மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

காந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை

Liquer3

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?

-என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் தமிழகம் போல மதுவிற்பனைக்கென்றே  ‘டாஸ்மாக்’ (TASMAC) போன்ற அரசு நிறுவனம் இயங்குவதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது. இதில் நகைமுரண் என்னவென்றால், இந்த டாஸ்மாக் நிறுவனம், அரசின் சுங்கவரி மற்றும் மதுவிலக்குத் துறையால் தான் நிர்வகிக்கப்படுகிறது!

மது விற்பனையால் கிடைக்கும் சுங்கவரி மற்றும் கலால் வரியால் பெறப்படும் வருவாயே தமிழக அரசின் ஆண்டு வருவாயில் சரிபாதியாக இருக்கிறது. இதைக் கொண்டுதான் தமிழக மக்களுக்கு இலவசத் திட்டங்கள் அள்ளிவிடப்படுகின்றன. மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி தரவும், பெண்களுக்கு விலையில்லா மிக்ஸி தரவும், அதே குடும்பத்தைச் சார்ந்த ஆண்களைக் குடிகாரர்களாக்குகிறது தமிழக அரசு. இது கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதல்லாமல் வேறென்ன?

முதல்முறையாக 1937-ல் சென்னை ராஜதானியில் ராஜாஜி முதல்வராக இருக்கையில் மதுவிலக்கு கொள்கை அறிவிக்கப்பட்டது. பிற்பாடு காங்கிரஸ் ஆட்சி பதவி விலகியதும், 1944-ல் ஆங்கிலேய அரசு தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க முடிவெடுத்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தார் ராஜாஜி.

அப்போது அவர் எழுதிய கட்டுரையில்,  ‘மதுபானத்திலிருந்து சமுதாயச் செலவுக்காக எடுக்கக்கூடிய வரிப்பணத்தை ஏன் வீணில் இழக்க வேண்டும்? வரிப்பணம் இருந்தால்தானே ஜனங்களுக்கு வேண்டிய நன்மைகளைச் சர்க்கார் செய்ய முடியும்?’ என்று கேட்கிறார்கள். உண்மையில் கலால் வருமானமானது வருமானமே அல்ல. இப்போது சர்க்கார் கஜானாவில் செலுத்தப்படும் வருமானத்தை விட மதுவிலக்கு ஏற்பட்டால்,  ஐந்து மடங்கு அதிகமாக மக்கள் வீடுகளில் பணம் மிஞ்சும். மதுவினால் அதிகரிக்கும் குற்றங்களும் குறையும்-  என்று எழுதினார்.

தமிழகத்தின் தற்போதைய நிலைமை என்ன? ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையான வசனம் வரும்- இங்கு மதுவைத் தொடாத ஆணாக இருக்க வேண்டுமென்றால் அவன் பச்சைக்குழந்தையாகத் தான் இருக்க முடியும் என்று! ஆண்களை மலடாகவும், குடும்பங்களை குப்பையாகவும் ஆக்கும் மதுவுக்கு நமது அரசே ஆதரவாக இருக்கிறது!

தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னரே மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. அந்த  முடிவை அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி 1971-ல் எடுத்தபோது, கொட்டும் மழையிலும் அவரை வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து, மன்றாடினார் முதுபெரும் தலைவர் ராஜாஜி. அதை கருணாநிதி பொருட்படுத்தவில்லை. அதன் விளைவு, யாரும் காணாமல் ஒளிந்து மது அருந்தியவர்கள் கூட கூச்சமின்றி மதுக்கடைக்குப் படையெடுப்பது துவங்கியது.

மதுவிலக்கு கொள்கையின் தள்ளாட்டம்:

மதுவிற்பனையில் கழகங்களிடையே போட்டி...
மதுவிற்பனையில் கழகங்களிடையே போட்டி…

1937-லிருந்து 2001 வரை,  1944- 47, 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர பெரும்பாலான காலங்களில் தமிழகத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. அதாவது 2001 வரையிலான சுமார் 68 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் மட்டுமே மதுவிற்பனை தமிழகத்தில் தாராளமாக இருந்திருக்கிறது. இந்நிலைக்கு சாவுமணி அடித்தது, எம்.ஜி.ராமசந்திரன் முதல்வராக இருந்தபோது 1983-ல் டாஸ்மாக் நிறுவனம் துவங்கியபோது தான்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்),  1983-ல் எம்.ஜி.ராமசந்திரன் தலைமையிலான  அதிமுக அரசால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் -1956 இன்படி, இந்நிறுவனம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. ஆளும்கட்சிக்கு வற்றாத வளம் தரும் காமதேனுவாக டாஸ்மாக் உணரப்பட்டது அக்காலத்தில் தான். ‘பாக்கெட் சாராயம்’ எனப்படும் மிக மோசமான வஸ்து தமிழகத்தில் ஆறாக ஓடியதும் அக்காலத்தில் தான். எனினும் 1987- மீண்டும் மதுவிலக்கு வந்து, தமிழகப் பெண்களின் நெஞ்சில் பால் வார்த்தது.

2001-ல் அதிமுக ஆட்சியின்போது, மீண்டும் மதுவிலக்கு கொள்கை தூக்கி எறியப்பட்டது. மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகுவதாகக் கூறி, அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மதுவிலக்கைத் தளர்த்தினார். அது இன்று பூதாகரமாகி, அரசையே இயக்கும் அளவுக்கு பிரமாண்டமாகி இருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், டாஸ்மாக் துவங்கியபோது (1983), கள்ளச்சாராயத்தைத் தடுத்து  மதுவிற்பனையை முறைப்படுத்துவதே அதன் இலக்காக இருந்தது. அதுவே 2003-ல் மாநிலத்தின் ஒரே அதிகாரப்பூர்வ மது விற்பனை நிறுவனமாக மாற்றப்பட்டது.

2001-ல் மதுவிற்பனையை முறைப்படுத்த டாஸ்மாக் முயன்றபோது மது வர்த்தகத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் நடத்திய கூட்டணி ஏலமுறையால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அபோதுதான், டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக மது விற்பனையில் இறங்குவது என்று அரசு முடிவெடுத்தது. அக்டோபர் 2003- இல்  ‘தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம்- 1937’இல் திருத்தம் செய்ததன் மூலம், டாஸ்மாக்கிற்கு மது விற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோக தனியுரிமை அளிக்கப்பட்டது.

அப்போது இதனை கடுமையாக எதிர்த்த திமுக, 2006-ல் தான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, டாஸ்மாக் வருவாயைக் கருத்தில் கொண்டு முந்தைய அரசின் கொள்கையையே தொடரத் தீர்மானித்தது. மது வியாபாரத்தில் மட்டுமே இவ்விரு கட்சிகளிடையே நல்லிணக்கம் காணப்படுகிறது.

2013-14 நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் ரூ. 23,401 கோடி. இது முந்தைய ஆண்டைவிட ரூ. 1,721 கோடி அதிகம். மதுப் பயன்பாடு அதிகரிப்பு, மதுவகைகளின் விலையேற்றம் ஆகிய காரணங்களால் வருமாண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

ஆண்டுதோறும் அதிகரித்துவரும் டாஸ்மாக் வருவாய் (காண்க: பட்டியல்) அரசுக்கு இனிப்பாக இருக்கலாம்; ஆனால் அது நாட்டையே அழிக்கும் விஷம் என்பதை நமது ஆட்சியாளர்கள் உணர மறுக்கின்றனர்.

தலையை ஆட்டுவிக்கும் வால் டாஸ்மாக்:

தமிழக அரசின் வற்றாத அமுதசுரபியாகக் கருதப்படும் டாஸ்மாக், முற்றிலும் அரசு நிறுவனம். கல்வியையும் மருத்துவத்தையும் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசு, அவற்றை தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு, மதுவிற்பனையை முறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, மதுவை விற்று வருகிறது.

டாஸ்மாக் வருவாய்- ஒரு புள்ளிவிவரம்

இதனை நிர்வகிக்க இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) அதிகாரிகள் ஐவர் நியமிக்கப்படுகின்றனர். டாஸ்மாக் வருவாய் குறையும் பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிரமாகப் பாடுபட்டு கள்ளச் சாராயத்தை ஒழிக்கின்றனர். நாட்டு மக்கள் கள்ளச் சாரயம் குடிப்பதை விட நல்ல சாராயம் குடிப்பதே நாட்டிற்கு நல்லது என்பது தானே அரசின் கொள்கை?

இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகளை (ஐஎம்எஃப்எஸ்) கொள்முதல் செய்வது, அவற்றை வர்த்தகம் செய்வது ஆகியவையே டாஸ்மாக்கின் பணிகள். இதற்கென மாநிலம் முழுவதும் 41 கிடங்குகள் இயங்குகின்றன. விவசாய விளைபொருளைப் பத்திரப்படுத்த கிடங்குகள் உள்ளனவோ இல்லையோ, மதுவகைகளை பத்திரப்படுத்த கிடங்குகள் அதிநவீனமாக அமைக்கப்படுகின்றன.  தற்போது மாநிலம் முழுவதும் 4,035 டாஸ்மாக் மதுக்கூடங்கள் உள்ளன.

இந்நிறுவனத்தை இயக்க 350 அரசு ஊழியர்களும், பல்வேறு துறைகளிலிருந்து தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்ட 300 அரசுப் பணியாளர்களும், தினசரி சம்பள அடிப்படையில் வேலை செய்யும் 28,000 ஊழியர்களும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 95 அதிகாரிகளும் உள்ளனர். இது டாஸ்மாக் இணையதளம் தரும் தகவல். இந்த ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியச் செலவினம் மிகவும் குறைவே. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் பெருகிவிட்டன. அது தனிக்கதை.

தவிர, மதுவகை கொள்முதலிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. அரசுக்கு வருவாய் என்பது மாறி, ஆளும் கட்சிக்கு தேர்தல்கால ஆபத்பாந்தவனாக இக்கொள்முதல் முறை மாறியிருக்கிறது. எனவே தரமற்ற சரக்குகள் விற்பனையில் புகுந்து, ஏற்கனவே தள்ளாடும் குடிமகனை மேலும் நாசமாக்கி நடுத்தெருவில் வீழ்த்துகின்றன.

டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டி அமைக்கப்படும் மதுக்கூடங்கள் (பார்) நடத்துவது தான் அரசியல்வாதிகளின் இப்போதைய முக்கியமான தொழில். பெரும்பாலும் ஆளும்கட்சிப் பிரமுகர்களே பினாமி பெயர்களில் இவற்றை நடத்துவதால், இங்கும் முறைகேடுகள் உச்சம். உதாரணமாக, இங்கு ஒரு ரூபாய் மதிப்புள்ள காகிதக் கோப்பை ரூ. 5-க்கு கொள்ளை லாபத்திற்கு விற்கப்படுகிறது. குடிமகனின் வருவாயைச் சுரண்டுவதில் டாஸ்மாக் நிறுவனத்துடன் போட்டியிடுகின்றன இந்த பார்கள்.

ஆக மொத்தத்தில், அரசுக்கு பல்லாயிரம் கோடிக் கணக்கில் வருமானம், அரசுத் துறை அதிகாரிகளுக்கு முறைகேடுகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான லஞ்சம், ஆளும்கட்சிப் பிரமுகர்களுக்குக் கிடைக்கும் கோடிக் கணக்கான பார் வருவாய், அரசியல்வாதிகள் நடத்தும் மது உற்பத்தி ஆலைகளின் பலகோடி லாபம் ஆகிய பல அம்சங்கள் பின்னிப் பிணைந்தது மது விற்பனை உலகம். அரசு என்னும் தலையை டாஸ்மாக் என்னும் வால் ஆட்டும் விந்தைக்கு ஆதாரம் இதுவே.

தமிழகத்தில் மதுவிற்பனைக்கு எதிராக பரவலாக குரல்கள் ஒலித்தாலும் கூட, அரசு அவற்றைக் கருத்தில் கொள்ளாததற்கும் இதுவே காரணம். பொன்முட்டையிடும் வாத்து போன்ற டாஸ்மாக் வர்த்தகத்தைக் கைவிட தமிழக அரசு தயாரில்லை. ஆக, மக்களைக் காக்க உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட டாஸ்மாக் இன்று மக்களை சிறுகச் சிறுகக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.

குடிப்பழக்கத்தின் கொடிய விளைவுகள்:

மதுவின் கொடுமைகள் குறித்து தனியே விளக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் எந்தத் தெருவிலும் விழுந்துகிடக்கும் இளைஞனே மதுவின் கோரத்திற்கு நேரடிச் சான்று. மதுப்பழக்கத்தால் நாசமாகும் இளைஞர் சமுதாயம்; குலையும் குடும்ப உறவுகள்; சிதையும் பொருளாதாரம்; மங்கும் உழைப்புத் திறன், அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்.. என மதுவின் கொடுமைகள் நீள்கின்றன.

Liquer2

வயது வந்தவர்கள் கூட மறைந்து குடித்த காலம் மாறி, பள்ளி செல்லும் எட்டாம் வகுப்பு மாணவனே குடித்துவிட்டு வகுப்புக்கு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆண்களோடு சரிநிகர் சமானமாக பெண்களும் குடித்துவிட்டு கும்மாளமிடும் கலாசாரம் எல்லை மீறி, குற்றச்செயல்கள் பெருகுகின்றன. குடியே ஒரு பெருமையாக மாறிவரும் நாசகாரக் கலாசாரமும் உருவாகி வருகிறது.

இன்று அரசியல் கூட்டங்கள் மதுப்புட்டி விநியோகம் இல்லாமல் சாத்தியமில்லை என்ற நிலையும் உருவாகிவிட்டது. மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் மது தவிர்க்க முடியாத அம்சம் என்ற பாவனையும் உருவாகி வருகிறது. இதனால் குடிநோய்கள் பெருகுகின்றன.

தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை முடக்குவதாகவும், கல்லூரி மாணவர்களைத் தடம்புரளச் செய்வதாகவும், மது அரக்கன் உருவாகி இருக்கிறான்; உள்நாட்டுத் தயாரிப்பான கள்ளைக் குடித்தால் குற்றம், வெளிநாட்டு மதுவகையான பிராந்தியைக் குடித்தால் சரியானது என்ற தவறான நிலைப்பாடு அரசாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக குடலும் ஈரலும் வெந்து மாயும் தமிழ் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இதில் வேதனை என்னவென்றால், மது விற்பனை வருவாய் குறித்த புள்ளிவிவரங்கள் அனைவரும் அறிந்தவையாக உள்ளன. இந்த விற்பனையை விசேஷ நாட்களில் அதிகரிக்குமாறு அரசே உத்தரவிடுகிறது. ஆனால், மதுவின் தீமையால் இறக்கும் குடிமக்களின் எண்ணிக்கை குறித்த சுகாதாரப் புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. ஆயினும், மருத்துவமனைகளில் கல்லீரல் அழுகல் நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

மதுப்பித்து, ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி, சாராய மயக்கம், கணைய அழற்சி, குடற்புண், இதயநோய், மனநல பாதிப்பு, சுயநினைவிழப்பு போன்ற பல உடல்நலப் பாதிப்புகளை குடிப்பழக்கம் உருவாக்குகிறது. ஆரோக்கியமான சமுதாயம் அமைய குடிப்பழக்கம் விரோதி என்பதை அரசு மறந்துவிட்டது.

மூதறிஞர் ராஜாஜி ஒரு கதை சொல்வார். “ஒருவனிடம் ‘மதுவை அருந்துதல், ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தல், அவளது கைக்குழந்தையைக் கொலை செய்தல்’ என்ற மூன்றில் ஒன்றைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று சைத்தான் உத்தரவிட்டது. மற்றவை பெரும் பாவம் எனக் கருதிய அந்த மனிதன்,  மதுவை அருந்தினான். போதை ஏறியதும் அவன்,  அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தான். அதற்கு இடையூறாக இருகப்பதாக என்று எண்ணி அழுத குழந்தையையும் கொலை செய்தான். எனவே, எல்லாப் பாவங்களுக்கும் மூலமான மதுவை ஒழிக்க வேண்டும்;  பூரண மதுவிலக்கு மூலம் மதுவைக் கட்டுப்படுத்தினாலே ஏராளமான குற்றங்கள் குறையும்” என்பார் ராஜாஜி.

நாம் என்ன செய்ய வேண்டும்?

“கள்ளுண்பவர் நஞ்சுண்பவரே” என்கிறார் திருவள்ளுவர் (குறள்- 926). இதற்காக ‘கள்ளுண்ணாமை’ என்ற தனி அதிகாரமே படைத்த அவரைப் பற்றி பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், குறள் வழி நடப்பதை மதுபோதையால் தவிர்க்கிறோம்.

மதுவின் கொடுமையை விளக்காத இலக்கியம் தமிழில் இல்லை. ஆனால், பழம்பெருமை பேசிக்கொண்டே முச்சந்தியில் கிடக்கும் குடிகன்களைக் கடந்துபோகிறோம்.

நமது அண்டை மாநிலமான கேரளம் குடியின் நாசத்தை உணர்ந்து அதைக் கட்டுப்படுத்த வழிகளைத் தேட்த் துவங்கிவிட்டது. நாமோ, அரசுக்கு வருவாய் கிடைத்தால் போதும் என்ற சிந்தையுடன் இலவசம் வழங்கும் அரசையே தேர்ந்தெடுக்கத் துடிக்கிறோம்.

செருப்புக்குத் தோல் வேண்டியே இங்கு கொல்வரோ
செல்வக் குழந்தையினை?”

– என்று பாடுவார் மகாகவி பாரதி,  பாஞ்சாலி சபதத்தில். சூதில் தோற்ற தருமன் திரௌபதியைப் பணயம் வைத்தபோது, வெகுண்டு பாடும் பாரதியின் ஆவேச வார்த்தைகள் இவை. தமிழகத்தில் இலவசப் பொருள்களைப் பெற, நம்மை நாமே விற்று வருவது செல்வக் குழந்தையைக் கொல்வது போலத் தானே?

Liquer4
மதுவிலக்குப் போராளி சசிபெருமாள்.

விலையில்லாப் பொருள்களைப் பெற வரிசையில் நிற்கும் தமிழ்க் குடிமக்கள், தங்கள் விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் விலைபேசும் டாஸ்மாக் தான் அதற்கான வருவாய் ஆதாரமாக உள்ளது என்பதை எப்போது உணரப் போகிறார்கள்? மக்கள் இதனை உணராதவரை, மாநில அரசு திருந்தப்போவதில்லை.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழகத்தின் முன்னணி அரசியல்வாதிகளான மருத்துவர் ராமதாஸ், வைகோ, தமிழருவி மணியன், பொன்.ராதாகிருஷ்ணன், நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன் போன்றவர்களும், சசிபெருமாள், செந்தில் ஆறுமுகம், மதுரை மாணவி நந்தினி போன்ற சமூகப் போராளிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் போன்ற மாணவர் இயக்கங்கள் இப்போது மதுவின் கொடுமையை மக்களிடம் விளக்க முற்பட்டிருப்பது நல்ல அறிகுறி. இளைஞர் சமுதாயமும் மகளிரும் வெகுண்டு எழுந்தால் மட்டுமே, குடிமக்களை ‘குடிமக்களாக்கும்’ அரசின் மது வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

1950-ல் இயற்றப்பட்ட நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 4-ன் முக்கிய குறிக்கோளே, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பது தான். உண்மையில் பேச்சுரிமை, எழுத்துரிமை போல, மதுவிலக்கைக் கோருவதும் உறுதிப்படுத்துவதும் குடிமக்களாகிய நமது உரிமை; நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முதற்பெரும் கடமையும் கூட.

.

5 Replies to “மதுவை எதிர்ப்பது நமது உரிமை!”

  1. அன்புள்ள சேக்கிழான்,

    டாஸ்மாக் – என்பது வந்ததால் குடிப்பழக்கம் அதிகரிக்கவில்லை. சாராயம் விற்று தனியார் சாராய ஆலை அதிபர்களுக்கு மற்றும் கடைகளை ஏலம் எடுத்தி நடத்திவந்த தனியார் விற்பனையாளர்களுக்கு சென்று வந்த லாபம் அரசுக்கு திசை திருப்பப்பட்டுள்ளது என்பதுதான். மேலும் கள்ளச்சாராய சாவு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

    1-9-1972 அன்று கலைஞரால் ஆரம்பிக்கப்பட்ட கள்ளு மற்றும் சாராயக் கடைகள் மூலம் தமிழனை மதுவுக்கு அடிமை ஆக்கிய திமுக ஆட்சியால் , இப்போது தமிழனுக்கு 42 வருட சீனியாரிட்டி பெற்று , நல்வளர்ச்சி பெற்றுள்ளான்.

    ராமதாஸ், வைகோ, தமிழருவி மணியன், நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்றைய அரசியலில் செல்லாக்காசாகிவிட்டவர்கள். இவர்கள் இப்போது பேசுவது ஒரு கொடுமையான நகைச்சுவை ஆகும். திமுக அல்லது அதிமுகவுடன் இந்த கட்சிகள் கூட்டு வைத்து அரசியல் ஆதாயங்கள் பெற்றுவந்த கடந்த 40 வருட காலத்தில் தமிழன் மதுவால் செத்துக்கொண்டிருந்தான் என்பது உண்மை. தங்கள் கூட்டணி பேரங்களில் தொகுதி எண்ணிக்கை பற்றித்தான் விவாதித்தார்களே தவிர , ஒருபோதும் மதுவிலக்கை அமல் செய்தால் தான் கூட்டு என்று கண்டிஷன் போடவில்லை இவர்கள் யாருமே.

    திடீரென்று காந்தி வேடம் போடும் இவர்களை யாருமே நம்ப மாட்டார்கள். இவர்களின் கடந்தகால வரலாறு அப்படி. தமிழருவி மணியன் நல்ல தரமான பேச்சாளர் மற்றும் நல்ல அரசியல்வாதியாக திகழ்ந்தவர். அப்படிப்பட்டவர் சோனியாவுக்கு கால்கழுவி வாழும் இந்திரா காங்கிரசில் சிறிது காலம் இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது. இந்திரா காங்கிரஸ் ஆளும் எந்த மாநிலத்தில் மதுவிலக்கு இருக்கிறது? அங்கு இருப்பவன் குடிக்கலாமா ? அவனுக்கு பாதிப்பு ஏற்படாதா ?

    மதுவிலக்கு அமலில் இருந்த தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்திய படுபாவிகள் தமிழினத்தை திட்டமிட்டு அழிக்கவே இதனை செய்தனர். அப்போது அதனை எதிர்த்து வாய் திறவாமல் , கலைஞருக்கு கைலாகு கொடுத்துக்கொண்டு திமுகவில் திசை எங்கும் பிரச்சாரம் செய்தவர் தான் வைகோவும். இவர்களின் மதுவிலக்கு வேண்டுகோளை தமிழகத்தில் மதிக்கவும் மாட்டார்கள். ஏனெனில் இவர்கள் உண்மையான கொள்கையாளர்கள் அல்ல. கம்யூனிஸ்டுகள் ஆளும் மற்றும் ஆண்ட மாநிலங்களில் ஏனிவர்கள் மதுவிலக்கை கொண்டுவர இன்றுவரை எவ்விதமுயற்சியும் எடுக்கவில்லை ? தமிழ் நாட்டில் மட்டும் ஏனிப்படி உளறுகிறார்கள் ?

    அகில இந்திய அளவில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டு, ஒழுங்காக அமல் செய்யப்பட்டால் தான் , நன்மையாக அமையும். ஒரு மாநிலத்தில் இருந்து, மற்ற மாநிலத்தில் மதுவிலக்கு இல்லை என்றால், எல்லோரும் பக்கத்து மாநிலத்துக்கு படை எடுப்பார்கள். இப்போது கேரளாவில் மதுவிலக்கு சிறிது சிறிதாக அமல் செய்ய இருக்கிறார்கள். கேரளா பார்டரில் தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விரைவில் பல மடங்கு வியாபாரம் அதிகரிக்கும். இதுதான் உண்மை.

    தமிழகத்தில் இப்படி குடிப்பழக்கத்தை அறிமுகப்படுத்தி மக்களை நாசம் செய்தவர்கள் நாசமாய்ப் போவார்கள் என்று பல பெண்மணிகள் சாபம் தினசரி கொடுப்பதை என்னுடைய காதால் நான் கேட்டுள்ளேன். அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன ?

    ஆந்திராவில் வந்த இந்த வந்தேறிகள் தமிழகத்தை இந்த குடியை அறிமுகப்படுத்தி , தமிழனை நடைப்பிணமாக்கிவிட்டார்கள் . இவர்களின் சொத்து முழுவதும் பறிக்கப்பட்டு, தெருவில் பிச்சை எடுக்க செய்யவேண்டும். அப்படி ஒரு நாள் வந்தால் தான் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று சொன்ன சங்கத்தமிழனின் வாக்கு உண்மையாகும்.

  2. Government should take steps in controlled sales/ reduction of sales/ limited sales to adults only / increase in the rate etc. There is no point in talking about total prohibition now.

    If all the southern states including Pondy act together, they can certainly reduce the sales.

  3. பாஜ. ஆட்சி செய்யும் மாநிலங்களில் மது விளக்கு கொண்டு வாருங்கள் !

  4. தமிழ் நாட்டில் மது விலக்கு கொண்டு வந்த ராஜாஜி கதி என்ன ஆனது ?

  5. தமிழ் நாட்டை குடிகார நாடாக மாற்றிய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டும் தான் போய் சேரும். என்ன ஒரு வளர்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *