ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2

<< முந்தைய பகுதி

65) वक्षस्ताडन-शङ्कया विचलितो वैवस्वतो निर्झरा:
कोटीरोज्ज्वल-रत्नदीपकलिका-नीराजनं कुर्वते |
दृष्ट्वा मुक्तिवधूस्तनोति निभृताश्लेषं भवानीपते
यच्चेतस्तव पाद-पद्म-भजनं तस्येह किं दुर्लभम् ||5||

வக்ஷஸ்தாட3ன ஸ1ங்கயா விசலிதோ வைவஸ்வதோ நிர்ஜரா:
கோடீரோஜ்ஜ்வல ரத்ன-தீ3ப-கலிகா நீராஜனம் குர்வதே |
த்3ரு2ஷ்ட்வா முக்தி-வதூ4ஸ்தனோதி நிப்4ரு2தாஸ்1லேஷம் ப4வானீ-பதே
யச்சேதஸ்தவ பாத3-பத்3ம-ப4ஜனம் தஸ்யேஹ கிம் து3ர்லப4ம் ||65||

எவனது மனம் உமது இணையடித் தாமரையை வணங்குகிறதோ, அவனுக்கு இப்புவியில் கிடைத்தற்கு அரியது தான் எது? பவானியின் பதியே! மார்பில் உதைபடுவோமோ என்று அஞ்சி காலன் ஓடிப்போகிறான். தங்கள் கிரீடங்களில் மிளிர்கின்ற மொக்குப் போன்ற ரத்தின தீபங்களால் தேவர்கள் கர்ப்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். முக்தி என்ற மாது அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்.

அப்படியாக வாதங்கள் ஏதும் செய்யாமல் பகவானிடம் சரணடைந்தால் பக்தன் என்னென்ன அடையலாம் என்பதை இந்த ஸ்லோகம் சொல்கிறது.

shiva-lingam-parvatha-malaiஒன்று செய்தால் ஒன்று கிடைக்கும் என்பது ஏதோ வியாபாரத்தில் ஈடுபடுவது போலத்தான் தோன்றும். ஆனால் வியாவகாரிகமான உலகில் ஈடுபட்டவனை ஓரளவுக்கு அந்த மாயையிலிருந்து இழுத்து வந்து, அவனுக்கு உலகில் கிடைக்கும் எந்த விதமான பலன்களும் தராத பரிபூர்ணமான ஆனந்தத்தை அளிக்கும் ஒன்றைச் சொல்லும்போது, இப்படியும் செய்யலாமோ என்றுதான் தோன்றுகிறது.

இப்படி இருக்கலாமோ, அப்படி இருக்கலாமோ என்று எந்தக் குழப்பமும் இல்லாமல், இதனாலா அல்லது அதனாலா என்றெல்லாம் காரண காரியங்களைத் தேடிக்கொண்டு இருக்காது, அவைகளைப் பற்றி நம் சிற்றறிவைக் கொண்டு, கடலின் ஆழத்தை அளக்க நினைக்கும் உப்பு பொம்மைபோல, அளக்க முயற்சி செய்யாமல் பரமனின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் நம்மால் நினைக்கவும் முடியாத அளவுக்குப் பயன்கள் உண்டு. எவருமே தனக்கு முடிவு உண்டு என்பதை நினைத்து , இறப்பைப் பற்றிப் பயப்படுகிறார்கள். ஆனால் பரமனின் பக்தனை அணுகவே காலன் பயந்து ஒதுங்குகிறான். உடலுக்குத்தான் முடிவு என்றும், தான் வேறு அதனால் அது தன்னைப் பாதிக்காது என்றும் உணரும் பக்தன் காலத்தைக் கடந்தவனாய் இருக்கும்போது, காலன் அவனிடம் சென்று என்ன செய்ய முடியும்?

இறப்பைப் பொறுத்து அது நிதர்சனமான உண்மை என்றால், உயிருள்ள போது பக்தனுக்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவன் உயிருடன் இருக்கும்போதே தனது உடல், மனம், புத்தி இவைகளைக் கடந்து தான் இறைவனின் அம்சம் என்பதை பக்தன் உணர்ந்து அவன் எல்லாமும் ஆவதால், அவனுக்கு எந்தவித பந்தங்களும் இல்லாது போகிறது. அதனால் அவனுக்கு எல்லாவித பந்தங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கிறது என்று சொல்லலாம். அவன் அப்போது ஜீவன் முக்தன் என்று குறிப்பிடப்படுகிறான். அவனை எல்லா சுகபோகங்களுக்கும் அதிபதிகளாக விளங்கும் தேவர்கள் ஆரத்தி எடுத்து தங்கள் உலகிற்கு அழைப்பதாகச் சொல்லியிருப்பதையும், முக்தியெனும் மாது தழுவதாகச் சொல்லப்படுவதும், இன்னமும் உலக சுகபோகங்களை விடாத ஒருவனைத் தூண்டில் போட்டுப் பிடிப்பதாகத் தான் நாம் எடுத்துகொள்ள வேண்டும்.

12) गुहायां गेहे वा बहिरपि वने वा अद्रिशिखरे
जले वा वह्नौ वा वस्तु वसते: किं वद फलम् |
सदा यस्यैवान्त: करणमपि शम्भो तव पदे
स्थितं चेत् योगोSसौ स च परमयोगी स च सुखी ||6||

கு3ஹாயாம் கே3ஹே வா ப3ஹிரபி வனே வாऽத்3ரி-ஸி1க2ரே
ஜலே வா வஹ்னௌ வா வஸது வஸதே: கிம் வத3 ப2லம் |
ஸதா3 யஸ்யைவாந்த:கரணமபி ஸ1ம்போ4 தவ பதே3
ஸ்தி2தம் சேத்3 யோகோ3ऽஸௌ ஸ ச பரம-யோகீ3 ஸ ச ஸுகீ2 ||12||

குகையிலோ, வீட்டிலோ, வெளியிலோ, காட்டிலோ, மலையின் உச்சியிலோ, நீரிலோ, நெருப்பிலோ, ஒருவன் வசிக்கட்டும். இவைகளில் எங்கு வசித்தாலும், சம்போ! எவனது உள்மனம் உமது திருப்பதத்தில் ஒன்றியதோ, அப்படி ஒன்றியிருத்தலே யோகம் எனப்படும்; அவனே பரம யோகி எனப்படுவான்; அவனே எப்போதும் இன்பமயமாய் இருப்பவன்.

பரமனிடம் சரணடைந்தவன் எந்த இடத்தில் வசிக்கவேண்டும்; எந்த மாதிரி வாழவேண்டும் என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்வது போல இந்த ஸ்லோகம் அமைந்திருக்கிறது.

இவ்வுலக வாழ்க்கை முறைப்படியே வாழ்ந்து வரும் பக்தனுக்கு இப்படியான சந்தேகங்கள் எல்லாமே வரும். எதைச் செய்யவும் ஒரு நல்ல காலம் என்பதுபோல், எவரும் இடம், பொருள், ஏவல் என்று பார்த்துத்தான் எதையும் சொல்கிறார்கள், செயலும் ஆற்றுகிறார்கள். அதில் முதலாவதாக வரும் இடம் என்ற பரிமாணத்தைப் பற்றித்தான் இங்கு பேசப்பட்டிருக்கிறது. அதனால் பக்தன் தனது முயற்சி நன்கு கைகூடி வருவதற்கு ஏற்ற இடம் எது என்று கேட்கும் குணம் உள்ளவன்தான்.

எப்போதும் போல் வீட்டிலேயே இருக்கலாமா, அல்லது வீட்டை விட்டு வெளியேறி தனிமை மிகுந்த காட்டிற்குச் சென்று, அங்கு குகை எதிலாவது வசிக்கலாமா, அல்லது எவரும் எளிதில் அணுகமுடியாத மலைக்குச் சென்று அதன் உச்சியில் இருக்கலாமா, அல்லது எவரும் எதிர்பார்க்கக் கூட முடியாது நீரில் அமிழ்ந்தோ, நெருப்பினில் புகுந்தோ தவம் செய்ய வேண்டுமா என்று முடிந்தது, முடியாதது என்று எல்லாவற்றையும் அவன் கேட்கலாம். அதற்குப் பதிலாக “எங்கு முடியுமோ அங்கேயே இரு, ஆனால் எங்கிருந்தாலும் சரண் அடைந்திருக்கிறாயே அந்த ஞானியோ, பகவானோ அவனது பாதங்களை மனதினில் இறுகப் பற்றிக்கொள்”, அதுதான் மிக மிகத் தேவையானது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி ஒன்றி இருப்பதுதான் யோகம் என்றும், அப்படி இருப்பவனை பரம யோகி என்றும் சொல்வார்கள். அவனுக்கு இன்பம்-துன்பம் என்று மாறி மாறி வராது, எப்போதும் அவன் இன்ப நிலையிலேயே இருப்பான் என்ற உத்திரவாதமும் இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

ramana_arunachalaஇதைப் படிக்கும்போது ரமணரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் திருவண்ணாமலையில் ஆஸ்ரமத்தில் இருந்தபோது அவரைத் தரிசிக்க வந்த பல பக்தர்களுள் ஒரு இளைஞனும் இருந்தான். மற்றவர்களைப் போலக் கேள்விகள் என்றெதுவும் கேட்காமல், அவன் பேசாது ஒரு மூலையில் அமர்ந்திருந்தான். ரமணரைச் சுற்றியிருந்த பலரும் வெளியே போய் அவர் தனியாய் இருக்கும் சமயம் அவரிடம் வந்து தான் வீட்டை விட்டு வந்திருப்பதாகவும், தனது ஆன்ம சாதகத்தைத் தொடர திருவண்ணாமலை போன்ற இடம்தானே வசதியானது என்று கேட்டான். அதற்கு ரமணர் அப்படிச் செய்யவேண்டிய அவசியம் இல்லை, வீட்டிலிருந்தே, உலக வாழ்க்கையையும் வாழ்ந்துகொண்டே சாதகம் செய்யலாம் என்றார். அதற்கு அவன் தாங்கள் மட்டும் ஏன் மதுரையை விட்டு இங்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர் “உன்னைப் போல நான் எவரிடமும் போய் ஆலோசனை கேட்கவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை; இங்கு வரவேண்டும் என்று தோன்றியது, வந்துவிட்டேன். அப்படி வருவதால் என்ன ஆகும் என்றெல்லாம் என் மனதில் தோன்றவில்லை, என்ன வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான் இருந்தேன்” என்றாராம். அதுபோல ஒன்றைச் செய்வதனால் என்ன வருமோ என்று பயப்படுவதோ, கவலைப்படுவதோ இல்லாமல் அதைச் செய்பவர்க்கு மேலும் அவர் செல்ல வேண்டிய வழிகள் தானாகத் தெரியவரும். எந்த இடம் என்பது முக்கியமல்ல, எந்த மனநிலையோடு ஒன்றைச் செய்கிறோம் என்பதே மிக முக்கியம்.

10) नरत्वं देवत्वं नग-वन-मृगत्वं मशकता
पशुत्वं कीटत्वं भवतु विहगत्वादि जननम् |
सदा त्वत्-पादाब्ज-स्मरण-परमानन्द-लहरी
विहारासक्तं चेत् हृदयमिह किं तेन वपुषा ||7||

நரத்வம் தே3வத்வம் நக3-வன-ம்ரு2க3த்வம் மஸ1கதா
பஸு1த்வம் கீடத்வம் ப4வது விஹக3த்வாதி3-ஜனனம் |
ஸதா3 த்வத்பாதா3ப்3ஜ-ஸ்மரண-பரமானந்த3-லஹரீ
விஹாராஸக்தம் சேத்3 ஹ்ரு2த3யமிஹ கிம் தேன வபுஷா ||10||

மனிதப் பிறவி, தேவப் பிறவி, மலை காடுகளில் வாழும் மிருகப் பிறவி, கொசு, பசு, புழு, பறவை போன்ற பிறவிகள் எதுவானாலும் இருக்கட்டும். யாண்டும் உமது திருவடித் தாமரையில் பதிந்த தியானம் எனும் பேரின்பப் பெருக்கில் திளைத்து விளையாடும் இதயம் கிடைக்கப்பெறின், இவ்வுலகில் எந்த உடலோடு இருந்தால் என்ன?

எந்த இடத்தில் வசித்தால் என்ன என்று முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தது போல, இந்த ஸ்லோகத்தில் எந்தப் பிறவி நமக்கு வாய்த்தால் என்ன, நாம் செய்ய வேண்டியது என்னவோ அவன் திருவடிகளைப் பற்றியிருப்பது ஒன்றுதான் முக்கியம் என்று பார்க்கிறோம்.

human mindநமது இந்து தர்ம சாஸ்திரப்படி இருப்பது ஆன்மா ஒன்றே. அது ஏதோவொரு காரணத்திற்காக ஜீவாத்மாவாகப் பிறவியெடுக்கும் போது தனது உண்மையான சொரூபத்தை அறியாது, தனக்கு வெளியே காணப்படும் உலகில் உள்ளவற்றோடு தொடர்பு கொண்டு, பலவிதமான செயல்களில் ஈடுபடுகிறது. அப்படி நடைபெறும் செயல்கள் நல்ல விதமாக இருந்தால் அதற்கு நல்ல பலன்களும், தீய விதமானதாக இருந்தால் அதற்கேற்ப தீய பலன்களும் விளையும். அவை எல்லாவற்றையும் இப்போதிருக்கும் பிறவியிலேயே அனுபவிக்கப்பட்டு முடிந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. அதை அனுபவிக்க வேறு பல பிறவிகள் எடுக்க நேரலாம். நல்ல பலன்கள் என்றால் மனித, தேவப் பிறவிகள் என்றும், கெட்ட பலன்கள் என்றால் அசலமாம் தாவரங்கள் உள்ளிட்ட மற்றப் பிறவிகள் எதுவானாலும் வாய்க்கும் என்று சொல்வர்.

மனிதன் உலகில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வரும்போது, தான் உடலோடு இருக்கும்போதுதான் உலகையும் காண்கிறோம் என்பதனாலும், வேறு பல அனுபவங்களாலும் உடல்-உலகு இவைகளின் உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கும்போது ஆன்மீக சிந்தனை வயப்படுகிறான். அப்போது அவன் முன்பு செய்த நல்வினைப் பயன்களால், இந்த ஆன்மீக உண்மைகள் எல்லாவற்றையும் அறிந்த குரு ஒருவர் அவனுக்கு வாய்ப்பார். அப்போது அவர், நாம் முதல் ஸ்லோகத்தில் பார்த்தபடி, நாம் மேலே செய்யவேண்டியதை அருள் கூர்ந்து சொல்லி விளக்குவார். அதன்படி மேற்கொண்டு நடப்பது அவரவர்களின் முயற்சிகேற்ப அமையும்.

மனிதப் பிறவிகள் தவிர மற்றப் பிறவிகளுக்கும் ஆன்மாவைப் பற்றிய உணர்வு வரலாம் என்பதை நம் காலத்திலேயே ரமணர் போன்ற ஜீவன் முக்தர்கள் அனுபவித்துச் சொல்லியுள்ளனர். அப்படி ஆன்மாவைப் பற்றிய அறிவோடு இருந்து, அவைகளில் சில அவருடைய அருகாமையிலேயே உயிர் பிரியும்போது முக்தியுமடைந்தது என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். பல மனிதர்களைத் தவிர பசு, காகம், மான், நாய் என்று சில பிறவிகள் அவரருகில் அப்படி உயர் நிலையில் இருந்த சில ஜீவன்களில் அடக்கம்.

அதனால் இந்த ஸ்லோகத்தின் படியும், பக்தன் தனக்கு “எந்தப் பிறவி வாய்த்தால் என்ன, நான் பரமனின் பதத்தை என் மனதில் இறுத்தி தியானிக்கும் அருள் எனக்கு வேண்டும்” என்று பிரார்த்திக்கிறான். இந்தக் கருத்துதான் “பிறவா வரம் வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை மறவா வரம் வேண்டும்” என்று ஔவையார் சிவபெருமானிடம் வேண்டுவதின் எதிரொலி.

9) गभीरे कासारे विशति विजने घोरविपिने
विशाले शैले च भ्रमति कुसुमार्थं जडमतिः |
समर्प्य एकं चेत: सरसिजं उमानाथ भवते
सुखेन अवस्थातुं जन इह न जानाति किमहो ||8||

க3பீ4ரே காஸாரே விஸ1தி விஜனே கோ4ர-விபினே
விஸா1லே ஸை1லே ச ப்4ரமதி குஸுமார்த2ம் ஜட3-மதி: |
ஸமர்ப்யைகம் சேதஸ்ஸரஸிஜம் உமா-நாத2 ப4வதே
ஸுகே2னாவஸ்தா2தும் ஜன இஹ ந ஜானாதி கிமஹோ || 9 ||

வண்டு அங்குமிங்கும் பூக்களைத் தேடி அலைவது போல ஆழமான மடுவிலும், மக்கள் நடமாட்டமில்லாத கொடிய காட்டிலும், பரந்த மலையிலும் (உம்மை) தேடிப் புகுந்து அலைகிறான் அறிவில்லாத மனிதன். உமையின் மணாளா! உமக்கு மனமாகிற ஒரே ஒரு தாமரையைச் சமர்ப்பித்துவிட்டு, இங்கங்கு அலையாமல் ஒரே இடத்தில் சுகமாக இருப்பதற்கு மனிதன் அறிந்துகொள்ளவில்லையே! என்னே ஆச்சரியம்!!

எங்கு இருந்தாலும், எந்தப் பிறவியெடுத்திருந்தாலும் பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஒரு நியதி இருக்கிறது என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. அதுதான் அவனது மனநிலையைப் பற்றியது.

shiva-devoteeசரணடைய வேண்டும் என்ற ஆவல் மட்டும் ஒருவனுக்கு இருந்தால் போதாது. அதைச் செய்து, அது நீடித்து நிற்பதற்கு அவனது மனநிலை பக்குவப்பட்டிருக்க வேண்டும். உலக வாழ்வில் அல்லல்பட்டு, ஏற்றம் இறக்கம் எல்லாம் கண்டு அனுபவித்த ஒருவனுக்கு பக்தி செய்து சரணடைவது என்பதும், தொடக்கத்தில் மற்றும் ஒரு உலகியல் செயல் போலத்தான் தோன்றும். ஏனென்றால் அவன் அப்படியொரு பழக்கத்திற்கு அடிமை போல் ஆகிவிட்டான். அதனால் மற்ற செயல்களைப் போலவே அதையும் நினைத்துக்கொண்டு வெவ்வேறு விதமான பூக்களைக் கொண்டு ஆராதிப்பது என்பது ஒரு வழக்கம் என்பதால் அவன் எங்கெங்கோ போய் கஷ்டப்பட்டு விதவிதமான பூக்களையெல்லாம் தேடிக்கொண்டு வந்தால் பகவானுக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நினைத்து அதைச் செய்ய முயல்கிறான். ஆனால் பகவான் விரும்புவதோ ஒன்றே ஒன்றைத்தான். அதுதான் அவனது மனமாகிய தாமரைப் பூ. அதை அவரிடம் சமர்ப்பிப்பது ஒன்றே சரணாகதியின் முழு அடையாளம். அது தெரியாமல் இருக்கிறானே என்று அவர் ஆச்சரியப்படுவார்.

இங்கு மனத்தை தாமரைப் பூவோடு ஒப்பு நோக்கியிருப்பது மிகவும் பொருத்தமானது ஆகும். பூஜை செய்யும்போது தாமரை மொக்கை ஒவ்வொரு இதழாகப் பிரித்து வரும் முழுத் தாமரைப் பூவை பகவானுக்குச் சமர்ப்பிப்பார்கள். அதாவது மனத்தை அப்படி சமர்ப்பிக்கவேண்டும் என்பது அதன் பொருள். ஏனென்றால் மனம் என்று தனியான பொருள் ஒன்று கிடையாது. ரமணர் “எண்ணங்களே மனம், யாவினும் நான் எனும் எண்ணமே மூலமாம்” என்று சொல்வார். அதாவது எண்ணங்களின் தொகுப்பே மனம். எண்ணங்கள் எல்லாவற்றிலும் முதல் எண்ணம் “நான்” என்னும் அகந்தை. அது பகவானை விட்டுவிட்ட தனியான “நான்” எனும் எண்ணம். அதை பகவானிடம் சமர்ப்பித்தால் மற்ற எண்ணங்கள் எல்லாமும் அவரிடம் தஞ்சம் ஆன மாதிரிதான். எண்ணங்கள் எதுவுமே தனியாக வராது. அலை அலையாகத் தான் கிளம்பும். ஒவ்வொன்றும் தாமரையின் இதழ்கள் போல ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவைதான். அவை அனைத்தையும் கோர்த்து வைத்திருப்பது அந்த முதல் எண்ணமான அகந்தை. அதை பகவானிடம் கொடுத்து விட்டு, நிம்மதியாக இருப்பதை விட்டு, உலகில் உள்ள மற்ற பூக்களைத் தேடி பக்தன் ஏன் போக வேண்டும்? அதற்கு அவசியமில்லை. உன்னிடம் உள்ள உள்ளத் தாமரையைக் கொடுத்து விட்டு உள்ளதை உணர் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

11) वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो
नरो वा य: कश्चित् भवतु भव किं तेन भवति |
यदीयम् हृत्-पद्मं यदि भवदधीनं पशुपते
तदीयस्तवं शम्भो भवसि भवभारं च वहसि ||9||

வடுர்வா கே3ஹீ வா யதிரபி ஜடீ வா ததி3தரோ
நரோ வா ய: கஸ்1சித்3-ப4வது ப4வ கிம் தேன ப4வதி |
யதீ3யம் ஹ்ரு2த்பத்3மம் யதி3 ப4வத3தீ4னம் பஸு1-பதே
ததீ3யஸ்த்வம் ஸ1ம்போ4 ப4வஸி ப4வ பா4ரம் ச வஹஸி ||11||

பிரம்மச்சாரியோ, க்ருஹஸ்தனோ, ஸன்யாஸியோ, ஜடாதாரியோ அல்லது வேறு எந்த வித ஆஸ்ரமவாசியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன ஆகிவிட்டது? பசுபதே! சம்போ! எவனது இதயத் தாமரை உம் வசமாகிவிட்டதோ, நீர் அவன் வசமாகிவிட்டீர்! அதனால் அவனது பிறவிச் சுமையையும் சுமக்கிறீர்!

தனக்கு ஒரு முடிவு வரும் என்று பயந்துதானே பக்தன் ஓர் ஆரம்பமோ, முடிவோ இல்லாத மகேசனை சரணடைகிறான். அப்படி அவன் ஒன்றிவிட்டதால் பக்தன் எங்கே, பகவான் எங்கே என்று தெரியாதபடி அவர்கள் ஒன்றாகிவிடுவதை இந்த ஸ்லோகம் சொல்கிறது.

sivan_swamy_1எந்த இடமானாலும் பரவாயில்லை, இப்பிறவி எப்பிறவியாக இருந்தாலும் பரவாயில்லை; எப்போதும் பக்தன் மனது பரமனின் பாதங்களையே பற்றியிருக்க வேண்டும் என்று முன்பு சொல்லப்பட்டது போல, ஒருவன் இவ்வுலகில் மேற்கொள்ளக் கூடிய பலவித ஆச்ரமங்களைப் பற்றி இங்கு வருகிறது. அதன்படி ஒருவன் பிரம்மச்சரியம் அனுஷ்டிப்பதோ, மணம் செய்துகொண்டு கிருஹஸ்தனாக வாழ்வதோ, ஜடாமகுடம் புனைந்து சித்தம் போக்கு சிவம் போக்கு என்றிருப்பதோ, அல்லது துறவறம் பூண்டு எதிலிருந்தும் ஒதுங்கி இருந்து சந்நியாசி வாழ்க்கை வாழ்வதோ, அவற்றில் எதையுமே ஓர் ஆரம்ப கால சாதகனுக்கு என்று எடுத்துக்கொண்டு, அவை அனைத்தையும் வெவ்வேறு நிலைகள் என்று கொள்ளவேண்டும். எந்த நிலையில் இருந்தாலும், ஆரம்பம் முதல் தன் சுய ஸ்வரூபத்தை உணரும் வரை அவன் பகவானை விடாது பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதுதான் அதில் முக்கியமானது.

அப்படி தன் மனத் தாமரையை பகவானிடம் சமர்ப்பித்துவிட்டால், அதுவும் பூரணமாக ஆகிக்கொண்டு வரும்போது, பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள இடைவெளி படிப்படியாகக் குறைந்து இருவரும் ஒன்றாகி விடுகின்றனர். அது வெறும் பாவனை அளவில் இல்லாது அனுபவமாகவே ஆகும்போது, அதற்கு மேல் அவன் பிறவி, வினை, உலகம் என்று காணப்படும் எந்த பாரத்தை சுமக்கத் தேவையிருக்கும்? இருவரும் ஒன்றாகி விட்டதால் அனைத்தும் பகவானது பாரமாகவே ஆகிவிடுகிறது அல்லவா? அதையேதான் முதல் ஸ்லோகத்திலேயே “சரணடை, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லப்பட்டு கோடி காட்டப்பட்டு விட்டது.

அதற்கும் மேல் பக்தன் உலக பாரத்தைத் தான் தாங்குவதாக எண்ணுவதை ரமணர், “பூபாரம் தாங்க இறை போலி உயிர் தாங்கல் அது, கோபுரம் தாங்கி உருக் கோரணி காண்” என்பார். அதாவது எல்லாவற்றையும் தான் தாங்குவதாக ஒருவன் நினைப்பது, கோபுரத்தைத் தாங்குவதாக சிற்பி வடித்திருக்கும் பொம்மை ஒன்று கோபுரத்தையே தான் தாங்கிக்கொண்டிருப்பதாக நினைப்பது என்கிறார். உண்மையில் கோபுரம்தான் அந்தப் பொம்மையைத் தாங்கிக் கொண்டிருக்கிறது என்பது பார்ப்பவருக்குத்தானே தெரியும். அப்படி பக்தனது பாரத்தையும் பகவானே சுமக்கிறார்.

91) आद्या अविद्या हृद्गता निर्गता आसीत्
विद्या हृद्या हृद्गता त्वत्-प्रसादात्
सेवे नित्यम् श्रीकरं त्वत्-पदाब्जं
भावे मुक्ते: भाजनं राजमौले ||10||

ஆத்3யாऽவித்3யா ஹ்ரு2த்3க3தா நிர்க3தாஸீத்-
வித்3யா ஹ்ரு2த்3யா ஹ்ரு2த்3க3தா த்வத்ப்ரஸாதா3த் |
ஸேவே நித்யம் ஸ்ரீ-கரம் த்வத்பதா3ப்3ஜம்
பா4வே முக்தேர்பா4ஜனம் ராஜ-மௌலே ||91||

சிரசில் சந்திரகலை மிளிர்பவரே! ஆதியிலிருந்து இதயத்துள் சென்று குடி புகுந்த அவித்தை எனப்படும் அஞ்ஞானம் உமதருளால் வெளியேறி விட்டது. உமதருளால் சிக்கலை அவிழ்க்கும் ஞானம் இதயத்துள் குடி புகுந்தது. திருவினைச் சேர்ப்பதும், முக்திக்குத் திருத்தலமானதும் ஆன உமது திருவடித் தாமரையை யாண்டும் ஸேவிக்கிறேன்; தியானிக்கிறேன்.

siva-and-soulமுன்பே சொன்னது போல இருப்பது ஆன்மா ஒன்றுதான். அதன் தன்மையே சத்து-சித்து-ஆனந்தம் என்பதால் அது இருப்பது (சத்) மட்டுமல்லாது, அறிவுமயமாகவும் (சித்), ஆனந்த வடிவாகவும் உள்ளது. அதிலிருந்து பெறப்பட்ட அறிவே ஜட உலகில் பிணைந்து “சித்-ஜட க்ரந்தி” எனப்படும் முடிச்சு ஒன்றைப் போட்டுக்கொண்டு, தன் உண்மையான இயல்பையும் அறியாது (அஞ்ஞானம்), தவறாக ஆனந்தத்தை தனக்கு வெளியே உள்ள உலகில் தேடுகிறது. அப்படித் தேடித் தேடி அலைந்து களைத்துப் போய் இறுதியில் பகவானிடம் சரணடைகிறது. பரிபூரண சரணாகதியில் பக்தன், மனம் உள்பட எல்லாவற்றையும், பகவானிடம் இழந்து நிற்பதால் பகவான் கருணை கொண்டு அவன் வந்த வழியைத் திரும்பப் பார்க்க வைத்து, இறுதியில் அவனைக் கரை சேர்க்கிறார்.

தனக்கு முன்பிருந்த வினைப் பயன்களை தனது செயலால் அவன் ஒவ்வொன்றாகக் கழித்து வந்து, இறுதியில் அஞ்ஞானம் அழியப்பெற்று ஞானம் பெறுகிறான். அதுவே முக்தி எனப்படுகிறது. அதற்கு அவன் பகவானுக்கு நன்றி சொல்லி, மீண்டும் அந்த அஞ்ஞானக் குழியில் விழுந்து தவிக்கக் கூடாது என்பதற்காக பகவானின் திருக்கமலங்களை மறுபடியும் உறுதியாகப் பற்றிக்கொள்கிறான்.

இப்படியாக இந்த பத்து ஸ்லோகங்களில் முதல் ஸ்லோகத்திலேயே என்ன செய்ய வேண்டும் என்றும், அதைச் செய்தால் என்ன பலன் கிட்டும் என்பதையும் விளக்கி, பின் வரும் ஸ்லோகங்களில் அங்கங்கே குறிபிட்டபடி பக்தனுக்கு வரும் ஒவ்வொரு சந்தேகத்தையும் படிப்படியாக போக்கி இறுதி ஸ்லோகத்திலும், எப்போதும் பகவானை நினைத்திருக்கும்படி பக்தனுக்கு வழி காட்டுகிறார்.

பின்னுரை:

Dr. P.S. பர்வதநாதன் எனது பால்ய நண்பர். அவர் எனக்கு இந்த ஸ்லோகங்களைப் பற்றிச் சொன்னதும் அல்லாமல், ஸ்லோகங்கள் மற்றும் அவைகளின் பொருளையும் அனுப்பியிருந்தார். அவர் இவை பற்றிச் சொல்லாதிருந்தால், நான் அவை பற்றி அறிய வாய்ப்பே இருந்திருக்காது. ரமணர் அருளிய “கீதா சாரம்” கூட அவரது ஏனைய படைப்புகளைப் போலவே ஞான மார்க்கத்தை உபதேசிப்பதாக இருக்கும். அவரது பக்தி பற்றிய படைப்புக்கள் மொத்தமாகவே பத்து அல்லது பதினைந்து பக்கங்களுக்கு மேலே இருக்காது. அதனால் அவர் தேர்ந்து அளித்துள்ள பக்தி பற்றிய இந்த “சிவானந்த லஹரி” ஓர் அரிய பொக்கிஷமே. ரமணரைப் பற்றி நான் பல கட்டுரைகள் எழுதியுள்ளதால், என் நண்பர் இது பற்றி எழுதச் சொல்லி இவ்வாறு எனக்கு அளித்த இந்த வாய்ப்பிற்காக, அவருக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

(முற்றும்)

4 Replies to “ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2”

  1. மிக அழகான, எளிய தமிழில், அனைவருக்கும் புரியக்கூடிய விளக்கம். இதே போல நிறைய ஆன்மீக விளக்கங்களை எழுதுங்கள்.

  2. அருமையான ஆன்மீகக் கட்டுரை. அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். மகரிஷி ரமணரின் புகைப்படமும் அவர் எவ்வளவு எளியவராக வாழ்ந்தார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதுமாதிரி இன்னும் நிறைய எழுதுங்கள்.

  3. நல்ல கட்டுரை. திரு ரமணன் அவர்களுக்கு நன்றி.

    //இந்தக் கருத்துதான் “பிறவா வரம் வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை மறவா வரம் வேண்டும்” என்று ஔவையார் சிவபெருமானிடம் வேண்டுவதின் எதிரொலி.//

    இந்த தொடர் ஔவையார் கூறியது அல்ல, காரைக்கால் அம்மையார் பாடிய வரிகள்.
    ெரியபுராணத்திலும் இது எடுத்து ஆளப்பட்டுள்ளது.

    1776.
    இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
    அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்

    ார் கூறினாலும் அனைவரும் வேண்டுவது இதுவே “மீண்டும் பிறந்தால் உம்மை மறவா வரம் வேண்டும்”.

  4. செவி வழி கேட்டு நான் எழுதிய தவற்றை கவி வழி காட்டி திருத்தியுள்ள திரு. சோமசுந்தரம் அவர்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல நான் “ரமணன்” அல்ல; ஒரு வேளை ரமணனாக இருந்திருந்தால் தவறு செய்யாமல் இருந்திருப்பேனோ என்னவோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *