைத்துப்போய் அவளையே பார்த்தேன். பகலிலேயே நல்ல வெளிச்சத்தில் பாதை தெரிந்தும், சற்று அஜாக்கிரதையோடு காலை வைத்தால் கீழே விழ வாய்ப்பிருக்கிற இந்த மலையில், தரிசனம் முடிந்ததும் பொட்டு வெளிச்சம்கூட இல்லாத இரவில் மிருக நடமாட்டத்தை அலட்சியம் செய்து இறங்கிப் போகிற அளவிற்கு அவசரமும் முரட்டுத்துணிச்சலும் இருக்கும் இவர்கள் சியாச்சின் மலைப்பகுதிகளில் ராணுவத்தில் பணிபுரிய தகுதியுடைய பக்தர்கள்… (அடுத்த பகுதியில்…)

(தொடரும்)

19 Replies to “சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1”

  1. நீங்கள் ஆன்மீகப பயணம் சென்றீர்களா அல்லது சிரமங்களை ஆராயச் சென்றீர்களா?

  2. தமிழில் நான் வாசிக்க நேர்ந்தவற்றில் குமட்டல் ஏற்படுத்திய கட்டுரைகளில் ஒன்று இது. எல்லாவகையிலும் முட்டாள்தனத்தின் உச்சம். இதைப்போன்ற ஒரு கட்டுரையை வெளியிட உங்கள் தளம் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கவேண்டும்.

    சதுரகிரி மலைக்கு மேல் இவரை ஏரிச்செல்லவேண்டும் என்று எவராவது கட்டாயப்படுத்தினார்களா என்ன? மலை மேல் ஏறிச்சென்றுவிட்டு தங்க நிழல் இல்லை, சுடச்சுட டீ போண்டா கிடைக்கவில்லை, வழிகாட்டிப்பலகைகள் இல்லை, ‘பக்தர்’களுக்கு வசதிகள் இல்லை என்ற பிலாக்காணத்தை மட்டும் எழுதிவைத்திருக்கிறார்.

    உண்மையில் இது இன்று இந்துக்களில் பெரும்பாலானவர்களின் மனநிலையாக இருக்கிறது. எங்கும் எதிலும் நுகர்வோர் மனநிலை. சதுரகிரி சித்தர்கள் நுகர்வோருக்கு வசதிகளைச் செய்துகொடுக்கவேண்டாமா இல்லையா? எவ்ளவு கஷ்டப்பட்டு பணம் செலவுசெய்து ஏறி வருகிறார்கள்!

    ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தலத்துக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. அந்த தனித்தன்மைக்காகவே அங்கே செல்கிறார்கள். நகர் நடுவே விரிந்து பரந்த பிராகாரங்களும் நிழல்மண்டபங்களும் கொண்ட கோயில்கள் உள்ளன. மலையிச்சியில் அணுகவே முடியாத சரிவுகளிலும் குகைகளிலும் கோயில்கள் உள்ளன.. இங்கே கட்டப்பட்ட கோயில் போதவில்லை என்று அங்கே கொண்டு கட்டவில்லை. அந்த கோயில்களுக்கு அவற்றுக்கான தனித்தன்மைகளும் வரலாற்றுப்பின்னணியும் உண்டு.

    செல்லுமிடமெல்லாம் ‘சௌகரியம்’ தேடும் நம் பக்தர்கும்பல் எல்லா இடத்தையும் அழித்து தங்களுக்கு தேவையான ஒரு சந்தைக்கடைவீதியை எங்கும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. மாபெரும் ஆலயங்களுக்குள் சவுரி முடி முதல் ஆட்டுரல் வரை விற்கும் கடைகள் இந்தக்கும்பலால்தான் வளர்க்கப்படுகின்றன.

    இப்போது வாகன வசதிகள் வந்துவிட்டமையால் வார இதழ்களில் பயணக்குறிப்புகள் அச்சிடப்படுவதைக் கண்டு கிளம்பி அணுகமுடியாத மலைகளிலும் தொற்றி ஏறிச்செல்கிறார்கள். ’என்னது கொக்கோகோலா கிடைக்காதா?’ என்று அங்கே போய் பொருமுகிறார்கள்

    சதுரகிரி சுற்றுலாத்தலமோ பக்தர்களுக்கான இடமோ அல்ல. அது அனைத்திலிருந்தும் ஒதுங்கி அனைத்துக்கும் அப்பால் இருப்பவற்றை தேடுபவர்களுக்கான இடம். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நான் அங்கே தன்னந்தனியாகச் சென்றிருக்கிறேன். ஒட்டு மொத்தமலையிலும் ஒருவர் கூட இல்லாமல். அங்கே உச்சியில் ஒருவரை சந்திக்கவும் செய்தேன். வண்டிகட்டி புளிசாதமூட்டையுடன் வந்து குழுமி மேலே செல்லும் கும்பல் இன்னும் சில வருடங்களுக்குள் அங்கே டீக்கடைகளையும் சவுரிகடைகளையும் உருவாக்கும். இந்த ஆசாமி அதைத்தான் மலைமுழுக்க எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டே பயணம் செய்கிறார்.

    இந்தகும்பல் சென்ற பத்து வருடங்களுக்குள் இந்து மதத்தின் பெரும்பாலான புனிதமான இடங்களை வணிகநிலையமாக ஆக்கிவிட்டது. முப்பதாண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை கிரிவலம் என்பது ஒரு ஏகாந்தமான அனுபவம். இப்போது சிந்தாதிரிப்பேட்டையில் நடப்பதுபோல. கடந்த ஐந்தாண்டுகளாக பொதிகைமலையை அப்படி ஆக்குவதற்கு முயல்கிறார்கள். பொதிகை மலை உச்சியில் ‘பக்தர்களுக்கு வசதிகள் செய்து தரவேண்டும்’ என்று மனு கொடுக்கிறார்கள்.

    பக்தர்கள் போகவேண்டிய இடம் கோயில். அவர்களுக்கு பக்கத்திலேயே நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. சதுரகிரி மலையில் பக்தர்கள் எந்தக்காலத்திலும் போனதில்லை. அதற்கான இடம் அது அல்ல. எந்த தேவையும் இல்லாமல் செல்லும் இந்தக்கும்பல் விரைவிலேயே இந்த இடத்தையும் நாசமாக்கும்

  3. மலைகள், காடுகளுக்குள் இருக்கும் புனிததலங்களுக்கு இம்மாதிரி பக்தர்கள் செல்வதை அரசும் வனத்துறையும் அனுமதிக்கக்கூடாது. இந்த வகையான தலங்களில் புதியதாக திருவிழாக்களையும், திடீர் திரள் புனிதபயணங்களையும் முழுமையாக தடை செய்யவேண்டும். செல்லவிரும்புபவர்களை கறாராக கண்காணித்து உரிய முன் வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு மட்டுமே அனுமதிக்கவேண்டும். பொதிகைமலை போன்ற இடங்களுக்கு ஆட்களை திரட்டிசெல்லும் ஆசாமிகளை அனுமதிக்கவேகூடாது. தமிழ் ஹிந்துவுக்கு ஏதேனும் அடிப்படை ஆன்மீக உணர்வு இருந்தால் அது வலியுறுத்தவேண்டியது இதைத்தான்

  4. திரு.ஜெயமோகன் அவர்களின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்……..

    எல்லோரும் எல்லா இடத்துக்கும் செல்ல வேண்டும் என்ற கட்டாயமா என்ன? அவரவருக்கான ஆன்மீக தேடலுக்கான இடங்கள் அவரவருக்கு…….

    திருக்கயிலாய மலைக்கு நேர்த்தியான பாதை அமைக்கும் சீன அரசின் முயற்சியை திரு.ஜக்கி வாசுதேவ் அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்……காரணம் அது சுற்றுலாத்தலம் அல்ல என்பதால்தான்……

    ஒரு தலத்தின் அருமை புரியாமல் சும்மா ஆட்டு மந்தைகள் போல் குவிவதால் என்ன பயன் ?

    சதுர கிரியை விடுங்கள்…..எல்லா மக்களும் குவியும் நம் பழனி மலையை பக்தர்கள் படுத்தும் பாட்டை கண்டால் ரத்தக்கண்ணீர் வருகிறது……..

    தற்போது ஒரு புதிய வழக்கம் உருவாகியுள்ளது…. அடிவாரத்தில் இருந்து உச்சி வரைக்கும் ஒவ்வொரு படியிலும் சூடம் ஏற்றுகிறார்கள்……[ சிலர் நவதானியங்களுடன் தேங்காய் மஞ்சியை வைத்து கொளுத்துகிறார்கள் ]
    கர்ப்பூரம் அணைந்த இடத்தில் காலை வைத்தால் நிச்சயம் சூடுதான்…….எல்லாப்படிகளும் கரி பிடித்து கன்றாவியாக இருக்கின்றன……படி என்பது ஏறுவதற்கு……வழிபட மேலே முருகன் இருக்கிறான் என்பதே நம் மக்களுக்கு உறைப்பதில்லை…….குழந்தைகளும் முதியவர்களும் படும்பாடு சொல்லி மாளாது……..நான் ஒவ்வொரு முறை பழனிக்கு செல்லும்போதும் இப்படி சூடம் கொளுத்துபவர்களை தடுத்து வருகிறேன்…..சிலர் கேட்பார்கள்……பலர் நம் தலை மறைந்தவுடன் மீண்டும் கொளுத்துவார்கள்….பல முறை சண்டை போட்டதுண்டு…….கோயில் அலுவலகத்தில் பல முறை புகார் செய்தும் பலனில்லை……

    முதலில் நாம் அனைவரும் சென்றுவழிபடும் கோயில்களை பாதுகாப்போம்……….

  5. சதுரகிரியில் இருந்து சித்தர்களை விரட்டாமல் விடமாட்டோம்..

  6. //இந்தகும்பல் சென்ற பத்து வருடங்களுக்குள் இந்து மதத்தின் பெரும்பாலான புனிதமான இடங்களை வணிகநிலையமாக ஆக்கிவிட்டது
    //

    இந்த கடைகள் பெரும்பாலும் இஸ்லாமிஸ்டுகளின் கையில் இருக்கிறது என்பது இதை விட வேதனைக்கு உரியது

  7. அன்பார்ந்த ஸ்ரீ ராம்ஜி பெரியவன்,

    இதற்கு முன் தங்களது வ்யாசமோ அல்லது உத்தரமோ தமிழ் ஹிந்துவில் வாசித்தது இல்லை. தங்கள் வ்யாசத்தை முதன்முறை வாசிக்கிறேன்.

    என் புரிதலின் படி வ்யாசத்தில் குணம் மற்றும் தோஷம் இரண்டும் உள்ளது.

    \\\\\\\ஆனால் இங்கே வருகிற பக்தர்கள் இந்த மலையின் தெய்வீகத்தன்மை பற்றியோ, கால தேச வர்த்தமானங்களை கடந்த மூன்று காலங்களிலும் சஞ்சரிக்கிற திறன் படைத்த சித்தர்கள் அரூபமாக வசிக்கிற மலையில் இருக்கிறோம் என்பதைப்பற்றியோ உணர்ந்து செயல்படுகிறார்களா என்றால் நிச்சயம் கிடையாது என்றே சொல்லத் தோன்றுகிறது.\\\\மனிதர்கள் தூக்கி எரியும் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளின் மிகுதி அந்த வட்டாரத்தை எவ்வளவு தூரம் பாழ்படுத்துகிறது என்பதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.\\\\\

    ஒரு ஆன்மீக ஸ்தலத்திற்கு தர்சனம் செய்ய வரும் பக்தர்கள் எப்படி இருக்க கூடாது என்பதற்கு இது உதாரணம். தாங்கள் அதற்காக வேதனை தெரிவித்தது தங்களது ஆன்மீக ஸ்தலம் பற்றியதான அக்கறையை வெளிப்படுத்துகிறது. இதுபோல் ஒவ்வொரு ஹிந்துவும் ஆன்மீக ஸ்தலங்களை மாசு படுத்தாமல் வைத்திருக்க வேண்டும் என்ற ப்ரக்ஞையை வளர்த்துக் கொண்டால், தர்சனம் செய்ய வருவோர் சுத்தமான மாசில்லாத சூழ்நிலையில் உயர்ந்த ஆன்மீக அனுபவம் பெற இயலும்.

    முக்யமான விஷயம். பரிச்ரமப்பட்டு தர்சனம் செய்வதில் மன நிறைவும் ஆன்மீக அனுபவங்களும் அவசியம் இருக்கும். பொழுதுபோக்கு பத்திரிக்கைகளில் பயணம் சம்பந்தமாக வ்யாசம் எழுதுவோர் பயணம் செய்யும் இடங்களில் வசதிகள் வசதிக் குறைவு என்பது பற்றி எழுதி வ்யாசத்தை நிறைவு செய்யலாம். ஆனால் ஹிந்துக்களுக்கான ப்ரத்யேகமான இந்த தளத்தில் தங்களது வ்யாசத்தில் ஆன்மீக அனுபவங்கள் ப்ரதானமான விஷயமாகவும் வசதி அல்லது வசதிக் குறைவுகள் பற்றிய தகவல்கள் அன்னத்துடன் சாப்பிடும் ஊறுகாய் போல் இருந்தால் ச்லாக்யமாக இருக்கும். வர இருக்கும் இரண்டாம் பகுதியில் இந்த தோஷத்தை நிறைவு செய்வீர்கள் என நம்புகிறேன்.

    ஆன்மீக ஸ்தலங்களில் தர்சனம் செய்ய வரும் தர்சனார்த்திகள் மற்றும் அவர்களுக்கு வசதிகள் செய்து தர வேண்டிய ராஜ்ய நிர்வாகஸ்தர்கள் இவர்களின் மனோபாவம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி, ஸ்ரீ க்ருஷண சைதன்ய மஹாப்ரபு கௌடிய தேசத்து பக்தர்களுடன் ஜகன்னாதரின் ரத யாத்ரைக்கு சென்ற சம்பவம் ஸ்ரீ ப்ரபுதத்த ப்ரம்மசாரி அவர்கள் எழுதிய “மஹாப்ரபு சரித்ரத்தில்” (ஹிந்தி) எழுதப்பட்டுள்ளது. இது தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழிலும் கிடைக்கிறது. சம்பவங்கள் ஆதாரபூர்வமான சரித்ர நிகழ்வுகளா என்று வினாக்கள் இருக்கலாம். ஆனால் கௌடிய வைஷ்ணவர்கள் காலம் காலமாக அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லிவரும் செய்திகள் இவை.

    ஒரு மிகப்பெரும் ஜனத்திரளுடன் ஜகன்னாத ரத யாத்ரையில் கலந்து கொள்ள மஹாப்ரபு பூரி க்ஷேத்ரம் செல்கிறார். மஹாப்ரபுவின் நாம நிஷ்டையால் ஆட்கொள்ளப்பட்ட அந்த பக்த ஜனங்களுக்கு ஒரே லக்ஷ்யம் ஜகன்னாதரின் ரத யாத்ரை. கிடைத்த அன்னத்தை உண்டு கிடைத்த இடத்தில் உறங்கி பகவன்நாமத்தை சதா உச்சரித்துக்கொண்டு ப்ரதி க்ஷணமும் ரதயாத்ரையில் பங்கு பெறப்போகும் தருணத்தை த்யானத்தில் இருத்தி அந்த நினைவிலேயே இருந்து எந்த வசதிகளும் எதிர்பார்க்காது ஜகன்னாத ரதயாத்ரையில் கலந்து கொண்டதையே கிடைத்தற்கறிய பாக்யமாய் கருதினர் பக்தர்கள்.

    இப்பெரும் திரளை அழைத்துச்சென்ற மஹாப்ரபு ஒரு சன்யாசி. சுக துக்கங்கள் லாப நஷ்டங்கள் ஆகிய த்வந்தங்களுக்கப்பாற்பட்டவர். அவருடைய அருளுக்கு பாத்ரமானவர்கள் அவருடன் வந்த ஜனத்திரள் மட்டுமின்றி பூரியின் ராஜாவான ப்ரதாப ருத்ரன். யதிவரரான அவர் ராஜாவுக்கு என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் கட்டளைகளோ வேண்டுகோள்களோ அனுப்பவில்லை.

    இவ்வளவு பெரிய பக்த ஜனத்திரள் கூடும் போது அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டியது ராஜ்யத்தின் கடமை. ராஜனும் மஹாப்ரபுவின் க்ருபைக்கு ஆளாக வேண்டும் என்பதற்காகவோ தான் ஒரு திறமையான நிர்வாகஸ்தன் என்பதாகவோ இல்லாது ராஜ்யத்தின் கடமை என்ற படிக்கு யாத்ரை நிகழவேண்டிய வசதிகளை செய்தான்.

    உதாரணமான யதி, பக்தர் மற்றும் ராஜன் இவர்கள் ஒன்றிணையும் ஒரு பெரும் நிகழ்வில் எல்லோரும் அவரவர்களின் நிலையில் எப்படி இருக்க வேண்டும் என்பது இந்த சம்பவத்தில் காட்டப்பட்டுள்ளது.

    \\\\\\சதுரகிரியில் இருந்து அருள்பாலிக்கும் சுந்தரலிங்கம் மற்றும் சந்தனலிங்கம் ஆகிய லிங்கத்திருமேனியனை தரிசிக்க அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களில் குறைந்தது 10000 முதல் 70000 பக்தர்கள் வரை இந்த மலைக்கு வருகிறார்கள்.\\\\\\\

    இவ்வளவு பக்தர்கள் வரும் ஒரு இடத்திலே வசதிகள் செய்து தரவேண்டியது சர்க்காரின் கடமை கூட.

    உத்தர பாரதத்தில் பல குருத்வாராக்களில் நான் கண்டது – வரும் தர்சனார்த்திகள் அவர்களே துடைப்பம் எடுத்து கோவிலை சுத்தம் செய்வது வரும் தர்சனார்த்திகளின் பாதரக்ஷைகளை ஒழுங்காக அடுக்கி வைப்பது என பல காரியங்களை செய்வது.

    இது போல் ஒவ்வொரு காரியத்திற்கும் சர்க்காரையே எதிர் பார்க்காது தன்னார்வம் கொண்டு பக்தர்களே ஆன்மீக ஸ்தலங்களை சுத்தமாக வைக்க விழைவது மன நிறைவும் இறையருளையும் ஒருங்கே பெற வழிவகுக்கும்.

    குறைந்த பக்ஷம் தான் எந்த ஒரு ஸ்தலத்தையும் மாசு படுத்தக்கூடாது என்ற ப்ரக்ஞையை வளர்த்துக்கொள்வது மிக முக்யம்.

    \\\\ஸ்ரீராஜயோக தங்க காளியம்மன் கோயில் என்கிற சிறிய அம்மன் ஆலயம். என்ன தங்கத்தில் அம்மனா…?! என்று ஆச்சர்யமாக எட்டிப் பார்த்தால் பெயர்தான் அப்படி…, மற்றபடி சாதாரணமாக கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு, மக்கள் மலை ஏறுவதற்கு முன் வணங்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த சிறிய ஆலயம்.\\\\\

    கல்லாக இருந்தால் என்ன ஸ்வர்ணமாகத்தான் இருந்தால் என்ன? ஆலயம் சிறியதாய் இருந்தால் என்ன பெரியதாய் இருந்தால் என்ன? ஒருக்ஷண நேரம் தேவியின் சன்னதியில் நின்று மனதை தேவியின் திருவடியில் இருத்தி அதன் அனுபவம் பற்றி எழுதியிருந்தீர்களென்றால் அழகாக இருந்திருக்கும் அல்லவா?

    ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தினர் மறந்தும் கூட சிலை என்ற பதப்ரயோகம் செய்யார். கோவிலில் எழுந்தருளியிருப்பது சாக்ஷாத் பகவானின் அவதாரமே. பக்தர்களுக்கு அருளவேண்டி எடுத்துள்ள அர்ச்சாவதாரம் என சொல்வர். அது படிக்கு அங்கு எழுந்தருளியுள்ள தேவியை நமக்கு அருள கல்லில் சான்னித்யம் கொண்ட கருணை மிகு தாயாக மட்டுமே பாருங்களேன். ஜடமான கல்லாக பார்க்க வேண்டாமே. அப்போது நீங்கள் எழுதும் விஷயத்தில் பக்தி ததும்பும்.

    தங்களது ஆன்மீக அனுபவங்களை அடுத்த பகுதியில் வாசிக்க ப்ரதீக்ஷிக்கிறேன்.

  8. மலையில் கால்நடையாக பயணம் செய்வது என்றாலே சிரமமான ஒன்றுதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்படுகிறது. நானும் ஒருமுறை எந்த முன்னேற்பாடும் இன்றி குடும்பத்துடன் ஏற ஆரம்பிக்க மலையில் இருந்து இறங்கிய ஒருவர் தன்னுடைய ரி-சார்ஜபிள் டார்ச்சை இலவசமாக கொடுத்து உதவினார். இருளில் வழி தெரியாமல் நின்ற போது ஒரு பெரியவர் எங்களுக்காகவே காத்திருந்ததாக கூறி மலை மேல் அழைத்துச் சென்றார். மலை பிரதேசங்களில் உள்ள கோயில்கள் இருக்கும் இடங்களை வணிக மையமாக மாற்றுவதை எதிர்க்கிறேன். என்றாலும் ராம்ஜி அவர்கள் அனுபவம் என்ன என்பதை அறிந்து கொள்வதில் தவறில்லை.

    சாரங் கூறியது போல் நம் கோயில்களைச் சுற்றியுள்ள கடைகள் பெரும்பாலும் முஸ்லீம்களிடம் இருப்பது உண்மை. குற்றாலம் குற்றாலநாதர் கோவிலுக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நான் சென்றபோது முஸ்லீம் கடைகளையே பார்க்க முடியாது. ஆனால் இப்போது தொண்ணூறு சதவீதம் கடைகள் அவர்களிடம் உள்ளது. நம் முட்டாள் மக்களும் அவர்களிடம் பொருள்களை வாங்கி குற்றால நாதருக்கு குண்டு வைப்பதற்கு உதவிக்கொண்டு இருக்கிறார்கள்.

  9. /// சதுரகிரி மட்டும் கவனம் சிதறினால் உயிருக்கோ அல்லது உடல் உறுப்புகளுக்கோ ஆபத்தை விளைவிக்கக்கூடிய மிகக்கடினமான மலைப்பாதையில் பயணப்பட்டால் மட்டுமே ஆண்டவன் தரிசனம் சாத்தியம்///

    இப்போதும்கூட வேறுசில இடங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. திருவண்ணாமலை போளூர் அருகே ௨௦ கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பர்வதமலைப் பயணம் ஆபத்தானதே. அங்கு செல்வதும் பவுர்ணமி இரவில் அதாவது வெறும் நிலா வெளிச்சம் மட்டுமே. சில ஆண்டுகளுக்கு முன்னர் எந்தப் பாதுகாப்பான ஏற்பாடும் கிடையாது. இப்போது அங்கங்கே சில ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக அறிகிறேன். பாதை பயங்கரமாக இருப்பதால் ஆண்டவன் சரணம் மனதில் ஏற்பட்டு அதே குறியாக உச்சிக்கு செல்லலாம். அங்கே சிவன் கோவில் உள்ளது.

    கடப்பாரைப் பாதை, கம்பிப் பாலம் என்றெல்லாம் உண்டு.

    அங்கே மவுன சாமியார் விட்டோபா இருந்தார். அவரால் நல்லது நடந்தது. இரண்டு ஆண்டுக்கு முன்னால் சிவனடி சேர்ந்துவிட்டார்.

    யூடியூபில் பாருங்கள்.

    https://www.youtube.com/watch?v=9WjgtgWtvx8
    https://www.youtube.com/watch?v=8fqF-4jsq50
    https://www.youtube.com/watch?v=qiyQx-nQBww
    https://www.youtube.com/watch?v=3PymHemtUgc
    https://www.youtube.com/watch?v=wI1qvgWobTc

  10. அன்பிற்குரிய ராம்ஜி பெரியவன்,

    இந்தியாவின் மாபெரும் இலக்கியவாதியில் இருந்து, சாதாரண வாசகர்வரை உங்களைப் போட்டு மொத்து மொத்து என்று மொத்திவிட்டார்கள். பாவம் நீங்கள். ஆனால், என் ஆதரவு உங்களுக்குத்தான்.

    ஒரு சராசரி இந்தியனின் சராசரி எதிர்பார்ப்புகளால் நடைபெறும் இந்த புனிதச் சுற்றுலா செல்பவர்களின் மனக்குறைகளை நீங்கள் தைரியமாக வெளியில் சொல்லி உள்ளீர்கள். அதைப் பாராட்டுகிறேன்.

    இந்தச் சதுரகிரிக்குப் போய் வந்தால், சித்தர்களின் ஆசி உடனடியாகக் கிடைத்து, கிடைக்காத வேலை கிடைக்கும், இல்லாத செல்வம் கொட்டும், ஒபாமா உங்கள் வீட்டு வாசலில் அப்பாய்ண்ட்மெண்டுக்காக ஆலாய் பறப்பார் என்றெல்லாம் “சக்தி விகடனில்” அள்ளிவிட்டார்கள். அதன் பின்பு இங்கு கூட்டம் கூடிவிட்டது.

    இதைப் போன்ற இடங்களுக்குச் சும்மா போவதைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். காலம் மாறிவிட்டது. பஸ்களும், கார்களும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. ரோடுகள் குக்கிராமங்களை இணைக்கின்றன. இவற்றின் பாதிப்பில் இருந்து, இதைப் போன்ற பகுதிகளுக்கு மக்கள் போகக் கூடாது எனச் சட்டம் போட்டுக் காப்பாற்றிவிடலாம் என்பது எந்த அளவு சாத்தியம்? அடிப்படை ஜனநாயகம்கூட இல்லாத வாதம். உணர்ச்சி வசப்பட்ட மனவருத்தத்தின் விளைவு. குழந்தைக் கோபம்.

    எதற்காக இவர்கள் எல்லாம் இங்கே போகக்கூடாது என்று சொல்கிறார்களோ, அதே காரணங்கள் நம் ஊர்களில் உள்ள கோயில்களுக்கும் பொருந்தும். மதுரையில் இருக்கும் அந்த ஆத்தாளின் கோயிலுக்கும், ஸ்ரீரங்கத்து சொகுசாளியின் கோயிலுக்கும் வரும் கூட்டம் சதுரகிரிக்கு வரும் கூட்டத்தில் இருந்து வேறுபட்டதல்ல.

    மேலும், இந்தக் கோயில்கள் எல்லாம் ஒரு காலத்தில் சதுரகிரியாக இருந்தவையே. அவற்றின் வரலாற்று ஆரம்பம், சதுரகிரியின் வரலாற்று ஆரம்பத்தில் இருந்து மாறுபடப்போவதில்லை.

    சதுரகிரிக்குப் போவதைத் தடை செய்ய வேண்டும் என்பதற்கு என்னென்ன காரணங்கள் வைக்கப்படுகின்றனவோ, அதே காரணங்கள் இந்தக் கோயில்களுக்கும் உண்டு.

    கோயிலுக்கு எப்படிப் போக வேண்டும் என்பது இருக்கிறது. சுத்தமாகக் குளித்து, ஆண்கள் மேலாடை இல்லாமல், இந்திய மரபின்படி ஆடை அணிந்து, மரபான சடங்கு அடையாளங்களை (விபூதிப்பட்டை, நாமம், குங்குமம்…) மரபின்படி அணிந்து கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோயிலுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் அவசியமான விதிகள் இருக்கின்றன.

    ஆனால், அந்த விதிகளை அக்கோயிலை நடத்துபவர்கள் வலியுறுத்துவதில்லை. அரசாங்கம் நடத்தும் கோயில்கள் இன்னும் மோசம்.

    பல வருடங்களுக்கு முன் நான் நேரே பார்த்து மனம் வருந்திய நிகழ்ச்சி ஒன்று: மதுரை மீனாக்‌ஷி கோயிலில், மத்திம வயதுடைய ஒரு கிறுத்துவ கன்னியாஸ்த்ரி அவரது கல்லூரியில் படிக்கும் பெண்களை அழைத்து வந்திருந்தார். இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற போர்டை நன்றாகப் படித்துவிட்டுப் பின்னர், உள்ளே நுழைந்து ம்யூசியத்தைச் சுற்றிப் பார்ப்பது போலச் சுற்றினார். இதோ உங்களது மூட நம்பிக்கைகளை உடைத்துவிட்டேன் பாருங்கள் என்று அவரது உடல்மொழி அறிவித்தது. அவர் பின்னால் வரிசையில் வாய்மூடி அச்சத்துடன் நடந்து வந்தப் பெண்களில் மாதவிலக்கான பெண்கள் இல்லாமலா போகப் போகிறார்கள் ?

    (நான் அந்தக் கன்னியாஸ்த்ரீயைக் குறை சொல்ல மாட்டேன். நாமே மதிக்காத இடத்தை, மதிக்காமல் மறுப்பதே விசுவாசத்தின் வெளிப்பாடு என்று நம்புபவர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அபத்தம்.)

    ஆனால், இவற்றைப் பற்றிப் பேசினால் மாதவிலக்கானப் பெண்களை, ஆகமம் மறுப்பது தப்பு என்று பேசுவார்களே ஒழிந்து, ஆன்மீக வனமான சதுரகிரிக்கான விதிமுறைகள் போலக் கோயில்களுக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுதான் உலகம். எனவே, இவர்கள் எழுதுவதைப் படித்து வருந்தாதீர்கள்.

    காசு சம்பாதிக்கும் டூரிஸ்ட் ஸ்பாட்களாகவும், ம்யூசியங்களாகவும் கோயில்கள் எப்போதோ மாறிவிட்டன. இதுதான் நிதர்சனம்.

    நிலமை இப்படித்தான் எல்லா இடங்களிலும் மோசமாக இருக்கிறது. இதுதான் நிலமை என்று எழுதிய உங்களைப் போட்டு எல்லாரும் வறுத்து எடுக்கிறார்களே ஒழிந்து, கோயில்களைக் காசு சம்பாதிக்கும் பெரிய உண்டியலாகப் பார்க்கிற, விதிகள் முன்வைத்தால் கோயிலுக்குப் போகமாட்டேன் என்று சொல்லுகிற நம் மனநிலை சரியா என்று கேள்விகள் கேட்கவில்லை. கேட்பார்கள் என்று ஆசைப்படுகிறேன்.

    கோயில்களுக்கான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினால், ரேஸிஸ்ட் ராமசாமியின் ஆட்கள் பார்ப்பனீயம் அலுமினீயம் என்று கொடிகட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். கம்யூனிஸ்ட்கள் ஸம்ஸ்க்ருத மயமாக்கல் என்று புத்தகங்கள் எழுதிக் காசு பார்ப்பார்கள்.

    நிலமை இப்படி இருக்கும்வரை எந்தவிதமான சாதாரண நல்ல விஷயங்களைக் கூட எதிர்பார்க்க முடியாது. எது சாத்தியமோ அதைச் செய்ய வேண்டும். அதைத்தான் உங்கள் கட்டுரை எதிர்பார்க்கிறது.

    நீங்கள் எதிர்பார்ப்பது போல, பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, தூய்மையாகப் புனிதத் தலங்களை எப்படிப் பேண முடியுமோ அதற்கான வழிமுறைகளைச் செய்து, அங்கு வரும் பக்தர்களிடம் விதிமுறைகளைக் கடுமையாகச் செயல்படுத்த வழிமுறைகள் செய்வதுதான் இப்போதைக்கு முடியக் கூடியது. நீங்கள் சொல்லியதுதான் சரி.

    காசியையே கழிப்பறையாக்கி வைத்திருக்கும் மெக்காலே புத்திரர்களான எங்களிடம் போய் ஆன்மீகத் தேவை இருப்பவர் மட்டும் போங்கள் என்பதெல்லாம் முகமதியர்களிடம் மதநல்லிணக்கத்தை எதிர்பார்த்த காந்தியின் நப்பாசை போல உண்மையை உணராமலும், உணர்ந்தாலும் ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற வீம்புப் பிடிவாதத்தாலும், உணர்ச்சி மிகுந்த பக்தியாலும் வருவது.

    நீங்கள் சொல்ல நினைப்பதைத் தைரியமாகச் சொல்லுங்கள் ராம்ஜி பெரியவன்.

    .

  11. சதுரகிரிக்கு ஒருமுறை சென்று வந்தாலே பரவசபடுத்தும். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பதே ஆன்மீக ஆத்மாவின் அடிப்படை நாதமாக இருக்க வேண்டும். அத்தனை கஷ்டங்களை கடந்து சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்தால் அந்த கஷ்டங்கள் சுகங்களாகவே இருக்கும். திரு ராம்ஜி பெரியவன் ஏன் அவர் பட்ட கஷ்டங்களை எல்லாம் இங்கு கொட்டியுள்ளார்?

  12. எந்த கோயிலுக்குப்போனாலும் என்ன லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் வணிகநோக்கு இன்று நம்மிடையே அளவுக்கு அதிகமாக வளர்ந்து விட்டது. அப்படியேதான் இன்று சதுரகிரிக்கு போகிறவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. சதுரகிரியில் சித்தர்கள் எதிர்ப்பட்டு ஆசி வழங்கினால், அடுத்த மாதமே பங்களா வாங்கிவிடலாம், மகளுக்கு ஐடி கம்பெனியில் அரைலட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும் என்ற பேராசையில் தன் பலரும் அங்கே படையெடுக்கிறார்கள். பக்திக்காக கோயிலுக்குப் போவதும், அன்பின்பொருட்டு சித்தர்களை தரிசிப்பதும் இன்று அபூர்வமாகிவிட்டது. எனக்கு தினமும் கோயிலுக்குப் போகும் வழக்கம் உண்டு. பலபேர் என்னிடம் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா ? உங்களுக்கு என்னங்க தீராத பிரச்சினை தினமும் கோயிலுக்குப் போகிறீர்களே என்பது தான்.

  13. அன்புள்ள ராம்ஜி,

    உங்களின் கட்டுரை நமது மக்களின் பொறுப்பில்லாத்தனத்தையும், அந்த இடத்தின் புனிதம் குறித்தான அடிப்படை புரிதலும் இன்றி மாசுபடுத்துவதையும் வேதனையுடன் குறிப்பிட விரும்பினீர்கள். ஆனால் பரவசமாக மேலே செல்ல எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்று சொல்லி இருப்பதால் உங்களையும் சொகுசுக்கார லிஸ்டில் சேர்த்துவிட்டனர். குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் பட்டிருக்கிறீர்கள். ( திரு.ஜெயமோகனால் திட்டு வாங்கியதை சொல்கிறேன் :-)) )

    அடுத்தடுத்த பாகங்களில் அவர்கள் நினைப்பதுபோல அல்ல நீங்கள் எனத் தெரியும்.

    சதுரகிரிமலையிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நான் இன்னும் தூரத்திலிருந்து பார்த்து வணங்கி வருகிறேன். நீங்கள் சென்றுவந்துவிட்டீர்கள். அடுத்த ஆண்டு விடுமுறையிலாவது சிவனைக் காணும் பாக்கியம் எனக்கு கிட்டட்டும்.

    தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்களுடன்.

    ஜெயக்குமார்

  14. For my kind opinion about this writing is:

    I am reading this article like this and I believe the author may want to convey the same:

    1. How the environment is spoiled recklessly.
    2. When such huge crowds gathering are expected, where there no such basic facilities are available what government authorities and forest officials are doing? Why are they allowing?
    3. If some unexpected things are happened, will media be quit? won’t they blame government? Then I am fine and agree with people who disagree with Ramjee’s statement.
    4. If some unexpected things happen during mass gathering and people die, can we take it positively by saying all got KAILASA PADAVI?

    Instead of we all charging against author, lets all think how we are going to address to protect our mother nature, (1. Wester Ghats is one the oldest mountain region, and bio-diversity hot spot. 2. Due to mining and deforesting we lost most of it).

    Now who is going to tie bell to the CAT? How?

    1. Allow limited crowed to Saduragiri, like central government does for Kailash manasaravor yatra ?
    2. Don’t allow people at all ?
    3. Like in Keral forest authorities used to check how many plastic items one carrying same item they need to be produced next check post, to avoid people throwing the used plastic items in forest.
    4. Collect risk letter signed off from yatris, saying they are aware of risk involves in this yatra and the will go on their own risk.

    I understand the objective of visiting Sadura Giri / Kailas Manasarovar etc., one has to suffer physically and need good physical and mental fitness to get lord siva’s blessings, we are not expecting nice road to be laid with cable car.

    om namah shivaya ! om namah shivaya ! om namah shivaya !

  15. Pingback: Indli.com
  16. ///மாபெரும் ஆலயங்களுக்குள் சவுரி முடி முதல் ஆட்டுரல் வரை விற்கும் கடைகள் இந்தக்கும்பலால்தான் வளர்க்கப்படுகின்றன.///

    அப்படியே மீனாட்க்ஷி அம்மன் கோவில் கண் முன்னால் வந்து செல்வதை தடுக்க முடியவில்லை.

    கோவில்கள் கோவில்களாகவும் புனிதமிக்க ஆன்மீக ஸ்தலங்களாகவும் மட்டுமே இருக்க வேண்டுமென்றால் சில விஷயங்களை அரசு செய்ய வேண்டும்.

    1. கோவில்கள் வணிக வளாகங்களாக ஆகாமல் இருக்க எந்தக் கோவிலுக்குள்ளும் அல்லது கோவிலுக்கு வெளியே சில மீட்டர் தூரங்களுக்கும் வியாபாரக் கடைகள் , நிறுவங்க இருக்கக்கூடாது என சட்டமியற்றிச் செயல் படுத்த வேண்டும்.

    2. கோவிலுக்குள் இருக்கும் பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தினரால் இலவசமாக அளிக்கப்படும் பிரசாதமாக மட்டுமே இருக்க வேண்டும் அது வியாபாரமாககூடாது.

    3. முக்கியமாகக் கோவில் தரிசனத்திற்கு காசு வாங்கக்கூடாது. காசு வாங்கி சாமியைக் கட்ண்பித்து கடவுளை எக்ஷிபிஷன் பொம்மையாக ஆக்குவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.

    4. திருச்செந்தூர் போன்ற கோவில்களில் அர்ச்சனை செய்கிறேன் பேர்வழி என்று ஐயர்கள் 10 ரூபாய்க்கு கண்ட கண்ட இடங்களில் மந்திரம் முழங்கி அர்ச்சனையை அனர்த்தமாக்குவதை கண்டிருக்கிறேன். இது போன்ற செயல்களைத் தடுக்க வேண்டும்.

    5. திருமனஞ்சேரி கோவிலில் திருமணம் வேண்டி பூஜை நடத்தி வெளியே வருபவர்களிடம் , பிரகாரத்தில் நெய்விளக்கு ஏற்றிவிட்டுச் சென்றால் தான் உங்கள் பிரார்தனை பலிக்கும். இல்லையென்றால் நிறைவேறாது என்று மிரட்டி மிரட்டியே நெய்விளக்கு விற்கிறார்கள். இதனை எதிர்க்கும் மக்கள் ஒரு பொருட்டாக அங்கே மதிக்கப்படுவதில்லை. இது போன்று தெரிந்தே செய்யப்படும் பல ரவுடித்தனமான கொள்ளையை அரசு அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

    6. பலவிதமான பூஜைகளுக்கு விதவிதமான கட்டணங்கள் என்று கோவில்களில் கொள்ளையடிப்பது அரசு ஆணைப்படியே தடுக்கப்பட வேண்டும்.

    இப்படி பல்வேறு வழிகளில் மக்கள் கொள்ளைகள்கோவில்களில் தடுக்கப்படாவிட்டால் கோவில்கள் கன்னியாஸ்திரிகளின் சுற்றுலாத்தளமாக ஆகாமல் என்ன செய்யும்.?

  17. அங்கதச் சுவையோடு கூடிய கட்டுரை. இருந்தாலும் ஸ்ரீமான் ஜெயமோகன் கட்டுரையாளரை இந்த மொத்து மொத்தியிருக்க வேண்டாம். கர்நாடக மாநிலத்தில் பல அருவிகள் உள்ளன. நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள அருவிகள் அருகே பிளாஸ்டிக் குப்பை மாயம். வனத்துக்குள் இருக்கும் அருவிகள் சுற்றுலாப் பயணிகளின் குறைந்த வருகையால் தப்பித்தன என்ற என் நண்பர் ஒருவர் சுற்றுலா வளர்ச்சி என்பது ஒரு கெட்ட வார்த்தை என்பார். இது மலை மேல் உள்ள கோவில்களுக்கும் பொருந்தும். மலை ஏறி தரிசிக்க முடிந்தவர்கள் சென்று வரட்டும். ரோப் கார் வசதி செய்கிறோம் என்று ஆரம்பித்தால் வணிக மயமாதலை தவிர்க்க முடியாது. புனிதத் தன்மையும்/சுற்றுச் சூழலும் அளவற்ற பயணிகளின் வருகையால் கெடும் என்பதில் சந்தேகமில்லை.

  18. ஒரு தொடரை முடிப்பதற்கு முன்னரே விமர்சனம் செய்வது என்பது சரியா என தெரியவில்லை. மேலும் இது ஒரு கதையும் அல்ல. இது அவருடைய அனுபவம் மற்றும் பார்வை. ஒரு பயணத்தில் ஒவ்வொருத்தருடைய அனுபவமும் வேறு வேறானதாய் இருக்கும். தொடர் முடியும் வரை அமைதி காப்போம் ஆதரவளிப்போம்
    நன்றி.

  19. நன்றாகத்தான் கூறியிருக்கிறார் ராம்ஜி நாங்கள் 5 பெண்கள் போகலாம் என்று இருந்தோம். பாதை பற்றி தெரிந்ததால் ஜாக்கிரதையாக செல்வோம் அல்லவா .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *