இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

முந்தைய பகுதிகள்

 

தொடர்ச்சி..

21.1 தீவினை அகற்று

ராவணன் அனுப்பிய தளபதிகள், பின்பு அனுப்பப்பட்ட அவனது மகனாகிய அக்ஷயா என்று எல்லோரும் அனுமனால் கொல்லப்பட்டு இறந்தார்கள். ஆள்பலமும், நவீன ஆயதங்களும் இருந்தும் இப்படித் தோற்று நிற்கும் நிலையில், இந்திரனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றதனால் இந்திரஜித் என்ற பெயர் பெற்ற தனது மகனோ அல்லது தானோதான் அனுமனிடம் சண்டை போட்டு அவனை இழுத்து வரவேண்டும் என்று ராவணன் நினைத்தான். படைப்புக் கடவுளான பிரம்மனை நினைத்து தவமிருந்து அவரிடம் பெற்ற, இருப்பதற்குள் வலிமை மிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரம் இந்திரஜித்திடம் உள்ளதால், முதலில் அவனை அனுப்பினான். அனுமனுடன் நடந்த சண்டையில் இந்திரஜித்தும் பிரம்மாஸ்திரத்தை உபயோகிக்க, பிரம்மனிடம் தனக்குள்ள மரியாதையால் அனுமன் அதற்குப் பணிந்து நிற்க, அவன் கைகளும், கால்களும் கயிற்றால் இறுகக் கட்டப்பட்டு ராவணன் முன்பு நிறுத்தப்பட்டான். அனுமனைப் பார்த்து வியந்த ராவணன், தன் அமைச்சர்களிடம் அனுமன் யார் என்றும், எதற்காக இலங்கை வந்து, அசோக வனத்தையும் அழித்தான் என்றும் விசாரிக்கச் சொன்னான்.

தான் வானரர்களின் அரசனான சுக்ரீவனின் அமைச்சர் என்றும், அவனால் அபகரிக்கப்பட்ட சீதையைத் தேடி தான் வந்து, அரண்மனையின் உள்ளே உள்ள நந்தவனத்தில் அவளைப் பார்த்துவிட்டதாகவும் அனுமன் சொன்னான். இராமரிடமே மரியாதையாக சீதையை ஒப்படைத்துவிட வேண்டும் என்றும், அதைச் செய்யத் தவறினால் அவர் ராவணனை அழித்துவிடுவார் என்றும் அவனை எச்சரித்தான். மேலும் வேறொருவரின் மனைவியை அடைய ஆசைப்படுதல் ஒரு பாவச் செயல் என்றும், வினையின் பயனை அனுபவித்தே தீரவேண்டும்; அதிலிருந்து விடுபட வழியே இல்லை என்றும் அனுமன் ராவணனுக்கு நினைவுபடுத்தினான்.

ப்ராப்தம்ʼ த⁴ர்மப²லம்ʼ தாவத்³ப⁴வதா நாத்ர ஸம்ʼஸ²ய: |
ப²லமஸ்யாப்யத⁴ர்மஸ்ய க்ஷிப்ரமேவ ப்ரபத்ஸ்யஸே ।।5.51.29।।

ப⁴வதா = by you, உன்னால்
த⁴ர்மப²லம் = merits earned through righteousness, தர்ம வழிகளால் வந்த நன்மைகளை
ப்ராப்தம்ʼ தாவத் = you have obtained, நீ பெற்றுள்ளாய்
அத்ர = here, இங்கு
ஸம்ʼஸ²ய: = no doubt, சந்தேகமில்லாமல்
ந = not, இல்லை
அஸ்ய = of this, இது பற்றி
அத⁴ர்மஸ்ய = of unrighteousness, அதர்மமானது
ப²லமபி = result also, பலன்களும்
க்ஷிப்ரமேவ = quickly, சீக்கிரமாக
ப்ரபத்ஸ்யஸே = you will obtain (of your penance) நீ அடைவாய்.

[நீ செய்த தர்ம வழிகளால் வந்த நன்மைகளை இப்போது பெற்று அனுபவிக்கிறாய் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இப்போது நீ செய்திருக்கும் அதர்மச் செயல்களுக்கு உண்டான பலன்களும் உன்னை சீக்கிரமாக வந்தடையும்.]

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பது பௌதிக உலகின் விதி மட்டும் அல்லாது, ஒருவன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்குண்டான பலன்கள் உண்டு என்பது ஒருவனது உலகியல் வாழ்விலும், அதனுடன் தொடர்பு கொண்ட ஆன்மிக வாழ்விலும் உள்ள நியதியே. எதை ஒருவன் உலகுக்குக் கொடுக்கிறானோ, அதைத்தான் அவன் உலகிலிருந்தும் பெறுவான். ஒருவன் கம்பை விதைத்துவிட்டு நெல்லை அறுவடை செய்ய முடியாததால், “தினை விதைத்தால் தினை விளையும், வினை விதைத்தால் வினை விளையும்” என்றும் சொல்வார்கள். வினை நல்லது என்றால் நன்மையும், தீயது என்றால் தீமையும் விளையும். செயல் நின்றாலும், அதன் பின் இருக்கும் எண்ணமும், அது வந்ததன் காரணமான ஆசையும் இருக்கும் வரை இப்படித்தான் நடக்கும். “நான் விதைக்கிறேன்” என்ற எண்ணம் இருக்கும் வரை, இந்தச் சக்கரத்தில் சுழன்று கொண்டிருப்பதுதான் வாழ்க்கையே. இந்த இயற்கை நியதியை யாரும் மாற்ற முடியாது. வால்மீகி இங்கு அனுமன் மூலம் எவரும் தப்பிக்கமுடியாத இந்த நியதியை நமக்கு ஞாபகப்படுத்துகிறார்.

 

21.2 குற்றத்திற்கேற்ற தண்டனை

சீதையைத் திருப்பி அனுப்பும்படி அனுமன் அறிவுரை தந்தது ராவணனுக்குப் பிடிக்கவில்லை. அப்படிச் செய்தது அதிகப் பிரசங்கித்தனமாகவும், அவனை அவமதிப்பதாகவும் ராவணனுக்குத் தோன்றியது. அதனால் அவன் அனுமனின் தலையைச் சீவி விடும்படி ஆணையிட்டான். அப்போது ராவணனின் தம்பியான விபீஷணன் தலையிட்டு, எதிரி என்றாலும் அனுமன் சுக்ரீவன் என்ற அரசனின் தூதன்; அவன் தானாக இங்கு வரவில்லை. அசோக வானத்தைப் பாழ் செய்ததும், அவனைப் பிடிக்கப் போனவர்களைக் கொன்றதும் தண்டனைக்குரிய குற்றங்களே. குற்றத்திற்கேற்ற தண்டனையாக சாட்டையடி, தலையை மொட்டையடித்து அனுப்புதல், அங்கஹீனம் செய்தல் போன்ற தூதனுக்குரிய தண்டனை எதுவானாலும் கொடுக்கலாம்; ஆனால் தூதனைக் கொல்வது கூடாது என்று விபீஷணன் சொன்னான்.

… பரவான்ன தூ³தோ வத⁴மர்ஹதி || 5.52.20||

பரவான் = he is dependant, அவன் தன்னிச்சையானவன் இல்லை
தூ³த: = emissary, தூதன்
வத⁴ம் = killing, கொல்வது
ந அர்ஹதி = does not deserve, உகந்தது அல்ல

[அவன் தன்னிச்சையானவன் இல்லை; ஒரு அரசனின் தூதன். அவனைக் கொல்வது சரியானது செயல் அல்ல.]

பொதுவாகவே செய்த குற்றத்துக்கு ஏற்றபடிதான் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஒரு பென்சிலைத் திருடியதற்கு மரண தண்டனையா கொடுப்பார்கள்? ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தண்டனை, மறுபடி அவன் தவறு செய்வதற்கு முன் அவனை யோசிக்க வைப்பதாகவும், அவன் மனதைத் திருத்துவதாகவும், செய்த குற்றத்திற்குப் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டுமே தவிர, தண்டனை அளிப்பவரின் ஆசாபாசங்களுக்குத் தகுந்ததாகவும், அவருக்குக் கொடூர மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவும் இருக்கக்கூடாது. அதுவும் ஒரு அரசனின் தூதன் என்றால், இன்னும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். ஏனென்றால் அது ஓரிருவர் என்றில்லாமல் ஒரு நாட்டு மக்களையே பாதிக்கக்கூடும்.

 

21.3 ஆறுவது சினம்

முதலில் அனுமனைச் சிரச்சேதம் செய்ய கட்டளை இட்ட ராவணன், விபீஷணன் கேட்டுக்கொண்டபடி அந்தத் தண்டனையைக் குறைத்து அனுமனின் வாலில் தீ வைத்துக் கொளுத்த உத்தரவிட்டான். உடனே அரக்கர்கள் எண்ணையில் தோய்த்த துணியை அவன் வாலில் சுற்றி, தீ வைத்துவிட்டு, அவன் அரக்கர்களுக்குச் செய்துள்ள கொடுமைக்கான தண்டனையை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று அனுமனை இலங்கை நகரின் தெருவெங்கும், எந்த மூலை முடுக்குகளையும் விடாது இழுத்துச் சென்றார்கள். முதலில் அவன் அவர்கள் இழுத்த இழுப்புக்குச் சென்று கொண்டிருந்தாலும், ஊர் மக்கள் செய்த கேலியும், கிண்டலும் ஓரளவுக்கு மேல் அதிகமாகவே அனுமன் பொறுமை இழந்தான். அந்த அரக்கர்களின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு தன்னை விடுவித்து, அவர்களையும் ஓர் இரும்பு உலக்கையால் நையப் புடைத்துவிட்டு, அங்கிருந்து தாவி அருகே உள்ள அமைச்சர்களின் மாளிகைகள், சாலைகளில் இருந்த மரங்கள், மற்றும் ராவணன் மாளிகை என்று வரிசையாக தன் வாலில் உள்ள தீயினால் கொளுத்தி எரியவிட்டான். கூடிய சீக்கிரம் இலங்கை மாநகரமே கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து விட்டது.

தீயின் கடுமை தாங்க முடியாமல், வெந்து போய் விடுமோ என்று பயந்து மக்கள் எல்லோரும் தத்தம் வீடுகளை விட்டு வெளியே ஓடிவிட்டனர். சிறிது நேரத்தில் இலங்கை மாநகரமே எந்த மாளிகைகளும், கட்டிடங்களும் அடையாளம் தெரியாமல் சாம்பல் குவியலாகி விட்டது. தான் வந்த வேலை முடிந்து விட்டது, வேண்டியவர்களுக்குப் பாடமும் கற்றுக் கொடுத்தாகி விட்டது என்பது போல, அனுமன் கடலருகே பறந்து நீரில் தன் வாலை நனைத்து, தனக்கு மூட்டிய தீயை அணைத்துவிட்டு நிமிர்ந்து நகரத்தைப் பார்த்தான். தனக்கு வந்த கோபத்தால் எப்படி இருந்த ஊர் இப்படியாகிப் போனதே என்று மனதிற்குள் வருந்தினான். ராவணனின் அரண்மனையையும் சேர்த்துக் கொளுத்திவிட்டோமே, அங்கிருந்த சீதைக்கு என்ன ஆயிற்றோ என்ற கவலையும் அவனுக்கு அப்போது வந்தது. அதனால் தான் செய்த காரியம் மடத்தனமானது மட்டுமல்ல, மிகக் குற்றமானதும் ஆகும் என்று தன்னையே நொந்துகொண்டான். அரக்கர்கள் வாலைக் கொளுத்தியதும், அப்புறம் நகர்வலம் போது மக்கள் கிண்டல் செய்ததும் தன் கோபத்தை வரவழைத்து, அதனால் இப்படி ஆகி விட்டதே என்று அப்போதுதான் அவன் சிந்தித்தான்.

க்ருத்³த⁴: பாபம்ʼ ந குர்யாத்க: ….. || 5.55.4||

க்ருத்³த⁴: = angry man, கோபம் கொண்டவன்
க: = who, எவன்
பாபம் = sin, பாவம்
ந குர்யாத் = will not commit, செய்யவில்லை.

[கோபம் கொண்ட எவன்தான் பாவம் செய்வதில்லை?]

கோபத்தில் எதையாவது தவறாகச் செய்துவிட்டவன், அந்தக் கோபம் தணிந்து ஆற அமர யோசிக்கும்போது நிச்சயமாக வருந்துவான். கீதையில் கிருஷ்ணர் ஒருவனது எந்தப் பாவச் செயலுக்கும் காரணமாக கோபம்தான் இருக்கிறது என்று சொல்கிறார். “காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணசமுத்பவ, மஹாஷானோ மஹாபாப்மா வித்தி ஏனம் இஹ வைரிணாம்” (III – 37) என்று அவர் கூறுவதன் பொருள் இதுதான். (அவை நமக்குக் கிடைக்காததாலோ அல்லது மற்றவர்க்குக் கிடைத்துவிட்டதாலோ) உலக விஷயங்களின் மேல் உள்ள ஆசைதான் சினமாக மாறி நம்மை உலகில் பாவச் செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. ஆக இவை இரண்டுமே நம்முள்ளேயே இருக்கும் நமது எதிரிகள்.

 

21.4 வெற்றியாட்டமா? வெறியாட்டமா?

கோபம் தணிந்தபின் இலங்கையைத் தீயிட்டதற்கு வருந்திய அனுமன், தன் செய்கையால் அசோக வனத்தில் இருந்த சீதை பாதிக்கப்பட்டு விட்டாளா என்று பார்க்கப் போனான். அங்கு சீதை பத்திரமாக இருப்பதையும், வால் கொளுத்தப்பட்டாலும் அனுமனும் பங்கம் எதுவும் இல்லாது இருப்பதையும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தெரிந்துகொண்டதில் இருவருமே சந்தோஷப்பட்டார்கள். சீதையிடம் விடை பெற்றுக்கொண்ட அனுமன் கடலை ஒரே தாண்டாகத் தாண்டி, இக்கரையில் அவனது வருகைக்காகக் காத்திருக்கும் அங்கதன் மற்றும் வானரர்களிடம் வந்து சேர்ந்தான். வந்தவுடன் ஆவலாக வானரர்கள் அனைவரும் கேட்க, தான் இலங்கைக்குள் ராவணன் அரண்மனை முழுதும் சுற்றியபின் சீதையை அசோகவனத்தில் பார்த்ததையும், தனது பாராயணத்தால் அவளது கவனத்தைக் கவர்ந்து சீதையுடன் அளவளாவியதையும், பின்னர் அரக்கர்களுடன் சண்டை போட்டதில் ராவணன் முன் நிறுத்தப்பட்டு அவனோடு பேசியதையும், கடைசியாக இலங்கையைக் கொளுத்தி அந்நகரையே சாம்பலாக்கிவிட்டாலும் சீதை பத்திரமாக இருப்பதையும் அனுமன் விவரமாகச் சொன்னான்.

அதுவரை அவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்த முயற்சிகளுக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கிறது என்று கேட்டறிந்த வானரர்கள் தங்கள் மகிழ்ச்சியை துள்ளிக் குதித்து, ஆடியோடி தெரியப்படுத்தினார்கள். அவர்களது வழக்கம் போல அதை மதுவருந்திக் கொண்டாடுவதற்கு அங்கதன் மதுவனம் என்ற இடத்தில் அவர்களுக்கு அனுமதி வழங்கினான். அந்த இடம் சுக்ரீவனின் ஆளுகைக்கு உட்பட்டு அவனது மாமனான ததிமுகா என்பவனின் பொறுப்பில் இருந்தது. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த வானரர்கள் கண்மண் தெரியாமல் அங்கு குதித்தோடி, கண்டபடி தோட்டத்தில் உள்ள எல்லா மரங்கள், கொடிகள், செடிகளிலிருந்தும் கனிகளைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு, போதாக்குறைக்கு மதுவையும் அளவுக்கு அதிகமாகவே அருந்தினர். ததிமுகாவும் அவனது தோட்டக் காவலாளிகளும் எவ்வளவோ தடுத்தும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவேன் என்று ததிமுகா சொன்னதற்கும் எந்தப் பயனும் இல்லாமல், வானரர்கள் ஒரு கட்டத்தில் அவர்களையே தாக்கிவிட்டுத் தங்கள் கொண்டாட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களுடன் சேர்ந்ததில் அங்கதனும் குடித்த போதை தலைக்கேற, தோட்டப் பொறுப்பாளரான ததிமுகாவையும் யாரெவர் என்று புரிந்துகொள்ள இயலாமல் இவன் யார் நம்மைத் தடுப்பதற்கும், வெளியேற்றுவதற்கும் என்ற நிலையில் தள்ளாடிக்கொண்டு இருந்தான். அதனால் ததிமுகாவின் வயதிற்கும் மதிப்புக் கொடுக்காமல் தன் பங்கிற்கு அவரை நையப்புடைத்து அடித்து நொறுக்கி விட்டான். தலைவனும் இளவரசனும் ஆன அங்கதனே அவர்களுடன் சேர்ந்து அட்டகாசம் செய்வதையும், அதை அனைத்தையும் பார்த்தும் ஒன்றும் செய்யாதிருக்கும் அமைச்சரான அனுமானையும் என்ன செய்வது என்று தெரியாமல் ததிமுகா நேரே சுக்ரீவனிடம் போய் மதுவனத்தில் நடந்து கொண்டிருக்கும் அட்டகாசத்தை விவரித்து, அதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்.

வத்⁴யா ஹ்யேதே து³ராத்மானோ ந்ருʼபாஜ்ஞாபரிபா⁴வின: |  ….. 5.62.35||

ந்ருʼபாஜ்ஞாபரிபா⁴வின: = who have disobeyed king(அ)s order, அரசாணைக்கு அடங்காதவர்கள்
ஏதே = they, அவர்கள்
து³ராத்மன: = evil-minded, கெடு மதியாளர்கள்
வத்⁴யா: ஹி = indeed deserve to be killed, உறுதியாகக் கொல்லப்பட வேண்டியவர்கள்.

[அரசாணைக்கு அடங்காதவர்கள் ஆகிய அவர்கள் கெடு மதியாளர்கள், அதனால் உறுதியாகக் கொல்லப்பட வேண்டியவர்கள்.]

கொடுத்த வேலை ஒன்றை நன்றாகச் செய்து முடித்துவிட்டால் அதைக் குடித்துக் கொண்டாடுவதையும், அதற்கு அனுமானும் தன் மௌனத்தால் அங்கீகாரம் கொடுப்பது போல் எழுதியிருப்பதையும் பார்த்தால், உலகில் இப்படியும் நடக்கும் என்றும் வால்மீகி எப்போதும் தூய்மை ஒன்றையே வலியுறுத்திச் சொல்பவர் அல்ல என்றும் தெரிகிறது.

 

21.5 உயர உயரத் தாழ்மை தேவை

வானர அரசர்களின் தோட்டமான மதுவனத்தில் அங்கதன் தலைமையில் வானரர்கள் குடித்துவிட்டுக் கும்மாளம் போடுவதையும், அதைத் தடுக்கச் சென்ற தானும் மற்ற காவலாளிகளும் அடியும், உதையும் வாங்க வேண்டியிருந்தது என்றும் ததிமுகா சொன்னான். அப்படியெல்லாம் தவறான நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள் என்று சுக்ரீவனுக்குத் தன்னுடைய வீரர்களின் மேல் ஆழமான நம்பிக்கை இருந்ததால், ஒருவேளை அவர்கள் தங்கள் பணியில் வெற்றியடைந்து, அந்த மகிழ்ச்சியில் குடித்துவிட்டுத் தலைகால் தெரியாமல் கொண்டாடுகிறார்களோ என்ற சந்தேகம் வலுவாக வந்தது. அதனால் அவன் ததிமுகாவிடம் அவர்கள் நல்ல செய்தி கொண்டுவந்திருக்கலாம் என்று கூறி, அவர்கள் அனைவரையும் உடனே தன்னிடம் வந்து நடந்த விவரங்களைச் சொல்லச் சொல்லி துரிதப்படுத்தினான். சுக்ரீவனின் அந்த ஆணையை ததிமுகாவும் அங்கதனிடம் போய்ச் சொல்லி, தான் அவர்களது மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தின் காரணத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவேன் என்று சொன்னதற்கு மன்னிப்பும் கேட்டான்.

குடி மயக்கம் தெளிந்த நிலையில் அங்கதனும் தான் என்னதான் இளவரசன் என்றாலும் ததிமுகாவின் அனுமதி இல்லாமல் வனத்திற்குள் நுழைந்ததும், அங்கு கொண்டாடியதும், பின் அவர்களைத் தாக்கியதும் தவறே என்று சொல்லி தான் உட்பட எல்லோரையும் மன்னிக்குமாறு வேண்டினான். இந்த வேண்டுகோளைக் கேட்டு மகிழ்ந்த ததிமுகா, தன்னை ஒரு தோட்டக் காவலன் என்றும் பார்க்காது தன்னிடம் மன்னிப்பு கோரும் இங்கிதத்தைப் பாராட்டி, பொதுவாக அதிகாரத்தில் இருக்கும் எவரும் அகங்காரத்துடன் இருப்பதோடும் அல்லாமல், தான் செய்த தவறை உணர்வதோ, தன் அகங்காரத்தினால் மற்றவர்களுக்கு இழைக்கும் தவறுக்கு மன்னிப்பு கேட்பதோ இல்லை என்றும் சொன்னான்.

…. ஐஸ்²வர்யமத³மத்தோ ஹி ஸர்வோ (அ)ஹமிதி மன்யதே || 5.64.17|| 

ஸர்வ: = all others, மற்றெல்லோரும்
ஐஸ்²வர்யமத³மத்த: = arrogant on account of prosperity, அதிகாரப் போதையால் அகங்காரம் அதிகமானவர்கள்
அஹம் = I, நான்
இதி = thus, இப்படி
மன்யதே ஹி = think verily, நினைக்கிறேன்.

[அதிகாரப் போதை இருக்கும் எல்லோருக்குமே அகங்காரம் அதிகமாகிறது என்றே நான் நினைக்கிறேன்.]

அதிகாரம் தன்னிடம் இருக்கிறது என்ற எண்ணமே பொதுவாக ஒருவனை மதி இழக்கச் செய்து அவனது அகங்காரத்தைக் கூட்டிவிடுகிறது. அப்படிப்பட்டவர்கள் அதிகாரம் இல்லாத பொதுமக்களை, அவர்கள் என்னதான் செய்துவிட முடியும் என்ற அதிகார மமதையில், தங்களுக்கு வரும் ஓர் அற்ப சந்தோஷத்துடன் கொடூரமாகவும் நடத்துவார்கள். மக்களும் தங்கள் வசதியற்ற நிலையை நொந்துகொண்டு ஒன்றும் செய்யமுடியாமல் தவிப்பார்கள். ஆனால் ஆள்பவர் செய்யும் இந்த அக்கிரமங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஆண்டவர், ஒரு கட்டத்தில் அவர்களுக்கு வேண்டிய பாடம் புகட்டுவார். அப்படியும் அதிகாரக் கொடுமை நீடித்தால், புதியவருக்கும் பழையவர் கதிதான் வரும். இதைத்தான் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் இல்லை என்பவர்கள் கூட ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றார்கள்.

அரசர்கள் ஆண்ட அந்தக் காலத்தில் இதனை உணர்ந்தே இளவரசருக்கு முடி சூட்டும் முன்பு அவர் வரம்பு மீறாதவராக இருக்கிறாரா என்று பார்ப்பார்கள். அன்று நடந்ததைத்தான் மகாகவி காளிதாசன் ரகுவம்சத்தில் இளவரசராக ரகு நியமிக்கப்படும்போது இப்படிச் சொல்கிறார்: “நிசர்க சம்ஸ்கார வினீத இத்யஸௌ ந்ருபேண சக்ரே யுவராஜா ஷப்த பாக்”. இயற்கையாகவும், கல்வி கேள்விகள் மூலம் பயிற்சி பெற்றதாலும் அவனுக்குத் தேவையான ஒழுக்கம் இருந்ததால் ரகு யுவராஜனாக அங்கீகரிக்கப்பட்டான் என்பதே அதன் பொருள்.

(தொடரும்…)

3 Replies to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21”

  1. திரு.எஸ் ராமன் அவர்களுக்கு,

    “இராமாயணம் ஒரு ஆய்வு” என்ற ஒரு கம்யூனிஸ்ட் புத்தகத்தைப் படித்தேன். அது குறித்து நானும் ஒரு சிறு விமர்சித்து எழுதியுள்ளேன். உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது. அந்தப் புத்தகத்தை விமர்சிக்க நீங்கள் சிறந்தவர் என்று எனக்குத் தோன்றியது. ஆகையால் இந்த மறுமொழியை இடுகிறேன். முடிந்தால் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு நீங்கள் ஒரு விமர்சனம் எழுதினால் நன்றாக இருக்கும். அந்தப் புதக்கம் பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாகும்.

    எனது விமர்சனத்தை வாசிக்க
    இராமாயணம் ஒரு ஆய்வு | தோழர்களின் புரட்டு வேலை

  2. படிக்க படிக்க சொர்க்கம் போல உள்ளது. இதன் மூலம் ஞானமும், அன்பும், அமைதியும் , உலகெங்கும் பரவட்டும்.

  3. திரு. அரசனுக்கு நன்றி. அவர்களது மறுமொழியே நன்றாக இருக்கிறது. இருந்தும் அவர் குறிப்பிட்ட புத்தகத்தைப் பெற்றபின், என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன். பல முறை மறுமொழி அனுப்பிய அத்விகா அவர்களுக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *