உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு

globalisation-goodகடந்த 2000 ஆண்டுகளாக உலகமயமாதல் இருந்தாலும் தாமஸ் எல் ப்ரீட்மன் “The World is Flat” என்ற தமது நூலில், உலகமயமாதல் அல்லது உலகமயமாக்கலை மூன்று காலக்கட்டமாகப் பிரிக்கிறார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வணிகம் எவ்வாறு நடந்துள்ளது என்றும், அதன் பரிணாமம் எவ்வாறு மாறி வருகிறது என்பதையும் விரிவாக எழுதியுள்ளார். இந்தக்கட்டுரையில் இந்த மூன்று காலக்கட்டத்தையும், Globalisation of the Local என்பதன் பொருள் என்ன? அதன் தாக்கம் எவ்வளவு? அதனால் பலனடைவது யார் என்பதையும் பார்க்கலாம்.

Globalisation 1.0 என்பது கிபி 1492 – கிபி 1800 வரையிலான காலக்கட்டமாகவும், Globalisation 2.0 என்பது கிபி 1800 -2000வரையிலான காலக்கட்டமாகவும், Globalisation 3.0 என்பதை தற்போதைய காலக்கட்டமாகப் பார்க்க வேண்டும் என்கிறார்.

Globalisation 1.0 காலக்கட்டம் பேரரசுகளின் மூலமாகவும், மதங்களின் வாயிலாகவும் வணிகம் நடந்த காலக்கட்டமாகும். இந்தக் காலக்கட்டத்தை அரசுகளுக்கு இடையேயான வணிகத்தில் தமது மக்கள் வளம், இயற்கை வளம், படை வலிமை ஆகியவற்றின் மூலமாக பேரரசுகள் வர்த்தகம் செய்தன. இக்காலக்கட்டத்தில் இந்தியாவின் GDP உலக GDP யில் (26%க்கும் மேலாக) இடண்டாமிடத்தில் இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு உலகின் மொத்த GDP யில் 4% க்கும் குறைவாக இருந்த காலக் கட்டமாகும்.

Globalisation 2.0 காலக்கட்டம், பன்னாட்டு நிறுவனங்கள்( Multi National Companies) வர்த்தகத்தில் கோலோச்சிய காலக் கட்டமாகும். இக்காலக்கட்டத்தில்தான் இந்தியா போன்ற நாடுகளை கிழக்கிந்திய கம்பெனி போன்ற ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் மூலம் வணிகம் செய்ய ஆரம்பித்து காலனிய ஆதிக்கத்தின் கீழ் இந்தியா சென்றது. Globalisation 2.0 காலக்கட்டத்தின் முதல் பாதி வணிகத்தில் சாலை, புகைவண்டி ஆகியவற்றின் பங்களிப்பும், இரண்டாம் பாதியில் தகவல் தொடர்பு சாதனங்கள், தொழில் புரட்சி, கணிப்பொறி, சாட்டிலைட் போன்ற சாதனங்களின் கண்டுபிடிப்புகள் உலகமயமாதலை எளிதாக்கியது. இந்தக் காலக்கட்டத்தில்தான் பெரும்பாலும் பன்னாட்டுச் சந்தைக்காகவும், தங்கள் நிறுவனங்கள் அமையப் பெற்ற வேறு இடங்களுக்கு அல்லது நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் வந்தது. காலனிய ஆதிக்கத்திற்கு அடிமையான பிறகு இந்தியாவின் GDP(உள் நாட்டு உற்பத்தி) 1900 களில் 1.6 % ஆகக் குறைந்து விட்டது.

Globalisation 3.0 காலக்கட்டம் என்பது ஒவ்வொரு தனி நபரின் பங்களிப்பும் அதற்கு தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியும் பேருதவியாக அமையும். இக்காலக்கட்டத்தில் தான் நாம் இன்று உள்ளோம் என்கிறார் தாமஸ் எல் ப்ரீட்மன்.

“Globalisation is Americanaisation” என்பது ஓரளவுக்கு உண்மை என்றாலும், இன்று அது மட்டுமே என்று சொல்வதில் எந்தப் பொருளுமில்லை என விவாதிக்கிறார். அதற்கு அவர் முன் வைக்கும் விவாதம் Globalisation of the Local or Localise the Global என்கிறார். இதை நாம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். “உலக வணிகத்தை, உலக இசையை, உலக உணவை, உலக பொழுது போக்கு அம்சங்களை, உலக செய்திகளை, உலக சினிமாக்களை, உலக அரசியலை உங்கள் வீட்டிற்கு அல்லது உங்களுக்கு நேரடியாகக் கொண்டு வருவது என்று சொல்லலாம் அல்லது இதே விடயங்களை, அதாவது உள்ளூர் தமிழக அரசியலை, உள்ளூர் கலை நிகழ்ச்சிகளை, உள்ளூர் சினிமாவை, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, உள்ளூர் உணவை உலகில் உங்கள் மக்கள் வாழும் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்வதே Globalisation of the Local ஆகும்.

இதற்கு இணையம், சமூக வலைத் தளம், கூகுள், கைபேசிகளின் வளர்ச்சியே மிக முக்கியக் காரணமாகும். இதை எனது சொந்த அனுபவத்திலிருந்து பகிர்ந்து கொள்கிறேன். வேலை வாய்ப்பு மற்றும் பொருள் வளத்தைப் பெருக்குதல் என்பதன் காரணமாகவே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சவுதி அரேபியாவிற்கு வந்துள்ளேன். கடந்த வாரம் ஒரு இந்திய உணவகத்திற்குக் குடும்பத்துடன் சென்றேன். அங்கு சென்ற போது அதிகக் கூட்டமிருந்தது. முக்கால் மணி நேரம் காத்திருந்திருப்போம். இரு குடும்பங்களைத் தவிர இந்திய உணவை ருசிக்க வந்தவர்கள் அனைவரும் அரபு நாட்டினர். குறிப்பாக சவூதி வாழ் மக்கள். இதே அனுபவத்தை பிரான்ஸில் க்ரெனோபில்( Grenoble) என்ற நகருக்குப் பணி நிமித்தமாகச் சென்ற போதும் உணர்ந்தேன். பாம்பே உணவகம் என்ற இந்திய உணவகத்தில் உணவருந்த வேண்டுமானால் முதலில் முன் பதிவு செய்து இருக்க வேண்டுமாம். அந்த உணவகத்தில் உணவருந்த வந்தவர்கள் பெரும்பாலோர் பிரெஞ்சு நாட்டினரே. Mc Donald, KFC , Pizza In மட்டும் இந்தியாவை ஆக்கிரமிக்கின்றன என்பதை மட்டும் நாம் சொல்லிக் கொண்டிருக்க இயலாது. இந்திய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளிலும், அமெரிக்கா, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய, சீனா உணவகங்கள் அதிகம் ஆக்கிரமித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் தான் மசாலா தோசையும், பிஸ்ஸாவும் உலக உணவில் சுவை மிக்க உணவாக பரவலானதற்குக் காரணம்.

globalizationஇணையத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உலகின் ஏதேனும் ஓர் மூலையில் அமர்ந்து கொண்டு, நண்பர்களோடும் உறவினர்களோடும் Skype, ActionVoip போன்றவற்றின் மூலமாக குறைந்த கட்டணத்திலோ, இலவசமாகவோ உரையாட முடிகிறது. இணையத்தின் வாயிலாகப் பல்வேறு தகவல்களைப் பெற முடிகிறது. இணையம் சகலத்தையும் கொடுத்திருக்கிறது. இணையம் மூலமாக Globalisation of the Local என்ன என்று அறிய வேண்டுமா? சின்ன உதாரணம்.Why this Kolaiveri என்ற தமிழ்ப் பாடலை Youtube போன்ற தளத்தில் தரவேற்றம் செய்து விட்டால் போதும். உங்கள் இசை, வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அந்தப்பாடல் அதே மெட்டில் ஒலிக்கிறது. Gagnam Style என்ற பாடலுக்கு இந்தியக் குழந்தைகள் பள்ளிகளில் நடனமாடுகிறார்கள். இசைக்கு மொழி கிடையாது என்பார்கள். இந்தியாவுக்கான இசை இன்று உலகம் முழுமைக்கும் வியாபித்திருக்கிறது. இணையத்தின் மூலம் உடனுக்குடன் செய்திகளை On Line ல் தினசரிகளின் செய்திகளை வாசிக்க இயலுகிறது. விமானங்கள் மூலம் வார இதழ்களை வெளிநாடுகளிலும் வாங்கிப் படிக்க முடிகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில், இதுவும் உலகமயமாதலின் ஒரு அங்கமே!

சமூக வலைத்தளங்களான Face Book , Twitter போன்றவற்றில் தங்களது கருத்துக்களை எடுத்து வைக்க முடிகிறது. இந்தியாவை யார் ஆள வேண்டும் என்று அமெரிக்காவிலிருந்து கொண்டு தமது கருத்தை ஒருவர் எழுத முடிகிறது. முகநூலில் உறவினர்களைக் கூட நண்பர்களாக தங்கள் உறவைத் தொடர உதவுகிறது. கட்டுரைகளை இன்று மின்னஞ்சலில் பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் போதும். இதை கடந்த காலத்தோடு ஒப்பிட்டுக் கூட பார்க்க இயலாது. இன்று இணையப் பத்திரிகைகள் தினசரி இதழ்களைக் காட்டிலும் அதிகக் கருத்தாழமிக்க கட்டுரைகளை வெளியிடவும், பெரும்பாலான வாசகர்களைச் சென்றடையவும் இணையம் பேருதவி செய்து வருகிறது.

‘கூகுள்’ தகவல் தொழில் நுட்பத்தின் மிகப் பெரிய சாதனையில் ஒன்று. கூகுள் மூலமாக சகலத்தையும் தேட முடிகிறது. இன்று கூகுல் தேடல் பல்வேறு மொழிகளில் உள்ளது. 2005 ஆம் ஆண்டில் மொத்தம் 116 மொழிகளில் கூகுளில் தேட வழி வகுத்தார்கள். உங்களின் மொழியை blog மூலமாகவோ, முக நூல் மூலமாகவோ கொண்டு செல்ல தொழில் நுட்ப வசதிகள் வந்து விட்டன. வணிக மொழியாக இன்றைய நிலையில் ஆங்கிலம் இருந்தால் கூட, எதிர்காலத்தில் உள்ளூர் மொழியில் ஒவ்வொரு பொருள் குறித்தும் தகவல்கள் கிடைக்கலாம். இந்தத் தொழில் நுட்ப வசதியே, இன்று பலரும் வெளி நாடுகளில் குடி பெயர்ந்தாலும் மொழியோடு அதிகத் தொடர்பை ஏற்படுத்தச் செய்துள்ளன என்றால் மிகையாகாது.

உலகமயமாதலில் அதிக அளவுக்குப் பயனடைந்த நாடாக அமெரிக்கா விளங்கியது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால், தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் அனைத்து நாடுகளும் குறிப்பாக வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் போன்றவை அதிகப் பயனடைகின்றன. எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும், அவனது மொழியை, உணவை, சினிமாவை, கலையை எந்த நாட்டில் இருந்தாலும் பெற முடிகிறது என்பதே உலகமயமாதலின் வெற்றியாக உள்ளது.

இந்திரஜித் பானர்ஜி, (AMIC) Globalisation of the Local பற்றி பேசும் போது, அதிக அளவுக்கு சீனர்களும், இந்தியர்களும் உலகம் முழுமைக்கும் இடம் பெயர்வதால் ,ஆசிய நாடுகள் ஆங்கிலத்தை நோக்கி நகர்கின்றன என்பது போய், ஆசியாவின் நிகழ்ச்சிகளை, ஆசியாவின் அரசியலை, கட்டுரைகளை அவரவர் மொழியில் தொலைக்காட்சியில் காணும் வாயப்பை, தினசரிகளிலும், இணையத்திலும் படிக்கும் வாய்ப்பை உலகமயமாதல் தந்துள்ளது என்கிறார்.

உலக மயமாதல் என்பது முதலாளித்துவத்தை வளர்த்தல், சந்தையில் Global Brand ஐ முன்னிறுத்தல், விரைவு உணவகங்களை வளர்த்தல் (Fast Food), நுகர்வோரை அடிமையாக்கல், ஒரு கலாச்சாரத்தின் மீதும், சமூகத்தின் மீதும் வேறொரு கலாச்சாரத் தாக்கத்தை ஏற்படுத்துதல் போன்றவை பல நாடுகளில் பல வருடங்களுக்கு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், உலக மயமாதலை வெறுமனே பொருள் சார்ந்தோ, சந்தை மட்டும் என்றோ, வணிகம் என்று மட்டுமோ சொல்லி விட இயலாது என்கிறார் தாமஸ் எல் ப்ரீட்மன்.

உலகமயமாதல் மேற்கூறியவற்றைக் காட்டிலும் சற்று பரந்த, ஆழ்ந்த மற்றும் நிறைய தகவல் தொடர்புகளையும், புதிய யோசனைகளையும் பரவலாக்குவதும் கூட. இந்தியா சினிமாத்துறையிலும், கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் animation துறையிலும் சிறந்து விளங்குகின்றன. புதிது புதிதான பொருட்களைக் கண்டுபிடிப்பவர்களும், software (மென் துறையில்) ல் 3D போன்ற வடிவமைக்கும் பணியில், ஆதிகால சிற்பிகளின் குழந்தைகளுக்கு முறையான பயிற்சி வகுப்புகள் கொடுப்பதன் மூலம் அவர்களின் பரம்பரை ஜீன்கள் புதிய யோசனைகளை எளிதாக வடிவமைக்க உதவும் என்பதால் அவர்களை அடையாளம் கண்டுபிடித்து முறைப்படுத்தும் பணியை குல்கர்னி, Jadooworks , COO தனது நிறுவனம் முயற்சிகளை மேற்கொள்கிறது எனத் தெரிவிக்கிறார்.

globalization_badஉலகமயமாதலில் ஒவ்வொரு project ஐயும் எடுக்க நடக்கிற போட்டிகளில் இன்றைய நிலையில், எந்த நாடு அந்த project செய்வதற்கான ஒப்பந்தத்தைப் (contract ஐப்) பெறுகிறது என்பதைக் கணிக்க இயலவில்லை. இதை சொல்வதற்கு முக்கியக் காரணமுண்டு. 2020 ல் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியை நடத்த, நடந்த டெண்டரில் கத்தார் வென்றது. கத்தார் அணி உலகக் கால்பந்து போட்டிக்குத் தகுதி கூட பெற்ற நாடு கிடையாது. அது கத்தாருக்கு நல்லது என்பதைக் காட்டிலும், அரபு நாடுகள் ஒரு contract எடுக்கும் போது, பணியாளர்களில் பெரும் பகுதியினர் ஆசிய நாடுகளிலிருந்து குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். நிறைய sub contract job இந்திய நிறுவனங்களுக்கும் கிடைக்கிறது. இதுவே EXPO 2020 ஐ துபாய் வென்றதற்கும் பொருந்தும். இதே டெண்டரை வேறு ஐரோப்பிய நாடுகளுக்கோ, ஆப்பிரிக்க நாடுகளுக்கோ சென்றால் நம்மவர்கள் பணி புரிய வாய்ப்புக் குறைவல்லவா? கடந்த 2007 ஆம் ஆண்டில் Tata Steel india என்ற இந்திய நிறுவனம்Anglo Dutch Corus என்ற ஸ்டீல் நிறுவனத்தை 6.2 பில்லியன் ரூபாய்க்கு பிரேசிலுடன் போட்டி போட்டு மிகப் பெரிய டெண்டரை ஐரோப்பாவில் எடுத்தது. அதுதான் இந்தியா அதிகத் தொகைக்கு முதன்முதலாக வெளிநாட்டில் டெண்டரில் வெற்றி பெற்ற project ஆகும்.

உலகமயமாதலின் ஒரு கட்டமாகவே இன்றைய “make in india” திட்டமும் பார்க்கப்பட வேண்டும். அது உலகமயமாதலில் இந்தியாவில் எண்ணற்ற வேலை வாய்ப்புகளையும், இந்தியாவிற்கான brand value வையும் இந்தியாவிற்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தித் தரும்.

உலகமயமாதலில் இதே தகவல் தொழில் நுட்பத்தால் பல தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. முகங்களை மார்பிங் செய்து தரவேற்றம் செய்தல், தீவிரவாதத் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளல், sex வெப்சைட் மூலமாக வணிகம் செய்தல், தவறான வதந்தியை எளிதாகப் பரப்புதல் எனத் தீமைகளையும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

உலகமயமாதல் கலாச்சாரத்திலும் நிறைய மாறுதல்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் ஒரு நாடு தனது பாரம்பரியத்தை விடாமல் இருத்தலே அந்நாட்டின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் என்கிறார். இந்தியாவின் கலாச்சாரம் பற்றி தாமஸ் குறிப்பிடுகையில், இந்தியாவிற்குள் மொகலாயர்கள் வந்தார்கள். ஆண்டார்கள். சென்றார்கள். ஆங்கிலேயர் வந்தார்கள். ஆண்டார்கள். சென்றார்கள். ஆனால் இந்தியப் பெண்கள் வெளி நாட்டு ஆடைகளை உள்வாங்கிக் கொண்டாலும் சேலைகளை விடவில்லை என்கிறார். பிஸ்ஸாவையும் விரைவு உணவையும் வரவேற்றவர்கள், மசாலாவை உணவில் சேர்ப்பதை விடவில்லை என்கிறார்.

உலகமயமாதல் அதிகாரத்தைக் குவிக்கிறது. அதிகாரத்தைக் கைமாறச் செய்கிறது. கலாச்சாரத்தைப் பரப்புகிறது. உலகமயமாதலின் முக்கியச் சிக்கலே Un Equally Rich ஆக மனிதர்களை மாற்றியுள்ளது என்பதே. நாடுகள், நிறுவனங்களைத் தாண்டி உலகமயமாக்கலில் தகவல் தொழில் நுட்ப உதவியுடன் தனி நபரின் பங்களிப்பு இந்த நூற்றாண்டில் நடக்கும் என்கிறார். மேலும், இந்தியா, சீனா ,ரஷ்யாமற்றும் பிரேசில் போன்ற வளரும் நாடுகள் அதிக பலனடையும் என்கிறார் The World is Flat நூலாசிரியர் Thomas L. Friedman.

3 Replies to “உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு”

  1. உண்மை தான். நாம் நம் கலாசாரத்தை விடவில்லை.

  2. நல்ல கட்டுரை நல்ல அறிமுகம். ஆனால் தேவையான இடத்தில் பயன்படுத்திக்கொண்டு சில இடத்தில விட்டு விட வேண்டும்

    விசா கார்டுகலூகு பதிலாய் ரூபா காருகளுக்கு மாறுவோம் இணையத்தில் பேச்பூகில் தமிழ் ஹிந்து படிபோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *