தமிழில் ரகுவம்சம்

 

 

இரகுவம்சமும் யாழ்ப்பாணமும்

ரலாற்றுக்கு எட்டாத காலத்திலிருந்தே பரதகண்டம் பண்பட்ட வாழ்வு கண்டது.

ந்த வாழ்வை நிலை பெறுமாறு செய்தவர்கள் அக்கால அரசர்களேயாவர். அவ்வரசர்களது வாழ்வைப் போற்றிப் பாடுவதில் புலவர்கள் அடங்காத ஆர்வம் கொண்டிருந்தனர். காவியங்களாக வரைந்து இன்பம் கொண்டனர்.

ந்த கவிஞர்களுக்கெல்லாம் மஹாகவியாக வந்தவர் தான் காளிதாசர். செம்மொழியான வடமொழியில் இருதுசங்கார கவிநூலையும், மேகசந்தேச காதல்நூலையும், சாகுந்தல நாடக நூலையும், குமாரசம்பவ வீரம் கலந்த பக்தி நூலையும் படைத்த அந்தக் கவி வல்ல பெருமானார் தந்த வரலாற்று நூலாக, ஸ்ரீ ராமனின் உன்னத வம்ச பாரம்பரியத்தைக் கூறும் நூலாக,  இரகுவம்சம் விளங்குகிறது.

காளிதாசர்

ரகுவின் பேரால் அமைந்தாலும், அவனுக்கு முன் சென்று திலீபன் என்ற அவன் முன்னோன் கதையினின்று தொட்டு, இராமனது கதையை நடுவாக அமைத்து,  அக்கினி வருணன் வரை சென்று,  அந்நூல் நிறைவடைகிறது. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றைச் சங்ககாலப்புலவரான ‘ஈழத்துப்பூதந்தேவனார்’ என்னும் புலவரிலிருந்து தொடங்குவதே மரபு என்றாலும், அதன் தொடர்ச்சியான நூல்களைப் பொ.பி 13-ஆம் நூற்றாண்டு வரை காண இயலவில்லை.  எனவே, யாழ்ப்பாண அரசு அமைந்து அதில் சோதிடம், வைத்தியம், வரலாற்று நூல்கள் நிறைவாக எழுந்த காலமே ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியம் பெறுகிறது.

க்கால நூல்களில் தலைமை மிக்கது இரகுவம்சமாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் செய்தது போலவும், வில்லிபுத்தூரர் வியாசபாரதத்தைத் தமிழாக்கியது போலவும், கச்சியப்பச் சிவாச்சார்யார் ஸ்கந்தத்தை தமிழில் கந்தபுராணமாகச் செய்தது போலவும், யாழ்ப்பாணத்து அரசகேசரி என்பார் காளிதாசரின் இரகுவம்சத்தைத் தமிழில் செழுங்கவிகளாக, பெருங்காப்பியமாகப் படைத்திருக்கிறார்.

தமிழ் இரகுவம்சம்

ம்ஸ்கிருத மொழியில் எழுந்த பஞ்சமஹா காவியங்களுள் ஒன்றான,  19 சர்க்கங்களையும்  1569 செய்யுள்களையும் கொண்ட ரகுவம்ச மஹாகாவ்யம்,  தமிழில் அரசகேசரியால் இரகுவம்ச காவியமாகப் படைக்கப்பட்டிருக்கிறது.

15-ஆம் , 16-ஆம் நூற்றாண்டுக்குரிய வித்துவச் சிறப்பைக் காட்டும் மிகக் கடுமையான தமிழ் நடையில் இது எழுந்திருக்கிறது. பொதுக்காண்டம், சிறப்புக் காண்டம், பொதுச்சிறப்புக் காண்டம் என்கிற மூன்று பெரும்பிரிவுகளை உடைய இந்தத் தமிழ் நூல் 26 படலங்களையும் 2444 செய்யுள்களையும் கொண்டிருக்கிறது.

காவியப் பொருள் மரபை மூல பாடத்திலிருந்து நேரடியாக அப்படியே முழுமையாக அரசகேசரி தமிழில் பின்பற்றவில்லை. வடமொழியில் இராமகாதை விரிவாகச் சொல்லியிருப்பது போலத் தமிழில் இல்லை. அது போல நிறைவுப்பகுதியான அக்கினி
வர்மன் வரலாறு தமிழில் காணப்படவில்லை.

படலங்களும் செய்யுள்களும்.

காவிய மரபிற்கேற்ப எழுந்த இத்தமிழ் நூல் பல படங்களாகப் பிரிவு செய்யப்பட்டிருக்கிறது. அவை முறையே,

காப்பு- 1 செய்யுள்
பாயிரம்- 9 செய்யுள்

பொதுக்காண்டம்

ஆற்றுப்படலம்- 26 செய்யுள்
நாட்டுப்படலம்- 64  செய்யுள்
நகரப்படலம்- 75 செய்யுள்
அரசியல் படலம்- 22 செய்யுள்
குறைகூறு படலம்- 74 செய்யுள்
தேனுவந்தனப் படலம்- 122 செய்யுள்
இரகுவுற்பத்திப் படலம்- 51 செய்யுள்
யாகப்படலம்- 105 செய்யுள்
திக்கு விசயப்படலம்- 277 செய்யுள்
அயனுதயப்படலம் -55 செய்யுள்
அயனெழுச்சிப் படலம்- 139 செய்யுள்
மாலையீட்டுப் படலம்- 129 செய்யுள்
கடிமணப்படலம்- 85 செய்யுள்
மீட்சிப்படலம்- 129 செய்யுள்
இரகு கதியுறு படலம்- 47 செய்யுள்
இந்துமதி பிறப்பு நீங்கு படலம்- 96 செய்யுள்

சிறப்புக் காண்டம்

தசரதன் சாபமேற்ற படலம்- 125 செய்யுள்
திருவவதாரப்படலம்- 56 செய்யுள்
சீதை வனம்புகு படலம்- 157 செய்யுள்
இலவணன் வதை படலம்- 108 செய்யுள்
சம்புகன் வதை படலம்- 53 செய்யுள்
அவதார நீங்கு படலம்- 71 செய்யுள்

பொதுச் சிறப்புக் காண்டம்

குசன் அயோத்தி செல் படலம்- 108 செய்யுள்
வாகு வலயப்படலம்- 104 செய்யுள்
முடிசூட்டுப் படலம்- 123 செய்யுள்
குலமுறைப்படலம்- 33 செய்யுள்

சில மாற்றங்கள்

ரசகேசரி இராமன் வரலாற்றைச் சொல்லாமைக்கு அவரே தனது நூலில் காரணம் சொல்கிறார்.

‘பொற்றாமரை மான் ஒழியாது பொலியு மார்ப
வெற்றாழு மேனி ரகுராம சரிதை யாவும்
கற்றார் கவியின் பெரிதாம் தமிழ்க்கம்பநாடன்
உற்றான் அங்குரைத்தான் உரையாதன ஓதுகிற்பாம்’

கம்பன்

னும் பாடலில் கவிஞர் சொல்வதன் வண்ணம், கவியில் பெரிய கம்பநாடாழ்வான் கம்பராமாயணமாக ராமசரிதையைச் சொல்லியிருப்பதால், அதை நீக்கி பிறவற்றைச் சொல்கிறோம் என்கிறார். ஆக, கம்பராமாயணத்தில் அரசகேசரிக்கு மிகுந்த பற்றும் நிறைவணர்வும் இருந்திருக்கிறது.

நிறைவுப்பகுதியான அக்கினிவர்மன் கதையை அரசகேசரி ஏன் தமிழாக்கவில்லை என்று தெரியவில்லை. அது ஒழுக்கம் குறைவான அக்கினி வர்மன் கதையாதலால் அரசகேசரி தவிர்த்திருக்கலாம் என்று சிலரும், அரசகேசரி அப்பகுதியை எழுதியிருக்கலாம் ஆனால், இன்று  நமக்குக் கிடைக்கவில்லை என்று சிலரும், இன்னும் காவியம் முற்றுப்பெறவில்லை என்று சிலரும் கருதுகின்றனர்.

நூல் எழுந்த சமூக -அரசியல் பின்னணி

ரசகேசரியின் காலம் 15-ஆம் 16-ஆம் நூற்றாண்டுகள் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவர் யாழ்ப்பாண அரசவம்சத்தவர் என்றும் கருதப்படுகிறது.

க்காலத்தில் தமிழ்நாட்டில் முடியுடை மூவேந்தரின் அரசும் உடைந்து போயிருந்தது. விஜய நகரப் பேரரசு ஓங்கியிருந்தது. ஆனால், திருநெல்வேலிப்பகுதியில் சிற்றரசர் போல ஒதுங்கியிருந்த பாண்டிய அரசர்கள் தமிழிலக்கியப்பணியில் ஈடுபாட்டுடன் காணப்பட்டார்கள். குறிப்பாக, அதிவீரராம பாண்டியன் கூர்மபுராணம், லிங்கபுராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, மதனகோவை, நைடதம் போன்றவற்றைத் தமிழ்ப்படுத்தியிருப்பது சிந்திக்கத்தக்கது.

மது இளமைக்காலத்தைத் தமிழ்நாட்டில் கழித்த அரசகேசரி இவற்றால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. யாழ்ப்பாண அரச வம்சத்தைச் சேர்ந்தவராதலில் தமது வம்சத்திற்கும் தெய்வீகத் தொடர்பைக் கற்பிக்க அரசகேசரி இக்காவியம் மூலம் முயன்றிருக்கலாம் என்றும், எதிர்கால மன்னர்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்பியிருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் கருதுவர்.

கு என்பதற்கு கலைக்கடலையும் கைக்கடலையும் கடக்கவல்லவன் என்று பொருள் கொள்வர். இச்சிறப்பு யாழ்ப்பாணத்தரசரிடமும் இருந்தமையால் (அதாவது கல்வி, கலை அறிவும், பகைவரை அடக்கும் திறனும்) அவர்கள் ரகுவம்சத்தை விரும்பி ஆதரித்திருக்கலாம் என்பதும் சிலரது ஊகம்.

பரராஜசேகரன்
க்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராஜசேகர சிங்கையாரியச் சக்கரவர்த்தி என்ற பரராஜசேகரனே இந்நூலாக்கத்திற்குத் துணையாகவும் ஊக்கமாகவும் இருந்தான் என்பது வெளிப்படை. அது இரகுவம்சத்திலேயே அரசகேசரியால் ‘பன்னு செஞ்சொல் பரராசசேகர மன்னன் இன்பம் மனங்கொள வாய்த்தது’ என்று சொல்வதாலும் பிற வசனங்களாலும் தெளிவாகிறது. யாழ்ப்பாணத்து நல்லூரில் வைத்து இரகுவம்சத்தை அரசகேசரி எழுதினான் என்றும் அதனை தஞ்சாவூர் இரகுநாத நாயக்கர் அரச சபையில் அரங்கேற்றியதாகவும் சிலர் கருதுகின்றனர். இவற்றுக்கு மாறாகக் கருதுவோரும் உளர்.

தமிழ் இரகுவம்சமும் கவிச்சிறப்பும்

ரசகேசரியின் கவிதைகளில் வித்துவச்சிறப்பு நிறைந்திருக்கிறது என்று கருதும் பலருள் அதில் கவித்துவம் நிறைவாக உள்ளது என்று கருதுதல் குறைவே. ஏனெனில் இந்நூலில் வெளிப்படும் கவித்துவச் சிறப்புக்கும் மேலாக வித்துவச்சிறப்பு விரவியிருக்கிறது.

காளிதாசர் வடமொழியில் எழுதாது தமிழில் அரசகேசரியே எழுதியிருக்கும் இரகுவம்சத்தில் ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவற்றில் அரசகேசரியின் கவித்துவம் புலப்படுகிறது.

ங்கு ஒன்று கரு ஒன்றை ஈனும் நுணுக்கமான காட்சி அரசகேசரியால் படமாக்கப்படுகிறது.

‘பசிய இலைகளை உடைய தாமரையாகிய தாதி பக்கத்தில் இருக்க, பாய்கிற கால்வாய் நீர் உண்மையாகவே மருத்துவம் செய்ய, நீலோத்பலங்கள் மனம் நெகிழ, தேரைகள் வாய் விட்டுப் புலம்ப, மெல்லிய அணை போல இருக்கிற ஆமை மீது ஏறி சங்கு கருவை ஈனும்’ என்று காட்டும் கற்பனைக்கு அளவேது..?

‘பச்சடைப் பதும தாதி பாங்குறப் பாய் கால் பாணி
நிச்சய மருத்துச் செய்ய நீலங்கள் நோக்கி நெக்க
வச்சில தேரை வாய் விட்டலாற்ற மெல்லணையினாய
கச்சபவேரிந் மீதேறிக் கம்புசூல் கழிக்குமாறோ’

வ்வாறெல்லாம் சிறப்பொடு காவியம் படைத்த அரசகேசரியின் இரகுவம்சம் பிரபலமடையாமைக்குக் காரணமாக பலவற்றைக் காட்டுவர்.

வற்றுள் முக்கியமானதாக, வித்துவசிரோமணி சி.கணேசையர் அவர்கள் கூற்று என்னவெனில் ‘கடினமான சொற்பிரயோகங்கள் உடைமையானும், வடமொழி நூலைப் பெயர்த்துப் பாடியமையானும் கற்றார்க்கன்றி மற்றோர்க்கு உவந்து சுவைத்தல் கூடாததாயிற்று’ என்கிறார்.

சைவனாயினும் அரசகேசரி இராமபக்தி மிக்கவனாயிருந்திருக்கலாம் என்றும் இந்நூல் மூலம் தெரிகிறது. இவற்றை விட தமிழ்ச் சொற்பயன்பாட்டிலும் அரசகேசரி அக்கறை செலுத்தியிருக்கிறார்.

பேரருளாளரான இராமானுஜாச்சார்யார் தமது கையொப்பத்தை ‘இராமானுசர்’ என்றே இட்டிருக்கும் சிறப்போடு இதனை ஒப்பு நோக்கலாம்.

குவம்சத்தை இரகுவம்மிசம் என்றும், திக் விஜயத்தை திக்கு விசயம் என்றும், அஜனை அயன் என்றும் அரசகேசரியார் பயன்படுத்தியிருக்கக் காணலாம். ஆனாலும், காவியம் முழவதும் அங்கிங்கெணாத படி அக்கால வழக்கிற்கு ஏற்ப வடசொற்கள் விரவிக் கிடக்கின்றன.

ன்றைக்கும் அரசகேசரி பேரில் பல ஐதீக, செவி வழிக் கதைகள் யாழ்ப்பாணத்தில் கிராமங்கள் தோறும் காணப்படுகின்ற. இவற்றின் ஊடாகவும் அரசகேசரி எவ்வளவு தூரம் அக்கால மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டான் என்பது புலப்படுகிறது.

திலும் வரலாற்றை நோக்குகிற போது அரசகேசரி என்பவன் ஒரு கவிஞனாக, மந்திரியாக, முடிக்குரிய இளவரசனின் பாதுகாவலனாக, பக்திமானாக, இன்னும் போர்த்துக்கேய கத்தோலிக்க வெறியர்களிடமிருந்து யாழ்ப்பாண அரசை காக்க முனையும் வீரனாக பல பரிணாமங்களைப் பெறுவது கண்டு இன்புறத்தக்கது.

ரசகேசரியின் கவி வன்மை பற்றி அறிய இன்னும் சில செய்யுள்கள் தருதலே பொருந்தும்..

பாயிரத்தில் அவர் தாம் எழுதுகிற இரகுவம்சம் காளிதாசரது வடமொழிச் சொல்லின் மொழி பெயர்ப்பு என்பதுடன், அது ஒரு ஒலியை பெரிய மலை தடுத்து எதிரொலி செய்வது போல என்கிறார்.

‘வன்றிசைக் காளிதாசன் வடமொழி
தென்றிசைத் தமிழால் நனி செப்புகேன்
நன்றிசைக்கும் உரைவழி நன்னெடும்
குன்றிசைப்பது போலும் குறிப்பரோ’

வரது உவமையணியைக் காண ஒரு பாடல்..

ந்துமதிக்குச் சுயம்வரம் நடக்கிறது.. அவள் மாலையைக் கையில் கொண்டு ஒவ்வொரு அரசராகக் கடந்து செல்கிறாள். அவள் தமக்கு மாலையிடாது அப்பால் செல்கிற போது ஏமாற்றமடைகிற அவ்வரசர்களின் மனோநிலையைப் பதிவு செய்கிறது இப்பாடல்..

‘தேடுலாம் குமுதச் செவ்வாய் சுந்தரி இரவில் தொக்க
மாடு சால் அரசவீதி வயின் வயின் ஒருவிச் செல்லும்
வீடிலா தெரிசெஞ் சோதி விளக்கமதொத்தாள் வேந்தர்
நீடுகாள் இருள்சேர் மாட நிரையினை நிகர்த்திட்டாரே’

தாவது இரவில் மாடவீதியில் விளக்கோடு செல்கிற போது ஒவ்வொரு மாடமும் ஒளி பெற்று பின்னர் இருளடைவது போல, இவள் வருதலைப் பார்த்து ஒளி பெற்ற அரசர்களின் முகம், கடந்து செல்லுதலைப் பார்த்து இருளடைந்தது என்கிறார்.

க, வடமொழியில் சொல்லமுதமெனப் பிறந்த இரகுவம்சத்தின் சிறப்பை தமிழர்கள் அறியும் வண்ணம் தமிழில் அதே சுவையுடன் தந்த பெருமை அரசகேசரிக்கே உரியதாகும். எனவே, அதனைத் தமிழர்கள் யாவரும் சாதாரணமாகவேனும் அறிந்து வைத்திருத்தல் அத்தியாவசியமானது எனலாம்.

இரகுவம்ச பதிப்பு முயற்சிகள்

கணேசையர்

ந்நூல் முழுவதையும் காரைக்குடி மெய்யப்பச் செட்டியாரின் வேண்டுதலின் பேரில் ஆறுமுகநாவலரின் மருகரான பொன்னம்பலப்  பிள்ளை அவர்கள் 1887-ல் பதிப்பித்திருக்கிறார்கள்.

னினும், கற்றோரும் மலைக்கத் தக்க இக்காவியச் செய்யுள்களுக்குச் சீரிய பொருள் கண்டு இரு பகுதிகளாக 1915-லும் 1932-லும் வெளியிட்டவர் வித்துவசிரோமணி சி.கணேசையர் அவர்களாவர். இவரது இவ்வுரையோடு கூடிய இரகுவம்சத்தை மஹாமஹோபாத்யாயர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் படித்து

‘உலம் பூத்த புயவரசகேசரி ஆராய்ந்து முனதுரைத்ததாய
நலம் பூத்த சுவை இரகுவம்சத்திற்கினிய உரை நன்கியற்றி
பலம் பூத்த தமிழ்வலவர் மதிப்பவெளிப்படுத்தினன் யாழ்ப்பாண மேயோன்
குலம் பூத்த நலமுடையான் கணேசையப்பேராளன் குணமிக்கோனே’

என்று சிறப்புப் பாயிரம் அளித்திருக்கிறார்.

ன்றாலும், நுண்ணிய தமிழ் இலக்கண இலக்கிய கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இல்லாமற் போயுள்ள இன்றைய சூழலில் இரகுவம்சம் காணற்கரிய நூலாய் புலவரகங்களில் உள்ள பெட்டகங்களுள் மறைந்து வாழ்தல் வருத்தத்திற்குரியதேயாகும்.

க, தமிழ் ஹிந்து தர்மத்திற்கு சிறப்புச் சேர்க்க வல்லதாய் திகழ்கிற இந்நூல் பற்றித் தமிழ்ஹிந்துக்கள் அறிந்து வைத்திருத்தல் அவசியம் மிக்கதாகும்.

ooOOOOoo

2 Replies to “தமிழில் ரகுவம்சம்”

  1. பொதுவாகவே தரமும் நேர்த்தியும் உடையவை உங்கள் எழுத்துக்கள். அவ்வெழுத்துக்கள் என்னும் மணி மகுடத்தில் மற்றொரு நன் மணி ‘தமிழில் ரகு வம்சம்’ என்னும் இக்கட்டுரை.

    இக்கட்டுரையினூடே தாங்கள் எடுத்தாண்டுள்ள ஐந்து பாடல்களை மட்டுமாவது இன்றைக்குப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களிடம் தானாகப் படித்துப் பொருள் தரச் சொன்னால் தெரியும் இன்றைய தமிழர்களின் தமிழ்ப் படிப்பின் லக்ஷணம். இதில் விதி விலக்குகளாகச் சிலர் இருக்கக் கூடும்.

    சொல்லும் அதன் பொருளுமென இயைந்திருக்கும் சர்வேஸ்வரனையும் அவன் சக்தியையும் நமஸ்கரித்துத் தொடங்கிய அந்த நற்கவிஞனையும் (காளிதாசன்) அவன் ஆக்கத்தைத் தமிழாக்கிய அரசகேசரியையும் வாசகர்களுக்கு இவ்வலைத் தளத்தின் மூலம் கொண்டுவந்து காட்டியுள்ள நீர்வை தி. மயூரகிரி ஷர்மாவாகிய உங்களுக்கு நன்றிகள்.

    நிறைய வாசகர்கள் இதனைப் படிக்கப் பிரார்த்தனை செய்கிறேன்.

  2. Vanakkam…Is there any digital copy for this Kaaviyam.

    Thanks & Regards
    Murali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *