[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா!

சுவாமி சித்பவானந்தர் உடனான வாழ்க்கை அனுபவங்கள் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் நான்காவது பாகம்.
முந்தைய பகுதிகள்:

 

சித்பவானந்தர்: பிறப்பும், வாழ்வும்

தமிழகம் செய்த தவப் பயனாக, கொஞ்சும் தமிழ் பேசும் கொங்கு நாட்டிலே, பொருள் ஆட்சி புரிகிற பொள்ளாச்சிக்கு அருகிலே, செங்குட்டைப் பாளையம் என்ற சீர்மிகுந்த சிற்றூரிலே அருள் செல்வர்களுக்கும், ஆத்ம சாதகர்களுக்கும் அடைக்கலமாக இருந்த செல்வச் சீமான் வீட்டில் அவதரித்தது அந்த ஞான சூரியன்.

சமயத்தின் பெயரால் வெறும் சடங்குகளைச் செய்து கொண்டு, ஜாதியின் பெயரால் உயர்வு, தாழ்வை உண்டு பண்ணி, தீண்டாமையை வளர்த்து, கல்வியின் பெயரால் அடிமைப் புத்தியை பெருக்கி, மொழி வளர்ச்சிக்குப் பாடுபடுவதை விட்டு விட்டு, சமஸ்கிருதம் எங்களுக்கே உரிய மொழி என்று உரிமை கொண்டாடி, புனிதமான காயத்ரி மந்திரம் தாங்கள் தான் சொல்லலாம், மற்றவர்கள் சொல்லக் கூடாது என்றெல்லாம் மூட நம்பிக்கைகள் வளர்ந்து தலைவிரித்தாடிய நேரத்திலே, அதைத் திருத்தியமைக்க வந்ததாகச் சொல்லிக்கொண்ட இயக்கம், நாத்திக இயக்கமாகி மூடக் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தில் பகுத்தறிவு பிரசாரம் என்ற பெயரில் ஹிந்து மதக் கோட்பாடுகளை, ஹிந்து தெய்வங்களை இழித்துப் பழித்துப் பேசப்பட்ட நேரத்தில், சுடர் விடும் தம் கூர்மையான அறிவால் ஹிந்து தெய்வங்களுக்குப் பொருத்தமான தத்துவ விளக்கம் கொடுத்து விவேகானந்தரைப் போன்ற பல துறவிகளை உருவாக்கி, பல ஆசிரமங்களை நிறுவி, நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதி இத்தகு செயல்களை விளம்பரம் பண்ணாது தனியாக ஒருவரே செய்து இன்று தமிழகம் சமயத்துறையில் தலை நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் ஸ்ரீமத் பெரிய சுவாமிஜி என்றும், சின்னு மகராஜ் என்றும் எல்லாராலும் போற்றி வணங்கப்படுகிற ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் ஆவார்.

இருமூர்த்திகள்

சுவாமிஜி சொல்கிறார் : 1921 ல் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது ஸ்ரீமத் பிரம்மானந்த சுவாமிஜியும், ஸ்ரீமத் சிவானந்த சுவாமிஜியும் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வந்திருந்தார்கள். தினமும் காலையும் மாலையும் அவர்களைக் காணச் செல்லுவோம். இருவரும் பெரிய மூர்த்திகள். குருமஹராஜ், அன்னையார், சுவாமிஜியைப் பார்க்காத குறை, இம்மூர்த்திகளைப் பார்தததால் தீர்ந்தது.

சென்னை ராமகிருஷ்ண மடத்திற்கு சுவாமிஜிகள் வந்திருந்தபோது தினமும் காலை 5.00 மணிக்கு்ப் பார்க்க போவேன். போகும்போது பழங்கள் கொண்டு போவேன். பார்க்கவேமாட்டார் பிரம்மானந்த சுவாமிஜி. பார்க்கவேயில்லையே என்று ஒருநாள் கொண்டு போகவில்லை. ஏன் பழம் கொண்டு வரவில்லை என்று கேட்டார்.

(ஸ்ரீராமகிருஷ்ணர் சிலர் கொண்டு வரும் பக்ஷணங்கள் தூயவை அல்ல என்று உணர்ந்தால் சாப்பிடமாட்டார். சில பக்தர்கள் கொண்டு வராவிட்டால், ஏன் கொண்டு வரவில்லை என்று கேட்பார்-அதுபோலத் தானே, பிரம்மானந்த சுவாமிஜி கேட்டது-என்று நாங்கள் கேட்டோம்) ஆமாம் அதுபோல் தான் என்றார் நம் சுவாமிஜி.

ஸ்ரீமத் பிரம்மானந்த சுவாமிஜி பெரும்பாலும் சமாதி நிலையிலேயே இருப்பார். செகரட்டரியாக இருந்த சாரதானந்த சுவாமிஜி, மடத்து வி­டயமாகக் கையெழுத்து வாங்குவதற்கு இரண்டு நாட்கள் கூடக் காத்திருக்க வேண்டியிருக்கும். பரமஹம்ஸருடைய சிஷ்யர்களே ஒரு அலாதியான கூட்டம்; எல்லாருடைய வாழ்க்கையும் சேர்ந்து பரமஹம்ஸருடைய வாழ்க்கைக்கு நிகர்.

குருவின் கட்டளைகள்

சித்பவானந்த சுவாமிஜி கல்கத்தா ராமகிருஷ்ண மடத்தில் இருந்தபோது, அவருடைய குருவான சிவானந்த சுவாமி அவர்களுக்குத் தாயுமான சுவாமிகளின் பாடல்களையும் கருத்துக்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்வது வழக்கமாம். அதைக் கேட்டு மகிழ்ந்த சுவாமி சிவானந்த சுவாமி,  “உபநிஷ­த்துக்களின் கருத்துக்களைச் சொல்லும் தாயுமான சுவாமி பாடல்களைப் பரப்புவதற்கு ஏதேனும் செய்” என்று கட்டளையிட்டராம்.

அதே போல, அவர் இட்ட மற்றொரு கட்டளை தமிழகத்தின் ஆன்ம அபிவிருத்திக்காகச் சித்பவானந்தரை செயல்படப் பணித்தது. “உன்னைத் தென்னகத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கிறேன்” என்ற சிவானந்தரின் அறிக்கைதான் அக்கட்டளை.

அதன் காரணமாக, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச தேவரின் நேர் சிஷ்யர்கள் பலருடன் பழகி மஹாபுரு­ஷ சிவானந்த சுவாமிகளிடம் சந்நியாசம் ஏற்று, அவர் ஆசியால் தென்னகம் வந்தார்.

ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகளின் விருப்பத்தை நிறைவேற்றப் பல இடங்களில் தவம் செய்தார். இறுதியில் திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை என்ற சிற்றூரில் உள்ள சிவன் கோயிலில் தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது திருச்சியிலிருந்த அன்பர்கள் சுவாமிஜியை அழைத்துச்சென்று ஸ்ரீமத் பகவத்கீதை விளக்கமும், தாயுமான சுவாமிகள் பாடல்களுக்கு விரிவுரையும் கேட்டு ஆன்ம நலம் பெற்று வந்தனர்.

ஸ்ரீ தாயுமான சுவாமிகள் பாடல்களுக்கு விரிவுரை எழுதியும் பேசியும் சுமார் முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் பிரசாரம் செய்தார்கள். மேலும், தாயுமானவரது நூல்கள் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்கும்படிச் செய்தார். இது தாயுமானவர் மீது ஈடுபாடு கொண்டுள்ள பக்தர்கள் அனைவரையும் இன்னும் உற்சாகத்துடன் ஈடுபாடு கொள்ளச் செய்தது.

இராமநாதபுரத்திலுள்ள தாயுமானவர் சமாதியை புதுப்பிக்க முயற்சித்தார். ஆனால், முதலில் காலம் கைகூடி வரவில்லை. பின்பு அச்சமாதியை நிர்வகித்து வந்தவர்கள் தாங்களாகவே சமாதியின் முழு நிர்வாக பொறுப்பையும் சுவாமிகளிடம் ஒப்படைத்தனர்.

இராமநாதபுரத்தில் தாயுமானவர் சமாதி அடைந்த இடத்தில் தாயுமானவர் தபோவனம் ஒன்று அமைக்க சுவாமி விருப்பம் கொண்டார். அதற்குப் பல லட்சங்கள் தேவைப்பட்டடன. இத்தனை லட்ச ரூபாயில் இவ்வளவு நாட்களுக்குள் தாயுமானவர் தபோவனம் கட்டிய முடிக்க வேண்டுமென்று தீர்மானம் செய்தார். அதற்கு தேவையான நிதி உதவி அளிக்கும்படி தர்மசக்கரம் பத்திரிக்கையில் ஒரு வேண்டுகோள் விடுத்தார். குறிப்பிட்ட காலத்திற்குள் நிதி குவிந்து விட்டது.

தேவைக்கு மேற்பட்டும் நிதி வரத்துவங்கியது. உடனடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டார்:  “தாயுமானவர் தபோவனத்திற்குத் தேவையான நிதி சேர்ந்து விட்டது. இனி அன்பர்கள் நிதி அனுப்பவேண்டாம். அனுப்பினால் திருப்பி அனுப்பப்படும்”.

எவ்வளவு பணம் வந்தாலும் அது எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்ள துடிக்கும் இந்நாளில் இப்படியும் மனதுடைய ஒரு தவமுனிவர்.

அத்துடன் ஸ்ரீ தாயுமான சுவாமிகள் சமாதியான கோயிலைத் தாமே ஏற்று, அவரது பெயராலேயே, ஸ்ரீ தாயுமான சுவாமி தபோவனத்தையும் நிறுவினார். நித்திய பூஜை நிகழத் தேவையான ஏற்பாடுகளும் செய்தார்.

மடாதிபதிகளுள் பலர் துறவியர். அவர்களில் பலவகையோர் உண்டு. இளங்கோ அடிகளும், தொல்காப்பியரும் துறவியரும்-புலவரும் ஆவர். பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்கர் ஆகியோரு துறவியரும்-புலவரும்-ஞானியரும் ஆவர்.

திருப்பராய்த்துரை மேவிய சித்பவானந்த அடிகளோ துறவியரும்-புலவரும்-ஞானியும், அத்துடன் தொண்டரும் ஆனவர்.

திருவாசக தீபத்தைத் தூண்டிய நாராயண குரு

சித்பவானந்த சுவாமிக்கு நாராயண குருவிடம் அதிக பக்தி உண்டு. ஒருமுறை நாராயண குருவைச் சந்தித்த பொழுது அவர்,  ‘நீ என்ன படித்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி ‘தாயுமானவர் பாடல்’ என்று பதில் சொன்னார்.

“சாதனத்திற்கு தாயுமானவர் பாடல் சரி. ஆனால் சொரூப விளக்கத்திற்கு திருவாசகம் வேண்டும் அல்லவா? ஆகவே நீ திருவாசகம் படி” என்று அருளினார் நாராயண குரு.

ஸ்ரீ நாராயண குருவின் அருளாணைப்படி சுவாமிஜி தொடர்ந்து முப்பதாண்டுக் காலம் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை ஆராய்ச்சி செய்து, அரியதொரு விரிவுரை எழுதி திருவாசகத்தைத் தமிழ் மக்களிடையே பரவும்படிச் செய்தார்கள்.

தடுமாறும் தமிழரைத் தலைநிமிர்த்தும் சேவை

ஆன்மீகத்தை பரப்ப அந்தர்யோகம் என்ற அமைப்பை சுவாமி துரியானந்தர் அமெரிக்காவில் ஆரம்பித்து வைத்தார். அந்த முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய பெருமை சுவாமிஜியைச் சாரும்.

ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்த அந்தர்யோகம் சுவாமியிடம் பயின்ற துறவிகளால் நடத்தப்படுகிறது. அதில் பலர் நல்ல முறையில் பயன்பட்டு வருகின்றனர். உலக வாழ்க்கையில் உழன்று தவிக்கும் உலக பற்றுள்ள மக்களுக்கு அந்தர்யோகம் ஒரு வரப்பிரசாதமாகும்.

அன்றாட வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்பதிலிருந்து இறையருள் பெற்று பிறவி நோய்களையும் தீர்க்கும் வழி தெரிவது வரை அனைத்தும் புகட்டப்படுகிறது. தியானம், நாம ஜெபம், மெளனம், அர்ச்சனை, சந்தேகம் தெளிதல் ஆகிய முறைகள் அந்தர்யோகத்தில் பின்பற்றப்படுகின்றன. ஒரு தடவை நீங்கள் அந்தர்யோகத்தில் கலந்து கொண்டு அனுபவித்து பார்த்தால் தான் அதன் சிறப்பு புரியும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் அந்தர்யோகம் நடத்தப்படுகிறது. சுவாமிஜியிடம் பயிற்சி பெற்று துறவு ஏற்ற துறவி ஒருவர் ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் முதலிய மாநிலங்களில் தாயுமானவர் பாடல், பகவத்கீதை முதலியனவற்றுக்கு விளக்கம் கொடுத்து வருகிறார்.

நம்முடைய சுவாமிஜி எழுதிய நூல்களைப் படித்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்று தீவிர தாகங் கொண்டு ஆத்மசாதனத்தில் ஈடுபடுவர்களையும், துறவு வாழ்வுக்கும், நாட்டிற்கு சேவை செய்யவும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணிக் கொண்டிருப்பவர்களையும் நாம் நேரில் காணுகிறோம்.

அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய எல்லா நற்பண்பும் நம் வணக்கத்திற்குரிய சுவாமிஜியிடம் பொலிவதை நேரில் தரிசித்தவர்கள் அறிந்திருக்கக்கூடும்.

ஸ்ரீ சாரதா ஸமிதி

சுவாமி விவேகானந்தரின் விருப்பப்படி பெண்களுக்கு ஒரு பெரிய முன்னேற்றம் வரவேண்டும் என்று சித்பவானந்த மகராஜ் அவர்கள் முயற்சி மேற்கொண்டார். அதன் அடிப்படையில் பெண்களுக்கும் துறவறம் அளிக்கும் பணியையும் 1973-ஆம் ஆண்டும் சுவாமிஜி அவர்கள் ஏற்படுத்தினார். சேலம் ஸ்தாபனத்தில் சன்னியாசம் அளித்து அந்த ஸ்தாபனத்தைப் பெண் துறவிகளே நடத்தும் படி செய்தார்.

பெண்கள் பணக்காரர்கள், ஏழைகள்-படித்தவர்-பாமரர் என்று எந்த தரப்பினராக இருந்தாலும் சுவாமிஜி அவர்கள் ஆத்மீக நலவாழ்வு வாழ ஆதரவு அளித்துவந்தார். தகுதியான பெண்களுக்கு சன்னியாசம் இல்லாவிடில் தகுந்த வேலை அளிப்பது போன்ற ஏற்பாடுகளையும் சுவாமிஜி அமைத்தார்கள்.

சுவாமி சித்பவானந்தரால், சேலத்தில் துவக்கப்பட்ட இவ்வமைப்பு துறவையும் சேவையையும் லட்சியமாகக் கொண்டது. சேலம் ஸ்ரீ சாரதா ஸமிதியின் சார்பில் ஸ்ரீ சாரதா மகளிர் மேல்நிலைப்பள்ளி-ஸ்ரீ சாரதா மகளிர் கலைக்கல்லூரி, ஸ்ரீ சாரதா ஆரம்பப்பள்ளி, பாலமந்திர் ஆகிய கல்வி நிலையங்களை சிறப்பாக நடத்தி வருகின்றன.

1983ல் சுவாமிகளுக்கு ஒரு யோசனை வந்தது. சன்னியாசினிகள் நிறையப்பேர் உள்ளார்கள். எனவே, தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஸ்ரீ சாரதா ஸமிதியை துவங்க வேண்டும் என்ற முயற்சி செய்தார்.

அதன் முதற்கட்டமாக மதுரையிலும் திருநெல்வேலியிலும் தொடங்க திட்டமிட்டார்கள். அதன்படி 1984 ஜூன் 6-ம் தேதி மதுரையில் ஸ்ரீ சாரதா ஸமிதி துவங்கப்பட்டது. ஸமிதியை துவக்கிவைத்து அருளுரை வழங்கிய சுவாமிஜி பாரத பண்பாட்டின்படி பெண்கள் எப்படியிருக்கவேண்டும், மற்றவர்களுக்கு அவர்கள் எப்படி பயிற்சியளிக்கவேண்டும் என்பதை விளக்கினார்கள்.

அப்போது அவர் இந்த ஸ்தானபம் ஒரு தபோ நிலையமாக இருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் தபஸ்வினிகளாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்கள். மதுரை ஸ்ரீ சாரதா ஸமிதியின் சார்பில் இப்போது ஒரு பெண்கள் மேனிலைப்பள்ளி துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது என்று விளக்கினார்கள். இப்பள்ளியை விஸ்தரித்து கல்லூரி வரை கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனவாம். அதுபோல் திருநெல்வேலியில் ஒரு அமைப்பு துவங்கப்பட்டு மகளிருக்கான கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

பாரமார்த்திகப் பெருவாழ்வு வாழ விரும்புகிற ஆடவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் வசதியளிப்பது போன்று பாரமார்த்திகப் பெருவாழ்வு வாழ விரும்கிற மகளிர்களுக்கு ஸ்ரீ சாரதா ஸமிதி என்ற அமைப்பு வசதியளிக்கிறது.

ஸ்ரீ சாரதா ஸமிதியின் பணிகள் விரிவடைந்து மற்ற இடங்களிலும் அதன் பணி தொடர்கிறது. மதுரையில் ஸ்ரீ சாரதா ஸமிதி தொடங்கப்பட்டு, கல்வி நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறது.

மற்ற மரபில் வந்த மகான்களுடன்

ஸ்ரீமத் சுவாமிஜி அவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பின்பற்றி வழிபட்டு வந்ததற்கிடையில் மற்ற பெரியோர்களையும் போற்றித் துதித்து வழிபட்டு பிரசாரமும் செய்திருக்கிறார்கள். இது, மற்ற பல்வேறு துறவியர்களிடமிருந்து சுவாமிஜி அவர்களைத் தனித்து காட்டுகின்ற சிறப்பு அம்சமாகும்.

தபோவனத்தில் பெளர்ணமி பூஜையன்று ஒரு அன்பர் ஒரு கேள்வி கேட்டார். ரமண மகரிஷியை சந்தித்தபொழுது தாங்கள் என்ன கேட்டீர்கள்-இது கேள்வி.

அதற்கு சுவாமி பதில் : “நான் ரமண மகரிஷியை பார்த்ததும் தாங்கள் மேல்நிலை அடைந்த பொழுதும் கூட இன்னும் ஏன் இந்த கோலத்தில் இருக்கிறீர்கள்?” இப்படித்தான் கேட்டேன். அதற்கு ரமண மகரிஷி சொன்னார் :

“அந்த மேல்நிலையை தக்க வைத்து கொள்வதற்காக இப்படி இருக்கிறேன்” என்றார்.

மற்றுமொருமுறை “நீங்கள் துறவுக்கு வீட்டை விட்டு வந்த அப்போது எப்படி இருந்தீர்கள்? இப்போது எப்படி இருக்கிறீர்கள் ?” என்று கேட்டார்.

அதற்கு ரமணர் : “வீட்டை விட்டு எந்த நிலையில் வந்தேனோ அதே நிலையில் தான் இப்போதும் இருக்கிறேன்”என்றார்.

பழநியில் சாது சுவாமி என்றழைக்கப்படும் சுவாமிக்கு அதிக மதிப்பும் மரியாதையும் உண்டு. ஒருநாள் மலை மேல் தரிசினம் செய்து விட்டு அவர் படிகளில் இறங்கி கொண்டிருந்தார். அப்போது சித்பவானந்த சுவாமி மேலே போய்கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் சாது சுவாமிகள் அவரோடு சேர்ந்து மீண்டும் கோயிலுக்கு வந்தார்.

மூலஸ்தானத்திற்கு சுவாமியை அழைத்துச் சென்றார். முருகனுக்கு இராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. “உங்களுக்கு என்ன அலங்காரம் வேண்டும்?” என்று சாமியை பார்த்து கேட்டார் சாது சாமி.

“நமக்கு ஏற்றார் போன்ற அலங்காரம்” என்று சாமி பதில் சொன்னார்.

உடனே இராஜ அலங்காரம் கலைக்கப்பட்டது. பழநியாண்டவருக்குக் கோவணம் கட்டி விபூதி பூசினர். “இங்கே அமர்ந்து தியானம் செய்” என்று சாது சாமி சொன்னார். “யாரும் அரை மணிநேரம் உள்ளே செல்லக்கூடாது” என்று அர்ச்சகர்களிடம் உத்திரவிட்டார்.

கர்ப்ப கிருகத்தில் அருமையான தியானம் நிகழ்ந்தது.

 சாது சாமி சொல்வதை பக்தர்கள் அப்படியே நிறைவேற்றுவார்கள். ஒரு முறை பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்யவேண்டுமென்று சாது சாமிகள் கூற, 108 குடங்கள் எண்ணெய் லாரி லாரியாகத் தயிர், பால், பஞ்சாமிர்தம் என்று அபிஷேக சாமான்கள் மலையிலிருந்து அடிவாரம் வரை வழிந்து விட்டன.

இதைப் பார்த்த நம்முடைய சுவாமி இது அநாவசிய செலவு, பொருட்களை இவ்வாறு வீண்விரையம் செய்யக்கூடாது என்று சாது சுவாமிகளிடம் சொன்னார். அவர் அதை ஏற்றுக்கொண்டார். அதற்கு பின் அவ்வாறு அபிஷேகம் நடக்கவில்லை.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அருளுரைகளைத் தொகுத்து எழுதிய ஸ்ரீ மஹேந்திரநாத் குப்தா அவர்களைக் கல்கத்தாவில் சுவாமி சித்பவானந்த அவர்கள் சந்தித்திருக்கிறார். அவரிடம் அளவிலா மதிப்புக் கொண்டிருந்தார். ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ நாராயணகுரு (கேரளா) ஆகியோரையும் சந்தித்திருக்கிறார்.

வீர சாவர்க்கரின் நெருங்கிய நண்பரான ஸ்ரீ வ.வே.சு. ஐயருடன் சுவாமிஜி ஆழ்ந்த நட்பு பூண்டிருந்தார். சேரன் மாதேவியில் அமைந்துள்ள தமது குருகுலத்தை வ.வே.சு ஐயர் சுவாமிஜியிடம்தான் ஒப்படைத்துச் சென்றுள்ளார். இன்று அங்கு ஒரு தபோவனக்கிளை உருவாகியுள்ளது.

அச்சமறியாதவர்

கடுமையான சாதனைகள் மூலம் மகா சக்திகள் கைவரப்பெற்றும் அவை குறித்துப் பெருமைப்படாமல் “அவைகளையெல்லாம் நான் விட்டுவிட்டேன்” என்று ஒருமுறை சாமி கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நாத்திகம் தலைவிரித்தாடிய காலம் சமஸ்கிருதம் மொழியின் மீது வெறுப்பை வளர்த்துவிட்ட காலம். அந்த நேரத்தில் வாராது வந்த மாமணியாக சுவாமி சித்பவானந்தரின் அந்தர்யோகம் தமிழருக்கு யோகம் தியானம் போன்றவற்றின் மாண்புகளை விளக்கியது.

அவரது தவம் அவருடைய சொற்கள் மூலமாக வெளிப்பட்டது. அலங்காரம்
இல்லாத ஆரவாரம் இல்லாத அவரது சொற்கள் உள்ளத்தின் அடிவாரத்திலிருந்து புறப்பட்டு கேட்பவர்களின் நெஞ்சங்களை நேராக சென்று பதிந்தது.

அவர் எழுதியுள்ள நூல்கள் லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் ஒளிவிளக்கேற்றி வருகிறது. அவரது குருகுல கல்வி கூடங்களில் கல்வி பெறும் குழந்தைகள் சத்துவக்குணம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவரிடம் கலைமகளும், அலைமகளும், மலைமகளும் குடிகொள்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.

எங்கும் பரவும் குருகுலக் கல்வித் திட்டங்கள்

சுவாமிஜி நமக்கு அருளிய குருகுல நடைமுறைகள் பல பள்ளிகளிலும் ஆர்வத்துடன் பின்பற்றப்படுகின்றன. அநேக பள்ளிகளும், கல்லூரிகளும் பண்பாட்டு உணர்வை ஊட்டும் பயிற்சிகளைக் கொடுத்து வருகின்றன. விளம்பரம் பண்ணாது அடக்கத்துடன் ஏராளமான காரியங்கள் தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன.

திருப்பராய்த்துறை தபோவனம் சென்று வருபவர்களுக்கு சகஜமாக ஒரு அனுபவம் கிடைத்துக் கொண்டிருக்கும். யார், எப்போது சென்றாலும் வாங்க, சாப்பிட்டு விட்டுப் பேசலாம் இப்படி ஒரு அன்பான உபசரிப்பு அங்கே உண்டு!

இந்தக் குணம் – சுவாமிஜி ஏற்படுத்திய அந்தப் பண்பு -அவர்களின் தொடர்புக்கு வந்த அத்தனை இல்லங்களிலும் அப்படியே இன்றும் பிரதிபலிக்கின்றது. இல்லத்தைக் கோவிலாக்கி மனிதர்களை தெய்வ நிலைக்கு உயர்த்த சித்பவானந்த மகான் மேற்கொண்ட முயற்சிகளின் பலனை இன்று எங்கும் காண முடிகிறது.

அவரின் தொடர்புள்ள அத்தனை இல்லங்களிலும் தியானம்- நாம ஜெபம் எப்போதும் உண்டு.சித்பவானந்த சுவாமிகள் அருளியபடி காலையில் எழுந்து தினசரி தாய் தந்தையரை வணங்கும் சிறுவர்கள் உள்ள குடும்பங்களையும் காணலாம்.

விவேகானந்தர் எண்ணிய எண்ணம் இனிமேல் நடைபெற உள்ளது. மாபெரும் அலை ஒன்று தமிழகத்திலிருந்து தான் புறப்பட்டு நாடு முழுவதும் பரவி உலக நாடுகளுக்கும் வழிகாட்டும்.

சுவாமிஜி நம்முடன் வாழ்ந்த வாழ்க்கை முறையை நாமும் கடைபிடித்து தெய்வத்திற்கும்,தெய்வக் குழந்தைகளாகிய தேசமக்களுக்கும் சேவை செய்து நம்முடைய பண்பாடு உலக முழுவதும் பரவ நாம் ஒவ்வொரும் செயல் படுவோமாக !

சித்பவானந்தர் எனும் ஆலமரம் தான் வளர்த்த விழுதுகளிடமும், விதைத்து வரும் விதைகளிடமும் இருந்து உடலளவில் விடைபெற்ற நாள் நவம்பர் 16. அந்நாளில், அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையை நினைவுகூறவும், வழிமுறைகாட்டும் அவர் புத்தகங்களைப் படித்துச் சிந்திக்கவும் நாம் நேரம் ஒதுக்கலாமே.

(தொடரும்…)

One Reply to “[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *