ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 17

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

46. तत्वस्वरूपानुभवादुत्पन्नम् ज्ञानमंजसा |
अहं ममेति चाज्ञानं बाधते दिग् भ्रमादिवत ||

தத்வரூபானுபவாதுத்பன்னம் ஞானமஞ்சஸா |
அஹம் மமேதி சாஞானம் பாததே திக் ப்ரமாதிவத் ||

தத்துவ சொரூப அனுபூதியால் தானுதி
உத்தம ஞானம் உடனே அம் – மித்தையாம்
நான் எனது அஞ்ஞானம் நசிப்பிக்கும் திக்பிரமை
பானு உதயத்து எனவே பார்.

(இருட்டில் திசைகளை அறியமுடியாத பிரமை சூரியன் உதித்தவுடன் நீங்குவதுபோல, இல்லாத ஒன்றான ‘நான்’ என்ற அகங்காரத்தையும் ‘எனது’ என்ற மமகாரத்தையும், உள்ள ஒன்றேயான பிரும்ம சொரூப அனுபவத்தில் தனக்குத் தானே உதிக்கும் ஞானம் அழித்துவிடும்.)

ஒரு புதிய இடத்திற்குச் சென்றால், எவருக்கும் சாதாரணமாகவே எந்தப் பக்கம் எந்தத் திசை இருக்கிறது என்பதில் குழப்பம் ஏற்படும். அதுவும் அப்போது இருட்டு என்றால் குழப்பம் வருவதற்கு வேறு காரணம் கேட்கவே வேண்டாம். அப்போது வேறொருவர் சொல்லி நமக்குத் திசைகளைப் புரியவைக்கலாம். ஆனால் சூரியன் உதித்து விட்டால், அது கிழக்குத் திசை என்பதால், வேறு எவருடைய துணையும் இல்லாமல் குழப்பம் தனக்குத் தானே தீர்ந்துவிடும். அதைப்போல தன் சொரூப ஞானம் வந்ததும் சீவனுக்கு தன்னையும் உலகையும் பற்றிய குழப்பம் நீங்கிவிடும்.

ஜீவன் எனத் தன்னைப் பாவிக்கும் ஒருவன், இப்பரந்த உலகத்தில் தான் மற்ற எல்லோரையும் போல இன்னுமொருவன் என்றே நினைக்கிறான். “நான்என்று ஒருவன்” என்ற அந்த எண்ணத்தில் இருக்கும் அவனுக்கு, “தனக்கு” என்று சில பொருட்களும் சில மனிதர்களும் இருப்பதாகவும் எண்ணங்கள் வளர்கின்றன. இந்த எண்ணம் அவனுக்கு எப்படி வந்தது என்று கேட்டால் அவனுக்கே அது புரியாது. அவனைப் போலவே மற்றவர்களும் “தான் – தனது” என்று இருப்பதால் அவனுக்கு தனக்கு உள்ள அந்த எண்ணத்தைப் பற்றிய சந்தேகமும் வருவதில்லை. இதற்கெல்லாம் காரணம் அவனது உண்மை நிலையை அவன் அறியாமல் இருப்பதே. இந்த அறியாமைதான் அவனது இருள்.

rishi_guru_and_sishyaவாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் அவனுக்கு தனது நிலையைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, அவனை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான சூழ்நிலைகளும் அமைகின்றன. அப்போது அவனுக்குப் பொதுவாக இரண்டு வழிகளே இருக்கின்றன என்று ரமணர் சொல்வார். ஒன்று அவன் தன்னை யார் என்று கேட்டு தன் உண்மை சொரூபம் தெரிந்துகொள்வதற்கு ஞான விசாரம் செய்து தெளிவடைவது. மற்றொன்று தேர்ந்த குருவிடம் தனக்கு வழி காட்டுமாறு வேண்டி அவரைத் தஞ்சம் அடைவது. அப்படி அடைக்கலம் வேண்டிச் சென்றவனின் மனத்தை குரு நிர்மூலம் ஆக்கி அவனது உண்மை சொரூபத்தை அவனுக்குக் காட்டுவார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் அதே போலச் சொல்லி, நரேந்திரர் எப்படி தனது அகங்காரத்தை பூதாகாரமாக்கி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொண்டார் என்றும், நாக மகாஷயர் எப்படி தனது அகங்காரத்தைச் சுருக்கி தன்னை ஒன்றும் இல்லாமல் செய்துகொண்டார் என்றும் சொல்வார். முன்னது விசாரம் செய்து பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே தான் என்று உணர்வது, பின்னது குருவே எல்லாம் என்று அடிபணிந்து தன்னை ஒன்றும் இல்லாமல் ஆக்கிக்கொள்வது.

இந்த இரண்டு வழிகளில் தனக்கு ஒத்துக்கொள்ளும் வழி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் முன்னேறி தனது உண்மை சொரூபத்தை அறிபவனுக்கு, உதிக்கும் சூரியன் முன் இருள் ஓடிப்போய் திசைகள் தானே விளங்குவதுபோல, அதுவரை அவனை ஆட்கொண்டிருந்த அறியாமை தானே விலகும். எல்லாம் அப்போது ஒன்றே என்று தெரியவருவதால் “நான்-எனக்கு” என்ற எண்ணங்களும் அங்கு நிலைப்பதில்லை.

47. संयग्विज्ञानवान् योगी स्वात्मन्येवाखिलम् जगत् |
एकं च सर्वमात्मानमीक्षते ज्ञानचक्षुषा ||

சம்யாக்விஞ்ஞானவான் யோகீ ஸ்வாத்மன்யேவாகிலம் ஜகத் |
ஏகம் ச சர்வமாத்மானமீக்ஷதே ஞானசக்ஷுஷா ||

நன்று தனை அறி விஞ்ஞானியாம் யோகியும்
ஒன்றும் எலாம் தன்னில் உறுவதை – ஒன்றான
தான் எல்லாமாய் உளதைத் தன் ஞானக் கண்ணினால்
தான் காண்பான் என்றே தரி.

(தன்னை நன்கு அறிந்த விஞ்ஞானியான யோகி தன்னுடன் ஒன்றி இணைந்து உலகில் காணப்படும் எல்லாம் தன்னில் இருப்பதையும், ஒன்றேயான ஆன்மாவாகும் தானே எல்லாமாய் இருப்பதையும் தனது ஞானக் கண்ணினால் காண்பான் என்பதை உறுதியாக அறிந்துகொள்.)

இங்கு விஞ்ஞானி என்ற சொல் அனுபவத்தில் காண்பவன் என்ற பொருளைக் குறிக்கிறது. எப்போது ஒருவன் ஆன்ம விசாரம் செய்து அனுபவத்தில் தன்னைத்தான் நன்கு உணர்கிறானோ அப்போதே அவன் யோகியாகிறான். அவனுக்குத் தான் காணும் உலகில் உள்ள எல்லாமுமே, தான் காண்பதால், தன்னுள்ளே இருப்பதாகவும் தெரிகிறது. தன்னிருப்பைச் சார்ந்தே அனைத்தும் காணப்படுவதால் காணப்படும் அனைத்தும் தன்னைப் போலவே ஆன்ம மயமாய் இருப்பதாகவும் உணர்கிறான். இதுதான் யோகம் என்பதன் பொருளாகும்.

சாதாரணமாக ஒருவன் காண்பது என்றால் அங்கு காண்பவன்-காணப்படுவது-காட்சி என்ற முப்புடிகள் வருகின்றன. அது ஒருவனது ஊனக் கண்ணால் காணும் காட்சி. ஒரு யோகியானவன் எல்லாம் ஒன்றே என்று காண்பது அவனது ஞானக்கண் காட்சி. ஒரு யோகிக்கு அந்த சாதாரண ஊனக்கண் காட்சி கிடையாதா என்று கேட்டால் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி அவன் பார்க்கும்போது பார்க்கப்படும் பொருளும் ஆன்மாவாகவே அவனுக்குத் தெரியும். அதாவது முற்றும் உணர்ந்த யோகிக்கும் உலகம் உண்டு; ஆனால் அது ஆன்ம வடிவாய்த் தெரியும். அதனாலேயே அவனைப் பொருத்தவரை எல்லோருமே ஞானம் அடைந்தவர்கள்தான்; சிலர் அதை அறிந்தவர்கள், வேறு சிலர் அதை அறியாதவர்கள்.

சாதாரணப் பார்வையில் எல்லோரும் வேற்றுமையைக் காண்கின்றனர்; யோகியோ அனைத்திலும் ஒற்றுமையைக் காண்கிறான். இந்த இரண்டையும் சம்ஸ்க்ருதத்தில் முறையே “பேத திருஷ்டி” என்றும் “அபேத திருஷ்டி” என்றும் கூறுவார்கள். இங்கு இந்த சித்தர் பாடலை நினைவு கூறுவது நல்லது: “கண்ணும் தானே, காணும் பொருளும் தானே; பேணும் அறமும் தானே, பேசா அனுபூதியும் தானே; எல்லாம் தானே, யாதும் அல்லாதானே”. அதாவது எதுவும் இல்லாதான் யாதுமாகி நிற்கின்றான்.

48. आत्मैवेदं जगत्सर्वमात्मनोsन्यन्न विद्यते |
मृदो यद्वद्घटादीनि स्वात्मानम् सर्वमीक्षते ||

ஆத்மைவேதம் ஜகத்சர்வ மாத்மனோன்யன்ன வித்யதே |
ம்ருதோ யத்வத்கடாதீனி ஸ்வாத்மானம் சர்வமீக்ஷதே ||

ஆன்மாவே இவ்வுலகு எல்லாமாகும் அற்பமும்
ஆன்மாவுக்கு அந்நியமாய் இல்லை – ஆன்மாவாய்க்
காண்பன் எல்லாமும் கடாதிகள் மண்ணின் வேறாய்க்
காண்பதும் உண்டோ கழறு.

(காணப்படுகிற இவ்வுலகில் இருப்பது எல்லாம் ஆன்மாவே ஆகும். எந்தச் சிறிய பொருளை எடுத்துக்கொண்டாலும் அது ஆன்மாவுக்கு அந்நியமானதாக இல்லை. எல்லாவற்றையும் ஆன்மாவாகக் காண்பவன் சட்டி, பானை முதலானவைகளை அவைகள் தயாரிக்கப்படும் மண்ணிலிருந்து வேறானதாகக் காணமுடியுமோ, சொல்! )

ramana1

இருப்பது ஒன்றே என்று சொன்னபின், எல்லாமும் ஆன்மாவே என்று சொல்வதில் உள்ள “எல்லாம்” என்றால் என்ன அர்த்தம்? அது ஆன்மாவை உணராதவனுக்கு விளக்குவதற்காகச் சொல்லப்படும் அலங்காரச் சொல்தான். காணப்படும் சிறு துரும்பு கூட ஆன்மா வடிவம்தான். அது தன்னை அறிந்ததாக இருந்தால் அதுவும் நம்மைப் போல ஆன்மாதான். தன்னை அறியாததாக அது இருந்தாலோ, அதன் இருப்பதைத் தெரிந்துகொள்வதும் ஆன்மாவாகிய ஒருவனால்தான் என்பதால், அதன் இருப்பே ஆன்மாவால்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஆக இவ்வுலகில் காணப்படுகிற எல்லாமும் ஆன்மாவே என்று ஆகிறது.

எப்பொருள் ஆனாலும் அதன் மெய்ப்பொருள் காணவேண்டும். இல்லையென்றால் நாம் காண்பதின் நாமத்தையும் ரூபத்தையும் பார்த்து அவைகள் ஒவ்வொரு பொருளுக்கும் வேறாக இருப்பதால் அந்த வேற்றுமைகளைப் பார்த்து ரசித்துக்கொண்டே இருப்போம். ஒரு கட்டத்தில் அவைகளே உண்மை என்று நினைத்து, அதில் நமது மனமும் லயித்து, அதற்குண்டான உணர்வுகளையும் உள்ளத்தே தோற்றுவிக்கும். அதனால்தான் நாம் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு நமக்கு சிரிப்பும் அழுகையும் வருவதோடு, கல்மனம் படைத்த கதாபாத்திரங்களிடம் நமக்கு கோபமோ, வெறுப்போ வருகிறது. அவையெல்லாம் நாம-ரூபங்களை உண்மையென நம்புவதால் வரும் விளைவுகள்தான். இதேபோல உலகின் நிகழ்வுகளையும் உண்மையென நம்புவோரிடம் அதேபோன்ற சலனங்கள் அல்லாது வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

ஆனால் அனைத்தையும் ஆன்மாவாகக் காண்போன், அதாவது எதனையும் ஆன்மாவுக்கு அன்னியமாகக் காணாதவன், எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதன் மெய்ப்பொருளை மட்டுமே கவனிப்பான். சட்டி, பானை என்று விதவிதமான பெயரும் உருவமும் கொண்ட பொருட்களை அவன் பார்க்கும்போது அவை அனைத்துக்கும் மூல காரணமான மண் ஒன்றுதான் அவனுக்குத் தெரியும். அதேபோல விதவிதமான ஆபரணங்களைப் பார்க்கும் அவனுக்கு அவை அனைத்துக்கும் மதிப்பு அளிக்கும் பொன் ஒன்றுதான் அவன் பார்வையில் பதியும். அந்தப் பார்வைதான் உள்ள பொருளை உள்ளதாகப் பார்க்கும் பார்வை. அதனால் தன்னை உணர்ந்து அனுபவிக்கும் ஞானிக்கு ஆன்மா ஒன்றைத் தவிர வேறு எதுவும் புலப்படாது. இருக்கும் அந்த ஒன்றே பலவாகத் தெரிவதாகவும் அவன் தெளிவான்.

49. जीवन्मुकतस्तु तद्विद्वान् पूर्वापाधिगुणान्स्त्यजेत् |
सच्चिदानदरूपत्वात् भवेद् भ्रमरकीटवत् ||

ஜீவன்முக்தஸ்து தத்வித்வான்பூர்வாபாதிகுணான்ச்த்யஜேத் |
சச்சிதானந்தரூபத்வாத் பவேத்ப்ரமரகீடவத் ||

சீவன் முக்தன் வித்வான் தேரு அதன் முன் தன்னை
மேவும் உபாதி குணம் விட்டு உடனே – மேவுவான்
தன்னுரு சத்சித்தின்பை தான்கீடம் வண்டின் உருத்
தன்னையுறல் போலத் தரி.

(தனது உண்மை சொரூபத்தை உணர்ந்து ஜீவன்முக்தனான சிறப்பை அடைந்தவன், தனக்கு முன்பு இருந்த உடல், மனம், புத்தி போன்ற உபாதிகளையும், சத்வ-ரஜ-தமோ குணங்களையும் நீக்கிவிட்டுத் தன் சொரூபமான சத்-சித்-ஆனந்த நிலையை அடைகிறான். வண்டினால் கொட்டப்பட்ட புழு வண்டாகவே ஆவதுபோல உனது உண்மை நிலையில் நீ இருப்பாய்.)

தூலமான நம் உடலும், நுண்ணியதான நம் மனம், புத்தி போன்றவைகளும் நமது பாவனைகளாலும், எண்ணங்களாலும், செயல்களாலும் நாமே வரவழைத்துக் கொண்டதுதான். சக்கர வியூகத்தில் ஒருவன் நுழைவதும், அதே கவனத்துடன் அந்தப் பாதையிலேயே அவனால் திரும்பி வெளியே வருவதும் இயலும்.

நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகின்றாய் என்பதால் “பிரம்மத்தை நினைத்து தியானிப்பவன் பிரம்மமாகவே ஆகின்றான்” என்றாகிறது. வண்டு தன்னைக் கொட்டுமே என்று வண்டைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பதால், வண்டு கொட்டுவதால் மட்டும் அன்றி புழு தன் சிந்தனையினாலும் வண்டாகவே ஆகின்றது என்பது இங்கு சொல்லப்பட்டுள்ள உவமை. அதேபோல ஒருவன் தன் மனம், புத்தி இவைகளின் துணைகொண்டு மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனித்தே காட்டும் தன் உடலை ஒரு பொருட்டாக நினைக்காது, சதாசர்வ காலமும் ஆன்மாவைப் பற்றியே சிந்தித்து, அதையே தியானித்து, அந்தப் பாவனையில் விடாப்பிடியாய் இருந்தால், வண்டால் பலமுறை கொட்டப்பட்ட புழு அதையே நினைத்து தானும் வண்டாகவே ஆவதுபோல அவனும் தன் ஆன்ம சொரூபத்தை உணர்வான்.

அந்த நிலையை ஒருவன் அடைவது என்பது அவனது வாழ்நாளின் இறுதியிலோ அல்லது இனி வரப்போகும் பிறவியிலோ என்பது அவசியமில்லை. இந்தப் பிறவியிலேயே அவனது உயிர் இருக்கும்போதே அது முடியும் என்பதைக் கோடிட்டுக்காட்ட அவனை “ஜீவன் முக்தன்” ஆகிறான் என்று குறிப்பிடுகிறார். ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் நாம் நன்கறிந்த ஜீவன் முக்தர்கள்.

yoga_smallஒருவன் படிக்கும்போது அதை ஞாபகத்தில் இருத்திக்கொள்ள திரும்பத் திரும்பப் படிப்பதும், படித்ததைச் சொல்லிப் பார்ப்பதும், படித்ததைச் சிந்தித்துப் பார்ப்பதும் போன்ற உலகியல் முறைகள்தான் ஆன்மீகச் சாதனையிலும் முன்னேறுவதற்குமான வழிகள். முன்னது வெளிப்பார்வை கொண்டு செய்யப்படுவது, பின்னது உள்முகப் பார்வை கொண்டு பின்பற்றப்படுவது. முதலில் அதிரடியாகக் காணப்படும் உடலைப் பொருட்படுத்தாது இருப்பது. ரமணர் போன்ற மகரிஷிகள் அறுவை சிகிச்சைக்கு முன் “மயக்க மருந்து அவசியமில்லை, இந்த உடல் கட்டை போன்றதே, அதைத் தாராளமாகக் கத்தி கொண்டு கீறலாம்” என்று சொல்லலாம், எல்லா சாதகர்களுக்கும் அது முடியுமா என்று கேட்பது நியாயம்தான். அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஆனாலும் ஒரு அவசியத் தேவை என்கிறபோது ஒருவன் தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாது அடாது மழை பெய்தாலும் விடாது தன் கடமையைச் செய்துமுடிக்கிறான் அல்லவா, அதுபோன்ற மனநிலை சாதகனுக்கு முதலில் இருந்தால் அது போதும். பழகப் பழக தனக்கு உடல் இருப்பதும் தெரியாமல் போகும். அறுவை சிகிச்சை முடிந்ததும், “தங்களுக்கு வலியே இல்லையா?” என்று கேட்ட தொண்டருக்கு “அதற்கென்ன, வலி இல்லாமல் போகுமா, அது பாட்டுக்கு இருக்கிறது” என்றாராம் ரமணர். அத்தகைய பொருட்படுத்தாத மனோநிலை வேண்டும். அது மனத்தால் உடலைக் கட்டுப்படுத்துவது.

அதேபோல எது வேண்டுமோ அதைப்பற்றி மட்டும் நினைப்பது என்று புத்தியால் அலைபாயும் மனத்தையும், ஆன்மாவைப் பற்றிய ஒரே ஒரு சிந்தனையால் மட்டுமே கூர்மையான புத்தியையும் கட்டுப்படுத்துவது என்பது படிப்படியாகச் செய்யப்பட வேண்டியது. எவ்வளவுக்கு எவ்வளவு நமது சிந்தனைகள் ஆழமாகப் பாய்ந்து நமக்குள்ளே வாசனைகளைத் தோற்றுவித்துள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவைகளை விடுவிக்க நமது பயிற்சிகளும், முயற்சிகளும் தேவைப்படும். சக்கர வியூகத்தில் முதல் நிலையிலேயே இருப்பவர்கள் கூடிய விரைவில் வெளியே வரமுடியும்; மிகவும் ஆழ்ந்து உள்ளே போனவர்களுக்கு அதற்கு வேண்டிய காலம் தேவைப்படும். எதிலும் போலவே இதிலும் விடாமுயற்சி வேண்டும்.

இறுதியில் தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உபாதிகள் அகல, நல்லது-கெட்டது-தேர்ந்தது போன்ற விதவிதமாக எதனையும் அலசிக் காணும் குணங்களும் நம்மை விட்டொழிய, ஆன்மாவைப் பற்றிய சிந்தனை ஒன்றினால் மட்டுமே ஆன்மாவாகவே அமர்ந்திருக்கும் நமது இயல்பான நிலை நமக்கு வந்தடையும். ஆனாலும் அது நமக்கு புதியதாக வந்துள்ள நிலை அல்ல என்பதை அதை அனுபவிக்கும் ஆன்றோர்கள் நமக்குக் காட்டி அருளுகின்றனர்.

(தொடரும்)

3 Replies to “ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 17”

  1. திரு எஸ் இராமன் அவர்களின் இந்த தொடர் நல்ல ஒளி விளக்காக அமைகிறது. நமது நன்றிகள்.

  2. தங்கள் எழுத்தாற்றல் மிக இயல்பாக உள்ளது. படிக்கும்போது தன்னை மறந்து லயித்து உள்ளே இழுத்துவிடுகிறது. கட்டுரை முடிந்த போது தான் அதில் இருந்து வெளியே மீண்டு வரமுடிகிறது. ஆன்மாவின் இயல்பை எளிய விளக்கங்கள் மூலம் எளிதாக புரியும்படி உள்ளது. தங்கள் எழுத்துப்பணி தொடர்ந்து சிறப்புற வாழ்த்துக்கள்.
    இரா. கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *