கை கொடுத்த காரிகை: அப்பூதி அடிகள் மனைவி

சோழ வளநாட்டில் காவிரியாற்றின் கரையிலுள்ள சிவத்தலங்களுள் திருப்பழனமும் ஒன்று. திருவையாற்றுக்கு சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலம் ஸப்தஸ்தானங்களுள் இரண்டாவது தலமாகும். இத் தலத்தின் அருகில் சந்திரன் வழிபட்ட தலமாகிய திங்களூர் விளங்குகிறது. சந்திரன் வழிபட்ட தலம் என்பதை விட அப்பூதியடிகளால் பெயரும் புகழும் பெற்றது அவ்வூர்.

Appuuthi 1

திங்களூரில் வாழ்ந்து வந்த அப்பூதி அடிகள் என்பவர் திருநாவுக்கரசருக்கு அடியவராக, அன்பனாக விளங்கினார். காணாமலே காதல் என்பது போல் நாவரசரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் ஆறாத அன்பு உடையவராக இருந்தார். எந்த அளவுக்கு அன்பு கொண்டிருந்தார் என்றால் தன் புதல்வர்களுக்கு மட்டுமல்லாமல் தன் வீட்டிலிருந்த பசு, எருமை, கன்றுகள், தராசு, அளக்கும் கருவிகளான மரக்கால், படிகள் முதலியவற்றுக்கும் கூட நாவரசர் பெயரைச் சூட்டியிருந்தார்.

அவர் வைத்திருந்த தண்ணீர் பந்தல் மாடங்கள், பூஞ்சோலைகள் முதலிய தரும காரியங்களுக்கும் கூட நாவரசர் பெயரையே வைத்திருந்தார். மொத்தத்தில் எங்கும் எதிலும் நாவரசர் மயம்! மக்களுக்கு நன்மை தரும் மடங்களும் பூஞ்சோலைகளும், தண்ணீர்ப் பந்தலும் வைத்து நன்மை செய்து வரும் பொழுது ஒருநாள் நாவரசர் திங்களூர் வந்தார்.

வரும் வழியெல்லாம் தன் பெயரால் மடங்களும் சோலைகளும் நந்தவனங்களும், தண்ணீர்ப் பந்தல்களும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு அங்குள்ள மக்களிடம் அதுபற்றிக் கேட்டார். அங்கிருந்த சாலைகள், சோலைகள், மடங்கள், தண்ணீர்ப் பந்தல்கள்  இவற்றையெல்லாம் அமைத்தவர் அப்பூதி அடிகள் என்று அறிந்துகொண்டு அவரைக் காணும் ஆவலோடு அவர் இல்லம் சென்றார்.

வந்த நாவரசரை இன்னார் என்று தெரிந்து கொள்ளாமலே, யாரோ ஒரு சிவனடியார் என்று எண்ணி எதிர்கொண்டழைத்து அடிபணிந்தார். அப்பூதி அடிகள். “தங்கள் வருகை என் பாக்கியம்” என்று உபசரித்தார். நாவரசர்,    ‘ ‘வரும் வழியில் நீர் வைத்த தண்ணீர்ப்பந்தல். குளம் மடங்கள் பூஞ்சோலைகள் எல்லாவற்றையும் பார்த்தேன். அவற்றில் தங்கள் பெயரை எழுதாமல் வேறோர் பெயரை எழுத என்ன காரணம்?” என்று கேட்டார். நாவரசரும் என் பெயரை ஏன் எழுதியிருக்கிறீர் என்று கேட்கவில்லை. நான் எனது என்ற அகங்கார, மமகாரம் நாவரசரிடம் இல்லை.

Appuuthi 3
’திருநாவுக்கரசர் தண்ணீர்ப்பந்தல்’
நடாத்திய அப்பூதி அடிகள்.

இதைக் கேட்ட அப்பூதி அடிகள் மிகுந்த கோபம் கொண்டு பேசியதாவது:

“நன்றருளிச் செய்தீர்? நாணம் கெட்ட சமணருடன் சேர்ந்துகொண்டு மன்னவன் என்னென்ன சூழ்ச்சிகள் எல்லாம் செய்தான்? நாவரசருக்கு என்னென்ன கொடுமைகள் எல்லாம் செய்தான் என்று உமக்குத் தெரியுமா? கேளும்.

நாவரசர் சூலை நோய் நீங்கப் பெற்று மீண்டும் சைவ நெறியில் சேர்ந்ததற்காக அவரை நீற்றரையில் உள்ளே தள்ளினான். ஆனால் நாவரசர் ஈசன் இணையடிகளையே நினைத்து இருந்ததால்

‘மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே’

என்ற பதிகம் பாடி அதிலிருந்து சிறிதும் வாட்டமின்றி மீண்டு வந்தார். இதைக் கேள்விப்பட்ட மன்னன் சமணர்கள் சொல்படி நாவரசருக்கு நஞ்சூட்டினான். ஆலகால விஷத்தையே உண்டு நீலகண்டனாக விளங்கும் அரன் அடியாரை நஞ்சு என்ன செய்யும்?’ என்று கேட்ட நாவரசர், “நஞ்சும் அமுதாம் எங்கள் நாதன் அடியார்க்கு” என்று அதையும் பாலடிசிலாக ஏற்றார்.

இதைக் கண்டு பொறுக்காத சமணர்கள் மன்னனின் பட்டத்து யானையை நாவரசர் மேல் ஏவி அவரை இடறச் செய்தார்கள். யானைத்தோல் போர்த்த கஜ சம்ஹாரனாகிய சிவனுடைய மெய் அடியவர்களுக்கு யானையைக் கண்டால் அச்சம் வருமா? நாவரசர், “சுண்ண வெண் சந்தனச் சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும்” என்று பாடத் தொடங்கி,

 ‘வரங்கள் கொடுத்தருள் செய்வான்

வளர் பொழில் வீரட்டஞ் சூழ்ந்து

நிரம்பு கெடிலப் புனலும் உடையார்

ஒருவர் தமர் நாம் அஞ்சுவது

யாதொன்றுமில்லை அஞ்ச வருவதும்  இல்லை’

என்று பாட அந்த யானை நாவரசரை வணங்கி, தன்னை ஏவிய சமணர்களையே விரட்டி மிதித்துத் துன்புறுத்தியது.

இதன் பின்னும் மனம் திருந்தாத சமணர்கள் சொற்கேட்டு, நாவரசரைக் கல்லோடு சேர்த்துக் கட்டி கடலில் எறியும்படி கட்டளையிட்டான் மன்னன் நாவரசர் என்ன செய்தார் தெரியுமா?

 ‘சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சிவாயவே’

என்று பாடினார். உடனே கல்லே தெப்பமாக மாறி அதில் நாவரசர் ஏறி வந்தார். இவ்வளவு பெருமையுடைய நாவரசரின் பெயரையா வேறோர் பெயர் என்று சொல்கிறீர்கள்! நல்ல மங்கலமான சைவத்திரு வேடத்தோடு இருக்கும் தாங்களா இந்த வார்த்தை சொன்னீர்கள்? உமது ஊர் எது? பேர் ஏது? நீங்கள் யார்” என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டார்.

அது கேட்ட நாவரசர், “சமண சமயமாகிய சமுத்திரத்தின் துறையிலிருந்து வீரட்டானேச்வரர் அருள்புரிந்து கரையேற்றிய சூலை நோயினால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சிறுமையுடையவன் நான்” என்றார்.

இதைக் கேட்ட அப்பூதியடிகள்,

கரகமலம் மிசை குவியக்

கண்ணருவி பொழிந்திழிய

உரைகுழறி உடம்பெல்லாம்

உரோம புளகம் பொலியத்

தரையின் மிசை வீழ்ந்து அவர்

சரண கமலம் பூண்டார்.

காணாமலே அன்பும், பெருமதிப்பும் கொண்டிருந்த் அப்பூதியடிகளுக்குக் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த் போல் தேடி வந்த நாவரசரைக் கண்டதும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன்னை மறந்தார். பாடினார் ஆடினார் ஓடினார். தன் மனைவி, மக்கள், சுற்றத்தாருடன் சென்று நாவரசரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவருடைய திருவடிகளை அலம்பி, அந்த நீரைத் தங்கள் தலைமீது தெளித்தும் அருந்தியும் ஆனந்தமடைந்தார்.

நாவரசரை ஆசனத்தில் அமரச் செய்து, “திருவமுது செய்தருள வேண்டும்” என்று பணிவோடு விண்ணப்பம் செய்தார் நாவரசர் சம்மதம் தெரிவிக்க தம் மனைவி அருள்மொழியை நோக்கி “நாம் பெற்ற பேறு தான் என்னே!” என்று வியந்து திருவமுது செய்யப் பணிக்கிறார்.

அந்த அம்மையாரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அக்கறையுடனும் அறுசுவையோடு கூடிய உணவு வகைகளைத் தயார் செய்ய ஆரம்பித்தார். காய்கறிகளும் குறைவில்லாமல் தயார் செய்தபின் தங்கள் மூத்த புதல்வனான திருநாவுக்கரசை கொல்லையில் இருக்கும் வாழை மரத்திலிருந்து இலையை அறுத்து எடுத்து வரும்படி அனுப்பினாள்.  “நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செய்யப் பெற்றேன்” என்று அவனும் விரைந்து சென்று நல்ல குருத்தை அறுக்கும் பொழுது ஒரு நல்ல பாம்பு அவன் கையைத் தீண்டியது.

Appuuthi 2

இதைக் கண்ட திருநாவுக்கரசு கையை உதறி அப்பாம்பை விழச் செய்த பின், விஷம் தலைக்கேறுமுன் இந்தக் குருத்தைத் தந்தையிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று ஓடோடி வருகிறான். என்ன ஒரு கடமை உணர்ச்சி! வரும் பொழுதே இந்த விஷயத்தைச் சொல்லி வந்திருக்கும் அடியவராகிய நாவரசர் பெருமான் திருவமுது செய்யத் தாமதமாகும் வண்ணம் நான் சொல்ல மாட்டேன். என்றும் தீர்மானம் செய்து கொள்கிறன். நல்ல தந்தை தாய் பெற்ற மகனல்லவா? ஆனால் அவன் எதிர்பார்த்த நேரத்திற்கும் முன்னதாகவே விஷம் ஏறிக் கண்களும் பற்களும் மேனியும் கருகி மயக்கமடைந்து அந்தக் குருத்தைத் தன் அன்னையிடம் கொடுத்து விட்டு மயங்கி வீழ்ந்து விட்டான்.

மகன் வீழ்வதைக் கண்ட அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் உள்ளம் பதைத்து, அவன் உடம்பிலிருந்து ரத்தம் வடிவதையும் மேனி கறுத்திருப்பதையும் கண்டு விஷத்தினால் வீழ்ந்தான் என்று புரிந்து கொண்டார்கள். ஆனால் அடுத்ததாக என்ன செய்கிறார்கள்? அலறினார்களா? அரற்றினார்களா? ஓலமிட்டார்களா?

 ‘துளங்குதல் இன்றித் தொண்டர்

அமுது செய்வதற்குச் சூழ்வார்’

-என்கிறார் சேக்கிழார் பெருமான். அது மட்டுமல்ல. பெறலரும் புதல்வனைப் பாயினுள் பெய்து மூடிப் புறமனை முன்றில் பாங்கோர் புடையினில் மறைத்து வைத்து, இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் வந்த அடியாரை அமுது செய்விப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள்.

எந்தப் பெற்றோரால் இப்படிச் செய்ய முடியும்? அதிலும் தனது மூத்த புதல்வன் பாம்பு கடித்து இறந்து விட்டான் என்று தெரிந்த பின்னும் எந்தத் தாயால் வந்த விருந்தினரை உபசரிக்க முடியும்? அவருக்கு அமுது படைக்க முடியும்? ஆனால் அப்பூதி அடிகளின் மனைவி, வாராது  வந்த மாமணி போல் வந்திருக்கும் சிவனடியாரின், நாவரசரின் உபசாரத்தில் எந்தக் குறையும் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக மிகவும் கவனமாக இருக்கிறாள். வந்திருப்பவர் யார்? சாமானியர் அல்லர். தன் கணவர் அல்லும் பகலும் அனவரதமும் தெய்வமாகவே  நினைத்து உருகும் நாவரசர் அல்லவா? எனவே அவருக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் அமுது படைக்க வேண் டும் என்பதில் தன் துயரத்தையும் கூட ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு அடியவரை உபசரிக்க முன்வருகிறாள் அப் பூதி அடிகளின் மனைவி. கணவரின் செயலில் உற்ற துணை யாகக் கைகொடுக்கிறாள்.

நாவரசர் அமுது செய்யும் பொருட்டுத் திருவமுதையும் பல கறிவகைகளையும், குழம்பு ரசம் பச்சடி துவையல் ஊறுகாய் பழங்களையும் தயார் செய்கிறாள். நாவரசர் அமுது செய்த பின் அமர ஆசனமும், பூசிக்கொள்ளத் திருநீறும் வெற்றிலை, பாக்கு முதலியவற்றையும் தயார் செய்து வைக்கிறாள். எல்லாம் தயாரான பின்  கணவரிடம் தெரிவிக்கிறாள். அப்பூதி அடிகள் நாவரசரை அமுது செய்ய அழைத்து வந்தார்.

நாவரசர் வந்ததும் ஆசனத்தில் அமர்ந்து தாமும் திருநீறு பூசிக்கொண்டு பின் அப்பூதி அடிகளுக்கும் அவர் மனைவிக்கும் அளித்த பின் அவர்களின் புதல்வர்களுக்கும் திருநீறளிக்க வேண்டி எல்லோருக்கும் மூத்தவனான திருநாவுக்கரசை அழைக்கும்படி அப்பூதி அடிகளிடம் சொன்னார். அப்பூதி அடிகள் எப்படி சமாளிக்கிறார்? “இப்போது அவன் இங்கு உதவான்” என்றார்

இதைக் கேட்ட நாவரசர், தன் உள்ளத்தில் ஏதோ தடுமாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார். “நீர் கூறியதை என் மனம் ஒப்பவில்லை. வேறு ஏதோ ஒன்று உள்ளது. உண்மையைக் கூற வேண்டும்’’ என்று அழுத்தமாகக் கூறவே அப்பூதியடிகள் நாவரசரை விழுந்து வணங்கித் தன் மூத்த புதல்வன் மூத்த திருநாவுக்கரசுக்கு நேர்ந்ததை விளக்கினார்.

இதைக் கேட்ட திருநாவுக்கரசர் திடுக்கிட்டு  ‘‘நன்று நீர் செய்தது! உம்மைத் தவிர வேறு யார் தான் இம்மாதிரிச் செய்ய முன் வருவார்?’’ என்று ஆசனத்திலிருந்து எழுந்து, மூத்த திருநாவுக்கரசின் உடல் இருந்த இடம் சென்று நஞ்சுண்ட கண்டனை நோக்கி, ‘ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை’ என்று தொடங்கி 2,3, என்று ஒன்பது வரை பாடிய பின்,

 ‘பத்துக் கொலாம் அவர் பாம்பின்கண் பாம்பின் பல்

பத்துக் கொலாம் எயிறும் நெரிந்து உக்கன

பத்துக் கொலாமவர் காயப்பட்டான் தலை

பத்துக் கொலாமவர் செய்கை தானே’

என்று பாடியவுடன். நஞ்சுண்ட கண்டன் அருளால் பாம்பு தீண்டிய நஞ்சு அகன்றது. மூத்த திருநாவுகரசு துயில் நீங்கி எழுபவனைப் போல் எழுந்து நாவரசரை வனங்கினான். நாவரசரும் அவனுக்குப் புனிதத் திருநீற்றை வழங்கினார். நாவரசர் அமுது செய்வதற்கு நேரமாகி விட்டதே என்ற கவலையோடு அப்பூதி அடிகள் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கலானார்.

கோமயத்தால் தரையைச் சுத்தம் செய்தபின் மூத்த திருநாவுக்கரசு கொண்டுவந்த வாழைக் குருத்தை விரித்து அதில் அமுது பறிமாற ஆரம்பித்தவுடன் நாவரசர் அப்பூதி அடிகளை நோக்கி. “நீரும் உமது புதல்வர்களும் இங்கு அமுது செய்வீர்” என்று கூற அப்பூதி அடிகளும் அவர் புதல்வர்களும் நாவரசரோடு உண்டு மகிழ்ந்தனர். நாவரசர் அனைவருக்கும் தமது ஆசிகளை வழங்கினார்.

இவ்வாறு அப்பூதி அடிகளின் மனைவியார் தன் மூத்த புதல்வன் பாம்பு தீண்டி இறந்தான் என்பதை அறிந்த பின்பும் கூட அப்பூதி அடிகளின் உள்ளம் அறிந்து சிவனடியார் அமுது செய்ய, அவர்  மனைவி காரியத்தில் உற்ற துணையாக இருந்து கைகொடுத்த காரிகையாக விளங்குவதைப் பார்க்கிறோம்.

***

.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

தலம்: திங்களூர், திருப்பழனம் அருகில், தஞ்சாவூர் மாவட்டம்.

மூலவர்: கைலாசநாதர்

தலவிருட்சம்: வில்வம்

தீர்த்தம்: சந்திர புஷ்கரணி

குருபூசை நாள் : தை – சதயம்.

முகவரி: அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,

திங்களூர் – 613 204, தஞ்சாவூர் மாவட்டம்.

தொலைபேசி: 04362- 262 499.

Thingalur
திங்களூர் கைலாசநாதர் கோயில்

திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய பெரியவர். இவரை உலகமே அறியும். ஆனால், மூத்த திருநாவுக்கரசர், இளைய திருநாவுக்கரசர் பற்றி யாருக்காவது தெரியுமா? இவர்களை தரிசிக்க திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும்.

அப்பூதியடிகள் என்ற சிவபக்தர் திங்களூரில் வசித்தார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நீங்கள் ஒரு முருக பக்தராக இருந்து. உங்களுக்கு குழந்தை பிறந்தால் ‘முருகன், கந்தன், கார்த்திகேயன்’ என ஏதோ ஒரு பெயர் வைப்பீர்கள். ஆனால், அப்பூதியடிகள் சிவபக்தராயினும் கூட, சிவனின் அடியவரான திருநாவுக்கரசரின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைத்தார். மூத்தவனுக்கு “மூத்த திருநாவுக்கரசு’, இளையவனுக்கு “இளைய திருநாவுக்கரசு’ என்று.

தன்னை விட தன் அடியார்களுக்கு தொண்டு செய்வதையே தெய்வம் விரும்பும். “மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதும் இறைவனுக்கு பிடித்த பொன்மொழி. அதைப் பின்பற்றி நாவுக்கரசரின் பெயரால் கல்விக்கூடம். அன்ன சத்திரம், தண்ணீர்ப் பந்தல் ஆகியவை அமைத்தார்.

மக்கள் சேவையை வலியுறுத்தும் இந்த குடும்பத்தினர் சிலை வடிவில் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் உள்ளனர். வேறு எந்தக் கோயிலிலும் மூத்த, இளைய திருநாவுக்கரசர்களைக் காண முடியாது. இதில் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது. திருநாவுக்கரசர் அக்குழந்தையைக் காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.

நன்றி:  தினமலர் – கோயில்கள்

.

4 Replies to “கை கொடுத்த காரிகை: அப்பூதி அடிகள் மனைவி”

  1. திருமதி ஜெயலட்சுமி அவர்களே,
    அப்பூதி அடிகளைப் பற்றியும், சைவ சமய குரவர்களில் (preceptors) மூத்தவரான அப்பர் பெருமானைப் பற்றியும், தேவாரப் பதிகங்களோடு விளக்கியமைக்கு நன்றி. தமிழ் இந்து இணையத்தில் தேவார நல்விருந்தை உண்டு மகிழ்ந்தேன். கருப்பு-வெள்ளையில் இருக்கும் முதல் ஓவியம் மிகப் பழைமை வாய்ந்தது. அதைக் காண்பதும் தமிழ் விருந்தில் இட்ட இனிப்பாக இருந்தது. நல்வாழ்த்துக்கள்!

  2. நினைக்கும் தருணமெல்லாம் நெகிழ்த்தும் கதையிது. இன்று நம் சமயம் என்றாலே சாதி சாதி என்று ஒரு கூட்டம் கூவிக்கொண்டிருக்கிறதே அவர்கள் முதலில் அறிய வேண்டிய கதையுமிது.

    நாவுக்கரசர் வேளாளர், அப்பூதியடிகள் அந்தணர். ஆனால் அந்தணரான அப்பூதியார் குடும்பம் அப்பர் பெருமானை குருவாய் வரித்து அவர் அடிதொழுது வாழ்ந்திருக்கிறது. இன்று நாம் காணும் பிரிவினைகள் யாவும் பின்னாளில் வலியப்புகுந்தவையே.

    ஆழ்க தீயதெல்லாம் சூழ்க அரன் நாமமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *