[பாகம் 16] சித்பவானந்தரின் சிந்தனைகள்- திருவாய்மொழி

சுவாமி சித்பவானந்தர் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் முந்தைய பகுதிகள்:

 

தொடர்ச்சி…

உயிர்களனைத்திடத்தும் மனம் என்பது ஒன்றுண்டு. மனம் தோற்றத்துக்கு வர வர உயிர்கள் மேல்நிலைக்கு வருகின்றன. மனிதனிடத்து மனம் முற்றிலும் தோற்றத்திற்கு வந்திருக்கிறது. மனதிற்கு வேகம் கொடுப்பது ஆசையாகிறது. மனிதனைத் தவிர மற்ற உயிர்கள் உண்பதிலும் உறங்குவதிலும் உடலின்பத்தைப் பெறுவதிலும் ஆசைவைக்கின்றன. இவ்வாசை நிறைவேறியதும் அவ்வுயிர்கள் திருப்தியுறுகின்றன. அழிந்து போகும் இழிநிலையிலுள்ள இவ்வுடல் சம்பந்தமான ஆசை கீழான ஆசையாகிறது. இக்கீழான ஆசையில் அளவில்லை. அவனுடைய ஆசை இவ்வுடல் சம்பந்தத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. லெளகீக அறிவையும் ஆற்றலையும் பெருக்க வேண்டுமென்று அவன் விழைகிறான். இது அவனிடத்துள்ள அகங்காரத்தை வளர்த்துக்கொண்டே போகிறது. இந்த அகங்காரத்தை வளர்க்கும் ஆசைக்கு எல்லை காணாமல் திண்டாடுகிறான். இன்ப துன்பம் என்னும் சூழலில் அகப்பட்டு உண்மையை அறியாது மயங்கிக் கிடக்கின்றான். ஆனால் மனிதர்களில் ஒரு சிறுபான்மையோர் மட்டும் லெளகீக ஆசையை ஒழித்துவிட்டுப் பரத்தினிடத்து ஆசைகொண்டிருக்கின்றனர். பரம்பொருளிடத்துக்கும் பற்றுதலே மேலானது. அதனினும் உயர்ந்தது வேறொன்றும் இல்லை. இவ்வுயர்ந்த பற்றுதலையுடைவர்கள் முமுக்ஷூக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கீழான உயிர்கள் மேலான உயிர்கள் ஆகிய அனைத்திடத்தும் இறைவன் ஒரே தன்மையுடையவனாக இருந்து வருகிறான்.

இவ்வுயிர்களின் வடிவங்களில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாது தன்னை முற்றிலும் உணர்ந்த நிலையில் அவ்வுயிர்களிடத்து இறைவன் இருக்கிறான். இறைவன் இருக்கும் நிலை உயிர்களுக்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இம்மறைப்பு நீங்கி இறைவனை உணர்கின்ற நிலை வருகிறபொழுதுதான் வாழ்வின் லட்சியம் அடையப்பட்டதாகிறது. ஆனால் இது சுலபத்தில் ஆகக்கூடிய காரியம் அல்ல. இதற்காக எண்ணரிய பிறவிகள் எடுத்து அப்பிறவிகளிலெல்லாம் உயிர்கள் முயன்று வருகின்றன. ஆனால் இவ்வுலக சுகதுக்கத்துக்கு ஆளாகி இறைவனை உணர்ந்தாக வேண்டும் என்னும் குறிக்கோளை அடிக்கடி இவ்வுயிர்கள் மறந்துவிடுகின்றன. பல பிறவிகள் எடுத்துச் சுகதுக்கத்தில் உழன்றபின் முயற்சியெல்லாம் வீணாகப் போகிறது என்று உணர்கின்ற நிலை ஒன்று வருகிறது. அப்பொழுதுதான், படமாட்டேன் இனித்துயரம், பட்டதெல்லாம் போதும் என்கின்ற உணர்வு வருகிறது. மனிதப் பிறவியில்தான் இந்த உணர்வு உண்டாகிறது. அதன்பின் பரம்பொருளுக்காகவென்று முயற்சி எடுத்துக்கொள்ளப்படுகின்றது. தாங்களாகவே வேண்டியவாறு முயன்று, வழி ஒன்றும் தெரியாது திண்டாடும் சாதகர்கள் குருவை நாடிப் போகின்றனர். பின் குரு புகட்டுகின்ற யோக மார்க்கத்தில் நெடுங்காலம் முயன்று வருகிறார்கள். அப்பொழுதும் இறைவன் எத்தகையவன் என்பதை அறிய முடியாது தவிக்கின்றனர். இக்கருத்தை, உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வு அரிது என்ற நம்மாழ்வார் சொற்றொடர்கள் விளக்குகின்றன.

இறைவன் சகுணமாகவும், நிர்க்குணமாகவும் இருக்கிறான். நிர்க்குண உபாசனை செய்வது தேகாத்ம புத்தி படைத்தவர்க்குக் கடினமானது. சகுண உபாசனை அவர்களுக்கு எளிதாகிறது. சகுண உபாசனையில் இறைவனுக்கு எண்ணரிய நாமரூபங்கள் உண்டு. எனவே அவன் பல கடவுள்களாகப் போற்றப்படுகின்றான். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய முத்தொழிலைச் செய்யும் கடவுள்கள் மும்மூர்த்திகள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என அழைக்கப்படுகின்றனர். இவ்வடிவங்களுள் சாதகர்கள் தங்களுக்கு விருப்பமான தெய்வத்தை உபாசனா மூர்த்தியாக வைத்துக் கொள்ளலாம். மனம் புற உலகில் சென்றே பழகியிருக்கிறது. சாதனையின் மூலம் அதை உள்ளே இழுத்துப் பழக வேண்டும். சாதகர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதன்மூலம் மனதை உள்ளே திருப்பிப் பழகும் பயிற்சி பெறலாம். மனம் எதைப் பற்றிப் பிடிக்கிறதோ அதன்பால் அது கவரப்படுகிறது. இஷ்டதெய்வத்தின் மீது மனதிற்குப் பற்றுதல் உண்டாகிவிட்டால் அதை நாடிப் போவது மனதின் இயல்பாகிவிடும். இனி இஷ்ட தெய்வத்தின் மீது பற்றுதல் உண்டாவதற்கு என்ன செய்யவேண்டுமென்ற கேள்வி எழுகிறது. இஷ்டதெய்வத்தின் நாமத்தை ஓயாது உச்சரிப்பதின் மூலமும், அவருடைய புகழை எடுத்துரைக்கும் நூல்களை ஓதுவதின் மூலமும், அவருடைய வடிவத்தைத் தியானிப்பதின் மூலமும் அவரிடத்து பற்றுதல் உண்டாகிறது.

பாழ்த்த வினைகள் சாதகர்களுடைய மனதை இறை நாட்டத்தில் செல்லாது தடுக்கின்றன. அவ்வினைகள் குறைந்து அழிந்து போகின்றபொழுது மனதுக்கு சதா இறைவனுடைய நினைவிலேயே இருப்பது சாத்தியமாகிறது. இறைவனுடைய நாமத்தை மனது உச்சரிக்கின்றபொழுது பாழ்த்த வினைகளின் வேகம் குறைகின்றது. நாம உச்சாரணை மூன்று விதத்தில் நிகழலாம். வாய்விட்டு உரக்கச் சொல்லுதல் ஒருமுறை. இதன் விளைவு மூன்றாந்தரமானது. அதனின் மேலானது உதடு அசைகின்ற பாங்கில் நாமத்தை உச்சரிப்பதாகும். இது இரண்டாந்தரமானது. இதனினும் மேலானது மனதுக்குள்ளேயே நாம உச்சாரணை நிகழ்வதாகும். இதுவே தலைத்தரமானது. மனது நாம உச்சாரணையில் ஆழ்ந்துபோக வேண்டும். ஆழ்ந்துபோதல் என்பது அந்த நாமத்தைப் பற்றிய எண்ணத்திலேயே மனது ஈடுபட்டு இருப்பதாகும். வேறு சிந்தனைககு இடங்கொடாது நாமத்திலேயே மனது ஈடுபடுகின்றபொழுது அந்நாமத்துக்குரிய வடிவம் மனதால் கிரகிக்கப்படுகிறது. இறைவன் வேறு, அவனுடைய நாமம் வேறல்ல. பாலும் வெண்மையும், மாணிக்கமும் அதனுடைய ஒளியும், ஒன்றை ஒன்று பிரியாது இணைந்தே இருக்கின்றன. மனதுமுற்றிலும் ஓசையைப் பற்றுகின்றபொழுது அவ்வோசைக்குரிய பொருளைப் பற்றுவதும் எளிதாகிறது.

‘சிவசிவ என்றிட தீவினை மாளும்’என்று திருமூலரும், ‘ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே’ என்று ஞானசம்பந்தரும் இறைவனுடைய நாமத்தின் பெருமையை எடுத்து உரைத்திருக்கிறார்கள். எனவே இறைவனுடைய நாமத்தை உச்சரிக்கும் சாதகர்கள் கூட்டம் பெருகப் பெருக தீயதெல்லாம் அழிந்து போய் வையகத்தின் துயரும் தீருகின்றது.

இறைவனைப் பற்றிப் பேசும் சாஸ்திரங்களை ஓதுவதும், உள்ளத்தை இறைவன்பால் செலுத்துவதற்கு ஓர் உபாயம் ஆகிறது. சாஸ்திரங்களைப் பாண்டித்தியம் பெறுவதற்காகப் படிப்பவர்களுண்டு. தர்க்க வாதத்தில் வெற்றிபெறும் நோக்கத்தோடு சாஸ்திரங்களை ஆராய்பவர்களுண்டு. இத்தகைய நோக்கங்களோடு ஸ்வாத்தியாயம் செய்வது சாதனையில் முன்னேறுவதற்குப் பயன்படாது. சாஸ்திரத்தை ஓதுவதும், இறைவனைச் சிந்திப்பதும் சேர்ந்தே நிகழவேண்டும். இம்முறையில் சாஸ்திரங்களை ஓதினால்தான் சாதகர்கள் சாதனையில் முன்னேற்றம் காணலாம்.

இஷ்டமூர்த்தியின் வடிவத்திற்கு நீராட்டுவது, அலங்காரம் செய்வது, நைவேத்தியம் படைப்பது, கற்பூர ஆராதனை செய்வது, வீழ்ந்து வணங்குவது முதலிய வந்தனை வழிபாடுகள் செய்வது உள்ளத்தில் பக்தியை உண்டாக்குகிறது. புறத்தே தெய்வத்தின் விக்கிரகம் ஒன்றை அமைத்து, மேற்கூறிய முறைகளில் பூஜை நிகழ்ந்தால் அதற்கு ‘பாஹிய பூஜை’ என்று பெயர். இதைவிடச் சிறந்தது மானஸ பூஜையாகும். மனத்தில் இஷ்டதெய்வத்தின் வடிவத்தை எழுந்தருளப் பண்ணி, மேற்கூறிய முறைகளில் அம்மூர்த்திக்கு வழிபாடு நடந்தால் அது ‘மானஸ பூஜை’ எனப்படுகிறது. மானஸ பூஜையின் மூலமாக மனத்தை இறைவனுடன் நிலைத்திருக்கச் செய்வது ஆழ்ந்த பக்தியை உண்டாக்குகிறது.

இங்ஙனம் மனதை முறையாக இறைவனிடம் செலுத்திப் பழகுகின்றவர்களுக்குத் தெய்வப் பெற்றிகள் யாவும் வந்து அமைகின்றன. பிறகு அவர்களுடைய மனது கடவுளை விட்டுத் திரும்புவதில்லை. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவஸ்தைப் பட்டாலும் அவர்களுடைய மனம் ஈசனையே பற்றிக் கொண்டிருக்கும். யாண்டும் ஈசனையே பற்றிக்கொண்டிருக்கிற உள்ளம் யோகத்தில் நிலைத்து நிற்கிறது. உள்ளன்போடும், உறுதியோடும் யோகத்தில் நிலைத்து நிற்கின்றவர்களுக்கு இறைவனது மகிமை சிறிது சிறிதாக விளங்குகிறது. இறைவனது மகிமை விளங்க விளங்க அவனை அறிகின்ற வல்லமையும் புத்திக்கு உண்டாகிறது. மனதிலுள்ள அஞ்ஞானம் அகன்று ஒருமுகப்பட்ட தியானம் கூடும்பொழுதே உள்ளத்தில் ஞானஒளி உண்டாகிறது. உள்ளத்தில் ஞானஒளி பெற்றவர்களே இறைவனுடைய உண்மையான காட்சியைக் காண்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் சகுண பிரம்மமாகவும், நிர்குண பிரம்மமாகவும் இருப்பது தெற்றென விளங்குகிறது. பக்தி யோகத்தின் மூலம் முறையாக இறைவனை இறைஞ்சுகின்றவர்களுக்கு, இறைவனின் மெய்க்காட்சி கிட்டுவது சாத்தியமாகிறது.

இக்கருத்தை,

“உணர்ந்து உணர்ந்து, உரைத்து உரைத்து  
    அரி, அயன், அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து  
     இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே”

என்ற சொற்றொடர்களால் நம்மாழ்வார் விளக்குகிறார்.

கடவுள் கிருபைகூர்ந்து தன்னைத் தோற்றுவிக்கும்வரை அவரை யாராலும் அறியமுடியாது. ஆனாலும் அவரையே சார்ந்து அவரிடம் பக்தி கொண்டிருக்க வேண்டியது உயிர்களின் கடமையாகும். இறைவனுடைய கருணை எப்பொழுது வேண்டுமானாலும் வரட்டும். அவரிடம் பக்தி பூண்டிருக்க வேண்டியது உயிர்களின் செயலாகும் என்பதை உயிர்களுக்கு வலியுறுத்திச் சொல்லுகின்றார்.

(தொடரும்…)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

One Reply to “[பாகம் 16] சித்பவானந்தரின் சிந்தனைகள்- திருவாய்மொழி”

Leave a Reply

Your email address will not be published.