புதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்

வரலாற்றுச் செய்திகள் சில நேரங்களில் மனத்துக்கு வேதனையளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அவை மக்களிடையே நல்லுறவைக் கெடுக்கும் என்றுகூட சிலர் நினைக்கிறார்கள். வட இந்தியாவில் நடைபெற்ற சில ஆலய இடிப்பு நிகழ்ச்சிகள் இன்றைக்கும் மக்கள் மனங்களில் ஆறாத வடுக்களாக இருக்கின்றன. ஆனால் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மக்கள் மறந்துவிடாமல் இருப்பதற்காக இன்றைய ஊடகங்கள் அந்தத் தேதி நெருங்கும்போதே தூண்டிவிடுவதைப் போல நினைவுப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட செய்திகளை யாரும் தவறாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் நமக்கு இழைக்கப்பட்ட அநீதி, தீமை வரலாற்றில் எழுதப்பட்டிருக்க அதன் மை இன்னமும் காயாமல் இருக்க, அதை நினைவுப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று நினைப்போரும் நம்மவர் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள். மகாகவி பாரதி சொல்கிறான், ‘நீ வாழும் பகுதியின் வரலாற்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டுமென்று’. அவனுடைய சுதேசிக் கல்வி எனும் கட்டுரையில் நமது பண்டைய வரலாற்றை மக்கள் நினைவில் வைத்திருத்தல் அவசியம் என்கிறான். ஆகவே வரலாற்றில் கறைபடிந்த ஒரு நிகழ்ச்சியை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். அந்நியர்களின் மீதுள்ள மோகம், அவர்களிடம் நமக்கிருந்த அடிமை புத்தி, நமக்கு எந்த அளவுக்கு சேதங்களை உண்டுபண்ணியது என்பதை நினைவுப்படுத்திப் பார்க்கலாம்.

புதுச்சேரியை மகாகவி பாரதியார் வேதபுரம் என்றே குறிப்பிடுகிறார். அவ்வூருக்கு இந்தப் பெயர் வரக் காரணமாக இருந்தது அங்கிருந்த வேதபுரீஸ்வரர் ஆலயம்தான். இது 1746-இல் ஃப்ரெஞ்சு கவர்னர் டூப்ளே என்பவரின் மனைவியின் தூண்டுதலால் இடித்துத் தள்ளப்பட்டது. இந்த விவரங்களை அப்போது ஃப்ரெஞ்சு கவர்னரிடம் துபாஷியாக வேலை பார்த்த ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.

ஆனந்தரங்கம் பிள்ளையின் 17-3-1746ஆம் தேதியிட்ட நாட்குறிப்புப் பகுதியில் அவர் எழுதியிருக்கும் செய்தி அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. அப்போது புதுச்சேரியில் மிகவும் பிரபலமாக இருந்த வேதபுரீஸ்வரர் ஆலயம் கவர்னரின் மனைவிக்கு உறுத்தலாக இருந்திருக்கிறது. மேற்கண்ட தேதியில் அந்தக் கோயிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியை ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார். யாருடைய தூண்டுதலோ அன்று இரவில் இரண்டு பேர் ஆலயத்தின் உள்ளே நுழைந்து அங்கிருந்த சுவாமி சிலைகள், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவற்றின் மீது மலத்தைக் கரைத்து ஊற்றியிருக்கிறார்கள். மறுநாள் காலையில் கோயில் திறக்கப்பட்டதும் கோயில் ஊழியர்கள் நிர்வாகிகளிடம் முறையிட்டிருக்கின்றனர். இந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. உடனே ஊர் மக்கள் தங்கள் வீட்டில் சமையல் வேலை முதற்கொண்டு எந்த வேலையும் செய்யாமல் சாலைக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். அன்றைய தினம் புதுச்சேரியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஊரே ஒன்று திரண்டு இந்த அராஜகச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது. கவர்னர் டூப்ளேக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் மக்கட்கூட்டத்தை அடித்து விரட்டியடிக்க உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவலும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் காணப்படுகிறது.

புதுவையிலுள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்தை இடித்துவிடும் எண்ணம் ஃப்ரெஞ்சு அரசுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்திருக்கிறது. அதிலும் கவர்னர் டூப்ளேயும் அவர் மனைவியும் இதில் மிகவும் அக்கறை கொண்ட நடவடிக்கைகளை எடுத்துவந்தனர். அவர்களுடைய இந்த முயற்சிக்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் சிலரும், உள்ளூர்க்காரர்கள் சிலரும் ஒத்துழைப்பு நல்கி வந்தனர். அதற்கு முன்பு ஐம்பது ஆண்டுகளாக இந்தக் கோயிலை இடிக்கும் எண்ணம் இருந்த போதும், அப்போதெல்லாம் இங்கிருந்த பிரெஞ்சு அரசுப் பிரதிநிதிகள் அந்தக் காரியத்தைச் செய்யத் துணியவில்லை. அப்படி ஏதாவது செய்துவிட்டால், ‘இது தமிழ் ராஜ்யம், இந்தக் கோயிலுக்கு ஏதேனும் ஈனம் வந்தால் நமக்கு அபகீர்த்தி உண்டாகும், தங்கள் வர்த்தகம் பாழாகிவிடும்’ என்றெல்லாம் எண்ணி அப்படி எதையும் செய்யாமல் இருந்தனர்.

ஃப்ரான்சு நாட்டின் மன்னர் நம் நாட்டில், நம் மண்ணில் இருந்த பழம்பெரும் இந்துக் கோயிலைத் தகர்க்க உத்தரவில் கையெழுத்திட்டு ஆணை பிறப்பித்திருந்தும், இங்கிருந்த கவர்னர்கள் அந்தக் காரியத்தைச் செய்யத் தயங்கி வந்தனர். ஒரு முறை ருத்ரோத்காரி வருஷம் சித்திரை-வைகாசி மாதங்களில் கோயிலை முத்தியாப் பிள்ளை என்பவரைக் கொண்டு இடிக்க முயற்சி மேற்கொண்டனர். இந்த ஆணையை நிறைவேற்ற முத்தியாப் பிள்ளை என்பவர் மறுத்ததால், அவரைக் கட்டி வைத்து காதுகளை அறுப்பதாகவும் தூக்கில் தொங்கவிட்டுவிடுவதாகவும் மிரட்டிப் பார்த்தனர். இந்த அச்சுறுத்தலுக்குப் பயந்து அந்த முத்தியாப் பிள்ளைத் தன் குடும்பத்தாரைக் கூட்டிக் கொண்டு ஊரைவிட்டே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டாராம்.

1746-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி. மறுநாள் ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடும் மிதப்பில் ஃப்ரெஞ்சுக்காரர்கள் இருந்தனர். அன்று இரவு ஏழு மணியளவில் வேதபுரீஸ்வரர் ஆலயத்துக்குள் மலம் நிரம்பிய சட்டி ஒன்று வீசப்பட்டது. அந்தச் சட்டி அப்போது பிள்ளையார் சந்நிதியில் பிரதக்ஷணம் செய்து கொண்டிருந்த சங்கரய்யன் என்பவர் மீது வந்து விழுந்து உடைந்தது. இதனையடுத்து கோயில் நிர்வாகிகளும் பொதுமக்களும் ஆனந்தரங்கம் பிள்ளையிடம் சென்று நடந்ததைச் சொல்லி முறையிட்டனர். அவர் கவர்னர் துரையிடம் சென்று புகார் தெரிவித்திருக்கிறார். கவர்னர் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து நடந்த உண்மைகளை விசாரித்து அறியுமாறு ஆணையிட்டார். அந்த விசாரணையில் அருகிலுள்ள சம்பா கோயில் எனும் தேவாலயத்திலிருந்துதான் வீசப்பட்டது என்பது கண்டறியப்பட்டது. கவர்னர் அந்த தேவாலயத்தின் பாதிரியாரான கார்த்தோ என்பவரை அழைத்து விசாரித்தார். அதற்கு அவர் ஈஸ்வரன் கோயில் ஆட்களே இந்தக் காரியத்தைச் செய்துவிட்டுத் தங்கள் மீது பழிபோடுகின்றனர் என பதிலளித்திருக்கிறார். ஆளுநர் ஓர் அறிக்கையை பிரெஞ்சு மன்னருக்கு அனுப்பி வைத்தார்.

1748-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதியன்று தனது நாட்குறிப்பில் ஆனந்தரங்கம் பிள்ளை எழுதும் செய்தி– ‘இன்றைய நாள் காலையில் நிகழ்ந்த விபரீதம் என்னவென்றால்’ என்ற முன்னறிப்போடு எழுதுகிறார். பிரெஞ்சு அதிகாரிகள் கெர்போ, பரதி முதலியோர் ஏராளமான இராணுவ வீரர்களைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு கொல்லத்துக்காரர்கள், கூலிக்காரர்கள் என்று சுமார் இருநூறு ஆட்கள் துணைகொண்டு வேதபுரீஸ்வரர் ஆலயத்தை இடிக்கத் தொடங்கினார்கள். முதலில் கோயிலின் தென்புற மதிலையும், மடப்பள்ளியையும் இடித்தனர். இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. உடனே உள்ளூர் வெள்ளாளர், கைக்கோள அகமுடைய முதலிகள், செட்டிமார்கள், பிள்ளைகள், குடியானவர்கள், ஆலய சாத்தாணிகள் ஆகியோர் ஆனந்தரங்கம் பிள்ளையிடம் சென்று நடைபெறும் அக்கிரமம் பற்றி முறையிட்டனர். பலர் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுத் தாங்கள் ஊரைவிட்டுப் போய்விடப் போவதாகவும், சிலர் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிடுவதாகவும் முறையிட்டனர். ஆளுநரிடம் போய் முறையிடப் போவதாகவும் சொன்னார்கள்.

மக்களுடைய முறையீட்டுக்குப் பதிலளித்து ஆனந்தரங்கம் பிள்ளையவர்கள், “உங்களிடம் இப்போது இருக்கும் ஒற்றுமை முன்னமேயே இருந்திருந்தால், இந்த நிகழ்ச்சி நடந்திருக்காதே!” என்று சொல்லிவிட்டு, “உங்களில் ஒரு சிலர் பெரிய துபாசித்தனம் பெறுவதற்காகவும், சாவடி துபாசித்தனம் பெறுவதற்காகவும் கோயிலை இடிக்க ரகசியமாக ஒப்புக் கொள்ளவில்லையா? அதனால்தானே இன்றைக்கு இந்த விபரீதம் நடந்திருக்கிறது” என்று சொல்லி அவர்களைக் கடிந்து கொண்டிருக்கிறார்.

கவர்னரும், கவுன்சிலும் இந்த முடிவை எடுத்திருப்பதால் இதில் நாம் இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. ஆகையால் இயன்றவரை வாகனங்கள், சிலைகள் முதலியவற்றை பத்திரமாக எடுத்துச் சென்று காளத்தீஸ்வரர் கோயிலில் கொண்டு போய் வைத்துவிடுங்கள். இப்படி இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் கோயிலின் அர்த்த மண்டபத்தையும், மகாமண்டபத்தையும் இடித்துக் கொண்டிருப்பதாகச் செய்தி வந்து சேர்ந்தது. ஆலயத்து சிலைகளையெல்லாம் எப்படி உடைக்க வேண்டுமோ, அப்படி உடைத்துக் கொள்ளுங்கள் என்று டூப்ளேயின் மனைவி சொல்லிவிட்டாளாம். ஆகவே ஆலயத்தில் இருந்த மகாலிங்கத்தை சிலர் உதத்தும், எச்சிலை உமிழ்ந்தும், மற்ற சிலைகளை உடைத்தும் போட்டனர்.

இதனைக் குறித்து ஆனந்தரங்கம் பிள்ளை எழுதுவதாவது.

“பின்னையும் அந்தக் கோவிலிலே நடத்தின ஆபாசத்தைக் காகிதத்திலே எழுத முடியாது. வாயினாலேயும் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் நடப்பித்தவர்கள் என்ன பலனை அனுபவிப்பார்களோ நான் அறியேன். ஆனால் இன்றைய தினம் தமிழரெனப்பட்டவர்களுக்கு எல்லாம் லோகாஷத்தமானமாய்ப் போறாப் போலே இருந்தது. பாதிரிகளுக்கும், தமிழ்க் கிருத்துவர்களுக்கும், துரைக்கும், துரை பெண்சாதிக்கும் ஆயிசிலே காணாத மகிழ்ச்சியாய் இருந்தார்கள். இனிமேல் அனுபவிக்கப் போறத் துக்கத்தினை யோசனை பண்ணாமல் இருந்தார்கள்.” (தொகுதி 5. பக்கம் 293)

இப்படிக் குறிப்பிட்ட ஆனந்தரங்கம் பிள்ளை, கோவிலை இடித்தவர்கள் அதற்குண்டான வினையை அனுபவிப்பார்கள் என்று நம்பினார். அதன்படியே 11-09-1748ஆம் நாள் ஆங்கிலேயருடன் நடந்த சண்டையில் கோவிலை இடிப்பதில் முனைப்புடன் இருந்த பரதி என்பாருக்கு தலையில் மரணகாயம் ஏற்பட்டது என்பதையும் ஆனந்தரங்கம் பிள்ளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

வேதபுரீஸ்வரர் கோவிலை இடித்த அதே நேரத்தில் அருகில் இருந்த மசூதியொன்றையும் இடிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மசூதியை இடிக்கத் தொடங்கியதும், அப்துல் ரகுமான் ஆளுனரிடம் சென்று மசூதியை இடித்தால் ஒரு சிப்பாய்கூட உயிருடன் இருக்க முடியாது. இடிக்கிறவர்கள் பேரிலே விழுந்து செத்துவிடுவார்கள் என்று சொன்னார். ஆளுனரும் மசூதியை இடிப்பதைக் கைவிட்டுவிட்டார். இதன் பிறகு அப்துல் ரகுமான் ஆனந்தரங்கம் பிள்ளையிடம் வந்து கூறிய செய்தியாவது:

“பகைவன் வந்து நம் பட்டணத்தை வாங்குவேன் என்று இறங்கியிருக்கும் வேளையில் சகல சனங்களையும் சந்தோஷமாய் வைத்து முதுகைத் தட்டிக் கொடுத்துக் காரியம் கொள்ளுகிறதை விட்டுவிட்டுப் பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு அவரவர் மனதை முசே துய்ப்ளே முறித்துப் போடுகிறார். இங்கிலீஷ்காரனே செயிச்சால் கூட நல்லது என்று சனங்கள் நினைக்கும்படி பண்ணுகிறார். தமிழர் கோயிலை இடித்து இப்படிப் பட்டணம் நடுங்கப் பண்ணுகிறது துரைக்கு அழகா?” (தொகுதி 5. பக். 292)

இதுபோன்று அவர்கள் செய்திருக்கும் தீங்கு பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும்; மறக்கவோ அல்லது மன்னிக்கவோ கூடிய நிகழ்ச்சியா அது? அந்நிய மோகம் நம் மக்கள் மனதை எப்படி அடிமைத்தனத்துக்கு ஆட்படுத்தியிருந்தது, கண் முன்னால் நடந்த கொடுமையைத் தடுக்க முடியாத ஆண்மையற்றவர்களாக ஆக்கியது என்பதை காலம் தாழ்த்தியாவது நம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த நிகழ்ச்சி பற்றி ஆனந்தரங்கம் பிள்ளை டைரியிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.

அந்நியர்கள் இங்கு வந்ததால்தான் பல நன்மைகள் கிட்டியது என்றும் நாகரிகம் பெருகியது என்றும் பொய்யான கற்பனையில் மிதக்கும் நம்மவர்கள் சிலர் இனியாவது யோசிக்க ஆரம்பிக்கவேண்டும்,

13 Replies to “புதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்”

  1. முகமதியர்களுக்குத் தங்கள் மதத்தின் மீது இருந்த நம்பிக்கையும் உறுதிப்பாடும் சுய மரியாதையும் ஒற்றுமையும் நமக்கு இல்லை என்பதையும் ஆனந்த ரங்கம் பிள்ளை பதிவு செய்திருக்கிறார். மேலும், ஆங்கிலேயர், ஃப்ரெஞ்சுக்காரர், டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர் முதலான வெள்ளையர்கள் செய்த இதே போன்ற காரியங்களைத்தான் அவர்கள் வருவதற்கு முன்பு அதிகாரம் செலுத்திய சுல்தான்களும் நவாபுகளும் செய்துகொண்டிருந்தார்கள். சுல்தான்கள் ஆட்சியில் மதுரை மீனாட்சி ஆலயம் வழிபாடு இன்றிக் கிடந்ததும் பலவாறு சேதப்படுத்தப்பட்டதும் இன்று பெரும்பாலான மதுரைக்காரகளுக்கே தெரியாது! ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தும் ஒற்றுமையின்மையால்தான் தான் இப்படி அவமானத்திற்கும் பாதிப்புக்கும் உள்ளாக நேரிடுகிறது.

  2. ஹிந்துக்களின் ஒற்றுமை இன்மையே நாடு வீழ்ச்சி அடைந்ததுக்கு காரணம். இனியாவது விழித்து சரியான முறையில் நமது விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கு இருக்கும் தலைமுறைக்கு விஷயங்கள் தெரிய தமிழ் ஹிந்து போன்ற தளங்களின் உதவி மிகவும் முக்கியம். எல்லா மடங்களையும் இணைக்கும் உதவியையும் தமிழ் ஹிந்து ஈடுபட வேண்டும்.
    வாழ்க பாரதம்.

  3. It is really very shocking. The pity is, this news has not come to light till date.
    Will we Hindus unit atleast now?

  4. இந்துக்களை ஒன்று படுத்துவது எப்படி? யார் செய்வது ? அப்படி செய்தால் அவர்கள் மதத்தீவிரவாதிகள் என்று அடையாளம் காட்டப்பட்டுக் கட்டம் கட்டப்படுகிறார்களே. எத்தனை அனுபவித்தாலும் நமக்கு ஒற்றுமை உணர்வு வராது? இஸ்லாமியர், ஆங்கிலேயர், என்று எத்தனையோ படையெடுப்புகளால் நாம் ஏராளமான இழப்புகளை சந்தித்திருந்தாலும் நாம் அவற்றையெல்லாம் மறந்துவிட்டோம். சமீபத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பையும் அதன் பாதிப்புகளையும் அது ஏன் ஏற்பட்டது என்பதையே மறந்துவிட்டபோது அடிமைத்தனம் ஞாபகத்தில் இருக்குமா? நமது ஒற்றுமையின்மையால் பாகிஸ்தான் உருவானது, வங்காளம் உருவானது, இனி வட கிழக்கு மாநிலங்கள் கிறித்துவ மதமாற்றத்தினால் பிரியப்போகிறது…. நாம் மட்டும் மதசார்பற்றவர்களாக இருந்தால் போதாது….மற்றவர்களும் அவ்வாறு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நமக்கு இளிச்சவாயர்கள் என்ற பெயரே பொருத்தமானது…..உண்மையில் இந்து அமைப்புகள் ஒற்றுமையாக இல்லை. பின் எப்படி இந்துக்களை ஒன்று படுத்தமுடியும்? இன்னும் நிலைமை விபரீதமாகட்டும் பின்னர் நாம் களத்தில் இறங்கலாம் என்று நினைத்தால் நாம் சிறுபான்மையர் ஆவது உறுதி. ஒவ்வொரு இந்துக்களும் தங்களை இந்துக்களாக நினைத்தால் மதவெறியர் என்று முத்திரை குத்தப்படுவோம் என்ற எண்ணத்தில் உள்ளனர். அவரவர் சார்ந்திருக்கின்ற கட்சியின் போலி மதசார்பின்மை கொள்கைக்காக தங்களின் மத உணர்வுகளை பலி கொடுத்து அமைதி காக்கின்றனர், ஒன்று பட மறுக்கின்றனர். இது ஒரு மிக முக்கியமான காரணம். இதனை விடுத்தது எந்தகட்சியைச் சார்ந்திருந்தாலும் இந்து என்று வரும்போது ஒன்றுபட்டு நின்றால் தான் சார்ந்திருக்கும் கட்சியும் தன் கொள்கைகளை மாற்றுவது உறுதி. நாம் அந்த இலக்கை நோக்கிப் பயணிப்போம்……

  5. கோபாலன், அனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு (தமிழில்)எங்கு கிடைக்கிறது என்று சொல்லுங்கள். இணையத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பை பெறமுடிகிறது. ஆனால் தமிழில் கிடைப்பதில்லை.

    நன்றி.

  6. சுதந்திரம் கிடைத்தபின் நாம் எதை எல்லாம் இழந்தோமோ அதை எல்லாம் மீட்டெடுக்க வக்கில்லாத கும்பல் கையில் அரசு சென்றதுதான் கொடுமை. இன்று வரை அதே நிலை. கிறிஸ்தவ, முஸ்லீம் ஓட்டுகளுக்காக எதைவேண்டுமானாலும் செய்யும் கும்பல் ஒழிந்தால்தான் ஏதேனும் நடக்கும்.

  7. புதுவை மாநில அரசு பல தொகுதிகளாக ஆனந்த ரங்கம் பிள்ளை நாட்குறிப்பை வெளியிட்டுள்ளது. செய்தி தகவல் ஒலி பரப்பு- பதிப்புத் துறை, புதுவை மாநில அரசு, புதுச்சேரி என்ற முகவரிக்கு எழுதிக் கேளுங்கள் ஸ்ரீ ஹரி.

    ஹிந்து சமூக ஒற்றுமை சாத்தியமாகிவிட்டால் எல்லா அரசியல் கட்சிகளும் நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு நம் பின்னால் வரும். நமக்குள் யார் பெரியவர் என்கிற மனப் பான்மையைக் கைவிட்டால் ஒற்றுமை சாத்தியமாகும், ஸ்ரீ சந்திர மெளலி..
    மலர்மன்னன்

  8. சிறுபான்மையினர் என்று சொல்லி அபரிமிதமான கவனிப்புக்களைச் செய்யும் அரசியல் கட்சிகள், பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்குத் தேவை ஓட்டுக்கள். அந்த ஓட்டுக்களை அதிகம் வைத்திருப்போர் பெரும்பான்மையான இந்துக்கள், அவர்கள் ஒன்றுபட்டு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கான்பவர்களுக்குத்தான் ஒட்டு எனும் ஒருமித்த முடிவை எடுத்தார்களானால், இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் பைடு பைப்பர் பின்னால் ஓடிவந்த எலிகளாக ஓடிவருவார்கள். ஆனால் நம் விதி! பெரும்பான்மை இந்துக்களில்தான் கோடரிக் காம்புகள் அதிகம்.

  9. தமிழ் ஹிந்துவின் இந்த தொடர்ந்த முயர்ச்சிகளுக்குத் தலை வணங்குகிறேன். இது போன்ற உண்மை சங்கதிகளும் + ஆனந்தரங்கம் பிள்ளை போன்றோர்களின் பல குறுப்புகள் சுட்டிக் காட்டும் விஷயங்களை, அவற்றின் விஸ்வரூபங்களை + அதன் இன்றைய பரிமாணங்களை விவரித்து வெளிச்சம் காட்டும் இத்தகைய அருமையான கட்டுரைகள் இன்றைக்கு மிகவும் அவசியம். அதற்காக கட்டுரை ஆசிரியருக்கும், இத்தகைய செயற்கரிய செயல்களை தொடர்ந்து செய்து வரும் தமிழ் ஹிந்து குழுவுக்கும் நன்றி கலந்த வந்தனம். சுலபமாக சாத்தியப்படும் நமது ஹிந்து சமூக ஒற்றுமையை நோக்கிய ஒரு ஸ்தானத்துக்கு, இத்தகய அர்த்தமுள்ள கட்டுரைகள் நம்மை கொண்டு செல்லும். சரியான தொடர்பை இங்கு பகிர்ந்து கொண்ட பெரியவர் மலர்மன்னன் அவர்களுக்கு வந்தனம். நன்றி.
    பராசக்தி துணை.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  10. Prapanjan has written a novel ‘Vaanam Vasappadu’ which won Sahitya academy award, and this novel is based on Anandha Rangan dairy kuripugal. Wonderful novel of the 18th Century Pondychery. The destrcution of vedapureeswarar temple comes in this novel. It is sad to note that, the muslims stood united and threatented to fight till the last muslim is alive, where as Hindus just kept watching. Its really a unanswered question, as why Hindus were never united?
    caste cannot be given as reason, because in the same novel, there is mention about what happens in the church that shares the compound with the temple. The christians are made to sit according to their caste..

    Many do not know that the Santhome church in Mylapore is the actual Kabali temple. The temple was destroyed and made to move to the current location and the church was built on top of it. Till 5 years back, the karungal basement of shiva temple was visibile with inscriptions, but the church in the name of renovation plastered and burried the evidence once for all. But it has been recorded and known that it was actual kabali temple.

  11. சத்ரிய தர்மத்தையும் உள் அடக்கியதே ஹிந்து தர்மம்.எனினும் பல ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்ததால் என்னவோ இந்தக் குணம் சிதைந்து உள்ளது. மற்ற மதங்களில் அனைவரையும் வெறியர்களாக வளர்க்கிறார்கள்.ஆனால் இந்து மதத்தில் சத்திரியர்கள் தனி ஜாதியாக வளர்க்கப்பட்டனர். அந்த ஜாதிக்காரர்கள் தங்கள் கடமையை உணர்ந்து போராடும் போது ஹிந்து மதம் காக்கப்படலாம்.

  12. ” இதற்கு முன்னே காரைக்காலிலே சிவன் கோயிலை இடித்தபோது அங்கிருந்த சனங்கள் கலக்கம் பண்ணவிலையே” என்று பாண்டிச்சேரிப் பாதிரி சொன்னானாம்.
    (இது ரங்கப்பிள்ளை டயரியில் காண்கிறது).

    பாண்டிச்சேரி ஆலயம் இடிபடும் முன்பே காரைக்காலில் இருந்த கயிலாய நாதர் சிவாலயத்தை இடித்துப் போட்டார்கள். ஹிந்துக்களின் கோயில்களின் மேல் கைவைக்கக் கூடாது என்ற தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்மருடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் மீறினார்கள்.

    பிரெஞ்சுகாரர்கள் படைஎடுத்து வரும்போது பாதிரிகளும் கூடவே வருவார்கள். பிரெஞ்சுப் படை இருக்கும் தைரியத்தில் பசுக்கொலை, ஹிந்து கோயில்களை இடித்தல், விக்ரஹங்கள், நகைகள் கொள்ளை, ஹிந்துக்களை மதம் மாற்றுதல் என்ற புனித கைங்கர்யங்களைச் செய்வார்கள் பாதிரிகள்.

    காரைக்காலிலிருந்து தஞ்சைக்குப் புறப்பட்ட பிரெஞ்சுப் படை நாகூர், நாகப்பட்டினம், கீவளூர், திருவாரூர் திருக்கோயில்களை சேதப்படுத்தி கொள்ளையிட்டது. தெய்வத் திருவுருவங்களை தேடிச் சென்ற இரு அப்பாவி பிராம்மணர்களை திருவாரூர் வீதியில் பீரங்கியில் கட்டி வைத்து வெடித்துப் பிளந்தெறிந்தனர் .

    சாலியமங்கலம் முதல் தஞ்சாவூர் வரை அவர்கள் செய்த தீவினைகள் ஏராளம்.

    தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டபோது துளஜா ராஜாவின் புத்திசாலித்தனத்தினால் முற்றுகை நெடுநாட்கள் வரை நீண்டது. பசி தாங்காத பிரெஞ்சுகாரர்கள் காளைமாடுகளையாவது சாப்பிடுவதற்காகத் தரும்படிக் கேட்டனர். உயிர்போனாலும் அக்காரியத்தைக் செய்யமாட்டோம் என்று உறுதியாக மறுத்துவிட்டார் துளஜா ராஜா! (இவரல்லவோ தர்ம ராஜா!). கடைசியில் ராஜாவின் பொறுமைக்குப் பலன் ஏற்பட்டது.

    காரைக்கால் கரையோரம் இங்க்லீஷ் கப்பல் வந்திருப்பதாகச் சேதி வந்ததும் அடித்துக்கோ பிடித்துக்கோ என்று காரைக்கால் திரும்பியது பிரெஞ்சுப் படை. வழியில் சோத்துக்கு லாட்டரி. போகும்போது இருந்த திமிர் திரும்பும்போது காணாமல் போச்சு.

    கிழிந்த உடையையும், அறுந்த செருப்பையும் போட்டுக்கொண்டு பிரெஞ்சுபடை வீரர்கள் (?) பட்டினியாக நடந்து காரைக்கால் கரைத்துறைக்கு வந்த அழகை ரசமாக இங்க்லீஷ்காரர்கள் பதிவு பண்ணியிருக்கிறார்கள்.

    ஆரூரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *