விடுகதையா… இந்த வாழ்க்கை ? [சிறுகதை]

ஒரு பக்கமா சாஞ்ச இரண்டு பொண்டாட்டிகாரன்… கவிழ்ந்துவிட்டான்…

இரண்டு விரலளவு சிறிய துண்டு வெள்ளை காகிதத்தில் நாலாவது படிக்கும் அந்தச் சிறுவன் பூங்காவின் பெஞ்சில் அமர்ந்தவாறு இந்த வரியை முத்து முத்தாய் எழுதிக்கொண்டிருந்தான். எழுதிவிட்டு பிழையேதும் இருக்கிறதா என்று இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தான். அதே வாக்கியத்தை இன்னும் சில துண்டு காகிதங்களில் எழுதி சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். அப்போது அங்கே வந்த மற்றொரு சிறுவன்,

“என்னடா ராமு இங்க இருக்க… விளையாட வரலை?”

“மதியம் சாப்பாட்டுக்கப்புறம் மிஸ் ஒவ்வொருத்தரையும் ஏதாவது நிகழ்ச்சி பண்ணச் சொன்னாங்கல்ல… அதுக்குத்தான் ரெடி பண்ணறேன். பாட்டி எப்பவோ சொன்ன விடுகதை இப்போ உதவுது. ஆமா, நீ என்ன பண்ண போறே..?”

“கதை சொல்லாம்னு இருக்கேன்…”

“சரி வா… விளையாட போகலாம்…”

இருவரும் கை கோர்த்தவாறு, பள்ளி சார்பில் விடுமுறை நாளன்று உள்ளுர் கேம்ப்பிற்காக வந்து அந்த பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த மற்றச் சிறுவர்களுக்கு மத்தியில் கலந்தார்கள்.

***

pieces of paperஅந்த வீட்டு ஹாலில், வெளியூரிலிருந்து வந்திருக்கும் பிரபல மகானின் தரிசனத்திற்காக அவரது பக்தர்கள் குழுமியிருந்தார்கள். மிகச் சாதாரண வாழ்க்கை வாழும் அந்த ஞானி, வேதாந்த சத்தியங்களை எல்லா தரப்பு மக்களுக்கும் எளிமையாக கொண்டு போய்ச் சேர்ப்பதே அவரது லட்சியமாய் கொண்டிருந்தார். உள்ளிருந்து வந்து எந்தவித சலனமுமின்றி அவரது இருக்கையில் அமர்ந்தார். கும்பிட்டபடி எழுந்த அனைவரையும், புன்னகையுடன் அமரும்படி கையசைத்தார். நல்ல தேஜஸுடன் குழந்தையை போலிருந்தது அவர் முகம். புன்னகை மாறாமல், புருவத்தை சுருக்கி ‘என்ன வேண்டும்‘ என்பது போல் பக்கத்திலிருந்த பக்தரை கேட்டார்…

“ஸ்வாமிஜி.. உங்களுடைய சத்சங்கத்திற்காக வந்திருக்கிறோம்… ஏதாவது உபதேசம் சொல்லுங்கள் ஸ்வாமிஜி” என்றார்.

“எதை பற்றி பேசவேண்டும்….?” என புருவத்தைச் உயர்த்தி எல்லோரையும் பார்த்தார். எல்லோரும் அமைதியாய் இருந்தார்கள்.

“அந்த பகவானைத் தவிர வேறென்ன இருக்கிறது பேச…? இன்று அவன் என்னை என்ன பேச வைக்கிறான் என்று பார்ப்போம்…” என்று அவர் மேலே கைகாட்டிச் சொல்ல, அந்த அறை முழுவதும் ஒரு நிசப்தம் நிலவியது.

புன்னகையுடன் அவரே தொடர்ந்தார்…

“ இப்படி செய்யலாம்… ”

பக்கத்திலிருந்த அந்த நபரை பார்த்து,

“நீங்கள் இந்த கட்டிடத்தைவிட்டு வெளியே செல்லுங்கள், உங்களிடம் எந்த விஷயம் வந்து சேருகிறதோ… அதைப் பற்றி நான் பேசுகிறேன்..”

அந்த வீட்டின் உரிமையாளரான திவாகர் ஒன்றும் புரியாமல் ஸ்வாமிஜியைப் பார்க்க, அவர் சிரித்தபடி,

“கவலைப்படாதீர்கள்…நீங்கள் முதன் முதலில் எந்த விஷயத்தை பார்க்கிறீர்களோ அல்லது கேட்கிறீர்களோ, அது தான் இந்த ஞான சத்சங்கத்தின் தலைப்பு.”

அந்த நபருக்கு குழப்பமாய் இருந்தது. வேறொருவரை போக சொல்லி ஸ்வாமிஜியிடம் கேட்கலாமா…

அவருடைய முகத்தில் குழப்ப ரேகையை பார்த்தவுடன், அந்த மகான்,

“இதுவா… அதுவா என்று குழம்ப வேண்டாம். நிர்ணயிக்கப்பட்ட அந்த விஷயம் சந்தேகத்திற்கு இடமின்றி உங்களை வந்துச் சேரும்… உடனே செல்லுங்கள்… அதுவரையில் நான் எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்கிறேன்..” என்றபடி தனக்கு வந்த பழங்களை பிரித்து எல்லோருக்கும் கொடுக்கலானார்.

திவாகரைப் போல் அனைவருக்கும் இந்த அனுபவம் விசித்திரமாக மட்டுமில்லாமல் புதியாகதாகவும் இருந்தது. எனினும், ஸ்வாமிஜியே தெளிவாய் தன்னை போக கூறிவிட்டதால், தவிர்க்க இயலாமல், திவாகர் உடனே வீட்டை விட்டு கிளம்பினார். வெளியே வந்தவர், எதிரேயிருந்த அந்த பூங்கா கண்ணில் பட்டது.. காலார நடப்போம், ஏதாவது விசேஷமாக நடக்கிறதா என்று பார்ப்போம் என்ற எண்ணத்தில், ரோட்டை கடந்து அந்த பூங்காவில் நுழைந்தார். இரண்டடி நடந்திருப்பார், காலுக்கருகில் ஏதோ காகிதம் ஒன்று பறந்து வந்து விழுவதை உணர்ந்தார். ஆர்வத்தில் குனிந்து அதை எடுத்தார். அதிலிருந்த வாசகத்தை படித்தவர் முகத்தைச் சுழித்தார்.

***

இயக்குனர் திருக்குமரனுக்கு பெரிதும் ஏமாற்றமாய் இருந்தது. அந்த கெஸ்ட் அவுஸிலிருந்து வெளியே வந்தார். கிட்டத்தட்ட இரண்டு வருடத்திற்கு பிறகு நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது என நம்பி வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மெகா சீரியலை நம்பி சின்னத்திரை பக்கம் வந்துவிட்டதால் மீண்டும் சினிமா பக்கமும் போக முடியவில்லை. டி.ஆர்.பி. ரேட்டிங் சரியில்லை என்று கைவசமிருந்த இரண்டு மெகா சீரியல் வாய்ப்புகளும் கை நழுவிப் போனது. தற்போது, மும்பையிலிருந்து பல மொழிகளில் மெகா தொடர் தயாரிக்கும் கம்பெனி ஒன்று அந்த கெஸ்ட் அவுசில் நேர்காணலுக்கு அழைத்திருந்தது. இந்த வாய்ப்பின் மூலம் இரண்டு மூன்று வருடம் ஓட்டிவிடலாம் என்ற அவரின் எண்ணத்தில் அந்த கம்பெனியின் க்ரியேட்டிவ் டீம் மண்ணைத் தூவிவிட்டது. திருக்குமரனிடமிருந்த கதைகளெல்லாம் பழசு என நிராகரித்துவிட்டது. எனினும், அனுபவத்தை கருத்தில் கொண்டு ஒரு நாள் அவாகாசம் அளித்து, மெகா தொடருக்கான நல்ல கதையோடு புதுமையான எண்ணங்களோடு நாளை வரச் செல்லியிருந்தார்கள். அவர் மட்டுமில்லாமல் பீல்டில் உள்ள பல இயக்குனர்கள் மற்றும் கதாசிரியர்கள் அங்கு வந்திருந்ததால், கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது அவருக்கு. விரக்தியாய் வந்தவருக்கு, எதிரில் அந்த பூங்கா தெரிந்தது. காலார நடந்து மனதை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் பூங்காவின் உள்ளேச் சென்றார். சிறிது நேரம் நடந்தவர், அருகிலிருந்த பெஞ்சில் உட்கார்ந்தார். ஏதோ நெருட… என்ன இருக்கிறது என்று கால் தூக்கி பார்க்க.. ஒரு சிறிய சுருட்டப்பட்ட காகிதம் கண்ணில் பட்டது. எடுத்து பிரித்து பார்க்கலானார். அதிலிருந்த வாசகத்தைப் படித்தவர்,பிரகாசமானார்.

***

திவாகர் ஹாலில் நுழைந்த போது, எல்லோரும் திவாகருக்காக காத்திருந்தது அவரவர் முகத்தைப் பார்த்ததும் தெரிந்தது. ஸ்வாமிஜி பக்கத்திலிருந்த ஒரு பக்தரிடம் மும்முரமாய் பேசிக் கொண்டிருக்க… ஒரு சிலர் திவாகரை சூழ்ந்துகொண்டு நடந்த விபரங்களை கேட்டனர். திவாகர் கையிலிருந்த காகிதத்தை பிரித்து காட்டினார். படித்தவர்களுக்கு தூக்கிவாரி போட்டது. பின் சந்தேகத்துடன் திவாகரை பார்த்தார்கள். ‘போயும் போயும் இதையா கொண்டு வந்தீர்கள்‘ என்று கேட்பது போலிருந்தது அவர்களுடைய பார்வை. திவாகரும் செய்வதறியாது நின்றார். அப்போது பேசிக்கொண்டிருந்த ஸ்வாமிஜி திவாகரை பார்த்துவிட… உடனே உற்சாகமாய்..

“வாங்க…திவாகர்… கமான் … என்ன விஷயத்தோடு வந்திருக்கிறீர்கள்…?” என்று ஆர்வமாய் திவாகரை கூப்பிட, திவாகர் ஸ்வாமிஜி அருகே வந்து தயக்கமாய் அந்த தாளை அவரிடம் நீட்டி கிடைத்த விபரத்தையும் சொன்னான்.

“தாளிலேயே கிடைச்சுடுச்சா… வெரி குட்…” என்றவாறு மனதுக்குள்ளே அந்த வாசகத்தை படித்தார். எந்தவித சலனுமுமில்லாமல், சிறிது நேரத்திற்கு பிறகு…

“நம்ம நண்பர் கொண்டு வந்த தலைப்பு என்ன தெரியுமா…?” புன்னகையுடன் எல்லோரையும் பார்த்தார். எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியாமல் திவாகர் நெளிந்தபடி இருந்தார்.

ஸ்வாமிஜி தெளிவாய் சப்தமாய் படித்தார்…

ஒரு பக்கமா சாஞ்ச இரண்டு பொண்டாட்டிகாரன்… கவிழ்ந்துவிட்டான்…

எல்லோரும் சிரித்தார்கள். ஹால் முழுவதும் சலசலப்பு ஏற்பட்டு, மீண்டும் அமைதி நிலவ சற்று நேரம் பிடித்தது. ஸ்வாமிஜி இந்த தலைப்பை தவிர்த்துவிட்டு, வேறெதாவது விஷயத்தைப் பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கு மாறாக… ஸ்வாமிஜி அந்த அமைதியைக் கலைத்து –

“அருமையான தலைப்பை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் நமது நண்பர்… இந்த சமயத்தில்,உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த பிரபஞ்சத்தில் எல்லாம் கடவுளால் உருவாக்கப்பட்டவை என்பதால், அனைத்தும் மங்களமான விஷயந்தான். அவரவர் பார்க்கிற கோணத்தில தான் தவறே தவிர பொருளில் ஏதும் இல்லை…”

மேலும் புன்னகையுடன் தொடர்ந்தார்…

“ஒருவிதத்தில் நாம எல்லாருமே ரெண்டு பொண்டாட்டிகாரன் தான் தெரியுமா…?” என்று ஸ்வாமிஜி சொன்னதும்… ஆங்காங்கே சிரிப்பொலி கேட்டது.

“ஒவ்வொரு மனிதனும் உலக விஷயத்தை அணுகும் போது, இரண்டு விஷயங்களால் பந்தப்படுகிறான் –ஒன்று சுகமளிக்கும் விஷயம். மற்றொன்று நன்மையளிக்கும் விஷயம். இதை சமஸ்கிருதத்தில் ப்ரேயஸ்,ஸ்ரேயஸ் என்பார்கள். முதல் விஷயம் நமக்கு உடனடி சுகமளிப்பது போல் தோன்றுவதால், நாம் எல்லோரும் அதை தேர்ந்தெடுப்போம். ஆனால், மற்றொன்று ஆரோக்கியமான நலனைக் கொடுக்கும். அது நமக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் நன்மையளிக்கும். சுலபமாய் சொல்லணும்னா நல்லதை போல் தோற்றமளிப்பது மற்றும் நிஜமாகவே நன்மையளிப்பது… உதாரணத்துக்கு… நாம உணவை எடுத்துகிட்டோம்னா… ஆரோக்கியத்துக்கான உணவை விட ருசியான உணவுக்குத்தான் நாம முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆக, இந்த இரண்டு விஷயங்கள் தான் வாழ்க்கை முழுவதும்  நம்மை அலைக்கழித்துக் கொண்டிருப்பது. விவேகியே ஸ்ரேயஸை தேர்ந்தெடுப்பான்”

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு… ஸ்வாமிஜி கையிலிருந்த அந்த காகித துண்டை பார்த்தபடி தொடர்ந்தார்…

“இந்த வரியை எனக்கு படிக்கும் போது ஸ்ரீமத் பாகவதத்திலிக்கும் துருவ சரித்திரம் தான் நினைவுக்கு வருகிறது. இது எப்படி கிடைத்தது… யார் எழுதினார்கள் என்பது தெரியவில்லை. அது தேவையும் இல்லை. ஆனால், இந்த வரி துருவ சரித்திரத்தின் சாராம்சம் எனலாம். துருவ சரித்திரத்தை உங்களுக்கு சொல்லவே‘அவன்‘ இந்த வாக்கியத்தை கிடைக்கச் செய்திருக்கிறான்….”

அங்கிருந்த யாரும் இந்தக் கோணத்தில் யோசிக்காத காரணத்தினால், அனைவருக்கும் ஸ்வாமிஜியின் வார்த்தைகள் வியப்பாய் இருந்தது. அனைவரும் பிரமிப்பில் இருக்க… புராண கதைகளிலுள்ள சூசகத்தை அவர் மேலும் தெளிவாய் குழுந்தைக்குச் சொல்வது போல் விளக்கத் துவங்கினார்.

“உத்தானபாதன் என்கிற அரசனுக்கு இரண்டு மனைவிகள் – சுருசி மற்றும் சுநீதி. உத்தானபாதன் என்றால் தலைகீழ் என்று அர்த்தம். நீதியை விட ருசிகர விஷயங்களுக்கே நாம் இடமளிப்பதைப் போல்,உத்தானபாதனும் சுருசிக்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அப்படி ஒரு நாள் சுருசியின் குழந்தையான உத்தமனை அரசன் தனது மடியில் வைத்திருக்கும் போது, அங்கு வந்த சுநீதியின் மகனான துருவனும் தனது தந்தையின் மடியில் உட்கார முயற்சி செய்ய, இன்று தந்தையின் மடிமீது அமர ஆசைப்படும் குழந்தை, நாளை நாட்டை ஆள்வதற்கும் பங்கிற்கு வரும் என கருதி, சுருசி அந்த குழந்தையை கீழே தள்ளி அவமானப்படுத்துகிறாள். இதனால் மனமுடைந்த குழந்தை துருவன் தாய்-தந்தையரைப் பிரிந்து தவம் செய்ய காட்டுக்கு செல்கிறான்.”

குழந்தை துருவனின் கதையை மேலும் ஸ்வாமிஜி ஸ்வாரஸ்யமாய் சொல்லிக் கொண்டிருக்க.. ஸ்வாமிஜியின் தெளிந்த பார்வை மற்றும் அதில் பொதிந்துள்ள உண்மைகளினால் அனைவரும் உணர்வுபூர்வமாய் லயித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

***

      அந்த அறையின் கதவை உள்ளே தள்ளி நுழைந்தபோது, ஏஸி காற்று ‘சில்‘லென்று முகத்தில் அறைந்தது. உள்ளே நான்கைந்து பேர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. நேற்று பார்த்தவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் ஒருவர் சேட்டு போன்ற தோற்றத்தில் கன சரீரத்தோடு இருந்தார். எல்லோரும் வரவேற்றனர். சிரித்தபடி நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டார் திருக்குமரன்.

சற்று நேரம் பொதுவாய் பேசிக்கொண்டிருந்தவர்கள், திடீரென சேட்டு ஹிந்தியில் ஏதோ கேட்க… ஸஃபாரி போட்டிருந்த நபர் திருக்குமரனை பார்த்து,

“இப்போ எடுத்திட்டு வந்திருக்கிற உங்க கதையோடு தீமை ஒன்லைன்ல கேட்கிறார்”

திருக்குமரன் உடனே சுதாரித்துக் கொண்டு, நேற்று பூங்காவில் கிடைத்த வாசகத்தை நினைவுப்படுத்திச் சொன்னார்…

ஒரு பக்கமா சாஞ்ச இரண்டு பொண்டாட்டிகாரன்… கவிழ்ந்துவிட்டான்…

கேட்டவர்கள் சிறிய நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து, பின் யோசனையில் ஈடுபட்டார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர்களுக்குள் இந்தி, ஆங்கிலம், தமிழ் என எல்லா மொழிகளிலும் விவாதித்தார்கள். பின், ஸஃபாரி போட்டிருந்த நபர் திருக்குமரனை பார்த்து,

“ஏற்கனவே வந்திருந்தாலும் நல்ல தீம்னு பீல் பண்றாரு சார். அது தவிர தீம்மை ‘நச்‘சுன்னு சொல்லிட்டீங்க. இப்போ நீங்க எந்தளவிற்கு இதை டெவலப் பண்ணுவீங்க… இந்த கருவிற்கு எந்தளவிற்கு ஸ்கோப் இருக்குனு கேட்கிறாரு ப்ரொடியசர்? கொஞ்சம் சொல்ல முடியுமா…?

இதற்கு தான் காத்திருந்ததை போல், இரவு முழுவதும் இத்தனை நாள் அனுபவத்தைக் கொண்டு மனதில் தான் டெவலப் பண்ணி வைத்திருந்ததை திருக்குமரன் உடனே கொட்ட ஆரம்பித்தார்.

“கண்டிப்பா சார்… கிட்டத்தட்ட 100 முதல் 150 எபிசோட்கள் வரை இரண்டு பேமிலியை காட்டறோம் சார். முதல் பேமிலியில அப்பா கேரக்டர் தன்னோட உடல்நலம் சரியில்லாத மனைவி மற்றும் 6 பெண் குழந்தைகளுக்காக கஷ்டப்படறதை காட்டறோம். உருக உருக அழ வைக்கிறோம். அதுக்கு பேரலலா இன்னோரு குடும்பத்தையும் காட்டறோம். அந்த பேமிலியோட குடும்பத் தலைவர் பாரினில் இருந்து, எல்லா விதத்திலேயும் அந்த குடும்பத்திற்கு சப்போர்ட்டா இருக்கிறதாவும் காண்பிக்கிறோம். இதுல அவங்க சந்திக்கிற பிரச்சனைகள், காதல், கல்யாணம் னு ஸ்வாரஸ்யமா எடுத்துட்டு போறோம். 150 எபிசோடுகளுக்கு பிறகு தான்,இரண்டு பேமிலியின் குடும்பத் தலைவரும் ஒருத்தர் தான் என்கிற விஷயத்தை ரிவீல் பண்றோம். பிறகு ப்ளாஷ்பேக்கில் ஒரு 50 எபிசோடிற்கு அப்பா கேரக்டர் எப்படி தான் காதலித்த பெண்ணை விட்டு குடும்பத்தோட நிர்பந்தத்திற்காக உடல் நலம் சரியில்லாத சொந்தகாரப் பெண்ணை மணக்கிறார் என்பதை விரிவாய் ப்ளாக் அன்ட் ஒயிட்ல விளக்கறோம். இரண்டு குடும்பங்களையும் காப்பாற்ற எந்தளவிற்கு கஷ்டப்பட்டார்ன்றதையும் காட்டி அந்த கேரக்டரை நியாயப்படுத்தறோம். இந்த உண்மை தெரிந்த பிறகு, ரெண்டு குடும்பத்திற்கு வருகிற தகறாறு தான் அடுத்து வரப்போகிற எபிசோட்கள். இத்தனை நாள் உடல் நல சரியில்லாத மனைவியோட கஷ்டப்பட்டாச்சு, காதலித்த மனைவியோட சில காலம் இருக்கேன்னு அப்பா கேரக்டர் இரண்டாவது பேமிலியோட போயிடறதா ட்விஸ்ட் தரோம். உடனே முதல் மனைவியோட கடைசி பெண் கேரக்டர் நியாயத்துக்காக தன் தந்தையிடமே சபதம் விடறதாகவும் மேற்கொண்டு டெவலப் பண்றோம்…”

திருக்குமரன் கேட்டுக் கொண்டிருந்தவர்களுடைய ரியாக்ஷனுக்கேற்றவாறு ஸ்வாரஸ்யமாய் ஈடுபாட்டோடு கதைச் சொல்ல… சொல்ல… அவர்களுக்கு பரமதிருப்தியாயிற்று. சேட் உடனேயே சூட்கேஸ் எடுத்து,அட்வான்ஸ் செக் கொடுத்து, தயாராய் வைத்திருந்த அடுத்த இரண்டு வருடத்திற்கான அக்ரிமெண்டில் கையெழுத்திடுமாறு இயக்குனர் திருக்குமரனிடம் நீட்ட…

இயக்குனர் திருக்குமரன் சந்தோஷத்தில் திக்குமுக்காடினார்.

***

மதிய உணவிற்கு பிறகு அனைத்து மாணவர்களும் மரத்தடியின் கீழ் புல்தரையில் வட்டமாய் உற்சாகமாய் உட்கார்ந்திருந்தார்கள். நடுவே, ஆசிரியர்கள் நாற்காலியில் உட்கார்ந்தபடி, ஒவ்வொரு மாணவனாய் கூப்பிட… ஒவ்வொருத்தராய் அவர்களது தனித்திறமையை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தார்கள். ஒவ்வொரு மாணவனாய் பாடல், கதை என எல்லோரையும் உற்சாகப்படுத்த, அதற்கு அனைவரும் கைத்தட்ட,இப்படி அந்த பூங்காவே அல்லோலகப்பட்டது. இறுதியாய் நமது ராமுவின் வாய்ப்பு வர, டிரவுசரின் பின்பக்கம் மண்ணை தட்டியபடி எழுந்தான். எல்லோரும் கைதட்டி உற்சாகப்படுத்த, ஆசிரியரின் பக்கத்தில் வந்து, சட்டை பாக்கெட்டில் கைவிட்டான், ‘பக்’ கென்றது. துழாவிப் பார்த்தான், நல்ல வேளை… ஒரு தாள் அகப்பட்டது. ஆசிரியர்களிடம் கொடுப்பதற்காக இருந்த காகித துண்டுகளெல்லாம் விளையாடும் போது, எங்கோ விழுந்துவிட்டது போலிருக்கிறது. ராமு அந்தத் காகித துண்டில் இருப்பதை சப்தமாய் படிக்கலானான்…

ஒரு பக்கமா சாஞ்ச இரண்டு பொண்டாட்டிகாரன்… கவிழ்ந்துவிட்டான்… 

பின்னர், “அது என்ன…?.” என்றான்.

கேட்டவுடனேயே எல்லோரும் ‘கொல்‘லென சிரித்தார்கள். அவர்கள் சிரிப்பலை ஓய்வதற்கு நேரம் பிடித்தது.

“சிரிக்காம.. ராமு சொன்ன இந்த விடுகதை புதிருக்கு விடை என்னன்னு யோசியுங்க…”

மாணவ-மாணவிகள் யோசிக்க ஆரம்பிக்க… சில நிமிடங்கள் நழுவிச் சென்றன.

“என்ன… யாருக்கும் தெரியலையா…?” ஆசிரியர், மாணவர்களை பார்த்து கேட்டார். எல்லோரும் அமைதியாய் இருக்க,

“ராமு… அதற்கான விடையை நீயே சொல்லிடு”

ராமு வெற்றிப்புன்னகையோடு, அந்த விடுகதைக்கு விடை சொன்னான்…

“ த ரா சு 

3 Replies to “விடுகதையா… இந்த வாழ்க்கை ? [சிறுகதை]”

  1. ஒரு விடுகதை எப்படி ஒவ்வொருவருக்கும் அவரவர் கோணத்தில் யோசிக்க வைத்திருக்கிறது என்பதைப் பார்க்கப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொன்ன கதாசிரியருக்கு வாழ்த்துகள்.

  2. ஒரு கருத்தினை அவரவர் மனப் பக்குவத்திற்கேற்ப பொருள் கொள்ளுவதும் பயனடைவதும் என்ற நிகழ்வுகளை எதார்த்தமாகக் கூறியுள்ள விதம் பிரமிக்க வைக்கிறது. மெய்ப்பொருள் காண்பதறிவு என்கின்ற அருமையான தத்துவத்தை மிக அழகாக இச்சிறுகதையில் வெகு சுவாரசியமாக விளக்கி விட்ட கதாசிரியருக்கு நன்றி; வாழ்த்துக்கள்!

  3. துரை. சம்பந்தன், பேராசிரியர் (ஓய்வு), புதுவை பல்கலைகழகம் says:

    அருண். கோ எழுதிய “விடுகதையா இந்த வாழ்க்கை” என்ற சிறுகதையை ரசித்துப் படித்தேன். 1964-65 ஆண்டில், நான் புதுவை தாகூர் கலைக் கல்லுரியில் புகுமுக வகுப்பில் (Pre University Course) படித்தபோது, பேராசிரியர் மா.ரா. பூபதி அவா்கள் ”இலன் என்னும் எவ்வம் உரையாமை, ஈதல் குலன் உடையான் கண்ணே உள” என்ற திருக்குறளுக்கு நான்கு விதமான விளக்கம் (interpretations) கொடுத்தது நினைவிற்கு வந்தது. ஒரு வரியை வைத்துக் கொண்டு, பள்ளிச் சிறுவர்கள், உண்மையான ஞானத்தை போதிக்கும் ஒரு நல்ல ஸ்வாமிஜி மற்றும் சின்னத் திரையுலகில் தன் முத்திரையை பதிக்க போராடும் ஒரு இயக்குனர் – இவா்கள் மூலமாக வாழ்க்கையின் யதார்த்தத்தை Duality of life ஐ மிக எளிமையாக பேச்சுத் தமிழில் கதாசிரியர் எடுத்து இயம்புகிறார். எல்லோரையும் சிரிக்க வைக்கின்ற இந்த வாசகம் ”ஒரு பக்கமா சாஞ்ச இரண்டு பொண்டாட்டிகாரன்… கவிழ்ந்துவிட்டான்”, ஆழந்த பொருளை உணரும் வண்ணமாக தீட்டப்பட்டுள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் இனிப்தெல்லாம் உடலுக்கு நன்மை பயக்காது என்ற யதார்த்தமும் இந்த கதையில் நெய்யப்பட்டுள்ளது. கதாசிரியருக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *