அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1

 

ஊட்டி இலக்கிய முகாமில் 26-5-2012 அன்று ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.

1930களில் ஒரு  சாயங்கால நேரம். சென்னை மெரினா கடற்கரையில் அவர்கள் வழக்கமாக கூடும் இட்த்தில் ஒரு நண்பர்கள் ஜமா களைகட்டியிருக்கிறது. நடுநாயகமாக வெண்தாடி மார்பில் புரள ஒருவர் உட்கார்ந்திருக்கிறார், அவருக்குப் பக்கத்தில் கண்ணாடிக் காரர் ஒருவர். நீண்ட நெற்றியுடன் வெடிச்சிரிப்பு சிரிக்கும் இன்னொருவர்… இன்னும் ஏழெட்டு பேர். இவர்கள் பேசுவதையெல்லாம் ஆர்வமாக்க் கவனித்துக் கொண்டு ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறார் இதே கோஷ்டியைச் சேர்ந்த இன்னொரு இளைஞர்.

அந்த இளைஞரான லா.ச.ராமாமிருதம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்து எழுதிய காட்சி இது – “மணிக்கொடி சதஸ்” என்ற கட்டுரையில். அந்த ஜமாவில் நடுநாயமாக இருந்தவர்கள் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப் பித்தன்.. சுற்றியிருந்தவர்களில் சி.சு.செல்லப்பா, சிட்டி, எம்.வி.வெங்கட்ராம், மௌனி, பி எஸ் ராமையா எல்லாரும் உண்டு. அனேகமாக நவீன தமிழ் இலக்கியத்தின் Who is Who என்று சொல்லத் தக்க தாரகைகள் அத்தனை பேரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள் என்று சொல்லிவிடலாம்.

அந்த மணிக்கொடி யுகத்தின் கடைசி நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்தவர் ‘லா.ச.ரா.’ என்று இலக்கிய உலகம் பிரியமாக அழைத்துவந்த லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம். 1930களில் எழுத ஆரம்பித்து இடைப்பட்ட வருடங்களில் தொடர்ந்து எழுதி, 2007ம் ஆண்டு மரணமடைந்தார்.

மணிக்கொடி யுகம் என்ற அந்தப் பாரம்பரியத்தின் கடைசி விழுதாக அவர் இருந்தார். ஆயினும், புதுயுகத்திற்கான தேடல், சமூக அக்கறைகள், நவீனத்துவ சிந்தனைகள் போன்ற அந்த இலக்கிய இயக்கத்தின் பொதுப் போக்குகளையும் அபிலாஷைகளையும் லா.ச.ராவின் படைப்புலகம் பெரிதாகக் கைக்கொள்ளவில்லை. அந்த உலகம் தனக்கே உரியதான ஒரு அலாதியான இயல்பையும் பாணியையும் கொண்டிருந்தது.

வீட்டையும், குடும்பத்தையும் விட்டு வெளியே செல்லாத உலகம்.

குடும்ப பாசங்கள், உறவுகள், வீட்டில் நிகழும் சடங்குகள், குடும்பத்தில் நிகழும் மரணங்கள், குழந்தைகள் பிறப்பு – பெரும்பாலும் இவற்றால் மட்டுமே ஆன ஒரு உலகம்.

பெண்களின் ஆளுமைகளும் ஆகிருதிகளும் ஓங்கி உள்ள உறவுகள்; பாட்டிகள், அம்மாக்கள், மாமியார்கள், மனைவிகள், மகள்கள், மருமகள்கள், பேத்திகள்; இவற்றால் ஆன உலகம். அதிலும் இவர்கள் எல்லாரும் அடிப்படையில் அம்மாக்களாகவே பெரிதும் வளையவரும் ஒரு உலகம்.

இந்த வட்ட்த்திற்கு வெளியே நடக்கும் சமூக மாற்றங்கள், கிளர்ச்சிகள், அரசியல் கொந்தளிப்புகள், போர்கள் – இவற்றுடன் லாசராவுக்கும் அவரது பாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவே அவரது படைப்புகளை வாசிக்கும் எந்த ஒரு வாசகனுக்கும் தோன்றும்.

ஆனாலும் அந்தக் கதைகள், படைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உறைந்து விட்டவை அல்ல. அவற்றில் ஒரு மாபெரும் சலனம், ஒரு இயக்கம் பிரவாகமாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதுவே அடிப்படையில் லாசாராவின் கலை மேதைமை என்று எண்ணத் தோன்றுகிறது.

படைப்புகள்:

அபிதா, புத்ர என்று இரண்டு முக்கிய நாவல்கள் (இவை நாவல்களுக்கான வீச்சும் விரிவும் கொள்ளாததால், குறுநாவல்கள் என்றே கருதப் படவேண்டும் என்று கறாரான நாவல் கோட்பாடுகளின் அடிப்படையில் கூறும் விமர்சனப் பார்வையும் உள்ளது).

மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள். இவற்றில் இதழ்கள் என்று ஒரே தலைப்பிடப் பட்டு ஒரே சுருதி லயத்தில் எழுதப் பட்ட கதைகள், பஞ்சபூதக் கதைகள் ஆகியவையும் அடங்கும். ஜனனி, பாற்கடல், பச்சைக் கனவு, புற்று, அபூர்வ ராகம், ராஜகுமாரி ஆகிய கதைகள் தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைகள் என்று பல்வேறு விமர்சகர்கள் போடும் பட்டியல்களிலும் கட்டாயம் இடம்பெறக் கூடியவை.

அது போக, சுயசரிதை, நினைவலைகள் என்று சொல்லத் தக்க அவரது படைப்புகளும் பரவலாக வாசிக்கப் பட்டவை. பாற்கடல் – லாசரா குடும்பத்தின் மூன்று தலைமுறை வரலாறு, அவரது வாலிப வயது வரையிலான நிகழ்வுகள். சிந்தாநதி – இதற்குப் பிந்தைய கால நினைவுகள். இந்த இரண்டு நூல்களிலும் அவரது மற்றும் அவரது குடும்பத்தின் சுய வரலாறு தொடர்ச்சியாக அல்லாமல், அவ்வப்போது நினைவு கூறும் சம்பவங்களின் துணுக்குகளாகக் கூறிச் செல்லப் படுகிறது.

இப்படைப்புகளில், சக்கு, அபிதா, அம்பி போன்றவர்களும், லா.சராவின் சொந்தத் தாத்தா, அத்தைப் பாட்டி போன்றவர்களுமாக, நம் மனதில் மிக ஆழமாகப் பதியும் நிஜமும், புனைவுமான பாத்திரங்களை லாசரா உலவ விட்டிருக்கிறார். இந்தப் பாத்திரங்களில் பல போன நூற்றாண்டைச் சேர்ந்தவை. சில அதற்கும் முந்தைய நூற்றாண்டைச் சேர்ந்தவை (1800களின் கடைசி). ஆனாலும் இந்தப் பாத்திரங்கள், அவற்றின் உணர்வுகள், அவர்களது அக உலகத் தேடல்கள், வாழ்க்கை ஊசலாடல்கள், தத்துவார்த்த பிரதிபலிப்புகள் ஆகியவை 2012ல் வாழும் நம் மீதும் தாக்கம் செலுத்துவதாக, பாதிப்பதாக உள்ளன. லா.ச.ரா ஏன் இப்போதும், வரும் நூற்றாண்டிலும் கூட வாசிக்கப் படுவார் என்பதற்கான காரணமும் அதுவே.

இந்த படைப்புகளை ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருந்த போது, ஒவ்வொன்றிலும் அவரது குடும்பத்தைப் பற்றிய சிந்தனைகளும் விசாரங்களும் எப்படி வற்றாத நீரூற்று போல வந்து கொண்டே இருக்கின்றன? அவற்றை இப்போது ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது இது தொடர்பான ஒரு மலைப்பும் அயர்ச்சியுமான எண்ணம் தான் நமக்கு ஏற்படுகிறது.

அபிதா நாவல் குறித்து நண்பர் கோபி ராமமூர்த்தியின் ஒரு பதிவு

உக்கிர உணர்ச்சிகள்:

லா.ச.ராவின் எல்லா பாத்திரங்களும் சாதாரணமாக நாம் அன்றாட வாழ்வில் காண்பவர்கள் தான். ஆனால் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், கொதிநிலையில் தான் அறிமுகமாகிறார்கள். கதை முடியும் வரை அப்படியே தான் இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப் படுகிறார்கள். அந்த வேதனைகளிலேயே ஒருவித குரூர சந்தோஷமும் கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவற்றை இப்படியே விட்டு விடாமல் கடைசியில் ஒரு காலாதீதமான, பிரபஞ்சம் தழுவிய விஸ்தாரத்திற்கு லா.ச.ரா எடுத்துச் சென்று விடுகிறார். இதுவே அந்தப் படைப்புகளை பிரம்மாண்டமாக்குகிறது, கலைரீதியாக முழுமை பெற்றவையாக்குகிறது.

இதன் மைய விசையாக அம்பாள் என்ற அந்த தொன்மையான படிமம் இருக்கிறது. அம்பாள் – உச்ச நிலையிலான உக்கிரமும், உச்ச நிலையிலான கருணையும் ஒருங்கே கூடிய பெண்.

லாசராவின் தாய்மை சித்தரிப்பு முழுமையானது – தாய்மையின் கனிவை உருகி உருகி நெகிழ்ந்து நெகிழ்ந்து பல பரிமாணங்களில் படைத்துக் காட்டுவது மட்டுமல்ல. தாய்மையில் உள்ளோடிக் கொண்டிருக்கும் குரூரத்தையும் பேசக் கூடியதாக அவரது படைப்புகள் உள்ளன. தனது மகனுக்கு குழந்தை உண்டாகாமல் போகட்டும் என்று சபிக்கும் தாய் தான் புத்ர நாவலின் மையக் கதாபாத்திரம். பாற்கடலி’ல் வரும் மாமியார் பற்றி மருமகள் எண்ணுகிறாள் – “கபடும் கருணையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும் போது அதுவும் ஒரு அழகாய்த் தானிருக்கிறது”.

இந்த பாத்திரங்கள் பிரக்ஞை நிலையில் வெறி பிடித்தது போல நடந்து கொள்வதால் தான், சாதாரண காட்சிகள் நாடகீயமாக ஆகின்றன. சாதாரண மனிதப் பாத்திரங்கள் காவிய ரூபம் கொள்கின்றன. சாதாரணப் பெண் சன்னதம் வந்த நிலையில் காளியாக மாறுவது போல. சாதாரணமாக லுஙகியை மடித்துக் கட்டி பீடி வலித்துக் கொண்டிருக்கும் ஆள், ஒரு குறிப்பிட்ட சடங்கில் சாமியாடும்போது (கேரளத்து பகவதி கோயில்களின் வெளிச்சப்பாடு போல) அந்த உக்கிர தெய்வமாகவே ஆகி விடுவது போல.

ஆனால் அந்த உணர்ச்சிப் பிழம்பு நிலையிலும் அவர்களது சாதாரண குணங்கள் மறைவதில்லை. கேரள விழாக்களில், பயமுறுத்தும் “தெய்யம்” வேஷம் கட்டி ஆடத் தயாராகிக் கொண்டிருக்கும் ஆள் ஒரு குழந்தையை சகஜமாக தூக்கிக் கொஞ்சுவது போல. இந்த அம்சம் தான் அவரது படைப்புகளுக்கு ஒரு கவர்ச்சிகரமான சுவாரஸ்யத் தன்மையை அளிக்கிறது.

ஒருவித்த்தில் லாசராவே அப்படித் தான் இரண்டின் கலவையாகவும் இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அவரது புகைப்டங்களைப் பார்க்கும் போது, புருவங்களின் அடர்த்தி, சிங்கம் போன்ற பிடரிமயிர், ஊடுருவும் கண்கள் இவையெல்லாம் சேர்ந்து ஒருவித “மிஸ்டிக்” தன்மையை அளிக்கின்றன. ஆனால் நேர்ப்பேச்சிலும், பழக்கத்திலும் அவர் பெரும்பாலும் சராசரி லௌகீகக் கவலைகள் கொண்ட குடும்பத் தலைவராக, ஒரு வங்கி அலுவலராக அத்தகைய பாவனைகளுடனே இருந்திருக்கிறார் என்று பேட்டிகள் மற்றும் அனுபவப் பதிவுகள் வாயிலாக தெரிய வருகிறது.

படிமங்களின் பெருவெளி:

“குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து தான் லக்ஷ்மி, ஐராவதம், உச்சைஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத் தான் நீங்கள் எனக்குக் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயே தான்..”

அனாயாசமாக படிமங்களை வாரியிறைத்துச் செல்லும் எழுத்து லா.ச.ராவுடையது. மொழி படிமங்களாக ஆகும் தருணம் எல்லா இலக்கிய வடிவங்களிலும் ஒரு உச்ச நிலையாக்க் கருதப் படுகிறது. இந்த அம்சம் தூக்கலாக இருப்பதால் தான் லா.ச.ராவின் படைப்புகள் மீண்டும் மீண்டும் வாசகனைத் தம்மை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கின்றன.

சிந்தா நதி என்ற அவரது ஒரு நூலின் பெயரே ஒரு அழகிய படிமம். (சில வாசகர்கள் “சிந்தாத நதி” என்று அதற்குப் பொருள் கொள்வதைக் காண்கிறேன். அதில் வரும் “சிந்தா” என்பது சம்ஸ்கிருத சொல். சிந்தா என்றால் சிந்தனை, எண்ணம், நினைவு..) அதில் வரும் சில சொற்கட்டுகள் தரும் படிமங்கள் அற்புதமானவை.

சிந்தாநதி ஓட்ட்த்தில் துள்ளு மீன்.

சிந்தா நதி – தலைக்கு மேல் ஆழத்தில், மண்டை ஓடுள் தோற்றங்கள்.

சிந்தா நதியில் தண்ணீர் எப்போதுமே பளிங்கல்ல.

ரொம்ப சரி, அத்தனையும் தூக்கி எறி – சிந்தா நதியில்.

சிந்தா நதியில் மிதந்து வந்த ஒரு அகல் சுடர்.

சிந்தா நதி மேல் ஒரு வானவில்.

சிந்தா நதி ஆழத்தில் காலைச் சுற்றிக் கொண்ட ஒரு கொடி.

புற்று சிறுகதையில், புற்றுக்குள்ளிருந்து சீறிய பாம்பு கடித்த தருணம் அவனது எண்ண ஓட்டங்கள் விரிகின்றன. புற்றுக்குப் பால் ஊற்றி வேண்டித் தான் அவனது அம்மா அவனைப் பெற்றெடுக்கிறாள். அவனது பிறப்புக்கும் இறப்புக்கும் புற்றே காரணமாகிறது. அவன் வாழ்வு முழுவதும் புற்று மாபெரும் மர்மமாகவும், திறக்காத ரகசியமாகவும் அவனைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு மாபெரும் படிமமாகிறது.

ஜன்னி சிறுகதையில் பராசக்தி உலக வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டிப் புறப்படுகிறாள். கரு உயிராக வெளிப்பட வேண்டிக் காத்திருக்கும் யோனிகளைத் தேடி, கடைசியில் அவள் ஆவிர்ப்பவிப்பது முறையற்ற உறவால் பிறக்கும், பிறந்த உடனேயே தாய் தகப்பானால் குளக்கரையில் கைவிடப் படப் போகும் குழந்தையின் உயிர்! அப்படி ஒரு குழந்தையின் உயிரில் லோகமாதாவைப் பிரவேசிக்கச் செய்வதில் லா.ச.ராவுக்கு தயக்கம் ஏதுமில்லை. அனேக கோடி பிரம்மாண்ட ஜனனீ, ஆப்ரஹ்ம கீட ஜன்னீ (பிரம்மன் முதல் புழு வரையிலான உயிர்களின் தாய்) என்று தானே ல்லிதா சகஸ்ரநாமமும் அவளைப் புகழ்கிறது! இக்கதையில் ஜன்னி என்ற அந்தப் படிமம் விஸ்வரூபம் கொள்கிறது.

கடற்கரை மணலில் கால்பட்ட இடமெல்லாம் சங்கும் சிப்பியும் இடறுவது போல, எழுத்தெங்கும் படிமங்கள் இறைந்து கிடைக்கும் வெளி லாசராவின் எழுத்து என்றால் அது மிகையில்லை.

பெண்மை – காமம் – சாக்தம்:

“அம்பாளின் கால் சிலம்பொலி கேட்கவில்லை? உலகமே உபமானங்களும் உபமேயங்களுமாக மாறி விடுகிறது. நிஜத்தின் ஸ்வரூபங்களில் இப்படியும் ஒன்றோ? ..”

பெண்மையின் ஒளியை, அழகை, வர்ண ஜாலங்களைத் தேடுவது தான் லாசரா எழுத்து கொள்ளும் ஆன்மீகமான தேடலாக இருக்கிறது. அதற்கு மரபு ரீதியான ஒரு வலுவான பின்னணியும் உண்டு. அவரது குல தெய்வமான பெருந்திரு என்ற தேவி. தலைமுறைகளை ஒன்றிணைப்பவள். அவளே சாஸ்வதமான சொத்து என்று பாட்டி சொல்கிறாள்.

தமிழ்ப் பண்டிதரான தாத்தா நோட்டுப் புத்தகம் முழுவதும் பாடல்களாக எழுதிக் குவித்து வைத்திருக்கிறார். எல்லாம் பெருந்திரு மீது புனையப் பட்டது. அவற்றை குடும்பத்தில் யாரும் படிப்பதாகத் தெரியவில்லை. அவை ஒரு மூலையில் கிடக்கின்றன. ஆனால் தாத்தாவுக்கு அது பற்றி எந்த விசனமும் இல்லை. அதை ஒரு இடையறாத தியானமாக, நித்திய வழிபாடாக அவர் செய்து வருகிறார். இதே போன்றதொரு உணர்வு தான் லா.சா.ரா தன் எழுத்துக்கான உந்துதல் பற்றிக் கூறும் போதும் வெளிப்படுகிறது –

“புரிந்தது புரியாத்து இந்த இரன்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள்.. விஷயம் அதனதன் உருவில் ஒரு ஒரு வழி வெளிப்படக் காத்திருக்கிறது.. அதனதன் வேளையில் வெளிப்படுகிறது.. சிந்தாநதி என் எஸ்டேட்டில் ஓடும் எனக்கே சொந்த நதி அல.. உயிரின் பரம்பரை லோகோஸ்ருதியின் மீட்டல் கங்கை இதன் கிளை” (சிந்தா நதி முன்னுரையில்).

ஒருவகையில் அவரது கதைகள் அனைத்தும் சக்தி பூஜை போலவே உள்ளன. அடிப்படையில் நான் சௌந்தரிய உபாசகன் என்று லாசரா அவரது வாழ்வின் கடைசிக் காலகட்ட்த்தில் அளித்த ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

சக்தி பூஜையில் யந்திரம், மந்திரம், தந்திரம் ஆகியவை அதன் அலகுகள். இவையனைத்தும் உள்முகமானவை, அந்தரங்கத் தன்மை கொண்டவை.

முக்கோணங்களும் தாமரை இதழ்களும் புள்ளிகளும் கோடுகளும் இணைந்து உருவாக்கும் வலைப்பின்னல்களான வடிவங்களே தியானத்திற்கான யந்திரங்கள் – சக்தி பூஜையில். லா.சா.ராவின் படிமங்கள் இப்படித் தான் இருக்கின்றன.

மீண்டும் மீண்டும் ஒருவித லயத்தில் வரும் உச்சாடனங்கள் போன்ற சொற்கள் – மந்திரமாகின்றன.

“தராமல் இருப்பாளோ அவள் என்ன சத்தியம் மறந்தவளோ”

“அவரவர் பூத்ததற்குத் தக்கபடி”.

“பரிகாசம் போலம் கடித்த பாம்பு, பலபேர் அறிய மெத்த வீங்கி…”

அபிதா நாவலில் அவளது பெயரை முதல் முறை அம்பி சொல்லிப் பார்க்கிறான் –

“அ – சிமிழ் போன்று வாயின் லேசான குமிழ்வில்
பி – உதடுகளின் சந்திப்பில்
தா – நாக்கின் தெறிப்பில்”

அந்தப் பெயரே மந்திரமாகிறது. அது வெளிப்படும் தருணத்தை லா.ச.ரா தனக்கே உரித்தான மொழியில் சொல்கிறார்:

“என் நாவில் மந்திரம் போல் ஒரு நாமம் துடித்தது. வெளிப்பட்டால் அதன் நயம் உடனே பொரிந்துபோம். உள்ளிருந்தால், நான் வெடித்துவிடுவேன். அவ்வளவு நுட்பமான, வேக மந்த்ரம், வேதனா மந்த்ரம்”

சக்தி பூஜையில் தந்திரம் என்பது பூஜையில் மானசீகமாக செய்யப் படும் உபசாரங்கள், முத்திரைகள் ஆகியவற்றைக் குறிக்கும். லா.சா.ரா படைப்புகளில் வெளிப்படும் உணர்ச்சிகளின் தாரையே, பல்வேறு முத்திரைகளாக, தேவிக்கு செலுத்தப் படும் புஷ்பாஞ்சலியாக ஆகிவிடுகின்றது.

செவ்வரளி மலர்கள், செவ்வாடை, குங்குமம், செம்பருத்திப் பூவின் நிறம் – இந்த சிகப்பு காமத்தை, உயிரின் ஆதார சக்தியின் தீண்டலைக் குறிக்கிறது. இங்கு “காமம்” என்ற சொல் பாலுறவு சார்ந்த கண்ணோட்டத்தில் அல்ல, இந்து ஞான மரபில் வழங்கப் படும் தத்துவார்த்தமான பொருள் கொள்கிறது “ஆத்மாவின் காமத்தால்” (ஆத்மனஸ்து காமாய) என்று உபநிஷதத்தில் யாக்ஞியவல்கியர் மைத்ரேயிக்குக் கூறும் வாசகத்தின் பொருளைக் கொண்டு அதைப் பார்க்கவேண்டும். அதுவே எல்லா மனித உறவுகளுக்கும் அடிப்படை.  வாழ்வின் மீதான ஆசை, அந்த இச்சா சக்தியே காமம். பிரபஞ்சத்தின் அனைத்து விருப்புகளும் ஆசைகளும் ஒன்றாய்த் திரண்ட அந்த மகா ஆசையின் குறியீடாகவே சிகப்பு நிறம் அங்கே வருகிறது. இவ்வாறு உன்னதமாக்கப் பட்ட காமம் தான் லா.ச.ரா படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது. இந்த நிலைக்கு வருவதற்காக தத்தித் தாவி மோதும் முயற்சியே அவரது சிருஷ்டிகர செயல்பாட்டின் பல வடிவங்களும்.

ஜன்னம், மரணம் இரண்டையுமே சக்தி லீலையின் சங்கிலித் தொடராக காணும் தன்மை சாக்த தரிசனத்தில் உண்டு. லா.ச.ரா படைப்புகளில் இதுவும் இழையோடிக் கொண்டிருக்கிறது.

புத்ர நாவலில் ஒரு இடம். ஆற்றில் அந்தத் தாய் குளித்துக் கொண்டிருக்கிறாள். அவள் சாபமிட்ட மகனின் மனைவி, இந்தப் பெண்ணின் மருமகள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள். இந்தத் தாயின் உள்மனம் அதை உணரவும் செய்கிறது. அப்போது அந்தக் குளக்கரையில் ஒரு கிடாரி (பெண் ஆடு) குட்டி ஈனும் சித்தரிப்பின் வாயிலாக அந்த ஜனன அவஸ்தையை மிக நுட்பமாக எழுதிச் செல்கிறார் லா.ச.ரா. இந்த நாவலில் அபாரமான உணர்வெழுச்சி கொண்ட ஒரு இடம் இது.

ஜனனி சிறுகதையின் கடைசிப் பகுதி –

“ஒரு நாள் ஒரு மரத்தடியில் அவள் மத்தியான வேளையில் தூங்கிக் கொண்டிருந்தாள். மத்தியானம் பிற்பகலாயிற்று. பிற்பகல் மாலையாயிற்று. மாலை இரவாயிற்று. இரவு காலை ஆயிற்று. காலை பகலாயிற்று. அவள் மூக்கிலும் வாயிலும் எறும்பும் ஈயும் தாராளமாகப் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அவள் எழுந்திருக்கவேயில்லை…’’

(தொடரும்)

ஊட்டி  இலக்கிய முகாம் – புகைப்படங்கள்

அடுத்த பகுதி >>

6 Replies to “அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1”

  1. அபிதா

    “அ – சிமிழ் போன்று வாயின் லேசான குமிழ்வில்
    பி – உதடுகளின் சந்திப்பில்
    தா – நாக்கின் தெறிப்பில்”

    Lolita

    Lolita, light of my life, fire of my loins. My sin, my soul. Lo-lee-ta: the tip of the tongue taking a trip of three steps down the palate to tap, at three, on the teeth. Lo. Lee. Ta.
    She was Lo, plain Lo, in the morning, standing four feet ten in one sock. She was Lola in slacks. She was Dolly at school. She was Dolores on the dotted line. But in my arms she was always Lolita.
    Did she have a precursor? She did, indeed she did. In point of fact, there might have been no Lolita at all had I not loved, one summer, a certain initial girl-child. In a princedom by the sea. Oh when? About as many years before Lolita was born as my age was that summer. You can always count on a murderer for a fancy prose style.
    Ladies and gentlemen of the jury, exhibit number one is what the seraphs, the misinformed, simple, noble-winged seraphs, envied. Look at this tangle of thorns.

  2. R.Ramakutty அவர்களுக்கு,

    எனது இந்த உரை குறித்த ஜெயமோகனின் பதிலிருந்து –

    https://www.jeyamohan.in/?p=27678

    // லா.ச.ரா.வின் ஆக்கங்களுக்கும் பிறபடைப்பாளிகளின் படைப்புகளுக்குமான உறவு விரிவாகப்பேசப்பட்டது. லா.ச.ரா.வின் அபிதாவுக்கும் விளாடிமிர் நபக்கோவின் லோலிதாவுக்குமான ஒப்புமை, அவரது மொழிக்கு ஜாய்ஸின் நனவோடை மொழியுடன் உள்ள உறவு ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன.

    லோலிதாவுடன் அபிதாவை ஒப்பிட்டு எழுதியவர் பிரமிள் என்றார் மோகனரங்கன். உலக இலக்கியத்தில் லோலிதாவின் கரு – முதியவனுக்கு இளம்பெண்ணில் எழும் காதல் – மீளமீள பேசப்பட்ட ஒன்றே. அந்தக் கருவைத்தவிர லோலிதாவுக்கும் அபிதாவுக்கும் பெரிதாக ஒப்புமை இல்லை என்றேன். லோலிதா காமத்தின் தீவிரத்தைச் சொல்ல முயலும் ஆக்கம். மிகக்கச்சிதமாகச் சொல்லமுயலும் மொழி கொண்டது. நேர்மாறாக காமத்தை இன்னொன்றாக ஆக்கிக்கொள்ள முயல்வது அபிதா. மொழி இதில் சொல்வதற்கல்ல மறைக்கவே முயல்கிறது. //

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *