அப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை

நாடாளு மன்றம் மீதான தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப் பட்ட  முகமது அப்சல் குரு ஒரு வழியாக, தில்லி  திஹார் சிறையில் பிப். 9-ம் தேதி தூக்கிலிடப் பட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டிலிருந்தே அப்சல் குரு மீதான தூக்கு  தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆயினும் சிறுபான்மையினரின் வாக்குவங்கி மீதான பாசத்தில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலம் கடத்தி வந்தது. அப்சல் தூக்கிலிடப்பட்டதை ”எதுவும் செய்யாமல் இருப்பதைவிட தாமதமாகவேனும் செய்தது நல்லது தான்” என்று விமர்சித்திருக்கிறார் குஜராத் முதல்வர் மோடி உண்மை தான்.

இந்த விவகாரத்தில் இதுவரை நடந்திருப்பதை  பின்னோக்கிப் பார்ப்பது இப்போது அவசியமாகி இருக்கிறது….

parliment01

2001-ம் ஆண்டு, டிசம்பர் 13-ம் தேதி: இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கறுப்புநாள். அன்று தான் நமது ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றம் அண்டைநாட்டிலிருந்து இயக்கப்படும்  பயங்கரவாதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ்-ஏ-முகமது, லஸ்கர்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்களைச் சார்ந்த ஐந்து பயங்கரவாதிகள் ஈடுபட்டனர்.

உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கான அடையாள அட்டைகளுடன் அத்துமீறி நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்த இந்த ஐவரும் கண்மூடித்தனமாக சுப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நமது மக்கள் பிரதிநிதிகளையே இலக்காகக் கொண்டு நாடாளுமன்ற அவைகளை நோக்கி பயங்கரவாதிகள் முன்னேறினர்.

par02ஆனால் நமது பாதுகாப்புப் படையினர் தீரத்துடன் போரிட்டு, அந்த முயற்சியை முறியடித்தனர். எனினும் இந்தப்  போராட்டத்தில் நமது வீரர்கள் 7 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்; பத்திரிகையாளர் உள்பட மேலும் இருவர்  உடன் கொல்லப்பட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நமது வீரர்கள் பயங்கரவாதிகள் ஐவரையும் சுட்டு வீழ்த்தினர்;  நமது நாடாளுமன்றமும் மக்கள் பிரதிநிதிகளும் காப்பாற்றப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதல் நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே எதிரிகள் நுழைய முடிந்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்தன. விசாரணையின் இறுதியில், எல்லை கடந்த பயங்கரவாதம் குறித்து  நாடு அறிந்தது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் வைத்திருந்த உடைமைகள், தொலைபேசித் தொடர்புகள் மூலமாக, இந்தத் தாக்குதலுக்கு தலைநகர் தில்லியிலேயே ஒரு குழு உள்நாட்டில் பணியாற்றி உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், காஷ்மீரில் இயங்கிய ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சார்ந்த முகமது அப்சல் குரு, டில்லி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, அப்ஷான் குரு என்ற பெண் அவரது கணவர் சௌகத் ஹுசேன் குரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் பல பயங்கரத்  தகவல்கள் வெளிவந்தன. உள்நாட்டு முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுக்கும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையிலான வலைப்பின்னல் இந்த வழக்கில் தான் அம்பலமானது. 2002, ஜூன்  4-ல் குற்றவாளிகள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

par03வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இறுதியில் 2002, டிசம்பர் 18-ம் தேதி, அப்ஷான் குரு தவிர்த்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்சன் (பெண்மணி) மட்டும் விடுவிக்கப்பட்டார். “பல நபர்களை கொன்ற நாடாளுமன்றத் தாக்குதல் நிகழ்வு நாடு முழுமையையும் ஆட்டுவித்த ஒன்றாகும்; மேற்படி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினால் மட்டுமே சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சிக்கும்  நிறைவு கிடைக்கும்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதில் வேதனை என்னவென்றால், தண்டனை பெற்ற இரண்டாவது குற்றவாளியான கிலானிக்கு ஆதரவாக நமது ஆங்கில ஊடகங்களும் இடதுசாரிகளும் மதச்சார்பற்றவர்களும் நடத்திய பிரசாரம் வழக்கின் உறுதிப்பாட்டையே கேள்விக்குறி ஆக்கியது.  இந்தத் தாக்குதலில் பிரதானமான மூளையாக செயல்பட்ட ஜெய்ஸ்-ஏ-முகமது இயக்க நிர்வாகி காஸி பாபா காஷ்மீரின் ஸ்ரீநகரில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 2003, ஆகஸ்ட் 30-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

2003, 2அக்டோபர் 3-ம் தேதி, கிலானியின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தணடனையை ரத்து செய்து, அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. இதனை நமது மதச் சார்பற்ற அறிவிஜீவி வட்டாரங்கள் கொண்டாடி மகிழ்ந்தன. உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள்  தொடர்ந்த மேல்முறையீட்டில், 2005, ஆகஸ்ட் 4-ம் தேதி, அப்சல் குரு மீதான மரண தண்டனை மட்டும் உறுதிப்படுத்தப்பட்டது. சௌகத் ஹுசேனின் தூக்கு தண்டனை 10 ஆண்டு சிறைத் தணடனையாகக் குறைக்கப்பட்டது. அவரும் தனது சிறைத் தண்டனை முடித்து, 2010, டிசம்பரில் விடுதலையாகிவிட்டார்.

இந்நிலையில் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை 2006, செப்டம்பர் 26-ம் தேதி மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அப்சலின் மனைவி தபசும் குரு ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அதே ஆண்டு அக்டோபரில் கருணை மனு அனுப்பினார். பிறகு, தன்  மீதான தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு அப்சல் குரு சார்பில் மீண்டும் மனு செய்யப்பட்டது.

அதை 2007, ஜனவரி 12-ம் தேதி, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.  ‘அதற்கான தகுதி (Merit)  அப்சலுக்கு இல்லை’ என்று நீதிபதி குறிப்பிட்டார். ஆயினும் நமது அரசு அப்சலை தூக்கில் போட முனையவில்லை. ஜனாதிபதியும் கருணை மனு விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

par04
இதுகுறித்து தில்லி  மாநில அரசின் கருத்தை அறிய விரும்புவதாக ஜனாதிபதி கலாம் அனுப்பி வைத்தார் அந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டது. 2010, மே 19-ம் தேதி, தில்லி மாநில அரசு, அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு ஜனாதிபதிக்கு விளக்கம் அளித்தது. அதன் பிறகும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த இடைக்காலத்தில் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பொறுப்பேற்றிருந்தார்.

நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு தவிர்த்து வருவதாக பாஜக நீண்ட நாட்களாகவே பிரசாரம் செய்துவந்தது. நாட்டு மக்களின் மனசாட்சியாக இந்த விவகாரத்தை விடாமல் எதிரொலித்துக் கொண்டிருந்தது பாஜக. ஆயினும், மத்திய அரசு அர்த்தமுள்ள மௌனம் சாதித்து வந்தது.

கடந்த 2012, நவம்பர் 21-ம் தேதி மும்பை தாக்குதலில் தொடர்புடைய அஜ்மல் கசாப் என்ற பாகிஸ்தானியருக்கு ஏரவாடா சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போதே, அப்சலின் தண்டனையையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது. நாடாளுமன்றத்தில் அடிக்கடி இதுகுறித்த விவாதம் கிளம்பி அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியபோதும் பிரதமர் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

இதனிடையே, 2012, டிசம்பரில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சுஷீல்குமார் ஷிண்டே, அப்சல் குரு விவகாரத்தில் என்ன செய்வது என்று அரசு ஆராயும் என்று குறிப்பிட்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி, அப்சலின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். அப்சலின் தூக்கு தண்டனைக்கு இருந்த ஒரே தடைக்கல்லும் அகன்றது. இப்போது பயங்கரவாதி அப்சல் குரு தில்லி, திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.parl05

சட்டத்தின் நடைமுறைப்படி, அவருக்கு அனைத்து வழிமுறைகளும் அளிக்கப்பட்டு, நமது ஜனநாயகத்தின் சிறப்பு நிரூபிக்கப்பட்டது. அவர் செய்த குற்றத்துக்கும், நமது சட்ட நடைமுறைகளில்  உள்ள உச்சபட்ச தண்டனையான மரண  தண்டனை  நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

காலம் கடந்தேனும் இந்த தண்டனை இப்போது நிறைவேற்றப்ப்பட்டதற்குக் காரணம், நடப்பாண்டில் நாடாளுமன்றத் தேர்தலை  காங்கிரஸ் சந்திக்கத் தாயாராவதன் உத்தியே என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் நல்லது என்ற முடிவுக்கு ஆளும் கட்சி வட்டாரங்கள் வந்திருப்பதாக கடந்த மாதமே செய்திகள் உலா வந்தன. வரும் அக்டோபரில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளால் தடுமாறும் மத்திய அரசு, கசாப் தூக்கு தண்டனை நிறைவேற்றம் மூலமாக தனது தோற்றத்தை மாற்ற முயன்றதும், அதை காங்கிரஸார் கொண்டாடியதையும் நாடு அறியும். இப்போது, மக்களிடம் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க சாகசங்களில் இறங்க மத்திய அரசு முயன்று வருகிறது. விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிலும் மக்கள் மீது சுமைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

எது எப்படியோ, நாட்parl06டின் ஜனநாயக கோவிலைத் தகர்க்க முயன்ற சதிகாரர்களுக்கு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டிருப்பது ஓர் எச்சரிக்கையே. அரசியல் லாபம் கருதி இந்த நடவடிக்கையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எடுத்திருப்பினும், வரவேற்கத் தக்கதே.

கொடிய பயங்கரவாதிகளுக்கு நமது நாடு பணியாது என்பதும் இதன்மூலமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த தண்டனை நிறைவேற்றத்தை உறுதிப்படுத்தி மத்திய அரசை வழிநடத்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தேச மக்கள் சார்பில் நன்றி.