பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3


<< முந்தைய பகுதி

ன் பயணங்களின் நோக்கம் சேரும் இடங்களையோ, பார்க்கும் இடங்களையோ பற்றி சிலாகிப்பதும் அதன் வரலாறு, முக்கியத்துவம் இவற்றை சொல்வது மட்டுமன்று. இந்த பயணம் தான் நான் சொல்ல விரும்பும் செய்தி. இந்த பயணம் எனக்கு அளிக்கும் தரிசனம். என் மனச் சித்தரிப்புகளை, என் நம்பிக்கைகளை மாற்றுவதற்கு, உதறி கலைத்து நெசவு செய்வதற்கு, இந்த தேசத்தின் அகத்தையும், புறத்தையும் உணர்வதற்கு என் ஆசானால் வழிகாட்டப்பட்ட ஆப்தம் தான் இந்த பயணம். வித விதமான மனிதர்கள், வித்யாசமான நிலவியல் அமைப்புகள், வேறுபட்ட பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், கடவுள்கள், வழிபாட்டு முறைகள், மொழிகள், இன்னும் எத்தனையோ முரண்கள். ஆனாலும் இவர்களை என்னுடன் இணைக்கும் இழை என்பது கண் கூடாக தெரிகிறது. தென்னாடுடைய என் சிவன் இவர்களுக்கும் கருணை செய்கிறான். ஞானப்பால் கொடுத்த என் தாயார் பார்வதியின் அருள் இவர்களுக்கும் மேன்மையை அளிக்கிறது. கோகுலத்து கண்ணனும், சீதா ராமனும் இவர்களுக்கும் உயிருக்கு மேல். சிலர் ஏசுவையோ, முகமது நபியையோ, இன்னும் தெரியாத யார் யாரையோ வணங்குகிறார்கள். அவர்களுக்கும் என் ஈசனும், ராமனும் கருணையை அமுதமாக்கி பொழிகிறார்கள்.

hindu_fair_girls_performing_homamஒரு மிக சாதாரண இந்துவான என்னுடன் இவர்கள் அனைவரையும் இணைக்கும் இழையாக உயர்ந்த இந்து தர்மமே இருக்கிறது. இந்த தர்மம் என்பது எப்படி ஒரு வாழ்க்கை முறையாக, வேள்வியாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டே இருந்தேன். இந்து தர்மம் என்பது ஒரு மகா யக்ஞம். அதற்கு தெரிந்தும் தெரியாமலும் ஒவ்வொரு பாரத தாயின் புதல்வர்களும் பங்களித்துக் கொண்டே இருக்கிறார்கள். தாங்கள் இடும் பிச்சையால், பசித்த தாவரத்திற்கு ஊற்றும் நீரின் மூலமாக, தேவைப்படும் குழந்தைக்கு கொடுக்கும் கல்வியின் மூலமாக, அன்னமிடுதல் மூலமாக, அமைதியான வாழக்கை முறை மூலமாக, நேர்மை நெறியின் மூலமாக, விருந்தினரை போற்றுதல் மூலமாக, அன்னை தந்தையை நேசிப்பதன் மூலமாக, அறத்தோடு வாழ்வதன் மூலமாக, தர்ம யக்ஞத்திற்கு நாளும் நாளும் தன் செயல்கள் மூலமாக நெய் வார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மகா யக்ஞம் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தன் காரியங்களாலும், தன் தர்மத்தாலும் ஒரு சாதாரண இந்து தன்னை மேலும் மேலும் தூய்மைப் படுத்தி கொள்கிறான். இதை அறிந்தும் அறியாமலும், உணர்ந்தும், உணராமலும் அனைவரும் செய்கிறார்கள். இது இந்த தர்மத்தை என்றும் பூமியில் நிலைத்திருக்க செய்யும் என்ற நம்பிக்கையை ஆழமாக விதைத்திருக்கிறது.

என் பயணங்களுக்கு முன்னால் எனக்கு சில பயங்கள், கவலைகள் இருந்தன. இவ்வளவு காலம் கட்டி காப்பாற்றப்பட்டு வந்த தர்மம், பண்பாடு இவை எல்லாம் கட்டாய மத மாற்றங்களாலும், அழுகிப்போன சில மூட சிந்தனைகளாலும் அழிக்கப்பட்டு போய்விடும் என்றும், நம் தர்மம் இன்னும் கொஞ்ச நாளில் அழிந்து விடுமோ என்றும். நாம் ஏன் இப்படி வாளாவிருக்கிறோம். இந்து மதத்தை காக்கவென்று தனிப்பட்ட படைகள் கூட இல்லையே என்றெல்லாம் மனம் நொந்து விரக்தியில் இருந்திருக்கிறேன். என் ராமனை, கிருஷ்ணனை, ஈசனை , சரஸ்வதியை இழிவு செய்கிறவர்களை எந்த விதத்திலும் நம் பெரியவர்கள், சிந்தனை வாதிகள், முன்னோடிகள் யாரும் ஒன்றும் திட்டவே மாட்டேன் என்கிறார்கள். இவர்களை யாரும் தண்டிக்கவே மாட்டார்களா?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை முக்கியமான அமைப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இதை பற்றி கேட்டால் அமைதியான புன்சிரிப்பை உதிர்த்து விட்டு ராமனுக்கும், சிவனுக்கும் நாம் செய்யும் உண்மையான அன்பு என்பது மானுட சேவை தான் என்று சொல்லி விட்டு அடுத்த வேலையை பார்க்க போய் விடுகிறார்கள். பெரிய படிப்பு எல்லாம் படித்து விட்டு பழங்குடி கிராமங்களில் குழந்தைகளுக்கு கல்வி போதிக்க வனவாசி கல்யாண ஆசிரமத்திற்கு போகிறார்கள். ஆனால் அவர்கள் திக திமுக பாணி கீழ்த்தரமான மன வக்கிர வெளிப்பாடுகளை ஏன் கண்டிப்பதில்லை? கிறிஸ்ததவ மிஷனரிகள் போல சின்ன அளவில் காரியம் செய்து விட்டு பெரிய அளவில் விளம்பரமும் செய்து கொள்வதில்லை? இப்படித்தான் இந்த ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், வனவாசி கல்யாண ஆசிரமம், விவேகானந்தா கேந்திரா போன்றவை ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று ஆதங்கப் பட்டிருக்கிறேன். அதற்கு விடை என் பயணங்களில் கிடைத்தது. காலம் தோன்றி, உயிரினங்களும், தாவர இனங்களும் தோன்றி அதற்கு அறிவின் முதல் வெளிச்சம் பட்ட நாள் முதல் இருக்கும் வாழ்க்கை முறையான இந்து தர்மத்தை நிச்சயம் யாராலும் அழிக்க முடியாது. இது ஒரு நீடித்த வேள்வி. மிகப் பெரிய யக்ஞம். காலத்தையே தனக்கான குண்டமாக கொண்டு எரிந்து வருகிறது. இதை நம்மால் காப்பாற்றவோ,வளர்க்கவோ முடியாது. மானுட பிரயத்தனங்களுக்கு அப்பால் உள்ள தூய ஞானம் தான் இந்து தர்மம். இந்த பூமியில் பிற உயிர்க்காக இரங்கும் ஒருவன் இருக்கும் வரையில் இந்த தர்மம் நீடிக்கும் என்ற நம்பிக்கையை இந்த பயணங்கள் எனக்கு அளித்தன.

புவனேஸ்வரின் கந்தகிரியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு ஒரிஸ்ஸாவின் மாபெரும் கலை அற்புதமான கோனார்க்கின் சூரியனார் கோயிலை நோக்கி பயணத்தை தொடர்ந்தேன். புவனேஸ்வர் இப்பொழுதெல்லாம் மிகவும் நெருக்கடியான ஒரு நகரமாக மாறி விட்டது. உயர்ந்த கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், சாலையை அடைக்கும் வாகனப் பெருக்கங்களால் மூச்சு திணறுகிறது . மற்ற இந்திய நகரங்களைப் போலவே அபரிமிதமான வளர்ச்சியை தனதாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வில் செழுமையை கொண்டு வந்திருக்கிறது . இந்தியப்பெரு நகரங்களுக்கிடையே வித்யாசங்களை கண்டு பிடிப்பதே இன்னும் சிறிது காலத்தில் கடினம் என்றே நினைக்கிறேன். எல்லா பகுதி மக்களும் காணக்கிடைக்கிறார்கள். பாரதத்தில் புழங்கும் பல மொழிகளும் இங்கே கேட்க கிடைக்கின்றன. புவனேஸ்வரிலிருந்து 65 கிலோ மீட்டரில் உள்ள புகழ்பெற்ற கோனார்க் நகரை அடைந்தேன். இனிமையான, எளிய ஒரிய மதிய உணவை முடித்து கொண்டு கோவிலை நோக்கி விரைந்தேன். தூரத்தில் இருந்தே காணக்கிடைக்கும் திராவிட பாணி விமானம் தான் என் முதல் ஆச்சரியம். ஆனால் இதை பற்றி எழுதும் அனைவரும் இது கலிங்க பாணி என்றே குறிக்கிறார்கள் இதில் திராவிட பாணியின் அடிப்படை அறிவு வேரோடி கலந்து கிடைக்கிறது. திராவிட பாணி விமானத்தில் நான்கு பக்கம் என்பது ஒரு அடிப்படையான சிந்தனை (basic idea).உதாரணமாக காஞ்சிபுரம் கைலாச நாதர் கோவில், கர்னாடகவின் பட்டடக்கல் விருபாக்‌ஷர் ஆலயம், தஞ்சை பெரிய ஆவுடையார் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் உள்ளிட்ட காலத்தால் முற்பட்ட ஆலய பாணி விமானமே சூரியஷேத்திரத்தின் மூல விமான பாணி.

Konark_Sun_Temple_11087

அதன் உச்சி கலசம் (key stone) பன்னிரண்டு வயது தர்ம பாதாவால் நிலை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தலைமை சிற்பியான பிக்‌ஷி மகராணா கோயில் மீதிருந்து குதித்து கடற்கரையில் உயிர் நீத்ததாக தொன்மம் நிலவுகிறது. இந்த முறையிலான விமான மேல்புறம் திராவிட மற்றும் வேசர பாணியின்  தனி சிறப்பு பெற்ற கலவை என்றே கூறலாம். கைலாச நாதர் ஆலயமும்,தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழ புரம் மட்டுமின்றி எல்லோராவில் உள்ள கல் குகையில் உள்ள கைலாச நாதர் ஆலயத்தின் விமானத்திலும் இந்த திராவிட பாணியின் தாக்கத்தைக் காணலாம். காந்தார சிற்பிகள் எவ்வளவு சிறப்பு பெற்றிருந்தார்களோ, அவ்வளவு சிறப்பை திராவிட சிற்பிகளும் பெற்றிருந்தார்கள். வேசர பாணி விமானங்களும், நாகரா பாணி விமானங்களும் மத்திய பாரதம் மற்றும் வடக்கு பகுதிகளை ஆட்சி செய்யும் விமானங்கள். நான் சென்றிருந்த ஜனவரி21 ம் தேதி உலகம் முழுக்க இருக்கும் சூரிய வழிபாட்டு மரபினர் தங்கள் பிரார்த்தனைகளை சூரியனிடம் தெரிவிக்க கோனார்க்கில் கூடுகிறார்கள். பெரிய அளவில் பிரார்த்தனைகளும், ஆராதனைகளும் வெளி எங்கும் நிறைந்திருந்தது. சூரிய வழிபாடு என்பது இன்று முழுக்க முழுக்க இந்து மதத்தின் ஒரு அங்கமாக மாறி விட்டது. ஆனால் செளரம் என்ற வழிபாட்டு முறை தனித்துவம் மிக்கது. ஆதி சங்கரர் தொகுக்கும் முன் செளர வழிபாடு மிகவும் செல்வாக்காக உலகம் முழுதும் நீடித்து இருந்து வந்திருக்கிறது. எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க நாகரீகங்களிலும், மாயன், அஸ்டெக், சுமேரிய நாகரீகத்திலும் சூரியக் கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. இன்றும் உலகம் முழுக்க சூரிய வழிபாடு இருந்த ஆலயங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி பின்னால் சொல்கிறேன்.

கோனார்க்கின் இந்த சூரிய க்ஷேத்திரம் பொ.பி. 1238-1264 ல் ஆட்சி புரிந்த கீழை கங்க மன்னர் நரசிம்ம தேவரால் கட்டப்பட்டது. 12 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 1200 க்கும் மேற்பட்ட சிற்பிகளின் மேலான கலை வெளிப்பாடு இது.

Wheel_of_Konark,_Orissa,_India

கோயிலின் அமைப்பு என்பது ஒரு மிகப்பெரிய காலம் எனும் தேரில் பவனி வரும் சூரிய தேவன். ஏழு குதிரைகளும், 24 சக்கரங்களும் கொண்ட காலம் எனும் தேரில் பாய்ந்து பயணிக்கும் சூரியன். அவனுக்கு காலத்தால் அழியாத இசையாலும், கலையாலும் அர்ப்பணமும் அஞ்சலியும் செலுத்தும் முன்புற நாத மண்டபம். அண்டப் பெருவெளியில் காலம் எனும் தேரில் கடந்து போகும் சூரியன். அவனுடைய தேரை அலங்கரிக்கும் வாழ்வின் பல்வேறு நிலைகள். இந்த தேர் முழுக்க காலத்தை வெல்லும், இல்லாமலக்கும் இசையும், நடனத்தையும், சிருங்காரத்தையும் சேர்த்து அமைத்த மெய்கள். பல்வேறு விதமான இசைக் கருவிகள், வேறு வேறு விதமான தாளகதிகள், அனந்த கோடி நடன மங்கைகள், ஆயிரம் ஆயிரம் நடன முத்திரைகள். போர் காட்சிகள், பிரமிக்க செய்யும் யானைகள், கானகங்கள் , இயற்கை அமைப்புகள், எல்லாமே காலத்தை இல்லாமலாக்கும் காட்சிகள் தான். அனந்த கோடி நிகழ்வுகளின் நடனமே காலம் எனும் தேரை செலுத்துகின்றன என்பதான சித்திரமாக இது இருக்கிறது. இந்த நடன மாதரசிகளின் களி நடனமும், இசையும் காலத்தை நகர்த்துகிறது. காலங்காலமாக இந்த பெரு நடனம் முடிவில்லாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. காலச்சக்கரங்களாக கடிகாரங்களையும் பலவிதமான  நாட்டிய ,இசை சிற்பங்களையும் சக்கரத்தில் வடித்து காலத்தேரின் ஓட்டத்திற்கு துணை செய்வதாக உருவகித்திருக்கிறார்கள். இந்த பிரபஞ்ச லீலை காட்சியாக கருக்கொண்டு உயிர் பெற்றிருக்கிறது.

சூரியன் படைப்பின் கடவுள். போகம் படைப்பின் கருவி . சிருங்காரத்தின் வழியாக மானுட மனங்கள் போகம் எனும் நிலையிலிருந்து படைப்பு எனும் மேலான ஆக்கத்திற்கு பயணம் செய்கிறது. அதனின்றும் தாண்டி படைப்பின் வழியாகவே இறை நிலையை அடைவதாகவே இவை சித்தரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் மானுட மனத்தின் உச்ச இறை நிலையை அடைவதற்கான குறியீடுகளை விளக்குவதற்காக குறிக்கப்பட்டு நமக்கு சொல்லப்படுகின்றன. போகத்தில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் மெய் மறந்து ஆழ் நிலையில் பிரமித்து உறைந்து போனவர்களாகவும், உற்சாகத்தில் பொங்கி கொப்பளித்து பிரவாகித்து வரும் காமக்கடும் புனலால் செலுத்தப்பட்டு கொண்டிருப்பவர்களாக நிலை பெற்று இருக்கிறார்கள்.

konark01மனித உடலின் அபாரமான சாத்தியங்கள். நடன அசைவுகள், உடலே இசைக்கருவியாக மாறி தீராத படைப்பின் சங்கீதத்தை இசைக்கும் சிருங்கார சிற்பங்கள். மலர் சூடும் மங்கைகள், ஒப்பனையை சரி பார்க்கும் இளம் பருவ தோழிகள், சதங்கைகளை ஒயிலாக சரி செய்யும் நடன மணிகள். தன் இணையின் அழைப்பிற்கு திரும்பி பார்க்கும் தேவிகள். நீரில் முகம் பார்க்கும் அரசிகள். நுணுக்கத்தின் இலக்கணமாய் அவர்களின் ஆபரணங்கள். ஆடைகளின் மடிப்புக்கள், பல்வேறு வகையான நடன , நாட்டிய சாத்திய கூறுகள் . இசைக்கருவிகளுடன் தோன்றும் கின்னர்கள், யட்சர்கள், அடர் கானகங்கள், மனதை கொள்ளை கொள்ளும் யானைகள். யானைகளின் அணிவகுப்புக்கள். யானைக்கூட்டங்கள், யானைகளின் ஆபரணங்கள், யானைகளின் மீதான போர் சாத்தியங்கள். யானைகளின் வித்யாசமான நடைகள், ஓட்டங்கள், வேறுபட்ட துதிக்கை நிலைகள். யானைகளின் மீது பெரும் மோகம் கொண்டு யானையாலேயே உலகத்தையே நிறைக்க வேண்டும் என்ற ஆவேசத்தோடு செய்யப்பட்ட சிற்பங்கள்.

இந்த யானைகளின் மீதான மோகத்தை சாதாரணமாக ஆந்திராவிலிருந்து ,ராஜஸ்தான் வரை அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கண்டு கொண்டே செல்லலாம். அவ்வளவு யானைகள் நம் வனங்களை அலங்கரித்திருக்கின்றன. ஒவ்வொரு கோவிலுலும் மிகக்குறைவாக ஒரு 10 ஆயிரம் யானைச் சிற்பங்களையாவது காணலாம். அவ்வளவு நுட்பமாகவும் , அழகாகவும் நிஜ யானைகள் இறங்கி வந்ததை போன்ற தத்ரூபத்துடன் காணப்படும். அதுவும் விளையாடும் யானைகள், துரத்தும் யானைகள், கூட்டத்தில் இருந்து விலகி ஓடும் யானை. இதில் எல்லாமும் திருப்தி அடையாமல் வெளியே நான்கு திசைகளிலும் பிரமாண்டமான அலங்காரத்தோடு கூடிய போஷாக்கான குட்டி யானைகள். எத்தனை யானைகள் வடித்த பிறகும் மகத்தான சிற்பிகளுக்கு இன்னும் நாம் யானைகளை பற்றி சொல்வதற்கு இருக்கும் தீராத ஆசையின் விளைவாகவே மேலும் மேலும் யானைகளை சித்தரிக்க இருக்கும் சிறு வாய்ப்புகளை கூட தவற விடாத மோகம் .

kon3கோவிலின் 20 அடி உயர முதல் அடித்தளத்தின் மேல், கீழ் பேனல்கள் போர் சித்தரிப்புகளாகவும், யானை அணிவகுப்பாகவும் இருக்கிறது. இடையில் ஆயிரக்கணக்கான இசைக்கச்சேரிகளும், நடன கச்சேரிகளும், நடன அரங்கேற்றங்களும் அரங்கேறுகிறது . திருப்பங்களில் வித்யாசமான சிருங்கார சிற்பங்கள், வித விதமான யாளிகள், குட்டி யானைகள். வித்யாசமான பூமிக்கும் ,ஆகாயத்திற்கும் இடையே நீளும் தோரண அலங்காரங்கள். சிறிய நுணக்கங்களோடு பல்வேறுபட்ட தாவர, செடி, கொடிகளின் கலந்து பட்ட ஆகச்சிறந்த சாத்தியங்கள். ஒரே நேரத்தில் நடக்கும் மாபெரும் பிரபஞ்ச லீலையின் நடன அசைவுகளை கைப்பற்றி அவற்றை சிற்பங்களாக வடித்து நிறுவ  நடந்த முயற்சியாகவே இது தெரிகிறது. அப்புறம் குறிப்பிட்டு சொல்லும் படியானவை நாகர்கள், நாகர் உலக தொன்மங்கள், விதவிதமான நாகலோக மனிதர்கள், நாக கன்னிகைகள். அவர்களின் இசை முயற்சிகள், தாள உத்திகள், நடனங்கள், நாக கன்னிகளின் அபிநயங்கள்,  நாகமாக மாறி பின்னி பிணைந்து முயங்கும் படைப்பின் அற்புதங்கள் .

konark_lion_killing_elephantசில இடங்களில் தலை காட்டும் ஒட்டகங்கள் . அரண்மனை புறப்பாடுகள். உப்பரிகையில் தோன்றும் கன்னிகள். கூட்டாக கலவியில் லயிக்கும் சிற்பத்தொகுதிகள் என பார்க்க பார்க்க புதிது புதிதுதாக துலங்கிக்கொண்டே இருக்கும் ஆச்சரிய அற்புதம் தான் இதன் கீழ் தொகுதி முழுவதும். அடித்தளத்தின் முன்புறம்  யானையை வெற்றி கொண்டு தாவும் சிம்மம். இது கலிங்கர்களின் போர் வெற்றியை குறிப்பதாக இருக்கலாம்.

ஒரு 40 அடி அலங்கார படிகளை கடந்து மேலேறினால் வானத்திற்கும் , பூமிக்குமாய் உயர்ந்து நிற்கிறது சூரிய ஆலயம். நான்கு திசைகளிலும் ஏழு வண்ணங்களை, ஏழு நாள்களை, ஏழு ஸ்வரங்களை, ஏழு ரிஷிகளை, ஞானத்தின் ஏழு படி நிலைகளை, மெய்மையின் தரிசனத்தை, ஏழு உலகங்களை, ஏழு பிறவிகளை, ஏழு கடல்களை, ஆட்சி செய்யும் சூரியன் காலத்தின் தேரில் ஏறி விரைவதை சித்தரிக்கும் சிற்பங்கள் இருக்கின்றன. இதன் சிதைந்த தன்மை நமக்கு சொல்ல விழைவது இது இன்னும் சொல்ல வரும் பிரபஞ்ச உண்மைகளை நோக்கி நம்மையும் முயற்சிக்க சொல்கிறது. அதற்கு மேல் திராவிட கலிங்க பாணி விமானம்.

konark2கோவிலில் பல ஆண்டுகளாக சூரிய வழிபாடு நடை பெறுவதில்லை.  ஆனால் நான் சென்றிருந்த பொழுது பெரும்பாலும் மஞ்சள் உடையுடனும், செம்பட்டாடையுடன் சிலரும் உக்கிரமான மன எழுச்சியோடும், உணர்வோடும் ஆலயத்தை வலம் வந்தனர். சில ஆச்சர்ய கரமான செய்கைகளை வானத்தை நோக்கி செய்தனர். அனைவரும் கோஷமிட்டனர். வழிபாடு தடை செய்யப்பட்டிருந்த, மூடப்பட்டிருந்த மூலஸ்தானம் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.  உணர்வு பூர்வமாக அவர்கள் சூரிய தேவனை அங்கேயே தரிசித்து விட்டு அவருக்கான படையல்களையும் செய்தனர். தங்கள் பிரார்த்தனைகளையும் , நன்றியையும் தெரிவித்து விட்டு முழு அமைதியுடன் திரும்பி நடந்தனர். அவர்களுக்கு இந்த சிலைகளோ, சிற்பங்களோ, சிருங்காரமோ எதுவும் பாதித்ததாக புறப்பார்வைக்கு தெரிய வில்லை. ஆனால் அவர்களின் அகம் சூரியனையும், இந்த இதர தத்துவங்களையும் உள்வாங்கி உணர்ந்தே இருக்கும் என்று தோன்றுகிறது. நமக்கெல்லாம் புரிந்தும், உணர்ந்தும் இருக்கும் தத்துவங்கள் அவர்களுக்கு ஆழ் மனக்குகையின் வேறு ஒரு தளத்தில் துலங்கி வேறு ஒரு விசித்திரமான பொருளை அவர்களுக்கு உணர்த்தலாம். இல்லாமல் மேலான எளிய உண்மையை கூட அவர்களுக்கு தெரிவித்திருக்கலாம். இந்து பாரம்பரியத்தின் பன்முகத்தன்மை வாய்ந்த வாழ்க்கை முறையே ஒரு ஆச்சரிய கரமானதும், புதிர்த் தன்மை வாய்ந்ததும், ஆழமானதும் அதே நேரத்தில் எளிமையை தன்னகத்தே கொண்டிருக்கும் அதிசயம் .

ஏராளமான சுற்றுலா பயணிகளாலும், யாத்ரீகர்களாலும் கோவில் ததும்பிக்கொண்டே இருக்கிறது. செம்மை ஏறிய இந்த சிற்பங்கள் அபாரமான மன எழுச்சியையும் ஆனந்த கண்ணீரையும் வரவழைத்து கொண்டே இருக்கிறது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது இதன் வடிவம் ஒரு விதமான சித்திரத்தையும் பிரமிப்பையும் அளிக்கிறது. பின் சிறிது அருகில் வரும் போது அதன் பிரமாண்டமும், தோற்றமும், நிறமும், இயற்கை ஒளியில் அது மின்னும் தோரணையும் ஒரு விதமான காட்சி மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் அதன் உச்சம் அருகில் வரும் போது அதன் சிற்பத்தொகுதிகளும், நடனங்களும் ஏற்படுத்தும் மன மகிழ்ச்சி . இதை கண்டு ஆனந்திக்கும் , வெட்கப்படும் , ஆச்சரியப்படும் சக மனிதர்களை பார்க்கும் போது ஒரு மகிழ்வு. இதன் நுணக்கங்கள் விதைக்கும் ஆச்சரியங்கள். யானைகளின் விளையாட்டு ஏற்படுத்தும் துள்ளல், யானைகளின் சித்தரிப்புகள் தரும் புன்சிரிப்புடன் கூடிய குதூகலம். அத்தனையும் ஆச்சரியம். இந்திய தொல்லியல் துறைக்கு ஒவ்வொரு இந்தியனும் கடன் பட்டிருக்கிறான். அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றி. பாரதிய பாரம்பரியத்தில் நிவந்தங்கள் அளிக்கும் போது சந்திரர், சூரியர் உள்ள வரை இவை தொடர வேண்டும் என்றும், சாவா ஆடுகள் என்றும் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த படைப்புகள் எனக்கு அப்படியே தான் தோற்றமளிக்கின்றன. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்பி 800 வருடங்கள் கழிந்தும் காலம் தெரியாமல் ஏதோ ஒரு கால வெளியில் பார்க்கும் ஒருவனுக்கு தன் அபாரமான படைப்பூக்கத்தால் மகிழ்ச்சி ஊட்டுவதற்காக செய்தவை இந்த நிவந்தங்கள்.

கால வெளியில் அவன் படைப்பூக்கத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் அழிவே இல்லை.

பயணம் தொடரும்…

rajamanickam_veera

 

கட்டுரை ஆசிரியர் வீர.ராஜமாணிக்கம் திருப்பூரைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர். தமிழக பா. ஜ.க இளைஞரணி செயலர்களில் ஒருவர்.

தமிழ் மரபு, சைவ சித்தாந்தம், வரலாறு, கலாசாரம், பயணங்கள் ஆகியவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். தீவிர இலக்கிய வாசகர். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

5 Replies to “பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3”

  1. கால வெளியில் அவன் படைப்பூக்கத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் அழிவே இல்லை……………..

  2. பயண்நூல்களைப் படிப்பதில் எனக்கு மிக்க ஆர்வம். நான் போகும் இடங்களைப் பயணநூலாசிரியனின் கண்களைக் கொண்டு காண்பதில் இன்பமும் அறிவும் பெறுகின்றேன். அவற்றில் திரு இராஜமாணிக்கம் அவர்களின் ப்யணம் புதிய அனுபவத்தைத் தருகின்றது. தெய்வபக்தியும் தேசியப் பற்றும் செறிந்த பயணம். கட்டுரையாசிரியருக்கு என் மன நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

  3. \\\\தென்னாடுடைய என் சிவன் இவர்களுக்கும் கருணை செய்கிறான்.\\\\\

    மிகவும் ஆவலுடன் சிவராத்ரியன்று என்னாட்டவர்க்கும் உரிய இறைவனான தென்னாடுடைய சிவபெருமானைப்பற்றி ஏதாவது ஒரு வ்யாசம் நமது தளத்தில் பதிவேறும் அதை வாசிக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.

    எண்ணங்கள் சில க்ஷணங்கள் சசாங்க சேகரனின் திருத்தாள்களில் செல்ல இயலுமே வ்யாசத்தை வாசிக்குங்கால்.

    \\\\சிலர் ஏசுவையோ, முகமது நபியையோ, இன்னும் தெரியாத யார் யாரையோ வணங்குகிறார்கள். அவர்களுக்கும் என் ஈசனும், ராமனும் கருணையை அமுதமாக்கி பொழிகிறார்கள்.\\\\

    மிக அழகாய் உயர்வான ஹிந்து பாரம்பர்யத்தைச் சொல்லும் வாசகம். அருமை.

    ஸர்வதேவ நமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி

    யாரைத் தொழினும் தொழுதல் கேசவனைப் போய்ச் சேருகிறது என்று மரபார்ந்த ஒரு ச்லோகம் சொல்கிறது.

    \\\\ஆனால் அவர்கள் திக திமுக பாணி கீழ்த்தரமான மன வக்கிர வெளிப்பாடுகளை ஏன் கண்டிப்பதில்லை? கிறிஸ்ததவ மிஷனரிகள் போல சின்ன அளவில் காரியம் செய்து விட்டு பெரிய அளவில் விளம்பரமும் செய்து கொள்வதில்லை?\\\\

    ****ஏன் கண்டிப்பதில்லை?**** என்று இல்லாது அவரவரால் இயன்ற படிக்கு வக்ரமான வெளிப்பாடுகளைக் கண்டிப்பதில் எல்லோரும் சுணக்கமில்லாது ஈடுபடவேண்டும்.

    மனதில் உறுதியும், சிந்தனையில் தெளிவும், மானுடத்தில் ஆழ்ந்த பரிவும் இருக்கையில்………..

    வக்ரங்களைக் கண்டிப்பதில் ஈடுபடவேண்டும் என்று முனைந்தால் நாம் தனியே செல்ல மாட்டோம்.

    தனித்து வழி நடக்கும் என
    திடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அருகு அடுத்து இரவு
    பகல் துணை அதாகும்

    என பழனிப்பதிவாழ் பாலகுமாரன் நம் கூடவே உற்ற துணையாய் இருப்பான் என்பது என் அனுபவம்.

    \\\\புவனேஸ்வரின் கந்தகிரியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு ஒரிஸ்ஸாவின் மாபெரும் கலை அற்புதமான கோனார்க்கின் சூரியனார் கோயிலை நோக்கி பயணத்தை தொடர்ந்தேன்.\\\\

    ம்…… புவனேஸ்வர் என்றவுடன் *லிங்கராஜ் மந்திர்* பற்றிச் சொல்வீர்கள் என நினைத்தேன்.

    கூடவே வருகிறோம் உங்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் பாரதத் தாயைப் பணிந்து வணங்குவதிலும்..

  4. “கோவிலில் பல ஆண்டுகளாக சூரிய வழிபாடு நடை பெறுவதில்லைஆனால் நான் சென்றிருந்த பொழுது பெரும்பாலும் மஞ்சள் உடையுடனும், செம்பட்டாடையுடன் சிலரும் உக்கிரமான மன எழுச்சியோடும், உணர்வோடும் ஆலயத்தை வலம் வந்தனர். சில ஆச்சர்ய கரமான செய்கைகளை வானத்தை நோக்கி செய்தனர். அனைவரும் கோஷமிட்டனர். வழிபாடு தடை செய்யப்பட்டிருந்த, மூடப்பட்டிருந்த மூலஸ்தானம் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. உணர்வு பூர்வமாக அவர்கள் சூரிய தேவனை அங்கேயே தரிசித்து விட்டு அவருக்கான படையல்களையும் செய்தன”

    திரு ராஜமாணிக்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. நேரில் பார்ப்பது போல் இருந்தது .

    கோயில்கள் வெறும் சிற்பத்தொகுப்புகள் அல்ல. இக்கோயிலும் ஒரு காலத்திய உணர்வு பூர்வமான வழிப்பாட்டிடமாக இருந்திருக்க கூடியது.

    எதனால் இன்றைய மூலஸ்தானம் மூடப்பட்ட நிலையோ தெரியாது.

    “. சில ஆச்சர்ய கரமான செய்கைகளை வானத்தை நோக்கி செய்தனர்”

    சூரிய நமஸ்காரம் போன்றா? முத்திரைகள் போன்றா ? தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுகிறது.

    இன்றைக்கு ஹிந்து மதம் எனப்படுவது, ஒரு காலத்தில் வேத மதம் ,சனாதன தர்மம் என்று உலகெங்கும் பரவி இருக்கையில், சூரிய வழிபாடு முதன்மையாக இருந்திருக்க வேண்டும்.
    இஷ்வாகு வம்சத்தினர் தங்களை சூரிய குல தோன்றல்கள் என்கிறார்கள். காயத்ரி மந்திரமும் சூரியனை போற்றுகிறது என்கிறார்கள்.

    இன்றைக்கு நாமும் வருடம் ஒரு முறை உணர்வு பூர்வமாக சூரியனை போற்றிப் பொங்கல் கொண்டாடுகிறோம்.

    சாய்

  5. ஆசிரியர் அவர்களின் தொடர் அருமையாக உள்ளது.

    ஒரு காலத்தில் இந்த இடங்களை நாங்கள் பார்க்க முடியும் போது தாங்கள் குறிப்பிடும் விஷயங்களை ஆழ்ந்து கவனிக்கத் தோன்றும். எல்லா சுற்றுலா பயணிகள் போல அல்லாமல் பிரத்யேகமாக சில விஷயங்களை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *