ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7

முந்தைய பகுதிகள் :    பகுதி 1/ பகுதி 2 / பகுதி 3 / பகுதி 4 / பகுதி 5 / பகுதி 6

aanma01கிளிஞ்சல்-வெள்ளி உபமானம் கொண்டு “அத்வயம்” ஆன பிரம்மத்திற்கு விளக்கம் கொடுக்கும்போது இருபொருள்-ஒருபொருள் பற்றியும் விளக்க வேண்டியதாயிற்று. அதனால் இன்னும் பல உபமானங்கள் கொண்டு உலகம் மற்றும் பிரம்மத்தின் தன்மையை விளக்குவார்.

 

8. उपादानेsखिलाधारे  जगन्ति परमेश्वरे |

सर्गस्थितिलयान् यान्ति बुद्बुदानिव वारिणि ||

 

உபாதானேகிலாதாரே ஜகந்தி பரமேஸ்வரே |

சர்கஸ்திதிலயான் யாந்தி புத்புதாநிவ வாரிணி ||

 

முதற் காரணமாய் முழுதின் ஆதாரம்

அதுவாம் பரேசன் அகத்தே – உததி

உதிகுமிழிகள் போல் உலகங்கள் எல்லாம்

உதித்து இருந்து ஓயும் உணர்

 

கடலின் மேல்பரப்பிலே தோன்றி மறையும் நீர்க்குமிழிகள் போல, முழுமுதல் காரணமாகவும் அனைத்துக்கும் ஆதாரமாகவும் விளங்கும் பரமேஸ்வரனிடத்தில், அனைத்து உலகங்களும் உதித்து, நிலைபெற்று, இறுதியில் அழிந்தும் போகும் என்பதை நன்றாக உணர்ந்துகொள்.

 

எந்த ஒரு பொருளுக்கும், செயலுக்கும் அவை ஏற்பட பல காரணங்கள் இருக்கும். ஒரு குயவன் பானையைச் செய்யும்போது அதற்கு பல விதமான பொருட்களும் தேவை என்றாலும் அவைகளுள் மண் மூலப் பொருளாய் உள்ளதால் அது முதற் காரணம் (உபாதான காரணம்) எனப்படுகிறது. பானையைச் செய்யும் குயவனின் புத்தியிலேயே அதை உருவாக்கப் போகும் திட்டம் உள்ளதால் குயவனை நிமித்த காரணம் என்று சொல்வார்கள். அப்படிப் பார்க்கும்போது, நீர் குமிழி ஒன்று கிளம்புவதற்கு தண்ணீர்தான் முதல் காரணமாக அமைகிறது. அந்த நீர்க் குமிழியின் வாழ்க்கைச் சக்கரத்தை வைத்துக் கொண்டு இங்கு மேலும் விளக்கம் வருகிறது.

 

நீரின் மேற்பரப்பில் புறப்பட்டு எழும் நீர்க்குமிழியை அது கிளம்பும் நீரை விட்டுவிட்டுத் தனியே பார்க்க முடியுமா? எப்படி அது நீரிலிருந்தே புறப்பட்டு, நீரிலேயே சில நொடிகள் இருந்து, பின்பு அது வெடித்துச் சிதறும்போது நீரிலேயே கலக்கிறதோ அதே போன்று பிரபஞ்சமும், அதில் உள்ள அனைத்தும் முழு முதற் காரணமான பரமேஸ்வரனிடத்தில் இருந்து புறப்பட்டு, அவனுடனேயே இருப்பதை அறியாதபோதும் அவனுடனேயே இருந்து, மறையும் போதும் அவனுடனேயே கலக்கின்றன.

 

நீர்க் குமிழியைப் பொருத்தவரை, முன்பு நாம் பார்த்த சத்தியமாக இருக்கும் அதிஷ்டானப் பொருளும், கற்பிதமாகத் தோன்றும் ஆரோபிதப் பொருளும் என்னவென்று பார்த்தால் நீரிலேயே பிறந்து, வளர்ந்து, மறைந்தும் போவதால் ஆதாரமாக இருக்கும்போது நீரே அதிஷ்டானமாகவும், பார்க்கப்படும்போதும் நீரையும் குமிழியையும் பிரிக்க முடியாததால்  நீரே ஆரோபிதமாகவும் ஆகிறது. ஆக நீர்தான் எல்லாமாக இருப்பதால் இங்கு அதுவே உள்ள பொருள் ஆகிறது. அதைப் போன்றே பல உலகங்களும், அதில் உள்ள பொருட்களும், இறைவனிடத்தே உருவாகி, இறைவனால் இருந்து கொண்டு, மறையும் போதும் இறைவனிடமே சென்றடைவதால் என்றும் உள்ள இறைவனாம் பிரம்மமே அனைத்துக்கும் முதல் காரணம் மட்டும் அல்லாது நிமித்த காரணமாகவும் ஆகிறது என்பதை நன்கு உணர்வாயாக.

aanma2

இந்த மூன்று தொழில்களான தோன்றல்-இருத்தல்-அழிதல் எல்லாவற்றிற்குமே முழுமுதற் காரணமாக பிரம்மம் இருப்பினும், மூன்றிலும் ஒன்றைக் குறிப்பாகச் சொல்வதற்கு மூன்று பெயர்களைப் பயன்படுத்துவதற்கு “தடஸ்த லக்ஷணம்” என்று பெயர். ஒரு மாணவன் கேட்டு, படித்து, எழுதி ஒன்றை அறிய முயலும்போது குறிப்பாக அவன் செய்வதைச் சொல்வதற்காக கேட்கும் மாணவன், படிக்கும் மாணவன், எழுதும் மாணவன் என்று ஒரே மாணவனைக் குறிப்பிடுவது போலத்தான் இது. அது போல ஆக்கல்-காத்தல்-அழித்தல் என்ற மூன்று தொழில்களிலும் ஒரே பிரம்மம் காரணமாய் இருந்தாலும், தடஸ்த லக்ஷணத்தின் படி பிரம்மன்-திருமால்-சிவன் என்று மூன்று முழுமுதற் கடவுளர்களைக் குறிப்பிடுவார்கள்.

 

 

9. सच्चिदात्मन्यनुस्युते नित्ये विष्णौ प्रकल्पिताः |

व्यक्तयो विविधाः सर्वा हाटके कटकादिवत्  ||

 

சச்சிதாத்மன்யனுஸ்யுதே நித்யே விஷ்ணோ பிரகல்பிதாஹா |

வ்யக்தயோ விவிதாஹா சர்வா ஹாடகே கடகாதிவத் ||

 

சச்சிதானந்தன் சகலத்தும் உள் உள்ளான்

இச்சனாம் விஷ்ணு நிலைதன்னில் – சொச்சமாம்

பொன்னில் கடகாதி போலும் பல் தோற்றமெலாம்

அந்நியன் அன்று என்று அறி

 

aanma3வளையல், காப்பு, மோதிரம் என்று கற்பனைத் திறனால் பலப்பலவாக உருவாகும் ஆபரணங்கள் எல்லாமே தங்கம்தானே அன்றி வேறல்ல. அது போலவே, சச்சிதானந்த வடிவாகி, பரந்து வியாபித்து அனைத்தின் உள்ளும் நிலைகொள்வதாலேயே, உலகில் உள்ளவைகள் அனைத்தும் பலவிதமாகத் தோன்றினாலும், அவை அனைத்தின் ஆதாரமாய் விளங்கும் பிரம்மத்திற்கு அந்நியன் ஆகாது என்று அறிந்துகொள்.

 

முந்தைய ஸ்லோகத்தில் பிரம்மத்தின் “தடஸ்த லக்ஷணம்” சொல்லப்பட்டது என்றால் இந்தப் பாட்டில் அதன் “சொரூப லக்ஷணம்” விளக்கப்படுகிறது. உண்மையில் இருப்பது ஒன்றானாலும் அதுவே பலப்பலவாகக் காட்சியளிக்கிறது என்பதை, எல்லோரும் தெரிந்து வைத்திருக்கும் உபமானம் கொண்டு விளக்குகிறார். நாம் முன்பு வேண்டியபடி தட்டான் ஒருவன் நம் வீட்டிற்கு வந்து, “அம்மா, நீங்கள் கேட்டிருந்தபடி வளையலும், மோதிரமும் செய்து கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்வானா, அல்லது தங்கத்தை எடுத்து வந்திருப்பதாகச் சொல்வானா? அவன் கொண்டு வந்திருப்பதின் மதிப்பை நிர்ணயிப்பதே அந்தத் தங்கம்தான் என்றாலும், சொல்லப்படுவது என்னவோ குறிப்பிட்ட நகைகளைப் பற்றித்தான். காரணம் நாம் பேசுவதும், மனத்தில் இருத்திக் கொள்வதும் பொதுவாக நாம் காணுவதைப் பற்றித்தான். ஆனாலும் அதன் ஆதாரமாய் இருப்பது தங்கம்தான், அதனால் அதற்கு மதிப்பு கிடைப்பதும் தங்கத்தினால்தான். ஆக ஒன்றைக் கண்டால் அதன் மதிப்பு எதனால் வருகிறது என்றும், அதன் ஆதாரமாய் என்ன இருக்கிறது என்றும் பார்ப்பதே அறிவுடையவனின் செயல்.

 

எந்தப் பொருளுக்கும் ஐந்து அம்சங்கள் சொல்லப்படும் என்று “திருக்-த்ருசிய விவேகம்” என்ற கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன:

1 . (அஸ்தி) இருப்பு – அது எப்படி இருக்கிறது?

2 . (பாதி) பிரகாசம் – அது என்ன மாதிரி ஒளி தருகிறது?

3 . (ப்ரியம்) இன்பம் – அது என்ன வகையான இன்பத்தைத் தருகிறது?

4 . (நாமம்)  பெயர் – அது என்ன பெயரால் குறிப்பிடப்படுகிறது?

5 . (ரூபம்)  உருவம் – அது என்ன வடிவத்துடன் காணப்படுகிறது?

 

பிரம்மம் எப்போதும் இருப்பதால் அதை “சத்” என்றும், அது தானே அறிவாய் இருந்து அனைத்தையும் உணரவைப்பதால் அதை “சித்” எனப்படும் உணர்வாகவும், உணர்வான அது எப்போதும் உள்ளதால் வேறு எதையும் தேட வைக்காது சதா சர்வ காலமும் ஆனந்தத்தை அளிப்பதால் அதுவே “ஆனந்தம்” என்றும் சொல்லப்படுகிறது. அது எல்லா உயிர்களினுள்ளும் பரவி வியாபித்து உள்ளதாலும், அதற்கு மேல் வேறு ஒன்றும் இல்லையாதலால், மேலே சொல்லப்பட்ட ஐந்தில் முதல் மூன்றும் பிரம்மத்தின் லக்ஷணங்கள். எந்தப் பெயரிலும், உருவத்திலும் உணர்வாக உள்ளதே பிரம்மம்.

 

aanma04உலகத்தில் உள்ள பொருட்களைப் பார்த்து, உணரச் செய்வதற்கு ஒருவன் தேவை. அவன் இருப்பதற்கு முழுமுதற் காரணமே பிரம்மம் என்பதால், கடைசி இரண்டு லக்ஷணங்களும் பிரம்மத்தை வர்ணிக்காது. அவை இரண்டும் பிரம்மத்தின் உதவியால் பார்க்கப்படும் மற்றப் பொருட்கள் அனைத்தின் லக்ஷணங்கள். பிரம்மம் இல்லையென்றால் அவைகளை அறிய முடியாது என்பதால் பிரம்மத்தைப் பொறுத்தவரை நாமமும், ரூபமும் மாயை எனப்படுகின்றன.

 

தங்கம் என்ற மூலப் பொருள் இருந்தால்தான் அதற்குச் செய்யவேண்டிய முறையில் எல்லாம் செய்து, ஒரு உருவமும் கொடுத்து ஒரு பெயரும் கொடுக்க முடிகிறது. தங்கத்தை உருக்கி வளைத்து கைகளில் அணிவதுபோல் அமைத்து அதற்கு வளையல் என்ற பெயரும், மெலிதாக நீட்டி வெவ்வேறு மணிகள் கோர்த்ததுபோல் செய்து அதற்கு சங்கிலி என்ற பெயரும் கொடுக்க முடிகிறது. தங்கமே இல்லையென்றால் அந்த உருவமும், பெயரும் எப்படி இருக்க முடியாதோ அது போல ஒருவன் இல்லை என்றால் பார்ப்பதற்கோ, அனுபவிப்பதற்கோ உலகமும் இல்லை, அதில் உள்ள பொருட்களும் இல்லை. அந்த ஒருவன் இருப்பதற்கு மூல காரணமாய் இருப்பது பிரம்மம் என்றால், அந்தப் பிரம்மம் இல்லாதபோது உலகம் இல்லை என்றாகிறது. அதனால் பிரம்மமே சத்யம், பார்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் மாயை என்றாகிறது.

 

பார்ப்பதற்கு வளையலாகவோ, சங்கிலியாகவோ எப்படி இருந்தாலும் அவை தங்கமாக எப்போதும் இருப்பதால், அவைகள் தங்கத்தையன்றி வேறு அல்ல. அதேபோல், உலகமும் அதைச் சார்ந்த அனுபவங்களும் பிரம்மம் இல்லாது காணப்படாததால் அவைகளும் பிரம்மத்தை அன்றி வேறு அல்ல. இந்த நோக்கில் பார்க்கும்போது உலகம் உண்மையாகிறது. பிரம்மத்தை பிரித்துப் பார்க்கப்படும் உலகம்தான் உண்மையல்ல. ஒவ்வொரு சாதகனும் இதன் பொருளை நன்கு உணரவேண்டியது அவசியம்.

 

 

10. यथाकाशो हृषीकेशो ननोपाधिगतो विभुः |

तद्भेदाद्भिन्नवद्भाति तन्नाशे केवलो भवेत्  ||

 

யதாகாஷோ ஹ்ருஷிகேஷோ நநோபாதிகதோ விபுஹு |

தத்பேதாத்பின்னவத்பாதி தன்னாஷே கேவலோ பவேத் ||

 

விண்ணிலே போல விளங்கு ஈசனில் தோன்றும்

எண்ணில் உபாதி இசைந்த விபு – அண்ணலும் அப்

பேத உபாதிகளால் பின்னன் போல்வான் அவை

போதலும் பூன்றப் பொருள்

 

எங்கும் விரிந்து நிறைந்து இருக்கும் ஒரே ஆகாயம் தோற்றங்களினால் பிளவுபட்டது போலக் காணப்படுகின்றது. அது போல எங்கும் நிறைந்திருக்கும் ஈசன், தன்னில் தோன்றும் எண்ணில் அடங்காத உடல்களை அடைந்து, எப்போதும் ஒன்றாய் உள்ள அவன் பலப்பலவாகத் தோற்றம் அளித்து, அந்த உடல்களின் மறைவுக்குப்பின் பூரணப் பொருளாக விளங்குவான்.

 

ஒரு பொருள், வேறு ஒரு பொருளின் சேர்க்கையால் மாறாவிட்டாலும், வேறு மாதிரியாகக் காணப்படுவதை “உபாதி” என்பார்கள். அந்தச் சேர்க்கையால் மூலப் பொருள் வேறாகத் தோன்றுவதை தடுத்து அதை உள்ளபடியே பார்ப்பதற்கு, அதனுடன் சேர்ந்திருக்கும் பொருளை நீக்க வேண்டும். கிளிஞ்சலில் வெள்ளி தோன்றியதை தடுக்க அதன் மேல் படும் ஒளியை அகற்ற வேண்டும். சூரியனை மேகம் மறைத்துக் கொண்டிருந்தால் மேகம் விலக வேண்டும். அப்போது மூலப் பொருளின் உண்மை  சொரூபத்தை அறிய முடியும்.

 

இந்த ஸ்லோகத்தில் ஓர் எல்லைக்கு உட்பட்டதற்கும் பரந்து விரிந்ததற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டி பிரம்மத்தின் தன்மையை விளக்குகிறார். ஆகாயம் என்று இங்கு கூறப்படுவது நம் தலை மேல் இருக்கும் வெறு வெளி என்று மட்டும் கொள்ளாது, நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் வெற்று இடத்தையும் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். நம் முன்னால் ஒரு குடமோ, பானையோ வைக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் பானையைச் சுற்றிலும் உள்ள ஆகாயத்திற்கும், பானையின் உள்ளே உள்ள ஆகாயத்திற்கும் என்ன வித்தியாசம்? சுற்றிலும் உள்ளது பரந்து விரிந்திருக்க, பானையின் உள்ளே உள்ளது பானையின் உருவத்தில் இருக்கிறது என்று சொல்லலாமா? அதாவது ஆகாயம் துண்டாடப்பட்டு உள்ளிருப்பது அதன் ஒரு பின்னம் என்று சொல்லலாமா? அப்படியென்றால் நாம் பானையை அப்போது உடைத்துவிட்டால், அதன் உள்ளே உள்ள ஆகாயம் வெளியே உள்ளதுடன் கலந்து ஒன்றாகிவிட்டது என்றா அர்த்தம்? பரந்து விரிந்து உள்ள ஆகாயம் இப்படி ஒரு பானையின் சேர்க்கையினால் துண்டாடப்பட்டது போலத் தெரிவது உண்மையில் என்ன என்று சாதகன் யோசிக்க வேண்டும்.

aanma05

உண்மையில் ஆகாயம் எப்போதும் இருப்பதுபோல்தான் இருக்கிறது. பானையின் உள்ளும், வெளியும் இருப்பது அதே ஆகாயம்தான். அங்கு இரண்டு ஆகாயமாகத் தெரிவதும், பானை உடைந்ததும் ஒன்றாகச் சேர்வதுபோல் தெரிவதும் நம் மனதில் ஏற்பட்டுள்ள தோற்றங்களே. பானையும் இருக்கிறது, அதற்கு உள்ளேயும் வெளியேயும் ஆகாயம் இருக்கிறது என்பது உண்மையானாலும், இவ்விரண்டு ஆகாயங்களும் வேறு வேறு என்பதோ, பானை வந்ததால் ஆகாயம் இரண்டாகி அது போனதால் பின்பு ஒன்றானது என்பனவோ உண்மையல்ல.

 

இந்த உபமானத்தை வைத்துக்கொண்டு ஜீவ-ஈஸ்வரத் தத்துவத்தை இங்கு விளக்குகிறார். ஈசனாகிய பிரம்மம் எப்போதும் இருக்கும்படியே இருக்கிறது, சீவராசிகளாகிய நாம்தான் அவ்வப்போது அவரிடத்தில் தோன்றி, வளர்ந்து அவரிடமே நீர்க்குமிழிகள் போல் மறைகின்றோமே தவிர, ஈசனுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறார். ஆனாலும் அப்படித் தோன்றும் நாம்தான் குடத்திற்கு உள்ளே இருக்கும் ஆகாயம் போல் ஒரு தனித்துவம் இருப்பதாக நினைக்கிறோமே தவிர, உண்மையில் அப்போதும் நாம் ஈசன்தான் என்று இங்கு அர்த்தம் கொள்ள முடிகிறது.

 

அதை உணரமுடிந்தால் அந்தப் பரம்பொருளாகவே எப்போதும் இருப்போம், ஏதோ தனித்து விடப்பட்டவர்கள் போல் தவிக்கமாட்டோம். இதுவே முக்தி நிலை. இது அறிவுபூர்வமாய் நின்று விடாது அனுபவத்தில் வரவேண்டும். தனித்து விடப்பட்டதாக நினைக்கும் குட ஆகாசமாகிய ஒவ்வொருவரின் நிலையும் இதுதான் என்பதால், ஒருவனுக்குத் தன்னைச் சுற்றியுள்ளோரையும் ஈசனாக நினைக்கும் மனோ பாவம் வளர வளர தானும் ஈசன் என்ற அனுபவம் தன்னாலே வாய்க்கும் என்று ஆன்றோர்கள் அருளியிருக்கின்றனர்.

 

எங்கும் நிறைந்திருக்கும் ஆகாயம் போல் என்று சொல்லிவிட்டு, ஈசனைக் குறிக்க ஹ்ருஷிகேசன் என்று சொல்வதிலிருந்து இன்னுமொரு அம்சமும் வெளிப்படுகிறது. ஹ்ருஷிகேசன் என்பதற்கு “புலன்களை வென்றவன்” எனப் பொருள் வருவதால்், புலன்களை அடக்கி ஆண்டு அவைகளின் தலைவனாக இருப்பவனே எங்கும் நிறைந்து இருக்கும் தன்மை கொண்டவன் ஆக முடியும் என்றாகிறது. புலன்களின் வழிச் செல்பவன், அவை அளிக்கும் குறுகிய கண்ணோட்டத்திலேயே நின்று தனியன் ஆகிறான். புலன்களை அடக்கி ஆளும் பயிற்சிகள் எல்லாம் அவனது தனிமையை நீக்கி, எங்கும் நிறையச் செய்யும் வழிகளில் அவனைச் செலுத்தும்.

aanma06

எப்போது அவன் தனிமை நீங்குகிறதோ அப்போதே அவன் பரிபூரணமாய் இருந்து, உள்ளொளி சுடர் விட்டு எரிய, யாதுமாகி நிற்கிறான். அதாவது ஒருவன் தன் ஐம்புலன்கள் காட்டும் வழியில் மட்டும் சென்று அதனால் விளையும் அகங்காரத்தினால் தான் தான் எல்லாம் என்று தன்னை பெரிதாக நினைத்துக்கொண்டு தன்னைக் குடம் அளவில் மட்டும் நிரப்பிக் கொள்ளலாம், அல்லது புலன்களை அடக்கி தன்னை குறுக்கிக்கொண்டு எல்லாமே தான் என்று அகன்று விரிந்து எல்லா இடத்திலும் நிறையலாம்.

 

(தொடரும்)

 

4 Replies to “ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7”

  1. தெளிவான விளக்கங்கள் கொண்ட கட்டுரைத்தொடர். திரு இராமன் அவர்களுக்கும், வெளியிடும் தமிழ் இந்துவுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்.

  2. இது போன்ற ஆன்ம சிந்தனையை அர்லிகொண்டிருப்பதற்கு நன்றி.

    தொடர்க உங்கள் தொண்டு.

    நன்றி.

  3. திரு.ராமன் அவர்கள் தந்துள்ள விளக்கங்கள் அபாரம், அற்புதம். மனம் என்னும் குரங்கை விலக்காமல் பிரம்மத்தை அறியமுடியாது என்பது உண்மை. என்னால் முடியாது. வேறு ஏதாவது குரங்கை வைத்துக்கொண்டே அந்த நிலையை அடையமுடியுமா என்ற ஆராய்சிதான் முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *