முண்டக உபநிஷதம்

mundaka-upanishad-two-birds-coverவேதாந்த ஞானத்தை அதன் தூய்மையான வடிவில், புனிதமும் தெய்வீகமும் ததும்பும் கவித்துவ மொழியில் உபதேசிக்கின்றன ‘தசோபநிஷதம்’ எனப்படும் பத்து உபநிஷதங்கள். அவற்றில் அதர்வ வேதத்தில் அடங்கிய முண்டக உபநிஷமும் ஒன்று. தலையை மொட்டை அடித்துக் கொண்ட (முண்டனம்) சன்யாசிகளான முதிர்ச்சியடைந்த வைராக்கிய சீலர்களுக்கான உபநிஷதம் என்பது கருதி இப்பெயர் ஏற்பட்டது.

துறவையும் ஞானத் தேடலையும் மையமாக போதிக்கின்றன என்றாலும் உபநிஷதங்கள் சன்யாசிகளுக்கு மட்டுமானவையல்ல; போராட்டம் மிகுந்த அன்றாட வாழ்வில் செயல்களின் மத்தியில் உழலும் அனைத்து மாந்தர்களுக்கும் மகத்தான வழிகாட்டுதலையும் சக்தியையும் அளிப்பவை என்கிறார் சுவாமி விவேகானந்தர். அது உண்மையே என்பதை உபநிஷதங்களை கூர்ந்து வாசித்து தியானிக்கும் எவரும் உணர முடியும். 

மூன்று அத்தியாயங்கள் கொண்ட இந்த உபநிஷத்தின் இறுதி அத்தியாயம், எனது எளிய மொழியாக்கத்தில்.  

முண்டக உபநிஷதம் – மூன்றாவது முண்டகம்

முதலாம் கண்டம்

ரு பறவைகள்
இணைபிரியாத் தோழர்கள்
ஒரே மரத்தில்.
ஒன்று கனிகளைத் தின்கிறது
மற்றொன்று
தின்னாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

(“த்³வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா²யா” என்று தொடங்கும் இந்த மந்திரம் கூறும் மிக அழகான தத்துவ உருவகம் மிக ஆழமாக வேதாந்த உரையாசிரியர்களால் பல்வேறு தளங்களில் பலவிதமாக விரித்துரைக்கப் பட்டுள்ளது)

மனிதன் அமர்ந்திருக்கிறான்
துன்புற்று மூழ்கி
தன் இயலாமையின் வசப்பட்டு
ஒரே மரத்தில்
அங்திருக்கும் இன்னொருவனை
ஈசனைக்
கண்டதும்
சோகம் நீங்குகிறான்
தன் பெருமை அறிந்து.

பொன்னொளி மிளிர்வோனை
படைப்போனை ஈசனை
புருஷனை பிரம்மனின் பிறப்பிடத்தைக்
காண்போன்
அறிந்தோனாகி
பாவத்தையும் புண்ணியத்தையும் உதறி
களங்கமற்ற மேலாம் ஒருமையை
அடைகிறான்.

அனைத்துயிரிலும் ஒளிர்வது
பிராணனே எனத் தெளிந்தோன்
அறிந்தோன்
வேறேதும் பேசுவதில்லை அவன்
தன்னில் களித்து தன்னில் இன்புற்று
செயல்கள் புரிகிறான் அவன்
பிரம்மத்தை அறிந்தோரில் மேலோன்.

சத்தியத்தால் தவத்தால்
நித்திய நல்லறிவால் பிரம்மசரியத்தால்
அடையப் பெறுவது
இந்த ஆத்மா
குற்றமற்றோர் புலனடக்கியோர்
உடலின் உள்ளே சோதிமயமாய்த்
தூயதாய்
காண்பர் அதனை.

சத்தியமே வெல்லும்*
பொய்மையல்ல
சத்தியத்தின் பாதையே
தெய்வீக வழி
ஆசையடங்கிய ரிஷிகள்
சென்றடைவதும்
சத்தியத்தின் மேலாம் இருப்பிடமே.

(* இம்மந்திரத்தின் “சத்யமேவ ஜயதே” என்ற முதல் வாசகம் இந்திய அரசின் தேசியச் சின்னத்தில் இடம் பெறுள்ளது)

பெரிது எண்ணற்கரியது
நுண்மையிலும் நுண்ணியது
ஒளிர்வது அது
தொலைவிலும் தொலைவானது
இங்கு அருகிலுள்ளது
காண்போர்க்கு
இங்கேயே இதயக் குகையில் உறைவது.

கண்ணால் உணர்தற்கு அரியது
வாக்காலும் பிற புலன்களாலும்
தவத்தாலும் செயலாலும்
பெறற்கரியது
தெளிந்த அறிவால்
தூய நுண்மனத்தால்
தியானிப்போர்
அதனைக் காண்கின்றனர்
பேதமற்று.

உணர்வால் அறியக்கூடும்
அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளை
பிராணன் ஐந்தாய்ப் புகுந்து நிற்கும்
அவ்விடத்தில் (உடலில்).
மனிதனின் நினைவு முழுதும்
புலன்களின் ஊடுருவல்.
நினைவு தூய்மையடைகையில்
தன்னை வெளிப்படுத்துகிறது
இந்த ஆத்மா.

தூய நுண்மனதுடையோன்
நினைக்கும் உலகங்களை
வெல்கிறான்
விரும்பும் விருப்புக்களை
அடைகிறான்.
தன்னை அறிந்தவனையே
போற்றிடுக
நலம் விழைவோன்.

mundaka-upanishad-sanskrit-cover

இரண்டாம் கண்டம்

அவன் அறிவான்
அனைத்துலகும் ஒளிரும்
பிரம்மத்தின் மேலாம் இருப்பிடம்.
ஆசையற்று
அந்த புருஷனை வழிபடுவோன்
கடந்து செல்கிறான்
பிறவி எனும் விதையை.

விருப்புகளை மனதில் சமைப்பவன்
விருப்புகளுக்காகவே பிறக்கிறான்
இங்குமங்கும்.
நிறைவடைந்த மனத்தோன்
தன்னை உணர்ந்தவன்
அவனிடத்தில்
இங்கேயே ஒடுங்குகின்றன
விருப்புக்கள்.

சொல்விளக்கங்களால் அடைவதல்ல
அந்த ஆத்மா
மேதமையால் அல்ல
கேள்வியின் மிகுதியாலும் அல்ல.
அதற்காக ஏங்குபவன்
அதனையடைகிறான்.
அவனுக்கே தன்னியல்பை
வெளிப்படுத்துகிறது
ஆத்மா.

வலிமையற்றோன் அடைவதில்லை
ஆத்மாவை*
ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும்
அடைவதில்லை.
சரியான உபாயங்களால் முயலும்
அறிவுடையோனது ஆத்மா
பிரம்மத்தின் இருப்பிடத்தில்
சென்றடைகிறது.

(* “நாயம் ஆத்மா ப³லஹீனேன லப்⁴யோ” என்ற இந்த மந்திர வாசகத்தை சுவாமி விவேகானந்தர் தனது பல உரைகளில் மீண்டும் மீண்டும் எடுத்தாண்டிருக்கிறார்)

ஞானத்தால் நிறைவுற்று
ஆத்மாவில் நிலைத்து
அலைப்புகள் அற்று
அமைதி பெறுவர்
இதனை அடைந்த ரிஷிகள்.
தன்னில் இயைந்து
எங்கும் நிறைந்து எல்லாம் ஆன
பரம்பொருளிலேயே புகுவர்
அந்த உறுதியுடையோர்.

வேதாந்த உட்பொருளை
தீர முடிவுசெய்தோர்
துறவெனும் யோகத்தால்
உள்ளம் தூய்மையுற்றோர்
மேலான அமுதநிலை அடைவர்.
ஈற்றிறுதிக் காலத்தே
முற்றிலும் விடுபட்டு
இறைநிலை அடைவர்.

அவர்களது பதினைந்து கலைகளும்
அவற்றின் இருப்பிடம் அடையும்
புலன்கள் அவற்றுக்குரிய
தெய்வங்களைச் சென்றைடையும்
செயல்களும் அறிவுமயமான ஆத்மாவும்
அழிவற்ற பரம்பொருளில்
ஒன்றுகலந்து விடும்.

விரைந்தோடும் நதிகள்
பெயரும் வடிவமும் துறந்து
கடலில் கலப்பது போல
அறிந்தோன்
பெயரும் வடிவமும் விடுபட்டு
அப்பாலுக்கும் அப்பாலான
ஒளிவடிவான புருஷனைச்
சென்றடைகிறான்.

மேலான பிரம்மத்தை அறிந்தவன்
பிரம்மமாகவே ஆகிறான்
பிரம்மமறியாதோர்
அவனது குலத்தில் பிறப்பதில்லை
துன்பம் கடந்து
பாவம் கடந்து
மனமுடிச்சுகள் விடுபட்டு
அழிவற்றவனாக
ஆகிறான் அவன்.

மந்திரங்கள் கூறும்:
உரிய கிரியைகள் செய்தோன்
கற்றுணர்ந்தவன்
பிரம்ம நிஷ்டை உடையவன்
அக்னியில் தானாக அவி தருபவன்
சிரோவிரதத்தை விதிமுறைப்படி கடைப்பிடிப்பவன்
அவனுக்கு மட்டுமே
இந்த பிரம்மவித்தையை சொல்ல வேண்டும்.

இந்த சத்தியத்தை அங்கிரச ரிஷி
முன்பு கூறினார்
விரதமில்லாதவன் இதனைப்
படிக்க வேண்டாம்.
மேலான ரிஷிகளுக்கு வணக்கம்.
மேலான ரிஷிகளுக்கு வணக்கம்.

(மூன்றாவது முண்டகம் முற்றும்)

One Reply to “முண்டக உபநிஷதம்”

  1. //விரைந்தோடும் நதிகள்
    பெயரும் வடிவமும் துறந்து
    கடலில் கலப்பது போல
    அறிந்தோன்
    பெயரும் வடிவமும் விடுபட்டு
    அப்பாலுக்கும் அப்பாலான
    ஒளிவடிவான புருஷனைச்
    சென்றடைகிறான்.//
    மிக அழகான எளிமை படுத்தப்பட்ட வரிகள். அழ்ந்த பொருள் கொண்ட வரிகள்.
    நன்றி.

    சோமசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *