பாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4

<<< முந்தைய பகுதிகள்

கோனார்க் சூரிய சேத்திரத்தை கண்களாலும், மனதாலும் பருகி முடித்த பிறகு அங்கிருந்து கிளம்பி குப்தேஸ்வர் குகைகளை நோக்கி என் பயணத்தைத் தொடங்கினேன். குப்தேஸ்வர் ஒரிஸ்ஸாவின் மலைவளமும், பொருளாதார வளமும் நிரம்பிய கோராபுட் மாவட்டத்தை சேர்ந்த குகை கொத்து. ஜேப்பூருக்கு அருகில் உள்ள 12க்கும் மேற்பட்ட குகைகள் என்று குறிப்பிடப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்தேன். புவனேஸ்வரிலிருந்து நெடுஞ்சாலை எண் 203 ஐ பிடித்து சென்று கொண்டிருந்தேன். வழியில் பாலுகாவ்ன் எனும் இடத்தில் எதேச்சையாக தங்கினேன். அதன் அருகில் தான் உலகின் 2 வது மிகப்பெரிய உப்புநீர் ஏரியான சிலிக்கா இருக்கிறது என அறிந்தேன். இந்திய சாலைகளில் பயணிக்கும் போது காலத்தில் நாம் முன்னும் ,பின்னும் பயணிப்பது போன்ற உணர்வை தொடர்ந்து அடைந்து கொண்டே இருந்தேன். கால பரிமாண மாற்றத்திற்கேற்ப நகரங்களும், கிராமங்களும் தங்களின் வடிவை, பொலிவை சீரமைத்துக்கொண்டு முன்னோக்கி நகர்கின்றன. பழைய நகரங்கள் சில உறைந்து போய் அப்படியே காட்சி அளிக்கின்றன. இன்னும் சில நகரங்கள் fusion முறையில் வியப்பை ஏற்படுத்துகின்றன.

exp01கிராமப்புற , நகர்புற சாலைகளில் பயணம் செய்வதற்கும், நான்கு வழிச்சாலை புற வழிச்சாலைகளிலும் பயணம் செய்ய எனக்கு பெரிய விருப்பம் இல்லை. இந்த தேசத்தை முழுக்க உணர்வதற்கு கிராமப்புறச்சாலைகளும், நகர சாலைகளும், சந்துகளுமே சிறந்தது என நினைக்கிறேன். மேலும் பொது போக்குவரத்தை வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் உபயோகப்படுத்துவது., சினிமா தியேட்டர், சந்தை போன்ற இடங்களில் நம்மை செலுத்திக்கொள்வது. அந்தப் பகுதி பற்றிய ஒரு காட்சி சித்தரிப்பை, சில புரிதல்களை மனதிற்குள் சித்திரமாக பதுக்கி வைத்துக்கொண்டு எதிர்பாராத கணத்தில் அதை வெளிக்கொணர்ந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.கிராமங்களில் இருந்து நகரத்தை நோக்கிய பயணங்கள் கால ஓட்டத்தில் நாம் ஒரு இடத்தையே முன்னோக்கி, முன்னோக்கி பார்ப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. நகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி செல்லும் பாதை காலத்தில் பின்னோக்கி பயணிப்பது போன்ற சித்திரத்தை உருவாக்குகிறது. Fade out என்ற ஆங்கிலப்பதம் இதற்கு பொருத்தமாக இருப்பதாக ஒரு எண்ணம். நான்கு வழிச்சாலைகளில் இந்த காட்சி அனுபவத்திற்கு வேலை இல்லை. ஒரே மாதிரியான சீரான அலுப்பூட்டும் சாலைகள். வேகவேகமாக கடக்கும் வாகனங்கள். மனித முகங்களை காணவே முடியாது. எப்போதாவது தென்படும் நகரத்தின் மிச்ச ஓரம். கட்டண வசூலிக்கும் இடங்களில் சோர்வோடு காணப்படும் கண்கள்.

intour03கிராமப்புற சாலைகள் ஒற்றை யடிப்பாதை போல இருந்தாலும், அது நடு நடுவே ஆச்சரியங்களை புதைத்து வைத்திருக்கிறது. அழகான ஊர்களை, அன்பான மனிதர்களை , விசித்திரமான உடைகளை, உணவு முறைகளை, வித்யாசமான பயன்பாட்டு கருவிகள், பாத்திரங்கள். அத்தோடு எதிர்பாராத பள்ளங்கள் எப்போதாவது எதிர் வரும் வாகனங்களை என்று சொல்லி முடிக்க முடியாத ஆச்சர்யங்களை வைத்திருக்கிறது. இந்திய கிராமப்புற சாலைகள். நெடுஞ்சாலைகளில் சென்று கொண்டிருக்கும் போது காணும் உலகம் வேறு விதமானது. மனிதனின் வெளித்தோற்றம் போன்று சில ஒழுங்கமைதியோடு இருக்கிறது. ஆனால் சிறிய சர்வீஸ் ரோடுகளில் சென்று கிராமங்களுக்குள் நுழைவது மனித மனக்குகைகளைப்போல சீர் செய்யப்படாத ,அந்தரங்கமான பயணமாக இருப்பது. அப்படியான ஒரு நுழைவை பாலே காவ்ன் அளித்தது. சிறிய குறுகலான ஒரிய சாலைகள், கரிய, எளிமையான திராவிட முகங்கள். மாடுகள், சிறிய கடைகள், தள்ளு வண்டிகள், பான் மசாலா கடைகள், அங்கங்கு இருக்கும் பானி பூரி தள்ளு வண்டிகள். அதிவிரைவான எக்ஸ்பிரஸ் வேக்கு அருகில் இருக்கும் இந்த கிராமத்தில் எந்த பரபரப்பும் இல்லாமல் மிகுந்த அமைதியோடு ஒரு பசுவின் அசை போடலைப்போல காலம் மெல்ல அசைந்து அசை போட்டுக்கொண்டிருப்பதான பிரமை. நடுவில் நல்ல தங்குமிடம் பற்றி விசாரித்த போது ஒவ்வொருவரும் நமக்கு எப்படியாவது உதவி செய்து விட வேண்டும் என்ற எத்தனிப்போடு வழி சொல்லுவார்கள்.

என்னுடைய பயணம் தோறும் எனக்கு ஒரு மிக முக்கியமான திறப்பாக இருந்த அம்சம் என்னவென்றால் மக்களின் உதவும் குணம். புதிய மனிதர்களை வரவேற்கும், வழி சொல்லும் ஆவல்கள், அவர்களை பற்றி அறிந்து கொள்ள எடுக்கும் முயற்சிகள். வட இந்திய மக்களுக்கு தென் இந்தியர்களின் மீதான வெறுப்பு பற்றிய பல அனுபவங்கள் என்னை மறுபரிசீலனை செய்ய வைத்தது. முன்பெல்லாம் டெல்லிக்கு செல்லும் போதும், கான்பூர்,குர்காவ்ன் செல்லும் போதெல்லாம் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு வேண்டுமென்றெ ஹிந்தியில் பதில் சொல்லும் நபர்களை வெறுப்போடு பார்த்திருக்கிறேன். அதுவும் டெல்லி ரயில் நிலையத்தில் உதவி என்று கேட்டாலும் ஆங்கிலத்தில் கேட்டாலும் பிடிவாதமாக ஹிந்தியில் புறக்கணிப்புடன் சொல்லும் ரயில்வே ஊழியர்கள் மேல் அருவெறுப்போடோ தான் நெடுங்காலம் இருந்தேன். இட்டார்ஸியிலும் இது போன்ற ஒரு கசப்பான அனுபவம் எனக்கு வாய்த்திருந்தது. சிறப்பு ரயிலில் சென்னைக்கு டிக்கெட் எடுத்திருந்தேன். ட்ரெயின் 2 மணி நேரம் தாமதம் என முதலில் அறிவித்தார்கள் . பின்னர் மேலும் 2 மணி நேரம் என்றார்கள், கடைசியில் 6 மணிநேரம் கழித்து ட்ரெயின் வேறு ஒரு ப்ளாட் பார்மில் வந்தது. ரயில்வே என்கொயரியில் நானும் என் சக கள பணியாளர்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தோம்.

அங்கிருந்த ரயில்வே ஊழியர் முதலில் பதிலளித்தார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணித்தார். வேகம் வேகமாக ஹிந்தியில் பதிலை தெரிவித்தார். வரிசையில் பின்னால் இருந்தவர்களுக்கு எல்லாம் பதில் சொன்னார். தள்ளி இருங்கள் என்று சைகை செய்து விட்டு அடுத்த வேலைகளை பார்த்துக்கொண்டே இருந்தார். கூட இருந்த ஒரு நண்பர் மிகவும் கோபமாக அவரிடம் வாக்கு வாதம் செய்த போது ஹிந்தி தெரியாம ஏன் வர்றீங்க,? உங்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? சொல்ல முடியாது என்ன செய்ய முடியுமோ? செய்து கொள்ளுங்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்றார். அன்று ட்ரெயினையும் தவற விட்டு விட்டு மிகவும் வெறுப்போடு வேறு ட்ரெயினில் அன் ரிசர்வ்ட்டில் வந்தோம். வரும் வழி எல்லாம் பேசி பேசி ஹிந்தி வெறுப்பை வளர்த்துக்கொண்டோம். அது ஒரு ஆறாத ரணமாகவே இருந்தது. நம் தாய்மொழியை புறக்கணிக்கிறார்கள் என்று ஒரு நிரந்தர வெறுப்பு அவர்கள் மேல் இருந்து கொண்டு இருந்தது.

அவர்கள் மீது இன்னொரு அருவெறுப்பு முதல் கேள்வியாகவே நீங்கள் என்ன ஜாதி என்று கேட்பது . ஆனால் என் பயணங்களின் போது தொடர்ந்து இந்த கேள்வியை நான் எதிர் கொண்டு கொண்டே வந்தேன். தமிழகத்தில் இப்படி கேட்பது ஒரு அநாகரீகமான செயல் , அது மனதிற்குள் பதிந்து விட்டதால் அப்படி யாராவது கேட்டால் உடனே கோபமும் வரும். பல இடங்களில் ஜாதியை கேட்ட பின்பே தங்குமிடங்களில் இடம் கிடைத்தது. ஆச்சரியம் என்ன வென்றால் லாட்ஜ்களின் லெட்ஜர்களில் கூட ஜாதியை ஒரு காலமாக வைத்திருக்கிறார்கள் அசூயை இல்லாமல். இப்போது பழகி விட்டது. பலருக்கு அது வெறும் ஒரு வாயளவிலான சம்பிரதாயம் மட்டுமே. தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் சில இடங்களில் நிச்சயம் ரூம் இல்லை என்றெ சொன்னார்கள். ஆனால் அப்படி ஒன்றும் எனக்கு நிகழவில்லை. கிராமப்புறங்களில் மக்கள் ஹிந்தியை மட்டுமே இணைப்பு மொழியாக வைத்திருக்கிறார்கள் ஆனால் அவர்களிடத்தில் வெறுப்போ, கிண்டலோ நிச்சயம் இல்லை. நம்மைப் புறக்கணிக்க வேண்டும் என்ற சிறு எத்தனிப்பு கூட இன்றி கவனமாக பதில் சொல்கிறார்கள். படித்த சில நகர்புற மக்கள் மொழி அபிமானத்தை வெறியாக வளர்த்து கொள்கையில் எளிய மக்கள் பெருவாரியாக அன்பை தங்களின் இணைப்பு மொழியாக கையாள்கிறார்கள். பெருவாரியான மக்கள் இப்படியான குணவான்களாக தான் இருக்கிறார்கள் .இந்த முழு பயணத்தின் போதும் நான் ஒரு காலத்தில் வெறுத்த மக்கள் எவ்வளவு பரிவோடும், அன்போடும் ,கனிவோடும் வரவேற்றும், உணவளித்தும், உதவிகள் செய்தும் அனுப்பினார்கள் என்பதை நினைக்கையில் இவர்களை தவறாக அர்த்தப்படுத்தி கொண்ட என் புரிதல் என்னை தலை குனிய வைத்தது.

பாலேகாவ்னில் மிக நல்ல ஒரு தங்கும் விடுதியில் மிகவும் குறைவான தொகைக்கு ரூம் எடுத்து தங்கினேன். இரவு உணவாக ரொட்டியும் பருப்பும், வெங்காயமும், எண்ணையில் இட்ட பச்சைமிளகாயும் சேர்த்து சாப்பிட்டு படுத்தேன். அடுத்த நாள் முதல் வேலையாக அருகில் உள்ள சிலிகா ஏரிக்கு சென்று பார்த்து வரலாம் என்று திட்டம். இது ஒரு திடீர் திட்டம் தான். மிக மெதுவாக இயங்கும் காலைகளைக்கொண்ட பாலெகாவ்னின் வீதிகள் வழியாக சிலிகா கரையை அடைந்தேன். வரும் வழியில் நெருக்கமான, கதகதப்பான சந்தை பகுதியை கடந்து படகுத்துறையில் கால் வைத்தாயிற்று. எளிய அவல் உப்புமாவும்,வாழைப்பழமும் சாப்பிட்டு விட்டு படகுப்பயணத்திட்டம் பற்றி விசாரித்தேன். ஒரிய சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருக்கும் பட்குகளில் ஒரு மணி நேர பயணத்திற்கு 50 ரூபாயும், தனியார் படகுகளில் 100 ரூபாயும் வசூலிக்கிறார்கள். மூன்று மணி நேரம் பயணம் செய்வதற்கான டோக்கனை பெற்றுக்கொண்டு படகுக்கு வந்தேன். படகு என்பது காய்ந்த மரத்தில் குடையப்பட்ட கலங்களில் யமகா என்ஜின் பொருத்தப்பட்டுள்ள  ஒரு அமைப்பு துடுப்பும் உண்டு. நானும் நண்பர்களும் ஏறிய படகில் சிறிய ஓட்டை ஒன்றும் இருந்தது. எங்களுடன் படகு செலுத்துனர் ஒருவரும், அவருடைய சிஷ்யனான ஒரு சிறுவனும் இருந்தார்கள். படகில் ஏறி உட்கார்ந்த உடன் தான், நாம் எவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தின் மீது தக்கையாக மிதக்கிறோம் என்ற உணர்வே வருகிறது. முதல் 5 நிமிடங்களில் நகர சந்தடிகள் நண்பர்களின் கேலி, கிண்டல்கள் மட்டும். பின்னர் சுற்றுப்புறம் என்பது ஒரு வட்டமான நீர் இருப்பு மட்டுமே. கரைகள் தான் நமக்கு வேறு வேறு விதமான ஜியாமெட்ரிக்கல் உருவங்களையும் , தோற்றங்களையும் அளிக்கிறது.

silica01நீரின் மீது பயணம் செய்வது, மிதப்பது மிகுந்த உற்சாகம் தரக்குடிய செயல். நீர் எங்கும் சூழ்ந்த வெளியில் யாருமற்ற இடத்தில் மிதப்பது என்பது கொடுக்கும் சுதந்திரம் வார்த்தை கட்டுகளுக்கு அப்பாற்பட்டது. மென் அலையடிக்கும் நீரில் சுமாரான வேகத்தில் படகு நீந்தி கொண்டிருக்கிறது. சுற்றுப்புறமெங்கும் வெள்ளி நிறத்தில் மின்னும் தண்ணீர். சூரிய ஒளியில் தகதகப்பாக உறுத்தாமல் ஒளிர்கிறது. எங்கள் படகின் மேல் கூரை உர சாக்கு மற்றும் சிமெண்ட் சாக்கு கொண்டு அமைக்கப்பட்ட வெப்ப பாதுகாப்பு என்பதை விட ஒரு தற்காலிக நிழல் ஏற்பாடு. காய்ந்த மரத்தட்டியில் உட்கார்ந்து கொண்டு அருகில் நீரை பார்த்துக்கொண்டே பயணம். ஒரு கட்டத்தில் நம்மை சுற்றிலும் வெறும் நீர் பிரபஞ்சம், வான் உள்ளிட்ட அனைத்தும் நீரால் நிறைந்து இருப்பதான தோற்றம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நீர் என்ற உருவகம் தான் வருணனை முழு முதற்கடவுளாக வழிபடும் மரபு தோன்றியிருக்க காரணமாக இருக்க கூடும் . கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீரால் சூழ்ந்த இடமாக இருக்கிறது.சிலிக்கா ஏரியின் பிரமாண்டம் அபூர்வமானது. நடுவில் ஆச்சரியப்படுத்தும் சில நீர்பறவைகள் இளைப்பாறும் சதுப்புகள், . மீன்பிடிக்கும் படகுகள், பாரம்பரிய பாய்மரங்களில் பயணிக்கும் மீனவர்கள். நடுவில் உள்ள தீவுக்கு சாமான்களை ஏற்றிச்செல்லும் படகுகள் என்று அங்கங்கே தென்படுகிறார்கள். சுற்றுலா பயணிகள் படகுகளில் முழுக்க நிரம்பி வேடிக்கை பார்த்து கொண்டு சுற்றி வருகிறார்கள்.

3 மணி நேரத்திற்கு என்று பேசி ஏறிய பிறகு தான் தோன்றியது 3 மணி நேரம் என்பது ரொம்ப அதிகமான நேரம் என்பது நீரில் பயணிக்கையில் காலம் கணமேறி மிக மெதுவாக நகர்வதாக தோன்றிக்கொண்டிருந்தது. சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து விட்டு நீரில் 5 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பது என்பது ஒரு வேறு விதமான பயண அனுபவத்தை கொடுக்கிறது. மோட்டர் படகில் மோட்டர் ஓசை யாருமற்ற ஏரியில் தனித்து ஒலித்து அது மேலும் சூழலை கனமுள்ளதாக்குகிறது. ஒல்லியான எங்கள் படகோட்டி இந்த உலகத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு உணர்வுடன் படகை செலுத்தி கொண்டிருந்தார். ஏரியின் நடுவில் இருந்த மிகப்பெரிய சதுப்பு பறவைகள் சரணாலயத்தை நோக்கி. எண்ணற்ற சிகப்பு நிற கால்களும் வெள்ளுடலும் கொண்ட அலகு நீண்ட பறவைகள் நிஷ்டையில் நின்று கொண்டிருந்தன. பெயர் தெரியாத எண்ணற்ற பறவைகள் உலவிக்கொண்டும், மீன் பிடித்துக்கொண்டும் நின்று கொண்டிருக்கின்றன. இவ்வளவு பறவை இனங்கள் இவ்வளவு மிகை எண்ணிக்கையில் இருக்கும் என்று நான் இது வரை எண்ணிப்பார்க்க வில்லை. ஆயிரக்கணக்கான பறவைகள் ஏரியின் அந்த பகுதியை வெண்கடலாக மாற்றி வேறு விதமான உலகத்தை பார்வைக்கு கிடைக்க செய்தது.  நடு நடுவே சில பறவைகள் தலைக்கு மேல் பறந்து ஆச்சரியத்தை கொடுத்தது. பறவைகளின் அமைதியும் ,விளையாடும் பறவைகளின் கூச்சலும் வேறு விதமான சப்த உலகத்தை நமக்காக திறந்து வைக்கிறது. இத்தனை ஆச்சரியம் நடக்கையிலும் படகில் இருந்த சிறுவன் படகில் சேகரமான நீரை கோரி எடுத்து ஊற்றி கொண்டே இருந்தான் நடு நடுவே பெரிய துடுப்பால் துழாவி திசையை மாற்றிக்கொண்டிருந்தான்.

silica02நீரில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு பயம் தோன்றியது இந்த உலகில் எவ்வளவு சிறிய உயிரினமாகவும் சிறிய அலகாகவும் நாம் இருக்கிறோம். மேலும் எவ்வளவு தனிமை நிரம்பியதாக இருக்கிறது இந்த உலகம். மொத்த மக்கள் தொகையை விடவும் புல்லினங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதை உணர்ந்த போது ஒரு சிறிய அச்சம் தோன்றி மறைந்தது. மனிதர்கள் பறவைகளை வேட்டையாடுவதற்கு பதில் பறவைகள் மனிதனை வேட்டையாடத்துவங்கினால் சில வாரங்களில் மனித இனம் மொத்தமாக இல்லாமலாகி விடும் என்றெல்லாம் எண்ணமிட்டுக்கொண்டு வந்தேன். பறவைகளே இவ்வளவு இனி மீன்கள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள், சிறு உயிரிகள் எல்லாவற்றையும் கணக்கிட்டால் மனிதன் தான் சிறுபான்மையினனாக இருந்து கொண்டு அனைத்து வளங்களையும் சுரண்டி அனுபவித்து கொண்டிருக்கிறான் என்ற உண்மை புரிகிறது. எல்லா இடங்களிலும் பெரும்பான்மையினரின் கருணையினால் தான் சிறுபான்மையினர் வாழ்கிறார்கள். நீர்ப்பறவைகளில் முழு வெள்ளையான நீண்ட கால்களையுடைய செஞ்சிவப்பு அலகுடைய பறவைகள், இறக்கைகள் சிவப்பும், வெள்ளையும் கலந்த பறவைகள், அகலமான அலகுடையவை, நீள மூக்குடையவை, நெடிய கால் உடையவை , அகன்ற இறக்கை விரிப்பு உடையவை என்று எண்ணற்ற பறவைகள். சுற்றுலாப்பயணிகளை கண்டு அலுப்புற்று அவர்களை சட்டை செய்யாமல் இருக்கும் கல்வியை கற்று இருக்கின்றன. பயணிகளின் இருப்பு அவைகளுக்கு ஒரு விஷயமாக தெரிய வில்லை. பின்பு அங்கிருந்து கடந்து நடுவில் இருக்கும் ஒரு சிறிய தீவில் உள்ள பழங்குடிகள் வழிபடும் கோவிலுக்கு சென்றேன். கொற்றவை ஆலயம் அது. காளி ஜெய் ஆலயம் என்ற பெயரில் பழங்குடி மக்களும், மீனவர்களும் வழிபடும் இடம் என அறிந்து கொண்டேன்.

ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஒரிய பழங்குடி மக்களும், மீனவர்களும் வந்து ஆரவாரமாக வணங்கி செல்கின்றனர். அங்கேயே சமைத்தும் சாப்பிடுகிறார்கள். சில கடைகளும் தேனீர், மற்றும் தின்பண்டங்களும் ,இறை உருவங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.  நிறைய சிவப்பு,மஞ்சள் வர்ணக் கயிறுகளுடன் ,பூஜை சாமான்கள் , குவித்து வைக்கப்பட்டுள்ள குங்குமம்,விற்கும் கடைகள் இருக்கின்றன. . அங்குள்ள பழங்குடி முகச்சாயலில் உள்ள கொற்றவையை வணங்கி விட்டு வெளி வருகையில் பார்த்தேன். ஏராளமான பழங்குடி மக்களும் கிராமத்தவர்களும் மிகுந்த பக்தி பெருக்கோடு வழிபடுவதை கவனித்தேன். இது நாள் வரை பழங்குடியினரின் தெய்வம் வேறு, நாட்டாரியல் தெய்வங்கள் சிறு தெய்வங்கள் அவற்றிற்கும் இந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று சொல்வது எவ்வளவு பெரிய பொய் என உணர்ந்து கொண்டேன். மீனவர்களின் தொடர் வழிபாட்டில் அம்மன் இருப்பதாக அங்கு கடை வைத்திருப்பவர்கள் சொன்னார்கள். பெரும் பொருட்செலவில் நாட்டார் தெய்வங்கள் பற்றியும், அவர்களுக்கும் இந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லும் ஆய்வுகளின் உண்மைத்தன்மையை நேரில் உணர்ந்து கொண்டேன். ஏன் கிறிஸ்தவ மத மாற்றிகளும் ,பிரிவினைவாத சதிகாரர்களும் பழங்குடியினர்கள் வேறு பெரும்பானமை இந்துக்கள் வேறு என்று திரும்ப திரும்ப சொல்கிறார்கள் என்ற சதி பற்றி மெல்ல புரிய ஆரம்பிக்கிறது. நம்முடைய லிங்கத்தையும் காளியையும் தான் அவர்கள் வழிபடுகிறார்கள் என்ற உண்மையை பொது மனத்திலிருந்து மறைக்க கிறிஸ்த்தவ சதியாளர்களின் முயற்சிகள் நிச்சயம் தோற்று போகும். உண்மையை மக்கள் நேரில் சென்று பார்த்தால் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் மரங்களை வணங்குகிறார்கள். இந்து மதத்தின் சகல கூறுகளிலும் மர வழிபாடு உள்ளது. விருக்‌ஷ சாஸ்த்திரம் மரங்களை பேணுவதையும் அதன் தெய்வீகத்தன்மைகளையும் தனியே உரைக்கிறது.

silica03அனைத்து கோவில்களிலும் ஸ்தல விருக்‌ஷம் வைக்கப்பட்டு மர வழிபாடு இன்னும் தொடர்கிறது. இடி, மின்னலையும் , சூரியன், விலங்குகளையும் அவர்கள் வணங்குகிறார்கள்.பெருமதத்தில் அதற்கு இடமில்லை என்று நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியர்கள் உளறுகிறார்கள். அதை அயல் நாட்டு பல்கலைக்கழகங்கள் பிரசுரித்து இந்தியா பாம்பு பிடாரர்கள் வாழும் நாகரீகமற்ற தேசம் என்று பிரச்சாரம் செய்யும். ஆங்கிலேயர்கள் சென்றிருக்காவிட்டால் அவர்கள் அம்மணமாக திரிந்து கொண்டிருப்பார்கள் என்று புரளி பேசிக்கொண்டிருப்பார்கள் . உலகிற்கே நாகரீகத்தை அறிமுகப்படுத்திய ஒரு தேசத்தை இப்படிப் பொய் பிரச்சாரம் மூலமாக கேவலப்படுத்தி கொண்டிருக்கும் ஐரோப்பிய கிறிஸ்த்தவ சதியின் வேர்கள் ஆழமானவை. அவற்றை அறிவாலும் தர்மத்தாலும் அகழ்ந்து எடுத்து அறுத்து எரிய வேண்டும். இடி, மின்னல்களின் வழிபாடுகளே இந்திர வழிபாடாக இன்றும் இருக்கிறது. சூரிய வழிபாடு இல்லாத ஆலயமே இல்லை. இப்படியான நிதர்சன உண்மைகளை மறைத்து பழங்குடி, மீனவ மக்களுக்கும், நகர, கிராம வாழ்க்கையில் இருக்கும் இந்துமக்களுக்கும் இடையில் அகழியை ஏற்படுத்தி அவர்களை பிரிக்கிறார்கள் .பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட அந்த அப்பாவி மக்களை எளிதாக மதம் மாற்றுகிறார்கள். அவர்கள் பெயரை சொல்லி கோடிகளில் பணத்தை பெற்று கொண்டு கன்னிகாஸ்த்திரிகளையும் , குடும்பப்பெண்களையும் கற்பழித்துக்கொண்டு சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு கீழான சமூகம்.sil04

பின்னர் அங்கிருந்து திரும்பி கரையை நோக்கி வருகையில் உப்பு நீர் டால்பின்கள் இரண்டு விளையாடுவதை பார்த்தோம். மிக ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. டால்பின்களின் துள்ளலை டி.வியில் தான் பார்த்திருக்க்கிறேன். நேரில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கொற்றவை அன்னையின் அருளால் இந்த டால்பின்கள் காணக்கிடைத்தது. படகோட்டி சகோதரர் தான் அவற்றை காட்டினார். அவருக்கும் என் நன்றிகள். மீண்டும் கரைக்கு வந்த பிறகு நகர காட்சிகள், கட்டிடங்கள் நிறைந்த இப்போதைய உலகிற்கு மீண்டேன். மீன் நாற்றமுடன் கூடிய சந்தையை தாண்டி நகரத்தின் வீதிகளில் இணைந்து கொண்டு மதிய உணவிற்காக விரைந்தேன். மீண்டும் அடுத்த இலக்கை நோக்கி…

One Reply to “பாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4”

  1. உங்களுடைய கட்டுரை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *