துப்பாக்கி – திரை விமர்சனம்

‘ஸ்லீப்பர் செல்கள் 12 பேர் ஒரே நேரத்தில் நெற்றியில் சுடப்பட்டு மரணம்: மும்பையில் பரபரப்பு’ – ஆங்கில செய்தி ஊடகங்களும், தமிழ் செய்தி ஊடகங்களும் மாறி மாறி செய்தி சொல்வதோடு நகரமே ஏன் எதற்கு என்று தெரியாமல் அலைகழிக்கப்பட்டு இருக்கும் பொழுது அவர்களுடைய  ஜிகாதி தலைவன் (குல்மார்கில் இருக்கிறான்- முஸ்லிம் என்பது காட்சியில் வெளிப்படுத்தப்படுகிறது.  ‘head end’  என்று குறிப்பிடப்படுகிறான். பெயர் சுட்டப்படுவதில்லை), சக போராளிகளைக் கொன்ற உன்னைச் சந்திக்க வேண்டும் வருகிறேன் என மிரட்டுகிறான். கதையின் நாயகனான ராணுவ வீரரருக்கு. கதாநாயகன் விஜய் – காத்திருக்கிறேன் என்கிறார். அத்துடன் இடைவேளை விடப்படுகிறது.

அதன் பின்னர் பரபரவென்று நகரும் திரைக்கதையில் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். ஏழாம் அறிவில் சீன அராஜகத்தை அற்புதமாகப் பதிவு செய்த அதே இயக்குனர். தேசத்தைக் காக்கும் ராணுவ வீரரகள் எப்படி தங்கள் உயிரையும், தாங்கள் மிகவும் நேசிக்கும் குடும்பத்தார்களின் உயிரையுமே கூட பணயம் வைத்து நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கிறார்கள், எத்தைகைய ஆபத்தான சூழலில், தங்களின் சுக துக்கம் மறந்து, வேதனைகள் தாங்கி தன் இன்னுயிரையும் நல்கி இந்த தேசத்திற்கு சேவை செய்கிறார்கள் என்பதை துப்பாக்கி படத்தில் பதிவு செய்திருக்கிறார். அதற்காக நமது பாராட்டுக்கள்.

எல்லை காக்க நடந்த சண்டைகளில் உடல் உறுப்புகளை இழந்து எஞ்சிய காலங்களில் தங்கள் வாழ்க்கையையே பணயம் வைக்கும் அந்த மகத்தான ராணுவ வீரர்களுக்கு நாம் என்ன மரியாதை செய்கிறோம் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அவர்களுக்கு முன்பு நாம் அனைவரும் குற்றவாளிகளாக தலை குனிந்து நிற்க வேண்டும் என்பது போன்ற உணர்வை இந்த திரைப்படம் நுட்பமாக காட்சிப் படுத்தி இருக்கிறது. படத்தின் இறுதியில் ‘இந்தியாவைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு இப்படம் காணிக்கை’ என்று முத்திரை பதிப்பது பொருத்தமே.

ஆண்டு விடுமுறையில் பணிக்கு இடையில் தன் வீட்டிற்கு மும்பை வருகிறார் ராணுவ வீரரும் டிபென்ஸ் இண்டெலிஜென்ஸ் அதிகாரியுமான நாயகன். அப்போது எதேச்சையாக பேருந்தில் பயணிக்கும் போது, குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோர் பயன்படுத்தும் பொது போக்குவரத்தில் குண்டு வைத்து ஏழை அப்பாவி மக்களை கொன்று தங்கள் வெறியை தீர்க்க அஜ்மல் லத்தீஃப் என்ற கொடூர பயங்கரவாதி  குண்டுடன் பயணிக்கிறான். அதை எதேச்சையாக காணும் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் அதிகாரியான நாயகன் கண்டு பிடிக்கிறார். ஆனாலும் அதையும் மீறி நடுத்தர மக்களும், ஏழை மக்களும் அதிகம் பயணிக்கும் அந்த நெரிசல் மிகுந்த பேருந்து குழந்தைகள், பெண்களின் கதறலோடு வெடித்து பற்றி எரிகிறது.  பார்க்கும் நமக்கே இப்படி பற்றி எரிந்தால் 141 பேருக்கு மேல் படுகாயமும் 21 பேருக்கு மேல் செத்தும் போன அப்பாவி மும்பை மக்களுக்கு  எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்யவே மனம் பதறுகிறது.

அஜ்மல் லத்தீஃப் பின்னர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுகிறார், ஆனால் காவல் துறையில்  விலை போகக்கூடிய ஒருவனால் தப்பிக்கும் அஜ்மலை ராணுவ அதிகாரி கைப்பற்றி அவனை தூண்டிலாகக்  கொண்டும், அவனிடம் கைப்பற்ற பொருட்களைக்  கொண்டும் Star Tracking, Map Interpolating முறை மூலம் பயங்கரவாதிகள் மும்பை முழுக்க 12 இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டிருப்பதை ஊகிக்கிறார். அந்த பயங்கரவாதிகளை எப்படி களை எடுக்கிறார்கள் என்பதை அற்புதமாக வடித்திருக்கிறார் இயக்குனர்.

அப்பாவி மக்களை, குழந்தைகளை, பெண்களை, ஏழை எளிய மக்களை குண்டு வீசி அழித்தொழிக்கும் பயங்கரவாதிகளை களையெடுத்து மக்களை காப்பாற்றியதற்கு பரிசாக பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள், காவல் துறை அதிகாரிகளை மட்டுமல்லாமல் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும், பெண்களையும் எப்படி கொடூரமாக கடத்தி, கொலை செய்கிறார்கள் என்பதையும் சில காட்சிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார் முருகதாஸ்.

சீரியல் பாம் பிளாஸ்ட், சங்கிலி தொடர் வன்முறை, சங்கிலித்தொடர் பொருட்சேதம் என்பதை உலகில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் எப்படி முன்னெடுக்கிறார்கள் என்பதை பற்றிய டெனட் என்பவர் எழுதிய  கோட்பாடுகளை விரிவாக படித்து அதை காட்சிப்படுத்தி இருக்கிறார் ‘துப்பாக்கி’ இயக்குனர். அமெரிக்காவின் 9/11 சங்கிலித்தொடர் பயங்கர வாதம், லண்டன் ட்யூப் ரயில் பயங்கர தொடர் குண்டு வெடிப்பு, என்று பயங்கரவாதிகளின் ஆட்டம் உலகம் முழுவதும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. நம் நாட்டிலும் மும்பை தொடர் குண்டு வெடிப்பு,  ராஜஸ்தான் தொடர் குண்டு வெடிப்பு,  புனே தொடர் குண்டு வெடிப்பு,  மும்பை தொடர் பயங்கர வாத தாக்குதல், கோவை தொடர் குண்டுவெடிப்பு   என்று இந்தியா தொடர்ச்சியாக அந்நிய நேசம் கொண்ட அரக்க மனம் கொண்ட அருவருப்பான பயங்கரவாதிகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கிறது. இந்த கொடூரத்துக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று அரசுகள் திண்டாடிக் கொண்டிருக்கையில், ‘சீரியல் மர்டர் ஆஃப் ஸ்லீப்பர் செல்’ எனும் உத்தியை இப்படத்தில் ராணுவ வீர நாயகன்  முன்னெடுக்கிறார்.

httpsv://www.youtube.com/watch?v=83F2M6nxLvk

 ஸ்லீப்பர் செல் பற்றிய பரவலான அறிமுகம் அமெரிக்க உளவுத்துறையால் செப்டம்பர் 9/11 தாக்குதலுக்கு பிறகான விசாரணையில் வெளிப்பட்டது. செப்டம்பர் விமான தாக்குதலை முன்கூட்டியே கணிக்கத் தவறியதற்காக அதன் உளவு நிறுவனங்களான சி.ஐ.ஏ-வும்  எஃப்.பி.ஐ. யும் கடுமையாக சாட்டப்பட்டன. அப்போது ஜார்ஜ் டெனட்டுக்கு உதவியாக வந்த பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்களால் ஒரு திறப்பாக சொல்லப்பட்டு, அதை பின்தொடர்ந்து ஆராய்ந்து முகமது அட்டா-வின் ஸ்லீப்பர் செல் நெட்வொர்க் அலசி ஆராயப்பட்டு அது உறுதிப்படுத்தப்பட்ட பின் வெளியிடப்பட்டது.

அதன் பின் இது உலகம் முழுக்க இருக்கும் உளவுத்துறை நெட்ஒர்க்குகளில் பரிமாறப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, ஸ்லீப்பர் செல்களையும், அதன் ஹேண்ட்லர் என்று சொல்லப்படும் கீழ்நிலை ஒருங்கிணைப்பாளரையும் கண்டறியும் மென்பொருட்கள் உருவாக்கப்பட்டன. இதில் இஸ்ரேலின் மொசார்ட் அதிகாரிகள் மிக நுட்பமாக செயலாற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஸ்லீப்பர் செல் பற்றிய சென்சேஷன்களால் ‘ஸ்லீப்பர் செல்’ என்ற தொடர் உருவாக்கப்பட்டு 2 பாகங்களாக இது வரை ஒளிபரப்பப்பட்டு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒவ்வொரு பாகமும் 45 எபிசோடுகள் கொண்ட 60 நிமிட தொடராக வெளிவந்து அமெரிக்க சின்னதிரை உலகத்தை ஒரு கலக்கு கலக்கியது. TRP ரேட்டிங்கில் பல நாள்கள் முன்னணியிலேயே இருந்த சீரியல் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்பட்டதாக அதன் தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். Show time networkல் இடம் பெற்ற இந்த விழிப்புணர்வுத்  தொடர் ‘எம்மி’ விருதையும் பெற்றுள்ளது.

ஸ்லீப்பர் செல்களைப்பற்றி முதலில் தமிழில் பேச முனையும் திரைப்படம் என்ற அளவிலும், ‘துப்பாக்கி’ முக்கியத்துவம் பெறுகிறது. அது என்ன ‘ஸ்லீப்பர் செல்’ என்றால், இது தீவிரவாதத்தின் நவீன முகம். முதலில் எல்லாம், தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்தும், ஆஃப்கானிஸ்தானிலிருந்தும், சீனா போன்ற தேசங்களில் இருந்தும்  வந்து கொண்டிருந்தார்கள் . ஆனால் அவை செலவு அதிகம் பிடிக்கும்; பல தடைகளைக் கடந்து வருவதும் சிரமம்.  அதற்காக பயங்கரவாதிகள் கண்டுபிடித்த வழிமுறை தான் இந்த ஸ்லீப்பர் செல்கள்.

மேலும் ஸ்லீப்பர் செல்களை உபயோகித்து படுபாதக கொலைக் குற்றங்களை அரங்கேற்றுவதன் மூலம், குற்ற வாளிகளை நெருங்குவதும் மிகவும் கடினமான வேலையாக மாறுகிறது. Who is the king pin என்பதைக்  கண்டறிவது மிகவும் கடினமான பணியாக மாறக்கூடியது. சுருக்கமாக சொன்னால் இது ஒரு அவுட்சோர்ஸிங் டெக்னிக் (Terrorist outsourcing technique).

தொடர் குற்றச்செயல்களை pert, cpm மாதிரியான மேலாண்மை திட்டங்கள் மூலம் சிறு, சிறு திட்டக்குழுவாக வகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொன்றும் தொடர்பில்லாத வேறு, வேறு வகை நிகழ்வுகளாக பிரிக்கப்பட்டு, தொடர்பில்லாத பல பேரிடம் ஒப்படைக்கப்படும். அவரவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறு, சிறு வேலைகளை மட்டுமே செய்வர். யாருக்கும் திட்டத்தின் முழு வடிவம் என்ன என்று தெரியாது. திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதன் முழு வடிவமும் தெரியும். இது ஒரு ‘அசெம்ப்ளி லைன்’ பணிகள் போன்ற ஒழுங்குடன் செய்து கச்சிதமாக முடிக்கப்பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் உள்ள சிறிய உறுப்புகளாக இருப்பவர்களைத் தான் ‘ஸ்லீப்பர் செல்கள்’ என்பார்கள்.

இவர்களின் பணி வெடிகுண்டு வைப்பதாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வெடிகுண்டு வைப்பவருக்குத்  தேவையான டிபன் பாக்ஸையோ, அதில் பயன்படும் தூண்டல் உறுப்பை எடுத்துச் செல்பவராகவோ, வெடிகுண்டு வைப்பவனுக்குத் தேவையான மாட்டுக்கறி உணவை வாங்கிச் செல்பவராகக் கூட இருக்கலாம். அவர்களைப் பொருத்த வரை நாம் சார்ந்திருக்கும் மதத்திற்காக, தான் நம்பும்  சாம்ராஜ்யத்திற்காக, இறப்பிற்கு பின்னால் இருக்கும் சொர்க்கத்திற்காக, தன்  மார்க்க கடமைகளுக்காக, அல்லது ஏதோ ஒன்றிற்காகத்  தான் இந்த சிறு செயலை செய்கிறேன் என்ற பெருமிதம் மட்டுமே மிச்சம் இருக்கும். அதன் பின் விளைவுகளை அவர்கள் அறிய மாட்டார்கள்.

இந்த கடை நிலை உறுப்புகள் பெட்டிக்கடைக்காரராகவோ, மாட்டிறைச்சி விற்கும் கடைக்காரராகவோ, சலவை செய்யும் தொழில் வைத்திருப்பவராகவோ, பேப்பர் போடுபவராகவோ, செருப்பு கடை வைத்திருக்கும் நபராகவோ, டிபன் தூக்கிச்  செல்லும் டப்பா வாலாவாகவோ இருக்கலாம். ஏன் புத்தக கடை வைத்திருப்பவராகவும், கல்லூரியில் படிக்கும் மாணவனாக கூட இருக்கலாம். இவர்கள் மூலமாகவே கீழ்மட்ட வேலை செய்யப்படுகிறது.

இது அவர்களின் குடும்பத்திற்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.  மறைவிடத்தில்  இருந்து திட்டமிடும் பயங்கரவாதிகள் மாதுங்கா,  விக்டோரியா டெர்மினஸ்,  கேட்வே ஆப் இந்தியா, போவாய்,  அந்தேரி, தலால் ஸ்ட்ரீட் உள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் அதிகம் கூடும் இடங்களைத்  தேர்வு செய்து குண்டு வைக்க முயற்சிக்கிறார்கள். இதை நுட்பமாக அறியும் ராணுவ அதிகாரி விஜயும் அவரது சக ராணுவ வீர நண்பர்களும்,  உள்ளூர் காவல் துறை நண்பரும் இணைந்து,  புத்தகக்  கடை, கல்லூரி மாணவன், மொபைல் கடை, பேப்பர் கடை, பெட்டி கடை, பழக்கடை, டப்பாவாலா உள்ளிட்ட 12 ஸ்லீப்பர் செல்கள் சாதாரண மக்களோடு மக்களாக ஊடுருவி நாசகார வேலையை செய்ய இருக்கும் போது, அனைவரையும்  ஒரே நேரத்தில் சுட்டுக்கொன்று பரபரப்பை விதைக்கிறார்கள்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை தொலைக்காட்சியில் காட்டும் போது அப்பாவியான ஒரு குழந்தை பயங்கரவாதியான தன் தகப்பனை அடையாளம் கண்டுகொண்டு சொல்கிறது.  கல் நெஞ்சமுள்ள அந்தத  தாய் கதாபாத்திரம் குழந்தையின் வாயையும், கண்ணையும் மூடி உள்ளே அழைத்து செல்கிறாள். இதை ஓர்  அடையாளக் காட்சிப்படுத்துதல் மூலம் விளக்கி இருக்கும் இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவர்.

ஆயிரக் கணக்கான அப்பாவி  மக்களை குண்டு வைத்து  ஒழிக்க அனுப்பிய 12 பயங்கரவாதிகளை களை எடுத்தவர்கள்  யார் என்ற பரபரப்பு ஜிகாதி தலைவனுக்கும் ஏற்படுகிறது. அவர்களைப் பழிவாங்க பயங்கரவாத தலைவன் வருகிறான் நகருக்கு. அப்பாவி மக்களை காப்பதற்காக தன் உயிரைப்பற்றி கவலைப்படாமலும், தன் குடும்பத்தாரின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமலும்,  தன் குடும்பத்து பெண்களின் பாதுகாப்பைப்  பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர்களைக்  களை எடுத்த ராணுவ அதிகாரிகளின் குடும்பம் ஒவ்வொன்றாக துன்புறுத்தப்படுகிறது. புதிதாக திருமணம் ஆன இளம் ராணுவ வீரரின் குடும்பம்  அரக்கத்தனமாக, சிறிதும் ஈவிரக்கமின்றி வயது வித்யாசமில்லாமல் கொன்று ஒழிக்கப்படுகிறது.  பின்னர் 5 ராணுவ வீரர்களின் வீட்டுப்பெண்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்களை மீட்கையில் மேலும் 16 பயங்கரவாதிகள் வதம் செய்யப்படுகிறார்கள்.

இறுதியில் அவர்களின் அபாரமான திட்டமிடலின் மூலம் கமருதீன் எனும் பயங்கரவாதி உள்துறையின் முக்கிய அதிகாரியாக ராணுவ நிறுவனத்திற்குள்ளேயே ஊடுருவ இருப்பது தெரிய வருகிறது- அதுவும் ஜிகாதி தலைவன் வசம் கதாநாயகன் சிக்கி இருக்கும்போது. இதையும்  தேச பக்தி ராணுவ வீரரான கமாண்டர் ஜெகதீஷ் (விஜய் நடித்துள்ள கதாபாத்திரம்) முடித்து வைத்து,  கொடூர  பயங்கர வாதிகலை  கூண்டோடு வதம் செய்து விட்டு, விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்புகிறார்.

கதையின் நாயகனாக விஜய் நடித்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுக்கள். இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு அஞ்சி இப்போது இப்படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. ஆயினும் படம் எதிர்பார்த்தபடி மக்களிடம் பயங்கரவாத கொடுமை குறித்து அற்புதப் பதிவை ஏற்படுத்துகிறது. படத்தின் தொய்வு என்று பார்த்தால் டூயட் பாடல்கள் தான். மசாலாவுக்காக சேர்க்கப்பட்ட காதல் காட்சிகளும் பாடல்களும் இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னனும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஆனால்- ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டி இருக்கிறதே?

படத்தின் பல இடங்களில் லாஜிக் மீறல்களும் உண்டு. ஆனால் படத்தின் வேகத்தில் அது பெரிதாகத் தெரியவில்லை. படத்தின் தொகுப்பில் (எடிட்டிங்) குறைகள் உள்ளன. படப்பிடிப்பும் (சினிமாட்டோ கிராபி)  வசனங்களும் அருமை. பொதுவாக,  ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தீவிரவாதத்திற்கு எதிரான தங்கள் கடமையை செய்ய உறுதிமொழி எடுக்க ஊக்குவிக்கும் இந்த திரைப்படம் ஒரு வரவேற்கப்பட வேண்டிய முயற்சி.

3 Replies to “துப்பாக்கி – திரை விமர்சனம்”

  1. ஆசிரியர் குழுவிற்கு இந்த படக் குழுவை முஸ்லிம்கள் மேலும் நெருக்குவர். அதன் பொருட்டு இவ்விமர்சனத்தை நீக்க வேண்டுகிறேன். ராஜமாணிக்கம் பொறுத்தருள்க! உங்களோடு வேறுபாடு ஏதுமில்லை!

  2. இந்தியர்கள் அனைவரும் இந்தியர்களாகவே வாழ வேண்டும். வாழ்க பாரதம்.

  3. கட்டுரை ஆசிரியர் கூறும் லாஜிக் மீறல்களில் வணிக நோக்கத்திற்காக
    இணைக்கப்படும் காட்சிகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

    ஆனால் ஒரு இராணுவ அதிகாரி, அதுவும் இராணுவ உளவுத்துறை அதிகாரியுமான
    கதாநாயகன் தீவிரவாதிகளை அழிப்பதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. (1)
    உள்நாட்டு தீவிரவாதிகள் (வெளிநாட்டு உதவி பெற்றிருந்தாலும்) இந்தியர்களாக
    இருப்பதால் இராணுவ உளவுத்துறைக்கு வேலையில்லை. காஷ்மீர் போன்ற
    தீவிரவாத பிரதேசத்திற்கு மட்டும் இது விதி விலக்கு. (2) ஒரு இராணுவ
    அதிகாரியே தனியாக, தன் மேலதிகாரிகளின் அனுமதி பெறாமல்,
    தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பது சினிமாவில்தான்
    சாத்தியம்.

    ஆனால் ஒரே ஒரு காட்சியின் மூலம் இந்த லாஜிக் மீறலை சரிசெய்திருக்க
    முடியும். Brad Thor எழுதும் துப்பறியும் நாவல்களில் ஒரு வழி இருக்கிறது.
    அமேரிக்காவில், சட்டப்படி தீவிரவாதிகளையும், அவர்களின் அல்லக்கைகளையும்
    அழிக்க முனைகையில் சட்டமுறைமைகள் தடங்கல்களை ஏற்படுத்துகின்றன.
    ஆகவே இராணுவத்திலும், உளவுத்துறையிலும் வேலை செய்த சில நபர்களை
    ஒருங்கிணைத்து தனியார் பாதுகாப்பு கம்பெனி ஒன்று நடத்தப்படும். Targeted Killings
    என்று அழைக்கப்படும் சில தீவிரவாதிகளை அவர்கள் உலகில் எங்கு இருந்தாலும்,
    சட்டத்தைப்பற்றி கவலைப்படாமல் போட்டு தள்ளுவது நடத்தப்படும். இதை
    இராணுவ, உளவுத்துறையின் தலைவர்களே அந்த கம்பெனியின் மூலம் செய்து
    கொள்வதாக இந்த கதைகளில் வரும்.

    இதைப் போன்றே நம் உளவுத்துறையின் தலைவர் சில அதிநவீன பயிற்சிபெற்ற
    அதிகாரிகளைக் கொண்டு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டாக்கும்
    தீவிரவாதிகளை போட்டு தள்ளுவது, அந்த குழுவில் கதாநாயகனும் இருப்பதாக
    ஒரு வசனம் வந்து விட்டிருந்தால் நான் மேலே எழுதிய லாஜிக் மீறல்கள்
    இல்லாமல் இருந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *