எழுமின் விழிமின் – 8

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு:  ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்:  ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.


<< முந்தைய பகுதி 

தொடர்ச்சி..

மறுமலர்ச்சிப் பணி – அதன் அடிப்படையும் போக்கும்

ஓ பாரத நாடே !

பிறருடைய கருத்துக்களை வெறுமனே எதிரொலிப்பதனாலே, மட்டரகமாகப் பிறரைப் பின்பற்றி நடிப்பதனாலே, பிறரை நம்பி வாழ்வதனாலே, நாகரிகத்தின் சிகரத்தையும் சீர் சிறப்பின் சிகரத்தையும் நீ எய்திவிட முடியுமா ?

அவமானகரமான இந்தக் கோழைத்தனத்தினாலே வீரதீரர்களுக்கே உரித்தான சுதந்திரத்தை நீ அடைய முடியுமா ?

ஓ பாரத நாடே !

சீதை, சாவித்திரி, தமயந்தி முதலிய கற்பில் சிறந்த உத்தமிகளை மறவாதே. உனது பெண்மையின் லட்சியத்துக்கு அவர்களே உதாரணம் !

யோகிகளுக்கெல்லாம் யோகியும், எல்லாவற்றையும் துறந்தவருமான உமாபதியாம் சங்கரனே நீ வணங்கும் கடவுள் என்பதை மறவாதே !

உனது திருமணம், உனது செல்வம், உனது உயிர் முதலானவை, உனது பிரத்தியேக இந்திரிய சுகபோகத்திற்கும், உனது சொந்த நன்மைகளுக்கும் ஏற்பட்டவை அல்ல என்பதை மறவாதே !

நீ தேவியின் பலி பீடத்துக்கான ஒரு யாகத் திரவியமாகப் பிறந்திருக்கிறாய் என்பதை மறவாதே !

உனது சமூக அமைப்பானது அகிலாண்டேசுவரியான பராசக்தியின் பிரதிபிம்பம் தான் என்பதை மறவாதே !

தாழ்த்தப்பட்டவர்களும், அறியாத மூடர்களும், ஏழைகளும், எழுத்து வாசனையற்றவர்களும், சண்டாளர்களும், தோட்டிகளும் உன் சகோதரர்கள், உன் இரத்தக் கலப்பு உள்ளவர்கள் என்பதை மறவாதே !

வீரனே !

தீரனாக இரு ! கோழைத்தனத்தை அகல ஓட்டு ! நீ ஒரு பாரத வாசி என்பதில் பெருமைகொள். “நான் ஒரு பாரத வாசி; ஒவ்வொரு பாரதீயனும் என் சகோதரன் !” என்று  பெருமையுடன் உரக்கக் குரல் எழுப்பு !

மூட பாரதீயனும், பிராம்மண பாரதீயனும், பறையனாகிய பாரதீயனும் எனது சகோதரன் என்று சொல்வாய். இடுப்பில் ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறவனாயினும், உரத்த குரலெடுத்து “பாரதீயரே எனது சகோதரர்; பாரதீயரே எனது உயிர்; பாரதத்தின் தேவ, தேவிகளே நான் வணங்கும் தெய்வங்கள்; பாரதத்தின் ஜன சமூகமே நான் குழந்தையாக இருந்தபோது படுத்து வளர்ந்த தொட்டில்; இளமையில் விளையாடிக் களித்த எழிற்பூங்கா; மூப்படைந்த தருணத்தில் அடையும் வாராணாசியான மோட்சம்” என்று பெருமையுடன் சொல்வாயாக !

சகோதரனே ! “பாரத பூமியே எனது அதியுயர்ந்த மோட்சலோகம்; பாரதத்தின் நன்மையே எனது நன்மை!” என்று சொல்வாயாக !

இரவிலும் பகலிலும் “கௌரி வல்லப ! அகிலாண்டேசுவரி ! ஆண்மைத்தனத்தை எனக்கு அருள்வீர்களாக ! வல்லமையை அருளும் தாயே ! எனது கோழைத்தனத்தை அகற்றுவாய். எனது பேடித்தனத்தைப் போக்குவாய் ! என்னை ஓர் ஆண்மகனாக ஆக்கு !” என்று இடையறாது பிரார்த்தனை செய் !

‘மேலை நாட்டில் இருந்து வருவதே தலைசிறந்தது’

இந்நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்நாட்டின் செல்வாக்கு பாரதத்துக்குள் பொழியத் துவங்கியபோது, வெற்றி கொண்ட மேனாட்டவர்கள் வாள்கரத்துடன், ரிஷிகளின் புதல்வர்களிடம் வந்தார்கள்.

“நீங்கள் வெறும் காட்டுமிராண்டிகள். கனவு காண்கிறவர்களின் இனத்தவர் நீங்கள். உங்களது சமயம் வெறும் கட்டுக்கதை தான். உங்களது கடவுளும், ஆத்மாவும் நீங்கள் எதை எய்ய விரும்பிப் போராடினீர்களோ அவையும், எல்லாமே அர்த்தமற்றவை. ஆயிரமாண்டுகளாக நீங்கள் நடத்திய போராட்டம், ஆயிரம் ஆண்டுகளாக நீங்கள் பூண்ட முடிவற்ற துறவறம் ஆகியவை எல்லாம் வீணாகிவிட்டன” என்று நிரூபித்துக் காட்ட வந்தார்கள். அப்பொழுது பல்கலைக் கழக மாணவர்களிடையே இந்தப் பிரச்சினை பரபரப்பை உண்டாக்கியது.

‘இதுவரையில் வாழ்ந்து வந்த நமது தேசீய வாழ்க்கை தோற்று விட்டதா ? மேலைநாட்டுத் திட்டத்தின்படிப் புதிதாக ஆரம்பிக்க வேண்டியதுதானா ? நமது பழைய புத்தகங்களைக் கிழித்து, தத்துவ ஞானங்களைக் கொளுத்தி, உபதேசகர்களை ஓட்டி விரட்டிக் கோயில்களை இடித்துத் தள்ளலாமா ?’

என்றெல்லாம் எண்ணினார்கள்.

தங்கள் சமயத்தை வாள்கொண்டும் துப்பாக்கி கொண்டும் நிரூபித்துக்காட்டிய வெற்றியாளனான மேல் நாட்டவன், நமது பழைய வழி முறைகளெல்லாம் வெறும் மூட நம்பிக்கையென்றும், வெறும் விக்கிரக ஆராதனை தான் என்றும் கூறவில்லையா ?

மேல்நாட்டவன் திட்டப்படி துவக்கப்பட்ட புதிய கல்விக் கூடங்களில் பழக்கப் படுத்தப்பட்டு, கல்விப் பயிற்சி பெற்றவர்கள் மேற்கூறிய கருத்துக்களைத் தமது சிறு பிராயம் முதலே உட்கொண்டார்கள். ஆகவே, அவர்களுக்குச் சந்தேகங்கள் எழுந்ததைக் குறித்து வியப்படைய வேண்டியதில்லை. ஆனால், மூடநம்பிக்கைகளைத் தூர எறிந்துவிட்டு, சத்தியம் எது என்று உண்மையான ஆராய்ச்சியைத் துவக்காமல், ”மேற்குநாடு என்ன சொல்கிறது?” என்ற கேள்விதான் உண்மைக்கு ஒரே உரைகல்லாகி இருக்கிறது.  ‘குருமார்கள் ஒழிய வேண்டும்; வேதங்கள் ஒழிய வேண்டும்’ – ஏனெனில், அவ்வாறு மேல்நாடு கூறுகிறதே ?

பலசாலியை அண்டி அனைவரும் போகிறார்கள்

இங்கிலாந்திலும்கூட கவனித்திருக்கிறேன் – பலங்குறைந்த தேச மக்களுக்குப் பிறந்த குழந்தைகள் இங்கிலாந்தில் பிறந்தால், தாம் கிரேக்கர், போர்த்துக்கீசியர், ஸ்பெயின் நாட்டவர் என்று முறைப்படித் தம்மை அழைத்துக் கொள்ளாமல் ஆங்கிலேயன் என்றே தம்மை அழைத்துக் கொள்கின்றன. பலமுள்ளவனையே எல்லாரும் அனுசரித்துப் போகிறார்கள். பலமுள்ளவனின் புகழொளி நமது உடலின் மீதும் பட்டுப் பிரதிபலிக்காதா? பலசாலியின் புகழ் ஜொலிப்பில் இருந்து கடன் வாங்கி நாமும் மினுக்கிக் கொள்லலாமே? என்பவை பலமில்லாதவனின் விருப்பமாக இருக்கிறது.

பாரதம் உறக்கத்தில் இருந்து விழித்து வருகிறது

இப்பொழுதுள்ள பாரத அரசாங்கத்திடம்* சில குறைகள் உள்ளன. அத்துடன் மிகப்பெரிய நல்ல அம்சங்களும் உள்ளன. அவற்றுள் மிகப்பெரிய நன்மை இதுதான்: பாடலிபுத்திர சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குப் பிறகு, இதுவரை பாரத நாடானது பிரிட்டனைப் போன்று, நாடு நெடுகிலும் தனது செங்கோலைச் செலுத்திவரும் சக்திவாய்ந்த ஓர் இயந்திரத்தின் கண்காணிபின்கீழ் இருந்ததில்லை.

(* –  இது 1880 – 1904 காலகட்டத்தில்  பேசப்பட்டது  என்பதை   நினைவில் கொள்ளவும்).

வைசியர்களின் ஆதிபத்தியத்தில் (வைசியனிடம் இயற்கையாகவே இருக்கும் கடும் உழைப்புக் குணத்துக்கு நாம் நன்றி செலுத்துகிறோம்) உலகத்தின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு வியாபாரப் பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன.

அதே நேரத்தில் அதே இயல்பின் விளைவாகப் பற்பல நாடுகளின் கருத்துக்களும், சிந்தனைகளும் பாரதத்தின் எலும்புக்குள்ளும், ஊன் உதிரத்துக்குள்ளும் பலவந்தமாக நுழைந்து வருகின்றன. இந்தக் கருத்துக்களிலும் சிந்தனைகளிலும் பாரதத்துக்கு மிகுந்த நன்மை தருவதாக உள்ளவை சில. வேறு சில தீமை விளைவிக்கக் கூடியவை. மற்றக் கருத்துக்கலெல்லாம், இந்த நாட்டு வாசிகளான மக்களுக்கு எது உண்மையாகவே நல்லது என்பது பற்றி முடிவு கட்ட முடியாத அந்நியர்களின் அறிவீனத்தையும், திறமையின்மையையும் வெளிப்படுத்துகின்றன.

ஆனால், தன்னை மூடி மேடுபோலச் சூழந்திருக்கும் நன்மை-தீமைகளைத் துளைத்துக்கொண்டு பாரதத்தின் வருங்கால வள வாழ்வு எழுந்து வருகிறது. இதற்கான நிச்சயமான அறிகுறி காணப்படுகிறது. ஒருபுறம் பாரதத்துக்குச் சொந்தமான பழைய தேசீய லட்சியங்கள். மறுபுறம் அந்நிய நாடுகளால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விசித்திரமான லட்சியங்கள்.

இவை இரண்டும் ஒன்றையொன்று தாக்குகின்றன. அதனிடையே மெல்ல நீளுறக்கத்தில் இருந்து சாவதானமாகக் கண் விழித்து வருகிறது பாரதம்.

இந்தச் சிறு விழிப்பில் இருந்து, நவபாரதத்தில் சுதந்திரமன வெளிச்சார்பு அற்ற சிந்தனையானது ஓரளவுக்கு உதித்து வருகிறது. ஒருபுறம் நவீன மேல்நாட்டு விஞ்ஞானம் கோடிசூரியப் பிரகாசத்துடன் கண்ணைப் பறிக்கிறது. நேர்முகமாக வேலை செய்யும் கண்கண்ட கூரிய சக்திகளைக் கொண்டு திட்டவட்டமான உண்மைகளை அவர்கள் திரட்டிச் சேர்த்திருக்கிறார்கள். அந்தத் திட்டவட்டமான உண்மைகள் என்ற ரதத்தின் மீதேறி வந்து நம்மைத் தாக்கிக் காயமுறச் செய்கிறார்கள்.

பாரதநாடு புகழின் சிகரத்தில் இருந்த காலத்தில் அதன் பண்டைய முன்னோர்கள் நம்பிக்கையும் சக்தியும் ஊட்டுகின்ற ஞான சம்பிரதாயங்களை வகுத்தார்கள். அதன் சம்பிரதாயங்களைப் பாரத நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்த மகிரிஷிகள் சரித்திரத்தின் ஏடுகளில் இருந்து திரட்டி வெளிக் கொணர்ந்தார்கள்.

அந்தப் பாரம்பரியங்கள் எண்ணிலடங்காத ஆண்டுகளாக, நூற்றாண்டுகளாக ஓடி வருகின்றன; உலகனைத்திடம் கொண்டுள்ள அன்பினால் அதிகமான துடிப்பைப் பெற்று, பாரதத்தின் இரத்தக் குழாய்களில் பாய்ந்து வந்துள்ளன.

அந்தப் பரம்பரை எவராலும் மிஞ்சப் படாத வீரத்தைக் காட்டுகிறது. மனித சக்திக்கு மீறிய மேதாவிலாசத்தையும் மிகவுயர்ந்த ஆத்மீகத்தையும் வெளிக்காட்டுகிறது. தேவர்களும் அது கண்டு பொறாமைப் படுகிறார்கள். இந்தக் காட்சிகள் வருங்கால பாரதத்தைப் பற்றிய நம்பிக்கையைத் தூண்டுகின்றன.

ஒருபுறம் அப்பட்டமான உலகாயத வாதம், செல்வக் கொழிப்பு, பிரம்மாண்டமான சக்திகளின் குவியல், தீவிரமான போக உணர்ச்சி ஆகியவை எல்லாம் அந்நிய இலக்கியங்கள் மூலம் மகத்தான கிளர்ச்சியை உண்டாக்கின. மறுபுறம் இத்தகைய கர்ணகடூரமான குழப்பக் கூச்சலுக்கிடையே, மெல்லிய, ஆனால் தெளிவான, தவறற்றக் குரலில் தனது பழைய தெய்வங்களின் உள்ளமுருக்கும் ஓலத்தைக் கேட்டு பாரதத்தாய் திடுக்கிட்டெழுகிறாள்.

அவள் முன்னிலையில் மேனாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பலவிதமான விசித்திர போகப் பொருள்கள் உள்ளன. தேவலோகப் பானங்கள், சுவையாகச் சமைக்கப்பட்ட விலையுயர்ந்த உணவு, நேர்த்தியான ஆடையணிகள், மேன்மை வாய்ந்த அரண்மனைகள், புதுவிதமான வண்டி, வாகனங்கள், புதிய பழக்கங்கள், புதிய நாகரிக முறையில் ஆடையணிந்து கொண்டு நன்கு கற்றுத் தேர்ந்த பெண்கள்  வெட்கமில்லாத சுதந்திரத்துடன் நடமாடும் காட்சி – இவையெல்லாம் இதற்கு முன் உணர்ந்திராத ஆசைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

மறுபடியும் காட்சி மாறுகிறது. அதே இடத்தில் உக்ரமான தோற்றமளிக்கும் புதுக்காட்சி விரிகின்றது: சீதை, சாவித்திரி, கடுமையான ஞான சம்பந்தமான விரதங்கள், உபவாசங்கள், காட்டிலுள்ள தனி இடம், அரை நிர்வாணமான துறவியின் சடை முடியும், காவியாடையும், சமாதியும், பிரம்மத்தைத் தேடும் முயற்சியும் ஆகிய இக்காட்சிகளே தோன்றுகின்றன.

ஒரு பக்கம் தன்னலத்தை அடிப்படையாகக் கொண்ட மேலை நாட்டுச் சமூகங்களின் சுதந்திரம்; மறுபக்கம் ஆரியமக்கள் சமூகத்தினது தன்னல மறுப்பின் எல்லை. இத்தகைய உக்ரமான போராட்டத்தில் பாரத சமுதாயம் மேலும் கீழும் தூக்கியெறியப்படுவதில் என்ன புதுமை இருக்கிறது ?

மேலை நாட்டின் லட்சியம் – தனி மனிதனின் சுதந்திரம்; அதன் மொழி – பணம் திரட்டும் கல்வி; அதற்கான வழி – அரசியல்.

பாரதத்தின் லட்சியம் – முக்தி; அதன் மொழி – வேதம்; அதற்கான வழி – துறவு.

சிறிது நேரம் தற்காலப் பாரதம், “இனி வரப்போகும் நிச்சயமற்ற ஞான நலத்தின் கவர்ச்சிக்கு நான் உள்ளாகி, அதனை வீணாக எதிர்பார்த்து, இந்த எனது உலக வாழ்க்கையைப் பாழக்கிக்கொண்டு வருகிறேன்” என்று நினைப்பது போன்று உள்ளது. ஆனால், என்ன ஆச்சரியம் !

மறுபடியும் அது –  ‘இதி ஸம்ஸாரே ஸ்புடரதோஷ: கதமிஹ மானவ தவ ஸந்தோஷ:’ – மரணமும் மாறுபாடும் நிறைந்த பிறவியாகிய இதிலே, மனிதனே, உனக்கு மகிழ்ச்சி எவ்வாறு உண்டகும்?’ என்ற வாக்கியத்தைக் கேட்டு, மந்திரத்தால் கட்டுண்டவரைப் போன்று அதைக் கூர்ந்து கவனிக்கிறது.

புதிய பாரதம் ஒரு பக்கம், “மேலை நாட்டினரின் கருத்துக்களையும், மொழியையும், உணவையும், உடையையும், நடையையும் நாம் கைப்பற்றினால்தான் மேலை நாட்டின்ரைப் போன்று ஆற்றலும் சக்தியும் உடையவராவோம்” என்று கூறிக்கொண்டிருக்கிறது.

பழைய பாரதமோ மறுபக்கத்தில், “பேதைகளே ! ‘காப்பி’யடிப்பதானால் பிறருடைய கருத்துக்கள் ஒருவனுக்கு ஒருநாளும் தனது சொந்தக் கருத்துக்கள் ஆவதில்லை. உழைத்துப் பெறுவதனால் அன்றி எதுவும் ஒருவனது உரிமையாகாது. சிங்கத்தின் தோலைப் போர்த்த கழுதை சிங்கமாவதுண்டோ?” என்று மறுத்துரைக்கிறது.

புதிய பாரதம் ஒரு பக்கம், “மேலை நாட்டினர் செய்வது நன்மையாவது திண்ணம்; அன்றேல், அவர்கள் அவ்வளவு பெருமையை எவ்வாறு அடைந்தனர்?” என்று கேட்க, பழைய பாரதம் மறுபக்கம், “மின்னலின் ஒளி, கடும் பிரகாசமாக இருக்கிறது. ஆனால், அது ஒரு கணத்திற்கே ! சிறுவர்களே பாருங்கள். அது உங்கள் கண்ணைப் பறிக்கின்றது. ஜாக்கிரதை!” என்று எச்சரிக்கிறது.

(தொடரும்)

அடுத்த பகுதி >> 

2 Replies to “எழுமின் விழிமின் – 8”

  1. ரொம்ப நல்லா இருக்கு! தயவு செய்து தொடரவும்!

  2. எழுமின் விழிமின் தொடரின் இதுவரை வெளிவந்துள்ள் எட்டுக் கட்டுரைகளையும் படித்துவிட்டேன். அருமை. ஸ்வாமி விவேகானந்தரின் தீர்க்க தரிசனம் எல்லா மக்களுக்கும் சேரட்டும்.

    குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர், இறைவனை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் உலகக் காரியங்களைச் செய்யுமாறு உபதேசித்தார்.

    அவரது மறு வடிவமாகும் ஸ்வாமி விவேகானந்தரோ, சமயத்தை அடித்தளமாகக்கொண்டு உலக வாழ்வின் அனைத்துத் துறைப் பணிகளையும் அதற்கு உட்பட்டுச் செய்யும்படி கூறுகிறார்.

    என்ன பொருத்தமான குருவும் சீடரும்..!

    ஸ்வாமிஜியின் சிந்தனைகள் இந்த 150 ஆம் ஆண்டிலாவது எல்லா இந்தியர்களையும் சென்றடையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *