குழவி மருங்கினும் கிழவதாகும்

தமிழின் நீண்ட இலக்கியப் பரப்பில் பல காலகட்டங்கள் உண்டு. அவற்றில் சிற்றிலக்கிய வகைகளின் காலம் என்பதொன்றுண்டு. பத்தியுணர்வினால் சிற்றிலக்கியங்கள் பெருகின; பக்தியால் சிற்றிலக்கியங்ககளால் வளம் பெற்றன. அத்தைகய சிற்றிலக்கியங்களில் பிள்ளைத்தமிழ் என்னும் பிள்ளைக்கவி குறிப்பிடத்தக்கது. சிற்றிலக்கிய வகைகளில் பிள்ளைத்தமிழ் நூல்களே எண்ணிக்கையில் மிகுந்துள்ளன. பிள்ளைத்தமிழ் சங்ககாலத்திலிருந்து தோன்றி வளர்ந்த ஒரு வரலாற்றை உடைய இலக்கிய வகை எனலாம்.

தொல்காப்பியர் புறத்திணையியலில், ‘பாடாண் திணை’ என்னும் செய்யுள் மரபுக்கு இலக்கணம் கூறினார். பாடாண் திணை என்றால் பாடப்பட்ட ஆண்மகனின் ஒழுகலாறாகிய திணை எனப் பொருள்படும். திணை என்றால் ஒழுகலாறு அல்லது ஒழுக்கம். ‘பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே’ என்பது தொல்காப்பிய நூற்பா.

கைக்கிளை என்பது ஒருதலைக் காதல். தலைவன் தன்னைப் பிறர் போற்றுதலும் புகழுதலும் வேண்டும் என விரும்புகின்றான்; அவனைப் பாடும் புலவன் செல்வமோ முத்தியோ எதோ ஒரு பரிசிலை விரும்பிப் பாடுகின்றான். பாடுவோனாகிய புலவன், பாடப்படுவோனாகிய தலைவன் இருவர் கருத்தும் வேறாதலினால் இது கைக்கிளைப் புறனாயிற்று.

இவ்வாறு தகுதியுடைய ஆண்மகனைப் புலவர்கள் எந்தெந்த நிலைகளில் பாடுவர் எனவும் தொல்காப்பியர் எடுத்துக் காட்டுகின்றார். அவற்றில் ஆண்மகனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடுவதும் ஒன்று. இவ்வாறு பாடும் பாடாண் திணை, மக்கள் தேவர் இருவருக்கும் உரித்து எனவும் தேவரைப் பாடும்போது ‘புரைதீர் காமம்’ ஆகப் பாடப்பெறும் என்றும் தொல்காப்பியர் கூறினார்.(பொருள் 81) (காமம் என்பதற்கு விருப்பம் என்பது பொருள்)

‘புரை’ என்றால் உயர்ச்சி. தெய்வத்தினிடம் முத்தியோ, சுவர்க்கமோ என மறுமைப் பயன் வேண்டாமல், இம்மையில்பெறும் பயன்களை வேண்டிப் பாடுதலாதலின் ‘புரைதீர் காமம்’ எனப்பட்டது. ‘உயர்வினின்றும் நீங்கிய விருப்பம்’ என்பது பொருள்.’ புரைதீர் காமப்’ பாடாண் திணையில், பாட்டுடைத்தலைவன், – ,அவன் குழந்தைப் பருவங் கடந்து, இளைஞனாகவோ முதியனாகவோ இருப்பினும், குழந்தையாகக் கருதியே பாடப் பெறுவன். இதற்கு விதி ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ எனும் நூற்பாவாகும். (பொருள் 84)

முழுமுதற்றெய்வத்திற்குக் குழந்தைப் பருவம் என ஒன்றில்லை யாயினும் அக்கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகப் பாடும்போது, கடவுளே யாயினும், மக்கட் குழந்தையாகத்தான் பாவித்துப் புகழ்ந்து பாடுதல் வேண்டும் என உரையாசிரியர் விளக்கம் கூறினர்.

குழந்தையாக பாவிக்கும்போது, குழந்தையை ‘நலுங்காமல்’ காக்க வேண்டும் எனத் தெய்வத்தினிடம் ‘காப்பு’க் கூற வேண்டும். தெய்வமே குழந்தையாக இருக்கும்போது யாரிடம் காப்புக் கூறுவது? ஆதலால் மக்கட் குழந்தையாகப் பாவித்துப் பாடுதலேயன்றித் தெய்வக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் மரபு இல்லை.

யாக்கையில் பிறவாத சிவபரம்பொருளை ஒழித்துப் மகவாகப் பிறந்த கதைகளையுடைய அனைத்துத் தெய்வங்கட்கும் பிள்ளைத் தமிழ்நூல்கள் தோன்றின.

பரம்பொருளாகிய முழுமுதற்றெய்வம் மனவாக்கிற்கு எட்டாதது; நிஷ்களம்; குணங்குறி அற்றது. இப்படிப்பட்ட கடவுளை ஞானியர் வேண்டுமானல் அறிந்து மோன நிலையில் அனுபவிக்கலாம். நம்மைப் போன்ற குறை அறிவினர், இல்லற வாழ்க்கையில் உழன்று கொண்டிருப்பவருக்கு ஏதோ ஒரு வடிவத்தினை உடையவரே மகிழ்ச்சியும் இன்பமும் அளிப்பவராவர். அத்தகையோரெ நம் அன்பைப் பெற்று நமக்கு இன்பத்தை அளிப்பவராவர்..

உருவ வழிபாட்டில் பெறும் பெரும் பயனை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்னும் பெரியார், பழநித் திருவாயிரம் என்னும் நூலில் தம் அனுபவமாகக் கூறுகின்றார்.

“அடியும் முடியும் நடுவுமிலா அகண்டபரம் பொருளதென்
                      றறிவேனியான் ஆயினும்
கடிகமழ் மென்மலர்ப் பூசைக்கு அருள்செயும்மாண்புஅதற்
                    கில்லையால் கருதமாட்டேன்
பொடியதனால் முழுக்காட்டிக் கீளொடு வெண்கோவணம்
                    புனைந்து கையில்
தடிபிடித்துப் பழனி வெற்பில் குலவும் அவன்றனை
                    மறவேன் சரதமே”

(“இறை, அடியும் முடியும் நடுவிம் இல்லாத அகண்ட நிஷ்களமான பரம்பொருள் என்று நான் நன்கு அறிவேன். அத்தன்மையதாக இருந்தாலும் உளமுருகி நீரும் பூவும் கொண்டு நான் அன்புடன் செய்யும் பூசையை ஏற்றுகொண்டு அருள்செய்யும் பெருமை அந்த நிஷ்களப் பிரமத்துக்கு இல்லை. ஆகவே, அந்த நிஷ்களப் பரப்பிரமத்தை நான் போற்ற மாட்டேன். திருநீற்று மேனியனாய், கீளொடுவெண்கோவணம் தரித்துத் தண்டினைக் கையில் ஏந்தி, பழனி வெற்பில் பொலிவுடன் விளங்கும் தண்டாயுதபாணியாகிய அவன்தனை நான் என்றும் மறவேன்’).

பெரியோர்களாகிய ஞானியர்கள் நிஷ்கள பிரம்ம அருவத்தைக் காட்டிலும் சகள உருவமே தியானத்திற்கும் அன்புசெய்து வழிபட்டு உய்வதற்கும் ஏற்றது என்று அறிந்து அதனை வலியுறுத்தியுள்ளனர். இந்த அனுபவத்தில் தலைநின்றவர் பெரியாழ்வார். கண்ணனைப் பாடும்பொழுது அவர் யசோதைப் பிராட்டியாகவே மாறிவிடுகின்றார். பாசத்துடனும் உயிர்ப் பிணைப்புடனும் ஒரு குழந்தையைப் பேணி வளர்க்கும் தாயின் மனநிலையில் அவர் பெற்ற சுகம்தான் எத்துணை எத்துணை.!

‘மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்” என்றார் திருவள்ளுவர்.(65) ஒருவனது மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுவது என்று பொருளுரைத்தார் பரிமேலழகர். மக்களைத் தாம் சென்று தீண்டுவதைக் காட்டிலும் மக்கள் தாமாகவே வந்து தம்மைத் தீண்டுதலே பேரின்பம் என்றும், அதிலும் குழந்தைகள் முதுகுப் புறத்தே வந்து தம்மைக் கட்டிப் பிடித்தலே பெற்றோருக்குப் பேரின்பம் விளைப்பது என்பதையும் அனுபவமாகக் கண்டவர் பெரியாழ்வார்..

கண்ணன் முதுகுப் புறத்தே வந்து புல்குகின்றான். அப்படிப் புறம்புல்குகின்றபோது, அவனுடைய குறியினின்றும் சொட்டும் நீர்த்துளிகள் முத்துக்கள் போலிருக்கின்றன் அவ்வாறு நீர்துளிக்கத் துளிக்க என் குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான் என்று ஆழ்வார் பாடுகின்றர்.

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்கவென்
குட்டன் வந்தென்னைப் புறம்புல்குவான்
கோவிந்த னென்னைப் புறம்புல்குவான்

தாயன்பில் அசூயைக்கோ அருவருப்புக்கோ அநாச்சாரத்திற்கோ இடமில்ல. அன்பின் முதிர்ச்சியாம் பத்தியிலும் அந்நிலையே.

சுவையால் அமிழ்தத்தைக் காட்டிலும் மிக இனிமையுடையது, தம்முடைய மக்களின் சிறு கையால் அளாவப்பட்ட சோறு என்றார், தெய்வப்புலவர்.(குறள் 64) அதனை அனுபவித்து, அறிவுடை நம்பி என்னும் சங்ககாலப் பாண்டிய மன்னன். மிகப்பெரிய செல்வம் பலவற்றையும் அடைந்து, பலருடனே கூடவுண்ணும் மிக்க செல்வத்தையுடையராயினும், உண்ணுங்காலத்தில் இடையிடையே வந்து “ குறுகுறு நடந்து சிறுகை நீட்டி, இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், மயக்குறு மக்களை இல்லோர்” வாழ்க்கையின் பயன் இழந்தவர்களாதலால் தாம் வாழும் நாளும் இல்லாதவர்களாவர் என்றார். ஐந்தெழுத்தைச் சொல்லாத நாள் பிறவாத நாள், பாடையில் போகும் நாள் என்றெல்லாம் நம்பியாரூரர் கூறியதைப் போல ‘மயக்குறு மக்களை’ இல்லோர் வாழ்க்கை, ‘இல்லாத வாழ்க்கையே’ , என்றான் அப்பேரரசன்.

‘மயக்குறு மக்கள்’ என்பதற்கு, அறிவை இன்பத்துடன் மயக்கும் புதல்வர் என்றது, புறநானூறின் பழைய உரை. நம்மைப் போன்ற அறிவுடையவர்கள்(!!) ‘குழந்தை சோற்றைக் குழப்புகின்றது, இதனை எப்படி உண்ணுவது, இதை அப்புறம் எடுத்துச் செல்லுக, உண்ண விடாமல் தொல்லை தருகின்றது” என்றெல்லாம் கூறுவோம். ஆனால், பாண்டியனுக்குத் தன் குழந்தையின் செயல் (அநாசாரம் என அறிவுடையோரால் கருதப் படுவது) இன்பமே அளிக்கின்றது. அறிவை மயக்கி இன்பமளிப்பதால் ‘மயக்குறு மக்கள்’ என்றார்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் மெய்யின்பத்தை அறவே துறந்த ஞானி. உலகியல் இன்பப் பசையீரத்தை அறவே நீக்கிய துறவி. அவர் ஒரு விபத்தில் கால் முறிந்து மருத்துவமனையில் இருந்தபொழுது முருகப்பெருமான் ஒரு மழவிளஞ்சிறு குழவியாய் அவருக்குக் குழந்தையின் ஸ்பரிச இன்பத்தை அளித்து, அவ்வறண்ட துறவியையும் ‘வேற்குழவி வேட்கை’யைப் பாட வைத்தான் என்றால், குழந்தையின் மெய்யைத் தீண்டுவதனால் உண்டாகும் இன்பம் தெய்வீகமான சுகம் அல்லவா?

மழவிளங்குழவி தன்னைப் பெற்ற தாயைப் பெருமை கொளச் செய்கின்றது.. கண்ணனின் குறும்புகளில் பெருமை கொள்ளும் தாயன்பு யசோதை கண்ணனைப் பற்றி ஆயர் மகளிரிடம் நொந்துகொண்டு பேசும் மொழிகளில் தெரிகின்றது. வார்த்தைகள் நொந்து கொள்ளுவதாக இருந்தாலும் அதில் அவனை மகவாகப் பெற்ற பெருமை தொனிக்கின்றது.

ஆயர் பெண்களிடம் கண்ணனைப் பற்றி யசோதை குறை சொல்வதைப் போலப் பேசுகின்றாள். ’நீங்கள் எல்லோரும் பருவத்துக்குத் தகுந்த சேஷ்டிதங்களையுடைய பிள்ளையைப் பெற்று வளர்க்கின்றீர்கள். அதனால் பூர்ணைகளாக’ மகிழ்ச்சியோடு இருக்கின்றீர்கள். ஆனால் என் மகனோ வயதுக்கு மீறிய சேஷ்டிதங்களை உடையவனாக் இருகின்றான். அவன்,

“கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்லில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமை யால்நான் மெலிந்தேன் நங்காய்’

என்னும் யசோதையின் வெளிப்படையான பேச்சுக்கு மாறான, தன் மைந்தனின் சேஷ்டிதங்களைக் குறித்த கர்வம் நுண்ணுணர்வுக்குப் புலனாகும். தன் பிள்ளையின் இயல்புகள் பற்றித் தாய் கொள்ளும் கர்வத்தினை பக்தி உணர்வுடன் வெளிப்படுத்தும் பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் சிறக்கின்றன.

மாதவச் சிவஞான முனிவர் அவர் பாடியுள்ள குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் பாயிரச் செய்யுளொன்றில் இக்கருத்தை மேலும் தெளிவாக்குகின்றார்.

அமுதாம்பிகை எனும் பெயருடன் குளத்தூரில் வீற்றிருந்து அருள்புரிவது மனம் வாக்கு காயங்களால் அறிய முடியாத சிற்சத்தியே. ‘சத்திதன் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்’ என்றும், “அருளது சத்தியாகும் அரன்றனக்கு அருளையின்றித் தெருள் சிவமில்லை” எனச் சிவஞான சித்தியார் கூறுகின்றபடி, சிவத்தைப் போலவே சத்தியும் அகண்டம்; நிஷ்களம். ஆயினும் மன்பதைகள் உய்யத் திருவுளம் கொண்டு, மலையரையன் (இமயமலைக்கு அரசன்) மலயத்துவச பாண்டியன் முதலோரிடத்தில் அவதரித்து மடப்பிள்ளையாய் வருதலினால், இனம் பற்றி, மக்கட் குழந்தைகளைப் போலப் பாராட்டிச் சீராட்டி வாழ்த்திப் பாடுவர்.

அவ்வாறு அவர்கள் பாராட்ட எடுத்துக் கொண்ட கவி, வித்தாரம் என்பதாகும். வித்தாரகவி என்பவன் கதை முதலாகிய செய்யுளைப் பாடும் வன்மையுடையானென்று யாப்பருங்கல விருத்தி ஆசிரியர் கூறுவார். அக்கவிஞனுடைய வித்தாரமான கவித்துவ ஆற்றல் பிள்ளைத் தமிழ் நூல்களில் வெளிப்படும். மிகச் சுவைபட பேசுபவனை ‘வித்தாரமாக’ப் பேசுகிறான் எனக் கூறல் உலக மரபு.

சாத்திரம் தோத்திரம், உலகியல் முதலிய கருத்து எதுவானாலும் சுவைபட வித்தரமாகப் பிள்ளைத்தமிழ்க் கவிஞர் பாடுவார். இவ்வாறு பாடும் கவிஞரே சிறந்த பிள்ளைத் தமிழ்க் கவிஞர் எனப் போற்றப்படுவார். பிள்ளைத் தமிழ்க் கவிஞர்கள் சந்தக் கவிஞர்களாகவும் திகழ்வர். பல்வித ஓசைத்தமிழ் இன்பத்தைப் பிள்ளைத்தமிழ்க் கவிதைகள் வாயிலாக அனுபவிக்கலாம். தமிழில் வன்கணம் மென்கணம் இடைக்கணம் என மூவகை எழுத்து இனங்கள் அவற்றின் ஒலிக்கேற்ப அமைந்திருக்கின்றன. அவ்வெழுத்துக்கலான் அமைந்த பதவோசையும் சந்த யாப்போசையும் அறியவியலாத தமிழன் தமிழின்பத்தின் பெரும்பகுதியை இழந்தவனேயாவான்

வித்தாரகவியிற் சிறந்தது பிள்ளைக்கவி. அது ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படும். இருவகைப் பிள்ளைத் தமிழுக்கும் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி எனும் ஏழு பருவங்கள் பொதுவாகும். சிற்றில், சிறுதேர், சிறுபறை எனும் பருவங்கள் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குச் சிறப்பு; அம்மானை, ஊசல், நீராடல் என்பன பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குச் சிறப்பு.

பிள்ளைத்தமிழாகிய வித்தார கவி குழவித்தமிழாக எளியநடையில், பழகு தமிழில் இருப்பது சிறப்பு.. பெற்றோருக்கு உவகையூட்டும் குழந்தையின் இயல், சொல், செயல் முதலியனவற்றைப் பாட்டுடைத்தலைவன்/ தலைவிக்கும் பொருந்துவதாகப் பாடப் பெறும்.. தன் குழந்தையைத் தெய்வமாக அல்லது தெய்வத்தின் அருளால் தனக்குக் கிடைத்ததாகக் கருதும் தாயின் மனநிலை, அக்குழந்தையின் வளர்ச்சி, விளையாட்டு, குறும்பு, முதலியவற்றில் இன்பங்கண்டு திளைக்கும் மனோபாவம், அக்குழந்தையைப் பெற்றதனால் அவளடையும் கருவம் பெருமை முதலியன அப்பிள்ளைத்தமிழ் நூல்களில் கண்டு நாமும் அனுபவிக்கலாம்.

பிள்ளைத் தமிழ்ப் பாடல்களை கவி கூற்றாக அன்றி, நற்றாய் அல்லது செவிலித்தாய் கூற்றாகவும் கொள்ள வேண்டும். ஆண்பாற் பிள்ளைத் தமிழில் சிற்றிற் பருவம் மகளிர் கூற்றாக அமையும்.

சிவஞான முனிவர், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அவையடக்கத்தில் “”இளம்பருவ விளையாட்டை நோக்குழித் திருவுருவிடத்து ஆசை மிகுதியுண்டாம், என்பதால் வித்தார கவிக்கெலாம் முன்னுற இயன்ற பிள்ளைக் கவியிதை — — — புகலலுற்றேன்” என்கிறார். சிவசத்தியை சொரூபநிலையில் நோக்குவதைக் காட்டிலும் பெண்குழந்தையாகக் கண்டு அவளது இளம்பருவ விளையாட்டை நோக்கும்போது , அவளிடத்து ஆசை மிகுதியாக உண்டாகும், அந்தப் பிள்ளைப் பாச உணர்வே அன்பாகவும் பக்தி வெளிப்பாடாகவும் பக்தி அனுபவமாகவும் அமையும் என்பதால் இந்த வித்தாரகவியைப் புகலுதல் உற்றேன். என்கிறார்.

குமரகுருபரசுவாமிகள், துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள், திருப்போரூர் சிதம்பரசுவாமிகள், மாதவச் சிவஞான முனிவர் முதலிய ஞானியர் பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடியதன் காரணம் இறைவனைப் பிள்ளையாகவும், அந்தப் பிள்ளையைக் “கற்பினிற் பெற்றெடுத்த தாயாகவும்” (திருவிசைப்பா திருக்களந்தை ஆதித்தேச்சரம்) தம்மைப் பாவித்துக் கொள்வதனால் பெறும் இன்ப அனுபவமேயாகும். எனவே, இவ்வகை இலக்கியம் பிள்ளைப் பாசத்தையும் குழந்தைகளின் இயல்புகளையும் வெளிப்படுத்தும் குறியீடுகளை உடையதாய், எளியநடையில் , இனிய சந்தயாப்பில் அமைதல் சிறப்பு.

இனி பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் சில மரபுகளைப் பார்ப்போம். இப்பிரபந்தம் பத்துப் பருவங்களைக் கொண்டது என முன்னமேயே கண்டோம். முதற்பருவம் காப்புப் பருவம். இது குழந்தையின் மூன்றாம் மாதத்தில் செய்யப் பெறும் சடங்கு ஆகும் பாட்டுடைத் தலைவன்/ தலைவியை காக்குமாறு தெய்வங்களை வேண்டுதல் பிள்ளைத் தமிழின் காப்புப் பருவமாகும்.

‘அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள்’ குழந்தையாய் வந்துதித்தது என்று கொள்ளுவதால் மானுடக் குழந்தையைக் காக்க வேண்டுதல் போல அந்தக் கடவுட் குழந்தையைக் காக்கக் கடவுளரை வேண்டுதல் காப்புப் பருவம்.

காப்புப் பருவத்தில் பாட்டுடைத்தலைவனாகிய குழந்தையைக் காக்கும்படி முதலில் காத்தற் கடவுளாகிய திருமாலை வேண்டுதல் கவிமரபாக உள்ளது. அதன் பின்னர்தான் சிவபெருமான் உமை முதலிய கடவுளர்களை வேண்டும் பாடல்கள் அமையும்.

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் காப்புப்பருவத்தில் ‘கணிகண்ணன் போகின்றான்’ என்ற திருமழிசையாழ்வாரின் பாடலைக் கேட்ட பெருமாள் அவருடன் சென்ற வரலாற்றைப் போற்றும் பாடல் சைவத் தமிழ் ஆர்வலர்களால் சொல்லிச் சொல்லி இன்புறுவ தொன்றாகும்.

திருமால் தம் மார்பில் காடுபோல் துழாய்மாலையை அணிந்துள்ளார். அதிலிருந்து வழியும் தேன் வெள்ளம் பாய்தலால் வழியெல்லாம் சேறாய் கழனிபோலாக,. அத்தகைய சேறான வழியில், கமலத்தணங்காகிய திருமகளின் கை தன் கையாகிய அணையை முகந்து செல்ல ( திருமால் தம் கையை அணையாகக் கொண்டுதான் பள்ளி கொள்கிறார். அதனால் அது தலையணை போல் கையணை ஆயிற்று. திருமாலின் கைக்குள் திருமகள் தன் கையை நுழைத்துத் தழுவிச் செல்வதால் அது முகந்து செல்வதாயிற்று) காதலர்கள் கைகோத்துதுச் செல்வதை மனக் கண்ணில் காண்க.,

வளைந்த படங்களைக் கொண்ட பாம்பாகிய சுருட்டப் பட்ட பாய் தன் பிடரியை வருத்த, பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல் எனத் திருமாலை இந்நூல் போற்றுகின்றது.

கணிகொண்ட தண்டுழாய்க் காடலைத் தோடுதேங்
கலுழிபாய்ந் தளறுசெய்யக்
கழனிபடு நடவையிற் கமலத் தணங்கரசொர்
கையணை முகந்துசெல்லப்
பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப்
பணைத்தோ ளெருத்தலைப்பப்
பழமறைகள் முறையிடப் பந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே

(கணி- கண்ணி, மாலை. தேன்கலுழி – தேன் வெள்ளம். அளறு – சேறு. கழனி – வயல். நடவை – நடக்கின்ற வழி.)

திருமகள் தன் கையினால் திருமாலின் கையினைக் கோத்துக் கொண்டு செல்லும் அழகை, கவிஞர், ‘ஓர்கையணை முகந்து செல்ல’ என்றார்., சுருட்டித் தோளில் எடுத்துச் செல்லப்படும் பாம்பாகிய பாய் , கோல் போன்று நீண்டு திடமாக இராது; நெகிழ்ச்சியும் துவளுதலும் கொண்டு இருக்கும். அதனால் திருமால் நடக்கும் போது அது, ஒவ்வொரு அடி வைக்கும்போதும் முதுகைத் தாக்குகின்றது. அதனால், தோளையும் பிடரியையும் அலைப்பதாகவும். என்னை விட்டுப் பைந்தமிழ்ப் பின் போகின்றாயே என வடமொழிமறை முறையிடுவதாகவும் கூறும் கவிநயம் நினையுந்தோறும் இன்பளிக்கும்..ஆழ்வார் சொன்ன வண்ணம் செய்த பெருமாளின் பெருமையை இப்பிள்ளைத்தமிழ்க் காப்புச்செய்யுள் வருணிக்கின்றது.

சிவபெருமான் உலகத்தைக் காக்கும்பொருட்டுத் தாமே திருமாலாக உருவந் தரித்துக் கொண்டார் என்றும், தன்னிலிருந்து திருமாலைத் தோற்றுவித்தார் என்றும் கோவிந்த ரூபினி என இலலிதா சகஸ்ரநாமம் கூறுமாறு சிவசத்தியின் ஆண்வடிவம்தான் திருமால் என்றும் கூறும் வழக்கம் உண்டு.

சைவசமயத்தில் சிவபேதங்கள் ஒன்பது என்றும் அவற்றுள் ஒன்று திருமால் வடிவம் என்றும் கூறப்படும். பிள்ளைத் தமிழ் நூல்களில் இக்கருத்துக்களுக்கு ஏற்பச் சிவமே சம்பு பட்சத்தில் திருமாலாகக் காத்தல் தொழிலைச் செய்கிறதெனக் காப்புப் பருவத்தில் வணக்கம் கூறப்படுதலைக் காணலாம்.

பூத்த கொன்றைச் சடைமுடியைப்
பொலியும் மணியின் முடிமறைக்கப்
புலியின் தோல்சூ ழரைதனில்
பொன்னின் இழையார் பட்டுடுத்து
மூத்த மலையின் திருமகளே
முளரிவைகும் மகளாக
முழங்கும்பாயல் கடல்படுத்து
முகிழ்க்கும் நினைவால் எவ்வுலகும்
காத்தல் தொழில்செய் பரம்பொருளின்
கமலம் நிகர்க்குங் கழலிணையைக்
கருத்தி லிருத்தித் தோத்தரித்துக்
கடிமா மலர்கொண்ட் டருச்சிப்பாம்

(அருவச் சித்தர் பிள்ளைத் தமிழ்)

( தன்னுடைய கொன்றைபூக்கள் தங்கிய சடைமுடியை ஒளிமிக்க மணிமுடியால் மறைத்துக் கொண்டார்.; புலித்தோல் சூழ்ந்த திருவரையில் பீதாம்பரப் பட்டாடை தரித்துக் கொண்டார். மலையரசனின் திருமகளாராகிய பார்வதியே செந்தாமரையில் வைகும் இலக்குமியாக அமைய, பாம்பணையில் ஒலிக்கின்ற பாற்கடலில் அறிதுயில் கொண்டு காத்தல் தொழிலைச் செய்யும் பரம்பொருளாகிய சிவனின் திருவடிகளை அருச்சிப்பாம்)

மற்றொரு பிள்ளைத்தமிழ் நூல் திருமால் சைவர்களால் போற்றப் பௌறுவதற்குரிய காரணங்களைக் கூறி வணங்குகின்றது.

பெருந்தே னிறைக்கும் நறைக்கமலம்
பிரியா மாத ரிருவிழியாப்
பிறங்கு முமையா ளுருவாகிப்
பெருமான் பாகம் பிரியாமல்
இருந்தே யுலகம் புரந்தருளும்
இலங்கும் ஆழிப் படையானை
இம்மைச் சீவன் முத்திதரும்
எங்கள் சைவ முதற்குருவை
மருந்தே ரமரர் தமக்குதவும்
வண்மை மாறாக் கருமுகில்”
(எட்டிகுடி முருகன் பிள்ளைத்தமிழ்)

‘தேன் நிறைந்த வெண்டாமரை செந்தாமரை மலர்களைப் பிரியாத சலைமகளும் திருமகளும் தன்னுடைய இருவிழியாகத் திகழும் உமையாளின் திருவுருவானவர் திருமால். சிவசக்தியாகிய திருமால் தன் ஆழிப்படையால் உலகத்தைக் காத்தருளுகின்றார். இம்மையிலேயே சீவன் முத்திதரும் சைவ முதற்குருவாகத் திகழுகின்றார்.(சிவபூசையில் குருவரிசையில் திருமாலும் இடம் பெறுகின்றார் அத்தகைய வண்மை மாறாக் கருமுகிலை வணங்குவோம்”.

பிள்ளைத்தமிழ் காப்புப் பருவத்தில் காத்தல் தொழிலுக்குரிய திருமாலேயன்றி, திருமகள், கலைமகள், சிவசத்தி, விநாயகர், சப்தமாதர், ஐயனார், பைரவர், வீரபத்திரர், துர்க்கை, தமிழ்த்தெய்வம் முதலிய கடவுளரும் பாட்டுடைத் தலலவனை/தலைவியைக் காக்க என்று போற்றப்படுவர்.

சேக்கிழார் திருஞான சம்பந்த நாயனார் புராணத்தில் பிள்ளைத் தமிழில் கூறப்படும் பத்துப் பருவங்களிலும் காழிப்பிள்ளையார் வளர்ந்ததாகப் பாடுகின்றார். காப்புப் பருவத்தில், அவருடைய பெற்றோர் அவருக்கு வேறு காப்புக்கள் மிகை (தேவையில்லை) என்று திருநீற்றுக் காப்பு ஒன்றே உண்மையான காப்பு என்று நீறுதிரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்” என்று பாடினார்

“ஆறுலவு செய்யசடை ஐயரரு ளாலே
பேறுல கினுக்கென வரும்பெரி யவர்க்கு
வேறுபல காப்பும்ம்ம்கை யென்றவை விரும்பார்
நீறுதிரு நெற்றியில் நிறுத்திநிறை வித்தார்”

குழந்தைக்குக் மந்திரித்த காப்புக் கட்டுதல், ஏடெழுதிக் கட்டுதல் ஐம்படைத் தாலி கட்டுதல் போன்ற காப்புக்களை உலகினர் செய்வர். அவையெல்லாம் இறைவன் அருளால் பிறந்த பிள்ளையாருக்கு மிகை என்றதனால், திருநீற்றினைக் குழந்தையின் நெற்றியில் நன்கு படிந்து நிற்குமாறு நிறையப் பூசுவித்தனராம். திருநீறு எப்படி ஏன் அணிந்துகொள்ள வேண்டும் எனச் சேக்கிழார் இங்குக் கூறியருளினார்.

ஆண்பாற் பிள்ளைப் பாட்டின் வகைக்கு வழிகாட்டிய பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு, பிள்ளைத்தமிழ் மரபுக்கு வழிகாட்டியாகக் காப்புப் பருவமாக அமைந்தது. பின்னர், யசோதை கூற்றாக, “கண்ணா புருஷ ஸூக்தம் முதலிய ரிக்குகளோடு சுத்த ஜலத்தை சங்கிலே கொண்டு வைதிகப் பிராமணர்கள் உனக்கு ரக்ஷையிடுவதற்கு வாரா நின்றார். வந்து ஏற்றுக் கொள் என வைதிக முறையில் காப்புச் செய்தலை,

“இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில்மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்திநின்று தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
திருக்காப்பு நானுன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்கின்றொளி கொள்ள ஏற்றுகேன் வாராய்”

ஆழ்வார் பாடியருளினார்.

சேக்கிழாரைப் பின்பற்றிப் பின்பற்றிய புலவர்கள் தமிழ்சைவ நெறிக்கு அடையாளமாகிய திருநீறு, திருவைந்தெழுத்து, திருவுத்திராக்கம் ஆகியவைபாட்டுடைத் தலைமக்களாகிய குழந்தையைக் காக்க எனக் காப்புப் பருவத்தில் பாடினர்.

(இன்னும் வரும்)

[படங்கள் நன்றி: gunathamizh.blogspot.com]

4 Replies to “குழவி மருங்கினும் கிழவதாகும்”

  1. Beautiful !

    முருகு என் முதுகேறி கட்டி அணைத்தது போல் உணர்கிறேன்.

    .

  2. \\\\\\ திருநீற்று மேனியனாய், கீளொடுவெண்கோவணம் தரித்துத் தண்டினைக் கையில் ஏந்தி, பழனி வெற்பில் பொலிவுடன் விளங்கும் தண்டாயுதபாணியாகிய அவன்தனை நான் என்றும் மறவேன்\\\\\\\

    மஹாசய, வ்யாசத்தைப் வாசிப்பதெல்லாம் அடுத்த பக்ஷமே. வேலேந்திய புன்சிரிப்புடன் கூடிய பழனிப்பதிவாழ் பாலகுமாரனின் சித்திரம் இந்த வ்யாசத்தை வாசி வாசி என தூண்டியது என்றால் மிகையாகாது. அவனை நினைவிலிருத்தி படிக்கப் படிக்க மேற்கண்ட வாசகத்தை வாசிக்குங்கால் தேசாந்திரியான எமக்கு எம் குலதெய்வத்தைப் படியேறி தரிசித்தது போன்ற ஒரு உணர்வுடன் கண்கள் பனித்ததற்கு தலையல்லால் கைமாறறியேன். வள்ளிச்சன்மார்க்க வ்யாசமளித்த தேவரீரிடமிருந்தே இப்படி ஒரு வாசகம் எதிர்பார்க்கவியலும் போலும்.

    \\\\ மக்களைத் தாம் சென்று தீண்டுவதைக் காட்டிலும் மக்கள் தாமாகவே வந்து தம்மைத் தீண்டுதலே பேரின்பம்\\\\

    எங்கள் திருப்புகழ் சபையில் “முத்துக்குமாரனடி அம்மா” என்றொரு பாடல் பாடுவதுண்டு. பாடல் புனைந்த அருளாளர் யார் அறியேன். முன்னமும் இது பற்றி பதிவு செய்துள்ளேன். கீழே திரும்ப கொடுத்துள்ளேன்.

    நெஞ்சம் உருகி நின்று நீயே துணை என்று
    கெஞ்சி அழைத்தால் வருவான் குமரன்
    கேட்பதெல்லாம் தருவான்

    இதை எந்த இடத்தில் கேட்டாலும் மீனுலவு க்ருத்திகை குமாரன் புள்ளிமயிலிலேறி வருவதுபோலேன்றோ தோன்றும். கேழ்க்குமிடம் மறந்து அதுவே பழனியாகவும் திருச்செந்தூராகவும் திருத்தணிகையாகவும் ஆகிவிடுமன்றோ.

    அப்படி அடியார் நெஞ்சுருகப் பாடுகையில் முந்தைவினை தீர்க்க வரும் முத்துக்குமரன் என்னவெல்லாம் செய்தான் என அருளாளர் (பெயர் மறந்தேனே!) பாடுகிறார் :-

    கன்னத்தை தொட்டான்
    கையைப் பிடித்தான்

    கந்தன் பிஞ்சுத் தளிர் கரங்களால் பிடித்த கையை விடவும் தோன்றுமோ, ஆகவே கேட்கிறார் :-

    கைவிட்டு விடுவாயோ என்றேன் கந்தனிடம்
    கைவிட்டு விடுவாயோ என்றேன்

    அடியார்க்கு நல்ல பெருமாள் சொல்கிறானாம் :-

    கைவிடேன் கைவிடேன் கைவிடேன் என்றான்
    முத்துக்குமாரனடி அம்மா

    பின்னும் சொல்கிறான்

    தீராத வினை தீர திருவருள் துணையுண்டு
    திருப்புகழைப் பாடென்று சொன்னான்
    அருணகிரி திருப்புகழைப் பாடென்று சொன்னான்

    \\\\யாக்கையில் பிறவாத சிவபரம்பொருளை ஒழித்துப் மகவாகப் பிறந்த கதைகளையுடைய அனைத்துத் தெய்வங்கட்கும் பிள்ளைத் தமிழ்நூல்கள் தோன்றின.\\\\

    சிவபெருமானுக்கு பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் இல்லை தான் போலும். சிவபெருமான் என்றால் அருவுருவான லிங்க ஸ்வரூபமாகவும், நடராஜராகவும், சோமாஸ்கந்தராகவுமே வழிபடும் தக்ஷிண பாரதத்தைச்சார்ந்த எனக்கு ஜம்முவில் அமர்நாத் யாத்ரை சமயத்திலும் உத்தரபாரதத்தில் ச்ராவண மாதத்தில் காவடி உத்சவம் சமயத்திலும் வழியெங்கும் த்ரிசூலம் ஏந்திய குழந்தை வடிவிலான சிவபெருமானின் சித்திரங்களை சேவைப்பந்தல்களில் பார்க்க வியப்பாக இருக்கும். உத்தரபாரதத்து சிவவழிபாட்டு நூற்களில் இது சம்பந்தமாக ஏதும் குறிப்புள்ளதா அல்லது இது பக்தர் விரும்பும் ஒரு ஸ்வரூபமா அறியேன்.

  3. சைவத்தமிழ்ச் சான்றோராகிய பெரு மதிப்பிற்குரிய முனைவர் அவர்களின் மிக அற்புதமான கட்டுரைகளுள் ஒன்றாக இதனைக் கருதுகிறேன்… அவருக்கு எமது நன்றி கலந்த வணக்கங்கள் உரியதாகட்டும்..

  4. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், ‘இறை, அடியும் முடியும் நடுவும் இல்லாத அகண்ட, நிஷ்களமான பரம்பொருள்’ என்று உணர்ந்திருந்தும், ‘உருவமே தியானத்திற்கும் அன்புசெய்து வழிபட்டு உய்வதற்கும் ஏற்றது’ என்று தண்டாயுதபாணியைப் பாடிப் பரவியது;

    மக்கள் தாமாகவே வந்து தம்மைத் தீண்டுதலே பேரின்பம் என்றுணர்ந்து பெரியாழ்வார், தாய்மை நிலையில், ‘…கோவிந்த னென்னைப் புறம் புல்குவான்…’ எனப் பாடியது;

    தன் பிள்ளையின் இயல்புகள் பற்றித் தாய் கொள்ளும் கர்வத்தினை பக்தி உணர்வுடன் வெளிப்படுத்தும் யசோதையின் பாட்டு வரிகள்;

    சத்தி அகண்டம்; நிஷ்களம் ஆயினும் மன்பதைகள் உய்யத் திருவுளம் கொண்டு, அவதரித்து மடப்பிள்ளையாய் வருதல் பாராட்டிப் பாடும் மாதவச் சிவஞான முனிவர் தந்த குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்;

    சொன்ன வண்ணம் செய்த பெருமாளின் பெருமையைப் ‘… பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே” என்றுரைத்த திருமழிசையாழ்வாரின் அடிகள்;

    அருவச் சித்தர் பிள்ளைத் தமிழ் தரும் ‘…காத்தல் தொழிலைச் செய்யும் பரம்பொருளாகிய சிவனின் திருவடிகளை அருச்சிப்பாம்’ என்னும் அடிகள் மூலம், ‘திருமாலாகக் காத்தல்தொழிலைச் செய்கிற சிவன்’ என்னும் கருத்து;

    திருநீறு எப்படி, ஏன் அணிந்துகொள்ள வேண்டும் எனச் சேக்கிழார் கூறிய ‘…ஆறுலவு செய்ய சடை…நீறு திரு நெற்றியில்…’ என்னும் மருந்து வரிகள்;

    வைதிக முறையில் காப்புச் செய்தலை, ‘இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்…’ என்கிற பெரியாழ்வாரின் பொன்னெழுத்துக்கள்…

    தமிழுலகம் அறிந்து அனுபவிக்க வேண்டியதொரு அற்புதப் படைப்பு உங்கள் படைப்பு. சிவமாகவும் மாலாகவும் சக்தியாகவும் முருகாகவும் இன்னும் இன்னும் வேறு வேறாகவும் விளங்கும் பரம்பொருளின் பேரருள் தங்களுக்கும் இக்கட்டுரையை வாசிக்கும் அனைவருக்கும் கிட்டட்டும்.

    மகர சங்கராந்தி நன்னாள் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *