இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 10

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
 
முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

10.1 இராமன் இருக்குமிடமே சொர்க்கம்

தாங்கள் சித்திரகூட மலைச்சாரலில் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்து அனைவரும் அங்கு ஒருமுறை வந்துவிட்டதால், அது தெரிந்து அயோத்தி மக்கள் பலரும் அவ்வப்போது அங்கு ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டு வந்தால், அது வரும் வழியில் உள்ள பல தபஸ்விகளுக்கும் இடையூறாக இருக்கலாம் என்பதால் இராமர் அங்கிருந்து வேறு இடத்திற்குப் போகலாம் என்று தீர்மானித்தார். அப்படி அவர்கள் போகும் வழியில் அத்ரி மகரிஷியையும் அவரது பத்தினி அனசுயாவையும் சந்தித்தார்கள். ஏழையானாலும், செல்வந்தன் ஆனாலும் எப்போதும் கணவனுடனேயே இருப்பேன் என்று திருமணம் புரிந்துகொள்ளும்போது செய்த சத்தியத்திற்கு ஏற்ப, நாடானாலும் காடானாலும் இராமருடன் தங்கி வாழும் சீதையின் முடிவை வரவேற்று அனசுயா பெருமையாகப் பேசினாள்.

அவருத்³த⁴ம்ʼ வனே ராமம்ʼ தி³ஷ்ட்யா த்வமனுக³ச்ச²ஸி|| 2.117.21||
நக³ரஸ்தோ² வனஸ்தோ² வா பாபோ வா யதி³ வா ஸு²ப⁴:| …. 2.177.22||

த்வம் = you, நீ
தி³ஷ்ட்யா = with the grace of heaven, தேவர்களின் கருணையால்
வனே = in the forest, காட்டுக்குள்
அவருத்³த³ம்  =constrained, குறுகிய
ராமம் = Rama,
அனுக³ச்ச²ஸி = you are also following, நீயும் வந்துள்ளாய்,
நக³ரஸ்த²:  = in the city, நகரத்திலோ
வனஸ்தோ² வா = or in the forest, காட்டிலோ
பாபோ வா = or sinful, பாவமோ,
யதி³ வா = or அல்லது ,
ஸு²ப⁴: = virtuous, புண்ணியமோ.

(வருவது) நாடோ, காடோ, பாவமோ அல்லது புண்ணியமோ, ( உனது என்பதையெல்லாம் ) விட்டுவிட்டு தேவர்களின் கருணையால் நீ இராமருடன் காட்டுக்குள் வந்துள்ளாய்.

எந்த நீதி சார்ந்த கொள்கைக்கோ, பேச்சுக்கோ கடிவாளம் எனும் பிடி இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு, உண்மையே பேசு என்று சொன்னால் அதற்கு ஒரு வரம்பு கிடையாது. அதாவது உண்மை பேசினால் நமக்கு நல்லது நடக்குமா நடக்காதா என்று பார்த்துப் பேசுவது கூடாது. பேசத்தான் வேண்டும் என்று இருந்தால், உண்மை ஒன்றையே பேச வேண்டும். பேசி அதன் விளைவுகள் என்னவானாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பலருக்கு இது ஒத்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் இதுதான் தர்மம். இங்கு அனசுயா “எப்படியானாலும் வந்திருக்கிறாயே” என்று சீதையைப் பார்த்துச் சொல்வது வெறும் உதட்டளவில் அல்ல; அவளும் அதையே பின்பற்றி அப்படியே வாழ்ந்து வருகிறாள் என்பதால் அவள் சொல்வதில் உள்ள உண்மை பளிச்செனத் தெரிகிறது. உள்ளத்தில் உள்ள உண்மை, வாயால் வரும் வாய்மை, உடலால் வாழ்ந்துகாட்டப்படும் மெய் என்பதற்கு இது ஒரு ஆணித்தரமான சான்று. இதைத்தான் ஆங்கிலத்தில் “Truth in thought, word and deed” என்று விவரமாகச் சொல்வார்கள். தமிழிலோ அதை விவரிக்க நமக்கு மூன்று சொற்களே இருக்கின்றன.

10.2 தீயவனுக்கு நல்லவனே வில்லன்

ராம-லக்ஷ்மணர்கள் தண்டகாரண்ய வனத்திற்குள் நுழைந்ததும், அங்குள்ள தபஸ்விகள் தங்களின் தவத்திற்கு பலகாலமாக இடையூறு விளைவிக்கும் அரக்கர்களிடம் இருந்து அவர்களைக் காக்குமாறு வேண்டினார்கள். அவர்கள் அதை விவரிக்கும் முன்பாக, அவருக்கே விராதன் என்னும் அரக்கனிடமிருந்து தொந்தரவு வந்துவிட்டது. உருவத்தில் பெரிதாகவும், அகண்ட வாய், அருவருக்கத்தக்க கோணல் வடிவம், மற்றும் விஷம் கக்கும் கண்கள் இப்படியாக இருந்த அவன், இப்போதுதான் கொன்று இன்னும் ரத்தம் சொட்டிக்கொண்டிருக்கும் புலியின் தோலை உடையாய்ச் சுற்றிக்கொண்டு குரூரமாகக் காட்சி அளித்தான். அவன் கையில் இருந்த ஈட்டியில் சமீபத்தில் அவன் கொன்ற மூன்று சிங்கங்கள், நான்கு புலிகள், இரு ஓநாய்கள், ஓர் யானையின் தலை எல்லாம் குத்தியிருந்தன. அவன் இராமரைப் பார்த்து தபஸ்வி போல உடையிருந்தாலும், கையில் வில், அம்புகள் எல்லாம் வைத்திருப்பதால் அவரை ஒரு போலி ஆசாமி என்றான். அதனால் அவருடன் வந்தவர்கள் எல்லோரையுமே கயவர்கள் என்றான். அவன் சீதை கையைப் பிடித்திழுத்து அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்வதாகவும், அவனது வழக்கம்போல் சாதுக்களாகிய மற்றிருவரைத் தன் தீனியாகக் கொள்வதாகவும் சொன்னான்.

ப்ரவிஷ்டௌ த³ண்ட³காரண்யம்ʼ ஸ²ரசாபாஸிதா⁴ரிணௌ|| 3.2.10||
கத²ம்ʼ தாபஸயோர்வாம்ʼ ச வாஸ: ப்ரமத³யா ஸஹ|
அத⁴ர்மசாரிணௌ பாபௌ கௌ யுவாம்ʼ முனிதூ³ஷகௌ|| 3.2.11||

ஸ²ரசாபாஸிதா⁴ரிணௌ = holding bow arrows and swords, வில், அம்புகளைத் தூக்கிக்கொண்டு
த³ண்ட³காரண்யம் = to Dandakaranyam, தண்டகாரண்யத்திற்கு
ப்ரவிஷ்டௌ = have entered into, வந்திருக்கிறீர்கள்
தாபஸயோ: = of both of you who are ascetics, சாதுக்கள் போல
வாம் = you both, இருவரும்
வாஸ: = stay, தங்க
கத²ம் = how is it possible, எப்படி இருக்கலாம்?
ப்ரமத³யா ஸஹ = be with a woman, பெண்ணுடன்
அத⁴ர்மசரிணௌ = both unrighteous people, அதர்மமான இருவர்
முனிதூ³ஷகௌ = both distorting ascetic discipline, போலிச் சாமியார்களான
பாபௌ = sinners, பாவிகள்
யுவாம் = young people, வாலிபர்கள்
கௌ = who are you? நீங்கள் யார்?

வில், அம்புகளைத் தூக்கிக்கொண்டு இருவரும் தங்குவதற்கு தண்டகாரண்ய வனத்திற்கு வந்திருக்கிறீர்கள். சாதுக்களான உங்களுடன் துணையாக ஒரு பெண்ணும் எப்படி இருக்கலாம்? சாதுக்கள் போல வேஷம் போட்டு வந்துள்ள இளம் வயதுப் போலிச் சாமியார்களான நீங்கள் யார்?

நல்லவர்கள் என்றால் அவர்கள் யாரையும் தாக்க மாட்டார்கள்; அதனால் தங்களைக் காத்துக்கொள்ளவும் அவர்கள் ஆயுதம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஒருவன் நல்லவன் என்று சொல்லிக்கொண்டு முன்பு என்னைத் தாக்கினான். உங்களிடமோ ஆயுதம் இருக்கிறது; அதனால் நீங்கள் நல்லவர்கள் இல்லை என்ற மாதிரியாக விராதன் தத்துவம் பேசினான்.

10.3 அரசின் கடமை

அப்படி அடாவடியாக சண்டைக்கு வலிய வந்த விராதனை எதிர்கொண்டு அழித்துவிட்டு, இராமர் ஷரபங்க முனிவரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றார். சந்நியாசத்தை ஏற்று சுமார் இருபத்தியொன்று விதமான முறைகளில் தவம் செய்துகொண்டிருக்கும் பல தபஸ்விகளும் அவரைப் பார்க்க அங்கே வருகின்றனர். அவர்களும் அங்குள்ள அரக்கர்கள் செய்யும் கொடுமையை விவரித்து, ஒரு அரச பரம்பரையினரின் கடமையாக, அவர்களின் கொட்டத்தை அடக்க அவரிடம் வேண்டுகின்றனர். இராமரும் அவர்களிடம் தண்டகாரண்ய வனத்தை மிகுந்த பாதுகாப்பான இடமாகச் செய்வதாகச் சொல்கிறார். ஆனால் சீதைக்கோ இராமர் கொஞ்சம் அவசரப்பட்டு அப்படி வாக்குக் கொடுத்துவிட்டதாக நினைக்கிறாள். அவர் அங்கு வந்தது தவசி போல் வாழ்வதற்கே அன்றி, ஒரு அரசனாக அரக்கர்களை அழிப்பதற்கு அல்ல என்று சொல்கிறாள். அவர் கொண்டுவந்திருக்கும் ஆயுதங்களே அரக்கர்களை வலிய சண்டைக்கு இழுப்பதுபோல இருப்பதால், அவர்களுக்கும் அது மாதிரியான சந்தேகம் வருகிறது. அதனால் அவர்களும் சண்டைக்கு வரவே, அவர்களை இராமர் கொல்லவேண்டி வருகிறது என்றாள். அப்படிச் சொல்வதற்குக் காரணமாக ஒரு கதையையும் சொல்கிறாள்.

சாது ஒருவருக்கு இந்திரன் ஒருமுறை வாள் ஒன்றைப் பரிசாகக் கொடுத்து அவரை திசை திருப்பப் பார்த்தான். அவரும் சிறிதும் யோசிக்காமல் அதை வாங்கிக்கொண்டது அல்லாமல், தான் போகுமிடமெல்லாம் அதை எடுத்துக்கொண்டு சென்றார். முதலில் அந்த வாளினால் மரம், செடி, கொடி போன்றவைகளை வெட்ட ஆரம்பித்த அவர், காலப் போக்கில் தனக்கு தொந்திரவு கூட தராத மிருகங்களையும் மனிதர்களையுமே வெட்ட ஆரம்பித்தார். அதனால் முன்னர் செய்த தவத்தின் பலனாய் இறுதியில் சொர்க்கம் செல்லவேண்டிய அவர் கடைசியில் நரகத்தில் போய் விழுந்தார். அதே போல, அங்குள்ளவர்கள் சொல்வதால் மட்டுமே, இங்கு இராமருக்கு எந்தக் கொடுமைகளும் தராத அரக்கர்களை அவர் கொல்வது சரியல்ல என்கிறாள்.

பு³த்³தி⁴ர்வைரம்ʼ வினா ஹந்தும்ʼ ராக்ஷஸாந்த³ண்ட³காஸ்²ரிதான்|| 3.9.26||
அபராத⁴ம்ʼ வினா ஹந்தும்ʼ லோகான்வீர ந காமயே|

வைரம்ʼ வினா = without animosity, பகைமை இல்லாத
த³ண்ட³காஸ்²ரிதான் = those residing in the forest, காட்டில் வசிக்கும்
ராக்ஷஸான் = demons, அரக்கர்கள்
ஹந்தும் = to kill, கொல்லும்
பு³த்³தி⁴: = thinking, எண்ணம்
அபராத⁴ம்ʼ வினா = without any offence, குற்றம் செய்யாத
லோகான் = the people, மக்களை
ஹந்தும் = to kill, கொல்வது
ந காமயே = not desirable, விருப்பமல்ல.

தங்களிடம் எந்த விதமான பகைமையும் பாராட்டாமல் இங்குள்ள அரக்கர்களைக் கொல்வதா? உங்களைத் தொந்திரவு செய்யாதவர்களைக் கொல்வது சரியென்று எனக்குத் தெரியவில்லை.

தவறுகள் செய்யும் மனிதர்களுக்குத் தண்டனை வழங்கும் கடமையை எந்த அரசனும் தவிர்க்க முடியாது என்பது சீதைக்கும் தெரியும். நல்ல சாதுக்கள் மற்றும் தீய அரக்கர்கள் என்று பார்க்காது அனைவரிடமுமே உள்ள கருணையினால் சீதை, இராமரை அவர் செய்யப்போகும் வதத்தின் காரணங்களை, இன்னும் தீவிரமாக ஆராயச் சொல்கிறாள். அரக்கர்களின் கொடுமையைப் பற்றிச் சாதுக்கள் சொல்வதை மட்டும் எடுத்துக் கொண்டு, அவருக்கு ஏதும் கொடுமை செய்யாதவர்களை ஒரேயடியாக வதம் செய்வதன் நிலையைப் பற்றி அவரது கவனத்திற்குக் கொண்டுவருகிறாள். அரக்கர்கள் தனக்கு என்று தனியாக தீமை ஏதும் செய்யாவிட்டாலும், அவர்கள் மற்றவர்களுக்கு இழைக்கும் குற்றங்களுக்கு தான் அரசனாக தண்டனை கொடுத்து தவசிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பது தன் கடமை என்று இராமர் சீதையிடம் சொல்கிறார். இராமாயணத்தை மேலும் படிக்கும்போது, இப்போது சீதை சொன்னதை மனதில் கொண்டே, பின்பு அரக்கர்கள் என்ற பிரிவு ஒன்றை மட்டும் பார்க்காது குற்றம் செய்யும் அரக்கர்களுக்கு மட்டுமே அவர் தண்டனை கொடுக்கிறாரோ என்று தோன்றுகிறது.

10.4 சொல்வதைச் செய்வான்

ஜன சந்தடியற்ற அமைதியான சூழ்நிலையில் தவம் செய்வதற்கான இடமாக சாதுக்கள் காட்டைத் தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர். அங்கு ஆயுதங்களை எடுத்துச் சென்று அந்த அமைதியான சூழ்நிலையைக் கெடுப்பதே சீதைக்கு ஒரு உறுத்தலாக இருந்ததால், தான் அரக்கர்களுடன் போர் புரிந்து அவர்களை அடக்கி தபஸ்விகளுக்கு உதவுவதாக இராமர் சொன்னதும் அவள் அதைப் பற்றி யோசனை செய்யச் சொன்னாள். சீதை அப்படி வெளிப்படையாகப் பேசியதைத் தான் வரவேற்பதாக இராமர் சொல்லி, மேலும் விவரமாக அங்குள்ள உண்மை நிலையை விளக்குகிறார்.

அரக்கர்கள் அவருக்கு இன்னல்கள் ஏதும் புரியவில்லை என்பது உண்மையானாலும், அவர்கள் தன் இனத்தவரையே கொன்று அவர்களது மாமிசத்தையே சாப்பிடும் அளவு கொடூரமானவர்கள் என்றும், அதேபோல அவர்களை ஏதும் செய்யாத சாதுக்களையும் கொன்று தின்றவர்கள் என்று சொன்னார். சாதுக்களோ தவம் செய்வதற்காகவே காட்டுக்கு வந்தவர்களே அன்றி அந்த இடத்தை ஆக்கிரமித்து ஆள்வதற்கு வரவில்லை. அது மட்டுமன்றி அரக்கர்களுடன் சாதுக்களுக்கு எந்த சச்சரவும் கிடையாது. அப்படி அமைதியான சாதுக்களுக்கு அரக்கர்கள் இடையூறு செய்வது எந்த விதத்தில் நியாயம்? அதனால் தபஸ்விகளின் வேண்டுகோளுக்குத் தான் சம்மதிப்பது நியாயமான செயலே. அரக்கர்களுக்குத் தொந்திரவு கொடுக்கவேண்டும் என்பதோ, தான் கொண்டு வந்துள்ள ஆயுதங்களை உபயோகிக்கவேண்டும் என்பதோ தம் நோக்கமும் அல்ல. இதில் வலிமையற்றவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும், தான் அளித்த வாக்கைக் காப்பதுமான இரண்டு நீதிக்கு உட்பட்ட செயல்களைச் செய்வதே தனது நோக்கம் என்று விவரமாகச் சீதையிடம் சொல்லி புரியவைக்கிறார்.

தத³வஸ்²யம்ʼ மயா கார்யம்ருʼஷீணாம்ʼ பரிபாலனம்|
அனுக்தேனாபி வைதே³ஹி ப்ரதிஜ்ஞாய து கிம்ʼ புன:|| 3.10.20||

வைதே³ஹி = O Sita, ஓ, சீதா!
தத் = that, அந்த
மயா = by me, என்னால்
அனுக்தேனாபி = even if they have not pleaded with me, வேண்டுகோளை அவர்கள் வைக்கவில்லை என்றாலும்
ருʼஷீணாம் = of the sages, சாதுக்களுக்கு
பரிபாலனம் = protection, பாதுகாப்பு
கார்யம் = should be done, செய்ய வேண்டும்
ப்ரதிஜ்ஞாய = by virtue of the promise made, கொடுத்துள்ள வாக்கின்படி
கிம்ʼ புன: = what more? இதற்கு மேல் என்ன?

ஓ, சீதா! சாதுக்கள் தன்னிடம் அந்த வேண்டுகோளை வைக்கவில்லை என்றாலும், தான் கொடுத்துள்ள வாக்கின்படியும் அவர்களைப் பாதுகாக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இதற்கு மேல் கடமை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது?

இராமருக்கு ஏன் தான் கொடுத்த வாக்கைக் காத்து அதன்படி செயல்படவேண்டும் என்று தோன்றுகிறது? வாக்கு என்று அவரைப் போன்றவர்கள் கொடுத்துவிட்டால், அது வாய்மை அளவில் வந்த சொற்கள் என அர்த்தம். உள்ளத்தில் உள்ள உண்மை ஒன்றுதான் அப்படி வாய்மையாக வரும். அதைக்கேட்ட மற்றவர்களுக்கு அது மெய் அளவில் செயலாக வருவதை எதிர்பார்த்து இருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை செவ்வனே செய்து முடிக்கவில்லை என்றால் சொன்னது பொய் என்றாகிவிடும். ஆகையால் உண்மை-வாய்மை-மெய் இவை மூன்றும் ஒன்றிய தன்மையில் வாழ விரும்பும் எவருக்குமே உண்மையைச் சொல்லவும், சொன்னதைச் செய்யவும் அன்றி வேறெதிலும் நாட்டம் இருக்காது. அதனால் ஒருவன் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது என்பது தலையாய குணங்களில் ஒன்று. தன் தலையே போனாலும், குணவான் ஒருவன் தான் கொடுத்த வாக்கைத் தவறாது காக்கவேண்டும்.

10.5 சாதுக்கள் கண்ணால் கண்டிடவே

இப்படியாக சாதுக்களின் சங்கமத்தில் தண்டகாரண்யத்தின் வடபகுதியில் அவர்களது வனவாசத்தின் பத்து வருட வாழ்க்கை ஓடிவிட்டது. அந்தக் கால கட்டத்தில் விதவிதமான இயற்கைச் சூழலை ரசிக்கும் எண்ணத்தோடும், தவத்தில் வெவ்வேறு வழிமுறைகளைத் தழுவும் சாதுக்களுடன் கலந்துரையாடி அவர்களின் வழிகளைத் தெரிந்துகொள்வதற்காகவும், அவரவர் இருக்கும் வெவ்வேறு பகுதிகளுக்கு இராமர் குடிபெயர்ந்து தங்கி வந்தார். ஒரு கட்டத்தில் காட்டின் தெற்குப் பகுதிக்கும் சென்று தங்க வேண்டும் என்று தீர்மானித்தார். சுதிக்க்ஷனா முனிவர் என்பவரை ஒருமுறை பார்க்கும்போது, அவரிடம் தென்பகுதியில் அகஸ்திய மாமுனிவர் இருப்பதாகக் கேள்விப்பட்டதாகவும், அவரையும் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாலும், அவர் இருக்குமிடம் போவதற்கு வழி கேட்டார். தன் பெயருக்கு ஏற்றபடியே அகஸ்திய மாமுனிவர் தவத்தில் மட்டும் அல்லாது கல்வி, கேள்விகளிலும் மிகுந்த திறமை வாய்ந்தவர். அவருக்கு அரக்கர்களிடமிருந்து எந்தவித பயமும் இல்லாதது மட்டுமன்றி, முன்பு அவருக்குத் துன்பம் கொடுத்த பல அரக்கர்களை அடக்கி தன் வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்றும், அங்கு செல்லும் வழியையும் சொல்லி, கால தாமதம் ஏதுமின்றி இராமரை அன்றே புறப்பட்டு அகஸ்தியர் ஆச்ரமத்திற்குப் புறப்படும்படி சுதிக்ஷனா சொல்கிறார். அவர் சொன்னபடி கேட்டு இராமரும் அகஸ்தியர் ஆஸ்ரமம் நோக்கிச் சென்றார்.

யதி³ பு³த்³தி⁴: க்ருʼதா த்³ரஷ்டுமக³ஸ்த்யம்ʼ தம்ʼ மஹாமுனிம்|| 3.11.44||
அத்³யைவ க³மனே பு³த்³தி⁴ம்ʼ ரோசயஸ்வ மஹாயஸ²:|

மஹாயஸ²: = O man of great fame, புகழ் வாய்ந்தவரே!
மஹாமுனிம் = great sage, மகா முனிவர்
தம் = him, அவரை
அக³ஸ்த்யம் = Agasthya, அகஸ்திய
த்³ரஷ்டும் = to see, தரிசிக்க
பு³த்³தி⁴:  = thought, எண்ணம்
க்ருʼதா யதி³ = if arises, இருந்தால்
அத்³யைவ = today itself, இன்றே
க³மனே  = is going, புறப்படுவது
பு³த்³தி⁴ம் = thought, எண்ணம்
ரோசயஸ்வ = you may entertain, யோசியுங்கள்.

புகழ் வாய்ந்தவரே! அகஸ்திய மகா முனிவரை தரிசிக்க வேண்டும் என்பது உங்கள் ஆசையானால் இன்றே புறப்படுவது பற்றி யோசியுங்கள்.

சான்றோர்களைப் பார்த்துப் பேசவேண்டும் என்ற எண்ணத்தைத் தள்ளிப்போட்டால், பல சமயம் அந்த வேகம் குறைந்து அது நடக்காமலே போகலாம். ஆதலால் சாதுக்கள் சகவாசம் என்று விரும்பும் அனைவருமே அதை உடனே செய்வது நல்லது. ஏனென்றால், சாதுக்கள் கண்ணால் நம்மைப் பார்ப்பது என்பது மூர்த்தி தரிசனம், தீர்த்த யாத்திரை இவை எல்லாவற்றையும் விட மிகவும் மகத்துவம் வாய்ந்ததது என்று ரமண மகரிஷியும் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அதை அவர் “எண்ணில் நாளாம் தூய்மை எய்விப்ப” என்று கணக்குக்கு அடங்காத நாட்களுக்கு அதன் பலன் இருக்கும் என்றும், நினைக்க நினைக்க ஒவ்வொரு நாளும் அதன் பலன் இருக்கும் என்றும் இருபொருள் வரும்படி சொல்கிறார்.

(தொடரும்)

One Reply to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 10”

  1. மனித விளக்கின் மூலம் , மாந்தர் நல் வழி பெறட்டும். மனிதம் தழைக்கட்டும். உங்கள் இனிய பணி தொடரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *