கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6

முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5

தொடர்ச்சி…

(I) வெறியேற்றும் கொடூரமான மானியங்கள்

(அ) ரயில் பயணத்தில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் முதியவர்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள்.(குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்வோர் ஏழைகள்தானே! அதிலும் மூதாட்டிகளுக்கு அரை கட்டணம்தான்!(பெண்ணென்றால் இரயில்வே துறையே இரங்கும்!)

என்னைப் பொறுத்தவரை ரயில் கட்டணத்தில் எந்த பெட்டியிலும் மானியங்கள் அளிக்கப்படக் கூடாது.

(ஆ) பி.எஸ்.என்.எல்லின் அகன்ற அலைவரிசை (Broadband) சேவையில், 20 சதவிகிதம் மானியமாக, வேலை செய்யும்

அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டண குறைப்பாக அளிக்கப்படுகிறது.

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.அரசு ஊழியர்கள் மட்டும்தான் இணையத்தை பயன்படுத்துகிறார்களா?

இணைய பயன்பாட்டில் அரசு ஊழியர்களுக்கும், தனியார் துறை ஊழியர்களுக்கும், மற்றவர்களுக்கும் என்ன வேறுபாடு

இருக்கிறது? இதைப் போன்ற ஒரு கொடூரமான மானியம் உலகில் வேறு எங்கும் இருக்காது.

(அரசு ஊழியர்களாயிற்றே! கொம்புடன் பிறந்தவர்களாயிற்றே!) ஒரு சுவாரசியமான தகவல். இந்த மானியத்தை எங்கள் குடும்பமும் பயன்படுத்துகிறது.
தேச நலனுக்காக அனவரதமும் உழைத்த என் தந்தை, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிதான். 500 ரூபாய்க்கான மாதாந்திர இணையதள கட்டணத்தில், நாங்கள்

400 ரூபாய் மட்டுமே செலுத்துகிறோம். அரசு ஊழியரின் மகனாகப் பிறந்த எனக்கும் கொம்பு உண்டு!இந்த பி.எஸ்.என்.எல் பொதுத்துறை நிறுவனத்திற்குத்தான், விருப்ப ஓய்வூதிய திட்டத்திற்காக, 20000 கோடி ரூபாய்களை அரசு வழங்க இருக்கிறது. ஒரு நிறுவனம் தன் நிதி நிலையை, சரியாக நிர்வகிக்காத காரணத்தால், மானியங்களை கொடூரமாக வழங்கிக் கொண்டிருப்பதால், தன் செலவுகளுக்கு அரசையே எதிர்பார்க்கிறது.

(இ) இந்திய ரயில்வேயில் பணிபுரிபவர்களுக்கு இலவச பயண மானியங்கள்

(வருடத்திற்கு 3 பாஸ் போதுமா என்று தெரியவில்லை! ஓய்வு பெற்றவர்களுக்கும் பாஸ்தான்; ஊழியர் இறந்தவுடன்

மனைவிக்கும் பாஸ்தான்! ரயில்வே ஊழியர்கள் மட்டும் பாஸ்; நாம் எல்லோரும் ஃபெயில்!)

இதைத்தவிர, இரயில்வே துறையில் பணிபுரியும் அல்லது ஓய்வுபெற்றவர்களுக்காக சில இடங்கள் ஒவ்வொரு இரயிலிலும் தனியாக ஒதுக்கப்படுகின்றன. காசு கொடுத்து பயணிப்பவர்களை விட, ஓசியில் ஓபி அடிக்கும் ஊழியர்களுக்கு அதிக மரியாதை. இந்த முறையை மட்டும் தவறு என்று நாம் கூறக்கூடாது. இலவச பயணத்தையே நாம் எதிர்க்க வேண்டும்.ஒரு சுவாரசியமான தகவல். இந்திய இரயில்வேயில், கடந்த சில வருடங்களாக, எங்கும் நிற்காத இரு நகரங்களுக்கு இடையே ஓடும் Duronto Express இயக்கப்படுகிறது. இதில் இலவசம் இருக்காது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. முதலில் இரயில்வே துறையின் சில ஊழியர் குழுக்கள், ஆணையங்கள் போன்றவை ஒதுக்கீடு கேட்டுப்பெற்றன. பிறகு இரயில்வேயின் அதிகாரிகளுக்கும், அதன்பிறகு அனைத்து ஊழியர்களுக்கும் இலவச பாஸ் மட்டுமல்ல, விசேஷ ஒதுக்கீடும் செய்யப்பட்டது (Privilege Seats). இதைக் கண்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்களின் பங்கை பிடுங்கிக் கொண்டன. தற்பொழுது அந்த இரயில், சாதாரண இரயிலாகி விட்டது. இலவசமும், பாஸ்களும், மானியமுமே ஓங்கி இருக்கிறது.

(ஈ) ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விமான பயணத்திற்கு அளிக்கப்படும் மானியங்கள்.

(நிறுவனத்தின் டப்பா டேன்ஸ் ஆடினால் என்ன! குடும்பத்துடன் சொகுசு பயணம் உண்டு.

அந்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நம் அரசு, நம் வரிப்பணத்திலிருந்து 30000 கோடி ரூபாய்களை வழங்க இருக்கிறது)

(உ) எங்கள் வீட்டில் 2 குளிர்சாதன வசதி கொண்ட அறைகள் உள்ளன. நாங்கள் சராசரியாக 800 முதல் 1000 யூனிட்டுகள் மின்சாரத்தை உபயோகிக்கிறோம். சராசரியாக ஒரு யூனிட் மின்சாரத்தை தயாரித்து அளிக்க மின்வாரியத்திற்கு 5 ரூபாய் 50 பைசா பிடிக்கிறது. ஆனால் ஏழைகளான எங்கள் குடும்பத்திற்கும் (!), எங்களைப் போன்ற பல இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கும், முதல் 500 யூனிட்டுகளுக்கு மானியம் உண்டு.

(ஊ) கடந்த 6 வருடங்களில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்ட இரு முறையும், ரேஷன் கார்ட் வைத்துள்ள எங்களுக்கும் 1000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. நாங்கள் வெள்ளத்தால் எதை இழந்தோம் என்றே தெரியவில்லை.நல்ல மழை காலத்தில் கூட வீட்டிற்குள் பஜ்ஜி செய்து சாப்பிட்டு கொண்டு சந்தோஷமாக இருந்தேன். கான்கிரிட் வீட்டில் வசிக்கும் எங்களுக்கு 1000 ரூபாய். குடிசை மற்றும் ஓட்டு வீட்டில் வசிப்பவர்களுக்கு 2000 ரூபாய். எங்கள் மாவட்டத்தில் மொத்தமாக 10,15 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அனைவர்க்கும் இழப்பீடு வழங்கப்பட்டது.

வெள்ளம் கடந்த 10, 15 வருடங்களாக மட்டும்தான் ஏற்படுகிறதா?. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வருடந்தோறும் மிகச்சரியாக பருவமழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. மழை பெய்கையில் 10 நாட்களுக்கு வீட்டிற்குள் முடங்கிவிட்டு பின் வேலையை ஆரம்பிப்பதைத்தான் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். இதில் என்ன அதிசயம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

(எ) வருடம் தோறும் இலவச வேட்டி சேலையும் எங்களுக்கு உண்டு. ரேஷன் கார்ட் இருந்தால் போதும்.இலவசங்களிலேயே வாழ்ந்து விடலாம்.

(II) அட்டூழிய மானியங்கள்:-

(அ) தமிழக மீனவர்களுக்கு அவர்கள் வேலை பார்க்காத காலங்களில் 2000 ரூபாய் மாதாந்திர மானியமாம்.சபரி மலை சீசனில் மட்டும் வேலை செய்பவர்களுக்கு கேரள அரசு மானியம் அளிக்கலாம். பத்ரிநாத் போன்ற இடங்களில் வேலை செய்வோருக்கும் இதை விரிவுபடுத்தலாம்! கடைசியாக வேலையே செய்யாமல் சும்மாவே இருக்கும் ஒண்டிபுலிக்கும் (நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாதிப்பு) வேலை செய்யாததற்கு மானியம் அளிக்கலாம்.பல காலமாகவே இவர்கள் இந்த சீசனில் மட்டுமே வேலை பார்த்தவர்கள்தான். சீசன் அல்லாத காலங்களில் வேறு வேலை செய்ய பழகியவர்கள்.

(ஆ) நெய்வேலி லிக்னைட் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில் வேலை செய்வோருக்கு இலவச / குறைந்த விலையில் மின்சாரம் அளிக்கப்படுகிறது.

(இ) பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு தொலைபேசி கட்டணத்தில் மானியங்கள் அளிக்கப்படுகிறது.

(ஈ) பி.எஸ்.என்.எல் நிறுவன தொலைபேசி கட்டணத்தில் கிராம இணைப்புகளுக்கு மாதாந்திர வாடகையில் மானியம் அளிக்கப்படுகிறது. எங்கள் கிராமத்தை “கிராமம்” என்ற நமக்கு புரிந்த அடைமொழியுடன் ஒப்பிடவே முடியாது. கிட்டத்தட்ட 90 சதவிகித நகரம்தான். நாங்கள் காட்டிற்கு நடுவில் வாழவில்லை. ஆனால் எங்களுக்கும் மானியம் உண்டு. மாதம் தோறும் எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய பலசரக்கு பொருட்களின் விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவே நான் அனுப்புகிறேன். வீடு தேடி வருகிறது பொருட்கள். சென்னை போன்ற நகரங்களுக்கும் எங்கள் கிராமத்திற்கும் பெரும்பாலான வசதிகளில் வித்தியாசமே இல்லை.

(உ) அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், அமைப்பு சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் (Both private and Public sector organised employees) வரி விதிப்பில் விலக்குகள் அளிக்கப்படுகின்றன. சரியாக கூறுவதானால், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன. இந்திய வரி விதிப்பு முறை மிகவும் சிக்கலானது.

பல்வேறு வகைகளில் வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான கல்வி, காப்பீடு, சேமிப்பை ஊக்கப்படுத்தும் முதலீடுகள் என்று பலவகைகளில் வரி விலக்குகள் அமலில் உள்ளன. விவரம் அறிந்தவர்களின் கூற்றுப்படி, வரி விதிப்பு மிகவும் குறைவாக மாற்றப்பட்டு அத்துணை வரி விலக்குகளும் நீக்கப்பட்டு விட வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் எந்த வகையில் தன் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டும் என்பதிலெல்லாம் அரசாங்கம் தலையிடுவது நன்மை பயக்காது.

(III) பிரயோஜனமில்லாத மானியங்கள்:-

உண்மையான ஏழை மக்களுக்கு, அவர்களை ஏழ்மையிலேயே வைத்திருக்கப் பயன்படும் அனைத்து மானியங்களும் பிரயோஜனமில்லாத மானியங்களே!

(IV) தேவைப்படும் மானியங்கள்:-

இதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.

அமேரிக்காவின் மானியங்கள்:-

Social Security என்று கூறப்படும் அமேரிக்காவின் மானியங்களை இந்தியாவில் அமல்படுத்தப்படும் மானிய திட்டங்களுடன் ஒப்பிடவே முடியாது. அங்கு வேலை பார்க்கும் அனைத்து மக்களிடமிருந்தும், தொழில் நிறுவனர்களிடமிருந்தும் Payroll Tax என்ற வரி வசூலிக்கப் படுகிறது. அந்த வரி வருமானத்தைக் கொண்டே, ஓய்வு பெற்றவர்கள், வேலை இல்லாதவர்கள்,முதியோர்களுக்கான மருத்துவ வசதிகள் போன்றவற்றிற்க்கு மானியம் அளிக்கப்படுகிறது.

அமேரிக்காவிலேயே இந்த மானிய திட்டங்களுக்கான விமர்சனமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உதாரணமாக சில பொருளாதார நிபுணர்கள் இந்த திட்டத்தை Ponzi Scheme என்ற அளவிற்கு விமர்சனமும் செய்கிறார்கள். 2020ம் வருட வாக்கில், இந்த திட்டத்தின் வருவாயை விட செலவு அதிகமாகி விடும். ஒன்று, அரசே அதற்கான அதிகப்படி செலவை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும் அல்லது சில திட்டங்களை நிறுத்த வேண்டி வரும் என்று அந்த திட்டத்தை செயல் படுத்தும் நிர்வாகிகளும் கூறியிருக்கின்றனர்.

எது எப்படி இருப்பினும், பெரும்பாலான மக்களுக்கு மானியம் அளிக்கும் எந்த திட்டமும், எந்த நாட்டிலும் தோல்வியையே சந்திக்கும். அமேரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகள், பணக்கார நாடுகளாக இருப்பதால், சில தசாப்தங்கள் மானிய செலவுகளை தாக்குப் பிடிக்க முடிந்தது. பொருளாதார நிலை கீழ்நோக்கி பயணம் செய்தவுடன் பிரச்சினைகள் கைமீறிப் போகின்றது.இதை சுலபமாக புரிந்து கொள்ள ஒரு தகவலை அவதானிக்கலாம். இந்த மானியங்களை அமேரிக்காவில் 1937ல் ஆரம்பித்தபோது, 53000 பேர் பயனாளிகளாக இருந்தார்கள். செலவு வெறும் 1.2 மில்லியன் டாலர்கள். ஆனால், 2008ம் ஆண்டு 5 கோடி பயனாளிகளுக்கான செலவு 615 பில்லியன் டாலர்களாக உருவெடுத்துள்ளது.1940ல் வேலையில் இருந்தவர்கள் 0.2 சதவிகித சம்பளத்தை அளித்ததனாலேயே பயனாளிகளுக்கு மானியங்களை அளிக்க முடிந்தது. 1950ல் அது 2 சதவிகிதமாக உயர்ந்து, தற்பொழுது 11 சதவிகிதமாக, பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

மானியங்களை நிறுத்தவோ / குறைக்கவோ முடியுமா?

நைஜீரியாவின் அனுபவம்:-

எண்ணெய் வளங்களை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் 2011 வரை, ஒரு லிட்டர் பெட்ரோல் 24 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதற்கு அதிகமல்ல, வருடத்திற்கு 42000 கோடி ரூபாய்களை மானியமாக வழங்கி வந்தது நைஜீரிய அரசு. ஏனெனில் நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் அதே நேரத்தில், சுத்திகரிப்பு செய்யப்பட்ட பெட்ரோலையும், டீஸலையும் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.2012 ஜனவரி 1ம் தேதி, பெட்ரோலின் விலை இரண்டு மடங்காக, அதாவது 48 ரூபாய் ஒரு லிட்டர் என்று விலை உயர்த்தப் பட்டது. நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கின.இந்த விலை ஏற்றத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை உபயோகித்து, புதிய சுத்திகரிப்பு நிலையங்களை தன் நாட்டிலேயே அமைக்க அரசு திட்டம் போட்டது.ஆனால் நடந்தது வேறு. எதிர்ப்புகளினால், 16 நாட்கள் கழித்து அதிபர் தடாலடியாக விலையைக் குறைத்து விட்டார்.இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் மிகவும் எளியது. மக்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட இலவசத்தை நிறுத்துவது கிட்டத்தட்ட இயலாத காரியம்.இந்த கதை நைஜீரியாவிற்கு மட்டுமானதல்ல. ஜோர்டானிலும் ஒரு முறை இப்படிப்பட்ட விலை ஏற்றம் வாபஸ் பெறப்பட்டது.வெனிஸுவேலாவில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு வெறும் இரண்டரை ரூபாய்தான். 1989ல் விலை ஏற்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் மூண்ட கலவரத்தில் 100 பேருக்கு மேல் இறந்தார்கள்.

மானியங்களுக்கு Creamy-Layer:-

முன்னாள் அமேரிக்க அதிபர் திரு.ரோனால்ட் ரீகன் இதை சரியாக கூறுவார்.

The right measures the success of a welfare program by how many people are able to get off it, the left measures the success of welfare programs by how many people get on it.

ஒரு உதாரணத்துடன் இந்த வாக்கியத்தை நோக்கலாம்.

திருபாய் அம்பானியின் விதவை மனைவியையும், என் தாயாரையும், என் வீட்டில் வேலை செய்யும் மூதாட்டியையும் அவதானிக்கலாம்.

கோகிலா பென்னின் பணவசதியைப் பற்றி நான் கூற வேண்டியதில்லை.என் தாயாரைப் பற்றி கூறுகையில், நேரடியாக அவருக்கு பணவசதி இல்லையென்றாலும், என் தந்தைக்கு 17000 ரூபாய் ஓய்வூதியம் வருகிறது என்பதை குறித்துக் கொள்வோம். என் வீட்டில் வேலை செய்யும் மூதாட்டிக்கு இருக்கும் வசதிகளை நாம் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.மேற்கூறிய மூன்று வித பெண்களும், 60 வயது தாண்டிய மூதாட்டிகள். மூன்று பேருக்கும் சமையல் எரிவாயுவிற்கான மானியமும், ரயிலில் பயணம் செய்ய 50 சதவிகித மானியமும் அளிக்கப்படுகிறது. குளிர்சாதன பயணம் என்பதை மானியத்துடன் கூட உபயோகிக்கும் வசதி, வேலைக்கார மூதாட்டிக்கு இல்லை என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

இதைப் போன்ற கொடூரமான மானியங்களால், நாட்டிற்கு தம்புடிக்கும் பிரயோஜனம் கிடையாது.யாருக்கு மானியம், எந்த காலத்தில் மானியம், எந்த அளவிற்கு மானியம் என்ற கேள்விகள் எல்லாம் நம் நாட்டில் கேட்கப்படுவதே இல்லை. மூதாட்டி என்றால் மானியம்தான். பணக்கார மூதாட்டியாக இருந்தால்தான் என்ன?

மானியங்களை நிறுத்தவோ / குறைக்கவோ முடியாதா?

ஏன் முடியாது? இன்றைய இந்தியாவில், எனக்குத் தெரிந்தவரை ஒரு தலைவரால் மட்டுமே இந்த மானியங்களை குறைக்கவும் முடியும். இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்லவும் முடியும். யார் அவர்? விடை கடைசி பாகத்தில்.

 

எல்லார்க்கும் எல்லாம்” இயற்கை நியதிக்கு, அறிவியலுக்கு எதிரானது:-

சார்ல்ஸ் டார்வினின் பரிணாம கொள்கையைப் போல் உலகில் முழுவீச்சுடன் ஆதரிக்கப்படுவதும், எதிர்க்கப் படுவதுமான கொள்கை ஒன்று உலகில் கிடையாது. என்னதான் வெள்ளையர்களை நாம் குற்றம் கூறிக் கொண்டிருந்தாலும், இந்த கொள்கையை கண்டுபிடித்தவரும், அதை முன்னெடுத்தவர்களும், ஆப்பிரகாமிய இறையியலை அந்த கொள்கையைக் கொண்டே எதிர்ப்பவர்களும், அதற்கான ஆதாரங்களை கண்டளித்தவர்களும் வெள்ளையர்களே! மேற்கத்திய நாடுகளில் எந்தளவுக்கு இந்த பரிணாம வளர்ச்சி கொள்கையை எதிர்ப்பவர்கள் இருக்கிறாற்களோ, அதற்கு மேலாகவே, அக்கொள்கையை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள் என்ற பட்டவர்த்தனமான உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நவீன அறிவியலை ஏற்றுக் கொள்வதில் பல சிக்கல்களை சந்தித்து வரும் இஸ்லாமிய சமூகங்களால் இந்த கொள்கையை முன்னெடுப்பதென்ன, ஆதரிப்பதில் கூட இன்றும் சிக்கல்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்திய சமூகம் தற்பொழுதுதான் சில மட்டங்களில், இது குறித்த பொது விவாதத்திற்கே
வந்துள்ளது.

கம்யூனிஸ சித்தாந்தம் தன் அரக்கத்தனமான கொள்கைகளை முன்னெடுப்பதற்கு உலகின் எந்த இறையியலும் தடையாக இருக்கும் என்று தீர்மானமாக நம்பியது. அரக்கத்தனமான கொள்கைகளை செயல்படுத்துவதற்காகவே, ஆப்பிரகாமிய இறையியலின், மனித உருவாக்கத்தை எதிர்க்கும் டார்வினின் பரிணாம வளர்ச்சியை கைக்கொண்டது. அதற்காகவே உலகின் அனைத்து இறையியலையும், அது சார்ந்த மரபுகளையும் கொச்சை படுத்துவதையும், நிராகரிக்கவும் செய்தது. மேலும், அந்த அரக்கர்கள் பதவியை கைப்பற்றிய அனைத்து நாடுகளிலும் அனைத்து இறையியலையும், மரபுகளையும் சிதைக்கவும் முயன்றனர். இந்தியாவில் கூட, தங்கள் கொள்கைகளை முன்னெடுக்க, குறிப்பாக “ஆப்பிரகாமிய இறையியலை” எதிர்ப்பதற்காக பரிணாம கொள்கையை ஆதரிப்பதையும் சர்வ சாதாரணமாகவே நம்மால் காண முடிகிறது.

என்னைப் பொறுத்தவரை, சாதாரணமான மக்கள் பரிணாம வளர்ச்சி கொள்கையை, இந்த குழுக்கள் ஆதரிப்பதைப் போலல்லாமல், அறிவியலுக்காக மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நான் பரிணாம வளர்ச்சியை ஆதரிப்பது, அதனால் ஆப்பிரகாமிய இறையியலுக்கு தொந்தரவு என்பதற்காக அல்ல, அது அறிவியல் என்பதற்காக மட்டுமே!

சரி, பரிணாம வளர்ச்சியைக் குறித்த இந்த முன்னுரையுடன், நான் ஒரு புத்தகத்தின் சில விளக்கங்களை இந்த கட்டுரைக்கு சான்றுகளாக எடுத்தாளப் போகிறேன்.

திரு.ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய “The Selfish Gene” என்னும் புத்தகமே அது. “Nature is Wild”, இயற்கை கொடூரமானது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுவார்கள். ஆனாலும் பொதுவில் பேசும்போதும், எழுதும்போதும், கொஞ்சம் அடக்கி வாசிப்பதையே நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

உதாரணமாக உடல் ஊனமடைந்த விலங்குகள் காடுகளில் வாழ்வது சாத்தியமே அல்ல. அவை கொஞ்சம் கொஞ்சமாக பட்டினி கிடந்து சாகும். ஆனால், மனித சமூகம் தன்னிடமுள்ள ஊனமுற்றவர்களை அப்படி விட்டு விடுவதில்லை.

திரு.ரிச்சர்ட் டாகின்ஸ், இந்த சமநிலையை கொஞ்சமென்ன, அதிகமாகவே இந்த புத்தகத்தில் மீறியிருப்பார். ஆனாலும் “Over ஆகப் போகிறோம்” என்று அவரே நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்த இடத்திலெல்லாம், மனித இனம் தன் மொத்த இனத்திற்காகவும் வாழ்கிறது என்று ஒரு வாக்கியத்தை போடுவார். (வாழ வேண்டும் என்றும் எழுத மாட்டார்)திரு.ரிச்சர்ட் டாகின்ஸின் ஆளுமையெல்லாம் எனக்கு கிடையாது என்பது மட்டுமல்ல, அவரைப் போன்று உயிரியல் துறையிலும் அனுபவம் கிடையாது என்னும் நிலையில் நான் இங்கு அதிகமாகவே அடக்கி வாசிப்பேன். எனினும் அவரின் இந்த புத்தகத்தை புரிந்து கொள்ள குறைந்த பட்சம் “Selfishness”, “Individual Selection”, “Group Selection”, “Competition”,”Altruism” போன்ற சில வார்த்தைகளையாவது நாம் அறிந்து கொள்வது அவசியம். Altruism என்பதை பொதுநலன் (சுயநலத்திற்கான எதிர்ப்பதம்) எனலாம். அடுத்தவர்களின் நல்வாழ்வின் மேல் கரிசனம் கொள்ளும் நிலை. இந்த வார்த்தை இக்கட்டுரைக்கு மிகவும் முக்கியமானது.

முதல்படியில் மனித மரபணு, தன் சுயத்தேவைக்காக சுயநலத்துடனேயே போராடும்.2வதாக, குழுவாக போராடினால் அதிகம் பேருக்கு அதிக இலாபம் என்ற படியால், மனிதன் சமூகமாகவும், சிறு சிறு குழுக்களாகவும் வாழ ஆரம்பித்தான். இதிலும் குழுவின் அளவில் அவனுக்கு சுயநலம் Selfishness உண்டு. தன் குழு உறுப்பினருக்கு கிடைக்கும் வாய்ப்புகள்தான் பிரதானமே தவிர மற்ற குழுவின் உறுப்பினர்களைப் பற்றி அக்கறை இருக்காது.3வது நிலையில், மனித இனம் மொத்தத்தையும் ஒரே குழுவாக வைத்துக் கொண்டு, அனைத்து மனிதர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முயலும் போக்கு சில தசாப்தங்களாக அதிகரித்துள்ளது.4வது நிலையில், மனித இனம் மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டே மனித சமூகம் வாழ வேண்டும் என்ற கொள்கைகள் தற்காலத்தில் பலரால் முன்வைக்கப் படுகிறது.ஆனால், இந்த மனநிலை, “எந்த உயிர் சிறந்ததோ அதுவே வெல்லும்” “Survival of the Fittest” என்ற பரிணாம வளர்ச்சி கூறுக்கு முற்றிலும் வேறுபட்டது, எதிரானது.

தற்காலத்தில் மனித ஒழுக்க நெறிமுறைகளின் (Ethics) படி, எந்த அளவிற்கு பொதுநலன் இருக்க வேண்டும் என்பதில் உயிரியலாளர்களிடையே விவாதம் நடக்கிறது. குடும்ப அளவிலா, நாட்டின் அளவிலா, இன அளவிலா, மொத்த மனித அளவிலா அல்லது அனைத்து உயிர்களின் அளவிலா? அதே நேரத்தில், இதற்கு எதிரிடையாக, உயிரியல் துறையில், பரிணாம வளர்ச்சியின் படி, எந்த அளவிற்கு பொதுநலன் தேவை என்பதும் ஒரு விவாதப் பொருளாக உள்ளது.

திரு.ரிச்சர்ட் டாகின்ஸின் புத்தகம் நமக்கு பல அரிய தகவல்களை ஒரு விதமான ஆச்சரியத்துடன் அளிக்கிறது. மேலும் நம்மை தெளிவாக சிந்திக்க வைக்கவும் தூண்டுகிறது.1940களில் பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது பரிணாம வளர்ச்சியை நேருக்கு நேராக எதிர்க்க தொடங்கியது என்றே கூறலாம். உடலுறவு என்பது இனவிருத்திக்கான ஒரு வழி என்ற நிலையிலிருந்து உடல் சுகம் என்பதற்காக மட்டுமே இருக்க முடியும் என்ற அறிவியலின் ஆச்சரியமான முன்னெடுப்பு அது.

பரிணாம வளர்ச்சி ஏற்பட இனப்பெருக்கமும், அதற்காக உடல் உறவும், நம் உடலில் பின்னி பிணைந்துள்ள உந்து சக்தி. இந்த பரிணாம வளர்ச்சியை ஒரு படியில் எதிர்த்த பிறகு, எந்த அளவிற்கு எதிர்க்க முடியும் என்பதை விட எந்த அளவிற்கு எதிர்க்க வேண்டும் என்ற கேள்வியே நம் முன் தொக்கி நிற்கிறது.

என்னைப் பொறுத்தவரை, எந்த அளவிற்கு பொதுநலன் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை நம் மரபுகளிலிருந்தே பெற முடியும் என்று நம்புகிறேன். எந்த மனிதருக்கு, எந்த அளவிற்கு, எந்த சூழலில் மற்றவர்கள் உதவ வேண்டும் என்பதை தெளிவாகவே நம் முன்னோர்கள் எழுதி, அதை அனுசரித்தும் உள்ளனர். நான் பல மட்டங்களில் நவீனத்தை ஆதரிப்பவன். ஆகவே, சில மாற்றங்களை செய்து கொண்டு எளிதாகவே இந்த பிரச்சினையை அணுக முடியும்.
ஆனால், “எல்லார்க்கும் எல்லாம்” என்பதை எக்காலத்திலும் நம் முன்னோர்கள் ஏற்றதில்லை என்பதையும், அது நம் மொத்த மனித சமுதாயத்தையே அழிக்க வல்ல “பொது நலன்” என்றும் நான் தீர்மானமாகவே நம்புகிறேன்.

“Follow the Law in letter and Spirit” என்று கூறுவார்களே, அதைப் போன்று சில மாற்றங்களை காலத்திற்கேற்ற படி செய்து கொள்வது சரிதான். ஆனால் அது Spiritக்கு வெளியே போகாமல் இருக்க வேண்டும். இங்கு Spirit என்று நான் கூறுவது இயற்கை நியதியை.

தேவைப்படும் மானியங்கள்:-

இதுகாறும், பொதுவுடைமை என்னும் பெயராலோ, கருணையினாலோ அளிக்கப்படும் வரைமுறையற்ற மானியங்கள் எவ்வாறு கொடூரமானவை, அறிவியலுக்கு எதிரானவை, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பவை, ஒரு சமூகத்தை, அதன் கலாச்சாரத்தை அழித்தொழிப்பவை என்பதை என் பார்வையில் எழுதினேன்.

ஆனால் இந்த பகுதியில், மானியங்கள் என்பது சிலருக்கு, சில நேரங்களில் வேண்டும் என்பதை நான் நம்பும் சில காரணங்களின் அடிப்படையில் எழுத உள்ளேன்.

வலதுசாரித்துவத்தை ஆதரிக்கும் ஒருவனால், மானியத்தை ஆதரிக்க முடியுமா என்பது சுவாரசியமான விஷயம்தான்.என்னைப் பொறுத்தவரை, வாய்ப்புகள் சமமாக அளிக்கப்படும் ஒரு சமூகத்தில், மானியம் இருக்கக்கூடாது என்பது என் தீர்மானமான அபிப்பிராயம். அந்த சமூகத்தில், பணக்காரர்களும், ஏழைகளும் பல்வேறு பொருளாதார நிலையில் உள்ளவர்களும் இருப்பார்கள். இது இயற்கை நியதிதான். இது சரிதான்.

ஆனால், உலகில் இன்று எந்த நாட்டிலும், எந்த சமூகத்திலும் அனைவர்க்கும் சம வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. என்றுமே அளிக்கப்பட்டதுமில்லை. அளிக்கப்படப் போவதுமில்லை. எனவே, சமவாய்ப்பு என்பது வெறும் கனவுதான். ஆகவே சில சமாதானங்களை செய்து கொண்டுதான் ஆகவேண்டும்.அந்த சமாதானங்கள் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதில் எனக்கு ஒரு பார்வை உள்ளது. அதை பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது வேறு விஷயம். ஆனால், இதை படிக்கும் எவரும், கந்தலாக்கும் கம்யூனிஸமும், சோம்பலாக்கும் சோஷலிஸமும் முன்வைக்கும், “எல்லார்க்கும் எல்லாம்” என்பதை ஏற்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.சரி, என்னைப் பொறுத்தவரை Altruism, பொதுநலன் என்பது எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

(1)அனைவர்க்கும் சமவாய்ப்பு என்பது அடிப்படையில் உடல் நலனை ஆதாரமாக கொண்டது. “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்றுதானே கூறுவார்கள். அந்த உடல் நலன், உணவு மற்றும் தண்ணீரை ஆதாரமாக கொண்டது. ஆகவே என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு செலவு ஆனாலும் சரி, எந்த அளவுக்கு வரி விதிப்பு அதிகரித்தாலும் சரி, உணவு மற்றும் தண்ணீர் அனைத்து இந்தியர்களுக்கும் வழங்கப்பட்டே ஆக வேண்டும்.ஆனாலும், யாருக்கெல்லாம் இந்த வசதிகள் மானிய விலையில் வழங்கப்படக் கூடாது என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.

(2) உடல் ஊனமுற்றவர்களும் ஒரு சமூகத்தால் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். அவர்களால் சமூகத்திற்கு பங்களிப்பு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. உடல் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை எந்த சமூகத்திலும் குறைவாகவே இருக்கும். அவர்களை பராமரிப்பது அப்படி ஒன்றும் கடினமாக இருக்காது.

(3)ஆதரவற்ற குழந்தைகளை, 18 வயது முடியும் வரை அரசே, நம் வரிப்பணத்தைக் கொண்டு பராமரிக்க வேண்டும்.அவர்களுக்கு சொத்து இருந்தால், அச்சொத்தை அரசனே பராமரித்து, அக்குழந்தை வயதுக்கு வந்தவுடன் அளிக்க வேண்டும் என்று நம் ஹிந்து சமூக சட்டங்கள் பகரும்.

மேலும் உணவைத் தவிர, நவீன காலத்திய, நவீன மருத்துவ அற்புதங்களான “நோய் எதிர்ப்பு மருந்துகள்” “Vaccines”போன்றவையும் அளிக்கப்பட வேண்டும். தற்பொழுதும் இந்த வசதிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், ஏழைகள் அல்லாத குழந்தைகளுக்கும் இவை இலவசமாக அளிக்கப்படுகின்றன. அவை நிறுத்தப்படத்தான் வேண்டும்.

(4)ஆதரவற்ற விதவைகளையும், முதியவர்களையும் பராமரிக்க வேண்டும். ஆனால், பணவசதி பெற்றவர்கள் இந்த மானிய திட்டங்களிலிருந்து விலக்கப்பட வேண்டும்.

(5)இயற்கை பேரிடர் ஏற்படும் சமயங்களில் (மட்டும்), வரி விதிப்பிலிருந்து தற்காலிக விலக்கு, விவசாயம் மற்றும் தொழில் தொடங்க கடன் போன்ற வசதிகளை தற்காலிகமாக செய்து தருதல் வேண்டும்.

மேற்கூறிய மானியங்கள் புதியவையே அல்ல. இவற்றில் பெரும்பாலானவை நம் ஹிந்து மரபுகளில் பேசப்பட்டே வந்திருக்கின்றன. அவற்றை நாம் அப்படியே பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், இதைத்தவிர, ஏழை அல்லாதவர்களுக்கு தம்புடி பணம் கூட மானியமாக அளிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருத்தல் அவசியம்.

மேற்கூறிய மக்கள் வகைகளைத் தவிர, கம்பெனிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் மானியங்களை அளிக்க வேண்டிய கட்டாயம் நவீன காலத்தில் ஏற்பட்டிருக்கிறது.

நவீன பொருளாதார முறைமைகளை, உலகமயமாக்கலை ஒப்புக்கொண்டால் மட்டுமே, மேற்கொண்டு எழுதப்படுவதன் நியாயம் புரியும். மற்றவர்களிடம் விவாதித்து பயனில்லை.

குஜராத்தையே எடுத்துக் கொள்வோம். மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியின் போராட்டங்களின் விளைவாக, டாடா நிறுவனம் தன் கார் தொழிற்சாலையை சிங்கூரிலிருந்து, குஜராத்திற்கு மாற்றிக் கொண்டது. இதற்காக பல மானியங்களை குஜராத் அரசு டாடா நிறுவத்திற்கு அளித்தது.

இவ்வளவு நேரம் நடுத்தர மக்களுக்கே மானியங்கள் அளிக்கக் கூடாது என்று கூறியவன், பணக்கார கம்பெனிகளுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்று கூறுகிறானே என்று எண்ணலாம். மானியங்களை அளிக்க வேண்டும் என்று நான் கூற வில்லை. மானியம் அளித்தால்தான் நவீன பொருளாதார முறைமைகளில் வெல்லவே முடியும். வேறு வழியே இல்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மாநில அரசின் வரி விதிப்பிலிருந்து தற்காலிக விலக்கு போன்றவை மானியங்களாக டாடா கம்பெனிக்கு, குஜராத் அரசால் அளிக்கப்பட்டுள்ளன. 10 வருடங்கள் கழித்தும், மிகக் குறைந்த வட்டியிலேயே டாடா நிறுவனம் அரசுக்கு இந்த வரியை கட்டும்.

(1)குஜராத்தைப் போல பல மாநிலங்கள் டாடா தொழிற்சாலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர விரும்பின. இது அப்பட்டமான போட்டி யுகம். பல காரணிகளில் இந்த மானியங்களும் டாடாவின் முடிவிற்கு காரணம்.

(2)இந்தியாவில் எந்த மாநிலமும் மானியம் அளிக்க வில்லை என்றால், டாடா கம்பெனி, வேறு நாட்டிற்கே தொழிற்சாலையை கொண்டு சென்று விடும்.

(3) தொழிற்சாலைகள் உருவாகையில், வேலைவாய்ப்பு பெருகும்; வரி வருமானம் பெருகும்; மாநிலத்தின் தரம் (Image) உயரும்; அந்த தொழிற்சாலையைத் தொடர்ந்து வேறு தொழிற்சாலைகளும் முதலீடு செய்ய ஆரம்பிக்கும். கூட்டி கழித்து பார்க்கையில் மாநிலத்திற்கு இலாபமே அதிகமாக இருக்கும்.

மத்திய அரசு, தன் வரவு-செலவு அறிக்கையில், 2006 முதல் புதியதாக ஒரு விவரத்தை தர ஆரம்பித்திருக்கிறது. அதாவது,தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்குகளினால், அரசுக்கு எவ்வளவு வரி வருமானம் குறைந்தது என்ற தகவலை அளிக்கிறது.

ஹிந்துத்துவா அமைப்புகளில் அதிகம் பேசப்படும் திரு.குருமூர்த்தி, துக்ளக் பத்திரிகையில் இது குறித்து பலமுறை எழுதியுள்ளார். 2008ம் ஆண்டு அமேரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையின் தாக்கம் இந்தியாவில் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் கம்பெனிகளுக்கு சில சலுகைகள் அளிக்கப்பட ஆரம்பித்தன. 2011-12ம் ஆண்டு வரை இந்த சலுகைகள் ஏன் தொடர்கின்றன என்று திரு.குருமூர்த்தி கேட்கிறாரே தவிர, 2008ல் சலுகைகள் அளிக்கப்பட்டதை அவர் தவறு காணவில்லை. நாம் கவனிக்க வேண்டிய விஷயம், பணக்கார கம்பெனிகளுக்குக் கூட சில அசாதாரணமான சூழலில், சலுகைகளை அளித்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்வோம்.

திரு.குருமூர்த்தி அளிக்கும் இந்த பிம்பத்தைத் தவிர வேறு ஒரு பார்வையும் உண்டு. சில பொருளாதார நிபுணர்கள் கார்பொரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை சரிதான் என்றும் கூறுகின்றனர். நான் அவர்கள் கூறுவதையே ஏற்கிறேன். டாடா நிறுவத்திற்கு குஜராத் அரசு அளித்த மானியங்கள் அசாதாரண சூழலில் அளிக்கப்பட வில்லை.எந்த ஒரு கார்பொரேட் நிறுவனமும், குஜராத்தில் முதலீடுகள் செய்தாலும் வசதிகள் அளிக்கப்படவே செய்கின்றன. நான் ஏற்கெனவே கூறியபடி, தொழில்துறை முன்னேறும்போது, அம்மாநிலத்தின் மக்களின் வாழ்க்கை தரமும் முன்னேறவே செய்யும். சிலர் நான் எழுதும் கருத்துடன் ஒத்துப் போகப்போவதில்லை. ஆனால் உண்மை இதுதான். விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு உலகின் பல சமூகங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இச்சூழலிலேயே இந்த மானியங்களை அவதானிக்க வேண்டும்.

மத்திய அரசு கடந்த 5 வருடங்களாக அளித்து வரும் வரி விலக்கினால் 25 இலட்சம் கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு என்றும், கடந்த வருடம் மட்டும் 5 இலட்சம் கோடி ருபாய் இழப்பு என்றும் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது.இந்த கூற்றில் பெருமளவில் உண்மை இல்லை. கார்பொரேட் நிறுவனங்களுக்கு நேரடியாக அளிக்கப்பட்ட வரிவிலக்கு வெறும் 50000 ரூபாய்கள்தான். மற்றவை கலால் வரி,ஏற்றுமதி வரி போன்றவற்றில் அளிக்கப்பட்ட வரி விலக்குகள்தான்.
இந்த வரிகள் குறைக்கப்பட்டதால், பொது மக்களும் குறைந்த விலையில் பொருட்களை வாங்கியுள்ளனர் என்பதை தெளிவாக நாம் உணர வேண்டும்.

அந்நிய செலாவணி கையிருப்பை அதிகப்படுத்த ஒவ்வொரு நாடும், இறக்குமதியை விட ஏற்றுமதியை அதிகம் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே ஏற்றுமதியை ஊக்குவிக்க உலகின் அனைத்து நாடுகளும் ஏதோ ஒரு வகையில் வரிவிலக்கை அமல் படுத்தவே செய்கின்றன. இவைகளில் ஊழல் இல்லை என்றோ, அனைத்து வரிவிலக்குகளும் பயனளிப்பவை என்றோ என்னால் வாதிடமுடியாது. ஆனால் அடிப்படையில் இந்த வரிவிலக்குகளை நான் ஆதரிக்கிறேன்.

https://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/entry/tax-exemptions-it-s-not-just-the-fat-cats-who-benefit

பணக்கார பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்கள் என்று கம்யூனிஸ்ட் கொரில்லாக்களைப் போன்று அழுது ஆர்பாட்டம் செய்வதால் பயன் ஒன்றும் இல்லை.

(தொடரும்..,)

11 Replies to “கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6”

  1. Dear Mr.Balaji

    You are writing so much about price, money, subsidy etc.. Please ask yourself the basic question of what is value, price and money and try to make in depth analysis of all these. Write an article after that. Otherwise your article will be confusing and with out any substance.

  2. Nice article and I agree with most of the points. But there are few areas, where Subsidy and Discount are being confused, which i dont agree. For eg. 20% discount in BSNL bills. Its a discount and not subsidy to govt/psu employees. Discount is a marketing technique to woo customers where as subsidy is in practical purspose a vote bank politics (though subsidy was started for a different reason).

    I also enjoy 20% discount due to my father on BSNL bill. If this discount is not given, i might be looking for other private operators who can give me better rates.as simple as that.
    India has gone to such an extreme, even the iota of hope I had all these days that it will change has been lost. it might take another century atleast for anything constructive to happen.

  3. நீங்கள் குடியிருக்கும் ‘கிராமம்’ எங்கே உள்ளது என்ன பெயர் என்பதை உடனடியாகத் தெரிவிக்கவும். நானும் அங்கு குடியேறி விடலாம் என்று எண்ணுகிறேன் !

  4. திரு.சதீஷ்,
    ஒரு வகையில் நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். அதாவது BSNLன் அகன்ற அலைவரசையில் 20 சதவிகித கட்டண குறைப்பு Subsidyஆக வரையறுக்கப்பட முடியாததாக இருக்கலாம். ஆனால் இந்த Discountஐ Marketing Techniqueஆக
    வரையறுக்கவும் முடியாது. அதற்கான காரணத்தை கட்டுரையிலேயே அளித்திருக்கிறேன். அரசு ஊழியர்களுக்கு மட்டுமான கட்டண குறைப்பாக, ஒரு சாராருக்கு மட்டும் அளிக்கப்படும் கட்டண குறைப்பை Discount என்று வரையறுக்க முடியாது. வர்த்தக நிறுவனம் தன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் Discount அளித்தால்தான் அதை Marketing Technique என்று அழைக்க முடியும்.

  5. Dear Balaji

    You are calling Communists as Gorillas. Similarly Chiristians are calling us venamous snakes. If your version is correct, then we also have accept their version.

  6. சோவியத் ரஷ்யாவில் கம்யூனிச ஆட்சி நீங்கி மக்கள் ஆட்சி மலர்ந்தவுடன் அங்கு பல பொருட்களின் விலை கண்மூடித்தனமாக உயர்ந்தன. காரணம் அவைகளுக்கு கம்யூனிஸ்ட் அரசு அளித்து வந்த மானியங்கள் நீக்கப்பட்டதுதான். அங்கு விற்கப்பட்ட காலுக்கு அணியும் ஷூ பத்து முதல் இருபது மடங்கு விலை உயர்ந்ததாம். அங்கு ஷூ அத்தியாவசியமான பொருள். ஆகையால் அதன் விலையை சாதாரண மக்கள் வாங்குவதற்காக மானிய விலையில் விற்கப்பட்டன. இதுபோன்று அனைத்துத் தரப்பாரும் பயன்படும் வகையில் மானியங்கள் மூலம் விலையைக் குறைக்க முடிந்தால் தவறு இல்லை. சில நேரங்களில் அரசாங்க கட்டுப்பாடுகளாலும் கூட விளைஎர்ரம் அதிகரிக்கும். குறிப்பாக ராஜாஜி வர்ணித்த காங்கிரஸ் ஆட்சியின் “லைசன்ஸ் கொட்ட பர்மிட் ராஜ்” காலத்தில் தட்டுப்பாடும் இருந்தது விலைவாசியும் உயர்ந்திருந்தது. ஆனால் கட்டுப்பாடுகளை ராஜாஜி நீக்கியதும், பொருட்களும் கிடைத்தன விளையும் சரிந்தன. இத்தனை அனுபவங்களுக்கும் பிறகும் காங்கிரஸ்காரர்கள் இன்னமும் இதுபோன்ற அவலங்களை அரங்கேற்றி வருவது பெருமுதலாளிகளின் ஆதாயம் கருதியும், அரசியல் ஆதாயத்துக்காகவும் தான் என்பதை உணரவேண்டும். இன்றைய காங்கிரஸ் இடது சாரியும் அல்ல, வலது சாரியும் அல்ல, இடைச்சாரியும் அல்ல, அது சுயநல சாரிகள் என்பதுதான் உண்மை.

  7. //இவ்வளவு நேரம் நடுத்தர மக்களுக்கே மானியங்கள் அளிக்கக் கூடாது என்று கூறியவன், பணக்கார கம்பெனிகளுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்று கூறுகிறானே என்று எண்ணலாம். மானியங்களை அளிக்க வேண்டும் என்று நான் கூற வில்லை. மானியம் அளித்தால்தான் நவீன பொருளாதார முறைமைகளில் வெல்லவே முடியும். வேறு வழியே இல்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மாநில அரசின் வரி விதிப்பிலிருந்து தற்காலிக விலக்கு போன்றவை மானியங்களாக டாடா கம்பெனிக்கு, குஜராத் அரசால் அளிக்கப்பட்டுள்ளன. 10 வருடங்கள் கழித்தும், மிகக் குறைந்த வட்டியிலேயே டாடா நிறுவனம் அரசுக்கு இந்த வரியை கட்டும்.//

    This is totally absurd.. If the government spends 2 lakh crore on subsidy for comman man u are not happy but if the corporate india whose owners dwell in villas worth 200 crore are given 12 lakh crore of subsidy every year u are happy… If asked u will say “Then only they will start industry and earn 2000 crore per year and create a job market worth 1 crore per year”… To creat jobs worth 1 crore why should the government spend this much money to these greedy cats ???…. When the government spends money on subsidy for commen man u ask what is the use ?? Have u ever made a study on what the corporates have given back to the society in form od jobs after getting subsidy from government ?? can u give any figures on it ??? U say that goverment to reduce subsidy to farmers and to allow corporates to take over agriculture can u asssure that those corporates won’t get subsidy from government ???

  8. //இந்த வரிகள் குறைக்கப்பட்டதால், பொது மக்களும் குறைந்த விலையில் பொருட்களை வாங்கியுள்ளனர் என்பதை தெளிவாக நாம் உணர வேண்டும்.//

    This is a full and total lie.. Whenever any tax is reduced the gain goes only to the corporates.. When in early 2000’s when exice duty was decreased by nearly 8% none of the car prices went down.. but when in 2008 when the same tax went up by 4% the same night car prices went up.. WHat kind of democracy is this ?? Ur idea of making the RICH very RICH will make the POOR little RICH will never work… What we need is a balance … U r worried about income of govt because of pension and other subsidies …In INDIA only 3% of the population pay INCOME tax this do NOT mean that only 3% earn good amount of money the truth is a lot of people EVADE tax(most importantly enterperners and corporates) .. But the middle class or the salaried have no choice of evading… how can u simply blame the later for all problems i do not see a single line about these evadres who are the most notorio reason for income loss of govt…

  9. //திரு.குருமூர்த்தி அளிக்கும் இந்த பிம்பத்தைத் தவிர வேறு ஒரு பார்வையும் உண்டு. சில பொருளாதார நிபுணர்கள் கார்பொரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை சரிதான் என்றும் கூறுகின்றனர். //

    If u support the above y do u oppose subsidy for farmers ?? They too employ people and give jobs .. So y double standards for farmer and corporate ???

  10. அன்புள்ள குமரன்,

    இந்த தொடரில் பாலாஜி எழுதும் கம்யூனிஸ்டுகள் மீதான குற்றச்சாட்டுக்கள் நூற்றுக்கு நூறு ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. பாலாஜி எழுத்தில் ஒரே ஒரு தவறு கம்யூனிஸ்டுகளை கொரில்லாக்களுடன் ஒப்பிட்டு எழுதியதே ஆகும். கொரில்லாக்கள் கம்யூனிஸ்டுகளை விட மிக மிக உயர்ந்தவை . கொரில்லாக்களை கேவலப்படுத்துவது பெரும் பாவம் .திரு பாலாஜி அவர்கள் கொரில்லாக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். ஆபிரகாமியர்கள் எந்தவித ஆதாரமும் இல்லாது பொய்க்குற்றச்சாட்டு கூறுகிறார்கள். எனவே இரண்டையும் ஒப்பிடுவது முழு தவறு.

  11. //(1)குஜராத்தைப் போல பல மாநிலங்கள் டாடா தொழிற்சாலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர விரும்பின. இது அப்பட்டமான போட்டி யுகம். பல காரணிகளில் இந்த மானியங்களும் டாடாவின் முடிவிற்கு காரணம்.

    (2)இந்தியாவில் எந்த மாநிலமும் மானியம் அளிக்க வில்லை என்றால், டாடா கம்பெனி, வேறு நாட்டிற்கே தொழிற்சாலையை கொண்டு சென்று விடும்.//

    What u r saying is “If u do not give subsidy corporates will keep on moving to other states if the entire country do not give subsidy then they will move out of INDIA”.. For an argument if we say this is correct.. Then people in middle class also can say “We will VOTE only to party which gives subsidy if NO party give subsidy we will join with NAXAl” if the earlier is acceptable the later is also acceptable only… U r ready to give 12 lakh crore subsidy for corporates without any assurance that how much they will spend on salary to the EMPLOYEE but u r very sad to give subsidy of 2 lakh crore subsidy to people who pay tax(salaried) , pay 25% of their salary as house rent.. Very Nice..

    What u r trying to say is , “The corporates have some way become rich so we have to obey them or our economy will fail” …. The above is NOT democracy …. This is CAPITOCRACY ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *