அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1

75 வருடங்களுக்கு முன்பு பாபாசாகிப்  அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” (Annihilation of Caste)  எனும் புத்தகத்தை இப்போது மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என பார்த்துவிட்டு அதற்கான விமர்சனத்தை பார்ப்போம்.

அம்பேத்கர் 26 தலைப்புகளில் அவற்றை எழுதியிருக்கிறார். அதிலே சில பகுதிகளின் சுருக்கத்தை மட்டுமும் சில பகுதிகளை சற்று விரிவாகவும் கீழே தர முயன்றிருக்கிறேன்.

annihilation_of_caste_book1. முதல் பகுதி ஏன் இப்புத்தகத்தை அம்பேத்கார் என்பதை விவரிக்கிறது. சாதி ஒழிப்பு அமைப்பான ஜாத்-பாத்-தோடக் மண்டல் எனும் அமைப்பு அவரை சாதி ஒழிப்பு பற்றிய உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தது. அம்பேத்கரும் அதை ஏற்று தன்னுடைய உரையை அனுப்பினார். ஆனால் அமைப்பினர் அதை ஏற்க மறுத்து மாற்றும் படி கோரினர். அம்பேத்கர் மறுத்ததால் அவரை உரை நிகழ்த்த விடுத்த அழைப்பை திரும்ப பெற்றனர். அம்பேத்கர் தன்னுடைய உரையை தனி புத்தகமாக வெளியிட்டார். அது தான் இந்த சாதி ஒழிப்பு எனும் புத்தகம்.  இனி அம்பேத்கரின் மொழியிலேயே அவர் கூறும் கருத்துக்கள்:

2. சமூக சீர்திருத்தங்கள் அரசியல் விடுதலைக்கும் சீர்திருத்ததிற்கும் அவசியமே. உதாரணமாக, அரபுகள் முகம்மதுவின் பரப்புரைக்கு பிறகு ஒரு அரசாக ஆனது, புத்தரின் பரப்புரைக்கு பிறகு சந்திரகுப்தரின் மாபெரும் அரசு அமைந்தது. குருநானக்கின் பரப்புரைக்கு பின்பு சீக்கியர்களின் அரசு அமைந்தது, ராம்தாஸ் போன்றவர்களின் பரப்புரைக்கு பின் சத்ரபதி சிவாஜி மகராஜின் அரசு அமைந்தது, என பல உதாரணங்கள் உண்டு. அப்படி ஒரு சமூக சீர்திருத்தமாக சாதி ஒழிப்பு இருக்கும் அதற்கு சாதி வாரி ஒதுக்கீடான கம்யூனல் அவார்டு என்பது தேவை.

3. சமூக சீர்திருத்தங்கள் இல்லாமல் பொருளாதார சீர்திருத்தம் சாத்தியமா? இல்லை, உதாரணமாக பண்டைய ரோம் ஐ உதாரணமாக காட்டுகிறார். தனியாக வாக்குரிமை பெற்று தனி அவை அமைத்த பிலபியன்ஸ் அரசியல் அதிகாரம் பெற முடியாமல் போனது ஏனென்றால் பிலபியன்ஸ் தேர்ந்தெடுக்கும் திறமையான தலைவர்களை பேட்ரிஷியன்கள் அதற்கு கடவுள் அனுமதி இல்லை என சொல்லி தள்ளிவிடுவார்கள். எனவே எப்போதும் பிலபியன்ஸ் அதிகாரம் பெறமுடியவில்லை. இன்னும், ஏன் இந்தியாவில் பைசா பெறாத சாமியார்கள் கோடீஸ்வரர்களை எப்படி ஆட்டிப்படைக்கிறார்கள்? எனவே சோலிஸ்டுகளிடம் சமூக சீர்திருத்தங்கள் இல்லாமல் பொருளாதார விடுதலை சாத்தியம் இல்லை.

4. சாதி என்பது உழைப்பின் பிரிவு அல்ல, உழைப்பாளிகளின் பிரிவு. சாதி என்பது உழைப்பை பிரிப்பது அல்லாமல் உழைப்பாளிகளை பிரிவாக்கி அவர்களை தனித்தீவாக ஆக்குகிறது. இந்த பிரிவானது தனிமனித திறமையின் அடிப்படையின் இல்லாமல் பிறப்பின் அடிப்படையில் இருக்கிறது. ஒரு தொழிலை/வேலையை தேர்ந்தெடுப்பது தனிமனித திறமையின் அடிப்படையிலேயே இருக்கவேண்டும். சாதி இதை பிறப்பின் அடிப்படையில் வைப்பதால் வேலையில்லா திண்டாட்டமும் உருவாகிறது; மாறும் தொழில் துறைக்கு ஏற்ப தொழிலை தேர்ந்தெடுக்கமுடியாமலும் போகிறது.

5. சாதி என்பது இல்லாத இனத்தூய்மையை பேணிக்காக்க முடியாது. சாதி என்பது வேறு வேறு இனக்குழுக்களுக்களுள் ஏற்பட்ட பிரிவு அல்ல. ஒரே இனத்திற்குள் ஏற்பட்ட பிரிவு தான். மெட்ராஸின் பிராமணனும் பறையனும் ஒரே இனம் தான். இந்தியாவில் எந்த சாதியும் சுத்தமான ரத்தம் உடைய சாதி அல்ல. சாதி நல்ல ஆரோக்கியமான வாரிசுகளை ஏற்படுத்தும் முறையும் அல்ல. சாதி திருமணத்திற்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்தியா அடிமைப்பட்டு இருக்ககூடாது. பத்தில் ஒன்பது பேர் போருக்கு தகுதியானவர்கள் அல்ல என கண்டறியப் பட்டுள்ளனர். எனவே சாதிக்கு எந்தவொரு அறிவியல் அடிப்படையும் இல்லை.

6. இந்துக்கள் ஒரு சமூகமாக அல்லது தேசியமாக பரிணமிக்க சாதியே தடையாக இருக்கிறது. இந்துக்களுக்கு தாங்கள் ஒருவருக்கொருவர் உறவு கொண்டவர்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்துக்களுக்கு தங்களுடைய சாதியோடு மட்டும் உறவு இருக்கிறது, மற்றைய இந்துக்களுடன் கிடையாது. எனவே இந்துக்கள் ஒரு சமூகம் அல்லது தேசம் என சொல்ல முடியாது. உடைகளோ, செயல்களோ குறிப்பிட்ட மக்களை தேசம் ஆக்கிவிடாது. பழங்குடியினரும் சில பல பழக்கவழக்கங்களை கொண்டிருக்கிறார்கள் என்பதாலேயே அவர்கள் சமூகமாகவோ தேசமாகவோ ஆகமாட்டார்கள்.

7. சாதியின் மிகக்கொடுமையான விஷயம் அதன் சமூக எதிர்ப்பு அம்சமே. ஒரு சாதி இன்னோர் சாதிக்கு எதிராக இருக்கிறது. அதற்கு அடிப்படையாக நூல்கள் எழுகின்றன. மகாராஷ்டிர உள்நாட்டில் வாழும் தேச பிராமணர்கள் கடற்கரையில் வாழும் கொங்கன பிராமணர்களை ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் பிராமணர்கள் ஒரு குழுவாக தங்களின் வசதிவாய்ப்புக்களை பாதுகாக்க முயல்கின்றனர். அதை போலவே சத்திரியர்கள் செய்கிறனர். உள்நாட்டு போரில் ஒருவருக்கொருவர் எதிரிகளாக ஈடுபட்ட ஆங்கிலேய சமூகக் குழுக்கள் இன்று அதை மறந்து வாழுகின்றனர். ஆனால் சத்திரியர்கள் தங்களின் முன்னோரான சிவாஜிக்கு பிராமணர்கள் செய்த அவமானத்தை மறக்கமுடியவில்லை. இவை அனைத்தும் சாதியாலே இருக்கிறது.

8. பழங்குடியினரை ஏற்கவும் முன்னேற்றவும் சாதி தடையாக இருக்கிறது. பழங்குடியினரை நாகரீகமான சமூகமாக மாற்ற சாதியே தடையாக இருக்கிறது. கிறிஸ்துவ மிசனரிகள் செய்வது போல் பழங்குடியினரை இந்துக்கள் மாற்ற முயல்வதில்லை. காரணம் சாதி என்பதே, ஏனென்றால் அவர்களை அனாரியர்கள் (ஆரியர் அல்லாதோர்) என கருதுவதே காரணம். அவர்களை இந்துக்கள் அல்லாதோர் என சொல்லி மதம் மாற்றினால் இந்துக்கள் அதற்கு சாதிமுறையையே குற்றம் சொல்லவேண்டும்.

9. உயர் சாதியினர் கீழ்சாதியினரை முன்னேற விடுவதில்லை. இதற்கு இரண்டு உதாரணங்கள். ஒன்று சோனார்கள் எனும் கீழ்சாதியினர் பிராமணர்கள் கட்டுவது போல் வேட்டி கட்ட ஆரம்பித்த பொழுது பிராமணர்கள் மகராஷ்டிர பேஷ்வாவிடம் முறையிட்டு அதை தடை செய்தார்கள். மேலும் கிழக்கிந்திய கம்பெனியிடம் புகார் செய்தும் கம்பெனி மூலமும் தடை பெற்றார்கள். விதவைத்திருமணம் பத்தரே பிரபு எனும் சாதியில் நடைமுறை வழக்கமாக இருந்தது. ஆனால் பிராமணர்களைப் பார்த்து அதை நிறுத்த பத்தரே பிரபு சாதியினர் முயன்ற பொழுது பிராமணர்கள் அதற்கும் தடை விதித்தினர். இந்துக்கள், முஸ்லீம்கள் வாளால் மதத்தை பரப்பியது பற்றியும், கிறிஸ்துவர்களின் புனித போர் பற்றியும் விமர்சிக்கிறார்கள். இதிலே எது சரி? விரும்பாதவர்களின் மீது விடுதலையை திணிப்பதா அல்லது ஒளியை பரப்பாமல் அனைவரையும் இருளில் வைத்திருப்பதா? இந்துக்கள் செய்யும் பண்பில்லாத தன்மை மற்றவர்களின் கொடூரத்தை கொடியது ஆகும்.

castes_colonial_picture10. இந்து மதம் பரப்புரை செய்கிறத மதமாக ஆகாமல் போனதற்கு சாதியே காரணம். இந்து மதம் பரப்புரை செய்து மற்றவர்களை மதம் மாற்றுகின்ற மதமா இல்லையா என்பதில் பல கருத்துக்கள் உள்ளன. பலர் ஆமாம் என்றும் சிலர் இல்லை என்றும் சொல்கிறார்கள். இந்து மதம் ஒரு காலத்தில் பரப்புரை செய்து தான் இருந்திருக்க வேண்டும்; ஆனால் சாதி வந்தவுடன் இது நின்றுவிட்டது. சாதியின் எழுச்சியின் போது தான் இந்து மதம் மற்றவர்களை மதமாற்றம் செய்யாமல் விட்டுவிட்டது.

11. சாதி என்ற அமைப்பு இந்துக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, உதவி, ஒருங்கிணைப்பை உண்டாக்கித் தருவது இல்லை. சீக்கியர்களும் முகமதியர்களும் “தாங்கள் ஒற்றை ஆள் அல்ல; ஒருவர் தாக்கப்பட்டாலும் எல்லா சீக்கியர்களும் எல்லா முகமதியர்களும் உதவிக்கு வருவார்கள்” என தெரிவதால், தைரியமாக தனியாட்களாக, பயமின்றி எதையும் எதிர் கொள்கிறார்கள் ஆனால் இந்து இதிலே தனியாள். ஒரு இந்து தாக்கப்பட்டால் இன்னோர் இந்து உதவிக்கு வருவதில்லை. சீக்கியர்களும் முகமதியர்களும் சகோதரர்கள் என அழைத்து கொள்கிறார்கள், ஆனால் இந்துக்கள் தங்கள் சாதிக்குள் மட்டுமே அவ்வாறு கருதுகீறார்கள். சாதி இருக்கும் வரை ஒற்றுமை என்பது வராது.

12. சாதியே எல்லா சீர்திருத்தங்களுக்கும் தடையாக இருக்கிறது. தனிமனிதனின் கருத்துக்ளும் நம்பிக்கைகளும் அவன் சார்ந்திருக்கும் குழுவின் நம்பிக்கைகள், கருத்துக்களை விட மேலானது என்பதில் தான் எல்லா சீர்திருத்தங்களும் ஆரம்பிக்கின்றன.  ஆனால், தனிமனிதன் சமூகத்தின் உதவியின்றி ஏதும் செய்ய இயலாது என்பதையே சாதி சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. சாதி விலக்கு என்பது மரணதண்டனைக்கு சமமாக இருப்பதால் யாரும் சாதியின் கட்டுப்பாடுகளை மீற முன்வருதில்லை.

13. பொதுக்கருத்து, பொது உதவி போன்றவற்றை சாதி ஒழித்துவிட்டது. இந்துவுக்கு சாதி என்பது தான் சமூகம். உதவி என்பது சாதிக்குள் ஆரம்பித்து சாதிக்குள் முடிகிறது. ஒவ்வொரு சாதியினரும் அவரவர் சாதியினரையே தலைவராக ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் ஒழுக்கம் என்பதும் சாதி சார்ந்ததாகவே இருக்கிறது. என்னுடைய சாதி ஆள் அது சரியோ தப்போ, என்னுடைய சாதி ஆள் – அது நல்லவனோ கெட்டவனோ, சாதி என்பது நல்லது அல்லது கெட்டதின் பக்கம் நிற்பதல்ல, சாதியின் பக்கம் நிற்பது தான்.

14. என்னுடைய கனவு : சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தின் அடிப்படையிலான சமூகம். சாதியின் கொடூரங்களை பார்த்தபின்பு சாதி வேண்டாம் என்றால், சாதியில்லாத சமூகம் எப்படியிருக்கவேண்டும்? அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தின் அடிப்படையிலேயே இருக்கவேண்டும். இந்த மூன்றுக்கும் யார் எதிர்ப்பு தெரிவிக்க முடியும்?

15. ஆரிய சமாஜிகளின் சதுர்வர்ணம் பழைய சாதீய தீங்குகளையே கொண்டிருக்கிறது. மேற்சொன்ன சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் என்பதற்கு பதிலாக ஆரிய சமாஜிகள் மாற்றுக்கருத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கருத்து நால் வர்ணங்களாக இப்போதிருக்கும் நாலயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகளை பிரிப்பது ஆகும். ஆரிய சமாஜிகள் மக்களை பிராமணர்கள், சத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என பெயரிட விழைகிறார்கள். மேற்கத்திய நாடுகள் படித்தவர்களை பிராமணர்கள் என பெயரிடாமலே மதிக்கின்றன. வீரர்களை சத்ரியர்கள் என பெயரிடாமலே மதிக்கினறன. பழைய பெயர்களை வைத்துக்கொண்டிருப்பது சீர்திருத்தம் அல்ல.

16. சதுர்வர்ணம் நடைமுறை படுத்த சாத்தியம் இல்லாதது. முதலில் எப்படி பிறப்பால் கீழ்நிலையில் இருப்பவர்களை அவர்களின் குணத்தின் அடிப்படையில் மேல்நிலைக்கு உயர்த்தி அவர்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள செய்வது. இதற்கு முதலில் சாதி ஒழிக்கப்படவேண்டும் அல்லவா? இது பிளாட்டோ மக்களை மூன்று பகுதிகளாக பிரித்து தன்னுடைய குடியரசு எனும் நூலில் எழுதியிருப்பது போன்று தான். பிளாட்டோ ஆசையுடையவர்களை வேலை செய்பவர்களாகவும் வணிகர்களாகவும், தைரியமானவர்களை பாதுகாவலர்களாவும், நியாயங்களை அறிந்துகொள்ளக்கூடியவர்களை சட்டம் தருபவர்களாகவும் பிரித்தார். பிளாட்டோவின் குடியரசுக்கு சொல்லப்படுகின்றன விமர்சனங்கள் அனைத்தும் சதுர்வர்ணத்திற்கும் பொருந்தும். நவீன அறிவியல் மக்களை கட்டுப்பாடான பிரிவுகளுக்குள் பிரிப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. சதுர்வர்ணத்தை முன்னெடுப்பவர்கள் அது பெண்களுக்கு பொருந்துவதில்லை என்றே சொல்கிறார்கள் இல்லாவிட்டால் பெண் பூசாரிகள், பெண் வீரர்களை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்குமே!

17. சதுர்வர்ணம் சூத்திரர்களுக்கு மிகவும் கொடுமையான அமைப்பாக இருக்கும். சூத்திரர்கள் சதுர்வர்ண முறையின் கீழ் எல்லாவற்றிக்கும் மற்றவர்களை நம்பியே இருக்கவேண்டிய அவசியம் இருக்கும். மற்றவர்கள் சூத்திரர்களை கொடுமைப்படுத்த நினைத்தால் அதை யாரும் கேட்கமுடியாமல் போகும்.

18. சதுர்வர்ணம் ஏதும் புதிது அல்ல, வேதங்களில் உள்ளது தான். முன்பு சதுர்வர்ணங்கள் இருந்த போதும் வர்ணங்களுக்குள் சண்டைகள் நடந்துள்ளது புராணங்களில் இருக்கிறது. எனவே மீண்டும் சதுர்வர்ணம் வந்தாலும் அதே சண்டைகள் திரும்பவும் நடக்கும்.

19. இந்துக்களில் இருக்கும் சாதி,  இந்து அல்லாதோரிடம் இருக்கும் சாதியை போன்றது அல்ல. இந்துக்கள் தங்களிடம் மட்டுமல்லாது முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் போன்றவர்களிடமும் சாதி இருப்பதை சுட்டிக்காட்டி மகிழ்கிறார்கள். ஆனால் இந்து சாதிக்கட்டுப்பாட்டை மீறினால் சாதிவிலக்கு செய்யப்படுவான். அதே ஒரு முஸ்லீமோ சீக்கியரோ சாதிக்கட்டுப்பாட்டை மீறினால் விலக்கு செய்யப்படுவதில்லை. மேலும் முஸ்லிம்/சீக்கியர் என அறிமுகப்படுத்திக்கொண்டாலே மேற்கொண்டு யாரும் ஏதும் கேட்பதில்லை ஆனால் இந்து என சொன்னால் மேற்கொண்டு என்ன சாதி என்றே தெரிய விழைகிறார்கள்.

20. சாதியை ஒழிக்க முக்கியமான வழி அவற்றை வலியுறுத்தும் சாஸ்திரங்களை நிராகரிப்பதே ஆகும். சாதியை ஒழிக்க என்ன வழி? எப்படி ஒழிப்பது என்ற கேள்விக்கு பதிலாக சாதி ஒழிப்பின் முதல் படியாக உபசாதிகளை ஒழிப்பது என சொல்கிறார்கள். உபசாதிகளை ஒழிப்பது இன்னும் சாதிக்கட்டமைப்பை வலுவாகவே ஆக்கும். இன்னோர் முறை சமபந்தி போஜனம் எனும் சேர்ந்துண்ணுதல், ஆனால் இப்போதே பல சாதிகள் கலந்துண்ணல் முறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் சாதி அப்படியே இருக்கிறது. சாதியை ஒழிக்க ஒரே வழி கலப்பு திருமணங்களே. ஏன் கலப்பு திருமணங்கள் நடக்கவில்லை? ஏனென்றால் சாஸ்திரங்கள் அதை தடுப்பதால். எனவே சாதியை ஒழிக்க ஒரே வழி சாஸ்திரங்களை நிராகரிப்பதே.

21. உள்ளேயிருந்து ஏற்படும் தீர்மானம் என்பது சாதிக்கு சாத்தியமில்லை. சாதியின் ஆதாரமாக இருப்பது சில மத நம்பிக்கைகளும் அதற்கு ஆதாரமான சாஸ்திரங்களும் தான். படித்த வர்க்கமான பிராமணர்கள் சாதியை ஒழிக்கும் இயக்கத்தை முன்னெடுப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏனென்றால் பிராமணர்கள் தங்களின் அதிகாரத்தையும் சொகுசு சுகங்களையும் பறிக்கும் ஒரு இயக்கத்தை தாங்களே முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

ambedkar1622. எந்த ஒரு சீர்திருத்தவாதியும் வாதங்களை முன்வைத்து இது வரை வெற்றி பெற்றதில்லை. ஒரு இந்து தன்னுடைய நியாயங்களை முன்வைத்து முடிவு எடுக்கமுடியுமா? முடியாது. ஏனென்றால் மனுஸ்மிருதி வேதங்களையும் ஸ்மிருதிகளையுமே பின்பற்ற சொல்கிறது. நியாயங்கள் ஒரு போதும் வேதங்களை புரிந்து கொள்ள அனுமதிக்கப் படவில்லை. சாஸ்திரங்களே மிகவும் உயர்ந்தவை; அதற்கு எதிராக ஏதும் ஏற்றுக் கொள்ளப் படாது என சொல்கிறது. ஒரு சீர்திருத்தவாதி நியாங்களையும் ஒழுக்கத்தையும் விட்டுவிட்டு எப்படி சீர்திருத்தங்களை முன்னெடுக்கமுடியும்? எனவே ஸ்ருதிகளையும் ஸ்மிருதிகளையும் முன்னெடுக்கும் மதத்தை ஒழிக்காமல் ஏதும் செய்ய முடியாது.

23. சாதியை ஒழிப்பது மதத்தின் உண்மையான கொள்கைகளை ஒழிப்பது என்பது ஆகாது. இந்து மதம் என்பது என்ன? சமூகம், அரசியல், சுகாதரம், வழிபடுதல், சடங்குகள் முதலியவற்றுக்கான விதிகளை உள்ளடக்கிய ஒன்றே ஆகும். இந்த விதிகள் நேற்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் மாறாத தன்மை உடையவை என நம்பப்படுகின்றன. ஆனால் என்னைப்பொறுத்தவரை மதம் என்பது இவை அல்ல. இவை தான் மதம் என்றால் அந்த மதம் ஒழிக்கப்பட வேண்டியதே.

24. உண்மையான புரோகிதம் தகுதிகளின் அடிப்படையாக இருக்கவேண்டுமே ஒழிய பரம்பரையாக அல்ல. “உண்மையான மதம் என்பதே ஒரு சமூகத்தின் அடிப்படையும். அதன் மூலமே எல்லா அரசுகளும் இயங்குகின்றன” என்ற புருக்கேவின் கருத்தின் படி மதத்தில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என கீழே விவரிக்கிறேன்.

அ. அனைத்து இந்துக்களுக்கும் ஏற்றக்கூடியதாகவும் அனைத்து இந்துக்களையும் ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கும் ஒரே ஒரு புனித நூல் மட்டுமே இந்துக்களுக்கு இருக்கவேண்டும். மற்றையவை அனைத்தும் ஒழிக்கப்படவேண்டும்.

ஆ. புரோகிதம் ஒழிக்கப்படவேண்டியது தான் ஆனால் அது முடியாது என்பதால் குறைந்த பட்சம் அது பரம்பரையாக இருப்பது ஒழிக்கப்படவேண்டும். எல்லா இந்துக்களும் அர்ச்சகர் ஆகும்படி இருக்கவேண்டும். அர்ச்சகர் ஆக விரும்பும் இந்து ஒரு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்பே அர்ச்சகர் ஆகும் படி இருக்கவேண்டும். அதன் பின்பே அர்ச்சர் ஆகும் உரிமை கொடுக்கப்படவேண்டும்.

இ. உரிமம் பெறாத யாரும் அர்ச்சகர் ஆகவோ அதற்காக செயல்களை செய்யவே கூடாது. செய்தால் அரசு அவர்களை தண்டிக்கவேண்டும்.

உ. அர்ச்சகர் என்பவர் அரசின் சேவகர் ஆக இருக்கவேண்டும். சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் விதிகளும் கூடவே ஒழுக்கம், நம்பிக்கைகள், வழிப்பாட்டு முறைகளிலும் தவறு செய்தால் தண்டிக்கப்படுவதாக இருக்கவேண்டும்.

ஊ. அர்ச்சகர்களின் எண்ணிக்கை ஐ சி எஸ் பதவி போன்று கட்டுப்படுத்த வேண்டும்.
அர்ச்சகர் பரம்பரையினர் மேற்சொன்னது போன்ற சட்டப்படி அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும். பிராமணிசத்தை ஒழிப்பதே இந்து மதம் வளர்வதற்கான வழி ஆகும்.

drambedkar25. இந்து சமூகம் முன்னேற நம்பிக்கைகளில் மாற்றம் வேண்டும். ஒழுக்கமும் நம்பிக்கைகளும் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவை அல்ல. எனவே இந்துக்கள் எல்லா நம்பிக்கைகளையும் அலசி ஆராய்ந்து ஏற்றுகொள்ளக் கூடியவைகளை மட்டும் கொள்ளவேண்டும். இரண்டாவதாக பழைய கலாச்சாரங்களை தொடரவேண்டுமா என யோசிக்கவேண்டும். மூன்றாவதாக கடந்த காலமே நம்பிக்கைகளை தருவதாகும் என்ற கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். நான்காவதாக எதுவுமே நிரந்தரம் இல்லை என ஒத்துக்கொண்டு சமூகம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

26. இந்த போராட்டம் உங்களுடையதே. இந்த கருத்துக்கள் உங்களின் எண்ணத்தை மாற்றலாம், மாற்றாமல் போகலாம். ஆனால் முழு பொறுப்பும் உங்களுடையதே. நான் இந்து மதத்தை விட்டு விலக முடிவு செய்துவிட்டேன். சாதி என்பது இந்துக்களின் சுவாசமாக இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. சாதியை ஒழித்தால் மட்டும் இந்து சமூகம் வலிமையான சமூகமாக மாற முடியும். இல்லையேல் அது அடிமைத்தனத்தில் இருந்து ஒரு படி மட்டுமே விலகி இருக்கிறது.

அம்பேத்கரின் இந்த நூலானது இந்து மதமும் இந்துக்களும் முன்னேற வேண்டும், அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே எழுதப் பட்டுள்ளது. இதில் யாரும் ஐயம் கொள்வதற்கு முகாந்திரம் இல்லை. அவரது நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும் அவர் சொல்லும் தீர்வுகள் முழுதாக சரியாக வரவில்லை.

அடுத்த பகுதியில் இதற்கான காரணங்களையும் இந்த நூலின் கருத்துக்கள் குறித்த எனது விமர்சனங்களையும் பார்க்கலாம்.

(தொடரும்)

ஆதாரங்கள்:

1. அம்பேத்கரின் அரசியலவை அமர்வு பேச்சுகள்
2. https://en.wikipedia.org/wiki/Casta
3. மனுஸ்மிருதி
4. மார்ட்டின் லூதர் கிங் பேச்சுகள்
5. https://en.wikipedia.org/wiki/Droit_du_seigneur
6. Castes In India, Paper by Ambedkar

4 Replies to “அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1”

  1. இதற்கு முன் ஒரு அருமையான தொடரை அளித்தவர் ஸ்ரீ ராஜசங்கர்.

    மிக அருமையான தொகுப்பு.

    முதல் பகுதி சொல்ல வரும் விஷயங்களை அருமையாக summarise செய்துள்ளது.

  2. ///saathi ozhinthaal mattumey inthu matham oru valimaiyulla samoogamaaga maara mudiyum.

  3. அருமையான தொகுப்பு. சந்தேகமில்லை, அம்பேத்கர் முதல் இன்றைய தீ கா வரை மனுச்ம்ரிதியினை கையில் எடுக்த்துக்கொல்கிறது. எத்தனையோ ச்ம்ரிதிகள் உள்ளன, ஸ்ம்ரிதி காலத்திற்கு ஏற்றார் போல் மாறும் தர்மம், மனுச்ம்ரிதி பயனளிக்கவில்லை என்றால் நாம் வேறு ஒரு வாழ்வியலை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அம்பேத்கரின் ஆசை இன்று கல்வியால் தான் சாத்தியம் ஆகி உள்ளது. மனுச்ம்ரிதிகாக இந்து மதத்தை குறை கூறுவது போன்ற காமடி வேறு இல்லை.

    பிராமணர்கள் எளிதாய் குறை கூறப்படும் வகையினரை இருந்துலார்கள் அல்லது இருந்துவருகிறார்கள்,. தவறுகள் நடந்திருப்பதை மறைக்க முடியாது. ஆனால் அன்று முதல் இன்று வரை சமஸ்தானகாரர்களும் அல்லது நாடன்டவர்கள் என கூறி கொள்பவர்களும் கூட தங்கள் நிலையினை விட்டுகொடுக்க தயாராய் இல்லை.

    அர்ச்சகர்களில் எவர் வேண்டுமானாலும் நுழைய வேண்டும் என அறைகூவல் விடுக்கும் அரசியல் கட்சிகள் கூட பொருளாதாரத்தின் அடிப்படையில் இட ஒதுகீடையோ அல்லது சாதிவாரியாய் ஒரு தொகுதியில் வட்பாலரை நெருதாமல் தகுதியின் அடிப்படையில் நிருத்வதையோ முன்வரவில்லை , இன்று அமையும் கூட்டணிகள் வரை இது தான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *