மீனாட்சி என்னும் இன்பமாகடல்

           சுந்தரமூர்த்தி ஆச்சாரி மிகுந்த கவலையுடன் அமர்ந்திருந்தார். அரசர் திருமலை நாயக்கரால் எடுப்பிக்கப்பட்ட மதுரைப் புதுமண்டபத்தின் திறப்பு விழா நாள் நெருங்கி விட்டது. சுந்தரமூர்த்தி ஆச்சாரி சிற்பக்கலையில் வல்லுனர் என்பதால் புது மண்டபத்தின் வேலைப் பொறுப்பு அவரிடம் பூரணமாக ஒப்படைக்கப் பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு பெரிய தடங்கல்; இது தான் ஆச்சாரியைக் கவலை கொண்டு சோர்வடையச் செய்து விட்டது.

அப்போது அந்தப் பக்கமாக  வேலைகளை மேற்பார்வையிட்டபடி வந்து கொண்டிருந்தார் அமைச்சர் நீலகண்ட தீக்ஷிதர். அவர் அன்னை மீனாட்சியிடம் ஆழ்ந்த பற்றும் அன்பும் பக்தியும் கொண்டவர். எல்லாம் உணர்ந்த ஞானி. அவர், “என்ன ஆயிற்று ஆச்சாரியாரே?” என வினாவினார். “சுவாமி, புது மண்டபத்தில் அமைத்துள்ள சிற்பங்களில் அரசரும் அவரது ஏழு  பத்தினிகளும் உள்ள சிற்பங்களைச் செய்யக் கூறியிருந்தீர்களல்லவா? பட்டத்து அரசியின் சிலையைச் செய்து முடித்தபின் பார்த்தால் அதன் தொடையில் ஒரு சில்லு எழுந்து உள்ளது. இது அதன் அமைப்புக்குப் பழுது உண்டாக்கி விட்டது. அரும்பாடு பட்டுச் செய்த அற்புதமான சிற்பத்தில் இவ்வாறு குறை ஏற்பட்டு விட்டதே,” எனச் சிற்பி மனம் உடைந்து கூறினார்.

“இதுபோல இன்னொன்றைச் செய்து வைத்து விடலாம் என்றாலோ அதற்கு நேரம் இல்லை. என்ன செய்வது அமைச்சர் அவர்களே?” எனவும் தழுதழுத்தார். மன்னரும் மந்திரியும் தன்னிடம் வைத்திருந்த அபிமானத்துக்கும் மதிப்புக்கும் பங்கம் நேர்ந்து விட்டதே என்ற கவலை அவர் குரலில் தொனித்தது.

neelakantha-dikshithar-sirpiஅமைச்சர் நீலகண்ட தீக்ஷிதர் கண்களை மூடி தேவியைத் தியானித்துச் சிறிது யோசனை செய்தார். “ஆச்சாரியாரே, கவலை வேண்டாம். அதை அப்படியே விட்டு விடுங்கள். அப்படித்தான் அமைய வேண்டும் என்பது அன்னையின் திருவுள்ளம் போலும். நீர் வேறொரு சிலை செய்தாலும் அவ்வாறே தான் அமையும். உமது உயர்ந்த உள்ளத்துக்கும், பக்திக்கும், அந்த ஈசனே உம்மிடம் கருணை கொண்டு, உமக்குத் தெரியாத அம்சங்களையும் வெளிப்படுத்தி உமது சிற்பத்தைச் சிறப்பிக்கக் கருணை கொண்டுள்ளார். பட்டத்தரசி ஒரு உயர்குலத்து உத்தமப் பெண்மணி;  ஆகவே சாமுத்திரிகா லட்சணத்தில் கூறியுள்ளபடி அவரது இடது தொடையில் இதே இடத்தில் இது போலவே ஒரு பெரிய மச்சம் இருக்க வேண்டும். ஆகவே இது இயல்பாகவே அமைந்தது. இதைப் பற்றிய கவலையை விட்டு விடும்,” என்றார்.

சிலையும் நிறுவப்பட்டது. புதுமண்டபப் பணிகளைக் காண அரசர் திருமலை நாயக்கர் வருகை தந்தார். அரசியாரின் சிலை அருகே வந்தார். அதன் தொடையில் ஒரு சில்லு எழுந்துள்ளதைக் கண்டதும் சினம் பொங்கியது. “சிற்பியாரே, இத்தகைய ஒரு குறையுடன் பட்டத்து அரசியின் சிற்பமா? உம் கலையைப் பற்றி எவ்வளவு உயர்வாக எண்ணியிருந்தேன், ஹூம்….” என இரைந்தார்.

சுந்தரமூர்த்தி ஆச்சாரியார் கைகளைக் குவித்துத் தலை கவிழ்ந்து அரசர் முன்பு நின்றார். கண்களில் நீர் பெருக்கெடுத்தோட, நாத் தழுதழுக்க, “அரசே, மன்னிக்க வேண்டும். இவ்வாறு நேர்ந்தது என்னையும் மீறி நிகழ்ந்த ஒரு செயலாகும். அமைச்சரிடம் இதைக் காட்டி வருத்தப் பட்டேன்,” என்று அமைச்சருக்கும் தனக்கும் இடையே நடந்த உரையாடலை விவரித்தார்.

“சாமுத்திரிகா லட்சணப்படி அரசியாருக்கு இடது தொடையில் இவ்விதம் ஒரு மச்சம் இருக்க வேண்டும். அதனால் தான் இச்சில்லு எழுந்துள்ளது. இது ஒரு குறையல்ல, என அமைச்சர் கூறினார் அரசே,” என்றார் சிற்பி.

திருமலை நாயக்கருக்குச் சினம் மூண்டது; தலை கிறுகிறுத்தது; கண்கள் சிவந்தன; மீசை துடித்தது. மிகுந்த பிரயாசையுடன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு மேலும் ஒன்றையும் பார்க்கப் பிடிக்காமல் தனது அரண்மனைக்குத் திரும்பி விட்டார் மன்னர். உணவு செல்லவில்லை. ராணிகள் ஒருவரிடமும் பேசவும் விருப்பமில்லை. மாலை மயங்கி இரவும் வந்தது.

மகாராணி ஒரு தங்கத் தட்டில் பழங்களுடனும் பால் நிறைந்த வெள்ளிச் சொம்புடனும் அறையினுள் நுழைந்தார். “சுவாமி, தாங்கள் உணவைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் எழுந்து விட்டீர்களே, உடல் நலம் சரியில்லையா?” எனத் தனது கையை மன்னரது நெற்றியில் வைத்துப் பார்க்க முயன்றார். தனது புறங்கையால், ராணியின் கரத்தை ஒதுக்கிய மன்னர், “தேவி, தனிமையில் என்னைச் சிறிது நிம்மதியாக இருக்க விடு!” என்றபடி எழுந்து நிலாமுற்றத்தை நோக்கி விரைந்தார். அரசியார் கண்களில் ‘குப்’ பென நீர் பெருகியது. மன்னர் அவரை என்றுமே இவ்வாறு அலட்சியம் செய்தவரல்ல. என்ன ஆயிற்று இன்று?

இரவு இருவருக்குமே உறக்கமற்ற நீண்ட இரவாகியது.

மதுரை புது மண்டபம் (கடைகளின் ஆக்கிரமிப்பால் சீரழியும் சிற்பக் கலைச் செல்வங்கள்)
மதுரை புது மண்டபம் (கடைகளின் ஆக்கிரமிப்பால் சீரழியும் சிற்பக் கலைச் செல்வங்கள்)

திருமலை நாயக்கர் சிந்தனைக் குதிரையைத் தட்டி விட்டபடியே உறங்காமல் இருந்தார். அவருடைய பட்டத்து அரசியின் தொடையில் இயற்கையாகவே இத்தகைய ஒரு மச்சம் உண்டு. அது போலவே தான் சிலையிலும் ஒரு சில்லு எழுந்திருந்தது. ஆனால் அது சிற்பியின் கலைத்திறத்தை மெச்சி தெய்வமே வெளிப்படுத்திய ஒரு அம்சமாகும். அரசர் மனம் அதை ஒப்புக் கொள்ள மறுத்தது. ‘எனக்கு மட்டுமே தெரிந்த இந்த அந்தரங்கமான விஷயம் எவ்வாறு அமைச்சர் நீலகண்ட தீக்ஷிதருக்குத் தெரிந்தது? கள்ளத்தனமாக அவர் அதை எப்படியோ கண்டிருக்கிறார்,’ என விபரீதமாக நினைத்து மறுகினார் அரசர்.

“அமைச்சரின் கண்கள் தானே அரசியாரின் தொடையில் இருந்த மச்சத்தைக் கண்டன; ஆகவே இத்தகைய பாவச் செயலைச் செய்த அவருடைய கண்களைக் குருடாக்கி விட வேண்டும்,” என்று முடிவெடுத்தார் மன்னர்.

பொழுது புலர்ந்ததும் காவலர்களைக் கூப்பிட்டார். “காவல்படைத் தளபதியாரே, நீர் போய் நம் அமைச்சர் நீலகண்ட தீக்ஷிதரைக் கைது செய்து கையோடு இங்கு அழைத்து வாரும்,” என்றார். தளபதி ஆச்சரியப் பட்டாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஒரு சிறுபடை ‘தடதட’வெனக் கிளம்பிச் சென்றது.

அரசல் புரசலாகச் செய்தியைக் கேள்விப்பட்ட மகாராணி துயரமுற்றார். நீலகண்ட தீக்ஷிதர் தேவி உபாசகர் என அவருக்குத் தெரியும். தீக்ஷிதர் செய்யும் பூஜைகளில் அரசர் திருமலை நாயக்கருடன் சில சமயங்களில்  பட்டத்து அரசியும் பங்கேற்றிருக்கிறார். அப்பொழுதுகளில் தான் நித்தமும் தொழும் அன்னை மீனாட்சியை அகக்கண்ணில் பிரத்தியட்சமாகக் கண்டு புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். இப்போது அந்த தேவி உபாசகரை எதற்காக மன்னர் அவமரியாதை செய்ய உத்தேசித்துள்ளர் எனப் புரியாமல் குழம்பித் தவித்தார் அரசியார்.

பட்டத்து அரசிகளுடன் திருமலை நாயக்கர்  (Photo Courtesy: Wikimedia.org)
பட்டத்து அரசிகளுடன் திருமலை நாயக்கர் (Photo Courtesy: Wikimedia.org)

“உத்யத்பானு  ஸஹஸ்ரகோடி ஸத்ருசா’ம் கேயூர ஹாரோஜ்வலாம்……….
 மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம்,”…..

பூஜையறையில் தீட்சிதரின் குரல் கணீரென்று ஒலித்தது.

புலர்காலைப் பொழுது. எழுந்து நீராடி, வாசமிகு மலர்களைத் தானே கொய்தெடுத்து, தமது மாளிகையின் பூஜை அறையில் மீனாட்சியின் திருவுரு முன் மெய்ம்மறந்து அமர்ந்து பூஜையைத் துவங்கியிருந்தார் அமைச்சர் நீலகண்ட தீக்ஷிதர். மன்னரின் படை அவ்வேளையில் அவரது மாளிகையைச் சூழ்ந்து கொண்டது.

இதனால் எழுந்த ஆரவாரத்தினால், தீக்ஷிதரின் தியானம் சிறிதே கலைய, தெய்வ அருளால் உண்டான ஞானதிருஷ்டியால், என்ன நிகழ்கின்றது என ஊகித்து உணர்ந்து கொண்டார். “தாயே, எல்லாம் உன் சித்தம்,” என்றவர், ‘அரசர் என் மேல் சந்தேகம் கொண்டு விட்டார். சாமுத்திரிகா லட்சணம் கொண்ட மகாராணியின் தொடையில் உள்ளதென நான் யூகித்து உணர்ந்த மச்சத்தை நான் பார்த்து விட்டதாக நினைத்து, பார்த்த என் கண்களை, அவற்றின் ஒளியைப் பறிக்க எண்ணியே படைகளை மன்னர் அனுப்பியுள்ளார்,’ எனத் தெய்வ அருளால் தெரிந்து கொண்டார்.

என்ன செய்வது என அவர் குழம்பவில்லை. அன்னைக்குப் பூஜை முடிந்ததும் தீபாராதனை எடுக்க வைத்திருந்த கற்பூரத்திலிருந்து இரு கட்டிகளை எடுத்தார். தனது கண்களில் வைத்துக் கொண்டு அதில் நெருப்புச் சுடரையும் வைத்தார். ஆஹா! கண்கள் பொசுங்கின! பார்வை பறிபோயிற்று! “அம்மா, தாயே, மீனாட்சி,” எனப் புலம்பினார் தீக்ஷிதர்.

‘திமு, திமு’வெனப் படைகள் உள்ளே நுழைந்தன. கண்கள் பொசுங்கிய நிலையில் இருந்த தீக்ஷிதரைக் கண்டதும், “அமைச்சரே, என்ன கோலம் இது?” எனப் பதறினான் தளபதி ராமப்பய்யன். “ஆமாம் தளபதியாரே, மன்னர் எனக்குக் கொடுக்க எண்ணிய தண்டனையை நானே நிறைவேற்றிக் கொண்டேன்,” என்றார் தீக்ஷிதர்.

விரைந்தோடித் தன்னிடம் வந்து வீரர்கள் சொன்ன செய்தியால் ஆச்சரியம் அடைந்தார் மன்னர் திருமலை நாயக்கர். திரை மறைவில் இதைக் கேட்டபடி இருந்த மகாராணி, இப்போது தைரியமாக மன்னர் முன் வந்தாள். “சுவாமி, அவர் பராசக்தி உபாசகர். அவரைத் தவறாக மதிப்பிட்டு விட்டீர்களே! ஞான திருஷ்டியால் அரசராகிய உங்கள் கருத்தை அறிந்து இப்போது கண்களைப் பொசுக்கிக் கொண்டது போல, அதே ஞான திருஷ்டியால் இந்த மச்சத்தையும் பற்றி அறிந்து, சிற்பியின் கவலையைப் போக்கியருளிய மகானை அவமதித்து விட்டீர்களே அரசே, உங்கள் செங்கோலுமா பிறழும்?” எனக் கதறி அழுதாள்.

மன்னர் திடுக்கிட்டார். “எனது கருத்தை நான் சொல்லாமலே அறிந்த இந்த தெய்வத் தன்மை நிறைந்த அடியவருக்கு இப்படி ஒரு கேடு விளைவித்தேனே தேவி,” என்று புலம்பி, “இதை எவ்வாறு ஈடு செய்வேன்? தாயே மீனாட்சி, நீயே ஒரு வழி சொல்லம்மா,” என்ற வண்ணம் தீக்ஷிதரின் மாளிகையை நோக்கி விரைந்தார் திருமலை நாயக்கர்.

பொசுக்கப் பட்ட கண்களுடன் புழுவாகத் துடித்தபடி இருந்த தீக்ஷிதரைக் கண்ட மன்னர் அவர் கால்களில் விழுந்தார்; கேவிக் கேவி சிறு பிள்ளை போல அழலானார். நீலகண்ட தீக்ஷிதர் திருமலை நாயக்கரைத் துழாவித் தட்டித் தடவித் தம் திருக்கைகளால் எழுப்பினார். “மன்னா, இது தெய்வச் செயல்; உம்மிடம் ஒரு குற்றமும் இல்லை,” என அவரைத் தேற்றினார். அவரைத் தேற்றவே இயலவில்லை; அரசர் கழிவிரக்கத்தில் துடித்து வருந்தியபடியே இருந்தார்.

“தாயே, மீனாட்சி, நான் மகாபாபி! எனக்கு விமோசனமே இல்லை! எப்படிப்பட்ட இந்தத் தீச்செயலைச் செய்து விட்டேன் நான்? இந்தப் பழி தீராப்பழி ஆயிற்றே அம்மா, மீனாட்சீ……..” என பிரலாபித்து அரற்றலானார் மன்னர். தீக்ஷிதருக்குக் கண்கள் பொசுங்கியதால் தாம் படும் வருத்தத்தையும் வலியையும் விட, மன்னர் படும் துயரம் தாங்கொணாததாக இருந்தது.

‘எப்பேர்ப்பட்ட அரசர் இந்தத் திருமலை நாயக்கர்! இவர் தானே குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை மதுரைக் கோவிலில் அரங்கேற்ற வைத்தார். மக்களுக்கு எத்தனை எத்தனை நன்மைகள் செய்திருக்கிறார். அன்னை மீனாட்சியின் கோவிலுக்கு ராஜ கோபுரத்தை அமைத்தவர் இவர் தானே! மாரியம்மன் கோவிலுக்கு முன்னால் பெரிய தெப்பக்குளத்தை வெட்டச் செய்தபோது எல்லாரும் அவரை எப்படிப் போற்றினார்கள்! இப்போது புது மண்டபத்தையும் எடுப்பித்திருக்கிறார். ஏதோ போதாத நேரம், இந்த நிகழ்ச்சி நடந்து விட்டது; அரசர் இதனால் மிகவும் ஆடிப் போய் விட்டார்,’ இவ்வாறெல்லாம் தீக்ஷிதர் சிந்தனை செய்தார்.

தனது குரு அப்பய்ய தீட்சிதரிடம் ஆசி பெறும் நீலகண்ட தீட்சிதர்
தனது குரு அப்பய்ய தீட்சிதரிடம் ஆசி பெறும் நீலகண்ட தீட்சிதர்

“மீனாட்சித் தாயே! எனக்கு வரும் நன்மையையும் தீமையையும் உனக்கே பரம் என அளித்து விட்டேன். ஆயினும் தான் செய்த இச்செயலால் அரசர் படும்பாட்டைப் பொறுக்க இயலவில்லையே; நான் எனக்காகக் கேட்கவில்லை அம்மா. அரசருடைய மன நிம்மதிக்காகவும், அவருடைய பெரும் புகழ் சிதையாமல் இருப்பதற்காகவும் நான் குற்றமற்றவன் என நீ திரும்பவும் நிரூபித்து, எனக்குக் கண்ணொளியைத் திரும்பத் தா தாயே,” எனத் தேவியின் அழகு மிகுந்த திருவடிவை அடி முதல் முடி வரை அகக் கண்ணில் கண்டு தொழுது ஸ்லோகங்களை* இயற்றலானார்.

‘சிவனுடைய தேவியே! மங்களத்தை அருளுபவளே! இந்த உடலை விட்டு உயிர் நீங்கும் காலத்தில், மனம் பெரிதும் குழம்பும்; வார்த்தைகள் குழறும்; கண்கள் சுழலும். அக்காலத்தில் என்னுடைய அந்த நிலைமையை உன்னிடம் எடுத்துச் சொல்ல யார் உள்ளார்கள்? இந்திரியங்கள் என் வசத்திலிருக்காது. சொல்லிக் கொள்ள வாய்ப்பு இப்போது கிட்டி உள்ளது; நானும் தெளிவான சிந்தை உடையவனாக இருக்கிறேன். ஆகவே இத்தருணத்தில் என்னுடைய நிலைமையை உன் திருவடியின் கீழ் விண்ணப்பிக்கின்றேன்! அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன்.  இதைக் கேட்டருளி என் மனக்கவலையை மாற்றியருளுவாயாக!” என மனமுருகி வேண்டுகிறார் தீக்ஷிதர்.

meenakshi-deviகலமலக்கம் மனமுழந்து சொற்குழறிக்
கண்சுழலும் காலத்து என்றன்
நிலைமயினை எடுத்துரைக்க வல்லார்யார்?
சிவையே நற் செவ்வி நேர்ந்த
அலைவரும் இப்பொழுதே என் நிலைமையினை
அடிமலர்க்கீழ் அறையா நின்றேன்
மலையரசன் தருகொடியே கேட்டருளி
என்கவலை மாற்று வாயே

(இன்பமாகடல்-4)

(கலமலக்கம்– மனக்குழப்பம்; அலைவரும் (அலைவு அரும்)- வருத்தம் ஒன்றும் இல்லாத)

இவ்வாறு நெஞ்சம் நெகிழ்ந்து, கேட்பவர்களின் மெய்சிலிர்க்க ஒவ்வொரு ஸ்லோகமும் தீட்சிதர் வாயினின்று உருவாகி அன்னையின் மலரடியில் விழுந்த வண்ணம் இருந்தன. தாமே பொசுக்கிக் கொண்ட கண்கள் இப்போது தீப்போலப் பற்றி எரிந்து வேதனை செய்தன. உடல் வேதனையில் உருகி, தலை சுற்றுகின்றது தீக்ஷிதருக்கு. பாடுவதையும், அன்னையை வேண்டுவதையும் அவர் நிறுத்தவில்லையே! ‘உன் பக்தனாகிய எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை தந்தாய்?’ எனக் கேட்கவும் இல்லையே!

“நான் உன்னிடமே பூரண சரணாகதி அடைந்து விட்டேன்; இனி என்னைக் கடைத்தேற்றுவது உன் தொழில்,” என்று ஸ்லோகங்களை இயற்றி வருகிறார்.

மாளிகையைச் சுற்றிக் கூடிவிட்ட கூட்டம் என்னவெல்லாமோ பேசிப் பேசி மாய்ந்து வருந்துகிறது.

தாயே மீனாட்சி! உன் திருவுரு அல்லவோ இன்பமாகடல் அம்மா….. அங்கயற்கண்ணமுதே!….” என்பார்.

இதோ! அடுத்து 61-வது ஸ்லோகத்தைப் பாடுகிறார் அமைச்சர் நீலகண்ட தீக்ஷிதர். “இயற்கை அழகு வாய்ந்ததும், எல்லாவற்றிற்கும் மேலானதும், அறிவுக்கு எட்டாததும், பரம மங்களமானதுமான உனது அழகிய தாமரை மலர் போன்ற பாதத்தை நீ என்மீது இரங்கி எனக்குக் காண்பிப்பாய் என்றாலும், அதைத் தரிசிக்க எனக்கு (புறக்)கண்கள் இல்லையே தாயே!”

        அவ்யாஜ ஸுந்த³ரம் அநுத்தரம் அப்ரமேயம்
                அப்ராக்ருதம் பரமமங்க³ளம் அங்க்⁴ரிபத்³மம்
        ஸந்தர்ச’யேத³பி ஸக்ருத் ப⁴வதீ த³யார்த்³ரா
                த்³ரஷ்டாஸ்மி கேந தத³ஹம் து விலோசநேன

(ஆனந்தசாகரஸ்தவம்-61)

       செய்யாத அழகினவாய்த் திப்பியமாய்
                அறிவிக்கும் சேய ஆகிப்
        பொய்யாமல் மங்களமாய் யாவைக்கும்
                மேலாம்உன் பொற்றாள் பூவை
        மையார்ந்த மனத்தடியேன் பால்எழுந்த
                கருணையினால் வந்து காட்டின்
        ஐயோநான் எவ்விழியால் கண்டுமனம்
                குளிர்வேன் அங்கயற்கண் அம்மே

         (இன்பமாகடல்-61)

(திப்பியமாய்– திவ்வியமாய்;  செய்யாத அழகு- புனைந்து இயற்றாத இயற்கை அழகு; தமிழ்ச் செய்யுள் வடிவு எவ்வாறு சொல்லுக்குச் சொல் சமஸ்கிருதத்தின் பொருத்தமான மொழிபெயர்ப்பாய் அமைந்திருக்கின்றது என்பதனைக் காணவும்!)

மக்கள் கூட்டம், “ஐயோ! இப்படியும் நேர்ந்ததே,” என்று தாமும் கதறி அழுகின்றது!

உன்மத்தரானது போல எழுந்தார் தீக்ஷிதர்; எழுந்து தான் பூசை செய்து வரும் மீனாட்சியின் விக்கிரகத்தின் பாதங்களைப் பற்றிக் கொண்டு தண்டனிட்டார். எழுந்து மன்னரை நோக்கித் திரும்பினார். “அரசே,” என விளித்தவரைக் காணக் கவிழ்ந்திருந்த தலையை நிமிர்த்திய அரசருக்குப் புல்லரித்தது. என்ன ஆச்சரியம்! புண்ணாயிருந்த தீக்ஷிதரின் கண்கள் பூப்போல மென்மையாக ஒளிர்ந்தன. அவற்றில் ஒளியைக் கண்டு அரசர் பூரித்தார்.

“அமைச்சரே, நீரல்லவோ மெய்யடியார்!” என அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார் மன்னர். நடந்ததை அறிந்த மக்கள் கூட்டம் ஆரவாரம் செய்தது!

இந்த மகிழ்ச்சியான தெய்வத் திருச்செயலை உலகுக்கு அறிவிப்பதே போல, மீனாட்சியம்மையின் ஆலயமணி, ‘டாண், டாண்,’ என ஒருவிதமான கம்பீர லயத்துடன் முழங்கலாயிற்று.

திருமலை நாயக்கர் அமைச்சர் நீலகண்ட தீக்ஷிதருக்கு அளவற்ற பொன்னும் பொருளும் கொடுத்து, பாலாமடை என்ற சிற்றூரையும் தானமாக அளித்தார். தீக்ஷிதர் இதன் பின் அரச பதவியினின்றும் விலகிக் கொண்டு அன்னையின் வழிபாட்டில் ஈடுபட்டுத் தம் வாழ்நாட்களைக் கழித்தார்.

இவையே ஆனந்த சாகரஸ்தவம் எனப்படும் 108 ஸ்லோகங்களாகும். அன்னையிடம் தாம் கொண்ட பூரண சரணாகதியை விளக்கிப் பாடப்பட்ட இவை மிக்க அழகும், பொருள் நயமும் கொண்டு உள்ளத்தை உருக்குவன.

இந்நூலைக் கோவை நகர் கவியரசு வித்வான் கு. நடேச கவுண்டர் என்ற சமஸ்கிருதம்- தமிழ் ஆகிய இருமொழிப் புலமை வாய்ந்த பெருமகனார் செய்யுட்கள் வடிவில் ‘இன்பமாகடல்’ என்ற தமிழ் மொழி பெயர்ப்பாகச் செய்தருளியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புது மண்டபத்தில் உள்ள சிற்பங்களில் திருமலை நாயக்கரின் பட்டத்து ராணியின் தொடைப் பகுதியில் சில்லுப் புடைத்திருப்பதை இன்றும் நாம் காணலாம்.

19 Replies to “மீனாட்சி என்னும் இன்பமாகடல்”

  1. அம்மா, எனது கண்களை குளமாக்கிய எழுத்துக்கள். நெஞ்சம் விம்முகிறது. எத்தனை எத்தனை மெய்யடியார்கள் நம்முன் வாழ்ந்து வழி காட்டி சென்றுள்ளனர். தாயே , மீனாக்ஷி! மீனாக்ஷி அம்மாவை ரக்ஷி.

  2. தெய்வத்தின் குரலில் பரமச்சர்யல் ஆனந்த சாகர ஸ்தவத்தை பற்றி சிலாகித்து கூறுவதை படித்து திரு. நஜன் அவர்களின் புத்தகத்தை தேடி வாசித்தேன். உருகி உருகி பாடியதால் நம்மையும் உருக்கும் பாமாலை .இன்பமாகடல் பற்றி இப்போதுதான் தெரிந்தது. இதை படிக்க ஆவலாய் உள்ளேன் எங்கே கிடைக்கும் என தெரிந்தவர்கள் பகிர்ந்தால் நலம்.அற்புதமாய் நம்மிடையே தோன்றிய மகான்களை பற்றி சிறப்பாய் எழுதிய மீனாக்ஷி பாலகணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . தங்கள் பணி தொடரட்டும்

  3. வரம் கொண்ட சுந்தரனை மனம்கொண்ட கோலமும்
    பரம்கொண்ட புகழ்கிளியும் அங்கயற் கண்களும்
    சிரம்கொண்ட செங்கீரை நடைபயின்ற பாதங்களும்
    கரம்கொண்ட மதுரைமா நகரும் என் கண்களை நீங்காவே !

    விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள் -மெய்மைகுன்றா
    மொழிக்குத்துணை அன்னையின் திருநாமங்கள் -முன்புசெய்த
    பழிக்குத்துணை புகழ்கிளி வாக்கும் – பயந்த தனி
    வழிக்குத் துணை அங்கயற் கண்ணி அருளாட்சியுமே !

    சீரான கோலதிருச் செல்வமே ! -திருமுகம்
    பாராதிருந்தால் என் செய்வேன் ! அங்கற்க் கண்ணியே!- இனியும்
    வாராதிருந்தால் நின் மீன்வடி விழிக்கு மைஎழுதேன் ! -வினையேன்
    தீராது அழுவேன் ! அழுதால் உன்னைப் பெறலாமே !

  4. திருமதி சாந்தி அவர்களே, மிக்க நன்றி; தாரகை என்னும் தமிழ் இணைய தளத்தில் அடியேன் ஆனந்தசாகர ஸ்தவம் – இன்பமாகடல் பற்றிய ஒரு தொடர் கட்டுரை (அங்கயற்கண்ணி என்னும் அருட்பெருங்கடல்) எழுதி வருகிறேன். 108 ஸ்லோகங்களும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. படித்துப் பயன் பெறலாம்.

  5. இன்பமாகடல் நூல் பற்றி இன்னுமொரு தகவல்: திரு. நடேச கவுண்டர் தமிழாக்கம் செய்த செய்யுள்களை விளக்கவுரையுடன் ஸ்ரீ சித்தர் ஞான பாடசாலையார் , சிவக்குடில், கோவைபுதூர் -641042. நீண்ட நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ளார்கள்.

  6. I am moved much.
    Yes! LET US TAKE REFUGE IN GODDESS MEENAKSHI LOTUS FEET AS SHE IS NONE OTHER THAN KANCHI KAMAKSHI AND KADIR VISALAKSHI.
    I AM MUCH blessed to go through .
    With namaskarams.
    tgranganathan

  7. பன்முறை படித்து மகிழ்ந்தேன்… அற்புதமாக இருக்கிறது…. தொடர்ந்து அங்கயற்கண்ணியின் பெருமையை எழுத வேண்டுகின்றேன்…

  8. அன்புள்ள அருட்செல்வ பேரரசன்,

    வாழ்த்துக்கள். நான் நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். வேறு வரிசையில் இருந்ததால் தங்களை நேரில் சந்தித்து பேசமுடியவில்லை. நிகழ்ச்சி முடிந்தவுடன் வெண் முரசின் பிரதிகளை வாங்குவதற்காக சென்ற போது, கூட்டம் அதிகம் இருந்ததால், பிரதிகளை வாங்கிவிட்டு வந்து தங்களை சந்திக்க முடியவில்லை. தங்களுக்கு அளிக்கப்பட பாராட்டுக்களுக்கு தேவையானதை விட, அதிக உழைப்பினை தாங்கள் இந்த மகாபாரதம் தமிழாக்கத்துக்கு தந்துள்ளீர்கள். உங்கள் பணி மேலும் தொடரட்டும். ஞான மூர்த்தியாம் தந்தைக்கு உபதேசித்த சிவகுமாரன் சக்திவேலன் முருகப்பெருமான் அருள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும் என்றும் நிறைவதாக.

  9. திருமலைநாயக்கருக்கு நீலகண்ட தீட்சிதர் என்ற ஒருவர் அமைச்சராக இருந்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரம் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு அமைச்சர் இருந்தார் என்பதற்கு ஏதாவது ஆதாரமிருந்தால் அதன் இணைப்பை அல்லது நூலைத் தயவு செய்து தரவும். சும்மா வெறும் புகழ்ச்சிக்காக நாம் வணங்கும் தெய்வங்களுக்கு ஆபாசக் கட்டுக்கதைகளை இணைப்பது வெறும் அபத்தம்.

  10. //இன்பமாகடல் நூல் பற்றி இன்னுமொரு தகவல்: திரு. நடேச கவுண்டர் தமிழாக்கம் செய்த செய்யுள்களை விளக்கவுரையுடன் ஸ்ரீ சித்தர் ஞான பாடசாலையார் , சிவக்குடில், கோவைபுதூர் -641042. நீண்ட நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ளார்கள்.//

    நமது வலைத்தளத்தில் பல அறிய தத்துவ கட்டுரைகளை பதிவிடும் முனைவர் முத்துகுமாரசாமி அய்யா அவர்களின் தந்தையர் தான் திரு. நடேச கவுண்டர்.
    சைவ-பக்தி-தத்துவதிற்கு அவர்கள் செய்த பணி அளவிடமுடியாதது. சைவ உலகம் அவர்களுக்கு கடமை பட்டுள்ளது.

    சோமசுந்தரம்

  11. திரு வியாசன் அவர்களுக்கு,

    ஆதாரம் இல்லாமல் இப்படிப்பட்ட கதைகளை வெறும் புகழ்ச்சிக்காக எழுதுவது அபத்தம் என நானும் ஒப்புக் கொள்கிறேன். இந்தக் கதையில் வரும் ஆனந்த சாகர ஸ்தவம் பற்றிய நூலின் விளக்கத்தை தொடர் கட்டுரையாக எழுதுவதற்கு முன்பு அது தொடர்பான மூல நூல்களைத் தேடிப் படித்தேன். 1954-ல் ஸ்ரீ மஹா பெரியவரகளின் ஸ்ரீமுகத்துடன் வெளியிடப்பட்ட ஸ்ரீ ய. மகாலிங்க சாஸ்திரிகளின் ஆனந்த சாகர ஸ்தவத்துக்கான உரையில் இந்தக் கதை கூறப்படுகிறது. விக்கிபீடியா -விலும் இச்செய்திகள் உள்ளன. திருமலை நாயக்கர் எனும் பெயரில் கூகுள் செய்தாலும் நம்பகமான இணைய தளங்களில் இது சம்பந்தமான விஷயங்களைப் பார்க்க இயலும்.

    மேலும் நீலகண்ட தீட்சிதரைப் பற்றிய செய்திகள், அவர் இயற்றிய நூல்கள் அடங்கிய ஒரு இணையதளம் உள்ளது. http://www.palamadai.in. அதிலும் இந்தச் செய்திகள் கூறப்பட்டு இந்த அற்புதத்தைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. தயை செய்து இவற்றைப் படித்துப பார்க்கவும்.

    நாம் மிகவும் அறியாத அடியார்கள் பெருமையை உலகிற்கு எடுத்து உரைப்பதே எனது எழுத்தின் நோக்கம் அதற்காக பொருளற்ற கதைகளை எழுத என்றும் துணிய மாட்டேன். நன்றி

  12. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் பற்றியும், நீலகண்ட தீட்சிதர் பற்றிய செய்தியும் படித்து மகிழ்ந்தேன். தாங்கள் வெளியிட்டுள்ள படத்தில் இருக்கும் இரண்டு ஸ்லோகங்கள் எனது தந்தையார் பி. எஸ். கிருஷ்ணன் அவர்கள் இயற்றியவை. இவை தங்களுக்கு எப்படி கிடைத்தன?

  13. I am much blessed to see this. I am a devotee of SRI KAMAKSHI AND MADURAI MEENAKSHI AMMAN.
    ALSO I AM INTERESTED IN GETTING THIS BOOK.
    CAN ANYBODY SEND SANSKRIT PLUS TAMIL VERSION TO ME.
    I WILL BEAR THE COST.
    I AM IN TAMBARAM, CHENNAI.
    MOBILE 9445554660/tgranganathan@gmail.

  14. என் தாய் அன்னை மீனாட்சியின் சிறப்புகளை கேட்க கேட்க என் உள்ளம் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விடுகிறது. என்னுடைய வாழ்வில் அன்னை மீனாட்சியின் மீது நான் பக்தி செலுத்தும் நாள் முதல் எந்த விதமான பிரச்சனை என்றாலும் என் அன்னை என்னை மீட்டு விடுகிறாள். இவ்வுலகில் நான் இருக்கும் வரை என் தாயின் சிறப்புகளை கேட்டுக் கொண்டே இருக்கவே ஆசைப்படுகிறேன்.

    இது எல்லாம் எம் தாய் மீனாட்சியின் அன்பே எனக்கு ஆதாரமாக விளக்குவதால் நடக்கிறது. எல்லாம் என் தாய் மதுரை மீனாட்சி அம்மையின் கருணையே தான்

  15. Can you give me the contact number of Thiru dr muthukumaradwami to address him for a copy of the book இன்பமாகடல் ,translation of ஆனந்த சாகர. ஸ்தவம்.
    Thank you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *