விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. இது தமிழ்ச் சைவர்களின் நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழர்கள் கைக்கொண்டொழுகிய வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த நூல் தமிழருக்கு அறிவிக்கும் அரிய செய்திகளை இக்கட்டுரை திரட்டித் தருகின்றது. இக்கருத்துக்கள் சைவசித்தாந்தப் பேராசிரியர் திரு இரா.வையாபுரியார் அவர்கள் விநாயகர் அகவலுக்கு எழுதியுள்ள பேருரையினின்றும் திரட்டப் பட்டது.

‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார்’. விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது இப்பொருள்கள் நினைவுக்கு வந்து பாராயணத்தைப் பயனுடையதாக்கும்.

இந்நூல் 15ஆவது வரி ‘அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று கூறுவதால் இந்நூலில் கூறப்படும் விநாயகப் பெருமானின் திரு நாமம் ‘கற்பக விநாயகர்’ என்பது.

அவர் தன் நிலையில்,

• சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாதவர்.
• துரியநிலையில் இருப்பவர்.
• ஞானமே சொரூபமாக இருப்பவர்.

இது அவருடைய சொரூப நிலை அல்லது உண்மை நிலை எனப்படும். இது பரசிவமாக இருக்கும் நிலை.

ஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை அடியவர்கள் வழிபட்டு உய்வதற்காகவும் அடியவர்களுக்கு அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளும். அத்தகைய அற்புதக் கோலங்களில் ஒன்று விநாயக வடிவம். ( அற்புதம் – அற்புதம் என்பது உலகில் எங்கும் காணப்படாது இயற்கைக்கு மாறாக நிகழ்வது. இது திருவருளால் மட்டுமே நிகழ்வது.)

அவ்வற்புத வடிவமானது:

• தாமரை மலர்போன்ற மென்மையும் அழகும் மலர்ச்சியும் உடைய திருவடிகள்.
• அத்திருவடிகளில் இனிய ஒலியெழுப்பும் சிலம்பு.
• பொன்னரைஞாண்.
• அழகிய பட்டாடை அணிந்த இடுப்பு
• பேழை (பெட்டி) போன்ற வயிறு.
• பெரிய வலிமை மிக்க தந்தம்.
• யானைமுகம்.
• முகத்தில் அணிந்த சிந்தூரம்.
• ஐந்துகைகள்.
• அங்குசம், பாசம் என்னும் ஆயுதங்கள்.
• நீலமேனி (நீலம் – கருமை)
• தொங்குகின்ற வாய்.
• நான்கு தோள்.
• மூன்று கண்.
• கன்னத்தில் மதநீர் வடிந்த சுவடு.
• இருபெரிய செவிகள்.
• பொற்கிரீடம்
• பூணூல் புரள்கின்ற மார்பு.

இது குணங்குறி அற்ற பரசிவம் உயிர்களுக்கு அருளும் பொருட்டு மேற்கொள்ளும் வடிவங்களுள் ஒன்று. அதனால் தடத்த வடிவம் அல்லது தடத்த நிலை எனப்படும். இறைவடிவங்களைத் தரிசித்துத் தொழும்போது திருவடியிலிருந்து தொடங்கி உச்சிவரைக் கண்டு திருமேனியில் விழியைப் பதித்தல் முறை. திருவடி என்பது திருவருள்.  திருவருளால் இக்காட்சி நடைபெறுகின்றது என்பது பொருள்.

•  அவருக்கு நிவேதனப் பொருள்கள் முப்பழம்.
•  ஊர்தி மூஷிகம்
•  அவர் தன்னை வழிபடும் அடியவர்களுக்குத் தாய்போன்ற அன்புடையவர்.
•  எப்பொழுதும் அடியவர்களைப் பிரியாமல், அவர்களுடைய அறிவுக்கு அறிவாய், அறிவினுள்ளே இருந்து அவர்களுக்கு வாழ்வில் வழிகாட்டுவார்.
•  அடியவர்களுக்குப் பக்குவம் வந்த காலத்தில் குருவடிவாக வெளிப்பட்டு வந்து, முன் நின்று தீக்கை செய்து உண்மை ஞானம் புகட்டுவார்.
•  அடியவர்களை யோகநெறியிலும் ஞானநெறியிலும் நிற்கச் செய்வார்.
•  ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலப் பிணிப்பிலிருந்து விடுபடச் செய்வார்
•  நின்மல அவத்தை (அருளுடன் கூடிநிற்கும் நிலை) யில் நிற்கச் செய்வார்.
•  அளவில்லாத ஆனந்த அனுபவம் விரியச் செய்வார்.
•  இறுதியில் தன்னைப்போலத் தன் அடியவர்களையும் என்றும் மாறாத அழியாத நிலையில் (தத்துவநிலை) நிற்கச் செய்வார்.

விநாயகப் பெருமான் உணர்த்தும் ஞானநெறி

•  குருவாக வந்து தீக்கை அருளுகின்றார்

•  இதுவரையிலும் அவ்வுயிர் செத்துப் பிறந்து உழல்வதற்குக் காரணமான மயக்க அறிவைப் போக்குகின்றார்.

•  திருவைந்தெழுத்தை (‚ பஞ்சாக்கரம்) நெஞ்சில் பதிவிக்கின்றார்.

•  உள்ளத்தில் வெளிப்பட்டு விளங்கி நிற்கின்றார்.

•  பதி, பசு, பாசம் எனும் அனாதியான முப்பொருள்களின் இயல்பினை விளக்கி உரைக்கின்றார். சஞ்சிதம் எனும் பழவினையைப் போக்குகின்றார். ஞானோபதேசம் செய்கின்றார்.

•  உபதேசித்த ஞானப்பொருளில் ஐயம்,  திரிபு ஆகியன நேரிடாமல் தெளிந்த உணர்வு உண்டாமாறு அருளுகின்றார்.

•  ஐம்புலன்கள் விடயங்களை நோக்கி ஓடி விருப்பு வெறுப்புக் கொண்டு துன்புறாதபடி புலனடக்கம் உண்டாவதற்குரிய வழியினைக் காட்டியருளுகின்றார்.

•  உடம்பில் உள்ள தத்துவக் கருவிகள் எவ்வாறு ஒடுங்குகின்றன என்பதை அறிவிக்கின்றார்.

•  பிராரத்த வினை தாக்காதவாறு காப்பாற்றுகின்றார்.

• ஆணவம லத்தால் வரும் துன்பத்தைப் போக்குகின்றார்.

•  ஆன்மாவை நின்மல நிலைக்கு உயர்த்தி நின்மலதுரியம் நின்மலதுரியாதீதம் என்னும் நிலைகளில் திருவருளுடனும் சிவத்துடனும் கலந்து நிற்கச் செய்கின்றார்.

குருவாக வந்த விநாயகப் பெருமான் இவ்வாறு ஞானநெறியை அருளி, இந்த ஞானநெறியில் நெகிழ்ந்து விடாது உறுதியாய் நிற்பதற்குரிய யோகநெறியினையும் அறிவித்தருளுகின்றார்.

•  ஒன்பது வாயில்களை உடைய உடம்பில் உள்ள ஐம்புலன்கள் ஆகிய கதவுகளை அடைத்து மனம் உள்ளே (அகமுகப்பட்டு) நிற்கச் செய்கிறார்.

•  இதனால் ஆதாரயோகம் மேற்கொள்ளும் முறையினைத் தெளிவிக்கின்றார்.

•  மவுனசமாதி நிலையினை அடையச் செய்கின்றார்.

•  இடநாடி, வலநாடி, சுழுமுனா நாடி என்னும் நாடிகளின் வழியாய் மூச்சுக்காற்று இயங்கும் முறையினைத் தெரிவிக்கின்றார்.

•  சுழுமுனா நாடி மூலாதாரத்திலிருந்து கபாலம் வரையிலும் (தலையுச்சி) சென்று நிற்கும் நிலையினைத் தெரிவிக்கின்றார்.

•  அவ்வாறு செல்லும் வழியில் உள்ள அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்னும் பகுதிகளின் இயல்பைத் தெரிவிக்கின்றார்.

• மூலாதாரத்தில் உள்ள ஹம்ச மந்திரம், குண்டலினி சத்தி, பிரணவ மந்திரம் என்பனவற்றின் இயல்பினைத் தெரிவிக்கின்றார்.

•  இடகலை, பிங்கலை என்னும் மூச்சுக்காற்ரினால் குண்டலினி என்னும் சத்தியை எழுப்பிச் சுழுமுனைநாடி வழியாக மேலே கபாலம் வரையிலும் பிரணவமந்திரத்துடன் ஏற்றும் முறையினையும் தெரிவிக்கின்றார்.

•  இவ்வகையில் பிரணவமந்திரம் பலகலைக்களாகப் பிரிக்கப்பட்டு, (மூன்று, ஐந்து, பன்னிரண்டு, பதினாறு) உடம்பில் அங்கங்கே நிறுத்தித் தியானிக்கப்படுவதாகிய பிராசாத யோகம் என்னும் நெறியினையும் கற்பிக்கின்றார்.

•  இப்பிராசாத யோகத்தினால் ஆன்மா பிரமரந்திரம் (தலையுச்சி) என்னும் இடத்தையும் கடந்து மேலே துவாதசாந்தப் பெருவெளி என்னும் இடம்வரையிலும் சென்று சிவத்துடன் கலந்து நின்று சிவானந்தம் அனுபவிக்கச் செய்கின்றார்.

• இவ்வாறு ஆறாதார யோகம், அட்டாங்க யோகம், பிராசாத யோகம் என்னும் முறைகளில் நிற்கச் செய்து மனோலயம் அடையச் செய்கின்றார்.

•  இதனால் உண்டாகும் அகக் காட்சியினால் ஆன்மாவின் இயல்பு,  உடம்பின் இயல்பு,  மாயாமலம் கன்மமலம் ஆணவமலம் என்பனவற்றின் உண்மையியல்பு ஆகியவற்றை அறிய வைக்கின்றார்.

•  சப்தப்பிரபஞ்சம் (ஒலியுலகம்) அர்த்தப்பிரபஞ்சம்(பொருளுலகம்) என்பனவற்றினியல்பையும் அவற்றில் பரம்பொருள் சிவலிங்கரூபமாகக் கலந்திருக்கும் முறையினையும் அறியச் செய்கிறார்.

•  இத்தகைய பரம்பொருள் மிகச் சிறிய பொருள்களுக்கெல்லாம் மிகச் சிறியதாகவும், மிகப் பெரிய பொருள்களுக்கெல்லாம் மிகப் பெரிய பொருளாகவும் இருக்கும் நிலையை உணரச் செய்கின்றார்.

•  இத்தகைய பரம்பொருள்சை உலகவாழ்வில் இருந்துகொண்டே அறிவதும் அப்பொருளுடன் கலந்து ஆனந்தம் அனுபவிப்பதும் கரும்பினைக் கணுக்கணுவாகச் சுவைத்துச் செல்லும் அனுபவம் போன்றது.

• இந்த அனுபவம் நீடித்திருக்கத் திருநீறு உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிய வேண்டும்.
•  அவற்றையும் அவற்றை அணிந்துள்ள அடியார்களையும் சிவமெனவே கண்டு வழிபடுதல் வேண்டும்.

•  எப்பொழுதும் அடியார் கூட்டத்துடன் கலந்திருத்தல் வேண்டும்.

•  திருவைந்தெழுத்து மந்திர செபத்தைக் கைவிடலாகாது.

இவ்வாறு விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார். அந்நிலையிலிருந்து அவ்வான்மா தன்னைவிட்டு நீங்காமல் தனக்கே அடிமையாய் இருக்கும் நிலைமையினையும் விநாயப் பெருமான் அருளுகின்றார் என்னும் அரிய செய்திகளை விநாயகர் அகவல் என்னும் இந்த நூல் கூறுகின்றார்.

ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்):  அட்டாங்கயோகம், பிராசாத யோகம் சிறப்புக் கட்டுரைகளுடன்
உரை: முனிவர் ர. வையாபுரியார்.
சைவசித்தாந்த சபை, 9 – பி, முத்துசாமி சந்து, இரண்டாவது தளம், கைக்கோளன் தோட்டம், ஈரோடு 638 001

ஔவையார் அருளிய விநாயகர் அகவல், குகஸ்ரீ. பு.பா. ரசபதி அவர்களின் விரிவுரை & பி.என்.குமார் அவர்களின் உரைக் குறிப்புகளுடன் – இங்கு படிக்கலாம்.

13 Replies to “விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்”

 1. விநாயக சதுர்த்தி நன்னாளில் விநாயகர் அகவல் வ்யாக்யானம் தெரிவித்த ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி மஹாசயருக்கு மிக்க நன்றி.

  விநாயகர் அகவலை சொல்லிக்கொண்டு வியாக்யானத்தைப்ப்டிக்கையில் வரிக்கு வரி அழகாக வ்யாக்யானம் செல்கிறது.
  உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
  தெவிட்டா ஞானத்தெளிவையுங்காட்டி…………..

  ஒரு மந்திரத்தால் ஐம்புலக்கதவை அடைப்பதுங்காட்டி………….

  என்பதற்கு அடைக்குறியில் ப்ரத்யேகமாக பஞ்சாக்ஷரத்தை சொல்லியுள்ளீர்களே என்று நினைத்தேன்

  பின்னர்

  சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி

  என்பதிலிருந்து உபதேச மந்த்ரம் பஞ்சாக்ஷரமே என்று துலங்குவது போலிருந்தது.மேலும்

  • எப்பொழுதும் அடியார் கூட்டத்துடன் கலந்திருத்தல் வேண்டும்.
  • திருவைந்தெழுத்து மந்திர செபத்தைக் கைவிடலாகாது.

  கூடுமெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
  அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக்கருத்தின் நினைவிலிருத்தி
  தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
  வித்தக விநாயாக விரைகழல் சரணே

  அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை என்பதிலும் பஞ்சாக்ஷரமே நேரடியாக சொல்லப்படுகிறதா

  வித்தக விநாயாக விரைகழல் சரணே. விநாயகப்பெருமான் அருள் கூடி விநாயகர் அகவல் நிதமோதி சிவஞானம் பெருவோமாக.

 2. பிள்ளையார் இல்லாத ஊர்களே இல்லை. பிள்ளையார் நமது அன்றாட வாழ்வில் மிகவும் நெருங்கிய தெய்வம். விக்னத்தை கொடுப்பதும் அவர்தான், விக்னத்தை நீக்குபவரும் அவரே.

  அருமையான கட்டுரை. பல தளங்களில் சிந்தனையை தூண்டுகிறது. ஆசிரியருக்கு வந்தனம்.

  இந்துக்களுக்கு பிள்ளையார் எவ்வளவு முக்கியமோ அதே அளவு கிறிஸ்தவர் அவரை வெறுப்பர். வெளி தேசத்தில் இருந்து வந்த பாதிரிகள் நமது தெய்வங்களை குறிப்பாக மனிதனும் மிருகமும் இணைந்த தோற்றங்களை புரிந்து கொள்ளாமல் வெறுத்தனர் – ஏசினர். அவர்கள் சொல்லிக் கொடுத்த சொல்லை, பல நூறு வருடங்களாக தமிழ் நாட்டில் எதோ ஒரு மூலையில் வாழ்ந்து வரும் சூசையும், ஆரோக்கியமும் கூட பிடித்துக் கொண்டு பிள்ளையார் போன்ற தெய்வங்களை ஏசுகிறார். அறிவிலிகள். இதே கூத்தை கழகத்தினரும் தொடர்கின்றனர்.

  இன்றைய நன்னாளில் விக்னஹரனாக பிள்ளையார் பாரதத்தை பிடித்த இந்த இழிவுகளை நீக்கி, விதேச மதங்களை விரட்டி, நமது தர்மத்தை காக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

 3. அருமையான கட்டுரை முனைவர் ஐயா.

  நேரம் கிட்டியோர் இதையும் படிக்கலாம்:
  http://pm.tamil.net/pub/pm0231/mp231.html
  விநாயகர் அகவல் – விரிவான உரை

 4. ‘ராத்திரி நேரத்துப் பூஜையில்… ரகசிய தரிசன ஆசையில்…’

  ‘நிலாக்காயுது… நேரம் நல்ல நேரம்… ‘

  ‘நேத்து ராத்திரி யம்மா…’

  ‘ஆடி மாசக் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க…’

  இவையெல்லாம் யாவை என்று நினைக்கிறீர்கள் ?

  விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இறைவனின் திருக்கோயிலுக்கும் திருவுருவுக்கும் முன்பாகக் ‘கலைஞர்’கள் நிகழ்த்துகிற இசை மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் !

  இவற்றை எல்லாம் பார்க்கும் இந்தியப் பிள்ளைகள்/பெண்கள் வினாயகரைப் பற்றி (கடவுளைப் பற்றி) என்ன கற்றுக்கொள்வார்கள் என்கிற கவலை நம் யாருக்காவது இருக்கிறதா ?

  பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் விவாதிக்கிற நமக்கு (ஹிந்துக்களுக்கு) இவற்றை எப்படிச் சமாளிப்பது என்கிற அறிவை இறைவன் தருவாரா ?

  போலிப் பகுத்தறிவுவாதிகளும் கணபதியின் ‘சித்தி, புத்தி’ களைப் பற்றிக்
  கிண்டலடிக்கிறார்களேயல்லாமல், “கடவுள் என்கிற பெயரில் ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள் ?” என்று கேட்பதில்லை.

  ஒரு வேளை அவர்கள் இவற்றின் பின்புலமாகக் கூட இருக்கலாம். ஆனால் What about Religious/Spiritual Hindus?

 5. ஸ்ரீ பி.என். குமார் அவர்களுக்கு தாங்கள் கொடுத்த சுட்டி மிக பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

  நான் எழுதியதில் நெஞ்சக்கருத்தின் நிலையறிவித்து என்றிருக்க வேண்டும் அவசரத்தில் எழுதுவதில் பிழை. அதற்கு என் க்ஷமாயாசனம். ஆனால் நினைவு தெரிந்த நாள் முதலாய் அஞ்சக்கருத்தின் என தவறாகவே ஓதி வந்த எனக்கு தாங்கள் கொடுத்திருந்த விரிவான வ்யாக்யானம் மூலம் தவறான ஓதல் திருத்தப்பட்டு அஞ்சக்கரத்தின் (என் மற்றொரு வினாவிற்கும் விடை) என சரியாக ஓதுகிறேன். மிக்க நன்றி. வித்தக விநாயக விரைகழல் சரணே.

  \\\விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இறைவனின் திருக்கோயிலுக்கும் திருவுருவுக்கும் முன்பாகக் ‘கலைஞர்’கள் நிகழ்த்துகிற இசை மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் !\\\\

  ஸ்ரீ மகரத்தான். நான் தமிழகத்தில் இல்லை. ஆனால் தொலைக்காட்சிகளில் சில சமயம் பட்டி மன்றம் என்ற வெட்டி மன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து இருக்கிறேன். நகைச்சுவையை மட்டும் ப்ரதானமாக ஆக்கி அறிவு பூர்வமான விஷயங்களை அறவே ஒதுக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்.

  நீங்கள் சொல்லும் ஆபாச பாட்டுகளை இறை விழாக்களில் இசைப்பது அதை கலை நிகழ்ச்சி என்று வேறு சொல்லிக்கொள்வது தமிழகம் மட்டுமன்று அகில பாரதம் சார்ந்த அவலநிலை. உத்தர பாரதத்தில் ஒரு சிறு வித்யாசம். ஆபாச பாட்டுகளை அப்படியே பாட மாட்டார்கள் அந்த மெட்டில் கடவுளர் பேரில் பாட்டுகளமைத்து பாடுவார்கள்.

  குருத்வாராக்களில் (சீக்கியர் கோவில்) மெல்லிசையில் குர்பாணி (குருவாணி) இசைப்பதை சிரோமணி குருத்வாரா ப்ரபந்தக் கமிட்டி என்ற சீக்கியஸ்தாபனம் கண்டித்துள்ளது. அந்த பழக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மற்றைய ஹிந்துக்களும் சீக்கியரின் இந்த வழியை தங்களுக்கேற்ப பின் பற்றல் நன்று.

 6. விநாயகர் அகவல் ஒரு தத்துவ விளக்கம் என்ற முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்களின் கட்டுரை தெள்ளத்தெளிவாக சைவ சித்தாந்தக் கருத்துக்களை எடுத்துவைக்கிறது. அருமையானக் கட்டுரை. ஐயா விநாயகர் அகவல் காட்டும் கடவுள் கோட்பாடு(தடத்த நிலை மற்றும் சொருப நிலை), ஸ்ரீ விநாயகப் பெருமான் குருவாக வந்து யோகத்திற்கும் ந்ஜானத்திற்கும் வழிகாட்டுவார் என்ற அகவலின் திரண்டக் கருத்தினை மொழிந்துள்ளார்.
  விநாயக அகவல் பாராயணம் செய்வோர் ஆன்மீக வாழ்வில் படிப்படியாக தொடர்ந்து மேன்மை எய்துவர் என்பது அனுபவம் வாயிலாக உணரமுடியும். நம் குழந்தைகளுக்கு விநாயகர் அகவல் சொல்லிக்கொடுக்க வேண்டும். எந்த நற்காரியம் துவங்கும் முன்பும் அகவல் பாராயணம் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். விநாயகர் அகவலை பிரபலப் படுத்தும் ஹிந்து இயக்கங்களின் பணி பாராட்டவும் போற்றவும் தக்கது.
  சிவஸ்ரீ.விபூதிபூஷன்

 7. எனது தினப் பாராயணத்தில் விநாயகர் அகவலும் ஒன்று. முன்பு ஒருமுறை ஸ்ரீ காஞ்சி மகா சுவாமிகள் “விநாயகர் அகவலில் முழுக்க முழுக்க இருப்பது நம் யோக முறைகள் பற்றித்தான்” என்று எழுதியிருந்ததைப் படித்தது ஞாபகத்திற்கு வந்தது. அதை விவரமாக எழுதியுள்ள முனைவர் ஐயா அவர்களுக்கு நன்றி.

  இதேபோல்தான் அந்தணர்கள் தினப்படி சந்தியா வந்தனம் செய்வதிலும் சில யோக முறைகளும், அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்பதைக் காட்டுவதாகவும் அமைந்து, இறுதியில் அவை அனைத்துமே இறைவனுக்கு அர்ப்பணிப்பதாகவும் உள்ளது என்பதை ஆன்றோர் அறிவர். அதாவது அந்தணர்கள் உலகத்தார் அனைவர் பொருட்டும் செய்யும் நித்திய வழிபாடு அது. அது மட்டும் அல்லாது ஆகம வழிப்படி இறைவனை நினைந்து செய்யப்படும் அனைத்து வழிபாடுகளுமே பரமேஸ்வரனை நினைந்து செய்வதாகவும், இறுதியில் பலன்கள் அனைத்தையும் நாராயணனுக்கே அர்ப்பணிப்பதாகவும் ஆன்றோர்கள் அமைத்துள்ளனர். இதுதான் நம் இந்து மரபுப்படி வாழும் முறை.

 8. This Vinayagar belongs to our place “Thirukovilur” which is in between Villupuram and Thiruvannamali. Around 30-35 kms from Villupur and Thiruvannamali. Please visit this sacraed place — Even Ramanar stayed in Tirukoilur around 3 years before going to Thiruvannamalai.

 9. ஔவையார் அருளிய விநாயகர் அகவல், குகஸ்ரீ. பு.பா. ரசபதி அவர்களின் விரிவுரை & பி.என்.குமார் அவர்களின் உரைக் குறிப்புகளுடன் – இங்கு படிக்கலாம்.
  இந்த சுட்டி தமில்.நெட் செல்கிறது. ஆனால் சுட்டி திறக்கவில்லை. இந்த நூலைப் படிக்க ஆவலாய் உள்ளேன். என் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியுமா? நன்றி!

 10. ஐயா அவர்களுக்கு இன்னொரு வி நாயகர் அகவலும் உள்ளதே அதையும் இதே போல் உள்ளங்கை நெல்லிக்கனி என விளக்கிக்கட்டுரை எழுதுங்களேன். அன்புடன்
  சிவஸ்ரீ.

 11. Sir, Good article. I would like to read the full commentary on Vinayagar agaval as mentioned by you. The site does not open. Can you help me sir? Thanks and regards, N.R.Ranganathan

 12. Thanks for giving the gist of vinayagar agaval. I hope this article will kindle the interest to explore vinayakar agaval.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *