[பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி

சுவாமி சித்பவானந்தர் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் முந்தைய பகுதிகள்:
(தொடர்ச்சி...)

அடைக்காத தாழ்

அன்னை சாரதா தேவியார் ஜெயராம் பாடியிலிருந்து ரயில் மார்க்கமாக கல்கத்தா வந்து கொண்டிருந்தார். கொலாப்மா என்ற அம்மணி அன்னையின் தோழியாகக் உடன் வந்து கொண்டிருந்தார். அன்னை வருகின்ற செய்தியை அறிந்த பிரம்மானந்த சுவாமிகளும், பிரேமானந்த சுவாமிகளும் அன்னையைத் தரிசிக்க விரும்பியவர்களாய் ஹௌரா ஸ்டேஷ­னுக்குச் சென்றனர். ஆனால் அன்று ரயில் வெகு தாமதாமாக வந்தது. வண்டி வந்து நின்றதும் அன்னைக்கு முன்னதாக கொலாப்மா பிரம்மானந்த சுவாமிகளைப் பார்த்து, “சுவாமிகளே, என்ன இப்படிச் செய்தீர்கள்! அன்னை தாங்கமுடியாத வெயிலில் தளர்வுற்று வந்துள்ளார். முதலில் தன் இடம் போய்ச்சேர்ந்து ஓய்வு கொள்ள வேண்டாமா? ரயிலடியிலேயே நீங்களும் மற்றவர்களும் நமஸ்காராதிகள் செய்ய ஆரம்பித்து விட்டீர்களானால் அன்னையின் பாடு என்ன ஆவது?” என்று கடிந்து கொண்டார். சுவாமிகள் என்ன செய்வார்? அன்னையை நெருங்காமலேயே எட்ட நின்று விட்டார். பிறகு அன்னை பாக்பஜாரிலுள்ள தமது இல்லத்தை அடைந்தார்.

பிரம்மானந்தரும், பிரேமானந்தரும் பின்னால் ஒரு வண்டியிலேறிக் கொண்டு அதே வீட்டிற்கு வந்து கீழே ஓர் அறையில் அமர்ந்திருந்தனர். அச்சமயத்தில் கிரீஷ் சந்திர கோ­ஷ் ஆங்கு வந்து சேர்ந்தார். அவரும் அன்னை கல்கத்தா வந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அவரைக் காணும் தாகத்துடன் விரைந்தோடி வந்தவர். அன்னையைத் தரிசிக்காது அடித்தளத்தில் அமர்ந்திருக்க, இருசுவாமிகளைக் கண்டதும் கிரீஷ­ர் அவர்களுடன் அன்னையைப்பற்றி விசாரிக்கலானார். அப்பொழுது மீண்டும் கொலாப்மா அங்கு தோன்றினார். மறுபடியும் அன்னையை இப்பொழுது தொந்தரவு செய்யவேண்டாம் என்று கடுமையாகவே பேசினார். ஆனால் சுவாமிகளைப் போல சாந்தமூர்த்தி அல்லர் கிரீஷ­ர். வாருங்கள் சுவாமிகளே, மாடிக்குச் சென்ற மாதாவைப் பார்த்து வருவோம் என்று படியேறலானார். மீண்டும் கொலாப்மா முன்போலவே தடுத்துரைத்தார். கிரீ­ஷருக்குக் கோபம் வந்தது. “இந்தப் பெண்பேய் பேசுவதைத்தான் பாருங்கள்! உத்தமியான அன்னையை உபத்ரவிப்பதற்கு நான் வந்துள்ளேனாம். இத்தனை நாட்களுக்குப்பிறகு அன்னை தன் குழந்தைகளான நம்முடைய முகத்தைக் கண்டு உள்ளம் குளிர்வாள். அன்னையின் தாயன்பை இந்த கொலாப்மா என்ன கண்டாள்!” என்று கூறி சுவாமிகள் இருவரையும் இழுத்துக்கொண்டு மேலே சென்று விட்டார்.

அத்யந்தப் பிரேமையுடன் அன்னை அவர்களை வரவேற்று இன்புறப் பேசி ஆசீர்வதித்தார். இதற்குள் கண்ணீரும் கம்பலையுமாக மேலே வந்த கொலாப்மா கிரீஷ­ரின் கடும் மொழிகளைப் பற்றி அன்னையிடம் குறைகூறிக் கொண்டார். அன்னை அவரைப் பார்த்து, “கொலாப், உனக்கு நான் எத்தனை தடவைக் கூறி எச்சரித்திருக்கிறேன். எனது சத்புத்திரர்களான இவர்களைத் தடுத்துரைத்துக் குறைகூறிப் பேசாதே!” என்று அன்னை கொலாப்மாவைத் திருத்தியருளினார். வெற்றிகொண்ட வீரரைப் போல, தாயிடம் பிடிவாதம் செய்து பக்ஷணம் பெற்ற பாலனைப் போலப் பெருமிதத்துடன் கிரீஷ­ர் அன்னையைப் பணிந்து திரும்பினர். அன்னையின் அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

 

கல்வியில் ஆச்ரமவழி

நமது நாட்டின் பண்பாடு ஆச்ரம வாழ்க்கையாகப் பரிணமித்திருக்கிறது. ஏட்டுக் கல்வியும் பேச்சுத் திறமையும் மனிதனது மேன்மைக்கு அறிகுறிகளாகமாட்டா. ஒரு மனிதன் தொடர்ந்து எத்தகைய வாழ்க்கை வாழ்ந்து வருகிறானென்று பார்க்கவேண்டும். செய்கிற ஒவ்வொரு சிறு செயலிலும் மனிதனது தன்மை விளங்குகிறது. மேலான தன்மையைச் செயலில் காண்பிப்பவனே சீரியவன் ஆகிறான். சீர்மையைப் பெரியவர்கள் வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது வாழ்க்கையாக வடிவெடுக்குமிடத்து அதை ஆச்ரமம் என்கிறோம். மனத்தூய்மை அதற்கு முற்றிலும் இன்றியமையாதது. நம் நாட்டில் ஐதிகமாக நான்கு ஆச்ரமங்கள் அமைந்திருக்கின்றன. பிரம்மசரிய ஆச்ரமம், கிரஹஸ்த ஆச்ரமம், வானப்பிரஸ்த ஆச்ரமம், சந்நியாச ஆச்ரமம் என்று அவை முறையே பெயர் பெறுகின்றன. சின்னஞ் சிறுவர்கள் எந்த ஆச்ரமத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர். மனம் போகும் போக்கில் அவர்கள் வாழ்ந்திருக்கலாம். தீவிரமான கட்டுப்பாடு அவர்களுக்கில்லை. ஆனால் ஐந்து வயதுக்குப் பிறகு இந்தியச் சிறுவன் ஒருவனுக்கு ஆச்ரம வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

அவன் பிரம்மசரிய ஆச்ரமத்தைச் சேர்கிறான். கல்வி கற்கும் கடமை அதினின்று அவனுக்கமைகிறது. புதிய எண்ணம், புதிய சூழ்நிலை, புதிய வாழ்க்கைத் திட்டம், புதிய கடமை அவனுக்கு அப்பொழுது வந்தமைகின்றன. கல்வியில் ஆச்ரம வழி என்பது இதுவே, நான்கு ஆச்ரமங்களில் ஏதேனும் ஒரு ஆச்ரமத்தைச் சேராதவன் சமூகத்தில் மேன்மகனாக மதிக்கப்படுவதில்லை. பிரம்மசரிய ஆச்ரமம் முழுதும் கல்வி கற்பதற்கும், நல்லொழுக்கம் பழகுதல் என்பதற்குமே ஒதுக்கி வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து வருகின்ற கிரஹஸ்த ஆச்ரமம், வானப்பிரஸ்த ஆச்ரமம், சந்நியாச ஆச்ரமம் ஆகிய மூன்றும் பெரிய பொறுப்புக்களை எடுத்துக் கொள்கின்றன.அப்பொறுப்புக்களில் முக்கியமான தொன்று கல்வியைப் பற்றியது. கிரஹஸ்த ஆச்ரமம் ஒவ்வொன்றும் சிறிய அளவில் ஒரு கல்விச்சாலையாகிறது. அதே கோட்பாடு பிறகு வானப்பிரஸ்தனுக்கும் சந்நியாசிக்கும் அமைகிறது. அலாதியாகக் கல்வித் துறையிலேயே உழைத்து வந்துள்ள ஆச்ரமங்களுமுண்டு. குருகுலங்களென்று அவைகள் அழைக்கப்படுகின்றன. குருகுல வாசம் செய்யாத மாணாக்கன் ஒருவன் நல்ல முறையில் கல்வி கற்றவனாகப் பண்டைக் காலத்தில் கருதப்படவில்லை. குருகுலம் ஒன்றின் சிறப்பை முன்னிட்டு அதில் கல்வி பயின்ற மாணாக்கனுக்கும் சிறப்புண்டாயிற்று.

நல்ல ஆச்ரமம் ஒன்றில் பெற்ற பயிற்சியே ஆன்றோர்களால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாய் அக்காலத்தில் இருந்து வந்தது. தொழில் புரிதலும், செல்வத்தை வளர்த்தலும் ஆச்ரம வாழ்க்கைக்கு முரண்பட்டவைகளல்ல. கிரஹஸ்த ஆச்ரமத்தின் தர்மம் தனத்தைப் பெருக்குவதாகும். தொழில் புரியவும், செல்வம் திரட்டவும் தெரியாத குடும்பி எந்த ஆச்ரமத்துக்கும் ஏற்றவனல்லன், சமூக நன்மைக்காகவென்று அமைந்த தொழில்களே மேலானவைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. நல்ல வழியில் பொருள் தேடுவதும், அதை நல்ல வழியில் செலவிடுவதும் கிரஹஸ்த ஆச்ரம தர்மமாகும். ‘இல்வாழ்வானென்பான் இயல்புடையமூவர்க்கும் நல்லாற்றி னின்ற துணை’ என்பது இல்லறத்தின் கோட்பாடு. ஆச்ரம வாழ்க்கையில் தொழில் புரிதற்கும் திரவியம் தேடுதற்கும் இடமுண்டு என்றாலும், போட்டி போடுதற்கு அதில் இடமில்லை. போட்டி போட்டுப் பிறரைப் புறக்கணித்து வாழ்வதில் கேடுகள் அனைத்தும் உண்டாகின்றன. போட்டி போடுபவன் பதிதன் ஆகிறான். அதாவது பெருவாழ்வுக்கு அவன் உதவாதவன் ஆகிறான். ஆச்ரம வழி என்பது மற்றவர்களை ஒதுக்கி வைத்துவிட்டுத் தான் மட்டும் தலையெடுப்பதல்ல. நல்வழியில் எல்லார்க்கும் துணைபுரிதல் ஆச்ரம வாழ்க்கைத் திட்டம். உடலிலுள்ள அவயவங்கள் ஒன்றோடொன்று போட்டிபோடுவதில்லை. ஒவ்வொரு உறுப்பின் செயலும் உடலினது பொது நன்மைக்கென்றே அமைகிறது. பொது நன்மையில் தனி நன்மை அடங்கியிருக்கிறது. ஆச்ரம வழி புகட்டும் கோட்பாடு இதுவே. ஆகையால் ஆச்ரம வழி ஒன்றே கல்விக்கு ஏற்றது.

கல்விக்கும் சூழ்நிலைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தகுந்த சூழ்நிலையினின்று நல்ல பயிற்சி வருகிறது. தகாத சூழ்நிலையினின்று கேடுகள் பல தோன்றுகின்றன. ஆச்ரம வாழ்வு எல்லாவிதத்திலும் கல்விக்குப் பொருத்தமான சூழ்நிலையாகும். இயற்கைக்கும் மனிதனுக்கு மிடையில் நல்லிணக்கத்தை அது உண்டு பண்ணுகிறது. மக்கள், விலங்கு, பறவை ஆகிய எல்லா உயிர்களிடத்திலும் அன்பாயிருத்தல், உயிர்களோடு ஒத்து வாழுதல், உயிர்களுக்குப் பணிவிடை செய்தல் ஆகிய நலன்கள் மாணாக்கர்களுக்கு ஆச்ரம வாழ்வில் அமைகின்றன. நிலம், நீர், காற்று முதலிய பூதங்களை நன்கு பயன்படுத்துதற்கான வசதியும் வாய்ப்பும் ஆங்குண்டு. வானத்தில் இலங்கும் சந்திர, சூரிய, நக்ஷத்திரங்களை ஆராய்ந்து அறிவை வளர்ப்பதற்கு அதுவே உற்றவிடம். இதற்கெல்லாம் மேலாகக் கல்வி புகட்டுபவர்க்கும் கல்வி பெறுபவர்க்கும் இடையில் அமையும் இணக்கம் ஒப்பற்றது. மற்ற பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும் கூடுவது ஒருவித ஒப்பந்த முறையில் என்று சொல்லலாம். சம்பளத்துக்கேற்ற போதனை என்பது ஆங்கமைந்துள்ள நியதி. குறிப்பிட்ட வேளையில், குறிப்பிட்ட இடத்தில் கூடிக் குறிப்பிட்ட பாடத்தைமட்டும் புகட்டுதல் அவர்களின் போக்கு; சட்ட திட்டத்துக்குக்குட்பட்டு அவர்கள் நடக்கின்றனர். உழைப்பைக் கூட்டவும் குறைக்கவும் அவர்கள் செய்வதில்லை. யந்திரம் இயங்குவது போன்று வேலை நடைபெறுகிறது. ஆச்ரம வழியிலோ உயிரோடு உயிர் இணக்கம் கொள்கிறது. உயிர் வாழ்க்கையின் மேலான லட்சியம் அங்குப் பழக்கத்தில் கொண்டு வரப்படுகிறது. ஆச்ரமக் கல்விக்குத் தலைவராயிருப்பவர் குலபதி என்று அழைக்கப்படுகிறார். பண்பாடுகள் பல அவர்பால் பொலிகின்றன.

தாயின் அன்பு திரும்பவும் அவர் வாயிலாகத் திகழ்கிறது. தந்தையின் பொறுப்பையும் அவரே எடுத்துக்கொள்கிறார். தாய் தந்தையர் செய்கிற செயலையயல்லாம் செய்வதோடு மற்றொரு பெரிய பொறுப்பையும் அவர் வகிக்கிறார். மாணாக்கரைப் பாராட்டி வளர்ப்பதோடு அவர்களுக்கு அறிவூட்டி வளர்ப்பது ஆசிரியரது தனிச்செயல். ஆக, தாய் தந்தையருக்கு ஒருபடி மேலே இருக்கிறார் குரு. தாயினிடத்து மைந்தன் தங்குதடையின்றி எப்பொழுது வேண்டுமானாலும் போவதுபோன்று அவன் ஆச்ரமத் தலைவரையும் அணுகலாம். தனக்குத் தேவையாயிருப்பவைகளையெல்லாம் உரிமை பாராட்டி அவன் அவரிடமிருந்து பெறலாம். நீர், மீனுக்கேற்ற சூழ்நிலை. நல்லமண், செடிக்கேற்ற சூழ்நிலை. அங்ஙனம் ஆச்ரமத்தில் குருகுலவாசம் மாணாக்கனுக்கேற்ற சூழ்நிலை. அவனுடைய முன்னேற்றத்துக்கு அதுவே பொருத்தமான இடம். புஸ்தகங்களினின்று புள்ளி விவரங்களை ஏராளமாக மனதில் சேகரித்து வைப்பது தலைத்தரமான கல்வியாகாது. தூய மனதும், சீரிய ஒழுக்கமும், மக்களோடு நல்லிணக்கம் கொள்ளுதலும் கல்வியின் பயனாகும். இத்தகைய மேன்மைகள் வகுப்பில் புகட்டும் பாடங்கள் மூலமாக வருவனவல்ல. எரிகின்ற தீயோடு தொடர்வு வைக்கின்ற விறகுக்கட்டை தீப்பிடிப்பது போன்று ஒழுக்கமுடையவரிடமிருந்து ஒழுக்கம் வருகிறது. ஆச்ரம வாழ்க்கை என்று சொல்லுவதும் ஒழுக்கம் என்று சொல்லுவதும் ஒன்றே. நல்லாசிரியர் ஒழுக்கமே வடிவெடுத்தவராயிருக்கிறார். அல்லும் பகலும் அவரோடு பழகிவரும் மாணாக்கன் ஒழுக்கத்தையே கண்கூடாகப் பார்த்து வருகிறான். அது அவனுடைய மனதில் ஆழ்ந்து பதிகிறது. பிறர் செய்வதைப் பார்த்துச் செய்வதன் மூலம் பழக்கம் பிடிபடுகிறது. பழக்க வழக்கங்களில் பெரும்பகுதி பார்த்துப் பயிலுவதால் வருகிறது. பின்பு, யாரிடத்தில் அன்பும் மரியாதையும் அதிகமிருக்கிறதோ அவரைப் போன்று ஒழுகுதலும் எளிதாக வந்தமைகிறது. இங்ஙனம் ஆச்ரம வாழ்க்கையில் தன்னையறியாது மாணாக்கன் நல்லொழுக்கத்துக்கு இலக்காகிறான். நெடுநாள் பழக்கம் தனது சொந்த இயல்பாக வடிவெடுத்து விடுகிறது. திரண்ட வெண்ணெய் தண்ணீரில் கலங்காதிருப்பது போன்று, ஆச்ரமப் பயிற்சியில் ஊறியவன், தீயவர்களுக்கிடையில் கெடாதிருப்பான். மற்ற கல்வி முறைகளில் அமைந்துள்ள பரீக்ஷையும், அதில் தேர்வு பெறுதலும் வெறும் பாடங்களை மட்டும் பொறுத்தவைகள். எந்தக் கலையில் மாணாக்கன் எவ்வளவு தேர்ச்சியடைந்திருக்கிறான் என்பதை நிர்ணயிப்பதோடு அப்பரீக்ஷை முடிந்து விடுகிறது.

ஆச்ரம வழி அத்தகையதன்று. கலைகளுக்கு இதுபோன்ற பரீக்ஷை வைப்பதற்கு ஆச்ரம வழி அனுமதி கொடுக்கிறது. அதற்குமேல் ஆச்ரம வழிக்கென்றே அமைந்துள்ள அலாதியான பரீக்ஷை முறையொன்றுண்டு. பண்பும் பொறுப்புமுடைய வாழ்க்கைக்கு மாணாக்கன் எவ்வளவு தூரம் தகுதியுடையவன் என்று அப்போதைக்கப்போது கவனிக்கப்படுகிறான். பரீக்ஷை என்கிற பெயர் கிடையாது. ஆனால் ஒவ்வொரு கணப்பொழுதிலும் மாணாக்கனுடைய போக்கு ஆசிரியருடைய பார்வைக்கு வருகிறது. அவனுடைய தன்மை எத்தகையது என்பதை அவர் நன்கு பார்வையிடுகிறார். அவனுடைய தகைமையை ஆசிரியர் முற்றும் அறிந்திருக்கிறார். அவனை எக்காரியத்துக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதும் அவருக்குத்தான் விளங்குகிறது. ஆச்ரம வழியில் அமைந்துள்ள கல்வியில் ஒரே ஒரு குறைபாடு உள்ளது. சமூகத்திலுள்ள ஒரு சிறுபான்மையோருக்குத் தான் அந்த மேலான முறையை வழங்கமுடியும். பயிற்சி பெறுபவருடைய எண்ணிக்கை சிறியது. ஆனால் அவர்கள் அடைகிற பண்பாடு ஒப்பற்றது. இன்றைக்கு நன்மக்களுக்கு உலகெங்கும் பெரும் பஞ்சமாய்விட்டது. ஜனத்தொகை பெருகியிருக்கிறது. அவர்களுள் நல்லாரைக் காண்பதுதான் அரிது. பொருளை வேண்டியவாறு பயன்படுத்த மக்கள் தெரிந்துகொண்டனர். மனிதனை மனிதன் நம்பவோ, நேசிக்கவோ அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. பறவைபோன்று பறக்கக் கற்றிருக்கின்றனர் ; மீன்போன்று நீருக்குள் சஞ்சரிக்கக் கற்றிருக்கின்றனர் ; நல்லாராக நிலமிசை வாழ நவீன மக்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. அதைக் கற்றுக்கொள்ளுதற்கு ஆச்ரமவழி ஒன்றே உற்ற உபாயம். அன்புடன் பணிவிடை செய்வது அதன் குறிக்கோள் ஆகும்.

(தொடரும்…)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *