மாண்டூக்ய உபநிஷத்: எளிய விளக்கம் – 1

முன்னுரை:

தமிழ் இந்துவில் வெளியான “கம்பனும், வால்மீகியும்” இன்னும் சில கதைகளுடன் புத்தகமாக வெளியானவுடன், பல தடவைகள் எனது நண்பர்கள் பலர்   தமிழில் கீதை, மற்றும் உபநிஷத்துகளைப் பற்றிப்  புதியபார்வையில் என்னை எழுதச் சொல்லிவருகிறார்கள்.

ஆதி சங்கரர் விரிவுரை எழுதிய உபநிஷத்துகளுக்கு எந்தவொரு விளக்கம் நான் எழுதப்புகுந்தாலும் அது அளவுகடந்த, வடிகட்டிய முட்டாள்தனமேயன்றி வேறொன்றுமில்லை.  எனவே நான் அவர்களின் அன்புக்கட்டளையைத் தட்டிகழித்துக்கொண்டே வந்தேன்.

பிறகு என் மனதும் அதையே சொல்லத் துவங்கியபோது ஒரு நப்பாசை எனக்குள்ளேயே தலைதூக்கியது. உடனே, “அட முட்டாளே!  என்ன செயல் செய்யத் துணிகிறாய்?  உனக்கு என்ன அறிவு இருக்கிறது என்று, ஆழம் தெரியாமல் காலைவிடப்பார்க்கிறாய்!” என்று என் உள்ளறிவு என்னை எச்சரித்தது.

“நீ எதையும் எழுத ஆரம்பித்தால், உன்னைவிட அறிவுமிக்கவர்கள், உன்னுடைய அறிவின்மையைச் சுட்டிக்காட்டி, உன்னை நார்நாராகக் கிழித்துத் துவைத்துத் தொங்கவிட்டுவிடுவார்கள்!’  என்றும் பயமுறுத்தியது. இருப்பினும், எனது உள்ளறிவின் எச்சரிக்கையையும், அச்சுறுத்தலையும் மீறி, எழுதத்துணிந்தேன்.  அதற்குக் காரணம் –

உபநிஷத்துகளுக்கு இதுவரை நான் பார்த்த விளக்கங்கள் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.  தமிழில் ஒரு சிலவே இருக்கின்றன.  எனவே, ஆதி சங்கரரின் விளக்கவுரை, சுவாமி கம்பீரானந்தா, சுவாமி நிகிலானந்தா, சுவாமி சின்மயானந்தா, சுவாமி கிருஷ்ணானந்தா இவர்களின் விளக்கத்தையும் துணைக்கு வைத்துக்கொண்டு, அறிவியலில் நான் கண்டு, படித்தறிந்த உண்மைகளில் சிலவற்றைத் துணைக்கு வைத்துக்கொண்டு  எனக்குத் தெரிந்ததை எழுதப்போகிறேன். தமிழில் உபநிஷத்துகளைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆவலே என்னைத்தூண்டுகிறது.

வடமொழியில் எழுதிய செய்யுள்களுக்கு எனது சிற்றறிவைக்கொண்டு தமிழில் மொழிபெயர்ப்பு, பதவுரை எழுதி, ஆச்சரியாரிகளின் விளக்கவுரைகளின் கலவையைக் கலந்து எனது சக்திக்கு இயன்றவரை எளிதாக இயம்பியிருக்கிறேன். சில சொற்கள் என்பது பல சொற்களாகப் பல்கிப் பெருகிவிட்டன.  இத்துடன் அதை நிறுத்திக்கொண்டு, உபநிஷத்துக்கு வருகிறேன்.

படிக்கும் முறை:  தமிழில் வடமொழி ஒலிப்புகள் இல்லை என்பதால் 2,3,4 என்ற எண்களை மேற்குறியாகக் கொடுத்திருக்கிறேன்.  தேவநாகரி தெரியாதவர்களும் ஒலிப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள இது உதவும் என்றே நம்புகிறேன்.

உபநிஷத்தைப்பற்றி:  எல்லா உபநிஷத்துகளிலும் மிகவும் சிறியதான இந்த உபநிஷத்து அதர்வ வேதத்தில் உள்ளது.  மாண்டூகர் என்ற முனிவரால் கேட்கப்பட்டு எழுதப்பட்ட இதில் மொத்தம் பன்னிரண்டு சொற்றொடர்களே உள்ளன.  இது ஓம் என்ற பிரணவ மந்திரம், பிரம்மம் [பரம்பொருள்], ஆத்மா, ஆத்மாவின் [மனிதனின்] நான்கு நிலைகள் [உள்ளுணர்வுகள்], இவற்றைப்பற்றி ஒரு சூத்திரமாக [formula] ஒரு சொல்லைக்கூட வீணாக்காமல் சொல்கிறது.  இந்த உபநிஷத்தே அத்துவைத தத்துவத்தின் அடிப்படையாக அமைகிறது.  இறுதியில் பிரம்மமும் [பரம்பொருளும்] ஆத்மாவும் ஒன்றே என்று நிறுவுகிறது.

ஆதிசங்கரரின் பரமகுருவான கௌடபாதர் இதற்கு விளக்கவுரை [காரிகை] எழுதியிருக்கிறார். இந்துசமயத்தின் ஒரு பெரும்பிரிவான அத்துவைத தத்துவத்தை நிலைநிறுத்த ஆதிசங்கரரின் மனத்தில் கருவாகப் பரிணமித்தது இந்த உபநிஷத்தும், கௌடபாதரின் காரிகையும்தான்.

மேலே தொடர்வோமா?

(1)

ॐ इत्येतदक्षरमिद{म्+} सर्वं, तस्योपव्याख्यानं,
भूतं भवद् भविष्यदिति सर्वमोङ्कार एव ।
यच्चान्यत् त्रिकालातीतं तदप्योङ्कार एव ॥ १ ॥

ௐ இத்யேதத³க்ஷரமித³{ம்+} ஸர்வம், தஸ்யோபவ்யாக்²யானம்,
பூ⁴தம்ʼ ப⁴வத்³ ப⁴விஷ்யதி³தி ஸர்வமோங்கார ஏவ.
யச்சான்யத் த்ரிகாலாதீதம்ʼ தத³ப்யோங்கார ஏவ.   (1)                                                   

ஓமெனுமிந்த அழியாததே இவை எல்லாம்.  அதன் விளக்கமாவதிது.
ஆனது, ஆகியிருப்பது, ஆகப்போவதென்ற எல்லாமே ஓங்காரம்தான்.
இவையன்றி முக்காலங்களைக் கடந்தததுவும் ஓங்காரமே.                                     

பதவுரை:  ஒமிதி – ஓம் என்ற; ஏத3து – இந்தஒரு; அக்ஷரம் – அழிவற்ற ஒன்று [சொல்]; இத3ம் ஸர்வம் – இது எல்லாம்.

தஸ்ய – அதன்; உபவ்யாக்2யானம் – விளக்கமாவது; பூ4தம் – ஆனது; ப4வது3 – ஆகிவருவது; ப4விஷ்யது3 – ஆகப்போவது; இதி ஸர்வம் – இது எல்லாம்; ஓங்கார ஏவ – ஓங்காரம்தான்.

த்ரிகாலாதீதம் – [இறந்த, நிகழ், எதிர்] மூன்று காலங்களைக் கடந்த [அப்பாற்பட்ட];  யச்சான்யது – மற்ற எதுவாகிலும்; தது3 அபி ஓங்கார ஏவ – அதுவும் ஓங்காரம்தான்.

விளக்கம்:  இந்த முதல் சொற்றொடரில் ஓம் என்னும் பிரணவ மந்திரம் விளக்கப்படுகிறது. எழுத்தையும், சொல்லையும், பேச்சையும் வடமொழியில் அக்ஷரம் என்று சொல்கிறார்கள்.  ஷரம் என்றால் அழிவது என்று பொருள்.  எனவே, அக்ஷரம் என்றால் அழியாதது என்றே பொருள்கொள்ளவேண்டும். ஏன்?  மனிதன் அழியலாம், ஆனால் அவனது சொல் அழிவதில்லை;  பெரியோர் சொல்லிவைத்த சொற்கள் இன்றும் அழியாமல் நம் நினைவில் நிற்கின்றன.  ஒரு மொழி அழிந்தாலும் ஒவ்வொரு மொழியிலும் உள்ள சொற்கள் அழிவதில்லை.  ஆகையால் சொல் என்பது அக்ஷரம், அதாவது அழிவற்றது என்று ஆகிறது.

எனவே ஓம் எனும் அழிவற்ற இது என்று மாண்டூக்ய உபநிஷத்து துவங்குகிறது.

இது எல்லாமே என்றால், நம்மால் அறிய முடியும், முடியாத எல்லாமே என்று விளக்கமாகிறது.  இது எல்லாமே ஓம் தான் என்று சொன்னபிறகு அதன் பொருளை விவரிக்கிறது.

ஆனது, ஆகிக்கொண்டிருப்பது, ஆகப்போவது எல்லாமே ஓங்காரம்தான் என்று அழுத்திச் சொல்கிறது.

bb2பெரும் வெடிப்பு [Big Bang} நிகழ்ந்தபின் இந்த அண்டம் தோன்றியது என்கிறார்கள் அறிவாளிகள்.  அப்படித் தோன்றிய அண்டம், பெரும் மாறுதலை அடைந்துகொண்டிருக்கும் அண்டம், இனி மாறப்போகும் அண்டம் எல்லாமே ஓங்காரம்தான் என்கிறது.  மேலும் விளக்க, நம்மால் காண முடிவது மட்டும் அல்ல, காண இயலாத, உணர இயலாத மூன்று காலத்திலும் நிகழ்ந்த, நிகழும், நிகழப்போகும் மற்றவை எல்லாமே ஓங்காரம்தான் என்னும்போது…

ஒரு சொல்லானது எல்லாமாக எப்படி இருக்க இயலும் என்ற எண்ணம் எழத்தான் செய்யும்.  அப்படியானால், அந்தச் சொல்லான ஓம் என்ன என்று அறிய ஆவல் கூடுமல்லவா?  அதற்கு விளக்கம் அடுத்த சொற்றொடரில் பிறக்கிறது.

அதற்குமுன் முக்காலத்திற்கும் அப்பாற்பட்ட, கடந்த என்ற குறிப்பீட்டைப் பார்ப்போம்.

நமக்கு மிகவும் அருகில் உள்ள நட்சத்திரம் [விண்மீன்] பிராக்சிமா சென்டாரி [Proxima Centauri]  நமது பூமியிலிருந்து நாலேகால் ஒளிஆண்டு தூரத்தில் இருக்கிறது.  அதை நாம் பார்க்கும் பொது, நாலேகால் ஆண்டுகளுக்குமுன் அது இருப்பதைத்தான் இன்று நாம் காண்கிறோம்.

எனவே நாம் காண்பது இறந்தகாலத்தைத்தான்.

அதைப்போல மிகவும் தள்ளி இருக்கும் மற்ற விண்வெளி மண்டலங்கள் இன்னும் பல நூறு/ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன.  எனவே அவற்றை நமது தொலைநோக்கிகள் [telescopes] காணும்போது.  அவ்வளவு பழைய காலத்தில் இருக்கும் ஒன்றையே நாம் காண்கிறோம்.  மேலும் கருந்துளைகளில் [black-holes] காலமே வளைக்கப்பட்டுவிடுகிறது என்றும் விண்வெளி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இந்தக் கூற்று, முக்காலத்திற்கும் அப்பாற்பட்ட, கடந்த ஒன்று நிகழக்கூடும், நிகழுகிறது என்பதுதானே!

இதை நமது முனிவர்கள் கேட்டுணர்ந்து இருப்பதை வானியல் உறுதிசெய்கிறது.

ஓம் என்ற அழிவற்ற ஒன்றின் விளக்கம் தொடர்கிறது.

(2)

सर्वं ह्येतद् ब्रह्म, अयमात्मा ब्रह्म, 
सोऽयमात्मा चतुष्पात्  ॥ २ ॥

ஸர்வம் ஹ்யேதத்³ ப்³ரஹ்ம, அயமாத்மா ப்³ரஹ்ம,
ஸோ(அ)யமாத்மா சதுஷ்பாத்.  (2)

எல்லாமே அந்தப் பரம்பொருள்தான். இந்த ஆத்மாவும் பரம்பொருள்தான். இந்த ஆத்மன்[மா] நான்காக பகுதிகளாக இருக்கிறான்.                 

பதவுரை:  ஏதது ஸர்வம் – இம்மாதிரியான எல்லாம்;  ப்ரஹ்ம ஹி – பிரம்மம்[பரம்பொருள்]தான்;  அயம் ஆத்மா ப்ரஹ்ம – இந்த ஆத்மாவும் பரம்பொருள்தான்;  ஸ அயம் ஆத்மா – இந்த ஆத்மா என்பவனும்; சதுஷ்யாது –  நான்கு [கால்] பகுதிகளாக இருக்கிறான்.

விளக்கம்:  இங்கு ஆத்மாவுக்கும் பரம்பொருளுக்கும் உள்ள தொடர்பும் அத்துடன் ஒங்காரத்திற்கும் உள்ள தொடர்பும் கொண்டுவரப்படுகிறது.

முதல் செய்யுளில் ஓங்காரம்தான் இங்கு இருப்பது, இருந்தது, இருக்கப்போவது எல்லாம் என்றும், ஓங்காரம் முக்காலத்திற்கும் அப்பாற்பட்டது என்றும் கூறப்பட்டது.  இப்பொழுது இதெல்லாம், அதாவது ஓம் குறிக்கும் எல்லாமே பரம்பொருள், பிரம்மமே என்றுரைக்கப்பட்டது.

இந்த ஒரு சொற்றோடரைக் கவனிப்போம்.  ஓம் என்பது காலவட்டத்திற்கு உள்பட்டது, அதற்கு அப்பாற்பட்டதும்கூட என்று சொல்லிவிட்டு, அவை எல்லாம் பரம்பொருளே [பிரம்மமே என்றால்] இங்கு நாம் காணும், கண்ட, காணப்போகும், மற்றும் காலச் சக்கரத்திற்கு அப்பாற்பட்ட – அதாவது நமது அறிவுக்கு, புலனுக்குக் கட்டுப்படாத, கண்டறிய இயலாத எல்லாமே பரம்பொருள் என்று உறுதி செய்யப்படுகிறது.

அடுத்தபடியாக, பரம்பொருளே ஆத்மா என்று இணைப்பு கொடுக்கப்படுகிறது.

இப்படிச் சொன்னவுடன் நம் மனதில் எழும் கேள்வி என்னவாக இருக்கும்?

ஓம்தான் எல்லாம் என்றும் சொல்லி, அதுவே பரம்பொருள் என்றும் சொல்லி, அதுதான் ஆத்மா என்றால், அந்த ஆத்மா என்பது என்ன என்பதாகத்தானே இருக்கும்?

இந்த ஆத்மா என்ற ஒன்று நம் உடலுக்குள் இருக்கிறது, அதைத்தான் நாம் என்று உணருகிறோம்.  இந்த ஆத்மாவைப் பற்றி பலவிதமான விளக்கங்களும், பலராலும் சொல்லப்பட்டுக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இருந்தும் ஆத்மா என்றால் என்ன என்பது ஒரு குழப்பமாகவே இருந்து வருகிறது.

இந்த ஆத்மா நமது உடலுக்குள் இருக்கிறது என்றால் அது என்ன செய்கிறது, அதன் இயல்புகள் என்ன என்று அறியும் ஆவல் பிறக்கிறது.

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதுபோல, ஆத்மா நான்கு பகுதிகளாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

நான்கு பகுதிகள் என்றால் நான்கு கால் பகுதிகள் என்றுதானே பொருள்?

இந்த ஆத்மா என்று சுட்டப்படுகிறதே, அப்படியென்றால் இது, இந்த ஆத்மா நான்கு கால்கள் உள்ள ஒரு மிருகத்தைப்போன்றதா —  அல்லாது போனால், இரண்டுகால்களும் இரண்டு கைகளும் உள்ள மனிதனைப் போன்றதா — அல்லது ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதுபோல நான்கு பக்கங்கள் உள்ள கனசதுரமா என்றும் குழப்பம் ஏற்படுகிறது.

“இந்த நான்கு பகுதிகளை எப்படி அறிந்துகொள்வது?” என்று மேலும் குழம்புகிறோம்.

அந்தக் குழப்பத்தை நீக்குவதுபோல ஆத்மாவின் நான்கு பகுதிகளுக்கும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

 (3)

जागरितस्थानो बहिष्प्रज्ञः सप्ताङ्ग एकोनविंशतिमुखः 
स्थूलभुग्वैश्वानरः प्रथमः पादः ॥ ३ ॥

ஜாக³ரிதஸ்தா²னோ ப³ஹி:ப்ரஜ்ஞ​: ஸப்தாங்க³ ஏகோனவிம்ʼஸ²திமுக²​:
ஸ்தூ²லபு⁴க்³வைஸ்²வானர​: ப்ரத²ம​: பாத³​:      (3)

விழித்திருக்கும் நிலையில் வெளியறிவானவன், ஏழுறுப்புகளும் பத்தொன்பது வாய்களுமுள்ளவன்,  தெளிவாகப் புரிவதைச் சுகிக்கும் வைஸ்வாநரன் முதல் பகுதியாவான்.                         

பதவுரை:  வைஸ்வாநர: வைஸ்வாநரன்;  ஜாக்3ரிதஸ்தா2னோ – விழித்திருக்கும் நிலையில்; ப3ஹிஷ்பிரக்ஞ: –  வெளி[யில் நடக்கும் விஷயங்களை]அறிவுடையன்; சப்தாங்க: – ஏழு உறுப்புகள் உள்ளவன்; ஏகோனவிம்ஸதி முக2: – பத்தொன்பது வாய்கள் உள்ளவன், ஸ்தூ2லபு4க்3 – திடப்பொருள்களை அனுபவிப்பவன்; ப்ரத2ம: பாத3: – [அவன்] முதல் பகுதியாகிறான்.

விளக்கம்:  இச்சொற்றொடர் ஆத்மனின் முதல் பகுதியைக் குறிப்பிடுகிறது.  எல்லாச் சமயங்களிலும் நம் உடலுக்குள் இருந்துகொண்டு நம்மை இயக்குவது ஆத்மா [self, soul] என்று உலகச் சமயங்கள் கூறுகின்றன.  நாம் விழித்திருக்கும் நிலை நம்மை இயக்கம் அந்த ஆத்மாவின் முதல் நிலை என்று பகரப்படுகிறது.

அந்த முதல்நிலைக்கு வைஸ்வாநரன் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ – இவ்வண்டமான – நரன் – மனிதன். அதாவது விஸ்வ+நரன் தெய்வீக சக்தி உள்ள மனிதன் [human].

இப்பெயர் தனி மனிதனுக்குக் கொடுக்கப்படவில்லை. இவ்வண்டத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மொத்த அறிவையும் ஒரு மனிதனிடம் கொடுத்திருப்பதாக உருவகப்படுத்தப் படுகிறது.  [The Supreme Spirit or Intellect when located in a supposed collective aggregate of gross bodies]

பரம்பொருளே ஆத்மன் என்று சொல்லிவிட்டு, அந்த ஆத்மனுக்கு நான்கு பகுதிகள் என்று சொல்லி, அந்த ஆத்மன் விழித்திருக்கும் நிலையில் வெளிஅறிவுடன் இயங்குகிறான் என்றால் – அவனுடைய புரிதல் வெளியுலகத்தில் இருக்கிறது என்று பொருள்.  அதுதான் அவனுடைய இயக்க நிலை என்றால் — அது நம் அனைவருக்கும் பொருந்துகிறது.  நமக்கு மட்டுமல்ல, நமக்குத் தெரிந்த அனைத்து உயிரினங்களுக்குமே.

நாம் வெளியுலகில் நடப்பதை வைத்துக்கொண்டுதான், நமக்கு வெளியில் நடப்பதின் மூலம்தான் நமது அறிவைப் பெறுகிறோம்.  அதை எப்படிப் பெறுகிறோம்?  அந்த விஸ்வாநரன் எப்படிப் பெறுகிறான்?

அவனுக்கு ஏழு உறுப்புகளும், பத்தொன்பது வாய்களும் உள்ளன என்று கொடுக்கப்பட்டிருப்பதால் அவை என்னவாக இருக்க முடியும், அவை எப்படி வெளி அறிவைப் பெற உதவி செய்கின்றன என்பதை நோக்குவோம்.

முதலில் ஏழு உறுப்புகள் எதுவாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்ப்போம்.

விண்ணே அவனது தலை, சூரியன் கண், காற்றே உயிர்மூச்சு, வெற்றிடமே நடுப்பகுதி, தண்ணீரே அவனது சிறுநீரகம், நிலமே அவனது கால்கள், வேள்விக்கான நெருப்பே [அஹவனீய அக்னி –  கிருஷ்ண யஜுர்வேதம்] அவனது வாய் என்று சொல்லப்படுகிறது.

இப்பொழுது 19 வாய்கள் எவை என்று நோக்கினால் அவை, நமது ஐம்புலன்கள் [கண், காது, மூக்கு, நாக்கு, தொடுஉணர்ச்சி உறுப்புகள்] — ஐந்து உணர்வுகள் [பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகியவை] — ஐந்து உயிர் காற்றுகள் [பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்;  இந்து ஐந்து வகைக் காற்றுகளும் நம் உடலில் சக்தியை நிலை நிறுத்துகின்றன.] – மனம், அறிவு, ஆணவம், உணர்ச்சிகள் ஆகியவை.

இவற்றை ஏன் வாய் என்று சொல்கிறார்கள்?

இவைதான் உயிரினங்களின் அனுபவங்களின் –  பட்டறிவின் நுழைவாயில்கள்.  இவைகளின் மூலம்தான் உயிரினங்கள் தங்களது வெளி அனுபவத்தைப் பெறுகின்றன.

மேலே சொல்லப்பட்ட உறுப்புகளும், வாய்களும் வெளி உலகத்தையே பார்ப்பதால், அவற்றையே அனுபவிப்பதால், ஆதமனின் அப்பகுதி வைஸ்வாநரன் என்று அழிக்கப்படுகிறது.

நம்மை எடுத்துக்கொண்டாலே, நாம் உள்ளாக எதையும் உணர்வதில்லை.  நமக்குத் தெரியும், நாம் பகுத்தறியும் எதுவும் நமக்கு வெளியிலிருந்து வருவதே.  நமது ஐம்புலங்களாலும், ஐந்து உணர்வுகளாலுமே கிடைக்கின்றன. நமக்குத் தெளிவாகப் புரிவதை மட்டுமே நம்மால் அனுபவிக்க முடிகிறது.

உடனே, நமது அறிவு ஒரு கேள்வியை எழுப்புகிறது:

“ஆத்மன்தான் பிரம்மம் என்றால், அவன்தான் ஓங்காரம் என்றால், விண் [சுவர்க்கம்], சூரியன், பூமி, தண்ணீர், இன்னும் மற்றவை எல்லாம் தலை, உள்ளுறுப்புகள் என்று ஏன் சொல்லப்படுகின்றன?”

விடையை அடுத்த பதிவில் காண்போம்…

இப்படி விளக்குவது பொருத்தமற்ற ஒன்று என்று எண்ணவேண்டியதில்லை.  புலன்களால் உணர்ந்து அறிந்துகொள்ளக்கூடிய அண்டத்தையும், கடவுளர்களின் இருப்பிடத்தையும் ஆத்மனை தெய்வீகமாக உருவகப்படுத்தும் ஒரு பகுதியாக [விராட்] என்று குறிப்பிடுவது இருமை என்ற நிலையை நீக்கி எல்லாம் ஒன்றே என்று பின்னால் நிறுவுவதற்கு அடிகோலுகிறது.

இப்படி உரைப்பது —  ஆத்மன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான், எல்லாமே ஆத்மா ஆத்மன்தான் என்பது —  வேதங்களில் குறிப்படப்படும் “அஹம் ஏவ ப்ரஹ்மன் [நானே பரம்பொருள்]” என்பதை அடிப்படையாகக் கொள்கிறது.

அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிப் பார்க்கும் உணர்வு விழித்திருக்கும் நிலைக்கே உரித்தானது என்று நிறுவுகிறது.

இனி அது எவ்வாறு கூறப்படுகிறது என்பதைக்கண்ணுறுவோம்.

(தொடரும்)

8 Replies to “மாண்டூக்ய உபநிஷத்: எளிய விளக்கம் – 1”

  1. sir,
    Namasthe

    கம்பனும் வால்மீகியும் புத்தகம் வாங்கவேண்டும். எங்ககேகிடைக்கும்? can u send by VPP”

    உங்கள் எழுத்துக்கள் எல்லாமே நன்றாகவே இருக்கின்றது. தொடரட்டும் தங்கள் திருப்paணி!

    நன்றி

    Dr.P.Umesh c Pal

  2. Respected Arisonan

    Vanakam! Valthukal Ungal Nalla Panikku!

    I have read that Pancha Karmaindriyam, Pancha Janaindriam, Pancha Pranan, Manasu, Buddhi, Sitham and Agangaram are the 19 mouths. Please confirm whether feelings (Unarchigal) is part of the 19 mouths.

    Hari Om!

    Ramesh P

  3. // Please confirm whether feelings (Unarchigal) is part of the 19 mouths.//

    இல்லை. முகம் அல்லது வாய் என்று இங்கு சொல்லப்பட்டிருப்பவை வெளியுலகத்தில் நடப்புகளை அறிந்துகொள்ளும் கருவிகள். உணர்ச்சி வெளியில் உள்ளவற்றை அறிவதனால் மனதில் ஏற்படுவது.. எனவே அது முகம் ஆகாது.

  4. //கம்பனும் வால்மீகியும் புத்தகம் வாங்கவேண்டும். எங்ககேகிடைக்கும்? //

    துரதிருஷ்டவசமாக, பதிப்பாளர் ஐம்பது படிகளுக்குமேல் அடிக்கவில்லை. நான் அமெரிக்காவில் இருப்பதால் என்னிடாம் இருக்கும் புத்தகத்தை அனுப்ப நிறையச் செலவாகும்.

    கம்பனும், வால்மீகியும் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள், கதைகள் அனைத்தும், தமிழ் ஹிந்துவிலேயே தாங்கள் படிக்கலாம். எழுத்தாளர்கள் என்ற சுட்டியைத் தட்டி, அதில் பிறகு ஒரு அரிசோனன் என்பதின் மீது தட்டினால், எல்லாக் கட்டுரைகளும், கதைகளும் படிக்கக் கிடைக்கும்.

  5. Dear author
    Thank you. Wonderful article. Looking forward to the next one.
    One slight whinge. In the future, if the term soul can be avoided in the place of self and Atma, I will feel happier. Soul is so Abrahamic. I know there is no equivalent English term for Atma.
    Sorry sir for being a pain.

  6. உபநிஷதக்கருத்துக்களை எளிமையாப் பகிர விழையும் அன்பின் ஸ்ரீ அரிசோனன் அவர்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    எளிமையான விளக்கங்கள். தொடர்கிறோம்

  7. அரிய கருத்துக்கள்.எளிய சொற்கள்.தொடரட்டும் உங்கள் பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *