கண்ணன் வந்தான்

காலை  மணி 3.

பொழுது இன்னும் புலராத அந்த அதிகாலைப் பொழுதிலும் அந்த இடம் பரபரப்பாக இருக்கிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு என எல்லா திராவிட மொழிகளிம் கலந்து மெல்ல ஒலித்தாலும் வரிசையில் நிற்பவர்கள் அனைவரின் மனத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே எண்ணம் நல்ல தரிசனம் கிடைக்கவேண்டுமே என்பதுதான்.  குருவாயூர் கிருஷ்ணன் கோயிலின் கிழக்கு நடையின் முகப்பிலிருக்கும்  இரண்டு அடுக்கு கோபுரத்தின் நுழைவாயிலில், அரைமணியில் திறக்கபோகும் கதவுகளுக்கு முன் நின்றுகொண்டிருக்கிறோம். வரிசையில் வந்து சேர்ந்துகொண்டிருப்பவர்களின் முகத்தில் நாம் தமாதமாகிவிட்டோமோ என்ற பதற்றம். எல்லோரும் நிர்மால்ய பூஜையைக் காணக் காத்திருகிறார்கள். நிர்மால்யம் என்பது முன்தினம் இரவு கோயில் மூடும்முன் செய்த கடைசி பூஜையின் அலங்காரங்கள் அகற்றபட்டு ஸ்வாமி அபிஷேகத்திற்காகக் காத்திருக்கும் வேளை. அந்தப் பொழுதில் தரிசனம் செய்து பிராத்திக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கிருஷ்ண பக்தனுடைய கனவு.

ஆதியில் சிவன் கோயிலான இது, பின்னர் கண்ணன் கோயிலாகியிருக்கிறது. கம்ஸனை வென்று துவராகாவில் குடிகொண்ட கிருஷ்ணர், பணிகள் முடிந்து வைகுண்டம் திரும்பும்முன் சீடன் உத்வஹனிடம் தனது விஷ்ணுவடிவ சிலையைக் கொடுத்து பிரஹஸ்பதியின்(குரு) உதவியுடன் ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து பிரதிஷ்டை செய்யச் சொன்னாதால் குருதேவன் வாயுதேவனின் உதவியுடன் கண்டுபிடித்த இடம் ருத்திரதீர்த்தா என்ற நதிக்கரையிலிருந்த சிவன் கோயில். குருவும்,வாயுவும் இணைந்து உருவாக்கியதால் அது குருவாயூராயிற்று. சிவனும் பார்வதியும் ஆற்றின் மறுகரையிலிருக்கும்  மம்மியூருக்கு இடம்பெயர்ந்தார்கள் என்கிறது இதன் ஸ்தலபுராணம். இந்த கிருஷ்ணன் கோயிலுக்கு வருபவர்கள் அந்த சிவன் கோயிலுக்கும் போகாமல் திரும்புவதில்லை.

மணி காலை 3:30-ஐ நெருங்குவது காத்திருப்பவர்களிடையே அதிகரிக்கும் பரபரப்பிலிருந்து புரிகிறது. உள்ளே ஒலிக்கும் சங்கின் முழக்கமும் மணியோசையும் கதவுகள் திறக்கப்பட்டவுடன் பெரிதாகக் கேட்கின்றன. ஸ்ரீகோவில் என்ற வாயில்பகுதிக்குள் நுழைகிறோம். சுவர்களில் இயற்கை வண்ணங்களினாலும், தைலங்களினாலும் எழுதபட்ட 17-ஆம் நூற்றாண்டு  பாணி ஒவியங்கள் பளிச்சென்றிருக்கிறது. உயர்ந்த தங்கமூலாமிடபட்ட கொடிக்கம்பம், அருகே 20 அடிஉயரத்தில் 1000 திரிகளுடன்  13 வட்டஅடுக்கு தீபஸ்தம்பம். உள்ளே பிரமிட் வடிவத்தில் செப்புத்தகடுகளின் மேற்கூரையுடன் சதுரமான கட்டடமாக நல்லம்பலம், அதுதான் கோயில். அதன் நான்கு வெளிப்பக்க சுவர்கள் முழுவதும் சிறிய கட்டங்களுக்குள் அப்பொழுதான் ஏற்றபட்ட  ஜொலிக்கும்  அகல்விளக்குகள். முன்வாயிலிலிருந்து கோயில் வாயிலை அடைய, ஏறி நடந்து இறங்க ஒரு சின்ன நடைப்பாலம். இது கோயிலின் உட்பிரகாரம் சுற்றிவருபர்களுக்கும், அங்கப் பிரதட்சணம் செய்பவர்களுக்கும் உள்ளே நுழைபவர்களால் இடையூறு ஏற்படாமலிருக்க செய்யபட்டிருக்கும் புத்திசாலித்தனமான அமைப்பு. பாலம் ஏறி இறங்கி வாயிலை நெருங்கும் நம் கண்ணில் படுவது முகப்பிலிருக்கும் யானைத் தந்தங்கள். நீண்ட நாள் கோயிலின் பட்டத்து யானையாகவிருந்த குருவாயூர் கேசவனுடையது.  திறந்திருக்கும் தங்கக் கதவுகளின் வழியே இருபுறமும் திண்ணைகளுடனிருக்கும் குறுகிய வழியில் மெல்ல நகர்ந்துகொண்டிருக்கும்போது ஒரு பக்கத்துத் திண்ணையில் நாராயண பட்டத்திரி அமர்ந்து ‘நாராயணீயம்’ காவியத்தைப் படைத்த இடத்தை அறிவிக்கும் ஒரு சாஸனப் பலகையைப் பார்க்கிறோம். பத்தடி தொலைவில் நமஸ்கார மண்டபத்திற்குப் பின்னால் குறுகிய வாசலுடன் கர்ப்பகிரஹம். அடுக்கடுக்கான சிறிய எண்ணெய் விளக்குகளின் மெல்லிய ஒளியில் மிளிரும்  கண்ணன். நுழைந்ததிலிருந்து அங்கேயே பார்த்துகொண்டிருப்பதால் அந்தக் குறைவான வெளிச்சதிற்குக் கண்கள் பழகி, அருகில் போகும்போது அரை நிமிடமாகயிருந்தாலும்  கண்ணன் தெளிவாக தரிசனம் தருகிறார். நிர்மால்ய பூஜைகள் முடிந்து, எண்ணெய் ஸ்நானம் முடிந்து, அலங்காரத்துடன் நமக்கு அருளாசி வழங்கக் காத்திருக்கிறார். அலங்காரம் தலையில் கீரிடம், கழுத்தில் மரகதம்.  ஆனால் இடுப்பில் சிவப்புப் பட்டு கெளபீனம் மட்டும்தான். நமஸ்கார மண்டபதிற்கும் சன்னதிக்கும் இருக்கும் சின்ன இடைவெளியில்தான் நாம் நின்று தரிசிக்க வேண்டும். பார்த்தபின் நகரச்சொல்லும் கட்டளைகள், அதட்டல் இல்லாத கனிவான குரலில் இருந்தாலும் அது நம் பிரார்த்தனைக்கு இடையூறாகத்தானிருக்கிறது.

இந்தக் கோயிலில் தரிசனத்திற்குக் கட்டணம் கிடையாது. விஐபிகளுக்காக பொதுஜன வரிசையை நிறுத்துவதில்லை. அப்படி வருபவர்களுக்கு வரிசையில் நிற்பதில் விலக்கு அளித்து அழைத்துவந்து சன்னதி அருகே வரிசையில் வந்தவர்களின் முன்நிறுத்துகிறார்கள். அவரை உடனே போக சொல்லுவதில்லையாகையால் அருகிலிருக்கும் அதிர்ஷ்டசாலிகளும் சற்று அதிக நேரம் தரிசிக்கலாம். பணம்கட்டி விசேஷ பூஜைகள் எதுவும் கிடையாது. தினசரி நியம பூஜைகள் தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. கோயிலின் கர்ப்பகிரஹத்திலிருக்கும் மேல்சாந்தியைத் தவிர வேறு எவருக்கும் மூலவிக்கரகத்தைத் தொட அனுமதியில்லை. ஆறுமாதத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றும் அவர் அந்தக் காலத்தில் சன்னதியிருக்கும் பிரதான மண்டபத்தை விட்டு வெளியே, பிரஹாரத்துக்குக்கூட வரமாட்டார், ஒவ்வொரு பூஜைக்கு முன்னும் குளித்து அவருக்கு மட்டுமே  நமஸ்கரிக்க உரிமையுள்ள மேடையில் நேரிடையாக  இல்லாமல்  ஒரு குறிப்பிட்ட கோணத்தில் விழுந்து வணங்கி  சன்னதிக்குப் போகிறார். அவர் நமஸ்கரிக்கும் போது யாரும் அந்த மேடையைத் தொடக்கூடாது. யாராவது தொட்டுவிட்டல் மேல்சாந்தி மீண்டும் குளித்துவரவேண்டும்.  காலை 7 மணிக்குள் எல்லா பூஜைகளும் முடிந்து மேல்சாந்தி உத்தரவு தந்தபின்  பளபளக்கும் தங்க நிற முகக் கவசம் அணிந்து காத்திருக்கும் ஒற்றையானையின்  மீது  அமர்ந்து ஒரு கீழ்சாந்தி தன் கையில்  தங்கவிக்ரஹ உற்சவ கிருஷ்ணனை ஏந்திவர,  பிரகாரத்தில் சீவேலி என அழைக்கபடும் பவனி வருகிறார். வழியெங்கும் காத்திருக்கும் பக்தர்கள் கண்ணனையும் யானையையும் வழிபடுகிறார்கள். இந்த கோயிலின் வழிபாடுகளில் யானைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம். யானைகள் இல்லாமல் ஒரு நாளும் பூஜைகள் நடைபெறாது. கோயிலுக்குச் சொந்தமாக 64 யானைகள். எல்லாம் நன்கொடையாகப் பெறபட்டவை.

3 கீமீ தொலைவில் இருக்கும், யானைகள் வசிக்கும் இடமான “ஆன தாவளம்” என்னுமிடத்தையும் பார்க்கவிரும்புபவர்கள் அனுமதிக்கபடுவார்கள் என்பதையும் அறிந்து அங்கு செல்லுகிறோம். அது 18 ஏக்கரில் விரிந்திருக்கும் பசுமையான சோலை. ஒரு ராஜாவின் கோட்டையும் தோட்டமாகவுமிருந்த  அங்கே கஜராஜன்களுக்கு  சுகமான வாழக்கை. ஒவ்வொன்றிக்கும் பெயர் ஜாதகம் எல்லாம் உண்டு.  நிழல் தரும் மரங்களின் அடியில் கட்டபட்டிருக்கும் இவர்கள் குளிப்பதற்கு, பயிற்சிக்கு. மருத்துவ சோதனைக்கு  என பல வசதிகள்.  ஒவ்வொன்றுக்கும் 3 பாகன்கள். ஒற்றைக் கொம்புடன் ஒரே ஒரு யானை.  பெண்யானைகள் 7. அட்டவணைப்படி ஒவ்வொரு நாளும் 5 யானைகள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். அதில் ஒன்று சீனியராகயிருக்க வேண்டும். யானைகளுக்குப் பயிற்சி அளிக்க அதனிடம் மலையாளத்தில்தான் பேசுகிறார்கள். யானையின் ஆயுட்காலத்தில் ஒரு பருவத்தில் அதன்  மூளை, செயல்திறன் இழந்து கட்டுப்பாடு இல்லாமல் செயல்படத் துவங்கிவிடும். இதை மஸ்தி (மதம்) என்கிறார்கள். சிலமாத மூலிகை சிகிச்சைக்குப்பின் இவை நார்மலாகிவிடும். அப்படிப்பட்ட யானைகளை தனியே பிரித்துக் கட்டியிருக்கிறார்கள். எச்சரிக்கை போர்டும் வைத்திருக்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா 2002-இல் கொடுத்த யானை சீனியராகக் கோயில் பணிகள் ஆற்றியபின் இப்போது மஸ்தியினால் தனிப்படுத்தப்பட்டு சிகிச்சையிலிருக்கிறது.

மாலை தரிசனத்திற்காக மீண்டும் கோயிலுக்கு வருகிறோம். தன் எடைக்கு நிகரான, தான் விரும்பும் பொருளை தருவதற்காக வேண்டிக்கொண்ட பக்தர்கள் காத்திருக்கின்றனர். தண்ணீர் உள்பட, அனுமதிக்கப்பட்ட பட்டியலிலுள்ள எதையும் தரலாம். பட்டியிலில்லாதையும் தர கோயிலின் வெளியே தராசுகள் இருக்கின்றன. பொருள்களைக் கோயிலே தருகிறது. உண்ணும்பொருளாக இருந்தால் ஊட்டுபுராவிற்கு; மற்றவை ஏலத்திற்கு. இரவு பூஜைகள் முடிந்து உற்சவர்  யானைமீது உலா வரத் தயராகிறார். இரவு சிவேலியில் மூன்று யானைகளில் குருக்கள்மார் குடை, சாமரம், ஆலவட்டம் போன்றவகைளுடன் பின்தொடர  கழுத்தில் பெயர்ப்பதக்கச் சங்கிலியுடன் சீனியர் யானை. அதன் மேலே கண்ணன் பவனி வருகிறார். செண்டை மேளத்தின் ஒலி பக்தர்களின் ஒங்கி ஒலிக்கும் ‘குருவாய்ராப்பா’ கோஷத்தில் அமிழ்ந்து போகிறது. 3 முறை பவனி முடிந்தவுடன் நடை மூடப்படுகிறது. இனி நாம்  நாளை காலையில் நிர்மால்யத்தில்தான் கண்ணனைப் பார்க்கமுடியும்.

2 Replies to “கண்ணன் வந்தான்”

  1. இந்த கட்டுரை முழுவதுமே அழகு! அதிலும் கீழே கொடுக்க பட்ட வரிகள் எங்களை எங்க வைக்கின்றன! உலகிலேயே பெரிய கோயில், லட்சகணக்கான வருட பெருமை கொண்டது, ஆயிரக்கணக்கான ஆச்சர்யர்களால் காப்பாற்ற பட்டது, இப்பிடிலாம் சொல்லி கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழில் ஆழ்வார்கள் அனைவராலும் பாட பட்ட பெருமை கொண்டது இப்பிடினும் சொல்லி ஆதங்க படத்தான் முடியுது! திருவரங்கத்த பாத்து நம்மளால! எப்போ தான் அந்த திருவரங்கம் கோயிலும் ஸ்ரீ மீனாக்ஷி கோயிலும் இப்பிடி ஆகுமோ! யாரவது கயா போறவங்க இந்த அறநிலைய துறைக்கும் சேத்து பிண்டம் போட்டு வந்தாலாவது நம்ம பிடிச்ச இந்த அறநிலைய துறை ஒழியுதாணு பாப்போம்!

    //சுவர்களில் இயற்கை வண்ணங்களினாலும், தைலங்களினாலும் எழுதபட்ட 17-ஆம் நூற்றாண்டு பாணி ஒவியங்கள் பளிச்சென்றிருக்கிறது. உயர்ந்த தங்கமூலாமிடபட்ட கொடிக்கம்பம், அருகே 20 அடிஉயரத்தில் 1000 திரிகளுடன் 13 வட்டஅடுக்கு தீபஸ்தம்பம்.
    //இந்தக் கோயிலில் தரிசனத்திற்குக் கட்டணம் கிடையாது. விஐபிகளுக்காக பொதுஜன வரிசையை நிறுத்துவதில்லை
    //யானைகள் இல்லாமல் ஒரு நாளும் பூஜைகள் நடைபெறாது. கோயிலுக்குச் சொந்தமாக 64 யானைகள்.
    //கோயிலின் கர்ப்பகிரஹத்திலிருக்கும் மேல்சாந்தியைத் தவிர வேறு எவருக்கும் மூலவிக்கரகத்தைத் தொட அனுமதியில்லை. ஆறுமாதத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றும் அவர் அந்தக் காலத்தில் சன்னதியிருக்கும் பிரதான மண்டபத்தை விட்டு வெளியே, பிரஹாரத்துக்குக்கூட வரமாட்டார், ஒவ்வொரு பூஜைக்கு முன்னும் குளித்து அவருக்கு மட்டுமே நமஸ்கரிக்க உரிமையுள்ள

  2. திருவோண நாதனாய் குருவாயூர்க் கண்ணன் கருணை பொழிய வேண்டுவோம்..

    திருநிறை ஒணத்தின் மகிழ்ச்சி பெருக வாழ்த்துவோம்..

    மாபலி பரசுராமன் மார்க்கண்டன் அசுவத்தாமா நீடிய கும்பகர்ணன் விபீஷணன் விக்ரமாதித்தன் என்கிற சிரஞ்ஜீவிகள் எல்லாம் நம்மை வாழ்த்தட்டும்..

    வெண்ணெய் உண்ட கள்வனான திருமாலோனின் கள்ளப் புன்னகை எங்களை வாழ்விக்கட்டுமே…

    மீண்டும், விற்கொடி பறக்கும், செங்குட்டுவனும், இளங்கோவும், சேரமான் பெருமாளும், குலசேகராழ்வாரும் பிறந்த மலைநாடு எங்கள் மண்.. எங்கள் தமிழ்மண் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *