[பாகம் 11] பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்

சுவாமி சித்பவானந்தர் குறித்த தொடர். முந்தைய பகுதிகள்:

(தொடர்ச்சி…)

ஆடம்பரமான வழிபாடுகளைக் குறிப்பிடுகையில் சுவாமி கூறுவது- “நிர்மால்யமான சிலா ரூபத்தை அலங்கரிக்க, பருத்தித் துணி மற்றும் மலர்கள் மட்டுமே போதும். வெள்ளி, தங்க, வைர நகைகளால் அலங்கரிப்பது அவைகள் மீது நமக்குள்ள ஆசையின் வெளிப்பாடே ஆகும். எளிமையான பிரார்த்தனையே மனத்திற்கு அமைதியை ஏற்படுத்தும். பொருள் மீது மனிதன் பற்றுதலைக் குறைக்கக் குறைக்க அவனிடமுள்ள பிரம்மானந்தம் வெளிப்பட்டு பேரானந்தம் கிட்டும்.”

தன் வாழ்க்கையில் சற்குரு சுவாமிகள், பழநி சாது சுவாமிகள், சட்டி சுவாமிகள், சுப்பையா சுவாமிகள், நாராயணகுரு, காந்த சுவாமிகள், அகிலானந்த சுவாமிகள், பிரம்மானந்த சுவாமிகள், மஹாபுருஷ் மகராஜ் சிவானந்த சுவாமிகள், விரஜானந்த சுவாமிகள், மகேந்திரநாத் குப்தா, மறைமலை அடிகள், ரமண மகரிஷி, விபுலானந்தர், காந்திஜி, ரவீந்திரநாத் தாகூர், வ.வே.சு. ஐயர் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன், லட்சுமண சுவாமி முதலியார், நேரு, மன்னர் ஜெயசாமராஜ உடையார், பெரியார், ராஜாஜி, காமராஜர், கிருபானந்த வாரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கவர்னர் பிரகாசா, சி.சுப்பிரமணியம், மு.வ., பெ.தூரன் அவிநாசிலிங்கம் செட்டியார், டாக்டர் அழகப்ப செட்டியார், ரசிகமணி டி.கே.சி, ராய.சொக்கலிங்கம், சுந்தரவடிவேலு ஆகியோர் சுவாமிஜியைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.

காவிரிக்கரையில் படித்துறை கட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களிடம், அவரவர் ஊர் மக்களிடம் சிறுதொகை வசூலித்து வரச்சொல்லி ஒரு படிவம் கொடுத்தனுப்பப்பட்டது. மாணவர் பலர் பெருந்செல்வந்தராய் இருந்தமையால் தன் தகப்பனார் கொடுத்த 100 ரூபாயைப் பிரித்து 100 பேர் 1 ரூபாய் கொடுத்ததாக பலபெயர்களை எழுதி, பூர்த்திசெய்து கொடுத்துள்ளனர். ஒரு மாணவர் இப்படிச் செய்தது சுவாமிக்குத் தெரியவந்து, பிரார்த்தனைக் கூடத்தில், இதுபோன்று செய்தவர்களை எழுந்து நிற்கச் சொல்ல, அனைவருமே எழுந்து நின்றனர். பிறகு அவர்களிடம், “பலருடைய ஈடுபாடு இந்தப் படித்துறை கட்டுவதில் இருக்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் 25 காசு வாங்கினால் போதும். ஊரில் உனக்குப் பலரைத் தெரிந்திருக்க வேண்டும். பலருக்கும் உன்னைத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவரிடமே ரூ.100 வாங்கி திருட்டுக் கையெழுத்து போடுவது சரியல்ல” என்று அறிவுரை கூறி மீண்டும் ஒரு படிவம் கொடுத்தனுப்பினார்.

ஒரு மாணவன் விடுமுறை நாளில் குருகுலத்தில் மாமரத்தின் மீது கல் எறிந்து சில மாங்கனிகளை அபகரித்தார். அவரை தோட்ட வேலை செய்யும் வேலைக்காரர், சுவாமி முன்னே கொண்டு போய் நிறுத்தினார். அவனுக்கு நடுக்கம். சுவாமி, ‘சண்முகம்’ என்ற அந்த மாணவனையும், அவன் கையில் இருந்த கனிகளையும் மாறி மாறிப் பார்த்தார். சிறிது நேரம் கழித்து அவனைப் பார்த்து, “உனக்கு மாம்பழம் என்றால் மிக்க விருப்பமா?” என்றார்.

அவனும் “ஆம்” என்றான்.

“திருடுவது குற்றமில்லையா?”- சுவாமி.

“ஆம் சுவாமி. தவறுதான்”- மாணவன்.

சுவாமி, “குறிபார்த்துக் கல் எறிவதில் தேர்ச்சி மிக்கவனோ?”

பையன், “இல்லை சுவாமி. எல்லோரும் எறிந்தார்கள். நானும் எறிந்தேன். என் கல்லுக்குக் கனி விழுந்து விட்டது.”

சுவாமி, “நீ செய்த தவறுக்கு என்ன தண்டனை தரலாம்?”

பையன் மெளனம்.

அவனை அருகில் அழைத்து, கன்னத்தில் செல்லமாகத் தட்டி கனிகளை அவனிடமே கொடுத்தார். இனி மாம்பழங்கள் மீது கல்லெறியக்கூடாது. நீ Basket Ball விளையாடு என்று கூறி அனுப்பினார்.

சுவாமி சித்பவானந்தர், சுவாமி சிவானந்தரின் மெய்க்காப்பாளர் போன்று பேலூர் மடத்தில் திருத்தொண்டுகள் செய்து வந்தார். அருகே இருந்த ஒரு சுவாமி ஒரு நாய் வளர்த்து வந்தார். அந்த நாய் சதா குரைத்துக் கொண்டே இருக்கும். இதனால் தன் குருநாதரின் தூக்கம் கெடுவதை உணர்ந்தார் நம் சுவாமி. ஆகவே அந்த நாயை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி சற்று தொலைவில் கொண்டுபோய்க் கட்டிவைத்தார். குருநாதரும் நன்கு உறங்கினார். நம் சுவாமிக்கு மெத்த மகிழ்ச்சி. இதற்கிடையில் நாய்க்கு உரிமையாளர் வந்து தன் நாயை இடம் மாற்றிக் கட்டியவன் எவன் எனக்கேட்க, சுவாமி, ஐயா! உங்களுக்குச் சொந்தமான நாயைப்போல நான் என் குருநாதருடைய நாய் ஆவேன். உங்கள் நாயின் சத்தம் என் குருநாதரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக இருந்ததால் இந்த நாய், அந்த நாயை இடப்பெயர்ச்சி செய்தது. இந்த நாயின் பிழை பொறுத்தருள்க! என்றார். சுவாமி, தம் குருநாதர் சுவாமி சிவானந்தர் மீது வைத்திருந்த பக்திக்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்று.

தம் பக்தர்களிடம் உரையாடும் போது பல அரிய கருத்துகள் அவரிடமிருந்து வெளிப்படும். ஒருநாள் ஒரு பக்தர், “கர்மத்தில் ஞானம் உள்ளது. ஞானத்தில் கர்மம் உள்ளது. இதற்கு விளக்கம் என்ன சுவாமி?” என வினவினார்.

சுவாமி பதில் : ஐரோப்பாவில் இருந்த ஆதிமனிதர்களுக்கு சமைப்பதைப் பற்றிய ஞானம் இல்லை. அவர்கள் பச்சை மாமிசத்தைப் புசித்து வந்தார்கள். ஒரு தடவை அவர்கள் வளர்த்து வந்த பன்றிகள் இருந்த குடிசை தீப்பற்றிக்கொண்டது. அதில் தீய்ந்து போய்ப் பன்றி ஒன்று மாண்டுபோனது. எரிந்த பன்றியின் மாமிசத்தைப் புசித்துப் பார்த்தார்கள். அதில் சுவை அதிகம் இருந்ததைக் கண்டார்கள். இவ்வாறு அவர்கள் பெற்ற ஞானம் அவர்கள் கடைப்பிடித்த கர்மத்தின் விளைவாகும். எப்பொழுதெல்லாம் சுவையான பன்றி மாமிசத்தைப் புசிக்க விரும்பினார்களோ அப்பொழுதெல்லாம் பன்றிகளின் குடிசைக்குத் தீ வைத்தார்கள். நாளடைவில் குடிசைகளுக்குத் தீ வைக்காமல் பன்றியைக் கொன்று தீயில் சுடலாம் என்ற ஞானம் அவர்களுக்கு வந்தது. இச்செயலில் கர்மத்தின் விளைவாக ஞானமும் பின்பு ஞானத்தைப் பயன்படுத்தி கர்மத்தை முறையாகச் செய்யவும் அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்று பதிலளித்தார்.

இன்னொரு முறை, ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ இராமானுஜர், ஸ்ரீ மத்வர் இவர்களின் கோட்பாடுகளை பாமரனுக்கும் விளங்கும்படி சொல்ல முடியுமா? என்று ஒருவர் கேட்டார்.

சுவாமி, “உணவு இலையில் பரிமாறி வைக்கப்பட்டுள்ளது. நாம் இன்னும் சாப்பிடவில்லை. இந்த நிலையில் உணவு வேறு, நாம் வேறாக இருக்கிறோம். இது த்வைதம் ஆகும். உணவை உண்கிறோம். புறத்தில் இருந்த உணவு நம் குடலில் சென்று இடம் பிடித்துக் கொண்டது. இப்போது உணவு வேறு, நாம் வேறு அல்ல. நம்மில் ஒரு பகுதியாக உணவு இருக்கிறது. இது விசிஷ்டாத்வைதம் ஆகும். உணவு உண்டு 5, 6 மணிநேரத்துக்குப் பிறகு உணவு ஜீரணமாகி ரத்தமயமாகி, நம் நாடி நரம்பெல்லாம் அதனது சக்தி வியாபித்து விடுகிறது. இனி உணவை நம்மிடமிருந்து பிரிக்கவே முடியாது. உணவு நம் மயம் ஆகிவிட்டது. இது அத்வைதம் ஆகும்” என எளிய உதாரணம் கொண்டு மூன்று தத்துவங்களையும் விளக்கியது இன்றும் என் கண் முன்னால் வருகிறது.

ஒருவன் எப்போது ஞானியாவான்? என்று ஒருவர் சுவாமியிடம் கேட்டபோது, அவர் சொன்னார். “இந்த கேள்வியானது வெளிச்சம் எப்போது உண்டாகும் என்று கேட்பதைப் போல உள்ளது. இருள் நீங்கினால் வெளிச்சம் வரும். அதுபோல் அறியாமை என்ற இருள் நீங்கினால் ஆன்மவெளிச்சம் தானே வரும்” என்றார்.

அகால மரணம் அடைந்தோரின் நிலை என்ன என்று ஒரு பக்தர் சுவாமியிடம் கேட்டார். சுவாமி! “எதிரியின் கையில் கொலை செய்யப்படுதல், நீச்சல் தெரியாமல் குளத்திலோ, ஆற்றிலோ, கிணற்றிலோ மூச்சுத்திணறி சாவது, பேருந்து, ரயில், கார், இருசக்கர வாகன விபத்துகளில் பலியாவது ஆகியவைகளை அகால மரணம் எனலாம். அகால மரணத்தை அமைதியாக ஏற்றுக்கொள்பவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை. அது சாதாரணமாக இறப்பதற்கு நிகர் ஆகிறது. கோபத்தினாலோ, பயத்தினாலோ சாகிற ஒருவனுக்கு யாதனா சரீரம் என்ற நிலையில் கொஞ்சகாலத்துக்கு சஞ்சலம் உண்டு. பிறகு தெளிவடைந்து நல்ல நிலைக்குச் செல்வான். இதுவே அகால மரணத்தைப் பற்றிய கோட்பாடு ஆகும்” என்றார்.

‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!’ என்ற வாசகம் பட்டினத்தாரை மாபெரும் துறவியாக்கியது. ‘சும்மாயிரு!’ என்ற மந்திரத்தால் ஞானியானவர்கள் தாயுமானவரும் அருணகிரியும். ‘செத்துத்தொலை!’ என்ற வார்த்தை வேங்கடராமனை ரமணமகரிஷி ஆக்கியது.

இந்தக் கொங்கு நாட்டு இளைஞனை, சாலையோரக் கடையில் கண்டெடுத்த விவேகானந்தரின் சென்னைச் சொற்பொழிவுகள் என்ற புத்தகம் தென்னாட்டு விவேகானந்தராக்கியது. இந்தப் புத்தகம்தான் மரம், செடி, கொடி போன்று அசைந்தாடும் மனத்தை மலைபோல உறுதியாக்கி உன்னதத் துறவியாக்கி (சித்பவானந்தராக) தமிழகத்துக்குத் தாரை வார்த்தது. தன்னிடத்தே ஏதேனும் திறமை இருக்குமானால் அது சுவாமி சித்பவானந்தரிடம் பெற்ற பயிற்சினால் தான் என்பார் திரு.C.S அவர்கள்.

இந்த முனிபுங்கவரின் இளமைப்பருவம் எப்படி இருந்திருக்கும், பார்ப்போமா?

நம்முடைய சுவாமி இளைமையில் கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலப் பள்ளியில் படித்தார். Senior Cambridge தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அப்போது அவரது திருநாமம் சின்னு என்பதாகும். அக்கால சென்னை மாகாணத்தில் 7-வது ரேங்க் பெற்று பள்ளிக்குப் பெருமைசேர்த்தார். 1919-இல் வெளியான பள்ளி ஆண்டு மலரில் இச்செய்தியை பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர். ஸ்டேன்ஸ் பள்ளியைத் தோற்றுவித்த சர்.ராபர்ட் ஸ்டேன்ஸ், அடிமை நாட்டவரான சின்னுவுடன் சமமாக அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.

சுவாமியின் தந்தையார் ஒருமுறை பெரியவர் ஒருவருடன் உரையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அவர், “ஒவ்வொரு குழந்தையும் கர்ப்பத்தில் இருக்கும்போது பிரம்மஞானம் பெற்று விளங்குகிறது. இவ்வுலகிற்கு வந்த பிறகு மாயை அதைச் சூழ்ந்து கொள்கிறது” என்று சொன்னார். தற்செயலாக இதைக் கேட்ட சிறுவன் சின்னு தன் தந்தையிடம், “நீங்கள் கூறுவது உண்மையானால் ஒருவேளை ஒரு குழந்தையானது கருப்பையிலேயே அழிந்தாலோ, அழிக்கப்பட்டாலோ அது ஜீவன் முக்தி அடைந்து விடுமோ?” என்று ஒரு கேள்வி போட்டார். இந்தக் கேள்வி இவர் தந்தையை மட்டுமல்ல, வந்திருந்த பெரியவரையும் வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தியது. விளையும் பயிர் முளையிலே என்ற பழமொழி இங்கு சாலப் பொருந்தும்.

(தொடரும்)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

One Reply to “[பாகம் 11] பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்”

  1. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், தான் தாயின் கருவறையினுள் ஞான நிலையில் இருந்து, பிறந்ததால் அஞ்ஞான நிலை அடைந்து, இரண்டுக்கும் இடையில், பிறக்கும்போது, ஞானத்திலிருந்து அஞ்ஞானத்துக்குப் போகப் போவதை நினைந்துதான் அழுகிறதோ என்று எனக்குத் தோன்றுவது உண்டு.

    ஸ்வாமி சித்பவானந்தரின் தந்தையாரின் உரையாடல், இந்த எனது எண்ணத்தைப் பிரதிபலித்தது.

    மீண்டும் ஸ்வாமிகளின் எளிய விளக்கங்கள், உதாரணங்கள், வினா-விடைகள்… என்று கட்டுரை மிக மிக அருமை.

    எங்கணும் பரவுக அம்மஹானைப் பற்றிய சிந்தனைகளும் செய்திகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *