இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 3

ஆங்கில மூலம்: எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம்: எஸ். ராமன்


முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

3.1 ஆள்பவன் மக்களின் காவலன்

புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாய் தசரதருக்கு இராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் என்று நான்கு மகன்கள் பிறக்கின்றனர். அவர்கள் அஸ்திர, சஸ்திர கலைகள் எல்லாம் கற்று நன்கு வளர்ந்து வரும் வேளையில், ஒரு நாள் வனத்தில் தவம் செய்துவரும் விச்வாமித்திர மகரிஷிகள் தனது தவம் மற்றும் யக்ஞத்திற்கு இடையூறு செய்து வரும் அரக்கர்களின் கொட்டத்தை அழிக்க ஏதுவாய் தசரதரின் உதவியை நாடி வந்தார். அவரும் இராமன், லக்ஷ்மணன் இருவரையும் அவருடன் அனுப்பி வைத்தார். அவர்கள் போகும் வழியிலேயே தாடகை என்னும் கொடிய, எவராலும் அடக்கமுடியாத அரக்கி அவர்களைத் தாக்க வந்தாள். அவளது அட்டகாசம் அங்கு தாங்க முடியாமல் இருந்ததால், அவளைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று விச்வாமித்திரர் கூற, ராம-லக்ஷ்மணர்கள் அவளிடம் போர் புரிந்து அவளைக் கொன்றுவிடுகின்றனர்.

சாதாரணமாக, பெண்மணியைக் கொல்வது ஒரு பாவச் செயல். தாடகை பெண் என்பதால், அவளைக் கொல்வதும் பாவச் செயல் என்றுதானே ஆகிறது. இங்குதான் நீதி, நேர்மை என்பதைப் பற்றிச் சொல்லும்போது, மக்களுக்குச் சொல்லப்படும் நீதி வேறு, ஆள்பவர்க்குச் சொல்லப்படும் ராஜ நீதி வேறு என்று  புரிந்துகொள்ள வேண்டும். சாதாரணமாகக் கொல்வது என்பது பாவம் என்றாலும், ஒரு அரசனுக்கு மக்கள் அனைவரையும் காக்கும் கடமை இருக்கிறது. அதனால் ஒரு ஆட்சி மக்களைக் காக்கும் வண்ணம் அமையவேண்டும்; மக்களைத் தாக்கும் வண்ணம் இருக்கக் கூடாது, மாறாக மக்களைத் தாக்குபவர்களைத் தாக்கும் வண்ணம் செயல் புரியவேண்டும். அதுதான் இங்கு கூறப்படுகிறது.

ந்ருʼஸ²ம்ʼஸமன்ருʼஸ²ம்ʼஸம்ʼ வா ப்ரஜாரக்ஷணகாரணாத்|
பாதகம்ʼ வா ஸதோ³ஷம்ʼ வா கர்தவ்யம்ʼ ரக்ஷதா ஸதா|| 1.25.17||

ரக்ஷதா while protecting, காக்கும் போது
ஸதா by a virtuous man, நற்குணங்கள் கொண்டவனால்
ப்ரஜாரக்ஷணகாரணாத் for the welfare of the subjects, மக்களின் நலனுக்காக ந்ருʼஸ²ம்ʼஸம்ʼ வா either cruel, கொடூரமானதோ
அன்ருʼஸ²ம்ʼஸம்ʼ வா or not cruel, கொடூரமற்றதோ
பாதகம்ʼ வா or a sin, அல்லது பாவச் செயலோ
ஸதோ³ஷம்ʼ வா or involving a mistake, அல்லது தவறானதோ
கர்தவ்யம் should be done, செய்யவேண்டும்.

மக்களைக் காக்கும் பணியில், சாதாரணமாகக் கருதப்படும் தவிர்க்கப்பட வேண்டிய செயல், அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற செயல் என்றாலும் அரசு அதைச் செய்யவேண்டும்.

அரசு அப்படி கொடூரமாகத் தண்டனை வழங்கும்போது, அது தனது காக்கும் கடமையைத்தான் செய்கிறதே தவிர, ஒரு பாவச் செயலை அல்ல. அது நல்ல செயல் அல்ல என்று நினைத்து, அப்படிச் செய்வதற்குத் தயங்கி அந்தச் செயலைத் தவிர்ப்பது கூடாது.

3.2 பொறுமை என்னும் நகை

ராம-லக்ஷ்மணர்களை அழைத்துக்கொண்டு விஸ்வாமித்திரர் தன் தவச்சாலைக்குச் செல்லும் வழியில், தன் முன்னோர்களின் வரலாற்றைச்  சொல்லிக்கொண்டே போகிறார். அவரது தந்தை பெயர் கதா என்றும், பாட்டனார் பெயர் குஷானபா என்றும் சொல்லி, குஷானபாவிற்கு நிறைய மகள்கள் இருந்தனர் என்றும் சொல்கிறார்.

அந்தப் பெண்களின் அழகில் மயங்கி, வாயு பகவான் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கிறான். அவர்கள் வாயுவின் வேண்டுகோளை மறுத்து, தங்கள் தந்தை எவரைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்கிறார்களோ அவர்களைத்தான் மணப்போம் என்று கூறுகின்றனர். அதைக்கேட்டு வாயு மிக்க கோபமுற்று அவர்களைக் குரூரமாக்கி, கூனிகளாயும் ஆக்கிவிட, அவர்கள் நடந்த உண்மையை தங்கள் தந்தையிடம் சொல்கின்றனர். குஷானபா ஒரு அறிவு மிக்க அரசன். வாயுவிடம் சண்டையோ, சச்சரவோ போட்டுப் பயனில்லை என்று உணர்ந்து தன் மக்களை பொறுமையாக இருக்கச் சொல்கிறான். பின்னர் அவன் ஒரு முனிவர் மகனான பிரம்மதத்தன் என்பவனுக்கு அவர்களை மணம் செய்து கொடுத்துவிடுகிறான். திருமணத்தின்போது அவனது கையை அவர்கள் பிடிக்கும்போது, அதிசயமாக அவர்கள் அனைவரின் அழகும் திரும்பி, கூனலும் மறைகிறது. பொறுமையைக் கடைப்பிடியுங்கள் என்று அரசன் தன் மக்களுக்குக் கூறும் சுலோகம் இது:

அலங்காரோ ஹி நாரீணாம்ʼ க்ஷமா து புருஷஸ்ய வா|
து³ஷ்கரம்ʼ தச்ச யத் க்ஷாந்தம்ʼ த்ரித³ஸே²ஷு விஸே²ஷத:|| 1.33.7||

நாரீணாம் for women, பெண்ணுக்கோ
புருஷஸ்ய வா or for men, ஆணுக்கோ
க்ஷமா forbearance, பொறுமை
அலங்காரோ ஹி is an ornament, ஒரு நகை
க்ஷாந்தம் இதி யத் which act of forgiving, மன்னித்தல் எனும் காரியம்
தத் து³ஷ்கரம் that one is difficult, அது கடினமானது
த்ரித³ஸே²ஷு even for gods, கடவுளுக்குக் கூட
விஸே²ஷத: especially difficult, மிகக் கடினமானது.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ  பொறுமை என்பது நகைபோல அமைந்து அவர்களின் அழகைக் கூட்டிக் காட்டும். ஆனாலும் மன்னித்தல் என்பது எவருக்குமே கடினமான ஒரு காரியம்; கடவுளுக்குக் கூட அது மிகக்  கடினமானதாக இருக்கிறது.

அநியாயமாக ஒருவன் அவதிப்பட நேர்ந்தால், ஆத்திரம் வருவதும் இயற்கையே; அதுபோல அதிலிருந்து உடனே அவன் நிவர்த்தியும் தேடுவான். அப்போது அவன் பொறுமை இழந்து தவறான வழியில் சென்று மேலும் துயரங்களை வரவழைத்துக் கொள்வான். ஆதலால் அவன் பொறுமையைக் கடைப்பிடித்து, அமைதியாகவும், பின்விளைவுகளை யோசித்தும் தான் செய்ய வேண்டிய காரியங்களில் ஈடுபட்டால் அவனுக்கு வேண்டிய நல்ல தீர்வும் கிடைக்கும்.

3.3 விழிமின்! எழுமின்!!

ராம-லக்ஷ்மணர்கள் இளவரசர்களாக மாளிகையில் சுகபோகத்துடன் வசித்தவர்கள். அதனால் அவர்கள் உல்லாசமாகவும், எந்தவித இன்னல்கள் தெரியாதவர்களாகவும்  வாழ்ந்துகொண்டு  இருந்தவர்கள். அவர்கள் பின்பு வரப்போகும் வாழ்க்கையின் இன்னல்களைப் பற்றி அறியாதவர்களாக இருந்தனர். காட்டின் உள்ளே தான் இருந்த பர்ணசாலைக்கு விஸ்வாமித்திரர் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அப்படிச் செல்லும்போது அவர்கள் கல்லிலும், முள்ளிலும் நடந்து செல்லவேண்டி இருந்தது; வழியில் கிடைக்கும் காய், கனிகள் மட்டுமே அவர்களின் உணவாக இருந்தது; மற்றும் உறங்குவதற்கோ கட்டாந்தரையே  கட்டிலாகவும், வான்வெளியே போர்வையாகவும் இருந்தன. இப்படியாக அவர்களுக்கு வரப்போகும் வாழ்க்கை முறைக்கு அவர்களை முனிவர் தயார் பண்ணிக்கொண்டிருந்தார். காலை புலர்ந்ததும் அவர்களை முனிவர் இப்படியாக எழுப்புவார்:

கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா சந்த்⁴யா ப்ரவர்த்ததே |
உத்திஷ்ட² நரஸா²ர்தூல கர்த்தவ்யம் தை³வமாஹ்நிகம் ||

(ஆம், இது அனைவரும் அறிந்த வெங்கடேச சுப்ரபாதத்தில் வரும் தொடக்க வரிகள்தான். ஆனால், எத்தனை பேருக்கு இது வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்லோகம் என்று தெரிந்திருக்குமோ?)

கௌஸல்யா ஸுப்ரஜா: O! Beloved son of Kausalya, (a son by whom Kausalya became a blessed mother), கௌசல்யாவின்செல்ல மகனான (ஒரு மகனால் ஆசீர்வதிக்கப்பட்ட கௌசல்யாவின்)
ராம O!Rama, ராமனே!
பூர்வா ஸந்த்⁴யா the day-break, வைகறைப் பொழுது
ப்ரவர்ததே is commencing, புலர்ந்து விட்டது
நரஸா²ர்தூ³ல O!Best among men, புருஷோத்தமனே
உத்திஷ்ட² awake (fromsleep), உறக்கத்திலிருந்து எழு
தை³வம் oblations to gods, தெய்வத்திற்குச் செய்யவேண்டிய
ஆஹ்னிகம் religious rite to be performed every day at a fixed hour, நித்ய கர்மானுஷ்டானங்கள்
கர்தவ்யம் are required to be done, செய்யப்படவேண்டி காத்திருக்கின்றன.

கௌசல்யையின் செல்ல மகனே! வைகறைப் பொழுது புலர்ந்து விட்டது. புருஷர்களில் உத்தமனே! விழித்துக் கொள். இன்று நீ ஆற்ற வேண்டிய தெய்வீகக் கடமைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

ஆனந்தம் என்பது படுக்கையில் சோம்பேறித்தனமாகப் படுத்துக் கொண்டிருப்பதில் இல்லை; அது நாம் தினப்படி செய்யவேண்டிய கடமைகள் அனைத்தையும் இறைவனுக்கு ஆற்றுவதாக எண்ணிக்கொண்டு செய்வதில்தான் இருக்கிறது. ஆதலால் ஒருவன் காலையில் எழும்போதே தனது கடமைகள் அனைத்தையும் உணரவைக்கவும், அவைகளைச் செவ்வனே ஆற்றவைக்கவும் இறைவனை வேண்டிக்கொள்ளவேண்டும். வாழ்வில் துன்பங்களும், இடையூறுகளும் கூட இறைவனின் தயவால் வருபவைதான். அவைகளே ஒருவனை வாழ்வில் போராடவைத்து உயர்த்தி வைக்கும், தூய்மைப்படுத்தும். இராமரும் அப்படித்தான் பிரச்சினைகளைச் சந்தித்து எதிர்கொண்டார். இந்த ஸ்லோகத்தின் மூலம் வரும் அறிவுரை, இராமனை எழுப்புவதல்லாமல் நம் அனைவரையுமே தட்டி எழுப்பி,  உறக்கத்திலிருந்து விடுவித்து தம்தம் செயல்களில் ஈடுபடவைக்க உதவுவது என்றே கொள்ளவேண்டும். அப்படிக் கொண்டால் அந்த ஸ்லோகத்தைக் காலையில் மட்டும்தான் சொல்லவேண்டும் என்பதில்லை; நம்மை இறைவன் காக்க வேண்டி ஸ்லோகத்தை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.

உபநிடத வாக்கியமான “உத்திஷ்டத ஜாக்ரத ப்ரப்யா வரன் நிபோததா” கூறுவதின் பொருளும், சுவாமி விவேகானந்தர் அடிக்கடி குறிப்பிடும் “எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும்வரை விடாது முயன்றிரு” என்பதுதானே.

3.4 உலகே மாயம்

விஸ்வாமித்திரரின் லீலைகளைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லும்படியான முக்கிய சம்பவம் ஒன்றுண்டு.  இஷ்வாகு பரம்பரையில் த்ரிசங்கு என்றொரு அரசன் இருந்தான். நற்பண்பு மற்றும் நல்லொழுக்கத்துடன் கூடிய நல்ல அரசனாக அவன் ஆண்டுகொண்டு இருந்தான். அரசனாகத் தான் பணியாற்றிய நல்ல செயல்கள் எல்லாமும் தன்னை சுவர்க்க லோகத்திற்கு இட்டுச் செல்லும் என்றும், அதையும் தான் இறந்தபின் அல்லாது, உயிருடன் இருக்கும்போதே அடையவேண்டும் என்றும் அவன் அளவுக்கதிகமாக விரும்பினான். அப்படி சுவர்கத்தை அடைய தனது குருவாகிய வசிஷ்ட முனிவரின் உதவியை நாடினான். வசிஷ்டரோ எவனும் உயிருடன் இருக்கும்போதே தனது உடலுடன் சுவர்கத்தை அடையமுடியாது என்று கூற, அதை அவன் ஏற்க மனமில்லாது வசிஷ்டரின் புதல்வர்களை நாடினான். அவர்களும் தங்கள் தந்தை கூறியவாறே சொல்ல, அவனோ தாங்கள் எவருக்கும்   அப்படிச் செய்ய மனமில்லையோ அல்லது முடியவில்லையோ என அகம்பாவத்துடன் கூறி, எவர்களால் அது முடியுமோ அவர்களிடம் செல்கிறேன் என்று அவமதிக்கும்படியாகவும் சொன்னான். அந்த பொறுப்பற்ற வார்த்தைகளைத் தாங்க முடியாத அவர்களும் அவனை ஒரு காட்டுவாசியாகப் போய்விடுவாய் எனச் சாபமிட்டனர். அதேபோல் அவன் காட்டுவாசியாக உடனே மாற, நடந்ததை எதிர்பாராத த்ரிசங்கு வெறுத்துப்போய் விச்வாமித்திர ரிஷியிடம் தஞ்சம் புகுந்து அவரிடம் நடந்ததைச் சொன்னான்.

விஸ்வாமித்திரரும் அவனிடம் இரக்கப்பட்டு, காட்டுவாசியாய் இருக்கும் அவனது உடலுடனேயே அவன் ஸ்வர்கத்தை அடைவதற்கு அவர் உதவுவதாகச் சொன்னார். சொன்னபடியே அவரும் திரிசங்கு தன் உடலுடன் மேலுலகம் செல்வதற்காக, அதற்குண்டான தேவர்களைப் ப்ரீத்தி செய்யும் யாக, யக்ஞங்களைச் செய்தும், அந்தப் பொறுப்பில் உள்ள தேவர்கள் உடலுடன் செல்ல அனுமதி தருவதற்கு மறுத்துவிட்டனர். ஆனாலும் அவன் அவரால் மேலுலகம் அனுப்பப்பட அவர்கள் அவனை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டனர். விஸ்வாமித்திரர் கோபப்பட்டு தனது யோக சக்தியால் திரிசங்குவிற்காக என்று தனியே இன்னுமொரு ஸ்வர்கத்தைத் தயார் செய்து, கீழே விழும் அவனைத் தடுத்து அங்கே இருக்கச் செய்தார். அந்தப் புது ஸ்வர்கமோ தலை கீழானதாக அமைந்திருந்தது. அந்த இடத்தை அவர் மேலும் விரிவாக்கும் வேலையில் ஈடுபட்டபோது, தேவர்கள் அவரிடம் வந்து மானிடர்கள் உடலுடன் மேலுலகம் வருவது இறைவனின் நியதிப்படி சரியில்லை என்றும், அவர் மேற்கொண்டு அந்தப் பணியில் ஈடுபடாது அதை உடனே நிறுத்தவும் வேண்டினர். அவரும் அவர்களின் வேண்டுகோளைப் புரிந்துகொண்டு அந்தப் பணியை நிறுத்தினாலும், திரிசங்குவை அவருக்காக ஏற்படுத்திய ஸ்வர்கத்திலேயே விட்டுவிட்டார். இன்றும் அவன் அங்கு இருப்பதாகத்தான் ஐதீகம்.

மனித முயற்சிக்கு அப்பால் உள்ளவைகளுக்கு திரிசங்கு ஆசைப்பட்டான். அதனால் இறைவனின் நியதிக்கு எதிராக அவன் செயல்பட்டான். அப்படி அவன் செய்ததன் வீணான வேலையை நொந்து அப்போது அவன் சொன்னது:

தை³வமேவ பரம்ʼ மன்யே பௌருஷம்ʼ து நிரர்த²கம்|| 1.58.22||
தை³வேனாக்ரம்யதே ஸர்வம்ʼ தை³வம்ʼ ஹி பரமா க³தி:|

தை³வமேவ destiny alone, தெய்வ நியதி ஒன்றே
பரம் is all-powerful, முடிவான ஒன்று
மன்யே I am thinking, எனக்குத் தெரிந்தவரை
பௌருஷம் து the effort of a man, மனித முயற்சி
நிரர்த²கம் is in vain, வீணானது
ஸர்வம் everything, எல்லாமே
தை³வேன by destiny,
ஆக்ரம்யதே is occupied,
தை³வம் destiny, விதி
பரமா supreme, முடிவானது
க³தி: ஹி way indeed, சரியான வழி

இறைவனது ஆளுமையின் முன் மனிதனின் முயற்சி வெல்லமுடியாது. ஆதலால் இறைவனின் வழியைப் பின்பற்றிச் செல்வதே அறிவார்ந்த செயல். அது ஒன்றே சரியான வழி.

இறைவனின் நியதிப்படி செல்லாது அதனை எதிர்த்துத் தன் வழியே செல்ல முயன்ற திரிசங்கு தனக்கு மேலும் துன்பங்களை வரவழைத்துக் கொண்டான். நம்மால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செவ்வனே செய்வது ஒன்றே அறிவுடையவன் செயலாகும்.

3.5 மனைவி ஒரு தோழி

அரக்கர்களுக்கு எதிராக விஸ்வாமித்திரரின் யாகங்களுக்கு உதவி செய்துவிட்டு ராம-லக்ஷ்மணர்கள் அவருடன் ஜனக மகாராஜாவின் நாடு வழியே திரும்பி வந்தனர். அப்போது தனது மகளான சீதைக்கு அவர் சுயம்வரம் நடத்திக் கொண்டிருந்தார். அதில் எவர் தன்னிடம் உள்ள பரசுராமர் தந்த முன்பு சிவபெருமானிடம் இருந்த வில்லுக்கு நாண் ஏற்றித் தனது வீரத்தை நிரூபிக்கிறார்களோ, அவருக்கே தன் மகளை மணம் செய்துகொடுப்பதாக ஒரு ஏற்பாடு செய்திருந்தார். சுயம்வரத்திற்கு வந்த பல இளவரசர்களும் முயற்சி செய்துவிட்டு தோல்வியையே அடைந்தனர். விஸ்வாமித்திரர் அனுமதி தந்ததால் இராமன் வில்லை எடுத்து நாண் ஏற்றும்போது, அந்த வில்லே இரண்டாக முறிந்துவிட்டது. அதைப் பார்த்த ஜனகர் சீதைக்கு இராமனே தகுதி வாய்ந்த கணவன் என அறிவித்து, அவர்களுக்கு விஸ்வாமித்திரர் முன்னிலையில் திருமணமும் செய்துவைத்தார்.

திருமணம் செய்து வைக்கும்போது தனது பெண்ணை அவனது மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி மந்திரங்களுடன் இராமனிடம் கீழ்க்கண்டபடி, ஒரு பெண் தனது கணவனை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லி, தாரை வார்த்துக் கொடுக்கிறார்.

இயம்ʼ ஸீதா மம ஸுதா ஸஹத⁴ர்மசரீ தவ|
ப்ரதீச்ச² சைனாம்ʼ ப⁴த்³ரம்ʼ தே பாணிம்ʼ க்³ருʼஹ்ணீஷ்வ பாணினா|| 1.73.27||

மம my, எனது
ஸுதா daughter, மகள்
தவ your, உனது
ஸஹத⁴ர்மசரீ with you observing righteous deeds, உன்னுடன் தர்மகாரியங்களைச் செய்ய
ஸீதா Sita, சீதை
இயம் this girl, இந்தப் பெண்
ஏனாம் her, அவளை
ப்ரதீச்ச² ச accept, ஏற்றுக்கொள்
தே ப⁴த்³ரம் prosperity to you, உனக்கு மங்களம் உண்டாக
பாணிம் her hand, அவளது கைகளை
பாணினா with your hand, உனது கைகளால்
க்³ருʼஹ்ணீஷ்வ hold, பற்றிக்கொள்.

எனது மகளான இந்த சீதை உனது தர்மகாரியங்கள் மேலும் நன்கு தொடர உறுதுணையாய் இருப்பாள். மங்களமே உங்களுக்கு உண்டாகட்டும். அவள் கையைப் பிடித்து ஏற்றுக்கொள்.

பதிவ்ரதா மஹாபா⁴கா³ சா²யேவானுக³தா ஸதா³|
இத்யுக்த்வா ப்ராக்ஷிபத்³ராஜா மந்த்ரபூதம்ʼ ஜலம்ʼ ததா³|| 1.73.28||

மஹாபா⁴கா³ highly fortunate, பாக்கியசாலியான
பதிவ்ரதா devoted, faithful and loyal wife, பக்தி, நேர்மை, நன்றியுடன் கூடிய மனைவி
ஸதா³ always, எப்பொழுதும்
சா²யா இவ like shadow, நிழலைப்போல
அனுக³தா follows, தொடர்வது
இதி thus, இப்படியாக
உக்த்வா having spoken, சொல்லிவிட்டு
ராஜா king, அரசன்
ததா³ then, அப்போது
மந்த்ரபூதம் sanctified with mantra, மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட
ஜலம் water, நீரால்
ப்ராக்ஷிபத் released, வார்த்தார்.

பக்தியுடனும், நன்றியுடனும், நேர்மையுடனும் உன்னுடன் வாழப்போகும் இந்தப் பாக்கியசாலியான சீதா உன்னை எப்போதும் நிழல்போலத் தொடரட்டும், என்றிவ்வாறு மந்திரங்களுடன் சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அல்லவா? வால்மீகியின் இலக்கணப்படி ஒரு நல்ல மனைவி என்பவள் கணவனுக்கு இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு, எப்போதும் உறுதுணையாக இருந்து தோள் கொடுக்கும் ஒரு நல்ல தோழியாவாள்.

(தொடரும்)

3 Replies to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 3”

  1. அன்புள்ள ராமன்,

    தொடர்ந்து படித்துவருகிறேன். மூன்று பகுதியும் அருமையாக உள்ளது. சமஸ்கிருதத்திற்கு ஒவ்வொரு சொல்லுக்கும் , தமிழில் பொருள் தந்து இருப்பதால், படிக்க மிக சுலபமாக உள்ளது. தங்கள் பணி இறை அருளால் மேலும் தொடர்ந்து சிறக்கட்டும்.

  2. இராமாயணத்தோடுகூட ஆட்சியாளரின் நெறி, பொறுமையின் அவசியம், கடமையின் முக்கியம், இறை நியதி, குடும்ப லக்ஷணம்…என்று விரியும் கட்டுரை மிகச் சிறப்பு. நிறைய மக்கள் இதைப் படித்து இன்புற வேண்டும்.

  3. A wonderful essay. Please continue the good work. Will be great if this can be made into a book and circulated amongst a larger audience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *