சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி

முந்தைய பகுதி

தொடர்ச்சி..

எங்கெல்லாமோ அவதூதராகச் சுற்றி அலைந்த சதாசிவ பிரம்மேந்திரர் நெரூர் வந்தடைகிறார். அவருக்கு பலர் சீடர்களாக விளங்கினர். அப்படி இருந்த சில சீடர்களில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர், மைசூர் மகாராஜா, தஞ்சாவூர் ராஜா ஆகியோர் மனங்களில் தங்களது குருநாதர் தங்களை அழைப்பதாக உணர்ந்து அவர்கள் அனைவரும் நெரூர் வந்து சேர்ந்தனர். வந்து சேர்ந்தவர்களிடம் தான் ஜீவசமாதி அடையப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி சுவாமி சொன்னார். இதனைக் கேட்ட மன்னர்கள் மனம் கலங்கினர். குருநாதரிடம் வேண்டினர். அவர் சொன்னார், இவ்வுடல் ஜீவசமாதி அடைந்தால் என்ன, நீங்கள் மனத்தால் நினைத்தாலே நான் உங்களோடு இருப்பேன் அல்லவா என்று சமாதானம் செய்தார். இவ் வுடல் பூமிக்கடியில் புதைந்து கிடப்பது இது முதல் தடவை அல்லவே. முன்பொரு முறை நான் காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மணலுக்கடியில் பல காலம் இருந்தது உங்களுக்குத் தெரியாதோ என்றார்.

குருநாதரின் விருப்பப்படி அவர் ஜீவசமாதி அடைவதற்கான இடத்தைத் தயார் செய்தார்கள். ஜீவசமாதி அடைவது என்பதற்கு சில விதிமுறைகள் உண்டு. அவை “திருமந்திரம்” நூலில் விரிவாகப் பேசப்படுகிறது. திருமந்திரம் 7ஆம் தந்திரத்தில் ‘சமாதி கிரியை’ எனும் தலைப்பில் பல பாடல்கள் உண்டு.

அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரின் நுண்செரு
வந்து நாய் நரிக்குண வாகும் வையகமே.

மகா ஞானி ஒருவனின் உடல் மற்றவர்களைப் போல மாண்டுபோன பின் தீயிலிட்டு எரித்தோமானால், நாட்டு மக்கள் எல்லாம் வெப்பு நோயினால் பீடிக்கப்பட்டு வருந்துவர். அவ்வுடல் கவனிக்க ஆளில்லாமல் அழுகிக் கிடந்து நாய்களும், நரிகளும் அவர் உடலைக் கடித்து உண்ணுமானால் உலகில் பகை மூண்டு நாட்டு மக்கள் நாய் நரிகளுக்கு உணவாகிவிடுவர்.

எண்ணிலா ஞானி உடல் எரி தாவிடின்
அண்ணல் தன் கோயில் அழலிட்டதாம் ஒக்கும்
மண்ணில் மழை விழா, வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.

ஞானி ஒருவரின் உடலைத் தீயிலிட்டு எரித்தால், சிவபெருமான் கோயில் கொண்டருளும் ஆலயத்தைத் தீயிட்டழித்தற்கு ஒக்கும். அப்படிப்பட்ட நாட்டில் மழை பெய்யாது. பஞ்சம் தோன்றும், எண்ணற்கரி மன்னர்கள் முடி துறப்பர்.

புண்ணியமாம் அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுல கெல்லாம் மயங்கும் அனல் மண்டியே.

ஞானியின் உடலைப் புதைப்பது புண்ணிய காரியம். மாறாக அவரது உடலை தீயில் சுட்டு எரித்தால் நாட்டில் அழிவுகள் நேரும். அப்படி உடலைப் புதைக்காமல் மண்ணில் சிதைந்து போகுமாறு விட்டுவிட்டால் உலகத்தின் அழகு கெடும். உலகம் எங்கும் தீப்பிடித்து கெடும்.

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகை செய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள் பெறுவாரே.

ஞானி ஒருவர் இறையருள் பெற்று பின்னர் உடலைவிட நினைத்தால், அந்த உடம்பை குகை ஒன்றை நிறுவி, அதில் அவரை இருத்திடல் வேண்டும். அப்படி செய்தோமானால் அரசர்களும் குடிமக்களும் அளவற்ற இன்பத்தை அடைவார்கள். இறைவன் அருள் அவர்களுக்குக் கிட்டும்.

நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து
குவைமிகு சூழ வைஞ் சாணாகக் கோட்டித்து
அவமிகு குகை முக்கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மாசனமே.

குகை என்பது தரையில் தோண்டப்படும் குழி. அது எப்படி இருக்க வேண்டும்? ஒன்பது சாண் அளவுக்குக் குறையாமல் ஆழம் இருக்க வேண்டும். அப்படி தோண்டும் மண்ணைக் குழியைச் சுற்றி ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்டி, அந்தக் குழியை முக்கோண வடிவத்தில் பக்கம் ஒன்றுக்கு மூன்று சாண் அளவுள்ளதாய்ச் செய்து அந்த குகைபோன்ற குழியில் அவரது உடலை பத்மாசனமாக உட்கார வைத்திட வேண்டும். அந்த குகைபோன்ற குழி எங்கு அமைக்கப்பட வேண்டும்?

தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரினற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான் குகைக்கு எய்து மிடங்களே.

ஞானியின் உடலை அடக்கம் செய்யும் இடங்கள் எங்கெல்லாம் அமைக்கலாம் தெரியுமா? சமாதி ஆனவன் வீட்டின் பக்கத்தில், நடமாடும் சாலையோரத்தில், குளக்கரையில், ஆற்றின் நடுவில், பூஞ்சோலையில், நகரத்தில் நல்ல சுத்தமான பூமியில், அழகான கானகம், உயர்ந்த மலைச் சாரல் ஆகிய இடங்களே உகந்த இடங்களாம். சமாதிக்கான குகை எனும் குழி அப்படி அமைக்கப்பட வேண்டும்?

நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாத நவபாத நேர்விழப்
பொற்பம ரோசமு மூன்றுக்கு மூன்றணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே.

அமைக்கப்படுகின்ற குழி நான்கு புறமும் காலடியால் ஐந்து அடி அகலம், ஒன்பது அடி உயரம் இருத்தல் வேண்டும். ஞானியின் உடலை அந்தக் குழியில் சமாதி வைக்கும்போது அதில் இடப்பட வேண்டிய பொருட்கள் எவை?

பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்த தன் மேலாசனம் இட்டு
முஞ்சிப் படுத்து வெண்ணீரிட்டு அதன் மேலே
பொன்செய் நற் சுண்ணம் பொதியலுமாமே.

பொன், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய ஐந்து வகை உலோகங்களையும், வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், பவழம், கோமேதகம், புஷ்பராகம், குருவிந்தம், முத்து ஆகிய நவமணிகளையும் பரப்பி வைத்து, அதன் மீது இருக்கை அமைத்து, தர்ப்பைப் புல் பரப்பி, விபூதியை நிறைய இட்டுவைக்க வேண்டும். அதன் மூது சுண்ணப் பொடியை இட்டு வைக்க வேண்டும். பிறகு?

நள்குகை நால்வட்டம் படுத்ததன் மேற்சாரக்
கள்ளவிழ் தாமம் களபம் கத்தூரியும்
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடுவீரே.

குழியின் அடியில் நடுவாக சதுரமாகச் செய்து அதன் மீது தேனொழுகும் மலர்கள், சந்தனம், கஸ்தூரி ஆகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் போன்றவற்றைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும். நல்ல பிரகாசமான தீப ஒளியைக் குழிக்குள் காட்ட வேண்டும்.

ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய
மீதினில் இட்டு ஆசனத்தின் மேல் வைத்துப்
போதறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடுவீரே.

உடலெங்கும் திருநீற்றால் பூசி மேலாடை போர்த்தியதுபோல செய்து, உடலை இருக்கையில் அமர்த்தி, மலர், அருகம்புல், நறுமணப் பொடி, வெண்ணீறு ஆகியவற்றை அணிவித்துக் குழியில் வைத்து நான்கு பக்கமும் மண்ணைச் சரித்து மூடிட வேண்டும். குப்பாயம் எனும் சொல்லுக்கு மேல்சட்டை என்று பொருள். எனக்கு ஒரு குப்பாயம் வாங்கினேன் என்று சொல்லிப் பழகலாமே.

ஆக ஒரு மகா ஞானியை சமாதி இடுதல் என்பது ஏதோ ஒரு குழியை வெட்டி அதில் வைத்து மூடிவிடுவது அல்ல. அந்த குழி எப்படி வெட்டப்பட வேண்டும், எங்கெங்கு அமைக்கலாம், அதில் என்னவெல்லாம் இட்டு வைக்க வேண்டும், உடலை என்னவெல்லாம் செய்து உள்ளே வைக்க வேண்டும், எப்படி மூட வேண்டும் என்பதற்கெல்லாம் விதிமுறைகள் இருப்பது திருமந்திரம் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

sadasiva-brahmendra-samadhi

அந்த வழியில் தன் உடலை ஜீவசமாதி வைத்திட வேண்டுமென்று சதாசிவ பிரம்மேந்திரர் உத்தரவு இட்டார். அவர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விதிமுறைகளின் அமைக்கப்பட்ட குகை போன்ற குழியில் இறங்கி குருநாதர் அமர்ந்து விட்டார். திருமந்திரம் கூறியுள்ளபடி அனைத்தையும் சரிவர செய்தபின் அவர் இறங்கிய குழியை இட்டு மூடினார்கள்.

அவர் சமாதியடைந்த ஒன்பதாம் நாள் அவர் சமாதியின் மீது ஒரு வில்வ மரம் துளிர்விட்டு எழுந்தது. அவர் முன்பே தெரிவித்திருந்தபடி 12ஆம் நாள் காசியிலிருந்து ஒரு பிரம்மச்சாரி வந்தார். அவர் அங்கிருந்து ஒரு சிவலிங்கம் கொண்டு வந்திருந்தார். அந்த சிவலிங்கத்தை சதாசிவ பிரம்மேந்திரர் சமாதிக்குக் கிழக்காக வைத்து லிங்கம் பிரதிஷ்ட செய்யப்பட்டது. அவர் சமாதியில் எழுந்த வில்வ மரம் முதலில் பத்தடிக்கு நேராக வளர்ந்து பின்னர் மூன்றாகக் கிளை விட்டது. அதனை பிரம்ம, விஷ்ணு, சிவன் என்று மக்கள் வழிபடலாயினர். இப்படியாக அந்த மகான் சமாதியான இடம் இன்று அவருடைய அதிஷ்டானமாகக் கட்டி சிறப்பாக வழிபட்டு வருகின்றனர். வேண்டியவருக்கு வேண்டியதை அருளும் அற்புத சக்தியாக அங்கு அவர் அருள்பாலித்து வருகிறார். அங்கு ஒரு முறை சென்று அந்த ஜீவசமாதியில் அவரை வணங்கி வந்தால் அதன் பலனை நிச்சயம் ஒவ்வொருவரும் உணர்வர்.

21 Replies to “சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி”

  1. பிரம்மேந்திரர் குறித்த பகிர்வுக்கு நன்றி. ஒரு முறையாவது போகணும்னு எண்ணம். எப்போ வாய்க்குமோ பார்க்கலாம்.

  2. ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் சமாதியடைந்த நிகழ்ச்சியை கட்டுரையாக ஆக்கி அனுப்பியதை “தமிழ் ஹிந்து”வில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. யான் பெற்ற பேறு இவ்வையகம் பெறுதல் வேண்டும் என்பதே என் கருத்து. ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் அமைதியான பிருந்தாவனத்துக்குச் சென்று வழிபாட்டு நன்மைகளை அனைவரும் அடைய பிரார்திக்கிறேன்.

  3. திருமந்திரம் அனைவராலும் படித்து பயன்படவேண்டியது .மகான் அருள் வேண்டி காத்திருக்கும் அன்பன் .

  4. விஜநநதீ₃ குஞ்ஜக்₃ருʼஹே
    மஞ்ஜுல புலிநைகமஞ்ஜுதர தல்பே |
    ஶயநம் குர்வாணாய
    ப்ரணதிம் குர்ம​: ஸதா₃ஶிவேந்த்₃ராய || 3 ||

    – ஸ்ரீ ப்ரம்மேந்த்ர ஸ்துதி

  5. சதாசிவ பிர்மேந்திரரின் ஜீவ சமாதிவழியாக திருமந்திரமும் பயின்றோம். நல்லதோர் கட்டுரரை. ஆசிரியருக்கு நன்றி.

    சிருங்கேரி சந்நிதானம் அவர்கள் சமீபத்தில் கரூர் வந்தபோது அவ்ர் நெரூர் வந்த நாளில் அவரை அங்கே வைத்து தரிசிக்க அங்கே விரைந்தோம். நாங்கள் லால்குடியிலிருந்து நெரூர் அடையும் முன்னரே சந்நிதானத்தின் விஜயம் முடிந்துவிட்டது. இருப்பினும் ஜீவசமாதியருகே நீண்ட நேரம் ஆன்ம பரிசோதனை செய்து கொண்டு அமர்ந்திருந்தோம்.பின்னர் சந்நிதானத்தை கரூரில் வந்து தரிசித்தோம்.

    குப்பாயம் என்ற சொல் இன்னும் மலையாளத்தில் வழங்குகிறது.பாலக்காட்டு பிராமணரான என் சித்தப்பா குப்பாயத்தைக் கொண்டு வரச் சொல்ல அது இன்னதென்று அறியாமல் என் சிற்றன்னை விழித்ததை நினைத்து இன்றும் சிரித்துக் கொள்கிறேன்.

  6. ஐந்து உலோகங்கள் பொன், வெள்ளி, செம்பு, வெள்ளீயம், துத்தநாகம், என்பவை. இரும்பு சேர்க்கக்கூடாது. மற்றப்படி இந்தப்பதிவு நன்றாக உள்ளது.

  7. இந்த மகா சித்தர் அவர்களின் ஜீவ சமாதி கருர் அருகில் நெரூர் என்னும் இடத்தில் காவெரி ஆற்றின் கரையில் அமைந்த்துள்ளது . கருரில் இருந்து நெரூர்க்கு பஸ் உண்டு ! மன அமைதி வேண்டுவோர் அவசியம் ஒருமுறையேனும் சென்று தரிசித்து வர அனுகூலம் உண்டாகும் !

  8. Sometime back, I read this book called ” The Devadasi and the Saint”. This is the true life story of Bangalore Nagarathanamma and Saint Thyagaraja of Carnatic trinity fame. There is a detailed description regarding the preparations undertaken for the Saint Thyagaraja’s Samadhi. It was actually all done under His supervision. A pit was dug and salt was poured into that pit. I cannot remember the exact quantity of salt required or other ingredients used. Plus, there was no mention of spreading of any diamonds and precious stones in the Samadhi.
    ? Different customs in different places

  9. முதல் பாகத்துடன் வ்யாசம் முற்றுப்பெற்றது என்று நினைத்திருந்தேன்.

    மிக அழகாக திருமந்திரம் வாயிலாக ஜீவ சமாதி எப்படி நிர்மாணம் செய்யப்பட வேண்டும் போன்ற விளக்கங்களுடன் அழகாக அமைந்துள்ளது இந்த பாகம்.

    ச்ருங்கேரியில் ஆசார்யவர்யராய் இருந்த ஸ்ரீ வ்ருத்த ந்ருஸிம்ஹ பாரதி மஹாஸ்வாமிந: அவர்கள் 45 ச்லோகங்களால் ஆன ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்த்ரஸ்தவ: என்றொரு ஸ்தோத்ரம் அருளிச் செய்துள்ளார். அது ப்ரசுரமாகி வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். அதனின்று சில துளிகள் :-

    विजननदीकुञ्जगृहे मञ्जुलपुलिनैर्मञ्जुतरतल्पे ।
    शमनाय मोहवितते: प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥

    விஜன நதீ3 குஞ்ச3 க்3ருஹே மஞ்சு3ல புலினை: மஞ்சு3 தரதல்பே
    சமனாய மோஹவிததே: ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்3ராய (3)

    ஜன நடமாட்டமில்லாத நதிக்கரைகளிலும், நிகுஞ்சங்களிலும், மணல்திட்டுக்களிலும், (அவற்றை) அழகிய படுக்கையாகக்கொண்டு யோகநித்ரை செய்பவருமான ஸதாசிவப்ரம்ஹேந்த்ரரை வணங்குவோம்.

    शममुखषट्कमुमुक्षाविवेकवैराग्यदाननिरताय ।
    दासानतजनततये प्रणतिम् कुर्म: सदाशिवेन्द्राय ॥

    சமமுக2 ஷட்க முமுக்ஷாவிவேக வைராக்3யதான நிரதாய
    தாஸாநதஜனததயே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்3ராய (7)

    புலனடக்கம் முதலிய ஆறு குணங்களையும், விவேக வைராக்யங்களையும் தருபவரும், தாஸர்களாகிய ஜனக்கூட்டமுடையவருமான ஸதாசிவப்ரம்ஹேந்த்ரரை வணங்குவோம்.

    सिद्धान्तकल्पवल्लीमुखकृतिकर्त्रे कपालिभक्तिकृते ।
    करतलमुक्तिफलाय प्रणतिम् कुर्म: सदाशिवेन्द्राय ॥

    ஸித்3தா4ந்த கல்பவல்லீ முகக்ருதிகர்த்ரே கபாலி ப4க்திக்ருதே
    கரதல முக்தி ப2லாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய (8)

    ஸித்தாந்த கல்பவல்லீ முதலிய க்ரந்தங்களைச் செய்தவரும், சிவபக்தரும், (கபாலி பக்திக்ருதே) கையில் முக்தியைத் தருபவருமான ஸதாசிவப்ரம்ஹேந்த்ரரை வணங்குவோம்.

    பிபரே ராமரஸம் மற்றும் காயதி ராதாம் வனமாலி போன்று ராம மற்றும் க்ருஷ்ண ரஸம் ததும்பும் அமுதினிய கானங்களைப் பொழிந்தவரான ஸதாசிவப்ரம்ஹேந்த்ரரை வ்யாசத்தின் ஆசிரியர் சிவபக்தராகச் சொல்கிறாரே என நினைத்தேன். ஒருக்கால் வ்யாசத்தின் ஆசிரியர் சிவபக்தி நிஷ்டராய் இருக்கக்கூடும்; ஆகையால் அவ்வாறு சொல்லியிருக்க வேணும் என நினைத்தேன். இதை வாசித்ததும் என் தலையில் குட்டிக் கொண்டேன். வ்யாசத்தின் ஆசிரியர் சொன்ன விஷயம் கல்பிதமன்று. சான்றோர் வாக்கு எனப்புரிந்தது. நாமறியும் விஷயம் சரி அடுத்தவர் சொல்வது கல்பிதம் என்று எண்ணுவது அல்பமதி; ஆராய்ந்தறிவதே சரி என்பதும் கூடவே புரிந்தது

    தொடர்கிறது

  10. उपधानीकृतबाहुपरिरब्धविरक्तिरामो यः ।
    वसनीकृतखायास्मै प्रणतिं कुर्म: सदाशिवेन्द्राय ॥

    உபதா4னீக்ருத பா3ஹுபரிரப்3த4 விரக்திராமோ ய:
    வஸனீக்ருத கா2யாஸ்மை ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்3ராய (15)

    கையையே தலையணையாக வைத்துப்படுத்து விரக்தியில் ரமிப்பவரும், திகம்பரருமான ஸதாசிவ ப்ரம்ஹேந்த்ரரை வணங்குவோம்.

    यो ऽ नुत्पन्नविकारो बाहौ म्लेच्छेन छिन्नपतितेपि ।
    अविदितममतायास्मै प्रणतिं कुर्म: सदाशिवेन्द्राय ॥

    ய: அனுத்பன்ன விகார: பா3ஹௌ ம்லேச்சே2ன சி2ன்னபதிதேபி
    அவிதி3த மமதாயாஸ்மை ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்3ராய (18)

    ம்லேச்சனால் கை வெட்டப்பட்ட போதிலும் எவர் மாறவில்லையோ, தேஹத்தில் மமதையோ இல்லாத (அந்த) ஸதாசிவ ப்ரம்ஹேந்த்ரரை வணங்குவோம்.

    पुरा यवनकर्तनस्रवदमन्दरक्तोऽपि यः
    पुनः पदसरोरुहप्रणतमेनमेनोनिधिम् ।
    कृपापरवशंपदं पतनवर्जितं प्रापयत्
    सदाशिवयतिः स मय्यनवधिं कृपां सिन्चतु ॥

    புரா யவனகர்தனஸ்ரவத3மந்தரக்த: அபி ய:
    புன: பத3ஸரோருஹ ப்ரணதமேநமேநோநிதி4ம்
    க்ருபாபரவசம்பத3ம் பதநவர்ஜிதம் ப்ராபயத்
    ஸதா3சிவயதி: ஸ மய்யனவதி4ம் க்ருபாம் சிஞ்சது (39)

    முன்னர் யவனன் வெட்டிய கையில் ரத்தம் பெருகியும் சரீராபிமானமற்று நடந்தவரே! அவனே மறுபடியும் வணங்கி மன்னிப்பும் கேட்டும் அஹம்பாவமில்லாதவரே! ஈச்வரக்ருபையாலேயே கிடைக்கும் புனராவ்ருத்தியற்ற பரமபதம் கொடுப்பவரே! ஸதாசிவயதிகளே! என்னிடம் எல்லையற்ற க்ருபையைப்பொழியுங்கள்.

    தொடர்கிறது

  11. न्यपतन्सुमानि मूर्धनि येनोच्चरितेषु नामसुग्रस्य ।
    तस्मै शुद्धवराय प्रणतिं कुर्म: सदाशिवेन्द्राय ॥

    ந்யபதன் ஸுமானி மூர்த்3த4னி யேநோச்சரிதேஷு நாமஸுக்ரஸ்ய
    தஸ்மை சுத்3த4வராய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்3ராய (19)

    எவர் சிவநாமத்தைச் சொன்னதுமே சிரஸில் மலர்மாரி விழுந்ததோ அந்த பரமசுத்தரான ஸதாசிவ ப்ரம்ஹேந்த்ரரை வணங்குவோம்.

    तारकविद्यादात्रे तारापतिगर्ववारकास्याय ।
    तारकजपप्रणवाय प्रणतिम् कुर्म: सदाशिवेन्द्राय ॥

    தாரக வித்யாதாத்ரே தாராபதி கர்வவாரகாஸ்யாய
    தாரகஜப ப்ரவணாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்3ராய (25)

    தாரக (ராம ) மந்த்ரத்தை உபதேசிப்பவரும் சந்த்ரனின் கர்வத்தை அடக்கும் முகசோபை உள்ளவரும் தாரகமந்த்ரத்தை ஜபிப்பவருமான ஸதாசிவ ப்ரம்ஹேந்த்ரரை வணங்குவோம்.

    भवसिन्धुतारयित्रे भवभक्ताय प्रणम्रवश्याय ।
    भवबन्धविरहिताय प्रणतिम् कुर्म: सदाशिवेन्द्राय ॥

    பவஸிந்து தாரயித்ரே பவபக்தாய ப்ரணம்ரவச்யாய
    பவபந்த விரஹிதாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்3ராய (28)

    ஸம்சாரக்கடலைத் தாண்டுவிப்பவரும், சிவபக்தரும் (பவபக்தாய), பக்தர்களுக்கு வசமானவரும், பந்தமற்றவருமான ஸதாசிவ ப்ரம்ஹேந்த்ரரை வணங்குவோம்.

    त्रिविधस्यापि त्यागं वपुषः कर्तुं स्थलत्रये इव ।
    अकरोत्समाधिमस्मै प्रणतिं कुर्म: सदाशिवेन्द्राय ॥

    த்ரிவிதஸ்யாபி த்யாகம் வபுஷ: கர்தும் ஸ்தலத்ரயே இவ
    அகரோத்ஸமாதிமஸ்மை ப்ரணதிம் குர்ம: ஸதாசிவாய

    (ஸ்தூலதேஹம், ஸூக்ஷ்மசரீரம், காரண சரீரம் என்ற) மூன்று தேஹத்தை (நெரூர், புதுக்கோட்டை, மானாமதுரை என்ற) மூன்று இடத்தில் விட்டு மஹாசமாதியில் இருப்பவரான ஸதாசிவ ப்ரம்ஹேந்த்ரரை வணங்குவோம்.

    பலப்பல ச்லோகங்களில் ஸ்ரீ ஸதாசிவப்ரஹ்மேந்த்ரரின் சிவ பக்தியைச் சொல்லிய ஆசார்யவர்யர் இவருடைய தாரக நாம நிஷ்டையையும் சொல்லியது உள்ளபடி அத்வைத வழிப்படியான சிவவிஷ்ணு அபேதத்தைச் சொல்வதாகப் புரிந்துகொள்கிறேன்.

    இந்த ச்லோகங்களைப் பகிரும் படி ப்ரேரித்த இந்த வ்யாசத்திற்கும் அதனைச் சமர்ப்பித்த ஸ்ரீ தஞ்சை கோபால மஹாசயருக்கும் என் ப்ரணாமங்கள்.

  12. Indian comment about the Diamonds and other precious stones to have connection with the other planets and to the universe and thus create vibrations to this world so as help the people in this normal world. Their Sakthi is still there, normally they can go back after while and become a star in the universe — That is how Ramanar went — Most of them would like to stay here

  13. நன்றி. நமஸ்காரங்கள்.
    ஸதாசிவ ப்ரம்மேந்திரர்கள் ஸமாதிகள் ஐந்து இடங்களில் உள்ளதாக சிவன் சார் குறிப்பிட்டுள்ளார்கள்.
    நெரூர், மானாமதுரை, பூரி, கராச்சி, காசி .
    வாழ்க பாரதம்!

  14. I want to share some more details on Satuguru Sadasiva Bramhendral here:

    His Guru was Sri Paramashivendra Sarawathi who was also called Sri Upanishad Bramham. He was the only one to write commentary on all the 108 upanishads. The Mutt where he lived is still there in Kanchipuram, known by the name of Upanishad Bramham Mutt. It is located next to the Sri Kailasanathar temple. There is a very small board which will help to locate this place.

    Inside this Mutt, you can find the deities worshipped by Sri Paramshivendra Sarawathi. We can find a huge Rama Yantra in stone, which is perhaps the only kind in this world. This is also said to be the place where Sri Lalitha Sahasranama was instructed to Sage Agastya by Lord Hayagriva, There is a temple with Hayagriva Linga inside the Mutt. The large number of Vigrahas used in daily puja are kept in the Mutt, but they are in a poorly maintained condition. There is a also a Rudraksha Mandapam which a Ardhaneeswara Spatika Linga.There is also a small tank, on the sides of which we can find samadhis of some sanyasis. Kanchi Paramacharya used to visit this place frequently and perform Tapas.
    The family which maintains it stays inside the mutt. They are doing their best to maintain it but It is very unfortunate to see such a great place in such a lost condition.
    The priest told me that the Jeeva Samadhi of Sri Paramashivendra saraswathi is located in a temple of the Sarva Teertham tank in Kanchipuram.
    I was surprised to note that most of the people didnt know about the sarva Teertham tank. I finally found out that it was around 0.5 kms from the Kanchi Mutt. On the banks of the Sarva Teertham tank, there were so many shiva temples ( Needless to say, all of them in poor state). I could not exactly locate the Jeeva Samadhi, since there were so many temples. This tank must have been similar to the Maha Maham tank in Kumbakonam. In fact, the current head of the Kanchi Mutt was initiated on the banks of the Sarva Teertham tank ( Ref: https://www.periva.proboards.com/thread/3295?page=1). I request TamilHindu.com to visit this place and write an article, so that people are aware.

    Sri Sadasiva Bramhendra attained Maha Samadhi at 3 places simultaneously – Nerur, Karachi and Manamadurai. I donot know if the samadhi is still there in Karachi or by this time, it would have converted to something else.
    But the Samadhi is still there in Manamadurai, in Someswarar Shiva temple and an annual Aradhana is also being conducted there.

    Sri Sadasiva Bramendra initiated the Pudukottai raja into Dakshinamoorthy Mantra and wrote the mantra on sand . The king took the sand and kept it for worship by building a Dakshinamoorthy temple. This worship was being continued as a tradition, till recently. If anyone is aware of the location of Dakshinamoorthy temple in Pudukottai, it will be of great help.

    He also installed Sri Hanuman at Prasanna Venkateswara Swami Shrine in Tanjavur. (Ref: https://vayusutha.in/vs4/temple30.html)

    btw, Thanks TamilHindu.com for a great article. But I believe there are lot more details, that could be added here. I can provide some more information, if needed.

  15. dear sir,
    thanks a lot for have published the news item on sadasiva bramendrar

    v.bala

  16. காஞ்சியில் வாழ்ந்த உபநிஷத் பிரம்மம் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் தந்தைக்கு நண்பர். அவர் அழைப்பின் பேரில்தான் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் காஞ்சிபுரத்துக்கும், வாலாஜாபாத்துக்கும் பின்னர் திருமலை திருப்பதிக்கும் சென்றிருக்கிறார். இவருடைய பெயரால் காஞ்சியில் ஒரு மடம் இருக்கிறது. கோவூர் முதலியாரும் அழைத்ததால் ஸ்ரீ தியாகராஜர் கோவூருக்கும், சென்னையில் திருவோற்றியூருக்கும் சென்றார். அப்படியானால் இந்த உபநிஷத் பிரம்மம், ஸ்ரீ தியாகராஜர், சதாசிவ பிரம்மேந்திரர் ஆகியோர் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகிறது.

  17. சதாசிவ பிரும்மத்தின் வரலாறு மிக நன்றாக பதிவேற்றப்பட்டுள்ளது. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *