தவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்

tt1மெயின் ரோட்டிலிருந்து பார்த்தால் கோவில் தனித்து நிற்பது தெரிகிறது.  நடந்து செல்லும் தூரம்தான்.  ஆனால், ஒரு பெரிய பள்ளம் கோவிலுக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது.  எப்படிக் கோவிலுக்குச் செல்வது என்று மனம் குழம்பி, அருகில் ஒரு வீட்டு வாசலில் நின்றுகொண்டிருக்கும் அம்மையாரிடம் விசாரிக்கிறேன்.

“கோயிலுக்குங்களா?  இப்படியே இந்த ரோட்டுலே கிழக்கால கொஞ்ச தூரம் போனீங்கன்னா ஒரு சின்னப் பாலம் வரும்.  அதுல ஏறிப்போயிட்டே இருந்தீங்கன்னா, அது கோயிலாண்ட கொண்டுபோய் விட்டுங்க!” என்று கனிவுடன் பதில் சொல்கிறார் அந்த அம்மையார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, டிரைவரை வண்டியைச் செலுத்தச் சொல்கிறேன்.  அந்தப் பாலம் ஒரு கார் போகும் அளவுக்குத்தான் இருக்கிறது, கொஞ்சம் இந்தப்பக்கம், அந்தப்பக்கம் போனாலும் கார் கீழே விழுந்துவிடும் நிலை.  எப்போதோ போடப்பட்ட சிமெண்ட் ரோடு.  ஆங்காங்கு நன்கு வளர்ந்திருக்கும் முட்செடிகள் காரைத் தொட்டுத் தடவிப்பார்த்து வழியனுப்புகின்றன.tt2

ஒரு பர்லாங் தூரம் சென்றதும், ரோட்டின் ஒரு பகுதியைக்காணோம்.  டிரைவர் மிகவும் திறமையுடன், வண்டியைக் கழைக்கூத்தாடியின் திறமையுடன் செலுத்தி, ரோட்டின் முடிவை அடைகிறார்.  ராஜ கோபுரமும், கோவிலுக்கும் முன் ஒரு தடாகமும் தெரிகின்றன.  மிகவும் கீழே ஆரஞ்சு நிறத்தில் நீர் தெரிகிறது.

“இந்தக் குளத்தில் தவளைகளே இல்லையாம்!”  என்று தனக்குத் தெரிந்த ஒரு செய்தியைச் சொல்கிறார் என் சிறிய மாமனார்.

காரில் இருந்து இறங்கி, காலைக் கழுவிக்கொண்டு செல்லலாம் என்று நினைத்தால், குளத்துப்படிகளில் இறங்கப் பயமாக இருக்கிறது.  படிகள் நின்றுபோய் பள்ளமாக இருக்கிறது.  எனவே, நாங்கள் கொண்டுவந்த பாட்டில் தண்ணீரால் காலை நனைத்துக்கொண்டு கோவிலுக்குள் உள்ளே நுழைய முயன்றால், வழியை மறித்துக்கொண்டு கொம்புகளை ஆட்டிக்கொண்டு நிற்கும் பசுக்களைத் தாண்டிச் செல்லத் தயக்கமாக இருக்கிறது.

டிரைவர் தைரியம் ஊட்டுகிறார். “பயப்படாதீங்க சார்.  ஒண்ணும் பண்ணாதுங்க.” என்றபடி முன்னே செல்கிறார்.  பசுக்கள் ஒதுங்கி வழிவிடுகின்றன.  அவரைப் பின்தொடர்ந்து நாங்கள் செல்கிறோம்.  சன்னதிக்கு ராஜ கோபுர வாசலில் இருந்து கீழே இறங்கிச்செல்லவேண்டி இருக்கிறது…

நான் விவரிப்பது திருத்தலையூர் என்னும் திருத்தலத்தில் இருக்கும் சப்தரிஷீஸ்வரர் கோவில்தான்.  குளித்தலையைக்குக் கிழக்கே, காவிரிக்கு வடகரையில் இருக்கும் முசிரியிலிருந்து புலிவலம் செல்லும் வழியில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தலையூர்.

என் காலம்சென்ற மாமனாரின் குலதெய்வக் கோவிலாம் அது.  ஆறேழு தலைமுறைகளுக்கு முன்னர் திருத்தலையூரில் இருந்த என் மாமனாரின் முன்னோர், பஞ்சம் வந்துவிடவே, ஊரைவிட்டு நீங்கி, காவிரிக்குத் தென்கரையில் உள்ள ஒரு கிராமத்தில் குடியேறிவிட்டார்களாம்.  குலதெய்வ வழிபாட்டைத் தொடரவேண்டும் என்ற அவாவினாலும், அம்மன் குங்குமாம்பிகைக்குப் புடவை வாங்கிச் சாத்துவதாக வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை நிறைவேற்றவும் திருத்தலையூருக்கு வந்திருக்கிறோம்.

tt3ராஜகோபுரத்தைப் பார்த்தால், கலைநுணுக்கங்களுடைய சிலைகள் வண்ணம் பூசப்பட்டிருப்பது தெரிந்தது.  வண்ணம் வெளிரத்துவங்கி இருந்தது.  சில இடங்களில் செடிகளும் வளர ஆரம்பித்திருந்தன.

உள்ளே சென்று நாங்கள் கண்ட காட்சி எங்களைத் திடுக்கிடச் செய்தது.

அதை எப்படி விவரிப்பது?….

tt9 tt4வெளியிலிருந்து பார்த்தால் கோவில் தனித்து நிற்பதுபோலத் தோன்றியது.  உள்ளே சென்று பார்த்தால் அது தவித்து நிற்பது போலத்தான் புலனாகியது.  கோவிலின் நிலையைக் கண்டு என் இதயம் கனத்தது..

கோவிலுக்குள் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை.  கற்களால் கட்டப்பட்ட, தொன்மைவாய்ந்த  பழைய கோவில்.  மேல்தளங்களில் செடிகளும் மரங்களும் வளர்ந்திருந்தன.  சில இடங்களில் தளங்கள் கீழே இறங்க ஆரம்பித்திருந்தன.  சப்தரிஷீஸ்வரர் சன்னதி கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு அடி கீழே இருந்தது.  சன்னதிக்குள் நுழையும் வழியில் சிமிட்டித்தரை.  கலை நுணுக்கமானதூண்கள் பாதி சிமிட்டியில் புதைந்திருந்தன.  ஏன் இப்படி கலைச் செல்வங்களைத் தரையில் புதைத்து விட்டார்கள் என்று என் மனதில் கேள்வி எழுந்தது.

tt6 tt5நாங்கள் அர்ச்சகரைத் தேடிச் சென்றோம்.  எங்களை எதிர்கொண்டனர் ஒரு முதியவரும், மூதாட்டியும்.  அர்ச்சகர் உடல்நலமின்றிப் படுத்திருப்பதாகவும், நாங்கள் பிரகாரத்தை ஒருமுறை சுற்றிவந்தால் அர்ச்சகரை எழுப்புவதாகவும் தெரிவித்தனர் அவர்கள்.

எல்லாத் தெய்வங்களையும் துணி போர்த்தி மூடி இருந்தார்கள்.  எனவே, கோவிலுக்கு புனருத்தாரணம் செய்யப்போகிறார்கள் என்று அறிந்துகொண்டேன்.  கடவுளருக்கு உள்ள இரண்டு வாகனங்கள் – எவ்வளவு பழமையானவையோ தெரியவில்லை – பொலிவிழந்து நின்றன.  என் கண்களில் என்னையும் அறியாமல் நீர் திரளுவதை என்னால் தடுக்க இயலவில்லை.

tt10tt7 tt8 கடவுளர்களின் விமானங்களில் உள்ள சுதைச் சிற்பங்கள் மிகவும் அருமையாக இருந்தன.  எப்பொழுது குடமுழுக்குச் செய்தார்களோ, தெரியவில்லை, நல்ல வண்ணக்கலவைகளை உபயோகித்து இருந்தார்கள்.  வண்ணம் வெளிர ஆரம்பித்திருந்தது.

tt11ஒரு நாகலிங்க மரம் பூத்துச் சொரிந்திருந்தது.  வடமேற்கு மூலையில் ஒரு பெரிய, ,மிகவும் வயதான [சரியான குறிப்பீடு அல்ல, மரத்தின் முதுமையைக் குறிப்பிடவே அப்படி எழுதினேன்] தல விருட்சம் நின்றுகொண்டிருந்தது.  அதன் உடல் முழுவதும் முடிச்சுக்கள், ஒன்று சிவலிங்கம் மாதிரி, இன்னொன்று விநாயகர் மாதிரி – எண்ணூறு ஆண்டுகள் பழைய மரம் என்று கேள்விப்பட்டதாக என் சிறிய மாமனார் அறிவித்தார்.  கோவிலின் கட்டுமானத்தைப் பார்த்தால் அதுவும் எண்ணூறு ஆண்டுகள் பழையது போலத்தான் தோன்றியது.

எங்களுடன் வந்த அர்ச்சகரின் உதவியாளர் இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடந்ததாகவும், அப்பொழுதும் தான் கோவிலில் பணியாற்றியதாகவும், அப்பொழுது தனக்கு இருபத்திஐந்து வயது இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

tt14பால ஆலயம் ஏற்படுத்தி, கடவுளர்களைத் துணிபோட்டு மூடியிருக்கிறார்களே, எப்பொழுது புதுப்பிக்கப்போகிரார்கள் என்று கேட்டதற்கு, எல்லாத் தூண்களையும், தளங்களையும் பிரித்து எடுத்துவிட்டு, சரிசெய்து மீண்டும் கட்டுவார்கள் என்று தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்.  எப்பொழுது அது நடக்கும் என்று தனக்குத் தெரியாது, பலர்கூடி நிதிதிரட்டிச் செய்யப்போகிறார்கள் என்று சொன்னார்.  கோவில் தூண்களையும், பிரகாரத் தூண்களையும், வெளியில் உள்ள கற்சிலைகளுக்கு இயற்கையால் ஏற்பட்ட சேதத்தையும் நோக்கினால் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் தொன்மையாகமோ இருக்குமோ என்று என் மனம் சொல்லியது.

நவக்கிரகங்களுக்கு மேல்கூரையே இல்லை.  வெய்யிலிலும், மழையிலும் நனைந்த கோலம்தான்.tt13

இதற்கிடையில், அர்ச்சகர் — முப்பது வயதிற்குள்தான் இருக்கும் – அவர் பெயரும் சப்தரிஷிதானாம் – எழுந்து வந்து வரவேற்றார்.  வேறுவேலையாக வெளியூர் சென்றதில் ஜுரம் வந்துவிட்டது என்றும், களைப்பாக இருந்ததால் ஓய்வு எடுத்தவர், அயர்ந்து உறங்கிவிட்டதாகவும் சொன்னார்.

தினமும் எட்டு கிலோமீட்டர்கள் பயணம் செய்து கோவிலுக்கு காலையில் வருபவர், மாலை பூஜை முடிந்து செல்லும்வரை வரை கோவிலிலேயே தங்கி விடுவதாகச் சொன்னார்.  பிரசாதத்தையும் செய்து கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.

வாசலில் கட்டி இருக்கும் பசுக்களின் பால், தயிர், நெய் கோவிலில் அபிஷேகத்திற்கும், விளக்கெரிக்கவும் பயன்படுவதாக விளக்கினார்.  மிஞ்சும் பாலை விற்ற பணத்தில் மின்சாரக் கட்டணத்தையும் கட்டுவார்களாம்.

பிரதோஷம், மற்றபடி ஏதாவது விசேஷம் என்றால் நாற்பது ஐம்பது பேர்கள் வருவார்கள், இல்லாவிட்டால் எங்களைப்போல யாரும் வந்தால்தானாம்.  சிலநாள்கள் கோவிலுக்கு யாரும் வருவதில்லையாம்.

ஊருக்கு அருகாமையில் இருக்கிறதே, ஏன் யாரும் வருவதில்லை என்று கேட்டதற்கு, ஒரு விரக்திச் சிரிப்பையே பதிலாகத் தந்தார்.

உத்சவ மூர்த்திகள் அதன் பாதுகாப்பிற்காக வேறு இடத்திற்கு தமிழ்நாடு அறப்பணித் துறையால் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் தெரிந்தது.

tt12சப்தரிஷீஸ்வரர் சுயம்பு என்றும்.  கோவில் கட்டப்பட்ட பகுதி உவர் நிலம் என்பதால், நீர்மட்டம் கீழிறங்கியதும், தாறுமாறாக நுழைவு வழி வெடித்து இறங்கியதால், சிமிட்டி போட்டு நிரவி விட்டார்கள் என்று தெரிவித்தார்.  சப்தரிஷீஸ்வரர் சந்நிதி மட்டும் அப்படியே நிலைத்து நிற்கிறது என்று சந்தோஷப்பட்டார்.  தெற்கு பார்த்த அம்மன் சன்னதி மேல்மட்டத்தில் இருக்கிறது.

நாங்கள் புதுப்புடவை கொண்டுவந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.  புடவையைச் சார்த்தி, அருச்சனை செய்தார்.  அவருடைய உதவியாளர்தான் கூடமாட ஒத்தாசை செய்தார்.  அதே மாதிரி சப்தரிஷீஸ்வரருக்கும் அருச்சனை செய்யப்பட்டது.

புணருத்தாரணம் பற்றிக் கேட்டதற்கு, அன்பர்கள் ஒன்றுகூடி பணம் திரட்டுவதாகவும், ஸ்தபதிகள் மேற்பார்வையில், கற்கள் ஒவ்வொன்றையும் எண்ணிட்டு, பெயர்த்தெடுத்து, சரியான அஸ்திவாரம் போட்டு மீண்டும் நிலைநிறுத்தப் போவதாகத் திட்டம் இருக்கிறது என்று தெளிவுபடுத்தினார்.

தமிழ்நாடு அறப்பணித் துறையின் கீழ் இருக்கும் இந்தக் கோவிலைப் புதுப்பிக்கும் பணிக்கு, அத்துறை முன்வந்து பொருளுதவியும், மற்ற உதவிகளும் செய்து, கோவிலுக்கு வரும் சாலையையும் புதுப்பித்து, மெயின் ரோட்டிலிருந்து நேராக கோவிலுக்கு ஒரு ரோடும் போட்டால் கோவில் பழைய பெருமையைப் பெரும் என்பதில் ஐயமே இல்லை.  அறப்பணித் துரையின் கீழுள்ள, பணம் படைத்த எத்தனையோ கோவில்களில் மிஞ்சும் பணத்தில் சிறிது இப்படித் தனித்து, தவித்து நிற்கும் கோவில்களுக்கும் செலவு செய்தால், பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலும் புதுப் பொலிவு பெரும் அல்லவா!

சப்தரிஷீஸ்வரர்தான் கண்திறந்து பார்க்கவேண்டும்!

 

 

19 Replies to “தவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்”

  1. படிக்க மனம் வேதனை படுகிறது. அரசை நம்பி இராமல் யாரேனும் திருப்பணி செய்வதாக இருந்தால், நான் அதில் பங்கு கொள்ள விரும்புகிறேன். எனது நண்பர்களும் இணையலாம். என் செய்வது? தமிழ் நாடு அரசியல் இவ்வாறு கோவில்களை அழிக்கும் சக்திகளிடம் சென்று விட்டது. நம் தவறு தான். கோவில் உண்டியல் வருமானத்தை கோவில்களுக்கு மட்டும் உபயோகித்தால் மட்டுமே இது போன்ற சிறு சிறு கோவில்கள் வளம் பெறும். அந்த பள்ளத்தை நிரப்புவது என்ன அவ்வளவு கடினமா? அந்த ஊர் பஞ்சாயத்து செய்ய முடியாதா? பக்தர்கள் வருகையால் அவர்களுக்கு வருமானம் அதிகரிக்குமே? ச்சே! என்ன அரசியல்? திருப்பதி ஆந்திரா சென்றதால், அந்த கோவில் பிழைத்தது. இல்லையேல் நாம் பெருமாளையும் இழந்திருப்போம்.

  2. இன்று கோவில்கள் வருமானத்தை விட சன்யாசிகளின் மடம்களுக்கு அட்சய பாத்திரம்போல் வருமானம் வருகின்றன வருமானம் இல்லா கோவில்களுக்கு வருகை தருவது இல்லை எந்தவித உதவியும் செய்வது இல்லை இந்து முன்னணி சைவம் வைஷ்ணவம் என்ற வேறுபாடு காட்டாமல் மத மற்றும் செல்வந்தர்களை சந்தித்து உரிய ஆக்க பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசு ஒன்று செய்யும் அனுமதித்தால் மது கடையை திறக்கும்

  3. ஈசன் பலகீனன் என்றக்கால் ஆலயத்தின்
    மோசம் வந்ததென்று மொழியலாம்-ஈசனே
    ஆக்குவதும் ஆக்கி அழிப்பதும் தானானால்
    நோக்குவது என் யாம் பிறரை நொந்து”

  4. ஈசன் எந்தக்காலத்திலும் பலஹீனன் அல்ல. இந்த கோயிலை புனர் உத்தாரணம் உள்ளூர் மக்களும் அதை சுற்றியுள்ள மக்களும் திருச்சி ஜில்லா வாழ் மக்களும் , இதர பெயர் போன சைவ , வைணவ கோயில் நிர்வாகங்களும் அத்தடன் அரசும் துரிதமாய் முனைந்து உரிய நடவடிக்கைகள் செய்தே ஆகவேண்டும். அதை நிறைவேற்ற அந்த ஈசன் அருள் வேண்டி நிற்கின்றேன். ஈசா? உன் கருணையே கருணை. அதை அளக்க எவராலும் முடியுமோ?

    “கிருஷ்ணசாமி மணியன்”

  5. திருத்தலையூர் கோயில் நிலை பற்றி படித்தபின் மனம் மிகவும் கஷ்டமாக உள்ளது
    இது போல் தமிழகத்தில் நிறைய கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களை எல்லாம் கண்டறிந்து அவற்றை சீர் திருத்தி பராமரிக்கஎன்று தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலம் நிதி திரட்டி இதுபோல் அழியும் நிலையில் உள்ள
    கோவில்களை பாதுகாத்து பின் வரும் சந்ததியருக்கு விட்டு செல்லவேண்டும்.இன்று புதிது புதிதாக நிறைய இடங்களில் கோயில் கட்டப்படுகிறது .அப்படி புதிய கோயில் கட்டுபவர்கள் கோவில் கட்ட ஆகும் செலவில் ஒரு தொகையை இது போல் பழைய கோயில் புனரமைப்பிற்கு கொடுக்க வேண்டும் என்பதை கோவில் பராமரிப்பு அமைப்பின் மூலம் விளம்பரப்படுதவேண்டும்.ஏற்கனவே உழவாரதிருப்பணி செய்து கொண்டு இருக்கும் அன்பர்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.இந்து அமைப்புகள் இத்தகைய முயற்சி எடுத்தால் இறையன்பர்கள் பின்தொடர வசதியாக இருக்கும்.

    சப்தரிஷிஸ்வரர், குங்குமாம்பிகை அருளால் நல்லது நடக்கும்.

  6. நல்ல பதிவு. தமிழகத்து கோவில்களில் புனருத்தாரணம் என்ற பெயரில் கற்றளிகளைச் சிதைத்து மார்பிள் தரைகள் போடும் அவலமும் மண்வீச்சால் கோவிலைப்பாழ்படுத்தும் அவலமும் நிகழ்கிறது. அவை நிகழாது இந்தக்கோவில் புனருத்தாரணம் நிகழ அந்த சப்தகிரீஸ்வரரே அருள் பாலிக்க வேண்டும்.

    இன்னொன்று…. கோவிலை புனருத்தாரணம் செய்கையில் லவலேசமும் கண்டுகொள்ளாத விஷயம்…. கோவிலை ஒட்டிய குளம். புனருத்தாரணம் செய்பவர்கள் பெரிய மனது கொண்டு இந்த வ்யாசத்தில் சிதைந்ததாகச் விவரிக்கப்பட்டிருக்கும் இந்தக் குளத்தையும் சீர் செய்ய வேண்டும்.

  7. If the temple is not under TN govt., it is for Hindus to help renovate it. If there are more such temples scattered across the State, it is for Hindus to come together as an organisation and revive them back to past glory. If they come together, then they can take care of the points raised by Krishankumar. Why not Krishna kumar initiate the process? He is an elder and more passionate in the matter and he will receive all respects and responses definitely.

    Open an FB, website, twitter and bring all together; collect donations for temples, one by one, and accomplish the task within a time frame, one after another temple.

  8. \\ Why not Krishna kumar initiate the process? He is an elder and more passionate in the matter and he will receive all respects and responses definitely. \\

    I am not in Tamizhnadu.

    Already, I am supporting renovation efforts of kunds (ponds) vans (forests) and heritage sites at braj (brundavan) taken up by Braj Foundation. We had wonderful success there. So far renovated about 40+ kunds there.

    In Tamizhnadu, renovation of waterbodies is quite a new theme and in my home town of Salem, the same has been carried out by Sh.Piyush Manush, a gujarathi / marwadi resident of Salem. And his good work in this direction is spreading.

  9. Long back a religious leader lamented most of the NRI instead of helping mushroom growth of temples abroad divert a fraction of the funds for renovating old temples associated with their ancestors or in the villages by donating the money to the villagers or by some arrangements withHRCE board.Ssome such efforts are done in Andhra and KKarnataka.They can also provide funds for the welfare of the priests by some endowments.Kanchi Mutt has been doing yeomen service in this connection.Thiruvengadam

  10. //If the temple is not under TN govt., it is for Hindus to help renovate it.//

    Hope you read this sentence in the essay.
    …தமிழ்நாடு அறப்பணித் துறையின் கீழ் இருக்கும் இந்தக் கோவிலைப் புதுப்பிக்கும் பணிக்கு, அத்துறை முன்வந்து பொருளுதவியும், மற்ற உதவிகளும் செய்து, கோவிலுக்கு வரும் சாலையையும் புதுப்பித்து, மெயின் ரோட்டிலிருந்து நேராக கோவிலுக்கு ஒரு ரோடும் போட்டால் கோவில் பழைய பெருமையைப் பெறும் என்பதில் ஐயமே இல்லை….

    //it is for Hindus to come together as an organisation and revive them back to past glory.//
    Again, please read the sentence given in the essay:
    ..புணருத்தாரணம் பற்றிக் கேட்டதற்கு, அன்பர்கள் ஒன்றுகூடி பணம் திரட்டுவதாகவும், ஸ்தபதிகள் மேற்பார்வையில், கற்கள் ஒவ்வொன்றையும் எண்ணிட்டு, பெயர்த்தெடுத்து, சரியான அஸ்திவாரம் போட்டு மீண்டும் நிலைநிறுத்தப் போவதாகத் திட்டம் இருக்கிறது என்று தெளிவுபடுத்தினார்….

    தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இம்மாதிரி அமைப்புகள் உள்ளன. ஆனால், அறநெறித்துரை என்று ஒன்று வைத்துவிட்டு, கோவில்களுக்கு வரும் பணத்தை வேறெங்கோ திருப்பிவிட்டு, கோவில்களுக்குச் செலவிடாமல் இருப்பது சரியல்ல என்றுதான் குறிப்பிட்டிருக்கிறது.

  11. //Long back a religious leader lamented most of the NRI instead of helping mushroom growth of temples abroad divert a fraction of the funds for renovating old temples associated with their ancestors or in the villages//

    வெளிநாட்டில் இருக்கும் இந்துக்கள், யார் கையையும் எதிர்பார்க்காமல், தங்கள் பணத்தைச் செலவழித்து, தாங்கள் வழிபடுவதற்காகக் கோவில் கட்டிகொள்கிறார்கள். அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காது.

    உதாரணமாக, அமெரிக்காவில் இருக்கும் அரிசோனா ஆனைமுகம் ஆலயம் அங்கிருக்கும் ஒரு சில நூறு இந்துக்களால், அவர்கள் பணத்தைக்கொண்டு தமிழ்நாட்டுக்கோகொவில்போலக் கட்டப்பட்டிருக்கிறது.

    தமிழ்நாட்டுச் சிற்பிகள் அங்கு பணி புரிகிறார்கள்.

    மேலும், தங்கள் குலதெய்வக் கோவில்களுக்கும் நிதியுதவி செய்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆயினும், எண்ணிக்கையில் அதிகமான இந்திய இந்துக்கள், வெளிநாட்டார் கையை எதிர்பார்க்காது தங்கள் கோவில்கள்மீது இன்னும் கவனம் செலுத்தவேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து.

    Your use of //mushroom growth of temples// is a little rude and without any elegance. People need temples for their worship depending on their population. If one compares temples to mushroom, what kind of respect he/she gives for the place of worship, and how he/she expects his words will be heeded by temple goers?

  12. Krishna Kumar,

    For online initiative, inconvenient location isn’t a problem. Spread awareness and gather support from all concerned – all online. After that, things will fall in their fine places one by one, on their own. Some one will take over the steering wheel from you and the matter will gather steam and start rolling.

    Renovation of temples does no’t necessarily mean reviving water bodies only. In fact, such revival may not be possible in arid places: TN has so many. If you go to temples which are not cared for, you may also see ponds of the temples w/o water as they look up to heaven for water i.e. from rains only. The ponds are not encroached, though. In such places, renovation of temples is possible and the ponds can be filled in ceremoniously for festive occasions, like the District Collector orders permission to allow some standing water in the Vaigai River for three days for Kallazhagar festival.

    Virudunagar district is arid. Once I went to Thiruthangal near Sivakasi and saw the pond in the Divya Desam empty and dried up. The pond is associated with many legendary benefits; hence, was eager to see it. It was fully enclosed with gates which were locked. No problem but disappointed to see it completely w/o water. When asked, they told me that it is from rains the pond gets water. However, for 10 day brahmotsavam and for Vaikunta Ekadasi they pour water there and devotees are allowed to touch the water.

    If you go to Thirupathi Saram at the outskirts of Nagercoil, you will be surprised to see the pond with plenty of water even in summer months. Reason? It is a wet area and the ground water is always present. Thirupathi Saram is the birth place of Nammazhvar.

    Similar stories can be found anywhere, in TN. Hence, go for renovations of temples deserted.

  13. தமிழ்நாட்டரசின் ஹிந்து ஸமய அறநிலைய(!?)த்துறை தனக்கென்று ஒரு கொள்கை (?) வைத்துள்ளது. வருமானம் வரும் கோயில்களை அரவணைத்துக் கொள்ளும். மற்ற ஆலயங்களைக் கண்டு கொள்ளாது. தப்பித் தவறி யாராவது குழு அமைத்து திருப்பணி செய்ய முன்வந்தால் மதிப்பீட்டை அளிக்க வேண்டும். துறையின் பொறியாளர் அதனை ஆய்வு(!) செய்வார். மொத்தமதிப்பீட்டில் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் அறநிலையத்துறையின் பங்காகத் தரப்படும். அதற்குப் பிறகு இருக்கவே இருக்கிறது நடைமுறைகள் எனும் கும்பகர்ண நெறிகள். அதைத்தாண்டி வர ஒரு வருடத்துக்கு மேல் அநேகமாக ஆகும். கோயிலிலி உறையும் தெய்வங்களே அதிகாரிகளின் கனவில் வந்து முறையிட்டாலும் அதற்கும் ஒரு பதிலுண்டு. நடைமுறை என்று உண்டல்லவா என்று கேட்டால் தெய்வங்கள் வந்த வழியே திரும்பிவிடுவர். அன்பர்களின் முயற்சியால் திருப்பணிநிறைவேறினால் குடமுழுக்குக்கு நாள் குறிக்க காவடித்தூக்க வேண்டும். கோயிலுக்கே வராத செயல் அலுவலரிலிருந்து ஆரம்பித்து உதவி, துணை , இணை ஆணையர்கள் பெயர்களையும் உள்ளூர் கவுன்சிலர், அறநிலையத்துறை அமைச்சர் பெயரினையும், எல்லாவற்றிற்கும் மேலாக முதல்வரின் நல்லாட்சியில் அவரின் நல்லாசியுடன் என்று பத்திரிகை அடிக்கவேண்டும். இவ்வளவு கஷ்டங்கள் உள்ளன ஒரு திருப்பணியை முடிக்க. உள்ளூர் மக்களின் பங்களிப்பில்லாமல் கோயில்களை பாதுகாப்பது கடினம். எனவே உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்

  14. My remarks were areaction to the feelings of Arizonan towards the temple of his ancestors and was not to belittle the efforts of N rIs attempt to maintain their umbilical cords with their culture.f he looks round how clusters temples are found in cities like Austin,LA, Houston.What I suggested was the remark of a religious person who is interested in the renovation of old heritage temples and helping the already disappearing class of village priests.It is uptohim yo interpret in whatever he wants.Thiruvengadam

    a how some of them are highly in debts and are becoming commercial enterprises

  15. \\ Renovation of temples does no’t necessarily mean reviving water bodies only. \\

    I condemn UNWARRANTED DISTORTION of my comment.

    my comment :-

    \\\\\ இந்தக்கோவில் புனருத்தாரணம் நிகழ அந்த சப்தகிரீஸ்வரரே அருள் பாலிக்க வேண்டும்.

    இன்னொன்று…. கோவிலை புனருத்தாரணம் செய்கையில் லவலேசமும் கண்டுகொள்ளாத விஷயம்…. கோவிலை ஒட்டிய குளம். புனருத்தாரணம் செய்பவர்கள் பெரிய மனது கொண்டு இந்த வ்யாசத்தில் சிதைந்ததாகச் விவரிக்கப்பட்டிருக்கும் இந்தக் குளத்தையும் சீர் செய்ய வேண்டும். \\\\

    Nowhere in my comment, I said renovation of temple mean reviving water bodies ***ONLY***. I only said that while renovating the temple, renovate ALSO Waterbody associated with temple which is part of the legend of that temple.

    Whenever any temple is renovated, I am very particular that *****RENOVATION OF THE TEMPLE SHOULD ALSO INCLUDE RENOVATION OF TIRTHA*** ALSO WHICH IS ASSOCIATED WITH THE TEMPLE AND PART OF ITS STHALA PURANA. IN EVERY OTHER STHALA PURANA, ONE CAN FIND THE GLORY OF THE ***TIRTHA*** ASSOCIATED WITH THAT TEMPLE.

    IT IS PAINFUL TO SHARE HERE THAT USURPED BY HOSTILE ANTI HINDU ABRAHAMIC FORCES, THE LAND MAFIA OF TAMIZHNADU HAD ALREADY CONVERTED AS MANY LAKES AND TEMPLETANKS INTO COMMERCIAL COMPLEXES, RESIDENTIAL COLONIES AND PRIVATE PROPERTIES AND WHAT NOT.

    How to go about renovation of waterbodies is sure a challenging task in different terrains……… The experience of Braj foundation in and around Srivanam is a telling point for the world at large to see for themselves the approach to this wonderful service ……… If time permits I would share the details.

    LET THERE BE MEANINGFUL DISCUSSION DEVOID OF DISTORTIONS.

  16. //What I suggested was the remark of a religious person who is interested in the renovation of old heritage temples and helping the already disappearing class of village priests.//

    தங்களுக்குத் தமிழ் படிக்கவருகிறது என்பதால் தமிழில் பதில் எழுதுகிறேன்.

    “எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பதறிவு.”

    என்பதே வள்ளுவர்பிரானின் கூற்று. யார் என்ன சொன்னாலும் அதில் உள்ள உண்மைத் தாங்கள் உய்த்து உணரவேண்டும்.

    மற்ற சமயங்களுக்கு வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பணம் வருகிறது என்பதை வைத்து நீங்கள் வெளிநாட்டு இந்துக்கள் என் பணம் அனுப்பக்கூடாது என்று கேட்கிறீர்கள்.

    பல ஆயிரக்கோடிக்கணக்கான எண்ணெய்ப் பணமும், வியாபாரம் செய்து குவித்த பணமும் மற்ற சமயங்களுக்கு வருகிறது. பணம் மாற்ற சமயம் மிகுந்த, செல்வம் நிறைந்த நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மதமாற்றத்திற்காக வருகிறது.

    இந்தியாவில் இருக்கும் அறநிலையங்கள் [ஒரு சில விதிவிலக்கைத் தவிர] அமெரிக்க இந்து ஆலயங்களுக்கு உதவுவதில்லை. அப்படி உதவினாலும், ஆயிரம் நிபந்தனைகள் விதிக்கிறார்கள். எனவே, பெரும்பாலான இந்து ஆலயங்கள் எழுப்பப்படும்போது வெளிநாட்டு — குறிப்பாக இந்தியாவின் உதவியை யாரும் எதிர்பார்ப்பதில்லை.

    தங்களுக்கே கோவில் கட்டிக்கொள்ள மூச்சுத் திணறும், பத்து இலட்சத்திற்கும் குறைவான அமெரிக்க இந்துக்கள் இந்தியாவுக்கு எப்படிப் பணமனுப்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    தமிழ்நாட்டில் உள்ள ஏழு கோடி பேர்களில் ஒரு விழுக்காடு பத்து ரூபாய்கள்[ஒரு காபி குடிக்கும் செலவு] கொடுத்தாலும், அது எழுபது இலட்சம் ஆகும். அந்தப் பணத்தை கோவிலுக்குக் கொடுத்தல், இக்கோவில் புத்துயிர் பெற்று எழுமே!

    இங்குள்ள இந்துக்கள் ஒன்றிணைந்து தங்களுக்காகக் கோவில் கட்டிக்கொள்கிறார்கள். ஒரு கோவில் முழுதும் கட்டப்பட்டால், ஐந்திலிருந்து பத்து அர்ச்சகர்களுக்கு வேலை கிடைக்கிறது. சிற்பிகள் நமது இந்து கோவில் சிற்பக்கலை அழியாமல் காப்பாற்ற உதவுகிறார்கள். இந்தியாவில் இருக்கும் அவர்களின் குடும்பங்களும் நன்மை பெறுகின்றன. இதை வெளிநாட்டு இந்துக்கள் செய்துகொண்டுதான் வருகிறார்கள்.

    Cluster of Temples என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வடஇந்தியர்கள் தங்களுக்கு உகந்த முறையில் கோவில் கட்டிக்கொள்கிறார்கள். அதுபோல பல பிரிவினரும் செய்கிறார்கள். மேலும், நகர் பெரிதாக இருக்கும்போது, பல கோவில்கள் இருக்கத்தானே செய்யும்?

    உதாரணமாக, ஃபீனிக்ஸ் பெருநகரில் [ஜனத்தொகை 32.5 லட்சம்] 1500 கிறித்தவ தேவாலயங்கள் உள்ளன. 2166 பேர்களுக்கு ஒரு தேவாலயம். அங்குள்ள 33000 இந்துக்களுக்கு அதே விகிதப்படி பார்த்தால் 15 கோவில்கள் இருக்கவேண்டும். ஆயினும், ஐந்து கோவில்களே உள்ளன. அவையும் வெவேறு பிரிவினரால், வெவ்வேறு வழிபாடு முறைகள் உள்ளவை.

    ஃபீனிக்ஸ் பெருநகர் 50 மைலுக்கு 50 மைல் பறந்து விரிந்திருக்கிறது. [2500 சதுர மைல்கள் – 6400 சதுர கி.மீ].

    468 சதுரமைல் விஸ்தீரணம் உள்ள [1200 சதுர கி.மீ] சென்னை பெருநகரில் எத்தனை நூறு கோவில்கள் உள்ளன என்று பாருங்கள். ஃபீனிக்ஸ் பெருநகருடன் ஒப்பிட்டு, சென்னைக்கு ஒரு கோவில் போதும் என்றால், சொல்பவரை நாம் என்ன சொல்வோம்?

    எனவே, இவ்வளவு பரந்து விரிந்திருக்கும் அமெரிக்க நகரங்களில் உள்ள இந்துக்கள், பலவிதமான பிரிவினரும், தங்களுக்காக ஒரு கோவில் கட்டிக்கொண்டிருப்பார்கள். இங்கு ஒரு சமணக் கோவிலும், இந்துக்கோவிலுடன் ஒன்றாகவே இணைந்துள்ளது.

    ஊர் கூடித்தான் தேர் இழுக்கவேண்டும். வெளிநாட்டார் மட்டுமே வந்து நம் ஊர்த் தேரை இழுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா?

    அதற்கான பதிலை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.

  17. //renovate ALSO Waterbody associated with temple which is part of the legend of that temple.//

    laudable. I agree.

  18. த்வீபாந்தரத்தில் இருக்கும் ஹிந்துஸ்தானியர் தம் தொப்புள்கொடி உறவாக தமிழகத்தை மதித்து போற்றி வருவதைப் பறைசாற்றும் வண்ணமாகவே இந்த வ்யாசத்தைக் காண்கிறேன்.

    கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற மூதுரையை அனுசரித்தே தமிழர்களும் ஹிந்துஸ்தானத்தின் மற்ற மாகாணங்களைச் சார்ந்த ஹிந்துக்களும் தாங்கள் குடியேறியுள்ள ஒவ்வொரு த்வீபாந்தர தேசங்களிலும் முனைந்து புதிய புதிய ஆலயங்களை எழுப்பி வருகிறார்கள். மதானுஷ்டானங்களை முறையாகப் பேணுவதற்கு இது மிகவும் அவச்யம்.

    புதிய ஆலயங்களை நிறைய நிர்மாணம் செய்தலும் பழைய ஆலயங்களை புனருத்தாரணம் செய்தலும் ஒன்றுக்கு ஒன்று விருத்தமானவை அல்ல. இரண்டும் கால காலமாக ஒன்றுக்கு ஒன்று இடையூறாக இல்லாமல் ஒரு சமன்வயத்துடன் தொடர்ந்து வருவதாகவே காண்கிறேன். வரும் காலத்திலும் இது தொடரும்.

  19. இந்த திருத்தலையூர் சப்தரிஷி ஆலயத்திற்கும் எனக்கும் ஒரு தெய்வீக அனுபவம் உண்டு. சுமார் 10,12 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் குளித்தலையில் வசித்து வந்தோம் …எனக்கு அரசுப்பணி …அப்போது என் ஓய்வு நேரம் ,விடுமுறை காலத்தை மரங்கள் நாடும் பணியில் செலவிட்டேன் …(இப்போதும்)வில்வம்,வன்னி, போன்ற விருக்ஷங்களை நர்சரியில் விலைக்கு வாங்கி..விதைகளை சேகரித்து பைகளில் வளர்த்து பின் ஆலயங்களில் வைப்பது என.27 நக்ஷத்திர மரக்கன்றுகளை சேகரிக்க ஆசை ஏற்பட்டது…நிறைய தகவல் சேகரிப்பு…அலைச்சல் …பொருள் செலவு..வெறித்தனமாக அலைவேன்…அஸ்வினி நக்ஷத்திர மரம் “எட்டி மரம்” தேடி நாமக்கல் பச்சைமலை அறப்பளீஸ்வரர் ஆலயம் சென்றேன்…மரத்தை வெட்டி விட்டார்கள் என்றனர்…கவலையோடு காரில் நாமக்கல்-கரூர் நெடுஞ்சாலையில் பயணித்த போது…எதேர்சையாக வெளியில் பார்க்கும்போது ஒரு பெரிய எட்டிமரம்…மஞ்சள் நிறத்தில் நிறைய பழங்கள் …காலில் முள் குத்துவது கூட தெரியாமல் ஓடி..பழங்களை சேகரித்தேன் …மருதமர கன்று மட்டும் கிடைக்கவேயில்லை ….அலுவலகத்தில் டீ,வடை தருவித்து சாப்பிடும்போது…வடைமடித்த தினகரன் பேப்பரில்..இந்த கோவில் பற்றி தகவல்..ஸ்தல விருக்ஷம் மருதமரம் என இருந்தது…உடனே ஒரு நண்பரை அவரது மோட்டார் சைக்கிள் வாகனத்தில் ஏறி விரைந்தேன்…மதியம் 2 மணி ….சரியான வெயில்…அர்ச்சகர் இருந்தார் …எல்லாம் முடிந்து வரும்போது அவரிடம் கேட்டேன் …இந்த மருத மர விதைகளை கொஞ்சம் எடுத்து கொள்ளட்டும் என்றேன் …எதற்கு என்றார் ….சொன்னேன்…எடுத்து சொல்லுங்க ஆனால் முளைக்காது …பலர் முயற்சி செய்து பார்த்து விட்டனர் என்றார்…நானும் பார்க்கிறேன் என சொல்லி கொஞ்சம் விதைகளை எடுத்து வந்து ….தொட்டியில் ஊன்றினேன்….உஹும்..பலநாள் ஒன்று கூட முளைக்க வில்லை …என் அலுவலகம் வந்திருந்த தோட்ட காலை அலுவலரிடம் கேட்டேன்…அதன் மேலோடு கடினமாக இருக்கும் ….நல்ல சுடுநீரில் போட்டு ஊற வைத்து பின் விதைக்கவும் என்றா…அய்யய்யோ …அது சப்தரிஷிகள் மரம் …வெந்நீரில் போடுவதா …மாட்டேன்….அன்று மாலை வீட்டிற்கு வந்து…காஞ்சி மஹாபெரியவா படத்தின் அருகில் நின்று ….”நான் என் சுயலாபம் கருதி இதை செய்யவில்லை”….சப்த ரிஷிகள் நீங்கள் அறிவீர்கள் ….உங்கள் அனுக்கிரஹம் இருந்தால் ஒரே ஒரு விதை முளைக்கட்டும் போதும் என வேண்டிக்கொண்டு …மீண்டும் 7 விதைகளை வேறு தொட்டியில் ஊன்றினேன்…தினசரி பார்ப்பேன் …நோ improvement ஒருநாள் இரவு …தூக்கம் கலைந்து எழுந்தேன் ….விடியக்காலை 3 மணி..டார்ச் லைட்டின் உதவியோடு தொட்டியை பார்த்தேன் …அதிர்ச்சி ….ஒரே ஒரு விதை மட்டும் ….மண்ணை கிஷித்து கொண்டு மேலெழும்பி நின்றது …முழுநாள் மாலை கூட ஒன்றுமில்லை …பிறகு அது வளர்ந்தது ….27 மரக்கன்றுகளை நட்டது தனி கதை….
    { ராவணன் தன துணைவியார் மண்டோதரி …அவர் தோழிகள் புடைசூழ வான் வெளியில் வந்தபோது …இந்த ஸ்தலத்தின் மஹிமையை உணர்ந்து கீழே இறங்கினார்களாம் …அங்கே தவத்தில் இருந்த சப்த ரிஷிகள் இவனுக்கு பயந்து …மருத மரமாக மாறி நின்றார்களாம் …இவன் சிவா பூஜையில் இருக்க வெளியே உள்ள குளத்தில் மண்டோதரியும் அவள் தோழிகளும் தவளை ரூபம் எடுத்து ஜலக்ரீடை செய்து விளையாட ..தன பூஜைக்கு இவர்கள் சப்தம் இடையூறாக இருக்க …அங்கிருந்தே கையை நீட்டி ஒரு தவளையை பிடித்து கழுத்தை திருகி போட்டானாம் …அது மண்டோதரியாம்…மண்டூகம் தவளை….திருகியதால் தலையூர் …பின் மண்டோதரி உயிர்ப்பிக்க பட்டால் …எனவே இன்றும் அந்த குளத்தில் மழை காலத்தில் தண்ணீர் நிறைய இருந்தாலும் ஒரு தவளை கூட இருக்காது …..அர்ச்சகர் சொன்னது ……இந்த பதிவை படித்ததும் எழுந்த நினைவுகள் பகிர்ந்து கொண்டேன்…நன்றி வேணுகோபால் …..venugpl60@ஜிமெயில்.கம 9443486117.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *