கைகொடுத்த காரிகையர்: திருவெண்காட்டு நங்கை

சிவனடையாருக்கு பிள்ளைக்கறி அமுது படைக்கும் சிறுத்தொண்டரும் அவர்தம் மனைவியார் திருவெண்காட்டு அம்மையும்.
சிவனடியாருக்கு பிள்ளைக்கறி அமுது படைக்க பெற்ற மகனையே பலிகொடுக்கும் சிறுத்தொண்டரும் அவர்தம் மனைவியார் திருவெண்காட்டு நங்கையும்.

சோழவள நாட்டில் திருவெண்காடு என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரில் பிறந்ததால் இவருக்கு இப்பெயர் வாய்த்ததா அல்லது இவருடைய பெயரே இதுதானா என்று தெரியவில்லை. சிலருக்கு குறிப்பிட்ட ஊரில் பிறந்ததால் அந்த ஊரின் பெயரையே வைத்து அழைப்பார்கள். உதாரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வைகுண்டம் என்று பெயரிட்டு அழைப்பார்கள். அதேபோல ஸ்ரீரங்கம் என்ற பெயரும். தென்திருப்பேரையில் பிறந்தவர்களுக்கு திருப்பேரை நாச்சியார் என்று பெயரிடுவ தும் உண்டு. அப்படியே இந்தப் பெண்மணிக்கும் இப்பெயர் வந்திருக்கலாம்.

எப்படியோ இப்பேரால் இவர் பெரிய புராணத்தில் இடம் பெற்று அந்த ஊருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். இவர் செய்த தியாகம் தான் கொஞ்சமா?

காவிரியால் வளம் கொழிக்கும் திருச்செங்காட்டாங்குடியில் காவல்தொழில் செய்து வந்தார்கள் மாமாத்திரர்கள். அக்குலத்தில் பரஞ்சோதியார் என்பவர் மன்னனிடம் தளபதியாகப் பணிபுரிந்து வந்தார். ஆயுள்வேதக் கலையும், அளவில்லாத வடநூற்கலையும், படைக்கலத் தொழிலும் நிரம்பப் பயின்று அவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.

மன்னனுக்காக வடதிசை சென்று வாதாபி நகரை வென்று அங்கிருந்து பொன்னும் மணிகளும் நிதிக்குவையும், ஏராளமான யானைகள் குதிரைகள் இவற்றைக் கவர்ந்து வந்தார். ஆனால் பரஞ்சோதியாருடைய மனம் மேலும் போரில் ஈடுபட விரும்பவில்லை. இதையறிந்த மன்னன், ‘பரஞ்சோதியாரே, உம்முடைய மனநிலை அறியா மல் தவறு செய்து விட்டேன். இனிமேல் தாங்கள் செம்மைநெறித் தொண்டு செய்யும்” என்று விடைகொடுத்து அனுப்பினான்.

மன்னனிடமிருந்து விடைபெற்று வந்த பரஞ்சோதியார் தமது ஊரில் வந்து இறைத்தொண்டு செய்து வந்தார். இவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, இவர் கருத்தை அறிந்து அவருக்கு உதவியாக இருந் தார்.

சிவனடியார்களை நாளும் வரவேற்று முறையாக உபசரித்து அவர்களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் வழக்கத்தை நியமமாகக் கொண்டிருந்தார் சிறுத்தொண் டர்.  இப்படி சிவனடியார்களை வழிபட்டு, அவர்கள் முன்பு தம்மை மிகச் சிறியவராக நினைத்துக் கொண்டதால் இவரை  ‘சிறுத்தொண்டர்’  என்றே அழைத்தார்கள். காலப்போக்கில் இவர்களுக்கு சீராளன் என்றொரு மகனும் பிறந்தான்.

அருமை மகன் பிறந்தபொழுது மங்கல வாத்தியங்களை முழக்கினார்கள். சிறுத்தொண்டர் அடியவர்களுக்கு அளவில்லாத தான தருமங்கள் செய்தார்.

சீராளன் கிண்கிணி அசையத் தளர்நடை நடக்க ஆரம்பித்தான். நெற்றியில் சுட்டி அசைய, மார்பினில் ஐம்படைத்தாலி புரள விளையாட்டில் ஈடுபட்டான். மூன்று வயதில் வயதில் குடுமி வைத்துப் பின் பள்ளியில் சேர்த்தார்கள்.

இப்படி சிறுத்தொண்டர் புகழ் பரவி வரும்போது, இவருடைய புகழையும் இவருக்கு அடியவர் பால் உள்ள நேசத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டவும் விடையேறும் பெருமான் எண்ணங் கொண்டார். உடனே தனது கறை படிந்த கழுத்தை மறைத்து கையில் கபாலம் ஏந்தி, தோளில் திரிசூலம் சார்த்தி, வலக்கையில் டமருகம் தரித்து பைரவராக வேடம் பூண்டு திருச்செங்காட்டாங்குடி வந்து சேர்ந்தார். தாங்க முடியாத பசியால் வருந்துபவர் போல சிறுத்தொண்டர் வீட்டை அடைந்தார்.

“தொண்டர்களுக்கு என்றும் அன்னமளிக்கும் சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கிறாரா?” என்று உரத்த குரலில் கேட்டார். இவர் குரலைக் கேட்ட திருவெண்காட்டு நங்கை பைரவரை வணங்கினாள். “சிவனடியாரைத் தேடி அவர் வெளியே சென்றிருக்கிறார். எந்தமை ஆளுடையவரே! உள்ளே எழுந்தருளுங்கள்” என்று உபசரித்தாள்.

இதைக் கேட்ட பைரவர் ”பெண்கள் தனியே இருக்கும் இடத்தில் புக மாட்டோம்” என்று வெளியே செல்லப் புறப்பட்டார். உடனே நங்கை “தாங்கள் செல்ல வேண்டாம். இன்று அடியவர் ஒருவரும் காணக் கிடக்காததால் அவர்களைத் தேடிச் சென்றிருக்கிறார். தாங்கள் எழுந்தருளி யிருப்பதை  அறிந்தால் பெரிய பாக்கியம் என்று மிகவும் மகிழ்வார். இதோ வந்து விடுவார். அதனால் தாங்கள் உள்ளே வந்து அமரலாம்” என்று கூறினாள். வலிய வந்த அடியவரை விட்டுவிட அப்பெண்மணிக்கு மனமில்லை.

ஆனால் பைரவரோ,   “சிறந்த மனையறம் புரக்கும் பெண்ணே! யாம் வடநாட்டைச் சேர்ந்தவன். சிறுத் தொண்டரைக் காணவே வந்தோம். அவர் இல்லாமல் இங்கிருக்க மாட்டோம். கணபதீச்சரத்தில் இருப்போம். அவரை அங்கு வரச்சொல்” என்று வெளியே சென்றார்.

சிவனடியார் எவரும் தென்படாததால் மிக்க வருத்தத்துடன் வீடு வந்த சிறுத்தொண்டர் தன் கவலையை மனைவியிடம் பகிர்ந்து கொண்டார். பைரவர் ஒருவர் வீடு தேடி வந்ததை மனைவி சொல்லக் கேட்ட சிறுத்தொண்டர், “அடியேன் உய்ந்தேன்! அவர் எங்கிருக்கி றார்?” என்றார். நங்கை, ‘வடிசேர் சூல கபாலத்தார், பைரவர்.  நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், கணபதீச்சரத்து ஆத்தியின் கீழிருப்பேன்” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்” என்று சொன்னாள்.

மனைவி சொன்ன அடையாளங்களைக் கேட்ட சிறுத்தொண்டர் விரைந்து சென்று பைரவ ரைக் கண்டு வணங்கினார். பைரவர் அவரை நோக்கி, “நீரோ பெரிய சிறுத்தொண்டர்?’ என்று வினவ சிறுத்தொண்டர் ,  “இன்று அமுது செய்விப்பதற்கு ஒருவரையும் காணவில்லையே என்று தவித்தேன். நான் செய்த தவத்தால் உம்மைக் கண்டேன். அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும்” என்று அடிபணிந்தார்.

பைரவரோ,  “உமைக் காணும் பொருட்டு வந்தோம். யாம் வடதேசத்தைச் சேர்ந்தவன். எம்மை உபசரிக்க உம்மால் முடியாது” என்று மறுத்தார். இதைக் கேட்ட சிறுத்தொண்டர், அடியவரே! நீர் அமுது செய்யும் இயல்பை அருளிச் செய்யுங்கள். சிவபெருமான் அடியார் முயன்றால் தேட முடியாததும் கிடைக்கும். அருமை இல்லை” என்றார்.

 “பசு வீழ்த்திட யாம் உண்பது வழக்கம். இன்று அதற்குரிய நாள். ஆனால் அது உமக்கு ஆகாத செயல்” என்றார் பைரவர்.  “மிகவும் நல்லது, என்னிடம் ஏராளமான பசுக்கள் இருக்கின்றன. உமக்கு வேண்டியதைக் காட்டினால் நான் போய் விரைவில் அமுதாக்கி வருவேன்”என்றார் சிறுத்தொண்டர்.

“அப்படியா! நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். நாம் உண்ணும் பசு நரப்பசு. ஐந்து வயதாயிருக்க வேண்டும். உறுப்புக்கள் ஒன்றும் குறைவில்லாமல் இருக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார் பைரவர். “இதுவும் முடியாத காரியமில்லை. தாங்கள் என்னோடு எழுந்தருள வேண்டும்” என்றார்.  “சரி மேலும் சொல்கிறேன் நன்கு கவனித்துக் கேளும்…”

ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத்

தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில்

தம்மில் மனமுவந்தே ஏதம் இன்றி அமைத்த

கறியே யாம் இட்டுண்பது”

-என்றார் பைரவர்.

இப்பொழுதும் மனம் தளரவில்லை சிறுத்தொண்டர். “தாங்கள் அமுது செய்யப் பெற்றால், அடியேனுக்கு இதுவும் அரியசெயல் இல்லை. என்று கூறிவிட்டு வீடு நோக்கி விரைந்து வந்தார். கணவர் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த திருவெண்காட்டு நங்கை கணவர் முகத்தை ஆவலோடு நோக்கி, “பைரவர் அமுது செய்ய வருகிறாரா? என்ன சொன்னார்? என்று வினவினாள்.

“பைரவர் இசைந்தார். ஆனால் சில நிபந்தனைகளை விதித்திருக் கிறார். ஒரு குடிக்கு ஒரு மகனாய், ஐந்து வயதுள்ளவனாக இருக்க வேண்டுமாம். உறுப்புக்கள் ஒன்று குறைவில்லாமல் நல்ல லக்ஷணம் பொருந்தியவனாக இருக்க வேண்டுமாம்.  தாய் பிள்ளையைப் பிடிக்கத் தந்தை மனமுவந்து அரிந்து சமைக்க வேண்டுமாம். இந்த நிபந்தனைகள் சரியாக இருந்தால் மட்டுமே பைரவர் அமுதுண்ண வருவாராம்” என்றார்.

இவை அனைத்தையும் கேட்ட நங்கை, “நீங்கள் சொல்வதைப் போலவே அமுதளிப்போம். ஆனால் ஒரு குடிக்கு ஒரு மகனைப் பெறுவது எப்படி?” என்று வணங்கினாள். மனைவியின் முகத்தைப் பார்த்த கணவர், அப்படிப்பட்ட மகனையும் தாய் தந்தையரையும் தேடினால் காலம் வீணாகும். அடியவர் பசியோடு காத்திருப்பார். அதனால்  “என்னை இங்கு உய்ய, நீ பயந்தான் தன்னை அழைப்போம்” என்றார்.

“நாம் பெற்ற மகனையே பைரவருக்கு அமுதாக்குவோம்!” என்றார் சிறுத்தொண்டர்.  திருவெண்காட்டு நங்கை என்ன சொன்னாள்?  அலறினாளா? துடித்தாளா? ஆத்திரமடைந்தாளா?

அவளே சொல்லக் கேட்போம். “வந்த பைரவரை நேரம் கடத்தாமல்  அமுது செய்வித்து அவர் பசியாறி முகமலர்ந்தால் அதுவே நம் பேறு!” என்றாள். மேலும்  “நம்மைக் காக்க வருமணியைச் சென்று பள்ளியினில் கொண்டு வாரும்” என்றாள்.

எந்தத் தாயால் இப்படிச் சொல்ல முடியும்? ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் சிறுத்தொண்டருடைய உணர்வைப் புரிந்து கொண்டு அனுசரணையாகப் பதில் சொல்கிறாள்! நங்கை சொன்னதைக் கேட்ட சிறுத்தொண்டர், மகன் சீராளன் படிக்கும் பள்ளியை நோக்கி விரைகிறார்.

தந்தையைக் கண்டதும் சீராளன் பாதச்சதங்கை மணியொலிக்க ஓடோடி வந்தான். அவனை வாரியெடுத்துத் தழுவி அணைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். கணவர் மகனோடு வருவதைக் கண்ட திருவெண்காட்டு நங்கை எதிர்சென்று மைந்தனை வாங்கினாள். வாங்கிய பின் என்ன செய்தாள்? சேக்கிழார் சொல்வதைப் பார்ப்போம்…

குஞ்சி திருத்தி, முகம் துடைத்துக் கொட்டை

அரைநாண் துகள் நீக்கி

மஞ்சள் அழிந்த அதற்கிரங்கி, மையும்

கண்ணின் மருங்கொதுங்கிப்

பஞ்சி அஞ்சும் மெல்லடியார் பரிந்து

திருமஞ்சனமாட்டி

எஞ்சல் இல்லாக் கோலம் செய்தெடுத்துக்

கணவர் கைக் கொடுத்தார்.

மகனைக் குளிப்பாட்டி அலங்காரம் செய்து கணவரின் கையில் கொடுத்தாள், கைகொடுத்த அக்காரிகை. சிறுவனின் அழகைக் கண்டதும் முத்தமிட வேண்டும் என்று எழுந்த ஆசையையும் அடக்கிக் கொண்டார்களாம், அடியவருக்குப் படைக்கப் போகும் அமுதில் தம் எச்சில் பட்டுவிடக் கூடாதே என்று!

இருவர் மனமும் ஒன்றுபட்டு பைரவர் சொன்னபடியே பிள்ளைக்கறி தயார் செய்தார்கள். திருவெண்காட்டு நங்கை, அமுது தயாரான செய்தியை அறிவிக்க சிறுத்தொண்டர் விரைந்து சென்று ஆத்தியின் கீழிருந்த பைரவரிடம் சென்று, “ஐயனே! நேரமாகி விட்டதைப் பொறுத்தருள வேண்டும். அடியேன் பால் நண்ணி நீர் இங்கு அமுது செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.

சிறுத்தொண்டர் உடன்வர, வந்த பைரவரை திருவெண்காட்டு நங்கை எதிர்சென்று அடி வணங்கி வரவேற்றாள். கந்த மலர் ஆசனம் காட்டி அமர உபசரித்தாள். தூய நீரால் சிறுத்தொண்டர், பைரவரின் கால்களை அலம்பி அந்த நீரைத் தங்கள் தலைமேல் தெளித்துக் கொண்டார்கள். மென் மலர், சந்தனம், தூபம் தீபம் என முறைப்படி பூஜை செய்தார். அதன் பின் இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் முறைப்படி பரிமாறினாள்.

 “யாம் சொன்னபடி எல்லாவற்றையும் பக்குவம் செய்தீரோ?’ என்று பைரவர் கேட்க, நங்கையார் “தலையிறைச்சி அமுதுக்கு ஆகாதெனக் கழித்தோம்” என்று சொல்ல,  “அதுவும் கூட நாம் உண்போம்” என்றார் பைரவர். நங்கை ஒருகணம் திகைக்க, சந்தனத்தார் என்னும் பணிப்பெண் தக்க சமயத்தில் கை கொடுக்கிறாள்.  “அதுவும் தயார் செய்து வைத்திருக்கிறேன்” என்றாள்.

இதைக் கேட்டு மகிழ்ந்த பைரவர், “நான் மட்டும் தனியாக உண்ணும் வழக்கமில்லை. எனவே என்னுடன் சேர்ந்து அமுது செய்ய யாரையாவது அழைத்து வாரும்” என்றார். சிறுத்தொண்டர்,  ‘இது என்ன சோதனை? அடியவர் அமுது செய்ய இடையூறு வந்ததே?’ என மனம் தளர்ந்தார். என்றாலும் வெளியே சென்று எங்கும் தேடினார். ஆனால் ஒருவரும் கிடைக்கவில்லை என்ற தகவலைச் சொன்னார்

உடனே, பைரவர்  “உம்மைப் போல் நீறிட்டார் உளரோ?அதனால் நீரே எம்மோடு உண்பீர்” என்றார்.  திருவெண்காட்டு நங்கையிடம் “கலந்திருத்தி வெம்மை இறைச்சிச் சோற்றை மீண்டும் பரிமாறும்” என்றார்.

இன்னும் இவர் என்னவெல்லாம் சொல்லப் போகிறாரோ என்று எண்ணி கலத்தில் கைவைக்கப் போன சிறுத்தொண்டரை மறித்தார் பைரவர்.  “உமக்கு மகன் இருந்தால் நம்முடன் உண்ண அவனையும் அழையும்” என்றார். சிறுத்தொண்டர் என்ன சொல்லியிருப்பார்? அந்த மகனைத் தான் கறியாக்கிச் சமைத்தேன் என்று சொல்ல முடியுமா?  “இப்போது உதவான் அவன்” என்று மட்டும் கூறினார்.

“அவன் வந்தால் தான் நாம் உண்போம். அவனை அழையும்” என்று திட்டவட்டமாகக் கட்டளையிட்டார் பைரவர். வேறு வழியில்லாமல் திருவெண்காட்டு நங்கையோடு வெளியே சென்று, “மைந்தா வருவாய்” என அழைத்தார்.

அம்மையும்  “செய்ய மணியே! சீராளா! வாராய்! சிவனார் அடியார், யாம் உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கிறார்” என்று உரத்த குரலில் அழைத்தார்.

பரமன் அருளால் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பள்ளியிலிருந்து ஓடிவரும் சிறுவன் போல சீராளன் ஓடிவந்தான். ஓடிவந்த பாலனை வாரியெடுத்துக் கணவன் கையில் கொடுத்தாள்.   ‘அப்பாடா, இனிமேல் பைரவர் உண்ணத் தடையேதுமில்லை’ என்று நிம்மதி யடைந்து உள்ளே சென்று பைரவரிடம் பையனை அழைத்து வந்ததைச் சொல்ல விரைந்தார்கள். உள்ளே பைரவரையும் பரிமாறி வைத்திருந்த கலங்களையும் காணவில்லை. இருவரும் திகைத்தார்கள்.

சிறுத்தொண்டருக்கு சிவபதம் அளிக்கும் ஈசன்
சிறுத்தொண்டருக்கு சிவபதம் அளிக்கும் ஈசன்

வெள்ளை ரிஷப வாகனத்தில் சிவபெருமான் மலைமகளோடும் முருகனோடும் காட்சி அளித்தார். பூதகணங்களும் தேவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிந்தார்கள். சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன்,  பணிப்பெண் இவர்கள் எல்லோரும் என்றும் பிரியாமல் தம்முடனே இருக்க அருள் செய்தார் பெருமான்.

இப்படி யாருமே செய்யத் துணியாத செயலைத் துணிந்து செய்த சிறுத்தொண்டர் உண்மையில் பெரிய தொண்டர். அதனால் தான் பட்டிணத்தாரும் இவர் செயலை வியந்து போற்றி,  “வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேனல்லேன்” என்று சிறுத்தொண்டர் புகழ் பாடுகிறார்.

ஆனால் சிறுத்தொண்டர் இவ்வளவு புகழ் பெற்றது எப்படி? திருவெண்காட்டு நங்கை கைகொடுத்ததால் தானே?

அப்பூதி அடிகளின் மனைவிகூட இறந்து போன மகனை மறைத்து வைத்துவிட்டு அடியாரை உபசரித்தாள். ஆனால் திருவெண்காட்டு   நங்கையோ,  உயிரோடு இருந்த மகனையே அரிந்து அமு தாக்கி அடியவரை உபசரித்தார் என்பதைப் பார்க்கும் போது இவர் செய்த தியாகம் எவ்வளவு பெரியது?

தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! இப்படிக் கூட நமது பெண்கள் கைகொடுத்த காரிகையாக விளங்குகிறார்கள்.

.

குறிப்பு:

சிறுத்தொண்ட நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

.

சிறுத்தொண்டர் குறித்த படிக்க வேண்டிய பிற தள இடுகைகள்:

சிறுத்தொண்ட நாயனார் புராணம் (சைவம்.ஓஆர்ஜி) 

 

 

சிறுத்தொண்ட நாயனார் (தினமலர்)

 

 

 

 சிறுத்தொண்ட நாயனார் (பெரிய புராணம்)

 

 

 

 

 

3 Replies to “கைகொடுத்த காரிகையர்: திருவெண்காட்டு நங்கை”

  1. அளவிடற்கரிய பெருமையுடையவர் திருவெண்காட்டு நங்கையார். சிவனடியார்களுக்காகப் பிள்ளைப் பாசத்தை விட்டவர். சிறுத்தொண்டருக்குப் பெருந்தொண்டு செய்து வாழ்ந்தவர். அவர்தம் புகழ் பாடும் இக்கட்டுரை எல்லோரும் வாசிக்க வேண்டியது. கட்டுரை ஆசிரியருக்கு என் நன்றி. இது போலவே பெரிய புராணத்தில் வரும் பெண்ணடியார்களான திலகவதியார், கமலவதியார், புனிதவதியார், இளையான் குடிமாறரின் மனைவியார், ஏயர்கோன் கலிகாமரின் மனைவியார், அப்பூதியடிகளின் மனைவியார், திருநீலகண்டரின் மனைவியார், இயற்பகையாரின் மனைவியார், சுந்தரின் மனைவியர், இசைஞானியார், மாதினியார், மங்கையர்க்கரசியார் என இவர்கள் யாவரும் செயற்கரும் செயல்கள் செய்தவர்கள். அவர்களையும் உங்கள் எழுத்தில் கொண்டு வர விண்ணப்பிக்கிறேன்.

  2. அருமையான பதிவு……….கண்களில் நீர் பெருக்கி உள்ளம் புளகாங்கிதம் அடைந்து மெய்சிலிர்த்தது ……எப்பேர்பட்ட புண்ணியபூமியில் நாம் பிறந்துள்ளோம் ….

  3. உயர்திரு ஜெயலட்சுமி அவர்களே,
    உருக்கமாக எழுதி இருக்கிறீர்கள். மனதைத் தொடுகிறது. தொடர்ந்து எழுதி வாருங்கள்.
    வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *