இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

24.1 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

விபீஷணின் சரணாகதி வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளலாமா இல்லையா என்பதை அவர்கள் வெகு நேரம் விவாதித்தனர். ஒரு முனையில் சுக்ரீவனின் வாதமாக, அரக்கர்கள் எல்லோரும் தீயவர்களே, அவர்களில் நல்லவர்களே இருக்கமுடியாது என்று இருக்க, மறு முனையில் அவர்கள் எல்லோரையுமே தீயவர்கள் என்று சொல்ல முடியாது என்றிருந்தது. சில நல்லவர்கள் இருக்கலாம் என்று ஒத்துக்கொண்ட வானரர்களும், அரக்கர்கள் பொதுவாகவே வஞ்சகர்கள் என்பதால், வந்திருக்கும் அரக்கர்களிடம் எதற்கும் கொஞ்சம் கவனமாகவே இருப்பது நல்லது என்றே எச்சரித்தார்கள். அதனால் விபீஷணன் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு, சில பல சோதனைகளை வைத்து அதில் அவர்கள் தேறிய பின்னரே, தஞ்சம் அளிப்பது பற்றி அவர்களிடம் உறுதிபடுத்த வேண்டும் என்று சொன்னார்கள்.

அதுவரை மௌனமாக அவர்கள் எல்லோரும் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த அனுமான் தன் அபிப்ராயத்தைச் சொல்ல ஆரம்பித்தான். விபீஷணன் சொல்வதை மட்டும் வைத்துக்கொண்டோ அல்லது வேறு எந்த வழிகள் மூலமோ, அவர்கள் முற்றிலும் நல்லவர்கள் என்றோ அல்லது தீய எண்ணங்களோடு வந்து இங்கு நம்மை வேவு பார்க்க வந்தவர்கள் என்பதையோ சந்தேகத்திற்கு இடமின்றி நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஒருவன் என்னதான் தன் எண்ணங்களை மறைத்துக்கொண்டு நல்லவன் என்று வேஷம் போட்டாலும், அவனது முக பாவங்கள் அவனது உண்மை நிலையைக் காட்டிக் கொடுத்துவிடும் என்றான்.

ஆகாரஸ்²சா²த்³யமானோ (அ)பி ந ஸ²க்யோ வினிகூ³ஹிதும் |
ப³லாத்³தி⁴ விவ்ருʼணோத்யேவ பா⁴வமந்தர்க³தம்ʼ ந்ருʼணாம் || 6.17.61 ||

ந்ருʼணாம்ʼ, மனிதனின்
அந்தர்க³தம்ʼ பா⁴வம்ʼ ஏவ, உள்ளத்தில் பொதிந்த எண்ணமே
ப³லாத் ஹி, பலத்துடன் (பீறிட்டுக்கொண்டு)
விவ்ருʼணோதி; நன்கு வெளிப்பட்டு நிற்கிறது
ஆகாரச்சா²த்³யமான: அபி, (எவ்வளவு தான்) உருவத்தை மறைத்துக் கொண்டாலும்
வினிகூ³ஹிதும்ʼ, (ஒருவனால் உள்ளதை) மறைக்க
ந ஸ²க்ய: இயலாது.

உள்ளுணர்ச்சிகளுக்கு மாறாக ஒருவன் முகபாவங்களைக் காட்டிக்கொண்டிருந்தாலும், அவனது உடல் அசைவுகளும், முகமும் அவனது உணர்ச்சிகளின் உண்மை நிலையைக் காட்டிக் கொடுத்துவிடும்.
உண்மை என்பது வெளியில் தெரியும் செயல்களையும், கேட்கப்படும் பேச்சுக்களையும் தாண்டி நிற்பது. என்னதான் முயன்றாலும் அதை மறைக்க முடியாது. அதற்கு மாறாக ஒருவன் என்னதான் சொன்னாலும், செய்தாலும் நன்கு பரிச்சயமானனவர்களுக்கு உள்ளதை உள்ளபடி கண்டுபிடிக்க முடியும். ஒருவன் மாறாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும் உண்மையைக் கண்டுபிடிக்கும் கலையை இங்கு அனுமன் நம் அனைவரையும் கற்று அறிந்துகொள்ளச் சொல்கிறான்.

24.2 அடி பணிந்தோரை அரவணை

விபீஷணன் அடிப்படையில் நல்லவன் என்றே தெரிவதால் அவனுக்குத் தஞ்சம் கொடுக்கலாம் என்று தனக்குப் பட்டாலும், இறுதி முடிவை இராமரே எடுக்க வேண்டும் என்று அனுமன் சொன்னான். அனுமன் அப்படி எடுத்துக் கொடுத்ததைத் தொடர்ந்து இராமரும் தன்னிடம் உதவி வேண்டும் என்று கேட்டு வருவோரைத் தன்னால் மறுப்புச் சொல்லி திருப்பி அனுப்ப இயலாது என்றார். ஆனால் சுக்ரீவனோ தன் நிலையில் மாறாது பிடிவாதமாக இருந்தான். அவனைப் பொருத்தவரை விபீஷணன் நல்லவனா கெட்டவனா என்பதோ, தஞ்சம் அடைபவர்கள் எப்பேர்ப்பட்டவரானாலும் இராமர் அவர்களை எந்த நிபந்தனையும் இல்லாது அணைத்துக் கொள்ளும் குணம் உள்ளவர் என்பதோ இப்போது நமது விவாதம் அல்ல; வந்திருப்பவன் நமது எதிரியின் அணியிலிருந்து வந்துள்ளவன் என்பதாலேயே அவனைக் கொல்லவேண்டும் என்றான்.

சுக்ரீவனின் எண்ணத்திலிருந்து தாம் மாறுபடுவதாக இராமர் சொல்லி, தான் எல்லா அரக்கர்களையும் எதிரி என்று நினைக்கவில்லை என்றார். மேலும் முன்பு எதிரியாக இருந்து, பின்பு மனம் மாறி ஆயுதங்களையும் வீசி எறிந்துவிட்டு நிராயுதபாணியாகத் தஞ்சம் என்று நம்மிடம் வந்தடைந்தவரை, பழைய பகைமையை நினைத்து எதுவும் செய்யாது, கௌரவமாகவும் நடத்தவேண்டும் என்றும் சொன்னார். அப்போது அவர், பெருமை வாய்ந்த பல சாஸ்திரங்களில் தேர்ந்தவரும் கன்வ மகரிஷியின் புதல்வருமான கண்டு ரிஷி சொன்னபடி, எதிரி சரணடையும்போது எப்படி நடத்த வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்.

ப³த்³தா⁴ஞ்ஜலிபுடம்ʼ தீ³னம்ʼ யாசந்தம்ʼ ஸ²ரணாக³தம் |
ந ஹன்யாதா³ன்ருʼஸ²ம்ʼஸ்யார்த²மபி ஸ²த்ரும்ʼ பரந்தப || 6.18.27 ||

பரந்தப!, எதிரிகளை வெல்பவனே!
ப³த்³தா⁴ஞ்ஜலிபுடம், இருகைகூப்பிய
தீ³னம்ʼ, தீனனான
யாசந்தம்ʼ, யாசித்திருப்பவனான
ஸ²ரணாக³தம்ʼ, சரணாகதனை
ஸ²த்ரும்ʼ அபி, எதிரியாய் இருப்பவனாயினும்
ஆன்ருʼஸ²ம்ʼஸ்யார்த²ம்ʼ, இரக்கத்தின் அடிப்படையில்
ந ஹன்யாத் கொல்லக்கூடாது.

எதிரியாய் இருந்திருந்தாலும் எப்போது ஒருவன் தன் ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, நம்மிடம் கருணை காட்ட வேண்டிக்கொண்டு, கை கூப்பி, நம்மிடம் தஞ்சம் அடைகிறானோ அப்போது அவனைக் கொல்லக் கூடாது.

ஒரு விஷயத்தில் பல விதமான அபிப்ராயங்கள் இருக்கும்போது, நம்முடைய தீர்மானமான எண்ணத்தைச் சொல்லி அதன்படி நடப்பதற்காக, பெரியோர்கள் வகுத்துச் சென்ற வழிகளை எடுத்துச் சொல்வது வழக்கம். எல்லா விதமான பிரச்சினைகளில் சிலவற்றிற்கு ஒருவேளை எழுதப்பட்ட விதிகள் இல்லாது போகலாம். அப்போது பெரியவர்கள் செய்தபடி செல்வது என்பது ஒரு வழி என்பதால் இங்கு இராமரும் அதைத்தான் செய்கிறார். தற்காலத்தில் போர்க் கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும் என்று போரிடும் நாடுகளை வலியுறுத்தும் ஜெனீவா ஒப்பந்தம் அன்று இராமர் எடுத்துக் காட்டிய கண்டு ரிஷியின் கோட்பாட்டை ஒட்டியது போன்றதுதான்.

மன்னித்துச் சரணாகதி அளிப்பது என்னும் வழக்கம் எல்லாப் போர்களிலும் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. போருக்கும், அபிப்ராய பேதங்களுக்கும் சிறிதும் சம்பந்தமில்லாத தோற்றுவிட்ட அணியின் குடி மக்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், மிருகங்கள் என்று எவர்க்கும் எந்தவிதமான கருணையும் காட்டாமல் படுகொலை, மற்றும் பொறுக்கவும் முடியாத அட்டகாசங்களை வெற்றி பெற்ற அணி பழி தீர்ப்பதாக எண்ணிக்கொண்டு செய்த கொடுமைகளும் மனித சரித்திரத்தில் நிறையவே உள்ளன. இதற்கு மாறாக நடந்ததை அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஆபிரஹாம் லிங்கன் தலைமையில் வெற்றி பெற்ற வடவர் அணி, தென்னவர் அணியை சிறையிலும் வைக்காமல், எந்த விதத் தண்டனயும் அளிக்காமல் அவரவர் ஊருக்குத் திரும்பிப் போகச் சொன்னதையும், நம் காலத்தில் பங்களாதேஷை உருவாக்கிய பாரத தேசம் நம்மிடம் போரிட்ட பாகிஸ்தானின் போர்க்கைதிகளை விடுவித்ததையும் சொல்லலாம். இந்த இரண்டு மன்னிப்பு நிகழ்ச்சிகளுக்குப் பிறகும் மன்னித்தவர்களையே மன்னிக்கமுடியாத இன்னல்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது?

24.3 பரிபூரண சரணாகதி

விபீஷணனின் சரணாகதியை நிச்சயம் செய்கிற கட்டத்தில் இராமரின் அறிவு மற்றும் அன்புடன் கலந்த கருணை மிக்க மனித குணங்களைக் காண்கிறோம். தன்னையே நம்பித் தஞ்சம் புகுந்தவர்களை தன்னால் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்கிறார். அதன் மூலம் அவரை நம்பியவர்களை அவர் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுக்கிறார். அவரைப் பொருத்தவரை அப்படித் தஞ்சம் அடைபவர்களின் முந்தைய சரித்திரம் என்ன என்பதைப் பார்க்க வேண்டாம் என்பதே அவர் கருத்து. தஞ்சம் அடைபவன் ராவணனாகவே இருந்தாலும், அவன் முன்பு செய்த பாவச் செயல்களை ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்காமல், அவனையும் நிபந்தனை ஏதும் இல்லாமல் ஏற்றுக்கொள்வேன் என்கிறார்.

… அப⁴யம்ʼ ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம || 6.18.35 ||

ஸர்வபூ⁴தேப்⁴ய: அனைத்து ஜீவராசிகளுக்கும்,
அப⁴யம்ʼ த³தா³மி, அபயம் அளிக்கிறேன்
ஏதத் இது
மம, எனது
வ்ரதம் விரதம்.

எவர் என்னை அண்டி வருகிறார்களோ அவர்களுக்கு நான் அபயம் அளிப்பேன். என்னை அடைந்தபின் அவர்களுக்கு எந்த வித பயமும் வேண்டாம். இது என்னுடைய கொள்கை.

இந்த வரிகள் மூலம் இராமரின் தெய்வீக அம்சத்தை வால்மீகி எல்லோருக்கும் உணரவைக்கிறார். இது இறைவனால் அனைவருக்குமே கொடுக்கப்பட்டுள்ள உறுதி. தான் பாவியோ, அல்லது அதற்குத் தேவையான அளவு புண்ணியம் செய்யவில்லையோ என்று எவரும் நினைக்க வேண்டாம். அவனிடம் பரிபூரண சரணாகதி என்ற ஒன்றுதான் தேவை. சரணடைந்தபின் அவர்களுக்கு எந்தவித பயமும் தேவையில்லை. அபயம் அடைந்தவர்கள் எல்லாவித அச்சத்தினின்றும் விடுபடுகிறார்கள் என்பதும் ஆனந்தமாய் இருக்கிறார்கள் என்பதும் ஒன்றே என்று தைத்ரிய உபநிஷத்தும் இவ்வாறு கூறுகிறது:

யதோ வாசோ நிவர்த்தந்தே | அப்ராப்ய மனஸா ஸஹ |
ஆனந்தம் ப்ரம்ஹணோ வித்வான் | ந பிபேதி கதாசனேதி | (IV)

இறைவனை அடைவது என்பது சொற்களால் வர்ணிக்க முடியாத, மனதாலும் கற்பனை செய்ய முடியாத, உள்ளத்தால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடிந்த என்றும் ஆனந்தமாய் இருக்கும் நிலை என்பதை அறிஞர்கள் அறிவார்கள். அந்த ஆனந்த நிலையில் எதனிடத்தும், எதனாலும் அச்சம் என்பதே இருக்காது என்பதே அதன் பொருள். எப்படி ராமராஜ்யத்தில் எல்லாமே உண்மை என்பதால் பொய் என்பதே இல்லாது போகிறதோ, அதேபோல ஆனந்த நிலையில் எந்தப் பொருளும் பரம்பொருள் ஆகிவிடுவதால், வேறு என்பதே இல்லாததாகி அச்சம் என்பதும் இல்லாது போகிறது.
Ram accepts Vibhisana


24.4 பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு

தஞ்சமடைந்த விபீஷணனிடம் இலங்கை அரசுக்கு இனி அவன்தான் அதிபதி என்று இராமர் அறிவித்துவிட்டு, காலம் தாழ்த்தாமல் கடலின் இக்கரையிலேயே வானரர்களின் ஆரவாரத்துடன் அவனை இலங்கை அரசனாக முடிசூட்டு விழாவையும் நடத்தி விடுகிறார். விபீஷணனும் இலங்கையில் உள்ள அரக்கர்களின் படை விவரங்களையும், நுணுக்கங்களையும் இராமரிடம் சொல்கிறான். இலங்கையில் உள்ள அரண்மனைக் கோட்டையைத் தாக்க வேண்டும் என்றும், அதற்கு அனைத்து வானர வீரர்களும் கடலைத் தாண்ட உடனே ஒரு பாலம் அமைக்கப்பட வேண்டும் என்றும் சொன்னான். இராமரின் முன்னோர்களாலேயே ஏற்படுத்தப்பட்ட கடலைத் தாண்ட அக்கடலரசனிடம் இராமர் வேண்டிக்கொண்டு அவரது உதவியையும் கோருவது நல்லது என்று விபீஷணன் சொன்னான்.

அதன்படியே இராமரும் மூன்று நாட்களாக பகலிலும் இரவிலும் வேண்டியும், பலன் ஏதும் இல்லாததால் லக்ஷ்மணனிடம் தன்னுடைய பொறுமையைத் தவறாக பலமின்மை என்று கடலரசன் எண்ணிவிட்டானோ என்று நொந்துகொண்டு சொன்னார். அதற்குத் தக்க பதிலாக, தன் பலமும் தன் அம்புகளின் வீரியமும் கடலரசனுகுக்குப் புரியும்படியாக ஒரு பாடம் கற்பிக்கப்போவதாகவும் சொன்னார்.

ப்ரஸ²மஸ்²ச க்ஷமா சைவ ஆர்ஜவம்ʼ ப்ரியவாதி³தா |
அஸாமர்த்²யம்ʼ ப²லந்த்யேதே நிர்கு³ணேஷு ஸதாம்ʼ கு³ணா​: || 6.21.15 ||

ஸதாம்ʼ, சான்றோரின்,
கு³ணா​:, குணங்கள் (ஆன),
ப்ரஸ²ம மனவடக்கம்,
க்ஷமா, பொறுமை,
ஆர்ஜவம்ʼ, உண்மையான வெளிப்பாட்டுடன் இருத்தல்,
ப்ரியவாதி³தா, இனிமையான பேச்சு
ஏதேஏதே, இவைஇவை
சைவ, அனைத்தும்
நிர்கு³ணேஷு நற்குணம் அற்றோரிடம் (காண்பிக்கப்படும்போது, அக்கசடர்கள் கண்ணோட்டத்தில்)
அஸாமர்த்²யம, அசட்டுத்தனமாக,
ப²லந்தி, தெரிகின்றன.

சான்றோரின் குணங்களான மனவடக்கம், பொறுமை, எளிமை, இனிமையான பேச்சு, இவை அனைத்தும் நற்குணம் இல்லாதவர்களிடம் காண்பிக்கப்படும்போது, அதை அவர்கள் பலமின்மை என்று தவறாக நினைக்கிறார்கள்.

ஒருவனை அவன் பொறுமையின் எல்லைவரை சோதித்துவிட்டு, அவன் கோபத்தில் அதற்குப் பதிலடி கொடுக்க எழும்போது, அவன் காலைப் பிடித்து மன்னிக்க வேண்டுவது போல, இராமர் அவரது வில்வித்தையைக் காட்ட எழுந்த சமயத்தில், கடலரசன் ஓடி வந்து அவரை வணங்கி, வேண்டியது செய்வதாக வாக்குக் கொடுத்தான்.

24.5 ஒற்றர்களின் மகிமை

ஷார்துலா என்ற ராவணனின் ஒற்றன், அக்கரையில் குவிந்திருக்கும் வானரர்களின் சேனையைப் பார்த்து மிரண்டு போய் இலங்கைக்கு வரவிருக்கும் அபாயத்தைப் பற்றி ராவணனிடம் எச்சரித்தான். அதைக் கேட்ட ராவணன் வானரர்களால்தானே ராமனுக்குப் பலம் வந்திருக்கிறது என்று கணக்குப் போட்டு, சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் இடையே சிண்டு முடியப் பார்த்தான். அதன்படி சுகா என்றவனை தனது பிரதிநிதியாக நியமித்து அவனை சுக்ரீவனிடம் அனுப்பி, தான் சுக்ரீவனை உடன் பிறவா சகோதரனாக மதிப்பதாகச் சொல்லி அவனுடன் சமாதானம் பேசச் சொன்னான். மேலும் சுக்ரீவன் ராமனை விட்டுவிட்டு தன் பக்கம் வருமாறும் அழைப்பு விடுத்தான். சுகா அந்தச் செய்தியை எடுத்துக்கொண்டு வானரர்கள் பக்கம் வந்து சேர்ந்ததுமே, அவனைப் பார்த்துப் பிடித்துவிட்ட காவலர்கள் அவனை உடனே கொன்றுவிட நினைத்தனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த சுகா தன் உயிருக்குப் பயந்து அலறவே, அதைக் கேட்ட இராமர் எதிரியின் பிரதிநிதியாக வந்திருப்பவனைக் துன்புறுத்துவது தவறு என்று சொல்லி அவனை விடுவிக்கச் சொன்னார்.

சுகா தான் இருக்கும் இடத்திலிருந்தே ராவணனிடமிருந்து தான் கொண்டு வந்துள்ள செய்தியை சுக்ரீவனுக்குக் கத்திச் சொல்லவே, தன்னை இராமருக்குத் துரோகம் செய்யும்படி வெளிப்படையாகவே தூண்டும் ராவணனின் எண்ணத்தை அறிந்து வெறுத்துப் போனான். உடனே அவன் ராவணனின் தூண்டுதலைத் தான் அடியோடு வெறுப்பதாகவும், கூடிய சீக்கிரம் போர்க்களத்தில் சந்தித்து அவனைத் தான் கொல்வதற்குக் காத்திருப்பதாகவும் மறுப்புச் செய்தி கொடுக்கச் சொன்னான். சுகா அந்த செய்தியைச் சொல்வதற்கு இலங்கைக்குத் திரும்பிப் பறந்து போக ஆயத்தம் செய்யும் போது, அவன் வானரர்களைப் பற்றியும் அவர்கள் பாலம் கட்ட எடுக்கும் முயற்சிகளைப் பற்றியும் அரக்கர்களுக்குச் சொல்லிவிடுவானோ என்ற அச்சத்தில் அவனைக் கைது செய்து காவலில் வைக்க வேண்டும் என்று அங்கதன் ஆணையிட்டான்.

Rama Sethu Bridge

வானரர்கள் பாலம் கட்டி முடித்து வெற்றிகரமாகக் கடலைக் கடந்து அக்கரை சேர்ந்தபின், சுகா தன்னை விடுவிக்குமாறு கோர அவன் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டான். சுகா உடனே நேராகச் சென்று சுக்ரீவன் சொன்னதையும், வானரர்களின் படை விவரங்களையும் தெரிவித்தபோது ராவணனுக்கு அதைக் கேட்கக்கூடப் பிடிக்கவில்லை. வானரர்களைப் பற்றி சுகா சொல்லும்போது வெவ்வேறு பிரிவுகளின் படைத் தலைவர்களையும், தளபதிகளையும், சேனாதிபதிகளையும் விவரித்து, அவர்களது பராக்கிரமத்தைப் பற்றியும், புகழுக்கான நிகழ்ச்சிகளையும் சொன்னது ராவணனுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது. அவர்கள் தங்களுக்கு ஈடில்லை என்று கனவு கண்டுகொண்டிருந்த ராவணனுக்கு அவர்களைப் பற்றிக் கேட்டது பேரிடியாக இருந்தது. உண்மை விவரங்கள் தனக்கு இப்போதாவது தெரிய வந்திருக்கிறதே என்று நினைக்காமல், விவரங்களை திரட்டிக் கொண்டுவந்த சுகாவை அவன் கண்டபடி ஏச ஆரம்பித்தான்.

சுகா பல காலமாக ராவணனுக்கு மிகவும் விசுவாசமாகவும், நன்றாகவும் சேவை செய்திருந்தாலும், அவனுக்கு ஒரு அறிக்கையை எப்படிக் கொடுப்பது என்பது தெரியவில்லை என்றான். அவனது அறிக்கை திருப்தி அளிக்கும் வகையில் கொடுக்கப்படாததால் தண்டனை கொடுக்கலாம் என்றாலும், அவனது நெடு நாளைய பணியைக் கருத்தில் கொண்டு ஏதும் செய்யாது விட்டுவிடுவதாகவும், ஆனால் அவன் இனிமேலும் அரசவையில் இருக்கலாகாது என்று சொல்லி அவனை வெளியேறச் சொன்னான்.

ஆனாலும் சுகாவின் அறிக்கை ராவணன் மனதுக்குள் மறைமுகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
சுகா சொன்னது போல் வானரர்களின் சேனை அவ்வளவு பெரியதா, வலிமை வாய்ந்ததா என்ற கேள்விகள் அவனைத் துளைக்க ஆரம்பித்துவிட்டன. அவர்கள் நடுவில் ஏதேனும் தொய்வு இருக்குமா, காட்டிக் கொடுக்கும் கருப்பு ஆடுகள் இருக்குமா, அவைகளைத் தன்னால் உபயோகிக்கமுடியுமா என்றெல்லாம் தான் அறிய வேண்டும் என்று விரும்பினான். வானரர்கள் படை சூழ்ந்த இராமருடன் போர் என்பது அனேகமாக நிச்சயம் ஆகிவிட்டதால், அந்தப் படைகளைப் பற்றி மேலும் விவரங்கள் அறிவது நல்லது என்று சில ஒற்றர்களை வேலை செய்யுமாறு அனுப்பி வைத்தான். ஒரு கை தேர்ந்த ஒற்றனையும் அவர்களுடன் செல்லுமாறு சொல்லி, போர் வந்துவிட்டால் எதிரிகளைப் பற்றி விவரமாக அறிந்துகொண்டு போரை வெற்றிகரமாக முடிக்க ஒற்றர்களின் பணி மிக முக்கியமானது என்றான்.

சாரேண விதி³த​: ஸ²த்ரு​: பண்டி³தைர்வஸுதா⁴தி⁴பை​: |
யுத்³தே⁴ ஸ்வல்பேன யத்னேன ஸமாஸாத்³ய நிரஸ்யதே || 6.29.20 ||

சாரேண, ஒற்றர்களால்,
விதி³த: (அவனது பலம், பலமின்மை) அறியப்பட்ட,
ஸ²த்ரு: எதிரி,
பண்டி³தை: புத்திசாலிகளான,
வஸுதா⁴தி⁴பை: அரசர்களால்,
ஸ்வல்பேன, எளிய முயற்சியாலே,
யுத்³தே⁴, போரில்,
ஸமாஸாத்³ய எதிர்கொண்டு,
நிரஸ்யதே, வெல்லப்படுகிறான்.

எதிரிகளின் விவரங்களை அறிந்து தரும் ஒற்றர்களின் பணியினால், போரை குறைந்தபட்ச முயற்சிகளுடன் ஓர் அரசன் வெற்றிகரமாக முடிக்கலாம்.

பொதுவாக சமாதானக் காலம்தான் என்றாலும், இராமாயணக் காலத்திலேயே எதிரிகள் ஆகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களின் விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று தெரிந்திருப்பது போர்க் காலத்தில் நாம் ஆற்றவேண்டிய முன்னெச்சரிக்கை செயல்கள் பற்றிய நமது அறிவு எவ்வளவு ஆழ்ந்தது என்று காட்டுகிறது.

(தொடரும்)

One Reply to “இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24”

  1. கீதா பிரஸ்ஸின் வால்மீகி ராமாயணம் ஐந்து பாகங்களையும் வாங்கி , பத்திரமாக பூஜையில்
    வைத்துள்ளேன். அவற்றில் சமஸ்கிருத கவிதைகளை தமிழில் Transliteration செய்து , தமிழில் பொருளும் கொடுத்துள்ளனர். ஆனால் பத உரை இல்லை. ஒவ்வொரு வாக்கியமும் ஒட்டு மொத்தமாக , தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. எளிதாக புரியும் விதத்திலும் , பெரிய எழுத்தில் இருப்பதால் ,அனைவரும் படிக்க வசதியாக உள்ளது. அவற்றில் பத உரை கொடுக்கப்பட்டால், இன்னமும் வசதியாக இருக்கும். ஆனால் ஐந்து பாகம் என்பது ஏழு அல்லது எட்டு பாகம் என்று ஆகிவிடும்.

    திரு ராமன் அவர்கள் வழங்கி வரும் இந்த தொடரில் ஒவ்வொரு பதத்துக்கும் ( சொல்லுக்கும் – word) பொருள் கொடுக்கப்பட்டு விளக்கம் தருவதால் படிக்க மிக சுவையாக இருக்கிறது. ராம காவியத்தை இவ்வளவு சிறப்பாக வழங்கிவரும் அவருக்கும், அதனை வெளியிட்டும் வரும் தமிழ் ஹிந்து தளத்துக்கும் என்னுடைய பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொண்டு, இத்தொடர் மேலும் சிறப்பாக வெளிவர , எல்லாம் வல்ல செல்வ முத்துக்குமாரசாமியின் அருளையும் , மாசி பெரியசாமியின் அருளையும்,வேண்டுகிறேன். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *