இன்று போய் நாளை வா – எதற்கு?

images

கம்பன் பாடலில் வரும் ”இன்று போய் நாளை வா” என்ற சொற்றொடர் மிகவும் புகழ் பெற்றது. பல மேடைப் பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் மேற்கோளாகக் காட்டப்படும் கம்பனின் பாடல்வரிகளில் மிக முக்கியமான ஒரிடத்தை இச்சொற்றொடர் வகிக்கிறது. இதைப் பற்றிச் சற்று ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தபோது ஒர் எண்ணம் எழும்பியது. அதுதான் இக்கட்டுரைக்கான தீப்பொறி.

இராவணனை , இன்று போய் நாளைக்கு வா என்று இராமன் கூறியது எதற்காக?

மறுநாளும் வந்து, இன்று அவமானப்பட்டு நிற்பது போல நாளையும் நிற்கவேண்டும் என்பதற்காகவா? இதையா இராமன் விரும்பினான்?

அல்லது,இன்று தழுவாதிருந்த மரணத்தை நாளை வந்து தழுவுவதற்காகவா?

கேவலம் , இந்தஇரண்டு காரணங்களுக்காகவா இராமன் நாளைக்கு வா என்று இராவணனிடம் கூறினான்?

இவ்வாறு சிந்திக்கத் தொடங்கிய பின்னர் , வேறு ஏதேனும் நோக்கம் இராமனுக்கு இருந்திருக்கக் கூடுமோ என்று யோசிக்கத் தொடங்கினேன்.இந்தச் சிந்தனையை மனதில் கொண்டு, மீண்டும் இந்தக்கட்டத்தில் கம்பன் வடித்த பாடல்களைப் படித்துப்பார்க்கும் போது,வேறொரு நோக்கமும் இராமனுக்கு இருந்திருக்கக்கூடும் என்று தோன்றியது. அந்த மாற்று நோக்கம் என்ற பின்புலத்தில் கம்பனின் பாடல்களை மீண்டும் படித்தபோது, அந்த மாற்று நோக்கத்தால் மட்டுமே, இராமன் இன்று போய் நாளை வா என்று சொல்லியிருக்க வேண்டும் என ஒரு உறுதியான முடிவுக்கு நான் வந்தேன்.  அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் குறிக்கோள்.

கம்பனே தன் பாடலில்,  போர்க்குநாளை வா என்று சொல்லிவிட்டானே அப்புறம் நீ வேறு என்ன நோக்கம் இருந்திருக்குமோ என்று ஆராயப்புகுகிறாய் என்று பலர் கேட்பது என் செவியில் விழுகிறது. ஆம். உண்மைதான் .”போர்க்குஎன்ற சொல் கம்பனின் பாடலில் இடம் பெற்றுள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவ்விதம்பாடலில் அச்சொல் இருப்பதை மட்டுமே வைத்துக்கொண்டு , நாளை வரச்சொன்னது மீண்டும் போரிடத்தான் என்பதை நிரூபித்துவிட முடியாது. அதை மறுக்க இடமுள்ளது என்பது என் கருத்து.

பாடல் வரிகள் இவ்வாறு அமைகின்றன,

ஆள்ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல்

பாடலை முழுதும் படிக்கும் போது,  ”இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என்று எந்த வித ஐயத்திற்கும் இடமில்லாமல் தான் பாடல் கூறுவதாகத் தெரிகிறது. பள்ளியில் படித்தபோது,  ”கொண்டு கூட்டுப்பொருள்” என்பது சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.  அப்படி , இந்த ”போர்க்கு” என்ற சொல்லை

”ஆள் ஐயா போர்க்கு உனக்கு அமைந்தன ,மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை”

என்றும் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது.  போர் செய்வதற்கு ,போரில் உன் வலிமையை நிறுவி , வெற்றி பெறுவதற்கென்று நீ பெற்றிருந்த அனைத்தும் மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை என்று பொருள் கொள்ளப் பாடல் இடம் தருகின்றது. அவ்விதம் கொண்டுகூட்டுப்பொருள் முறையில்,போர்க்கு என்ற சொல் இடம்பெயர்ந்துவிட்டால்,நாளை வா என்பதை வேறு ஏதோ காரணத்திற்காக இராமன் சொல்லியிருக்கலாம் என்ற வாதம் வலுப்பெறுகிறது.

அப்படி வேறு என்ன நோக்கத்தில் இராமன் இந்த வாய்ப்பை இராவணுக்குத் தந்திருக்கக் கூடும்? அதையும் கம்பனே தன்னுடைய பாடலில் சொல்லிவிடுகிறான்.

இந்தக் கட்டத்தில் கம்பன் தரும் பாடல்கள் அனைத்தையும் ஒரு முறை பார்த்துவிடுவோம்.இந்தக் கட்டத்தில் அவன் மொத்தம் ஆறு பாடல்கள் தந்துள்ளான்.அவை கீழ்வருமாறு.

நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை இவனைக்
கொன்றல் உன்னிலன் வெறுங்கை நின்றான் எனக்கொள்ளா
இன்று அவிந்தது போலும் உன்தீமை என்று இசையோடு
ஒன்றவந்தன வாசகம் இனையன உரைத்தான்   (1)

அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ்சமர் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி
பறத்தி நின்நெடும் பதிபுகக் கிளையொடும் பாவி
இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி  (2)

உடைப்பெருங் குலத்தினரொடும் உறவொடும் உதவும்
படைக்கலங்களும் மற்றும் நீ தேடிய பலவும்
அடைத்து வைத்தன திறந்து கொண்டு ஆற்றுதி ஆயின்
கிடைத்தி அல்லையேல் ஒளித்தியால் சிறுதொழில் கீழோய் (3)

சிறையில் வைத்தவள் தன்னை விட்டு உலகினில் தேவர்
முறையில் வைத்து நின்தம்பியை இராக்கதர் முதல்பேர்
இறையில்வைத்து அவற்கு ஏவல்செய்து இருத்தியேல் இன்னும்
தறையில் வைக்கிலென் நின்தலை வாளியின் தடித்து (4)

அல்லையாம் எனின் ஆர்அமர் ஏற்று நின்று ஆற்ற
வல்லையம் எனின் உனக்கு உள வலிஎலாம் கொண்டு
நில் ஐயா என நேர்நின்று பொன்றுதி எனினும்
நல்லைஆகுதி பிழைப்பு இனி உண்டு எனநயவேல்    (5)

ஆள்ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல் (6)

பாடல்கள் 2,3,4,5,6 ஆகியவை நேரடியாக இராமன் இராவணனிடம் சொன்னவை.

downloadஇராமன் இரண்டு மாற்று வழிகளை இராவணனுக்குக் காட்டுகிறான் இப்பாடல்களில்.அவ்விரண்டில் குறிப்பிட்ட ஒன்றை மிகவும் வலியுறுத்தி முதலாவது வழி என்று சொல்கிறான். மற்றது நிர்வாக இயலில் சொல்வதுபோல”Plan-B” என்ற வகையில் அமைகிறது.  அதாவது முதலாவது வழி இயலாத பட்சத்தில் மட்டுமே மேற்கொள்ளத்தக்க, இரண்டாவது வழி.

தான் விரும்புவது எது என்பதைச்சுட்டி, அதை முதல் வழியாக கூறி, அவ்விதம் செய்ய ஒப்பாவிடில் இரண்டாவது வழியானதைத் தேர்ந்தெடுத்துக்கொள் என்கிறான் இராமன்.

அவன் சொல்லும் முதல்வழி, சீதையை ஒப்படைத்துவிட்டு உயிர்பிழைத்துப் போ என்பதாகும். அவ்வாறு செய்வதற்கு நீ இசையாத பட்சத்தில் , போர் செய்து மடிந்து போ என்பதுதான் இராமன் இந்தக்கட்டத்தில் இராவணனிடம் சொல்லும் செய்தி.

”அல்லையாம் எனின்” என்ற கூற்று இதைத் தான் வலியுறுத்துகிறது.

“என்னைப் பொறுத்த அளவில், நான் விரும்புவது சிறை வைத்துள்ள சீதையை என்னிடம் ஒப்படைத்து,  உன் கட்டுப்பாட்டில் உள்ள தேவர்களை அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்து அவர்களை முறையில் வைக்க வேண்டிய தகுதியில் வைத்து, உன் தம்பி வீடணனை இலங்கைக்கு அரசனாக்கி நீ அவனுக்குச் சேவகம் செய்து வாழவேண்டும். இவ்விதம் செய்வதால் நீ உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. ”அல்லையாம் எனின்”  போரை மேற்கொள்” –என்பது தான் இராமன் இக்கட்டத்தில் இராவணனுக்குக் கூறும் அறிவுரை . இராமன் கூற்றாகக் கம்பன் வடித்துள்ள பாடல்களின் சாரம் இது தான்.

இராவணனிடம், அங்கதனைத் தூது அனுப்பிய போது என்ன சொல்லி அனுப்பினானோ ,அதே செய்தியைத்தான் இப்போதும் இராமன் சொல்கிறான்.அங்கதனிடம் சொல்லி அனுப்பியது இதுதான்.

என் அவற்கு உரைப்பது என்ன ஏந்திழையாளை விட்டுத்
தன்னுயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும்
சின்ன பின்னங்கள் செய்ய செருக்களம் சேர்தல் நன்றோ
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக எனச் சொல்லிடு என்றான்.

அந்த சந்தர்ப்பத்தில் சொன்ன “ அன்று எனின்” என்பது தான் இப்பொழுது இராவணனிடம் நேர்க்கு நேர் சொன்ன ”அல்லையாம் எனின்” என்பது.

rama3

அங்கதனைத் தூது அனுப்பும் போது போற்றிய அதே போர்அறத்தைத்தான் இப்பொழுதும் இராமன் பின்பற்றுகிறான். அப்பொழுது செருக்களம் சேர்தல் நன்றோ என்பதைத் தீர்மானித்துக் கொள் என்று சொல்லி அனுப்பினான் அங்கதன் மூலம். இப்போது செருக்களம் சேர்ந்தாகிவிட்டது. இராமனின் வலிமையை அறிந்தவனாக, இராமனால் முற்றிலுமாக வீழ்த்தப்பட்டு, நிற்கிறான் இராவணன்.ஆக தன்னுடைய வலிமையை அறியாத சந்தர்ப்பத்தில் இராவணன் போரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் ஆனால் இப்போது தன்னுடைய வலிமையை முழுவதுமாக அறிந்து கொண்ட பின்னரேனும் இராவணன் திருந்த ஒரு வாய்ப்பு அளிப்பவனாக இராமன் பகைவனுக்கு அருள்வாய் என்ற அறத்தைப் போற்றுகின்றான். சமாதானமே தீர்வு இறுதி வரை என நம்பி இப்போதும் இராமன் மறுவாய்ப்பு அளிக்கிறான் இராவணனுக்கு.

ஆக நாளை வா என்று சொன்னது நாளையாவது சரண் அடைவது பற்றித் தீர்மானம் செய்துகொண்டு அதற்கான முன்னேற்பாடுகளுடன் வா என்பதுதான் இராமனின் இன்று போய் நாளை வா என்பதன் உண்மைப்பொருள்.

இராமன் இராவணிடம் நேரடியாகப் பேசும்போது சரணடைவது அல்லது போரிடுவது என்ற இரண்டையும் பற்றித்தான் பேசுகிறான். சரணடைவது உனக்கு நன்மை பயக்கும் என்று சொல்லி அவ்விதம் சரணடைவதற்கான நிபந்தனைகளையும் கூறி அதனை முன்வைக்கிறான் இராமன். அல்லையாம் எனின் போர் என்பதுதான் அவன் சொன்ன செய்தி.எனவே போர்க்கு நாளை வா என்று மட்டுமே பொருள்கொள்ளத் தேவையில்லை.சரணாகதிக்கு நாளை வா என்ற கருத்துக்கும் இடமுள்ளது. இவையாவும் இராமன் இராவணனுடன் வாய்விட்டுச் சொன்னவற்றிலிருந்து நம்மால் அறிந்துகொள்ளமுடிகிறது.

download (2)ஆனால் நான் ஒரு படி மேலே போய் சரணாகதியை மட்டுமே மனதில் வைத்துத்தான் ,அதை வலியுறுத்தித்தான் இராமன் நாளை வா என்கிறான் என்ற உறுதியான முடிவுக்கு வந்ததற்குக் காரணம் இராமன் தன்னுடைய மனத்தில் உன்னியதாகக் கம்பன் கூறும் செய்திதான்.நான் மேலே குறிப்பிட்ட ஆறுபாடல்களில் முதல் பாடலில்” இன்று அவிந்தது போலும் உன் தீமை” என்று இராமன் உன்னுவதாகக் கம்பன் வடித்துள்ளான். இன்றோடு உன்னுடைய தீமைகள் யாவும் அழிந்தன.நாளை முதல் நீ தீமைகள் அற்றவன். அவ்விதம் தீமைகள் இன்றோடு அழிந்துவிட்ட படியால் நாளை முதல் நீகுற்றமற்றவனாக ஆகப்போவதல், நாளை நீ வா சரணடைய என்கிறான் இராமன். நாளை வரச்சொன்னது,போர்க்கு அன்று சரணடையத்தான் என்பதுதான் இன்று போய் நாளை வா என்பதன் உண்மையான பொருள் என்பது என் கருத்து.

பாடல் வரிகளை மீண்டும் படியுங்கள்.

இன்று அவிந்தது போலும் உன்தீமை என்று இசையோடு
ஒன்றவந்தன வாசகம் இனையன உரைத்தான்.

”இன்று அவிந்தது போலும் உன்தீமை”  என்று புகழோடு கூடிய சொற்களை இராமன் கூறினான் என்கிறான் கம்பன். இந்தப்புகழ் யாரைச் சார்கிறது? தீமைகள் அகன்றதால் இராவணன் பெற்ற புகழா? அல்லது இராவணனைத் திருத்தி,அவனுடைய தீமைகளை அவித்தவன் என்ற நிலை கண்ட இராமன் பெற்ற புகழா?

எவ்வாறெனினும் , இசையோடு ஒன்ற வந்த வாசகமாகிவிட்ட்து  “இன்று அவிந்தது போலும் உன் தீமை” என்பது. இராவணனின் தீமை அழிந்தது என்ற இசையோடு ஒன்ற வந்த வாசகம் கூறியவன் , நாளை மீண்டும் போருக்கு வா என்றா சொல்லியிருப்பான்?

இராவணனின் தீமை அழிந்தது என்பதை ஒப்புக்கொண்ட இராமன், நாளை மீண்டும் போர்க்கு வா என்று கூறியிருக்க வாய்ப்பில்லை. சரணடைவது பற்றி நன்கு யோசிக்க ஒரு நாள் அவகாசம் தருகிறேன் என்று தான் இராமன் கூறுகிறான்.

ஆறு பாடல்களில் முதல் பாடலில்இன்றையநிகழ்வாக இராவணனின் தீமை அழிந்ததைக் குறிப்பாக எண்ணிப்பார்த்தவன்,  நாளையநிகழ்வாக எண்ணியது போரா அல்லது சரணையா?

இவ்விதம் இராவணனுக்குத் திருந்தி வாழும் வாய்ப்பை நல்கி, அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கப் போவதால் தான் கம்பன் இராமனை வள்ளல் எனச்சுட்டுகிறான் இப்பாடலில். போரில் நாளை இராவணனை அழிப்பவனாக இராமனைச் சுட்டுவதாக இருந்தால் வீரன் என்றோ வலியோன் வென்றியான் என்றல்லவோ குறிப்பிட்டிருப்பான் கம்பன்.

5 Replies to “இன்று போய் நாளை வா – எதற்கு?”

 1. பொதுவான அர்த்தப்படி ஆயுதங்களை இழந்தவனோடு ,நிராயுதபாணியுடன் போர்செய்தல் தர்மமல்ல ,என்ற கருத்தில் நாளை நீ ஆயுதங்களுடன் / படைகளோடும் வா ! என்றசிந்தனை யிலிருந்து ,யோசிக்கவைத்து ,உறு பொருளைத் தெரிவிப்பது , பொருத்தமாக உள்ளது .

 2. நன்று ராஜன் அவர்களே… மிக்க அழகாகவும் ஆர்வத்துடனும் எழுதிய விதம் கவர்கிறது. நீங்கள் நிறைய எழுத வேண்டும் தயவுசெய்து.
  நான் இதை முகப் புத்தகத்தில் பகிரலாமா?
  ராம தாசன்..அடியேன்

 3. அருமையான விளக்கம். நன்றிகள் பல. படிக்க வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.

 4. தவறு, ராமனின் அவதார நோக்கம் ராவணனை கொல்வதை. பின்பு, எப்படி இராவணன் திருந்தி வாழும் வாய்ப்பை நல்கி, அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிப்பார்.

 5. அன்புள்ள பாலமுரளி,
  உங்கள் கருத்தை இன்று தான் படிக்கக் கூடிய வாய்ப்பு கிட்டியது. இராமனின் அவதார நோக்கம் இராவணனைக் கொல்வதாக இருந்த போதும், இயன்றவரை இராவணன் திருந்துவதற்கு இராமன் வாய்ப்பளிக்கவே செய்கிறான். அங்கதனை தூது அனுப்பும் போதும் இதைத்தான் இராமன் சொல்லி அனுப்புகிறான். சீதையைத் திருப்பி அனுப்பி விட்டால் , உனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறேன் என்பதாகத் தான் அந்தத் தூது அமைகிறது. இன்று போய் நாளை வா, – சரணடைய என்று சொல்வதும் அவ்வழியில் தான் – என நான் எண்ணுகிறேன்.
  வரதராஜன்.அ.கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *