[பாகம் 15] சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஆத்ம விசாரம்

சுவாமி சித்பவானந்தர் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் முந்தைய பகுதிகள்:

 

தொடர்ச்சி…

ஆத்ம விசாரம் குறித்து  சுவாமி சித்பவானந்தரின் உபதேசங்கள்:

காலமெல்லாம் ஆத்ம விசாரம் நிகழ்ந்து வருகிறது. மக்கள் மனது ஆத்ம விசாரத்தில் ஈடுபடாத காலமே கிடையாது. ஆத்மவிசாரம் செய்கின்ற முறை காலத்திற்கேற்றவாறு அமையலாம். தாங்களாகவே ஆத்ம விசாரம் செய்யும் பொழுதுதான் சமயத்தைப்பற்றிய அனுபவ ஞானம் ஒவ்வொருவருக்கும் கிட்டுகிறது. பண்டைக் காலத்தில் இச்சீரிய செயலை மேற்கொள்ளுதற்கு முனிபுங்கவர்கள் ஜனசஞ்சாரமில்லாத கானகத்தைச் சென்றடைந்தனர். அங்குக் குடிசைகள் அமைத்துக்கொண்டு இயற்கையோடு வாழ்ந்து இறைவனோடு தொடர்பு கொள்ள விழைந்தனர். ஆத்ம விசாரம் செய்ய விரும்பியவர்கள் அம்மகான்களிடம் போய்ச் சேர்ந்தார்கள்.

குழந்தை, அரசன், குரு, தெய்வம் ஆகியவர்களைக் காண வெறுங்கையோடு செல்லுதல் கூடாது. அவர்களிடத்து மாசு கலவாத அன்பு நிறைந்திருக்கும். அவ்வன்பைப் பெறுவதற்கும், அவர்களை மகிழ்விப்பதற்கும் கையில் நாம் ஏதாவது கொண்டுசெல்ல வேண்டும். குருவுக்கு அவருடைய அக்கினியை வளர்ப்பதற்குத் தேவையான சமித்தைப் பண்டைக் கால சிஷ்யர்கள் கொண்டு சென்றார்கள். அதில் ஒரு உட்கருத்தும் அடங்கியிருக்கிறது. சமித்து ஈரமில்லாது அமைந்திருப்பது போன்று சிஷ்யனுடைய மனம் உலகப் பற்றின்றி இருக்க வேண்டும். உலர்ந்த சமித்தில் நெருப்பு உடனே பற்றிக்கொள்ளுவது போன்று உலகப் பற்றற்ற சிஷ்யனுடைய உள்ளத்தில் குருவினுடைய உபதேசம் பற்றிக்கொள்கிறது. நெருப்பில் போடப்பட்ட சமித்து நெருப்பு மயம் ஆகிவிடுவது போன்று குருவை அடைந்த சிஷ்யன் குரு மயம் ஆகிவிட வேண்டும். நெறியான வாழ்க்கை வாழ்ந்த போதிலும், ஆத்ம விசாரத்தில் ஆழ்ந்து ஈடுபட்டபோதிலும் ஆத்ம ஞானத்தைப் பற்றிய தெளிவு பெறாதவர்கள் குருவை நாடிப் போவது உண்டு. அப்படிக் குருவினுடைய உதவியை நாடிச்சென்ற ஆறுபேருடைய ஆத்ம விசாரத்தை ஆராய்வோம்.

பரத்வாஜருடைய புத்திரர் சுகேசர், சிபியின் புத்திரர் சத்தியகாமர், சூரியனுடைய பெளத்திரர் கார்க்கியர், அசுவலரின் புத்திரர் கெளசல்யர், விதர்ப்பநாட்டினராகிய பார்க்கவர், கத்தியரின் புத்திரர் கபந்தி என்னும் அறுவர் பிரம்ம நாட்டம் உடையவர்களாய்க்கையில் சமித்தை எடுத்துக்கொண்டு உபதேசம் பெறும் பொருட்டு பெருமை மிக்க பிப்பலாதரை அணுகினர். “ஆன்மிக சந்தேகங்களை நீக்கிக்கொள்ளும் பொருட்டு நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். தாங்கள் கிருபைகூர்ந்து எங்களுடைய ஐயத்தைப் போக்கிவைக்க வேண்டும்” என்று அவர்கள் பிப்பலாதரைக் கேட்டுக்கொண்டார்கள்.

நான் சொல்லும் விஷயம் உங்களுக்கு விளங்கவேண்டும் என்றால் நீங்கள் இன்னும் ஓர் ஆண்டு தவத்தையும், பிரம்மசரியத்தையும், சிரத்தையையும் மேற்கொண்டு இங்கு வசித்து வரவேண்டும். அதன்பிறகு உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை என்னிடம் தெரிவியுங்கள். எம்மால் முடியுமானால் அவ்வையங்களைப் போக்கிவைக்கிறேன் என்று ரிஷி அவர்களிடம் பகர்ந்தார். ஆத்ம சாதகர்கள் ஒவ்வொருவரும் ரிஷியினுடைய கூற்றை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு உண்மை ஒன்று விளங்கும். ஞானம் பெறுவதற்கு முன்பு சிரத்தையோடு கூடிய தவ வாழ்க்கை வாழ்ந்தாகவேண்டும். அத்தவ வாழ்க்கையில் பிரம்மசரியம் முக்கியமான பகுதியாகிறது.

தவத்தினால் வரும் சிறப்பு பிரம்மசரியம் இல்லாவிடில் அழிந்துபோகும். பிரம்மவித்தையைப் பெறுவதற்கு பிரம்மசரியம் துணைபுரிகிறது. ஆகையால் ரிஷி அவ்வறுவருக்கும் ஓராண்டு சிரத்தையோடு கூடிய தவவாழ்க்கையையும் பிரம்மசரியத்தையும் வலியுறுத்துகிறார்.

 

ஓராண்டு பிரம்மசரியத்தோடு கூடிய தவவாழ்க்கை வாழ்ந்தபின் கத்யரின் புதல்வர் கபந்தி என்பவர் பிப்பலாதரை அணுகிக் கேட்கலானார்–

“ஐயனே, ஜகத்தைப் பற்றி எனக்கு விளக்கமாக எடுத்துக்கூற வேண்டும். முதலில் ஜகத் எப்படித் தோன்றியது என்பதை எனக்குத் தெரியப்படுத்த வேண்டும்.”

“வேதங்கள் யாரைக் குறித்துப் பேசுகின்றனவோ அவ்விடமிருந்துதான் இந்த ஜகத் தோன்றியிருக்கிறது. அவர்தான் பிரம்மம் என்று அழைக்கப்படுகிறார். அப்பரம்பிரம்மம்தான் இந்த ஜகத்துக்கு மூலபுருஷராகிறார். அப்பரப்பிரம்மத்திற்குப் புறம்பாக வேறு ஒன்றும் கிடையாது. அவருடைய சங்கல்பத்தின் விளைவாக இந்த ஜகத் தோன்றியிருக்கிறது. ஜகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் கர்மத்துக்கு வசப்பட்டிருக்கின்றன. பயனைக் கருதி சத்கருமம் புரிகின்றவர்கள் தக்ஷிண மார்க்கத்தின் வழியாக சந்திரலோகத்தை அடைகின்றனர். அங்கு அவர்கள் தங்கள் புண்ணியத்தின் பயனை அனுபவித்துவிட்டு மீண்டும் இப்பூவுலகில் பிறக்கின்றனர். இதற்கு பித்ருயானம் என்று பெயர். பற்றற்றுக் கர்மம் புரிந்து சித்த சுத்தியுடையவர்களாய் ஆத்ம ஞானத்தை நாடுபவர்கள் உத்தரமார்க்கத்தின் மூலமாக சூர்யலோகத்தை அடைகின்றனர். இங்கு மரணபயம் கிடையாது. இங்கிருந்து அவர்கள் மீண்டும் பிறப்பு எடுப்பதில்லை. இதுவே உன்னத நிலையாகும். இந்நிலையை அடைவதுதான் வாழ்க்கையின் லக்ஷியமாகும். இந்நிலையை அடைவதற்கு, சிரத்தையோடு கூடிய தவம்புரிந்தாக வேண்டும். மனோவாக்கு காயத்தால் வழுவாத பிரம்மசரியத்தை அனுஷ்டிக்க வேண்டும். சத்தியத்தினின்றும் சிறிதும் பிறழாது இருக்க வேண்டும். பாரபட்சமின்றி எல்லா உயிர்களையும் நேசிக்கும் பரந்த உள்ளம் வேண்டும். இந்த மார்க்கத்திற்குத் தேவயானம் என்று பெயர்”- இங்ஙனம் பிப்பலாதர், கபந்தியின் கேள்விக்கு விடை பகர்ந்தார்.

 

விதர்ப்ப நாட்டினரான பார்க்கவர் தமது ஐயத்தை வினவினார்–

“ஐயனே, உயிர்களை ரக்ஷிக்கும் தேவதைகள் யாவர்? அவர்களுள் சிறந்தவர் யார்?”

“அதிபூதத்தில் பிருதுவி, அப்பு, தேயுவாயு, ஆகாசம் என்ற ஐந்தும், அத்யாத்மத்தில் வாக்கு, மனம், கண், காது என்பவைகளும், இவற்றிற்கெல்லாம் மேலாக முக்கியப் பிராணனும் உயிர்களை ரக்ஷித்து வருகின்றன. அதிபூதத்தில் சொல்லப்பட்ட ஐந்தும், அத்யாத்மத்தில் சொல்லப்பட்ட நான்கும் முக்கியப் பிராணனால் இயக்கப்படுகின்றன. எனவே முக்கியப் பிராணனே இயக்கும் சக்தி ஆகிறது. பிராண சக்தியே அக்கினி வடிவெடுத்து உஷ்ணத்தைக் கொடுக்கிறது; சூரியனுடைய தோற்றமாகவும் சந்திரனுடைய தோற்றமாகவும் உருவெடுத்து வந்து நம்மைப் பரிபாலித்து வருகிறது. நாம் உபாசனைக்கு எதை வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். உபாசனையின்மூலம் மனம் உள்முகமாகச் சென்று ஆத்ம ஞானத்தை அடையவேண்டும். ஆத்ம ஞானத்தை அடைவதற்கு ஏற்ற உபாசனை போற்றுதற்கு உரியது ஆகிறது” என்று விடை பகர்ந்தார்.

 

மூன்றாவதாக, அசுவலரின் புத்திரரான கெளசல்யர் தமது வினாவை எழுப்பினார்-

“போற்றுதற்குரிய பெரியாரே! இந்தப் பிராணசக்தி எப்படி உண்டாகிறது? அது நம் உடலுக்குள் எங்ஙனம் வருகிறது? தன்னை எப்படி ஐந்து பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கிறது? பிறகு அது நம் உடலை விட்டு எப்படிப் போகிறது? வெளி உலகத்தையும் உள் உலகத்தையும் எப்படி இயக்கி வருகிறது?”

“பிராண சக்திக்கு மூலமாக இருப்பது ஆத்ம சக்தியே ஆகும். ஆத்ம சக்தியினுடைய நிழல் போன்றது பிராணசக்தி. நம்மிடத்தில் இருந்து நிழல் எப்படி உண்டாகிறதோ அங்ஙனம் ஆத்ம சக்தியிடம் இருந்து பிராணசக்தி தோன்றுகிறது. நம்மிடத்தில் நிழல் தோன்றுவதற்கு வெளிச்சம் காரணமாக இருப்பது போன்று பிராணசக்தி நம்மிடம் புகுவதற்கு நம் மனம் காரணமாக இருக்கிறது. சங்கல்ப விகல்பங்களால் மனது சலனம் அடைந்து மனத்தின்கண் அசைவு உண்டாகிறது. அவ்வசைவே பிராணசக்தி நம்மிடம் புகுவதற்குக் காரணம் ஆகிறது. பிராணசக்தி தன்னைப் பிராணன், அபானன், விபானன், உதானன், சமானன் என்னும் ஐந்து பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கிறது. பாயு அல்லது மலத்துவாரத்திலும், உபஸ்தம் அல்லது கருத்துவாரத்திலும் அபானனாக நின்று பிராணசக்தி வேலை செய்கிறது. இருதயத்தினின்று கிளம்பும் நாடிகளிலும் அவற்றின் கிளை நாடிகளிலும் அது வியானனாக வியாபித்திருக்கிறது. மேரு தண்டத்தில் அது உதானனாக இருக்கிறது. கண்ணிலும் காதிலும் வாயிலும் மூக்கிலும் அது பிராணனாக நின்று வேலை செய்கிறது. இங்ஙனம் அத்யாத்மத்தில் பிராணன் இயங்கி வருகிறது. அதிபூதத்தில் சூரியன் பிராணனாகிறது. பிருதுவி அல்லது மண்ணை இயக்குவிப்பது அபானன் ஆகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள வெளியே சமானன் ஆகிறது. காற்றே விபானனானகவும், ஒளியே உதானனாகவும் இருந்து வருகின்றன. நம்மிடத்தில் ஸ்தூல சூட்சும காரண சரீரங்கள் உண்டு. மரண காலத்தில் பிராணன் ஸ்தூல சரீரத்தை விட்டுவிட்டு சூட்சும,காரண சரீரங்களைப் பற்றிக்கொள்கிறது. பரப்பிரம்மத்தின் நிழல் போன்று பிராண சக்தி இருக்கிறதென்று அறிந்து அப்பிராண சக்தியின் உதவியால் பரப்பிரம்மத்தை உபாசிக்க ஜீவாத்மன் தெரிந்து கொள்ள வேண்டும். இதை அறிபவன் பிராண சக்தியை நன்கு பயன்படுத்தியவன் ஆகிறான்.

 

அடுத்தபடியாக, கார்க்கிய வம்சத்தவரான ஸௌர்யாயணி பிப்பலாதரை வினவலானார்-

“ஐயனே, ஜாக்ரதம், சொப்பனம், சுஷுப்தி என்னும் மூன்று நிலைகளை அனுபவிப்பவர் யார்? ஜாக்ரத நிலையில் விழித்திருப்பவை எவை? சொப்பன அவஸ்தையில் கனவு காண்பவை யாவை? சுஷுப்தியில் இன்பம் காண்பது எது? இவற்றுக்கெல்லாம் நிலைக்களமாய் இருப்பது எது?”

பிப்பலாதர் இதற்கு விளக்கம் கூறலானார்: “விழித்திருக்கின்ற நிலையில் விழிப்பு நிலை ஒன்றுதான் மெய்யெனத் தோன்றுகிறது. அப்பொழுது சொப்பனத்தையும் சுஷுப்தியையும் பற்றிய அனுபவம் உண்டாவதில்லை. கனவுநிலையில் கனவுதான் மெய்யாகத் தோன்றுகிறது. மற்றிரண்டும் அப்பொழுது அனுபவத்திலில்லை. இதே போன்று சுஷுப்தியையும் பற்றிய அனுபவம் உண்டாவதில்லை. கனவுநிலையில் கனவுதான் மெய்யாகத் தோன்றுகிறது. மற்றிரண்டும் அப்பொழுது அனுபவத்திலில்லை. இதேபோன்று சுஷிப்தியில் சுஷிப்தி அனுபவமே மெய்யாகவும் மற்றவை பொய்யாகவும் இருக்கின்றன. இம்மூன்று நிலைகளையும் கடந்து இதற்கு மேலான நிலைக்கு நாம் செல்கிறபொழுது ஆத்மா அனுபவத்தில் உணரலாம். ஆத்மானுபவத்தை உணர்கின்றபொழுது ஜாக்கிரத அனுபவம், சொப்பன அனுபவம், சுஷுப்தி அனுபவம் ஆகிய யாவையும் அனுபவித்து வந்தது ஆத்மா ஒன்றே என்பது நமக்கு விளங்குகின்றது. இந்த அனுபவங்கள் யாவுக்கும் நிலைக்களமாக இருந்தது ஆத்மசொரூபமே. இம்மூன்று நிலைகளும் அதன் மேல்போக்கில் நமக்கு அரிய பாடத்தைப் புகட்டிக் கொண்டு இருக்கின்றன. கனவு உலகில் இப்பிரபஞ்சம் யாவும் மனதினுடைய சிருஷ்டி என்ற உண்மை நமக்கு விளங்குகிறது. மனதை அழித்துவிட்டால் இவ்வுலகக் காட்சி போய்விடுகிறது என்ற உண்மையைக் கனவுநிலை நமக்குப் புகட்டுகிறது. உறக்கத்தில் மனதும் ஐம்புலன்களும், உள்ளே இழுக்கப்பட்டு ஆத்ம சொரூபத்தில் லயம் ஆகின்றன. அப்பொழுது நாம் நம்மை அறியாது பேரின்பம் அனுபவித்து வருகின்றோம். தூங்கும்பொழுது அந்த இன்பத்தை அனுபவிக்கின்ற உணர்வு நமக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், விழித்தவுடன் நான் ஆனந்தமாகத் தூங்கினேன் என்று நாம் ஒவ்வொருவரும் சொல்லுகிறோம். எனவே உறக்கநிலை பேரானந்தம் உண்டு என்பதை நமக்குப் புகட்டிக் கொண்டு இருக்கிறது. விழிப்பு நிலை இருக்கின்றேன் என்ற உணர்வை நமக்குத் தெளிவாக விளக்குகிறது. விவேகத்தைக் கொண்டு விசாரம் பண்ணும் பொழுது எல்லாவற்றிற்கும் ஆதாரமான பொருள் ஒன்று இருந்தாக வேண்டும் என்ற உண்மை, இருக்கிறேன் என்ற உணர்விலிருந்து தெளிவாகிறது. இவ்வுண்மையை விழிப்பு நிலை நமக்குப் புகட்டிக் கொண்டு இருக்கிறது. ஆத்ம சொரூபமே ஆதாரமானது. அவ்வாத்ம சொரூபத்தை சூரியனோடு ஒப்பிடலாம். சூரியனுடைய பிரகாசத்தால், பொருள்கள் புலனாகின்றன. அதுபோன்று ஆத்மாவினுடைய சான்னித்தியத்தால் மூன்று அவஸ்தைகளையும் நாம் அனுபவிக்கிறோம். பொருள்கள் எதுவும் இல்லாவிட்டாலும் சூரிய ஒளி தடைப்படுவதில்லை. அது என்றும் பிரகாசித்துக் கொண்டு இருக்கும். இம்மூன்று அவஸ்தைகளும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கலாம். அதனால் ஆத்ம சொரூபம் பாதிக்கபடுவதில்லை. மூன்று அவஸ்தைகளுக்கு அப்பால் உள்ளது துரிய அவஸ்தை. துரிய அவஸ்தையில் ஆத்ம சொரூபம் தன்னில் தானாக இருந்து வருகிறது. இருப்பது அது ஒன்றே. உண்மையில் அவ்வாத்ம சொரூபமே பார்த்தும், தொட்டுணர்ந்தும், கேட்டும், முகர்ந்தும், ருசித்தும், நினைத்தும், அறிந்தும், செயல்புரிந்தும் வருகிறது. இவ்வுண்மையை அறிகின்றவன் எல்லாம் அறிந்தவன் ஆகின்றான்.”

 

அடுத்தபடியாக சிபி புத்திரரான சத்தியகாமர் பிப்பலாதரைக் கேட்கலானார்-

“ஐயனே, ஒம்-காரத்தை உபாசிக்கின்ற மனிதன் எந்நிலையை எய்துகிறான்?”

பிப்பலாதர் விடை பகரலானார்- “ஓம்-காரம் எனப்படுவது எதுவோ அதுவே பரப்பிரம்மமும் ஆகிறது. ஓம்காரத்தை உபாசிப்பவன் பரப்பிரம்மம், அவனிடத்திலுள்ள பாபங்களெல்லாம் கழுவப்பட்டுத் தூயவன் ஆகின்றான். பாம்பு தன் சட்டையை உரித்த நிலையில் உள்ளும் புறமும் தூய்மையுடையது ஆகிறது. அங்ஙனம் ஓம்-காரத்தை உணர்வோடு ஓதுபவன் உள்ளும் புறமும் தூய்மையடைந்து உள்ளத்தில் உறையும் ஒண்பொருளைக் காண்கின்றான்.

ஓம்காரம் அ உ ம என்ற மூன்று மாத்திரைகளை உடையது. “அ” ஜாக்ரத நிலையையும் ஸ்தூல தேகத்தையும் “உ” சொப்பன நிலையையும், சூட்சும தேகத்தையும் “ம” சுஷுப்தி நிலையையும், காரணதேகத்தையும் குறிப்பன ஆகின்றன. ஜாக்ரதம், சொப்பனம், சுஷுப்தி இம்மூன்று நிலைகளும் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் ஆகிய மூன்று தேகங்களும் வெவ்வேறாகக் காணப்படினும் இவைகள் யாவும் ஆத்மாவிடம் ஒன்றுபடுகின்றன. சமுத்திரத்திலிருந்து புறப்பட்ட நீர் நதி, ஓடை, சாக்கடை முதலிய வெவ்வேறு வடிவங்களாக ஓடி வந்து சமுத்திரத்தில் கலக்கும்போது சமுத்திரமயம் ஆகி விடுகிறது. இறைவனிடத்திருந்து வந்த உயிர் மாயைக்கு உட்பட்டிருக்கும்போது ஜாக்ரதம், சொப்பனம், சுஷுப்தி என்னும் நிலைகளிலும், ஸ்தூலசூக்ஷ்ம காரணம் என்னும் தேகங்களிலும் கட்டுண்டு கிடந்து ஆத்மாவோடு லயமாகும் போது சமுத்திரத்தில் லயமான நீர்சமுத்திரமயமாவது போன்று அந்நிலைகள் யாவும் மறைந்து ஆத்ம மயம் ஆகிவிடுகிறது. அ விலிருந்து ருக்கு வேதமும் பூ: என்னும் வியாஹ்ருதியும் காயத்ரியின் முதல் பாதமும் உண்டாயின. ஓம்-காரத்தின் இரண்டாவது மாத்திரையாகிய உ விலிருந்து யஜூர்வேதமும் புவ: என்னும் வியாஹ்ருதியும், காயத்ரியின் இரண்டாவது பாதமும் உண்டாயின. மூன்றாவது மாத்திரையாகிய ம விலிருந்து ஸாமவேதமும் ஸூவ: என்னும் வியாஹ்ருதியும், காயத்ரியின் மூன்றாவது பாதமும் உண்டாயின. ருக்குவேதம் பரம்பொருளின் புகழைப் பாடுகிறது. யஜூர்வேதம் பரம்பொருளை அடைவதற்குரிய பரஞானத்தைப் புகட்டுகிறது. இங்ஙனம் ஒம்-காரத்தை ஜாக்கிரதம், சொப்பனம், சுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளிலும் சொல், செயல், எண்ணம் என்பனவற்றிலும் உபாசனை செய்துவந்தால், அது உபாசகனை நாலாவது நிலையாகிய துரிய நிலைக்கு எடுத்துச் செல்கிறது. அந்நிலையில் எல்லையில்லாத இன்பத்தை உபாசகன் அனுபவிக்கின்றான். மூப்பு, மரணம், பயம் அற்ற சாந்தநிலை அதுவேயாம்.

 

அடுத்து ஆறாவதாக பரத்துவாஜ வம்சத்தவரான சுகேசர்  எழுப்பிய வினா–

“ஐயனே, பதினாறு கலைகளுள்ள புருஷன் யார்?”

பிப்பலாதர் அதற்கு விடை பகரலானார்: “பதினாறு கலைகளுள்ள புருஷன் நம் ஹிருதய குகையினுள் வீற்றிருக்கிறான். நம்மைச் சுற்றிலுமுள்ள இயற்கை அவனுடைய ஸ்தூலவடிவம் ஆகிறது. அவன் சூக்ஷ்ம வடிவத்தில் நம் உள்ளத்தினுள் வீற்றிருக்கிறான். மாணிக்கம் இருப்பதை அதன் பிரகாசம் விளக்குவது போன்று அவனிடமுள்ள கலைகள் அவனை விளக்கிக்காட்டுகின்றன. இயற்கையின் கண் அக்கலைகள் கவர்ச்சி சக்தியாக இருந்து நம்மை அவன்பால் இழுத்துக் கொண்டிருக்கின்றன. உள்ளத்தினுள் ஆத்மசக்தியாக இருந்து அன்பையும், ஆற்றலையும், அறிவையும் வளர்த்து அவனிடத்து நம்மை அவைகள் எடுத்துச்செல்கின்றன. மாணிக்கம் இல்லாவிட்டால் பிரகாசம் இருப்பதில்லை. அங்ஙனம் புருஷன் இல்லாவிட்டால் கலைகளுக்கு இருப்பில்லை. கலைகளின் மூலம் புருஷன் உணர்ந்து புருஷன்மயம்ஆகிவிடுகின்ற பொழுது கலைகள் நமக்குப் புறம்பானவை என்னும் உணர்வு போய்விடுகிறது. புருஷன்மயம் நாம் ஆகிவிடுகிறபொழுது புருஷனைத் தவிர எல்லாம் மறைந்து விடுகின்றன.”

இங்ஙனம் அவர்களுக்கு ஆத்மதத்துவத்தை விளக்கி இதுவே ஆத்மாவைப் பற்றிய என் அனுபவம் என்றும் இதற்கு மேல் அறியவேண்டியது ஒன்றுமில்லை என்றும் பகர்ந்தார். அவர்களும் அவருக்கு வணக்கம் தெரிவித்து, எங்களை அவித்யையினின்றும் கரையேற்றி விட்டதால் நீங்களே எங்கள் பிதா. உங்களைப் போன்று இன்னும் உள்ள மற்ற பரமரிஷிகளுக்கு எங்கள் நமஸ்காரம் என்று கூறி விடைபெற்றுச் சென்றனர்.

ஆத்மவிசாரத்தின் மூலம் ஆண்டவனை அடையும் மார்க்கத்தைப் புகட்டும் உபநிஷதக் கதை இதுவாகும்.

(தொடரும்…)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

One Reply to “[பாகம் 15] சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஆத்ம விசாரம்”

  1. மிக அருமை.
    தமிழ் ஹிந்துவில் நான் படித்த கட்டுரைகளில் மிக சிறந்த கட்டுரை.
    ஆசிரியருக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *